Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

72. மதுமதி - மதுரம் தூவும் மழையேUncategorized

மழை 16

அன்று வீட்டில் நடந்த சம்பவத்திலிருந்து வாசலில் ‘டூ லெட்’போர்டு தொங்கிக் கொண்டிருந்தது. ‘வீடு வாடகைக்கு விடப்படும் – பெண்களுக்கு மட்டும்’ என்று அதில் எழுதப்பட்டிருந்தது.

வந்து கேட்பவர்கள் எல்லாம் குடும்பமாக இருக்க, அவர்களைத் தட்டிக்கழிக்கவே முடியவில்லை. ‘பேசாமல் எல்லாப் பொருள்களையும் ஒரு இடத்தில் போட்டுப் பூட்டிவிட்டு, தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு லேடீஸ் ஹாஸ்டலுக்குச் சென்றுவிடலாமா?’ என்று கூட யோசித்தாள் மதுரா.

ஆனாலும், இந்த வீட்டை விட்டுப் போக அவளுக்கு மனமில்லை. தாய் உயிரோடு உடன் இல்லை என்றாலும், உணர்வாக இந்த வீட்டில் வாழ்கிறார்! அவரது அணைப்பின் கதகதப்பைத் தருவது போல இருக்கிறது இந்த வீடு! இந்த வீட்டை மொத்தமாக வேறொருவர் கையில் கொடுத்து, இதன் உயிர்ப்பைக் கெடுக்க அவள் விரும்பவில்லை. அதனால்தான், ‘பேயிங் கெஸ்ட்டாக’ (Paying Guest) வருபவர்களுக்கு மட்டுமே வாடகை என்று மாற்றியிருந்தாள். தன் தாயின் அறைக்குத் தனது உடைமைகளை மாற்றிக்கொண்டு, அவளது அறையை வாடகைக்கு விடத் தயார் செய்திருந்தாள்.

ஆனாலும், இன்னும் யாரும் வரவில்லை; அவளுக்கு வரனும் அமையவில்லை. கதிரும் ரம்யாவும் தெரிந்தவர்கள், சொந்தங்கள் என அனைவரிடமும் அவளுக்காகச் சொல்லி வைத்திருந்தனர். இருப்பினும் நல்ல வரன் கிடைக்காமல் தள்ளிக்கொண்டே போனது.



Advertisement

இதற்கிடையில், புதிய தொடர்கதை ஒன்றின் நாயகிக்குக் குரல் கொடுக்க மேனேஜரும் இயக்குநரும் ஏற்கனவே இவளிடம் ஒப்பந்தம் செய்திருந்தனர். அவர்களிடம் மதுரா ஒரு வாரம் கால அவகாசம் கேட்டிருந்தாள். அந்த வாரமும் கடந்து மறுவாரம் வந்த நிலையில், ஸ்டுடியோவிலிருந்து அழைப்பு வரவும் அவள் கிளம்பிச் சென்றாள்.

அங்கே அவளுக்கு முன்பே வந்திருந்தான் மதியூரன். இருவரும் தான் அந்தப் புதிய தொடரின் கதாநாயகன் மற்றும் கதாநாயகிக்குக் குரல் கொடுக்கப் போகிறவர்கள்.

அவளைக் கண்டதும் அவன் வேகமாக முன்னே சென்று கைகளை நீட்ட, அவளோ சிறு புன்னகையோடு வணக்கம் மட்டும் வைத்துவிட்டு நகர்ந்தாள். அவளது இந்த உதாசீனம் அவனது உயிர் வரை சென்று தாக்கியது.

Advertisement

மேற்கொண்டு இருவருக்கும் வசனங்கள் வழங்கப்பட, அவர்கள் தங்களின் முகபாவனைக்கு ஏற்றவாறு குரல் கொடுத்தனர். இருவரின் குரலும் கதாநாயகன், நாயகிக்குக் கனகச்சிதமாகப் பொருந்தியிருந்தன.

