Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

பாறையில் மலர்ந்த தாமரையே! 12

“பெரியவங்க சொல்றதை கொஞ்சமாவது மதிச்சு நடந்திருக்கணும். அவ்வளவு ஈஸியா ஒரு குழந்தை தத்தெடுக்கக் கிடைக்குதுன்னா நாலா பக்கமும் விசாரிக்க வேண்டாமா..! இல்லைனா எங்ககிட்டயாவது ஒரு வார்த்தை கேட்டு செஞ்சுருக்கணும். எல்லாம் சம்பாதிக்கறோம்னு திமிரு.”

“பொண்டாட்டி சொல்லே மந்திரம்னு கண்ணை மூடிக்கிட்டு நடந்தா இப்படித்தான்.!”

“வீட்டுக்கே போலீஸ் வந்து எவ்வளவு அசிங்கமா போச்சு.. இதுவரைக்கும் நம்ம குரல் வெளியே கேக்கற மாதிரி கத்திக் கூட பேசினதில்ல..! நமக்கா இப்படி ஒரு நிலை வரணும். போச்சு மானம் போச்சு..!”

ஆளாளுக்கு பேசி.. ஏற்கனவே வேதனையில் நொந்து போன அவர்களின் மனதை ரணமாக்கி.. நீங்காத துயரத்தில் தள்ளிக் கொண்டிருந்தனர்.



Advertisement

இப்படி பிரச்சினை நடந்து போலீஸ் மீடியா என வருவதும் போவதுமாக இருக்க.. குழந்தைகளோடு வந்து சாலையில் நின்று எட்டிப் பார்த்து அனுதாபப்பட்டது எதிர்வீட்டு குடும்பம்.

கேள்வி மேல் கேள்வி கேட்டு விசாரணை முடிவில் வாத்சல்யன் சந்தான லஷ்மி தம்பதிகள் மேல் எந்தவித தவறுமில்லை என்று தெரிய வந்ததாலும் இதுபோல தத்தெடுத்த நிறைய பெற்றோர்கள் பாதிக்கப்பட்டிருந்ததாலும் காவல்துறை வழக்கெதுவும் பதிவு செய்யாமல் அவர்களை நிபந்தனையின்றி விடுவித்திருந்தது..

வெளியே தலை காட்ட முடியாத சூழ்நிலை..! ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்ல திராணியின்றி முகம் பார்க்க இயலாமல்.. சேர்ந்திருந்த போதும் தனித்திருந்தனர்.

Advertisement

இதழிகா.. கண்களுக்குள் நின்று கண்ணீரை உடைப்பெடுக்க வைத்தாள். அவளுக்காக வாங்கி கொடுத்த பொம்மை.. விளையாட்டுப் பொருட்களை சுற்றி சிதறவிட்டு அதற்கு நடுவில் படுத்திருந்தாள் லஷ்மி.

Advertisement

தங்களுக்கான ஒரு குழந்தையென அவளை மகளாகவே பாவிக்க தொடங்கிய சில நாட்களில்.. ரத்தமும் சதையுமாய் குழந்தையை கதற கதற அவர்களிடமிருந்து பறித்துச் சென்ற அந்த நாளை.. தங்கள் நினைவுகளிலிருந்து அடியோடு பெயர்த்தெடுக்க முயன்று கொண்டிருக்கின்றனர்.. உறக்கத்தில் வரும் சில பைத்தியக்கார கனவு போல் இதுவும் இருந்துவிடக் கூடாதா என அடிக்கடி தன்னை கிள்ளி பார்த்துக் கொள்கிறாள் லஷ்மி

வாத்சல்யனும் பிள்ளை மீது அதிகப்படியான ஆசைகளை வளர்த்துக் கொண்டு இப்போது இதழிகாவின் பிஞ்சு முகத்தை மறக்க முடியாமல் தவித்துப் போகிறான். கணவனும் மனைவியும் மாறி மாறி பிள்ளையை போட்டி போட்டு மடியில் அமர்த்திக் கொண்டு கொஞ்சலும் சிரிப்புமாய் கழித்த அந்த நாட்கள்.. இப்போது இதயமெங்கும் நெருப்பாய் சுடுகிறது.

எப்போது சாப்பிடுகிறார்கள் எப்போது உறங்குகிறார்கள் என்று கூட தெரியாத அளவிற்கு அவர்கள் மனதோடு சேர்த்து அந்த அறையும் இருண்டு போயிருந்தது..

