Skip to content
Post Views: 5,195
நீரதி தன் அண்ணன் வீட்டிற்கு வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. இங்கிருந்தே ஸ்வர்ணிகா பள்ளிக்குச் சென்றாள். ஆழியன் தான் தினமும் அழைத்துச் சென்று விட்டு வீட்டிற்கு கொண்டு வந்து விடுகிறான். அன்று நீரதியிடம் “பசிக்கிறது”என்று கேட்டதோடு சரி அவன். அவனின் கசங்கியத் தோற்றத்தை கண்டவள் வழி விட்டு நிற்க, உள்ளே சென்றவன் தான் வாங்கி வந்திருந்த உணவை எடுத்து வெளியே வைத்தான். அவ்வளவு தான் கையைக் கட்டிக் கொண்டு அமர்ந்து விட, நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவள் வந்து தட்டை எடுத்து உணவைப் பிரித்து வைத்தாள். மீண்டும் எழுந்து போய் கையைக் கழுவி விட்டு வந்தவன் “சாப்பிடு ரதி”என்று அவளை அமர்த்தி அவள் உண்பதை பார்த்த பிறகே தட்டில் கை வைத்தவன், உணவை உண்டு முடிக்கும் வரை நிமிரவில்லை. பிறகு உறங்கும் மகள்களோடு போய் படுத்துக் கொண்டான்.
Advertisement
‘வீட்டில் என்ன நடந்தது ஏது நடந்தது ஏன் இங்கே வந்தான்’ என்று அவளும் கேட்கவில்லை, அவனும் கூறவில்லை. ஏதோ தனிக்குடித்தனம் வந்தது போல இருக்கிறான். அரிசி, மளிகைச் சாமான்கள் எல்லாம் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தான். ஒரு பெட்டியில் தனக்கான உடைகள் மட்டும் மறுநாள் கொண்டு வந்தான். பிள்ளைகளோடு பேசினான். விளையாடினான் அவர்களோடு தான் உறங்கினான் மறந்தும் மனைவியின் அருகில் செல்லவில்லை. ஆனால் அவள் சமைத்ததை தான் உண்டான். ஆனால் உணவு உண்ணுவதற்கு தவிர அவனின் வாய்ப்பூட்டு எங்கேயும் திறக்கப்படவில்லை.
Advertisement
நீரதிக்கோ அவன் மீது அத்தனை கோபம் ‘என்ன காதலித்தான் இவன். எதிலும் என்னோடு நிற்கவில்லை, எனக்காக நிற்கவில்லை ஆனால் நான் வெளியே வந்ததும் என் பின்னாலேயே வந்து விட்டான் என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறான்’என்ற ஆதங்கம் மேலோங்க அவளும் எதுவும் பேசவில்லை. அவளின் கோபம் எல்லாம் நிலா அத்தனை பேசி இருக்கிறாள் என்று கூறியும் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லையே இவன். இப்போதும் அவன் பிள்ளைக்காக மட்டும் தானே கேட்டு இருக்கிறான். அப்போ அவனுக்கு யார் நான்?. எனக்காக ஆதரவாய் நிற்க மாட்டானா?’ என்றெல்லாம் தோன்ற அமைதியாக இருந்தாள்.
Advertisement
இருவரும் மௌனமாய் இருந்தால் வாழ்வில் சுவாரஸ்யம் இருக்காதே…மௌனத்தை கலைக்கவும் நாள் வந்தது.
Advertisement
ஸ்வாதிகா விடாமல் அழுததில் அவளை சமாதானம் செய்து கொண்டிருந்தவளிடம் “ஏன் அழறா அம்மு என்னாச்சு?”என்று கேட்க
“தெரியலை. டாக்டர் கிட்ட போகணும்”என்றவள் அவனிடம் பிள்ளையை கொடுத்து விட்டு மருத்துவமனை செல்லத் தேவையானவற்றை எடுத்து வைக்க இருவருமாய் மருத்துவமனைக்குச் சென்றனர்.
பால் செரிக்காமல் பிள்ளைக்கு வயிறுவலி என்ற மருத்துவர் மருந்துகளை கொடுத்து அனுப்பி வைக்க இருவருமே பழையபடி மௌனத்தை கைக்கொண்டனர்.