Advertisement

மீண்டும் இயக்குநரின் பாராட்டைப் பெற்றனர் இருவரும். பேசிமுடித்துவிட்டு இருவரும் கிளம்ப இருந்த வேளையில், மதியூரன் அவள் முன்னே சென்று, “துரா…” என்று அழைத்தான். அதை அவளோ பொருட்படுத்தாமல் வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள்.

அவளது இந்தப்புறக்கணிப்பும் உதாசீனமும் அவனுக்குக் கோபத்தையும் வலியையும் கொடுக்க, பைக்கின் சீட்டில் இரண்டு முறை குத்திவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

அன்று டப்பிங் இல்லாததால் அவளைத் தேடி அவளது வீட்டிற்கு வந்திருந்தான் மதியூரன். வீடு பூட்டியிருந்தது. வாசலில் இருந்த அந்தப் போர்டைக் கண்டு அதிர்ந்து போனான். அவளுக்கு அழைத்தான்; அவள் எடுக்கவில்லை. பதற்றத்தோடு நின்றிருந்த மதியூரனின் அருகே வந்தான் கதிர்.

Advertisement

“சார், யாரு நீங்க? இங்க ஏன் நிக்கிறீங்க? யார் வேணும் உங்களுக்கு?”

“நா.. நா.. நான்… ம… ம… மதியூரன். துரா ஃப்ரெண்ட்! துரா இ… இ… இங்க இல்லையா? வீ… வீ… வீட்டை காலிப் பண்ணிட்டாங்களா? இ… இ… இங்க யாரும் இ… இல்லையா?” எனப் பதற்றத்தோடு கேட்டான்.

“ஓ… நீங்கதானா அது! என் பொண்டாட்டி உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கா,” என்றான் கதிர். அவனது குரலிலிருந்தே தன் மீது கோபத்தில் இருக்கிறார் என்பதை மதியூரன் புரிந்துகொண்டான்.

“வீடெல்லாம் காலி பண்ணிட்டுப் போகலை, ஷேர் பண்ணியிருக்காங்க, அவ்வளவுதான்.”

“எ… எ… என்ன? பு… புரியலை,” என்றான்.

“பிஜி போல, ஒரு ரூம் மட்டும் ஷேர் பண்ணிக்கிறது போலப் போட்டிருக்கா.”

“எ… எதுக்கு திடீர்னு?” எனச் சந்தேகமாக வினவினான்.

“அவளோட பாதுகாப்புதான் சார். கண்ட கண்ட நாயெல்லாம் அவ தனியா இருக்காளேன்னு வீட்டுக்குள்ள நுழையப் பார்த்துச்சு! அவளுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு பார்த்தா எந்த வரனும் அமையலை. இப்போதைக்கு அவளுக்குத் துணையா ஒரு ஆள் கூட இருக்கட்டுமேன்னு இந்த ஐடியாவை நான் தான் சொன்னேன். ஆனா, இன்னமும் யாரும் வரலை,” என்று விளக்கினான் கதிர்.

“எ… எ… என்ன சார் சொ… சொல்றீங்க? வீ… வீ… வீட்டுக்குள்ள யா… யார் வந்தா?” எனப் பதற்றத்துடன் கேட்க, அவனும் நிதானமாக அன்று நடந்ததைச் சொன்னான். இதைக் கேட்டு கோபமடைந்தவன்,

“போ… போ… போலீஸ்ல ஏ… ஏ… ஏன் பிடிச்சுக் கொடுக்கலை? சு… சு… சும்மா ஏன் விட்டீங்க?”

“நான் சொன்னேன், ஆனா மதுதான் மன்னிச்சு விட்டுட்டா!” என்ற கதிர், யோசனையோடு அவன் முகத்தைப் பார்த்தான். அவனோ முக இறுக்கத்துடன் இருந்தான்.

“நான் ஒன்னு கேட்கட்டுமா சார்?”

“எ… என்ன?”

