Skip to content
Post Views: 1,132
“உள்ள வரலாமா..!” லஷ்மி கேட்டுக்கொண்டு வாசலில் நிற்க.. குழந்தைகளை அவசரமாய் கிளப்பி பள்ளிக்கு அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் அங்குமிங்கும் டென்ஷனாய் சுற்றிக் கொண்டிருந்த அந்த எதிர் வீட்டுப் பெண் வாசலில் நின்றிருந்தவளை யாரென அடையாளங் கண்டு புன்னகையில் இதழ் விரித்தாள்..
“ஏன் அங்கேயே நின்னுட்டீங்க.. வாங்க வாங்க..!” அவள் சிரிக்கவும் எங்கே அழையாத விருந்தாளியாய் எண்ணி முகத்தை சுழிப்பாளோ என்று சற்று பயமும் தயக்கமுமாய் நின்று கொண்டிருந்த லஷ்மியின் முகத்தில் திருப்தி.
வாசல் தாண்டி உள்ளே வந்தவள் முதன்முதலாய் அந்த வீட்டை கண்கள் சுழற்றிப் பார்த்தாள்.
நீளமும் அகலமும் கொண்ட விசாலமான செவ்வக வடிவ கூடம்.. அதையொட்டிய சமையலறை.. கேஸ் அடுப்பில் பாத்திரத்தில் ஏதோ கொதித்துக் கொண்டிருக்கிறது. உட்காருவதற்காக போடப்பட்டிருந்த சோபாவிற்கு எதிர்ப்புறம் அடுத்தடுத்து இரண்டு அறைகள். அந்த அறைக்கு பக்கத்தில் ஒரு குளியலறை.. கூடத்தின் மூலையில் ஒரு வாஷ்பேசின்.
Advertisement
“உக்காருங்க அக்கா..!” சோபாவை காட்டி உரிமையாய் அக்கா என அழைத்து உபசரித்த விதம் லஷ்மிக்கு பிடித்திருந்தது.
“வேலைக்கு கிளம்பனும்.. பசங்கள ஸ்கூலுக்கு அனுப்பனும்..! அவசரத்துல ஒன்னும் ஓட மாட்டேங்குது. அடுப்புல குழம்பு கொதிக்குது. ஒரு நிமிஷம் இருங்க.. கேஸ் ஆஃப் பண்ணிட்டு வந்துடறேன்.” என அங்கிருந்து ஓடினாள் அவள்.
பெரிய பிள்ளைகள் இரண்டும் சீருடையை அரைகுறையாய் அணிந்தபடி தொலைக்காட்சியில் கண் பதித்திருந்தன.
Advertisement
ஆண் பிள்ளை அவன்தான் மூத்தவனாக இருக்க வேண்டும் ஒன்பது பத்து வயதிருக்கலாம்..! முகத்தில் அந்த வயதுக்கே உரிய அலட்சியம்.. குறும்பும் துருதுறுப்பும் கொண்ட தோரணை.
Advertisement
சின்னவளுக்கு ஏழோ எட்டோ வயதிருக்கலாம்.. தந்தையின் ஜாடையை கொண்டிருந்தாள். பள்ளிக்கூடத்திற்கு போக வேண்டுமென்ற பிரக்ஞையின்றி சின்ன உதடுகள் சிரிக்க சிரிக்க தொலைக்காட்சியில் கண் பதித்திருக்க..! திரும்பி வந்த தாய்க்கோ அத்தனை கோபம்.
“மணி ஆகறது உங்க கண்ணுக்கு தெரியுதா இல்லையா..! ரெண்டு பேருக்கும் ஸ்கூலுக்கு போற ஐடியா இருக்கா..! இல்லை இன்னைக்கும் லீவ் போட்டு வீட்ல உட்கார்ந்து போன் நோண்டலாம்னு ஏதாவது பிளான் பண்ணி இருக்கீங்களா..?” பற்களை கடித்துக் கொண்டு கோபக் குரலில் சொன்னவள் சோபாவில் அமர்ந்திருந்த லஷ்மியை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு சிரித்து சமாளித்து குரலை தழைத்துக் கொண்டாள்.
“தப்பான நேரத்துல வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டேனா..?” லஷ்மி சங்கடத்தில் நெளிய.. அவள் பலமாக மறுத்து தலையசைத்தாள்.
