Skip to content
Post Views: 3,022
ராமு சிக்னல் தந்தவுடன், முதலில் ஆரம்பித்தது, பிரியா!
“ஹால் ரொம்ப சின்னதா இருக்கு! கசகசன்னு இருக்கு.. அதனால பாப்பா, நீ வேணுமின்னா டெடியை (பொமரேனியன் நாய்க்குட்டியை) வெளியே தூக்கிட்டுப் போய் காருக்குள் இரு!
தப்பா நினைச்சுக்காதீங்க! எங்க நாய்க்குட்டி ஏசி இல்லன்னா இருக்காது! உடம்பு பூரா சலசலன்னு ஆகிடும்! அதான்!” என்று சொல்லி தன் சிறிய மகளை நாயோடு வெளியே அனுப்பினாள்.
அதைக் கேட்டு முகம் சுளித்தான் மகேந்திரன்!
Advertisement
ரொம்ப ஓவரா இல்ல இருக்கு! இது அர்த்த ராத்திரியில குடை பிடிக்கும் கேஸ் போல என்று நினைத்துக் கொண்டான்!
ஆனால் வெளியே காட்டிக் கொள்ளாமல், “அது என்ன சாப்பிடும்? பால் குடிக்குமா?” என்று கேட்டான்.
“ம்ம். குடிக்கும். ஆனா நம்ம ஊர் பால் குடிக்காது! வெளிநாட்டு பவுடர் பால் தான் குடிக்கும்!
Advertisement
நீடோன்னு ஒரு பால் பவுடர்! ராஜு துபாயில் இருந்து வாங்கி வருவான்!
Advertisement
அப்புறம் தீர்ந்துடுச்சுன்னா, போன் பண்ணினா யார் மூலமாச்சும் அனுப்பி விடுவான் முன்னாடியெல்லாம்.
இப்ப அதை ஆன்லைனில் வாங்கிக்குகிறோம்! என்றாள் ப்ரியா பெருமையாக!
ஓ! என்றவன் அதற்கு மேல் ஒன்றும் சொல்ல வில்லை!
Advertisement
அடுத்து, வனிதா ஆரம்பித்தாள்.
ஆனால் அவள் அம்மா அவளிடம் சொல்லி அனுப்பி இருந்தாள்.
“எதுவா இருந்தாலும் நீ டைரக்டா பேசிடாதே! அதெல்லாம் ப்ரியா பேசட்டும்!
என்ன இருந்தாலும் அது ராஜுவோட கூடப் பிறந்த அக்கா!
அவங்க இந்த கல்யாண விசயத்தால அடிச்சுக்கிட்டா கூட மறுபடி சேர்ந்துக்குவாங்க!
ஆனா உன்னை அப்படி சேர்த்துக்க மாட்டாங்க!
அதனால நீ எது பேசுறதா இருந்தாலும் பார்த்து வாழைபழத்துல ஊசி ஏத்தற மாதிரி தான் இருக்கணுமே தவிர நேரிடையா இருக்க கூடாது” என்று!
எனவே ரொம்பவும் நட்பாக பேசுவது போல மகியிடம் பேச்சுக் கொடுத்தாள்.
எல்லோருக்கும் வணக்கம் சொல்லி விட்டு, காபி கொடுக்க வந்த மகியைப் பார்த்து, “உனக்கு யாரும்மா. மகிழினின்னு பேர் வச்சது? உங்கப்பா தமிழ் ஸ்காலாரா?” என்று கேட்டாள்.
“க்கும்! அப்படி யாரு இருக்கா இங்க?
அது சும்மா! இவ பொறந்து புண்ணியாசனம் பண்ணி பேர் வைக்கிறப்போ, இவ நட்சத்திரம் பார்த்து, ம, மு சீரிஸ்ல பேர் வைக்கனும்னு அய்யர் சொன்னதால, இவளுக்கு மகிழினின்னு பேர் வச்சாங்க!
அதுவும் இவங்க இல்லையாம்! அப்போ அவங்க பக்கத்து வீட்டக்கா வச்சது! அந்தக்கா அப்போ தமிழ்த்துறையில் பி ஹெச்டி பண்ணிட்டு இருந்தாங்களாம்!” என்றாள் கங்கா நக்கலாக!