“உங்களுக்காக மது இவ்வளவு செஞ்சும், ஏன் உங்களுக்கு மதுவைப் பிடிக்கலை? நீங்க அவளோட காதலை ஏத்துட்டிருந்தால் இந்நேரம் இப்படிப் பிரச்சினை வந்திருக்காதுல்ல?” என மனதிலுள்ளதைக் கேட்டுவிட்டான் கதிர்.

அவனோ விரக்தியோடு சிரித்துவிட்டு, கதிரிடம் உண்மையைப் பகிர்ந்தான். அதைக் கேட்டு அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தான் கதிர்.

“இந்த விஷயம் மதுவிற்குத் தெரியுமா?”

“தெரியாது,” என்று உதட்டைப் பிதுக்கினான்.

“இதுக்கு என்ன தீர்வு?”

“தெரியலை,” என்று கூறிச் சென்றவன், இரண்டு நாட்கள் கழித்து ஒரு முடிவோடு மதுராவின் வீட்டின் முன் தன் உடைமைகளை வைத்துக்கொண்டு அழைப்பு மணியை அழுத்தStatus: நின்றான்.

சத்தம் கேட்டு வெளியே வந்த மதுரா, அவனைக் கண்டு அதிர்ந்து போனாள்.

“இங்க என்ன பண்றீங்க மதியூரன்? என்ன இதெல்லாம்?”

“நீ… நீ… ங்கதானே வீடு வாடகைக்கு விடப்படும்னு போர்டு போ… போட்டு இ… இருக்கீங்க? அ… அதான் வா… வாடகைக்குத் த… தங்கலாம்னு வ… வந்திருக்கேன். வா… வாடகை எ… எவ்வளவு? தண்ணீர், க… கரண்ட் சார்ஜ் எ… எவ்வளவு? ஃபுட்டுக்கும் (Food) சே… சேர்த்துப் ப… பணம் வாங்கிப்பீங்களா? எ… என… என்னென்னு கொ… கொஞ்சம் டீடைல்ஸ் சொ… சொல்லுங்க,” என்றவனை முறைத்தவள்,

“எல்லாத்தையும் படிச்ச நீங்க, ‘பெண்களுக்கு மட்டும்’ போட்டிருக்கிறது கண்ணுல படலையா மிஸ்டர் மதியூரன்?” எனக் கைகளைக் கட்டிக்கொண்டு சாவகாசமாகக் கேட்டாள்.

“துரா! ப்… ப்ளீஸ், எ… எனக்கு யா… யாருமே வீ… வீ… வீடு தர மா… மாட்டேங்குறாங்க! பே… பே… பேச்சுலர்னு சொ… சொ… சொல்லி வே… வேணாம்னு ம… மறுக்கிறாங்க. எ… எனக்கு உ… உன்னை விட்டா வே… வேற யா… யாரையும் தெரியாது. ஒ… ஒரு மாசம் எ… எனக்குத் த… தங்க இ… இடம் கொடு! அ… அதுக்கப்புறம் எ… எல்லாத்தையும் ச… சரி பண்ணிடுவேன். எ… என்னை யாருமே ந… நம்ப மாட்டேங்குறாங்க! உ… உனக்கு எ… என்னைப் பத்தித் தெரியுமே! ப்ளீஸ் துரா!”

“மென்ஸ் ஹாஸ்டல்ல கேட்க வேண்டியதுதானே! உங்களை இங்க தங்க வச்சு எல்லார் வாயிலும் அவலாகணுமா நானு? நல்ல மென்ஸ் ஹாஸ்டலா போய் பாருங்க,” என உள்ளே செல்ல இருந்தவளைத் தடுத்தவன்,