Advertisement
“அப்படியெல்லாம் இல்லக்கா..! இந்த பசங்கள ஸ்கூலுக்கு கிளப்பி அனுப்பறதுக்குள்ள ஒரு வழியாகி போய்டறேன்.. மாடு விரட்டற மாதிரி ஒவ்வொரு வேலைக்கும் பின்னாடி நின்னு குத்திகிட்டே இருக்க வேண்டியதா இருக்கு.”
“டேய் வினோத்..!” இவள் கத்தியதும் திடுக்கிட்டு திரும்பி பார்த்தான் அவன்.
பெரியவன் வினோத்தா..? மனதில் குறித்துக் கொண்டாள் லஷ்மி.
“போய் நோட் புக்கெல்லாம் கரெக்டா எடுத்து வச்சிருக்கியான்னு செக் பண்ணு. பஸ்ல ஏறுன பிறகு அதை மறந்துட்டேன் இத எடுக்கலைன்னா உதை விழும் ஜாக்கிரதை..!” அவள் மிரட்டி கொண்டிருந்ததை காதில் வாங்கியும் வாங்காமலும் அங்கிருந்து நகர்ந்தான் வினோத்..
“என்ன படிக்கிறான்..?” லஷ்மி கேட்க..
“அஞ்சாவது படிக்கறான். இன்னும் கூட பொறுப்பே வரல.. கஷ்டப்பட்டு பேனா பென்சில் நோட்டு ஜாமென்ட்ரி பாக்ஸ்ன்னு வாங்கி கொடுத்தா.. எல்லாம் ஒரு நாள்தான்.. தொலைச்சிட்டு வந்து எங்க போச்சுன்னே தெரியலன்னு ரொம்ப அசால்ட்டா சொல்றான். இவனாலதான் எனக்கு பாதி டென்ஷன்.”
“குழந்தைங்கனாலே அப்படித்தானே..! இவ என்ன படிக்கறா..?”
“கேக்கறாங்க இல்ல சொல்லு..!” அவள் மகளை பார்த்து சொல்ல.. “தேர்ட் ஸ்டாண்டர்ட்!” என்றாள் சின்னவள்.
“உன் பேர் என்ன..!” லஷ்மி மென்மையாய் சிரித்தபடி கேட்க.. “நந்தினி..!” என சொல்லிவிட்டு அவளும் சிரித்தாள்.
“என் பெயர் லஷ்மி.. எதிர் வீட்டில் குடியிருக்கோம்.. என்ன பாத்திருக்கியா நீ!” லஷ்மி சிறுபிள்ளையிடம் பேசும் தோரணையோடு குறுகுறுப்பாக கேட்க..
“காலையில நீங்க ஆபீஸ் கிளம்பும்போது வந்து கார்ல ஏறுவீங்க இல்ல.. அப்ப பார்த்திருக்கேன்.” என்று சிரித்து வெட்கப்பட்டாள் நந்தினி.
“என் பெயர் மீனாட்சி..!” நந்தினியின் தாயின் குரலில் திரும்பி பார்த்தாள் லஷ்மி..
“ரொம்ப அழகான பேர்.! அன்னைக்கு நீங்க டென்ஷன்ல வேற மாதிரி சிச்சுவேஷன்ல இருந்ததுனால அறிமுகப்படுத்திக்க முடியல..! இப்ப எல்லாம் ஓகேதானே பிரச்சனை ஒன்னும் இல்லையே..! என்னவோ மனசு கேட்கல.. அதான் ஒரு வார்த்தை கேட்டுட்டு போகலாம்னு வந்தேன்.” லக்ஷ்மி சொல்ல சொல்ல சிரித்துக் கொண்டிருந்த மீனாட்சியின் முகம் மாறிக்கொண்டே போனது.
“பிரச்சனை என்னிக்குதான்க்கா இல்ல.. அது பாட்டுக்கு ஒரு பக்கம் இருக்க வாழ்க்கை அப்படியே போகுது..!” என்று பெருமூச்சோடு தரையை வெறித்தபடி சொன்னவள். சட்டென சுதாரித்துக் கொண்டு.. “சாரிக்கா..! நான் வேற ஏதேதோ பேசி உங்களை கன்பியூஸ் பண்றேன். காபி டீ என்ன குடிக்கறீங்க..?” என்று மீண்டும் சிரிப்புக்கு மாறினாள்.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நான் கிளம்பறேன். நீங்க இப்ப பிஸியா இருக்கீங்க.. சாவகாசமா இன்னொரு நாள் வரேன்.. நிறைய பேசலாம்.” என எழ முயல..