“ஆனா நாங்க எங்க பாப்பாவுக்கு நல்லா ரசிச்சு தான் இந்த பெயரை வச்சிருக்கோம்!” என்ற வனிதா,
“யாழினி.. இங்க வாடா.. வா.. இந்த பாப்பா கூட விளையாடு! என்று அவள் மகளிடம் கங்காவின் மகளைக் கை காட்டினாள் வனிதா!
அவள் அப்போதும் மனதிற்குள் எவ்வளவு இருந்தாலும் நேருக்கு நேர் எதையும் பேசி விடக்கூடாது!
நாம் எதாச்சும் பேசி, அதைக் கேட்டு ராஜு கோபமாகி விட்டான் என்றால், சமாளிப்பது தனக்கு கஷ்டம்!
எதுவா இருந்தாலும் அக்காவும் தம்பியும் பேசி முடிச்சு விடட்டும் என்று அடக்கி வாசித்தாள், வந்த இடத்தில்!
“உன் பேரு என்னம்மா?” என்றாள் கனகாவின் பெண்ணிடம்.
“ஜோதிகா” என்றது அது!
“ம்ம். இப்படி ஒரு கருப்பு ஜோதிகா இருப்பது அந்த ரியல் ஜோதிகாவுக்கு தெரிந்தால் அவ்வளவு தான்” என்று முணுமுணுத்தாள் ப்ரியா.
“யாழினி.. போ.. ஜோதிகா கூட போய் விளையாடு” என்றவளை முறைத்து விட்டு, மருமகளை தன் பக்கம் இழுத்துக் கொண்டாள் ப்ரியா.
“ஏய்..சும்மா இரு.. அந்த பாப்பா தலயில அப்படி பேன் மேயுது. அது கூட விளையாடினா, இவ தலைக்கும் அது ஒட்டிக்கும்!” என்று ரகசியம் போல ஆனால் உரக்கவே சொன்னாள் ப்ரியா.
அதைக் கேட்டு விட்டார்கள் கங்காவும் பரமேஸ்வரியும்!
பரமேஸ்வரி கங்காவை முறைத்தார்.
பிள்ளைக்கு ஒழுங்கா தலை கூட வாரி விடாமல் அப்படி என்ன தான் அந்த போன்ல இருக்கோ தெரியல!
இத்தனைக்கும் அவரோ, இல்ல மகியோ வாரம் தவறாமல் ஜோதிகாவுக்கு தலை சீவி பேன் இல்லாமல் சுத்தமாக தான் பார்த்துக் கொண்டனர்.
இந்த ஒரு வாரம் தான் செய்ய முடியவில்லை! பெண் பார்க்கும் நிகழ்வுக்காக வீட்டை தயார் படுத்த வேலைகள் செய்ததால்!
எல்லோருக்கும் ஸ்வீட் காரம் கொண்டு வந்து கொடுத்தாள் கங்கா.
ஸ்வீட் காரத்தை அவள் வைத்து எடுத்து வந்தது, மகி ஆசையாக ஆசையாக வாங்கி வைத்திருந்த ட்ரேயிலும் இல்லை! அழகான செராமிக் ப்ளேட்களிலும் இல்லை!
அவள், அவற்றை கொண்டு வந்த விதமே வேறு!
கங்கா, இதுவரை சென்று வந்திருந்த கல்யாணங்களில் தாம்பூலப் பைகளில் போட்டுக் கொடுத்த, சிலர் பத்திரிகை வைக்கும் போதே வைத்துக் கொடுத்த மற்றும் சில வீடுகளில் நவராத்திரி கொலுவின் போது கொடுத்த ரிட்டர்ன் கிப்ட் தட்டுகளில்!
காத்துப் போல லேசாக இருக்கும் பூப்போட்ட மலிவான விலை தட்டுகள்!
அவற்றை ஒரு பெரிய அண்டா மூடும் தாம்பாளத்தில் வைத்து கொண்டு வந்தாள்!
அந்த தாம்பாளமும் ஒரே தூசாக இருந்தது! அதில் ஏதோ மாவைக் கொட்டி காய வைத்து இருந்தாள் போல, இதற்கு முன்பு!