“அ… அங்க போ… போனா எ… எல்லாரும் எ… என்னை கி… கிண்டல் ப… பண்ணுவாங்க, எ… என்னை க… கஷ்டப்படுத்துவாங்க! ஏற்கனவே அ… அனுபவிச்சு சா… சாகுற வரைக்கும் போ… போயிருக்கேன். அ… அந்தப் பா… பாதிப்புல இ… இருந்து இ… இன்னும் மீ… மீண்டு வரலை. அ… அதனாலே எ… எனக்கு மெ… மென்ஸ் ஹா… ஹாஸ்டல் ஒ… ஒத்துக்காது. ப்ளீஸ் துரா, எ… என்னை உ… உள்ளே அ… அனுமதி! நா… நான் உ… உனக்குத் தொ… தொந்தரவா இ… இருக்க மாட்டேன், உ… உனக்குத் தொ… தொல்லையா இ… இருக்க மாட்டேன். நீ… நீ கே… கேட்குற வா… வாடகை கொ… கொடுக்கிறேன், ப்ளீஸ் துரா,” என பள்ளியில் நடந்த தனது பழைய அனுபவித்தை சொல்லிக் கெஞ்சினான்.

சற்று யோசித்தவள், அவனைக் கூட்டுக்குள் அனுமதித்தாள். சந்தோஷமாகவே உள்ளே நுழைந்தான் மதியூரன்.

அவன் மீது எல்லையற்ற கோபம் இருந்தாலும், அவன் என்று வரும்போது மனமும் மூளையும் ஒருசேர அவனுக்காகத் துடிக்கவும் யோசிக்கவும் செய்கிறது. அவளால் அவளையே கட்டுப்படுத்த முடியவில்லை. தன் மனதையும் மூளையையும் காரித் துப்பினாள்; அதுவோ துடைத்துக்கொண்டதே தவிர வருத்தப்படவில்லை.

கூடத்தில் தனது பெட்டியையும் பையையும் இறக்கி வைத்தவனிடம் அவளது அறையைக் காட்டி, “இதுதான் உங்க ரூம்,” என்றாள்.

அவனோ, “ஓ… ஒரே ரூ… ரூம்லையா த… தங்கப் போறோம்?” எனச் சந்தேகமாகக் கேட்க, இடையில் கைகளை வைத்து முறைத்தவள், “என் அம்மா ரூமுக்கு எல்லாத்தையும் ஷிஃப்ட் பண்ணிட்டேன். அந்த ரூம்ல நீங்க ஸ்டே பண்ணிக்கலாம்,” என்றாள்.

“ஓ… தே… தேங்க்ஸ்,” என்று உள்ளே நுழைந்து மெத்தையில் அமர்ந்தான். அவள் உறங்கிய மெத்தையை மெதுவாகத் தடவிப் பார்த்தான். புத்தம் புதிய விரிப்பில் அது சுத்தமாக இருந்தது.

அவளோ தட்டில் சோறு, சாம்பார், காய் என எடுத்துக்கொண்டு அறையின் வாசலில் வந்து நின்றாள்.

தயக்கத்துடன், “மதியூரன்!” என்று அழைக்க, வேகமாக வெளியே வந்தவனின் கால்கள் அப்படியே நின்றன. மதுரா உணவுத் தட்டுடன் நிற்பதைக் கண்டு அவனுக்குக் கண்கள் கலங்கிப்போயின.

“சாப்பிடுங்க,” என்று நீட்டினாள். அதை வேகமாக வாங்கிக்கொண்டு நீள் இருக்கையில் (Sofa) அமர்ந்து அவசர அவசரமாக உண்டான்.

அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருக்க, “ஏன் யூரன் சாப்பிடலை? எதுக்காக வீட்டை விட்டு வந்தீங்க?” என்று கேட்டாள்.

“ம… மறுபடியும் ப… பணத்துக்கு ஆ… ஆசைப்பட்டு, வி… விருப்பமில்லாத க… கல்யாணத்தை… ப… பண்ணி வை… வைக்கப் பார்க்கிறாங்க! அ… அவங்க ம… மகளுக்காக எ… என்னை அ… அடகு வைக்க நினைச்சாங்க! இதற்கு மேலும் அ… அங்க இ… இருந்தால் எனக்குச் சுயமரியாதைனு ஒ… ஒண்ணு இ… இல்லாமலே போ… போயிடும்னுதான் வீ… வீட்டை விட்டு வ… வந்துட்டேன்,” என்று அவன் சொல்ல, அவனையே வெறித்துப் பார்த்தாள்.