“ஐயோ என்னக்கா வந்துட்டு அதுக்குள்ள கிளம்பறீங்க.. இன்னும் கொஞ்ச நேரம் இருங்கக்கா..! பசங்க ஸ்கூலுக்கு போயிட்டா அப்புறம் பெருசா எனக்கொன்னும் வேலை இல்ல..! உங்களுக்கு ஆபீஸ் போகணுமில்ல.. நேரமாயிடுச்சோ..!” என்று கடிகாரத்தை பார்த்தபடி விசாரிக்க..
“இல்ல..! எனக்கு டைம் இருக்கு..! நீங்கதான் பாவம் குழந்தைகளை தயார் பண்ணிட்டு வேலைக்கு புறப்படணுமே..!” என்றாள் லஷ்மி.
“அது பரவாயில்லைக்கா..! வராதவங்க வந்திருக்கீங்க..! காலையிலும் சாயந்திரமும் நீங்க போகும்போதும் வரும் போதும் பாப்பேன். ரொம்ப நாளா உங்க கூட பேசணும்னு ஆசை..! ஆனா பேசினா பேசுவீங்களோன்னு ஒரு தயக்கம்.!”
“அய்யோ.. எனக்கும் அதேதாங்க.. உங்க கிட்ட பேசணும்னு ஆசை..! ஆனா நீங்க சிரிக்க கூட மாட்டீங்களா எப்படி ரியாக்ட் பண்ணுவீங்கன்னு தெரியல..! அன்னைக்கு நீங்களும் உங்க ஹஸ்பண்டும் சண்ட போட்டதில மனசு ஒரு மாதிரியா ஆகிடுச்சு.. அதான் எப்படி இருக்கீங்கன்னு பாத்துட்டு போகலாம்னு வந்தேன்.” லஷ்மி குதூகலமானாள்
“என்னக்கா வாங்க போங்கன்னு..! மீனாட்சின்னு பேர் சொல்லியே கூப்பிடுங்க..!”
“சரி மீனாட்சி..!”
“நந்தினி வா.. தலைவாரிக்க..! நேரமாச்சு பாரு..!” பேச்சினுடே மகளை அழைத்தாள் மீனாட்சி.
“நீ வேணா போய் அடுப்படியில ஏதாவது வேலை இருந்தா பாரு மீனாட்சி.. நான் அவளுக்கு தலைவாரி விடறேன்..” லக்ஷ்மி குறுக்கிட்டு சொல்ல..
“உங்களுக்கு ஏன்கா வீண் சிரமம்.. நான் பாத்துக்கறேன்..” என்றாள் மீனாட்சி சங்கடமாக..
“அதெல்லாம் ஒன்னுமில்ல..! இதுல என்ன கஷ்டம்.. அஞ்சு நிமிஷ வேலை.. நீ சீப்பு எடுத்துட்டு வா நான் தலை வாரி விடுறேன்..!” நந்தினியை அழைக்க அவள் தாயையும் லஷ்மியையும் மாறி மாறி பார்த்தாள்.
“ஆன்ட்டி கூப்பிடுறாங்க இல்ல.. போய் சீப்பு எடுத்துட்டு வா..!” மீனாட்சி அனுமதி கொடுத்ததும் உள்ளே போய் சீப்பு கொண்டு வந்து அவளிடம் தந்துவிட்டு தலையை காட்டியபடி நின்றாள் இளையவள்..
“அக்கா ஒரு அஞ்சு நிமிஷம்.. நான் உள்ள போய் வேலையை முடிச்சுட்டு வந்துடவா..! நீங்க இருப்பிங்கதானே..!” மீனாட்சி படபடக்கும் ஆர்வத்தோடு கேட்க.. “போ மீனாட்சி.. நான் இருக்கேன்..” சொல்லிவிட்டு குழந்தைக்கு வகுடெடுத்து தலை சீவுவதில் கவனம் செலுத்தினாள் லஷ்மி.
