Skip to content
Post Views: 3,377
கையில் இருந்த பூச்செண்டுக்கு அழுத்தி முத்தம் கொடுத்த ஜானகி முகம் சந்தோசத்தில் மலர்ந்து இருந்தது.
அடுத்து வந்த நாட்களில் எல்லாம் அந்த வீட்டில் அவன் அலப்பறை கொஞ்சம் அதிகமாக தான் இருந்தது. ஜானகி தான் அவன் செய்கையால் தவித்துப் போனாள். அவனது அதிகப்படியான காதலில் அவளுடைய அடாவடித்தனம் எல்லாம் இப்போது வெளியே வருவதே இல்லை.
Advertisement
எப்போதும் அவளை வெட்கப் பட வைத்துக் கொண்டே இருந்தான். வீட்டுக்கு வந்து விட்டால் அவனுடைய கண்கள் முழுவதும் அவள் மீதே இருக்கும். யார் அருகில் இருக்கிறார்கள் என்று கூட பார்க்க மாட்டான்.
Advertisement
அதுவும் ரகு அங்கே இருந்தால் அவரை வெறுப்பேத்தவென்றே அவளை அதிகம் தேடுவான். அதனால் அவனை முறைத்து விட்டுச் சென்றாலும் ஸ்ரீராம் மற்றும் ஜானகியால் தான் அந்த வீட்டில் உயிர்ப்பே இருக்கிறது என்று பெருமையாக எண்ணிக் கொள்வார் ரகு.
Advertisement
அவரும் மகனை வெறுப்பேற்ற வேலைக்கு செல்லும் போது “நீ வா மா, நான் உன்னை கடைல விட்டுட்டு போறேன்”, என்று அவளை அழைப்பார் ரகு.
Advertisement
சில நாள் அவனை வெறுப்பேற்ற ரகுவுடன் செல்வாள் ஜானகி. அவன் இருவரையும் முறைத்துக் கொண்டு இருப்பான். சில நாள் அவளுக்கும் அவனைத் தேட மாமாவிடம் கண்ணைக் காட்டி விட்டு அவனுடன் செல்வாள்.
இப்போதெல்லாம் ஜானகி மற்றும் ஸ்ரீராம் இடையே நல்ல புரிதல் வந்திருந்தது. நண்பர்கள் போல இணக்கமாக பேசிக் கொண்டார்கள். அவனுடைய காதலை அவன் உணர்த்திக் கொண்டே இருந்தான்.
அடிக்கடி ஊர் சுற்றிப் பார்க்க அவளை வெளியே அழைத்துச் சென்றான். அவள் ஆசையாக ஏதாவது கேட்டாள் கூட நிறைவேற்றினான்.
அப்படி ஒரு நாள் அவளை அழைத்துச் சென்ற இடம் தான் முயல் தீவு. இது பிரைவேட் பீச் போன்ற ஒரு இடம். தூத்துக்குடியின் கிழக்குப் பகுதியில் மன்னார் வளைகுடாவின் இருபத்தி ஒன்று தீவுகளில் மிகப் பெரியது இந்த முயல் தீவு தான். இந்த இடம் தூத்துக்குடி துறைமுகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அங்கு செல்ல பொது மக்களுக்கு எந்த தடையும் இல்லை.
பொங்கல் தினத்தன்று தான் அங்கே கூட்டம் அலைமோதும். மற்ற நேரம் வெறிச்சென்று தான் இருக்கும். முயல் தீவை ஒட்டியுள்ள பகுதி கடலும் ஆறும் கலக்கும் இடமாகும். இதை ஒட்டி துறைமுகம், அனல்மின் நிலையம் என வந்தாலும் இந்த இடத்துக்கு வந்து இயற்கையையும் கடலையும் ரசிப்பவர்கள் இருக்க தான் செய்கிறார்கள்.
அலைகள் கரையை தொட்டுத் தாலாட்டும் அந்த அழகான நிலப் பரப்புக்கு வந்த பின்னர் ஸ்ரீராம் மற்றும் ஜானகி மனதும் அமைதியாக இருந்தது.