Advertisement

எங்கு காணினும் இதழிகா ஞாபகம்..! திடீர் திடீரென குழந்தை சிரித்துக்கொண்டே ஓடி வருவது போல் பிரமை. மார்பிலும் தோளிலும் போட்டு தூங்க வைத்து..‌ கதை சொல்லி சோறூட்டிய நினைவுகள் எல்லாம் நரகமாய் துன்புறுத்தின.! மீண்டெழ முடியவே முடியாதபடிக்கு ஏதோ ஒன்று கடும் பிசாசாய் அவர்களை அழுத்தியது. நடு இரவில் உறக்கத்திலிருந்து விழித்து. இதழிகா.. இதழிமா..! என அறையெங்கிலும் பால்கனியிலும் சித்தம் கலங்கியவள் போல் தேடிக் கொண்டிருக்கிறாள் லஷ்மி.

சத்தம் கேட்டு அவனும் எழுந்து.. காணாமல் போன குழந்தையை தேடும் புத்தி பேதலித்த தாயைப் போல் அலைந்து கொண்டிருப்பவளின் தோள்களைப் பற்றி அழுத்தமாக உலுக்கி.. “இதழி போய்ட்டா..! சந்தா.. இதழி நம்ம கூட இல்லை..!” என்று நிதர்சனத்தை உணர்த்தி.. அவளுக்கு புரிய வைப்பதற்குள் ஒரு வழியாகி போகிறான் வாத்சா..!

குழந்தை பாக்கியத்தை உணராமல் இருந்தபோது எந்த கஷ்டமும் தெரியவில்லை.. கொடுத்து பறிக்கப்படும் அந்த கொடுமை..! மரணத்தை விட கொடியது.

குடும்பத்தார் முகத்தை கூட ஏறெடுத்து பார்க்க முடியாத நிலை.. நான் அப்பவே சொன்னேனே என ஆரம்பித்து வண்டி வண்டியாக ஆளாளுக்கு அளந்து விடும் அறிவுரைகளை கேட்கும் நிலையில் இல்லை அவர்கள்.

ஒருவேளை இவங்க பேச்சைக் கேட்காம போனதுனாலதான்.. இப்படி நடந்து விட்டதோ! அவர்களே கூனி குறுகுமளவிற்கு குடும்பத்தில் ஒவ்வொருவரின் பேச்சும் இருந்தது.

ஒரு கட்டத்தில்.. வாத்சல்யன் வெகுண்டெழுந்து விட்டான்.

“சும்மா திரும்பத் திரும்ப இதை பத்தியே குத்திக் காட்டி பேசிட்டு இருந்தீங்கன்னா.. நான் என் மனைவியை அழைச்சுக்கிட்டு இங்கிருந்து போயிடுவேன். அதுதான் வேணுமா உங்களுக்கு..!” என கண்கள் சிவக்க கத்த தொடங்கியதும்.. தாயும் தந்தையும் பதறிப்போனார்கள்.

“என்னடா இது வார்த்தை..! இதுவரைக்கும் நீ இப்படி பேசினதே இல்லையே.. அவ சொல்லிக் கொடுத்தாளா..! நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும்ங்கற அக்கறையில.. பெரியவங்க ஏதாவது சொல்றதுதான்.. உடனே வீட்டை விட்டு வெளியே போயிடுவேன்னு சொல்லுவியா..! எப்பா சாமி..! இனிமே நாங்க வாயவே திறக்கலை.. தயவு செஞ்சு வீட்டை விட்டு வெளியே போயிடுவேன் தனித்தனம் போயிடுவேன்னு இனி ஆரம்பிக்காத..! நீங்க உங்க இஷ்டத்துக்கு என்னவோ செஞ்சுக்கோங்க.. எல்லாரும் ஒண்ணா ஒரே குடும்பமா இருக்கற சந்தோஷத்தையாவது எங்களுக்கு கொடுங்க..!” மங்கை கண்ணை கசக்கி கொண்டு அங்கிருந்து சென்றுவிட பிரச்சனை அத்தோடு அடங்கி போயிற்று.

லஷ்மியும் வாத்சல்யனும் ஒருவருக்கொருவர் சுமூகமாக பேசிக்கொள்வதில்லை.. குழந்தையை கையிலிருந்து பறித்து சென்ற அவமானம்.. தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மன கிலேசங்கள் இதிலிருந்து வெளியே வர முடியவில்லை..

அன்று மூச்சு முட்டி திமிறிக் கொண்டிருக்கும் மனதை திசை திருப்ப தொலைக்காட்சி செய்திகளை பார்த்துக் கொண்டிருந்தபோது..