நேர்த்தியாக தலைவாரி இரண்டு பின்னலிட்டு ரிப்பனில் ஐந்து பூ வைத்து கட்டி முடித்து.. “கண்ணாடில போய் ஓகே வான்னு பாரு..” என சீப்பை அவளிடமே கொடுத்து அனுப்பி விட.. சுவற்றில் மாட்டப்பட்டிருந்த ஒரு சின்ன சதுர வடிவ கண்ணாடியில் தலையை அப்படியும் இப்படியுமாக திருப்பி பார்த்துவிட்டு.. “ஓகே ஆன்ட்டி” என்று மகிழ்ச்சியுடன் தலையாட்டினாள் நந்தினி.
“நந்தினி..! புக்ஸ் எல்லாம் எடுத்து வச்சுட்டு ரெடியாகு.. பஸ் வந்துடும்.. டிபன் வேற சாப்பிடணும்..!” என்றபடியே இரு தட்டில் ஆவி பறக்க இட்லியின் சாம்பாருமாக வெளியே வந்தவள் அதை கீழே வைத்துவிட்டு.. “ரெண்டு பேரும் சீக்கிரம் வந்து சாப்பிடுங்க..!” என்றபடியே மீண்டும் சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.
லஷ்மி அடுத்து என்ன செய்வதென தெரியாமல் எழுந்து சமையலறைக்குள் நுழைந்து சுவற்றில் சாய்ந்து நின்றபடி.. “நான் ஏதாவது உதவி பண்ணட்டுமா மீனாட்சி..!” என்று கேட்க.. அந்த குரலில் திடுக்கிட திரும்பியவள்.. “ஐயோ அக்கா நீங்க ஏன் இங்கல்லாம் வந்துட்டு.. உங்களுக்குத்தான் காபி போட்டுட்டு இருக்கேன் போய் ஹால்ல உட்காருங்க.. நான் இப்ப வந்துடறேன்..” என்றாள் சற்று பதட்டமாக..
“பரவாயில்லை நான் இங்கே நிக்கறேன்.. கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாமே..!” என்றாள் இவள்.
“எல்லாம் போட்டது போட்டபடி இருக்கு.. வேலைய முடிச்சிட்டுதான் கிளீன் பண்ணனும்..!” அசடு வழிந்தாள் மீனாட்சி..
லஷ்மி சமையலறையை நோட்டமிட்டு சுத்தமாக இல்லையென மனதுக்குள் நினைத்துக் கொள்வாளோ என்ற பயம் அவளுக்கு..
“காலையில அவசரமா வேலை செய்யும்போது அப்படித்தான் இருக்கும்.. அதனால என்ன..? எங்க வீட்லயும் இப்படித்தான்.. போட்டது போட்டபடி சமைச்சுட்டு அப்படியே போயிடுவாங்க.. நான்தான் எல்லாத்தையும் எடுத்து வச்சு சுத்தம் பண்ணுவேன்.”
“கூட்டு குடும்பம் ஒரு விதத்தில் நல்லதுதான்.. பொம்பளைங்க மூணு பேர் இருக்கீங்க ஆளாளுக்கு ஒரு வேலை எடுத்து செஞ்சுக்கலாம்..! தனியா ஒருத்தர் தலையிலேயே எல்லாம் விடியாது.. இல்லக்கா..!” மீனாட்சி எதார்த்தமாக சொல்ல.. லஷ்மியின் முகம் மாறி போனது..
“அந்த ஒரு விஷயத்துல வேணா கூட்டு குடும்பத்தில் வசதி இருக்கறதை ஒத்துக்கலாம்.” லேசான சிரிப்புடன் இவள் சொன்னாலும் மனமெங்கும் கசப்பு பரவியிருப்பதை மீனாட்சி அறிந்தாளா தெரியவில்லை.. ஒரு கோப்பை பாலில் காப்பி தூளையும் சக்கரையையும் அளந்து போட்டுக் கொண்டிருந்தவள் லஷ்மியின் பக்கம் திரும்பி பார்வையால் கூர்ந்தாள்..
“அக்கா.. இப்ப நீங்க ஓகே தானே நார்மல் ஆகிட்டீங்களா..!” உதட்டை ஈரப்படுத்திக் கொண்டு சற்று பதட்டத்தோடு கேட்க..
