பாறையில் மலர்ந்த தாமரையே! 26
சாதாரணமாக உரையாடிக் கொண்டிருந்த வினோத் நந்தினி இருவரும் ஒரு கட்டத்தில் பேச்சு கலவரமாகி.. ஒருவர் மற்றவரை பள்ளிக்கூடத்தில் உடன் பயிலும் நண்பர் கூட்டத்தால் அழைக்கப்படும் பட்டப் பெயர்களைப் பற்றி போட்டுக் கொடுத்து.. சந்தை கடை போல சலசலவென சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்களை அமைதிப்படுத்தி சமாளிப்பதற்குள் ஒரு வழியாகி போனாள் லஷ்மி.
தீப்தி அவளுக்கு சற்று தூரத்தில் அமர்ந்து பேப்பரும் பேனாவுமாய் தன்னை ஆபீஸர் போல பாவித்து ஏதோ மும்முரமாய் கிறுக்கிக் கொண்டிருந்தது.. லஷ்மி பக்கத்தில் போனால் பயந்து அழுது உள்ளறைக்கு போய் கதவை சாத்திக் கொள்ளும் என்பதால்.. வெறும் பார்வை மட்டுமே..
செவிப்பறை கிழியுமளவு வாள்.. வாளென கத்தி கூச்சலிட்டு பெரிய பிள்ளைகள் செய்த கலாட்டாக்களில் காதை பொத்திக்கொண்டு.. கண்களை மூடியபடி ஓய்ந்த நிலையில் லஷ்மி அமர்ந்திருக்க நல்லவேளையாக அந்நேரம் பார்த்து அவளைக் காப்பாற்ற வந்து சேர்ந்தாள் மீனாட்சி..
“வாடியம்மா..! ப்பாஆஆ.. சமாளிக்க முடியலையே இவங்கள..! காதே அடைச்சு போச்சு..!” என கண்களை மூடித் திறந்து இதழ் குவித்து நீண்ட மூச்சை வெளியிட்டாள் லஷ்மி.
Advertisement
“அஞ்சு பத்து நிமிஷத்துக்கு இப்படி சலிச்சிக்கறீங்களே..! அப்ப என் நிலைமையை கொஞ்சம் யோசிச்சு பாருங்க..!” வேலைக்கு போய் வந்த களைப்பில் இடுப்பில் கை வைத்து அயர்வாய் பெருமூச்சு விட்டாள் மீனாட்சி.
“ஐயோ சலிப்பெல்லாம் ஒன்னுமில்ல.. யாராவது ஒருத்தர் பேசினா பரவாயில்ல.. ரெண்டு பேரும் வாய மூடாம காதுக்குள்ள வந்து கத்திட்டே இருந்தா நான் யார் சொல்றதை கேட்கறது..! முடியல சாமி..! சரி நான் கிளம்பறேன்.. அவர் வர்ற நேரம்..!” விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டாள் லஷ்மி.
“அம்மா.. அது..!” என ஆர்வமாக எதையோ சொல்ல ஓடி வந்த நந்தினியை.. “பேசி கிழிச்சதெல்லாம் போதும்.. ஹோம் ஒர்க் எதுவுமில்லையா?” எனக் குறுக்கிட்டு அவள் பேச்சை நிறுத்தினாள் மீனாட்சி.
Advertisement
“இல்லமா இன்னைக்கு ஸ்போர்ட்ஸ் டே அதனால கிளாஸ் எதுவும் நடக்கல..!”
Advertisement
“அப்ப.. போய் புக் எடுத்து வைச்சு படிங்க..!”
“அம்மா நான் சொல்றத கொஞ்சம் கேளுமா..!”
“நீங்க ஒன்னும் பேச வேண்டாம்.. படிக்காம நேரத்தை கடத்தறது எப்படின்னு நல்லாவே தெரிஞ்சி வச்சிருக்கீங்க..! கடன உடன வாங்கி அடுத்த மாசம் உங்கள டியூஷன் சேர்த்து விட்டுடறேன்.. அப்பதான் அடங்குவீங்க..!”