அந்த குறிப்பிட்ட காப்பகத்தின் பெயரைச் சொல்லி.. இங்கிருந்து காப்பாற்றப்பட்ட குழந்தைகளென மீட்கப்பட்ட ஒரு குழந்தையின் பெற்றோரை பேட்டியெடுக்க.. துரதிஷ்டவசமாக இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட அந்த குழந்தைதானா திரையில் வரவேண்டும்..

ஏதோ ரேஷன் கடை வரிசையில் நின்ற போது இன்னொருத்தியிடம் பார்த்துக்கொள்ள சொல்லி குழந்தையை ஒப்படைத்து விட்டு சென்றாளாம் பிள்ளையைப் பெற்றவள். அன்றோடு காணாமல் போன குழந்தை இப்போதுதான் கிடைத்திருக்கிறது.

இந்த வீட்டில் இவர்கள் மகளாக வளர்ந்த பொழுதுகளில் தினந்தோறும் வெந்நீரில் நீராட விட்டு விதவிதமாய் புத்தாடை அணிவித்து.. நெய்யும் பாலுமாய் ஊட்டி.. கொழுகொழுவென புஷ்டியாக வளர்ந்த குழந்தை.. இப்போது.. கலைந்த தலைமுடியும் அழுக்கு உடையுமாக.. மூக்கு சளி வழிய திரையில் காண நேர்ந்த போது..

மண்டியிட்டு விழுந்து ஓஓஓவென கதறி அழுதாள் சந்தான லஷ்மி..

கட்டிலில் அமர்ந்திருந்தவன் பாய்ந்து வந்து மனைவியை தூக்கி தன் நெஞ்சில் சாய்த்து கொண்டான்.

அழாதே என்று சொல்ல முடியுமா கவலைப்படாதே என்று தைரியம் கொடுக்க முடியுமா..! அல்லது எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பிக்கை வார்த்தை கூற முடியுமா..? என்ன ஆறுதல் சொல்லி அவளை தேற்ற முடியும்..?

இரவு நேரங்களில் உறங்கும் போது மனைவியை இறுக அணைத்துக் கொள்கிறான். வேலை நேரங்களில் கூட.. தவறாமல் அழைத்து சாப்ட்டியா..? என்ன பண்ணிட்டு இருக்க..? அப்புறம்! என்று கேட்பதன் மூலம்.. நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னை கைவிடுவதுமில்லை என்று புரிய வைக்க நினைக்கறான்..

இதைத் தாண்டி மனைவியின் துயரை எப்படி போக்குவதென தெரிவதில்லை அவனுக்கு.

எத்தனை நாள் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்க முடியும்..! வேலைக்கு போகலாம் என முடிவெடுத்தாள் லஷ்மி.

காரில் ஏறியதும் எதிர் வீட்டில் தாவியது கண்கள்.

மனைவியின் கவனம் அந்த பக்கம் போகாதபடிக்கு காரை அவசரமாக எடுக்க நினைத்தான் வாத்சல்யன்.

விதியின் வசத்தால்.. ஸ்டார்டிங் பிரச்சனையால் வண்டி மக்கர் செய்ய..! சில நிமிடங்கள் எதிர் வீட்டுக்கு நேராக நிற்க வேண்டிய சூழ்நிலை.

கையில் அதே அழுக்கு டெடிபரை வைத்துக்கொண்டு.. வாசலோடு வெளியேறிய அந்த பெரிய பலூனை ஓடி வந்து எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் ஓடியது தீப்தி பாப்பா..

ஆத்திரமா ஆதங்கமா அல்லது வெளிப்படுத்த முடியாத.. மனதுக்குள் சிக்கித் தவித்த குற்ற உணர்ச்சியா புரியவில்லை.. உதடுகள் துடிக்க கண்கள் கண்ணீரைக் கொட்ட ஆரம்பித்திருந்தன.

அலுவலகம் சென்ற முதல் நாளில் ஏகப்பட்ட விசாரிப்புகள். “அடாப்ஷன் ஒன்னும் அவ்வளவு ஈசி இல்ல எவ்வளவு ப்ரொசீஜர்ஸ் இருக்கு தெரியுமா..!” என ஆரம்பித்து அத்தனை பேரும் அதிமேதாவிகளாய் மாறி.. தகவல் களஞ்சியமாய் விவரங்களை புட்டு புட்டு வைக்க.. நொந்து போனாள் சந்தான லஷ்மி.

“குழந்தையை பெத்துக்க மட்டுமில்ல.. தத்தெடுக்க கூட ஒரு கொடுப்பினை வேணும் போலிருக்கு..!” என காதை தொட்டுச் செல்லும் கேலிப் பேச்சுக்கள்.