“ஏன் எனக்கென்ன..? நான் நார்மலாத்தான் இருக்கேன்.” கண்கள் சுருக்கி புரியாமல் பார்த்தாள் இவள்.
“நீங்க சந்தோஷமா இருந்தா அதுவே போதும் அக்கா.. இல்ல எதுக்கு சொல்றேன்னா.. அன்னைக்கொரு நாள் அந்த குழந்தையை போலீஸ் வந்து தூக்கிட்டு போனபோது நீங்க வாசல் வரை வந்து அழுதுட்டு நின்னதை பார்த்தேன். மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சுக்கா.. கடவுள் ஏன்தான் நல்லவங்களை இப்படி சோதிக்கிறான்னு தெரியல..!”
மறக்க நினைக்கும் பழைய சம்பவத்தை நினைவு படுத்தியதும் சட்டென கண்கள் கலங்கிவிட முயன்று தன்னை திடப்படுத்திக் கொண்டு..
“அதைப் பத்தி பேச வேண்டாமே மீனாட்சி.. எல்லாத்தையும் மறக்கணும்னு நினைக்கிறேன்” என்றாள் பெருமூச்சை இழுத்துவிட்டபடி.
“புரியுதுக்கா..! நிச்சயமா கடவுள் கண் திறப்பார். நம்பிக்கையோடு இருங்க.”
“பரவாயில்லையே! என்னை பத்தி எல்லா விஷயமும் உங்களுக்கு தெரிஞ்சிருக்கு..!”
“அவ்வளவா தெரியாதுக்கா.. உங்க வீட்டு ஆளுங்க யார்கிட்டயும் பேசினதே இல்ல..! அவங்க யாரு குள்ளமா கொஞ்சம் வெள்ளையா.. அந்த ரெண்டு குழந்தைகளோட அம்மா..”
“புவனாவா..!”
“ப்ச் தெரியல..! அவங்க உங்கள மாதிரி இல்ல.. சிரிச்சா கூட முகத்தை திருப்பிக்கிட்டு போறாங்க..! மனசு கஷ்டமா போச்சு.. அன்னையிலிருந்து நானும் அவங்கள திரும்பி கூட பாக்கறதில்ல..”
“அவ பெருசா அக்கம்பக்கத்துல பழக மாட்டா.. அவ உண்டு அவ வேலை உண்டுன்னு இருப்பா..! ஏதாவது டென்ஷன்ல இருந்திருப்பா.. உன்னை கவனிச்சிருக்க மாட்டா.. இல்லன்னா கண்டிப்பா சிரிச்சிருப்பா..!” என்றாள் தம்பி மனைவியை விட்டுக் கொடுக்காமல்..
காபி கோப்பையை கையில் கொடுத்துவிட்டு சேலை முந்தானையால் கழுத்தை துடைத்துக் கொண்டாள் மீனாட்சி..
“உங்க வீட்டுக்காரர் எங்க..? வேலைக்கு கிளம்பியாச்சா..!”
“ஆமாக்கா..! மார்னிங் ஷிப்ட்..! காலையில சீக்கிரமா எழுந்து கிளம்பி போயிட்டார். இல்லைனாலும் ஒரு உபயோகமும் இல்லை.. எல்லா வேலையும் நான்தான் பார்க்கணும்.” மீனாட்சி சலித்துக் கொண்டாள்.
“இருந்தாலும் இப்படி வெளியே நின்னு சண்டை போடறதை நிறுத்திக்கோங்க..! அக்கம் பக்கத்து வீட்டு ஆளுங்க வாயில போட்டு மெல்லுறதுக்கு நாமளே எதுக்காக எடுத்து கொடுக்கணும்.. முடிஞ்சவரை பிரச்சனைகளை பேசி தீர்க்க பாருங்க.. வளர்ற குழந்தைகள்.. நீங்க இப்படி அடிக்கடி சண்டை போடறதுனால அவங்க மனசு பாதிக்கப்பட்டா பின்னாடி நீங்கதான் கஷ்டப்படணும்.”