குழந்தை உறங்கிய பிறகு “ஏன் இங்கேயே இருக்கீங்க?”ஒரு வழியாக கேட்டு விட்டாள் அவனிடத்தில்.
“என் குடும்பம் இங்க தானே இருக்கு”ரத்தினச் சுருக்கமாய் பதில் தந்தான்.
“அடேங்கப்பா அக்கறையே!”என்றவளை நிமிர்ந்து பார்த்து விட்டு முகத்தை வேறுப் பக்கம் திருப்பிக் கொண்டான்.
அவள் பேச வருவதற்குள் கைபேசி அழைக்கவும் அவனைப் பார்த்தபடியே எடுத்து “ஹலோ!” என்றிட
“டீ நீரா?! “என்று துவங்கிய பக்கத்து வீட்டு பத்மா பேசி முடிக்க, நீரதியின் முகத்தில் கலவையான உணர்வுகள் பிரதிபலித்தது.
அவளின் முகபாவத்தை கண்டவனோ”என்னடி ரதி?”என்றிட எதுவும் இல்லை என்று தலையாட்டினாள்.
“மறுபடியும் வெளியே போறேன் வர ரெண்டு வாரம் ஆகும் சமாளிச்சுப்பியா?”என்று கேட்க
“சமாளிக்க முடியும் னு தான் வீட்டை விட்டு வந்தேன்”ஸ்திரமாக பதில் அளித்தவளை மறுபடியும் ஒரு கூர்பார்வை பார்த்தான்.
“உங்க வீட்டுல நீங்க இங்க இருக்கிறது யாருக்கும் தெரியாதா?”என்று அடுத்ததாய் கேட்க
“யாரும் கேட்கலை நானும் சொல்லலை”என்றான்.
“இதென்ன பதில். எதுக்குமே பேசாம அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?”சுள்ளென்று விழுந்தாள்.
“என்ன பேசணும்.?”
“உங்களை…”என்று பல்லைக் கடித்தவள் நிஜமாவே “உங்களுக்கு எதுவும் கேட்கவோ சொல்லவோ தோணலையா… அங்கே நடந்த எதையும் கேட்க மாட்டேங்கிறீங்க. அப்போ எனக்கு நடந்தது பத்தி உங்களுக்கு கவலை இல்லையா?. எல்லாத்துக்கும் ஊமையாக இருந்தா போதுமா…? எப்போ தான் எனக்காக நிற்பீங்க. என்னை லவ் பண்ண அதே ஆ”என்று நிறுத்தியவள் “பேர் சொன்னா பிடிக்காதுல்ல”என்றாள் விரக்தியாக.
“நான் அப்படி எதுவும் சொன்னது இல்லையே?!”என்றவனிடம் “ஆனா உங்க வீட்டில் சொன்னாங்களே… சார் தான் அவங்களுக்காக என்னை அனுசரிச்சு போக சொன்னவர் ஆச்சே?!”என்று படபடவென்று பொரிந்தாள்.
“நான் கிளம்பறேன்”என்று எழுந்து கொண்டான்.
“அதானே இதைத் தவிர வேற என்ன தெரியும் உங்களுக்கு?”என்றவளிடம் ஒரு பார்வை தான் அதன் பிறகு சத்தமேயின்றி கிளம்பி விட்டிருந்தான்.
அதே நேரத்தில் அங்கே ஆழியன் வீட்டில் வளர்மதி பொன்னியிடம் இரைந்து கொண்டிருந்தார்.
“பாத்திங்களா அத்தை ஊமைக்கொட்டான் வாயைத் திறக்குறாளா பத்மா கிட்ட?”என்று ஆத்திரமாக பேசினார்.
பத்மாவை விட்டு நீரதிக்கு பேசச் சொல்லி ஆழியன் அங்கே தான் இருக்கிறானா என்பதை உறுதி செய்து கொண்டார் வளர்மதி.
“ஏன் க்கா செல்வம் அங்கே இருக்க மாதிரியும் தெரியலையே நீரா எதுவும் சொல்லலை”என்று பத்மா கேட்க
“அங்கே தான் இருக்கான். மளியசாமான் வாங்கிட்டு போய் தந்தானாம், எல்லாம் சேதி வந்திடுச்சு. எம்புட்டுக்கு போறாங்கனு நானும் பாக்குறேன். அவனுக்கே இவ்வளவு இருந்தா அவன பெத்தவ நானு எனக்கு எவ்வளவு திமிரு இருக்கும்.”என்று தன் போக்கிற்கு பேசியவர் “கட்ட கடைசிக்கும் எங்க காலுல தானே விழுந்தாகணும்”என்றார் ஆணவம் மிளிர.