எத்தனை வருடங்களாக இந்த பேச்சுக்களை காதில் வாங்கிக் கொண்டிருக்கிறாள்..

சமீப காலங்களில் கல்லாக இறுகி போய் உணர்ச்சிகளை தொலைத்து.. கொஞ்சம் கடுமையாகத்தான் மாறிப் போயிருக்கிறாள் லஷ்மி.

இதன் காரணமாக வேலைகளில் தவறு செய்யும் தனக்கு கீழ் பணியாற்றுபவர்களை வாய்க்கு வந்தபடி திட்டப் போக.. “இப்படி இருந்தா எப்படி குழந்தை பிறக்கும்..! கடவுள் குதிரைக்கு ஏன் கொம்பு கொடுக்கலைன்னு இப்ப தெரியுதா..? மனசுல ஈரமும் பேச்சில கண்ணியமும் இருந்தாத்தானே வாழ்க்கையில் நல்லது நடக்கும்..!”

அலுவலகத்தில் மட்டுமல்ல.. சில நேரங்களில் வீட்டில்.. புவனாவின் சொந்தக்காரர்கள் அல்லது.. மாமியாரை பார்க்க வரும் உறவினர்கள்.. என எத்தனையோ பேர் சலிக்க சலிக்க இப்படி பேசுவதை கேட்டிருக்கிறாள்.

மரியாதை தெரியாத ராங்கியாம் சந்தான லஷ்மி. உள்ளதை உள்ளபடியே உடைத்து பேசுவதால் இந்த பட்டப்பெயர். சரி போகட்டும்.

அன்று வீட்டில் பெண்கள் யாரும் இல்லாமல் போகவே.. கூடத்தில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்தபடி ஓய்வு காலத்தை என்ஜாய் செய்து கொண்டிருக்கும் மாமனாரிடம் விசாரித்தாள் லஷ்மி..

“வீட்ல யாரையுமே காணுமே மாமா.. எங்க போயிருக்காங்க..?”

“புவனா அக்காவோட வளைகாப்புக்கு போயிருக்காங்கமா..! நீ போகலையா..! ஆபீஸ்ல இருந்து அப்படியே கிளம்பி போயிடுவேன்னுல நினைச்சேன்..” என்றார் அவர் ஒன்றும் தெரியாதவர் போல்..

சந்தான லஷ்மிக்கு முகம் கருத்து போனது..

*புவனாவோட அக்கா மாசமா இருக்காங்களா..?”

“என்னம்மா இப்படி கேக்கற..? உனக்கு தெரியாதா..? என்னென்ன வாங்கிட்டு போகணும் என்ன புடவை கட்டிட்டு போகணும்னு ரெண்டு நாளா வீட்ல இந்த பேச்சு தானே ஓடுச்சு.! உன்கிட்ட யாரும் சொல்லலையா..?”

*யா…ரு..ம் சொ..ல்லலையே..!” குரல் உள்ளிறங்கி போக விழித்திரையை மறைக்கும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அங்கிருந்து வேகமாக நகர்ந்தாள் லஷ்மி.

மாடிக்கு வந்து அவசரமாக தன் கணவனுக்கு அழைத்தாள்.

“என்னங்க..! புவனா அக்காவுக்கு இன்னிக்கு வளைகாப்பாமே!”

“அப்படியா..?”

“தெரியாத மாதிரி நடிக்காதீங்க..!”

“என் முன்னாடிதான் பேசிட்டு இருந்தாங்க..! என்கிட்ட வந்து யாரும் சொல்லலை..! சரி இப்ப என்ன அதுக்கு..?”

“அவங்க வீட்ல என்னை யாருமே கூப்பிடலையே..?” பேசும்போதே குரல் தழுதழுத்துப் போனது.

“கூப்பிடலைனா ரொம்ப சந்தோஷம்ன்னு நினைச்சுக்கோ..! கூப்பிட்டு போக முடியலைன்னாதான் தர்ம சங்கடம்.”

“நாம அவ்வளவு வேண்டாதவங்களா போயிட்டோமா..! ஒரு ஃபார்மாலிட்டிக்கு கூப்பிட்டுருக்கலாமே.. நிலைமை புரிஞ்சு நானே கண்டிப்பா போயிருக்க மாட்டேன்.”

“விடுடா..! புவனாவோட அக்காவுக்குதானே வளைகாப்பு..! அவங்களோட நமக்கு பெருசா பழக்கமில்லையே..! அதனால சொல்லாம இருந்திருக்கலாம்.”