“தினமும் குடிச்சுட்டு வராருக்கா.. கேள்வி கேட்டா.. கஷ்டப்பட்டு உழைச்சிட்டு வரேன்.. அந்த ஒரு சந்தோஷத்தை கூட நான் அனுபவிக்க கூடாதான்னு சண்டை போடறார். நானும் இந்த குடிப்பழக்கத்தை நிறுத்த எவ்வளவோ போராடி பார்த்துட்டேன் முடியல.. பையன் வளர்ந்து வர்றான்.. அவன் முன்னாடி இப்படி குடிச்சு தள்ளாடிகிட்டே வந்தா நாளைக்கு அவன் எப்படி நல்லவனா வளருவான். குழந்தைகள் பெத்தவங்கள பாத்துதானக்கா எல்லாமே கத்துக்குது. அதைக் கேட்டேனு அவ்வளவு கோபம்.”
லஷ்மி மீனாட்சியை பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
“முன்ன மாதிரி இல்லக்கா இப்ப புதுசா அடிக்க வேற ஆரம்பிச்சிருக்கார். வாய தொறந்து எதுவுமே கேட்க முடியல..! பசங்க வேற கத்தி அழுது ஊர கூட்டிடுதுங்க..! பேசாம புள்ளைங்கள கூட்டிட்டு பிறந்த வீட்டுக்கு போயிடலாம்னா அங்க விருந்தும் மருந்தும் மூணு நாளைக்குத்தான்.. பேசாம விஷத்தை குடிச்சிட்டு செத்துடலாமான்னு தோணுது..” என கண்ணீரை மறைத்துக் கொள்ள முயல.. பதறினாள் லஷ்மி.
“அய்யோ.. என்ன மீனாட்சி பேச்சு இது..! வேலைக்கு போற.. சம்பாதிக்கற..! தைரியமா தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டாமா நீ..!”
“வாங்கற சம்பளமெல்லாம் குழந்தைங்க ஸ்கூல் ஃபீசுக்கே சரியாகப் போகுது.. இவர் கொண்டுவர பணத்துல வாடகை கொடுக்கணும்.. வீட்டு செலவு பார்க்கணும்..! குழந்தைகளுக்கு நல்ல படிப்பையாவது கொடுக்கணும்னு முடிஞ்ச வரைக்கும் போராடிக்கிட்டு இருக்கேன்.. கடனும் செலவும் எக்கச்சக்கமும் இருக்கு.. இவர் என்னடான்னா வாங்கற சம்பளத்தில் பாதியை குடிச்சிட்டு வர்றார். ரெண்டை வளர்த்து படிக்க வைக்கவே துப்பில்லை.. இதுல இவர் பேச்சைக் கேட்டு மூன்றாவது பெத்துக்கிட்டது எவ்ளோ பெரிய தப்புன்னு இப்பதான் புரியுது.. எதிர்காலத்தை நினைச்சாலே பயமா இருக்குதுக்கா..” சமையலறை திண்டில் சாய்ந்து நின்றவள் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொள்ள..
“கவலைப்படாதே..! எல்லாத்துக்கும் ஒரு வழி பிறக்கும். கடவுள் நிச்சயமா உன் பாரத்தை குறைப்பார்” என்றாள் லஷ்மி.
தொடரும்.
error: Content is protected !!
அடடா லஷ்மியும் ,மீனாட்சியும் பரஸ்பரம் பேசி பழகி நல்ல ஒரு அக்கா, தங்கை உறவாக மாறிட்டாங்களே😀😀
லஷ்மி நீ உன் கொழுந்தன் மனைவிய கூட விட்டுக்கொடுக்காம பேசுற இதே புவனாவாக இருந்தால் உன்ன பத்தி இல்லாததையும், பொல்லாததையும் இட்டுக்கட்டி சொல்லியிருக்கும் 😔😔
ஆனால் இதுபோல நல்லவர்களுக்கு தான் கடவுள் சோதனைய கொடுப்பார்,😪😪
எங்க சின்ன பாப்பாவை கானும் தூங்குறாளோ 🤔🤔
Orutharin baram innorutharin varam 🙏🙏🙏🙏🙏🙏🙏
போச்சு… இந்த லக்ஷ்மி முடிவெடுத்துட்டா போல.🤧🤧🤧
லஷ்மி மீனாட்சி ரெண்டு பேரும் இப்படி நல்லமுறையா பேசிக்குறது நல்லா தான் இருக்கு ஆனா லஷ்மி கடைசில சொன்ன பாரு கடவுள் பாரத்தை குறைப்பாரு ன்னு அங்க தான் ஏதோ இடிக்குது 😳😳😳