அதை சரியாக துடைக்காமல் கூட எடுத்து வந்திருந்தாள்!
ஸ்வீட் வைத்துக் கொடுத்த அந்த தட்டுகள் பலவற்றில் மணமக்கள் பெயர் வேறு பொறிக்கப் பட்டிருந்தது!
அதை ஒன்றில் இருந்த பெயரைக் காட்டி, எழுத்துக் கூட்டி படிக்க சொல்லி காண்பித்தாள் வனிதா, தன் மகளிடம்!
அதுவும் உரக்க படித்தது!
தமிழ்செல்வன் – பூங்கொடி என்று படித்து விட்டு, மண நாள் என்று போன வருட தேதியொன்றையும் படித்து சொன்னது!
மகிக்கு ரொம்ப அசிங்கமாக போய் விட்டது!
இத்தனைக்கும் அவள் அத்தனை முறை சொல்லியிருந்தாள்.
“அண்ணி, பிளேட்ஸ் எல்லாம் புதுசு இருக்குண்ணி. இதில கழுவி துடைச்சு வச்சுருக்கேன்” என்று பலமுறை சொல்லியும், வேண்டுமென்றே இந்த தட்டுகளில் கொண்டு வந்து கொடுத்து மானத்தை வாங்கியிருக்கு பாரு!
ஏற்கனவே காபியை கப்புகளில் ஊற்றிக் கொடுக்காமல், பல சைஸ்களில் சிறியதும் பெரியதுமான தம்ளர்களில் ஊற்றிக் கொடுத்தாள் மகியிடம்!
“இல்ல.. அங்க.. கப் இருக்கு..” என்று சொல்லப் போனவள், வனிதாவும் ப்ரியாவும் இவர்களையே கவனிப்பதை பார்த்து விட்டு ஒன்றும் சொல்ல முடியாமல் காபியை எடுத்துக் கொண்டு வந்து விட்டாள்!
பரமேஸ்வரிக்கும் கோபம் வந்திருந்தது! ஆனால் காட்ட முடியவில்லை!
சரி அவள் தான் அப்படி அதில் கொடுத்து விட்டாள் என்றாள், இந்த பொண்ணு அதை காட்டி நக்கல் பண்ணனுமா? என்று வனிதாவின் மேலும் கோபம் வந்தது!
“எங்க வீட்டிலும் இப்படி நிறையா தட்டு கிடந்துச்சு. கிட்ட தட்ட ஒரு பெரிய கூடை நிறைய!
அதெயெல்லாம் நான் பொங்கல் சுத்தம் பண்ணும் போது வேலைக்காரியிடம் கொடுத்து விட்டேன்” என்றாள் ப்ரியா!
ஸ்வீட் சாப்பிட்டு விட்டு, கையை கழுவும் சாக்கில் கிச்சனுக்குள் நுழைந்தார்கள் ப்ரியாவும் வனிதாவும்!
உள்ளே கிச்சன் மேடை தாறுமாறாக இருந்தது கண்டு பரமேஸ்வரியும் அதிர்ந்து தான் போனார்.
அவர் வெளி வேலைகளை தான் காலையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார்!
கிச்சனுள்ளே செல்லவேயில்லை! வடை கூட அவர்கள் வீட்டில் தான் செய்தார்கள்! இப்போது இந்த நிலையில் கிச்சனைக் கண்டவருக்கும் அதிர்ச்சி தான்!
ஏனென்றால் அவர் தான், மகன் வீட்டை ஒட்டடை அடித்து, சுத்தம் செய்து, பாத்ரூம் எல்லாம் ஹார்பிக் ஊற்றிக் கழுவி கிச்சனையும் சுத்தம் செய்து விட்டு, இனி இங்க சமைக்க வேண்டாம் என்று சொல்லி முதல் நாளும் இன்று காலையும் கூட தன் வீட்டில் சமைத்து கொடுத்து இருந்தார்.
அப்படி இருந்தும் இப்படி கிடக்கிறது!
கங்கா வேண்டுமென்று தான் அப்படி செய்தது!
காலையில் பரமேஸ்வரி கொடுத்து விட்டிருந்த உப்புமா பிடிக்கவில்லை என்று ஜோதிகா அழுதது!