“சமாளிக்கறீங்க..! உண்மையை சொல்லுங்க.. உங்களையும் நிஜமாவே கூப்பிடலையா..?”

எதிர்பக்கம் அமைதி.

“பேசுங்க வாத்சா..!”

சீற்றமாய் வெளியேறிய பெருமூச்சோடு.. “வளைகாப்புன்னு சொன்னாங்க.. ஆனா இன்வைட் பண்ணல..! அத்தானுக்கு வேலை இருக்கும்.. அக்கா ஆபீஸ் போறாங்க.. அவங்க எங்கருந்து வர போறாங்கன்னு புவனா அவளாவே சொல்லிக்கிட்டா..! அதுலருந்தே தெரிஞ்சுகிட்டேன். அவளுக்கு நம்மள கூப்பிடறதுல பெருசா இஷ்டம் இல்லைன்னு..!”

அழைப்பை துண்டித்து விட்டு மாடியிறங்கி கீழே வந்தவள் நுழைவாயில் கதவின் மீது கைகளை ஊன்றி தெருவை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்‌.

“தீப்தி.. தீப்தி..! வெளிய போகாதே..” காதுகளை எட்டிய பெண் குரலில் எதிர் வீட்டில் தாவியது கண்கள்.

வீட்டுக்குள் எட்டி எட்டி பார்த்துக்கொண்டு திருட்டுத்தனமாய் வெளியே ஓடிவந்தது தீப்தி..

சலனமற்ற விழிகள் குழந்தையின் மேல் அழுத்தமாக பதிந்திருந்தன.

மான்குட்டி போல் குதித்து குதித்து நடந்து வந்த சிறியவள்.. வீட்டைத் தாண்டி சாலைக்கு வந்த நேரம்.. எதிரிலிருந்து வேகமாக வந்த பைக்.. குறுக்கே வந்த பிள்ளையால் நிதானம் தவறி.. சற்று ஆட்டங்கண்டு.. வேறு வழியில்லாமல் குழந்தையின் மீது மோத போக.. சடாரென அவள் கைகளுக்குள் அடைக்கலமானது பாப்பா..

குழந்தையை தன்னோடு இறுக்கி அணைத்திருந்தாள் லஷ்மி. தீயாய் முறைத்தான் பைக் காரன்..

“நீங்கதான் இந்த குழந்தையோட அம்மாவா..?”

“ஹான்..?” லஷ்மி விழித்தாள்.

“பொறுப்பில்லாம குழந்தையை ரோட்ல விட்டு அப்படி என்ன வெட்டி முறிக்கறீங்க.. அறிவில்ல..!” அவன் பாட்டுக்கு கத்தி விட்டு செல்ல.. கையை காலை உதைத்து.. அவளை அடித்து கீழே இறங்கி.. வீட்டுக்குள் ஓடியது சின்ன பாப்பா.

லஷ்மியின் கவனம் அதிலெல்லாம் செல்லவில்லை..

நீங்கதான் இந்த குழந்தையோட அம்மாவா..! அந்த ஒரு கேள்வி மட்டும் நெஞ்சில் அழுத்தமாக தேங்கி நிற்கிறது.

தொடரும்.

4 thoughts on “பாறையில் மலர்ந்த தாமரையே! 12

  • Divyalakshmi Sugumar

    Yendha pakkamum veruppu naa yeppadi 😟😟😟😟😟😟
    Dpeethi in amma 🙏🙏🙏🙏🙏🙏

    Reply
  • Revathy Dhanda

    Ivangale sontha karangae ipdi la ma oru ponna nadathuvangae valaikappu nu sonna tha enna laskshmi ku vaathsa ku
    Neenga tha kulanthai oda amma va
    Lakshmi epdi feel panni iruppa 🥺🥺
    Aduthu enna nadakkumo aandavaa

    Reply
  • Krishnaveni

    ஒருகட்டத்துக்கு மேல சாந்தாவும் எவ்வளவு தான் பொறுமை காக்க முடியும் எதிர்த்து பேச தான் செய்வா ஆனா அதுக்கும் ஒரு காரணம் காட்டி இப்படியே அவள வலிக்க வலிக்க அடிச்சா பாவம் அவளும் என்ன தான் செய்வா 🤧🤧🤧
    கடவுளே அடுத்து என்ன நடக்க போதோ 🙄🙄🙄

    Reply
  • Jothi vel

    லட்சுமியாச்சும் அழுதுடுறா… வாத்சா நிலைமை ரொம்ப மோசம் 😭😭

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!