“விடுக்கா. என்னவோ கோபம் பேசிடுச்சு. பெரிய மனுசியா மன்னிச்சு விடு”என்றாள் பத்மா.
“ஆமாம் வளரு. நம்ம செல்வத்துக்காக பார்ப்போம்”என்ற பொன்னி “நீ போய் வேலையை பாரு பத்மா இது ஒரு முடிவுக்கு வராது. முடிஞ்சா நீராவை இங்கே வரச் சொல்லி பேசிப் பாரு.”என்று பத்மாவை நைச்சியமாக அனுப்பி வைத்தார் பொன்னி.
அவள் போனதும் “இதோட பத்மா காதுக்கு விஷயம் போறதை நிறுத்தணும் வளரு இல்லை ஊரே தெரிஞ்சு போகும்”என்று மருமகளை எச்சரித்த பொன்னி “நிலாவை ஒரு தடவை செல்வம் முன்னுக்க கண்டிச்சு வை அப்ப தான் அவனுக்கும் சமாதானம் ஆகும்”என்று ராஜதந்திரியாய் பேச அதற்கும் ஆத்திரம் தான் வளர்மதிக்கு.
“எம்மவளை நானே கைநீட்டுனதில்லை அவ அடிச்சு இருக்கா அண்ணங்காரன் அதை கேட்காம பொண்டாட்டி வீட்டை விட்டு போனாளாம் இவனும் பின்னாடியே நாய் மாதிரி போயிட்டான். நான் ஏன் தேடணும்னு தேடலை. நான் தான் எம்மவன்னு என் புருஷன் கிட்ட சப்போர்டுக்கு நிக்கிறேன் அவன் என்னை ஒரு இதுவா கூட மதிக்கலை”என்றார் இன்னும் ஆத்திரம் தீராமல்
“விடு வளரு நீர் அடிச்சு நீர் விலகுமா?”என்று பொன்னி சமாதானம் செய்ய
“அந்த பசப்பியால தான் அத்தை எல்லாம். ஒழுங்கா என் அண்ணன் மவளை கட்டி இருந்தா இப்ப நான் இவ்வளவு சீப்படுவேனா..? இவனால அவ வாழ்க்கையும் போச்சு. எல்லாம் யாரால இவ வந்து காதல் னு குறுக்க விழுந்ததால தானே?!”என்று பொருமினார்.
“என்ன செய்ய? எவ்வளவு சொன்னோம் கேட்டானா அவன். ஏதோ நீராவும் நமக்கு அடங்கி இருந்ததால பெருசா எதுவும் தெரியவில்லை. என்ன இருந்தாலும் நம்ம நிலாவும் அமைதியா போயிருக்கணும்”என்று பொன்னி பேச
“அவளுக்கு அவ கொறை. அவ பதினெட்டு வயசுல இருந்த நேரம், செல்வம் நீராவை கட்டிக்கிட்டு வந்ததுல இவளை இப்படி இருக்காத அப்படி இருக்காதனு கண்டிக்கப் போயி, எல்லாம் இவங்களால தானேனு கொஞ்சம் கோபத்தில் பேசிட்டா. பேசினது தப்பு தான் அதுக்கு அடிப்பாளா அவ. மாப்ள ஃபோன் பண்ணி என்ன ஆச்சுனு கேட்கும் போது பதிலே பேச முடியலை எனக்கு”என்றார் வளர்மதி.
“இதை எல்லாம் பேசினா ஆகாது வளரு. இப்போ நீராவை இந்த வீட்டுக்கு வர வைக்கிற வழிய மட்டும் பாருங்க. அவ போயே ஒரு வாரம் ஆச்சு. இதுல இந்த செல்வமும் போய் அங்கே உட்கார்ந்து இருக்கான். இப்படியே போனா சரி வராது”என்றார் பொன்னி.
“அதுக்காக நான் கீழ இறங்கி போய் அவளைக் கூப்பிட முடியுமா.”என்று எகிற பொன்னி அமைதியாகிப் போனார்.