“பாப்பாவுக்கு உப்புமா பிடிக்கல போல, நீ அவளுக்கு மட்டும் தோசை ஊத்திக் கொடு” என்ற மகேந்திரனிடம்,
“ஏன் உன் தங்கச்சி கல்யாணத்துக்கு ஓடி ஓடி வேலை செய்யுற இல்ல! போ.. உன் பொண்ணுக்கும் கொஞ்சம் செய்! நீயே போய் மாவு வாங்கிட்டு வந்து, உன் மகளுக்கு நீயே தோசை ஊத்திக் கொடு! நான் மாட்டேன்” என்று சொல்லி விட்டாள்.
மகேந்திரன் பக்கத்துப் பெட்டிக் கடையில் விற்ற தோசை மாவு பாக்கெட்டை வாங்கி வந்து தோசை ஊற்ற முயன்று,
முந்தா நேற்று, அதில் கங்கா சப்பாத்தி போட்டு இருந்ததால், அவனுக்கு அதில் தோசை சரியாக வரவே இல்லை!
அடிப்பிடித்துக் கொண்டு விட்டது!
சூடான கல்லில் தண்ணீரை ஊற்றி அது ஸ்டவ் சுற்றிலும் மாவும், எண்ணெயும் தண்ணீருமாக அசிங்கமாக தெறித்து விட்டது!
பின் எப்படியோ போராடி தான், மாவை ஸ்டவ் மீதெல்லாம் வழிய விட்டும், ஒரு வழியாக மகளுக்கு முட்டை தோசை ஊற்றிக் கொடுத்தான் மகேந்திரன்.
உடைந்த முட்டை ஓடுகள், காய்ந்து போயிருந்த மாவு கிண்ணம், கரண்டி, சட்டுவம், பாதி மாவுடன் கிடந்த மாவு பாக்கெட் என்று அடுப்பு மேடையே போர்க்களமாக இருந்தது! அதில் கொசுவும் பழ ஈக்களும் மொய்த்துக் கொண்டிருக்க, அழுகிய புளித்த நாற்றம் வேறு வந்து கொண்டிருந்தது அங்கே!
அதோடு இப்போது அடுப்பில் காபி போட்ட பால் பாத்திரம் ஒரு பக்கம்!
அதில் பால் பொங்கி வழிந்து அதுவும் தீய்ந்து போய்!. அருகில் காபி ஆற்றிய கிண்ணங்கள் காய்ந்து போய்!
மகி ஏற்கனவே அதைப் பார்த்து டென்சன் ஆகியிருந்தாள். ஆனால் ராஜ்மோகனின் வீட்டுப் பெண்கள் கிச்சன் வரை வருவார்கள் என்று அவள் எதிர்பார்த்திருக்க வில்லை!
ப்ரியா, வனிதாவிற்கு அங்கிருந்த காபி பில்டரை பார்க்கும் படி, தலையை ஆட்டி சைகையில் காட்டினாள்.
அதன் காபி பொடி கொட்டும் மேலடுக்கில் ஒரு ஸ்பூன் இருந்தது!
“ஒழுங்கா டிகாக்ஷன் கூட இறக்க தெரியல பாரு, இவங்க வீட்டுப் பொம்பளைங்களுக்கு! ஸ்பூனை போட்டு கிண்டி வச்சுருக்குங்க! அதான் காபி கேவலமா இருந்துச்சு” என்றாள் ப்ரியா வனிதாவிடம் ரகசியம் போல, ஆனால் கங்காவின் காதில் விழற மாதிரி!
கங்காவிற்கு முதலில் கோபம் வந்தாலும், பின் யோசிக்கவும் ஆரம்பித்தாள்!
“ஏய். .இவங்களுக்கும் இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லாதது போல தெரியுது!
ஆமா அப்படி தானே இருக்கு! இவங்க பேச்சும், பாடி லாங்குவேஜும்!
சரி. நாமும் பார்ப்போம். இவங்கள கொஞ்சம் தூண்டி விட்டாலும், அது பத்திக்கிட்டு பெரிய பிரச்சினை ஆகும் போல! அப்ப ஆகட்டும்!