Advertisement
“ம்மாஆஆ..?”
“போய் படிங்கன்னு சொன்னேன்.”
இரண்டும் சலிப்பாக கை காலை உதைத்தபடி பொறுமையாக நடக்க..
“உள்ள போய் உட்கார்ந்துகிட்டு ரெண்டு பேரும் சண்டை போட்டீங்கன்னு தெரிஞ்சது அப்புறம் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.. சீக்கிரம்..” அவள் மிரட்டலில்.. பிள்ளைகள் இரண்டும் சொல்ல வந்த சமாச்சாரங்களை விழுங்கிவிட்டு தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டே.. புத்தகப் பையை டமால் டுமீர் என கீழே போட்டு இழுத்துக் கொண்டே அறைக்குள் செல்வதை வாசலில் செருப்பு மாட்டிய கணத்திற்குள் கண்டு கொண்டாள் லஷ்மி.
வினோத்தும் நந்தினியும் போட்டி போட்டுக்கொண்டு தன்னிடம் பேசவும் பழகவும் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகின்றன என இப்போது புரிகிறது அவளுக்கு.
அன்று இரவு தன் கணவனிடம்.. வினோத் நந்தினி இருவரும் மாறி மாறி அவர்களுக்குள் வைத்துக் கொண்ட பட்ட பெயர்களை பற்றி சொல்லி சிரித்துக் கொண்டிருந்தாள் லஷ்மி.. வெகு நாட்களுக்கு பின் அவள் மனம்விட்டு சிரிப்பதை உலகை மறந்து கன்னத்தில் கைவைத்து கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் வாத்சல்யன்.
சிரித்து சிரித்து ஓய்ந்து போய் அவளாகவே தன்னை சமன்படுத்திக் கொண்ட போதும் மிச்சமீதி சிரிப்பு வெளிவர துடித்து உதட்டோரம் திணறிக் கொண்டிருக்கிறது.. வெடிச்சிரிப்பின் பொருட்டு வெளிப்பட்ட கண்ணீரை துடைத்துக் கொள்கிறாள் லஷ்மி..
“சந்துமா..!”
“ம்ம்..!” இப்போதும் கூட சிரிப்பில் நெஞ்சு குலுங்குகிறது..
“சந்தோஷமா இருக்கியா..?”
“ம்ம்.. அப்படித்தான் நினைக்கறேன்..”
“சந்தோஷமா இருப்போமா..?” அவன் குரலில் வித்தியாசம் தெரியவே.. அர்த்தம் புரியாத பார்வை பார்க்கிறாள் லஷ்மி.. நெருங்கி வருகிறான் வாத்சல்யன்.. இப்போது விஷயம் புரிகிறது.
“வாத்சா.. வேணாம்..!”
“எனக்கு வேணுமே..!” என நெருங்கும் முன்.. அவன் கை வளைவுக்குள் அகப்படாமல் எழுந்து ஓட.. அவனும் எழுந்து துரத்தினான்.
“இந்த சின்ன ரூமுக்குள்ள எவ்வளவு தூரம் ஓடுவேன்னு நானும் பார்க்கறேன்..!”
“நான் வெளியே போவேன்..!”
“அதுக்கு முன்னாடி நான் உன்னை பிடிச்சுடுவேனே..!” சொன்னதோடு நிற்காமல் அவளை இழுத்து சுவற்றோடு சாய்த்து நிற்கவைத்து நெருங்கி நின்றான் வாத்சல்யன்.
இனி தப்பிக்க முடியாது அவன் கைகள் அவள் இடையை இறுக்கி அணைக்கின்றன.
“என்ன வேணுமாம் என் வாத்துக்கு..!” இரு கரங்களை மாலையாக்கி அவன் கழுத்தை கட்டிக் கொண்டாள் லஷ்மி.
“உன் முகத்துல தெரியற அவ்வளவு சந்தோஷத்தையும் அள்ளி விழுங்கணும்..” ஆழ்ந்த குரல் அவளையும் சேர்த்து கிறங்கடித்தது.