“இயற்கைன்னா தனி அழகு தான், என்ன ராம்?”, என்று கேட்டாள் ஜானகி.
“கண்டிப்பா, உன்னை மாதிரியே?”, என்று சொல்லி அவளைப் பார்த்து சிரித்தான் ஸ்ரீராம்.
“ஐயே, நான் என்னையா சொன்னேன்? கடலைச் சொன்னேன்”, என்று சிணுங்கினாள் அவள்.
“இயற்கை அழகுன்னு சொன்னதுக்கு தான் நான் அப்படிச் சொன்னேன். முன்னாடி எல்லாம் இந்த இடம் இன்னும் அழகா இருக்குமாம் ஜானு. இப்ப இருக்குற அழகு கொஞ்சம் கம்மி தான்”
“அப்படியா?”
“ஆமா, எங்க அப்பா சொல்லிருக்கார். முன்னாடி இங்க முயல் ரொம்ப அதிகமா இருக்குமாம். அதான் இந்த பேர் வந்திருக்கு. அப்புறம் பூவரச மரமும் இங்க நிறைய இருந்துருக்கு. இப்ப எல்லாத்தையும் மாத்தி அமைச்சிட்டாங்க. ஆனா இந்த பீச் மட்டும் அப்படியே இருக்குறது அதிசயம் தான். இதுக்கும் ஒரு கேட் போட்டு வச்சிட்டாங்கன்னா நாம எல்லாம் இங்க வரவே முடியாது. இப்ப எல்லாரும் வர அனுமதிச்சிருக்குறதே பெரிய விஷயம். சரி வா. அந்த பாறைல உக்காரலாம்”, என்று சொல்லி ஒரு பாறையில் அமர்ந்தவன் அவளையும் இழுத்து தன்னருகே அமர வைத்துக் கொண்டான்.
சின்ன சின்ன பாறைகளால் தடுப்பு போல அமைக்கப் பட்டிருந்த இடத்தில் காலைத் தொங்க போட்ட படி அமர்ந்தார்கள் இருவரும். மிதமான கடல் அலை அவர்களின் காலை தீண்டித் தீண்டிச் சென்று விளையாடியது.
“அதோ அங்க பாரேன்”, என்று கை காட்டினான் ராம்.
“அது நல்ல தண்ணி தீவு தானே ராம்? ஒரு டைம் அப்பா என்னையும் அக்காவையும் இங்க கூட்டிட்டு வரும் போது காட்டினங்க”
“ஆமா ஜானு, அதே தான். அங்க மட்டும் தண்ணி கலர் வித்தியாசமா இருக்கு பார். அந்த இடத்துல ஒரு குறிப்பிட்ட பரப்பளவு மட்டும் நல்ல தண்ணியா இருக்குமாம்”
“இதுல்லாம் எவ்வளவு பெரிய அதிசயம் என்ன ராம்?”, என்று கேட்டு அவனைக் கண்டு புன்னகைத்தவள் அவன் எதுவோ சொல்ல வரவும் “என்னை மாதிரின்னு சொல்லி மொக்கை போட்ட கொன்னுறுவேன்”, என்று மிரட்டி கண்களை உருட்டினாள்.
அவள் விழி வீச்சில் விழ ஆசை இருந்தாலும் “ஏண்டி, உன்னை வர்ணிக்கிறது உனக்கு மொக்கையா இருக்கா? நேரம் தான். சரி போட்டோ ஏதாவது எடுக்கணும்னா எடு. வீட்டுக்கு கிளம்பலாம். பொங்கல் அப்ப அம்மா, அப்பா, கிரி, அண்ணி, அத்தை, மாமா எல்லாரையும் கூட்டிட்டு வருவோம். அப்ப தான் நல்லா இருக்கும். இப்ப ரெண்டு பேரும் எவ்வளவு நேரம் இங்க உக்கார? மழை வர மாதிரி வேற இருக்கு. கடல் பக்கத்துல இருக்குறதுனால இப்படி இருக்கான்னு தெரியலை. போகலாம் ஜானு”, என்றான்.