வளர்மதி வெடுக்கென்று வெளியே வந்தவர், தரங்கினியிடம் எல்லாம் சொல்லிக் கொண்டு இருக்க
“நீங்க ஏன் அத்தை கூப்பிடுறீங்க எரியறதை பிடுங்கினா கொதிக்கிறது தானா அடங்கிறப் போகுது”என்றான் சுபாஷ்.
“புரியலையே சுபாஷு”என்று புருவம் சுருக்க
“அத்தை தெளிவாவே சொல்றேன் கேளுங்க”என்றவன் “கையில காசு இருக்குன்ற ஏத்தத்துல தானே உங்க மவன் அங்கே போய் உட்கார்ந்து இருக்கான். அந்த பொண்ணும் திமிரா அது வீட்டுல இருக்குது. செல்வத்தை உன் பொண்டாட்டி இங்கே வரலைனா நீயும் மில்லுக்கு வரக் கூடாது னு சொல்லுங்க. கையில் காசு இல்லாதபட்சத்தில் உங்க கிட்ட வந்து தானே ஆகணும். எப்படியும் நம்மள விட்டு வெளியே வேலை தேட மாட்டான் செல்வம். அதுவும் இல்லாமல் வெளியே தெரிஞ்சா கெட்ட பேர் ஆகிரும். அப்புறம் பொண்டாட்டி காசுல உட்கார்ந்து திங்க அவனுக்கும் அவமானமா இருக்கும் ல. கொஞ்சம் இறுக்கிப் பிடிங்க தானா வழிக்கு வருவாங்க”என்று யோசனை கூற வளர்மதியோ புருவநெரிப்புடன் சரியென்று கிளம்பினார்.
தரங்கினி வேகமாக “ஏன் ண்ணா இப்படி சொன்ன அவங்க கிட்ட.”என்று திட்ட
“நீ சும்மா இரு தரு. அவனுக்கு எவ்வளவு திமிரு. அவன் மில்லுக்கு வராமல் இருந்தா மச்சானும் நானும் அங்கே பார்ப்போம். நமக்கு தான் லாபம். நம்ம தங்கச்சியை வேணாம் னு சொன்னான் தானே அனுபவிக்கட்டும்”என்று வன்மமாய் பேச தரங்கினிக்கு இருமனநிலை.
லாபம் ,தங்கச்சிக்காக பழிக்கு பழி எல்லாம் சரி தான். ஆனால் செல்வத்திற்கு மில்லை விட்டால் வேறு வழியா இல்லை. இந்த மில் இல்லை என்றால் இன்னொன்று எனப் போய்விடுவான். மில்லிற்கே போகவில்லை என்றாலும் படித்த படிப்புக்கு வேலை தேடிக் கொள்வான். இப்போதே மனைவியைத் தேடி சென்று விட்டவன் தனிக்குடித்தனம் நடத்த தயங்கவாப் போகிறான். அவள் தனியே சென்றது தெரிந்தால் நிச்சயம் பவ்யா தீபனை அழைத்து சென்று விடுவாள். வீட்டு பெரியவர்கள் பொறுப்பு வேலை எல்லாம் என் தலையில் விழும் நான் எப்படி சமாளிக்க.. எத்தனை நாட்கள் வளர்மதி தனக்கு சாதகமாக நிற்பார். அப்படியே பவ்யா போகவில்லை என்றால் அவள் வேலை செய்வாள் ஆனால் நீரதி போல இருப்பாளா என்றால் நிச்சயம் இருக்க மாட்டாள். எதையும் முகத்திற்கு நேராக பட்டென்று பேசுபவளிடம் எதிர்வாதம் தான் புரிய முடியுமா நினைக்கும் போதே தரங்கினிக்கு மலைப்பாக இருந்தது.
சமையல் செய்யும் பெண் சமைத்து விட்டு செல்ல மேல் வேலைக்கு ஆள் கிடைக்காமல் திண்டாடிப் போனாலும் நீரதியை திட்டிக் கொண்டே வளர்மதி தான் வேலையைப் பார்த்தார். அலுத்து சலித்தது அவருக்கு. தான் பழக்கி விட்ட பழக்கம் இப்போது தனக்கே எதிராக நின்றதில் பல்லைக் கடித்தக் கொண்டு வாய் மூடி இருக்க வேண்டிய நிலை.
….. தொடரும்
error: Content is protected !!