“எப்படி..?” புருவங்களை உயர்த்தி பார்த்த பார்வையில் விஷமம் தெரிந்தது.
“ம்ம்..? மொத்த சந்தோஷத்தையும் முத்தம் மூலமா எடுத்துக்கற வித்தையை காட்டவா..?”
ஆழ்ந்த குரலில் சொன்னதோடு நிதானமாக முகம் முழுக்க முத்தமிட்ட கணம் விழிகளை மூடி மயக்கத்தோடு அவள் தோள்களில் சரிந்தாள் லஷ்மி.
மோவாயில் முத்தமிட்டு அவள் கன்னங்களை இரு கைகளில் ஏந்தி உதட்டை நெருங்கினான் வாத்சல்யன்.
“அங்கேயும் சந்தோஷம் மிச்சமிருக்கா என்ன..?” குரலுக்கு பதில் காற்றுதான் வந்தது.
“உன் சிரிப்பை விட பெரிய போதை என்னடி இருக்கு..? அந்த அழகான சிரிப்பு இங்கிருந்துதானே வருது..” இதழோடு இதழ் பதித்து சொல்ல உடம்பு சிலிர்த்து விழிகளை திறக்காமல் தன்னவனின் தாபத்தோடு தகித்த மூச்சுக்காற்றையும்.. அவன் இறுகிய அணைப்பையும் ஆழ்ந்து அனுபவித்திருந்தாள் லக்ஷ்மி.
“அடு..த்து..?” மோக மயக்கத்தில் விட்டுவிட்டு வந்தது வார்த்தைகள்..
“சொல்லனுமா..? செய்யனுமா..?”
“ம்ம்..?” பதிலற்று அவனோடு கரைந்து கொண்டிருந்தவளின் மோவாயை தொட்டு நிமிர்த்தினான் வாத்சல்யன்.
“கண்ணை திற சந்தா..!”
“மாட்டேன்..!”
“பத்து வருஷத்துக்கு பின்னும் கூட புது பொண்ணு மாதிரி ஜொலிக்கற இந்த வெட்கம்தான்டி என்னை சுழட்டி போடுது..!” அவள் விழிகள் மூடி.. நாணம் பின்ன உதடுகள் துடிக்கும் அழகை ரசித்தான் வாத்சல்யன்.. உதட்டோடு உதடு உரசினான்..
உணர்ச்சி விளிம்பில் ஏறி இறங்கிய அவள் தொண்டைக் குழியிலும் முத்தமிட்டான். விம்மித் தணிந்த நெஞ்சுக்கூட்டில் முகம் புதைத்தான்.
“வாத்சா பிளீஸ்..!”
“இனி தாங்காதுன்னு சொல்றியா..!” அவள் காதோரம் கிசுகிசுக்க.. “டே..ய்!” என அவன் மார்பில் அடித்து சிணுங்கி சிரித்தாலும்.. அதுதான் உண்மை என்பதாக.. தன் கணவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள் லஷ்மி..!
ஒரு சுற்று சுற்றி மனைவியோடு சேர்ந்து மெத்தையில் விழுந்தான் வாத்சல்யன்.
“கண்ணை திறந்து என்னை பார்க்க மாட்டியா சந்துமா..?” மிக நெருக்கத்தில் அவன் கன்னத்தோடு உராய்கிறது அவன் உதடுகள்.
இமை படலத்திற்குள் அழுத்தமாய் பதிந்திருக்கும் கம்பீரமும் வசீகரமும் கொண்ட அவன் முகம்தானே கண்களை திறந்தாலும் தன்னை அசரடிக்கப் போகிறது.. எதுவும் மாறப் போவதில்லையே..! அவன் கழுத்தை கட்டிக்கொண்டு தன்னோடு இழுக்க அவள் மீது விழுந்தான் வாத்சல்யன்.
இருவரும் உணர்ச்சிப் பேரலையில் ஆர்ப்பரித்து ஒருவரை ஒருவர் மறந்து உறவுக்குள் மூழ்கும் நேரம்.. ஜன்னல் வழியே தெரிந்த எதிர் வீட்டிலிருந்து பெருத்த கூச்சல்.