“சரி வா செல்ஃபி எடுப்போம்”, என்று சொன்ன ஜானகி அடுத்த கால் மணி நேரம் போட்டோ எடுப்பதில் செலவிட்டாள். அங்கே மேலும் இரண்டு ஜோடிகள் வந்தார்கள். அது போக ஒரு குடும்பமும் வந்தது.
லேசாக இருட்டாக துவங்கியது. அவர்கள் கிளம்புவதற்கு முன்பே ஜானகியும் ஸ்ரீராமும் வீட்டுக்கு கிளம்பி விட்டார்கள்.
துறைமுகம், அனல் மின் நிலையம் அனைத்தையும் கடந்து வெளியே மெயின் ரோட்டுக்கு வந்ததும் அவளுடைய வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினான்.
“ராம் எங்க வீட்டுக்கா போறோம்?”, என்று கண்கள் மின்னக் கேட்டாள் ஜானகி.
“அடப்பாவி என்னமோ இங்க நாம வராத மாதிரியே கேக்குற?”, என்று வியந்தவன் “இங்க வர வந்துட்டு அத்தை மாமாவை பாக்காம போனா எப்படி? நைட் இங்க இருந்துட்டு மார்னிங் நேரா கடைக்கு போகலாம். நம்ம டிரஸ் தான் இங்க இருக்கே?”, என்றான்.
“எத்தனை தடவை கூட்டிட்டு போனாலும் ஒவ்வொரு டைமும் அம்மா வீட்டுக்கு போறது பொண்ணுங்களுக்கு குஷி தான் ராம்”
“அப்படியா? ஏன் ஜானு, அது மத்த பொண்ணுங்களுக்கு சரி. ஆனா உனக்கு அப்படி தோனுதா? உனக்கு எங்க வீட்ல இருக்க பிடிக்கலையா?”
“ஏய் நான் எங்க அப்படிச் சொன்னேன்? என் கூட சேந்து எல்லாரையும் கலாய்க்கிற மாமா, என் வயிரையும் மனசையும் வாடவே விடாம பாத்துக்குற அத்தை, அண்ணன் மாதிரி கேரிங்கா இருக்குற மச்சான், அப்புறம் என் கிட்ட வம்பிழுக்குற பாட்டி, அப்புறம் என் கூடவே பிறந்த என்னோட பிரண்ட் மாதிரி இருக்குற அக்கா இவ்வளவு சொந்தம் எனக்கு அங்க இருக்குறப்ப எனக்கு என்ன கஷ்டமாம்? இருந்தாலும் இத்தனை வருஷம் உயிரோடும் சதையோடும் கலந்த அம்மா வீடுன்னா தனி தானே?”, என்றாள்.
அவள் மனதை புரிந்து கொண்டவன் “எல்லாரையும் சொன்ன, என்னை மட்டும் விட்டுட்ட?”, என்று கேட்டு வம்பிழுத்தான்.
அவன் தலையில் ஒரு கொட்டு கொட்டி விட்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டவள் “எல்லா உறவுகளோட மொத்த உருவம் நீ தான் ராம்”, என்று சொல்லி அவனையும் அவன் காதலையும் பெருமை படுத்தினாள் ஜானகி. அவள் சொன்னதைக் கேட்டு உள்ளுக்குள் உருகிப் போனான் ஸ்ரீராம். இப்படி தன்னை புரிந்து கொள்ளும் மனைவி கிடைக்க அவன் கொடுத்து வைத்திருக்க வேண்டும் அல்லவா? இன்னும் அவளை அன்பாக சந்தோஷமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற வேகம் வந்தது அவனுக்கு.
வீட்டுக்கு போகும் வழியிலே மழை பிடித்துக் கொண்டது. வண்டி கவரில் இருந்த பிளாஸ்டிக் பையை எடுத்த ஸ்ரீராம் தங்கள் இருவரின் போனையும் அந்த கவரில் வைத்து பத்திரப் படுத்தி விட்டு வண்டியை எடுத்தான்.