இந்த கல்யாணம் எப்படியோ நின்னு போனா சரி. நமக்கு வந்திருக்கிற பணப்பிரச்சினை கொஞ்ச நாளைக்கு தள்ளிப் போகும்!” என்று மனதுள் கணக்குப் போட்டாள் கங்கா!
அதே போலவே தான் ப்ரியாவும் எண்ணினாள்.
“ஏது.. இந்த அண்ணிக்காரிக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்ல போலயே!
மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வருவது தெரிந்தும் வேணுமின்னே வீட்டை இப்படி போட்டு வச்சுருக்கா! என்று அவளும் சூழ்நிலையக் கணக்கிட்டாள்!
அதை வனிதாவிடம் காதில் சொல்லவும் செய்தாள்.
“ஆமா. அண்ணி.. இங்க பாருங்க காபி கப், ட்ரே, செராமிக் பிளேட்ஸ் எல்லாமே புதுசு புதுசா இங்க இருக்கு!
அப்ப இது வேணுமின்னே தான், அந்த மாதிரி தட்டுல வச்சு கொண்டு வந்திருக்கு!” என்றாள் அவளும் காதிலேயே!
“என்ன..? என்ன பேசிக்கிறீங்க?” என்றாள் கங்கா அவர்கள் இப்படி ரகசியம் பேசிக் கொளவதைப் பார்த்து விட்டு!
“இல்ல.. இங்க ஒரு ரூம் தான் இருக்கு! எங்க தம்பி எப்பவாச்சும் இங்க மாமியார் வீட்டுக்கு வந்தா, எப்படி தங்குவான்னு பேசிக்கிட்டோம்!” என்றாள் பிரியா.
“ஓ. அதுவா.. இது எங்க வீடு. உங்க தம்பி மாமியார் வீடு, அதோ அந்த வீடு! அவர் வந்தா அங்க தான் தங்கணும்!
அங்கயும் ரூம் எல்லாம் இருக்கு!” என்று ஜன்னல் வழியே அவர்கள் பழைய வீட்டை, நாட்டு ஓடுகள் போட்ட, கொஞ்சம் சிதிலமடைந்து செங்கற்கள் துருத்திக்கொண்டு தெரியும் காம்பவுண்ட் சுவருடன் கூடிய வீட்டைக் காண்பித்தாள்.
அதைக் கண்டு முகம் சுளித்தனர் பெண்கள் இருவரும்!
“அய்யே.. இதுவா? மழை பேஞ்சா ஒழுகும் போலயே?” என்றாள் ப்ரியா.
“ஆமா கொஞ்சம் ஒழுகும் தான்! மழை காலத்துல மட்டும் உங்க தம்பியை இங்க அனுப்பாதீங்க!” என்றாள் கங்கா.
இது வேறயா? அப்ப தலை தீபாவளிக்கு கூட வர முடியாதா? ஐப்பசி மாசம் மழை பெய்யுமே? என்றாள் ப்ரியா.
அது வரும் போது பார்த்துக்கலாம்! என்றாள் கங்கா விட்டேத்தியாக!
என்னத்தைப் பார்க்கிறது என்றபடி வெளியில் வந்தார்கள் இருவரும்!
“அண்ணி, இத வச்சு எப்படியாவது ப்ளே பண்ணிடுங்க” என்றாள் வனிதா, ப்ரியாவின் காதுக்குள் கிசுகிசுப்பாய்!
“ம்ம். நான் வேற ப்ளான் வச்சுருக்கேன். நீ பேசாம வா.” என்று அவளை இழுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள் ப்ரியா!
மொத்தத்தில் மகியின் வீட்டில் அவள் அண்ணியும், ராஜுவின் வீட்டில் அவன் உடன்பிறப்புகளும், அண்ணியும் ஆயிரம் வாலா சரவெடியை வெடிக்க விட்டு, ஆட்டத்தைக் கலைக்க அதன் திரியை நன்றாக கிள்ளி விட்டு, ரெடியாக வைத்துக் கொண்டு காத்திருந்தார்கள்!
ஒரு சிறிய வார்த்தைக் கங்கு வர வேண்டியது தான்!
வெடியும் வெடிக்க வேண்டியது தான்!
error: Content is protected !!