லஷ்மி மீது முழுவதுமாய் படர்ந்திருந்த வாத்சல்யன் அவளை விட்டு விலகாமல் ஜன்னல் பக்கமாய் தன் பார்வையை திருப்பினான்.. எழுந்து பக்கத்தில் போனால் ஒழிய ஜன்னலுக்கு வெளியே என்ன நடக்கிறதென தெரியப் போவதில்லை..
“ப்ச்..! முதல்ல எழுந்திரிங்க..!” அவன் தோளில் தட்டினாள் சந்தான லஷ்மி..!
மோகவலை அறுபட்ட ஏமாற்றத்தோடு.. நீண்ட மூச்செடுத்து மனைவியை ஆழ்ந்த பார்வை பார்த்தவன் அவள் இதழில் ஒரு அழுத்தமான முத்தத்தை வைத்த பிறகுதான் எழுந்தான்..
“என்ன பிரச்சனை அங்க..?” ஜன்னல் பக்கமாக ஓடினாள் லஷ்மி..
“அந்த வீட்ல சண்டை வரலைன்னாதான் அதிசயம் என்றான் வாத்சா..!”
“போய் என்னன்னு பாருங்களேன்..!”
“ஏய்.. தெருவுல ஈ காக்கா இல்லடி..! சும்மா சும்மா போய் அவங்க குடும்ப விஷயத்துல மூக்க நுழைக்க முடியாது.. போன முறை தலையிட்டதே பெரிய தப்பு.. அவங்க பிரச்சினையை அவங்க பார்த்துப்பாங்க விடு..” இவர்கள் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் மீனாட்சி அலறும் சத்தம்.. இருவரும் திகைத்து அந்தப் பக்கமாக திரும்ப.. வேணு இவளை அடித்து விட்டான் போலும்.. மீனாட்சி கன்னத்தில் கைவைத்து அழுது கொண்டிருந்தாள்.
“அய்யய்யோ..! இந்தாளுக்கு இதே வேலையா போச்சு..! வாங்க போய் என்னன்னு கேட்போம்..” அவனுக்கு முன்பாகவே படியிறங்கி கீழே ஓடினாள் லஷ்மி.. வேறு வழியில்லாமல் வாத்சாவும் இறங்கி போனான்.
இருவரும் அந்த வீட்டை அடைவதற்குள் சண்டை வலுத்து வேணு மீனாட்சியின் முடியை பிடித்து மீண்டும் அவளை அடிக்க போக.. அதற்குள் அவனை தடுத்து பின்னால் இழுத்து வந்தான் வாத்சல்யன்.
“என்னப்பா இது! எதுக்கெடுத்தாலும் பொண்டாட்டிய அடிக்க கை நீட்டறது என்ன பழக்கம்..!” கடுமையான குரலோடு அவன் மீது கோபப்பட்டான் அவன்.
“பின்ன என்ன சார்! சும்மா சும்மா பணம் பணம்னு கேட்டா நான் எங்க போவேன்.. பணம் என்ன மரத்துலயா விளையுது.. பூத்து காய்ச்சு கனிஞ்சவுடனே பறிச்சு கொண்டு வந்து கொடுக்கறதுக்கு..” எரிச்சலும் கண்ணீரும் சேர அவனும் கூட பதட்டமான நிலையில் இருப்பதை உணர்ந்து கொண்டு வாத்சல்யன் தணிந்தான்.
“சரி வாப்பா.. அப்படியே வெளிய போயிட்டு வரலாம்..!”
“இல்ல வேண்டாம் சார்! என்னை விட்டுடுங்க நான் எங்கேயாவது போய் செத்து தொலையறேன்..!”
“மூணு புள்ள பெத்தவன் பேசற பேச்சா இது..? நீ என் கூடவா!” என அவனை இழுத்துச் சென்றான் வாத்சல்யன்.
இங்கே மீனாட்சி உள்ளே வந்து சோபாவில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.