ஜானகியின் வீட்டுக்கு செல்லும் போது இருவரும் தொப்பலாக நனைந்து விட்டார்கள். திடீரென்று நனைந்த படி வந்தவர்களை கண்ட அரசியும் சரவணனும் முதலில் திகைத்து பின் வரவேற்று அறைக்குச் சென்று உடை மாற்றச் சொன்னார்கள்.
அறைக்குள் சென்றதும் “ராம், முதல்ல நீ போய் குளிச்சிட்டு வா. நான் உனக்கு டிரஸ் எடுத்து தரேன்”, என்றாள் ஜானகி.
அவனிடம் இருந்து எந்த சத்தமும் வராததால் அவனைத் திரும்பிப் பார்த்தவள் திகைத்தாள். ஏனெனில் அவன் பார்வை அவளை உரிமையுடன் தழுவிக் கொண்டிருந்தது.
அந்த உரிமையான பார்வை அவளுக்குள் படபடப்பை ஏற்படுத்தியது. அவனுக்கோ அவள் மேல் இருந்து பார்வையை திருப்பவே முடியவில்லை.
உடலுடன் ஒட்டிய ஆடையும், நீர்த் திவலைகள் நிறைந்த அவளது மதிமுகமும், வண்டியில் வரும் போது அவள் காட்டிய நெருக்கமும், அவளது உரிமையான பேச்சும் அவன் மனதில் காதல் உணர்வுகளை தட்டி எழுப்பி இருந்தது, அதனால் அழகாக இருந்தவளை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டே இருந்தான்.
அவள் சாதாரணமாக பேசியிருந்தால் அவனும் நகன்றிருப்பான். ஆனால் அவள் இமைகள் படபடக்க அவனை தயக்கமாக பார்த்த படி நின்றதும் அவளை நோக்கி முன்னேறினான்.
அவன் தன்னை நோக்கி வருவதைக் கண்டு அவனுக்கு முதுகு கட்டி நின்று கொண்டாள் ஜானகி. அவள் இதயம் நின்று நின்று துடித்தது.
அவளை பின் பக்கமாக நெருங்கி நின்றான் ஸ்ரீராம். அவனது சூடான மூச்சுக் காற்று அவளுடைய தோளைத் தொட்டது. உடல் முழுவதும் ஒரு வித சிலிர்ப்பு உருவாக இமைகளை இறுக்கமாக மூடிக் கொண்டவளின் கைகள் அந்த கப்போர்டை அழுந்த பற்றியது.
அவள் முதுகில் பசை போல ஒட்டிக் கொண்டவனின் கைகள் அவள் இடையை தழுவியது. அவனுடைய தொடுகையில் அவளுக்குள் அடிவயிற்றில் பட்டாம் பூச்சு பறக்கும் உணர்வு எழுந்தது.
அவனுடைய இதழ்கள் அவளுடைய கழுத்து வளைவில் பதிந்தது. அவளுடைய இடையில் இருந்த அவனது கரம் அவளைத் தன் புறமாக திருப்பியது.
அவன் முகத்தை அந்த நிலையில் நிமிர்ந்து பார்க்கும் தைரியம் இல்லாமல் அவளாகவே அவன் நெஞ்சில் முகத்தை மறைத்துக் கொண்டாள். அதில் குதூகலமானவனின் கரங்களும் அவளை வளைத்து அணைத்துக் கொண்டது.
அவனுடைய முரட்டு இதழ்கள் அவள் முகத்தில் இருந்த நீர்த் துளிகளை துடைக்கும் வேலையை செவ்வன செய்தது. அவனுடைய இதழ் ஒற்றுதலில் முழுமையாக மயங்கியவள் அவன் முதுகில் தன்னுடைய கரங்களை படர விட்டு அவனுடன் இன்னும் நெருங்கி இழைந்தாள்.
error: Content is protected !!