“மீனா.. என்னம்மா பிரச்சினை..?” அவள் தோளைத் தொட்டு பரிவாகக் கேட்டாள் லஷ்மி.
“வேறென்ன.. தேதி பத்தாகுது.. இன்னும் சம்பளம் வரலையான்னு கேட்டா எகிறிட்டு வராரு.. வீட்டுக்கு கொடுக்கணும்னா மட்டும் பணம் இல்ல.. ஆனா குடிக்க மட்டும் எங்கிருந்து பணம் வருதுன்னு தெரியல.. அதை கேட்டேன்னுதான் இவ்வளவு சண்டை..!” உதட்டை பிதுக்கி சொல்லிவிட்டு விசும்பினாள் மீனாட்சி.
“சரி..? அதுக்காக சண்டை போட்டா ஆச்சா..? கொஞ்சம் பொறுமையா பேசி கேட்டிருக்கலாம்ல..!”
“யாரு..? என்ன ஆளுகிட்ட பொறுமையா பேசி பணத்த வாங்க முடியுமா..? அட போங்கக்கா..! ஒத்த ஆளா குடும்பத்தை பார்த்து பிள்ளைகளை வளர்த்து வேலைக்கும் போய் என்னால முடியல..!” அந்த வார்த்தைகளில் தன் பலவீனத்தை பிரதிபலித்தாள் மீனாட்சி.
“நீ சொல்றதெல்லாம் சரிதான் மீனாட்சி.. சண்டை போட்டா பிரச்சனை அதிகமாகுமே தவிர குறையாது.. பாரு பிள்ளைங்க பயந்து அழறாங்க.. அவங்கள பத்தி கொஞ்சம் யோசிச்சு பாரு..”
“எப்பவும் நான்தான் இந்த குடும்பத்தை பத்தி யோசிக்கணும்.. நான்தான் பொறுப்பா இருக்கணும்.. நான்தான் எல்லாத்தையும் இழுத்து போட்டு செய்யணும்.. இல்லையாக்கா..” மீனாட்சியின் கோபத்தில் லட்சுமி வாயடைத்துப் போனாள்.
அவள் கேட்பதும் சரிதானே..! ஒரு குடும்பத்தில் பெண் மட்டும் பொறுப்பானவளாய் இருந்துவிட்டால் போதுமா..? குடும்பத் தலைவன் சரியாக இருக்க வேண்டாமா..! குடும்ப வண்டி ஓட ரெண்டு சக்கரங்களும் தேவையில்லையா..?
“பசங்களுக்காகத்தான் பேசறேன் மீனாட்சி..! நீங்க ரெண்டு பேரும் இப்படி சண்டை போட்டுட்டே இருந்தா அவங்க மனசு பாதிக்காதா..? நீ இவ்வளவு போராடறது அவங்க எதிர்காலத்துக்காகதானே..! அதையே கேள்வி குறியாக்கிட்டு அப்புறம் யாருக்காக சம்பாதிச்சு யாருக்காக வாழ்ந்து என்னத்த சாதிக்க போறீங்க..?”
மீனாட்சி பதில் பேசாமல் விம்மினாள்.
“கொஞ்சம் யோசி மீனாட்சி..! இனி குழந்தைக முன்னாடி சண்டை போடாதீங்க.. அவங்களுக்காக சில விஷயங்களை நீங்க பண்ணித்தான் ஆகணும். நான் பிள்ளைகளை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்.. நீ வேணு வந்தா பொறுமையா பேசு..!” சொல்லிவிட்டு இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தங்கள் வீட்டை நோக்கி நடந்தாள் லஷ்மி.
தீப்தி நடந்த கலவரங்களை அறியாமல் அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தது.
இங்கே வேணுவின் பைக்கிலேயே புறப்பட்டு சாலையைத் தாண்டி சற்று தூரம் வந்திருந்த இருவரும்.. நெடுஞ்சாலை பாலத்தின் மேலே.. பாதசாரிகள் நடைபாதையோரம் நின்றிருந்தனர்.
தொடரும்.