“நா… நான் ரா… ராசி இல்லாதவன் துரா! நா… நான் அன்பு வ… வச்சிருக்கவங்களும், தவறுதலா எ… என் மீது அ… அன்பு வச்சிருக்கவளும் எ… என்னோடு இ… இருக்கக் கூ… கூடாதுனு எ… என் ரா… ராசியில இ… இருக்குது போல!” என விரக்தியோடு சொல்ல, அவனைப் பாவமாகப் பார்த்தாள் மதுரா.

“யார் யார் நம்ம கூட இருக்கணும், யார் யார் நம்மை விட்டுப் போகணும்னு தீர்மானிக்கிறது கடவுள்தான் யூரன். உங்களைப் பிடிச்சவங்க போனா என்ன? கடவுள் உங்க கூட யார் இருக்கணும்னு தீர்மானிச்சு வச்சிருப்பார். அவங்களைச் சரியான நேரத்துல உங்களுக்காக அனுப்பி வைப்பார். அவங்களே உங்களுக்கு வாழ்க்கைத்துணையாக மாறலாம்… கவலைப்படாதீங்க யூரன், உங்க ஆசைப்படியே உங்களுக்குப் பிடிச்ச பொண்ணு உங்க வாழ்க்கையில சரியான நேரத்துல வருவாங்க! அதுவரை காத்திருங்கள் யூரன்,” என்றாள் உள்ளுக்குள் இருந்த விரக்தியோடு.

அவளையே பார்த்திருந்தவன், புன்னகையுடன், “நீங்க சொன்னது அப்படியே பலிக்கட்டும் துரா! எனக்கானவ இன்னும் என்னைச் சேர எனக்கு இன்னமும் நேரம் வரலை போல. ஆனா காத்துட்டு இருக்கேன் துரா!” என்றான். அவனது கண்களில் இருந்த ஆவலைக் கண்டு, அவளுக்கோ உள்ளுக்குள் வலித்தது. அதை ஒரு புன்னகையோடு மறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

“துரா…” என்று இழுத்தான்.

“எ… எ… என்னை மன்னிச்சிடு,” என்று தயக்கத்தோடு சொன்னான்.

“எதுக்கு?”

“நா… நான் அ… அம்மா கிட்ட பே… பேசியிருக்கணும். உ… உன் போன் காலை அ… அவாய்ட் ப… பண்ணியிருக்கக் கூடாது. த… தப்பு பண்ணிட்டேன். அ… அம்மா கி… கிட்ட பே… பேச மு… முடியாமல் போ… போனதை நினைச்சு கு… குற்றவுணர்வா இருக்கு,” எனத் தலைகுனிந்தபடி சொன்னான்.

அவளோ விரக்தியாகச் சிரித்தபடி, “வாழ்க்கையில நிறைய பேரைச் சந்திக்கிறோம்… அதுக்காக அவங்க இழப்புக்கெல்லாம் நாம குற்றவுணர்வா ஃபீல் பண்றோமா என்ன? அதுபோல இதையும் நினைச்சுக்கோங்க! நானும் அம்மாவும் பாசிங் கிளவுட் (Passing Cloud) தான், அதுக்குப்போய் ஃபீல் பண்றீங்க,” என்று கூறிவிட்டு எழுந்து தன் அறைக்குள் செல்ல, அவனுக்குள் சுருக்கென்று இருந்தது. அவளது பேச்சைக் கேட்டு, தன் பக்க நியாயத்தை அவளுக்கு எவ்வாறு எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கப் போகிறேனோ என்று தவித்தான்.

இரவானதும் இருவருக்கும் சமைக்கச் சமையலறைக்குச் சென்றவள், டிவி பார்த்துக்கொண்டிருந்தவன் பக்கம் திரும்பி, “உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க, சமைக்கப் போறேன். செஞ்சு கொடுக்கிறேன்…” என்றாள்.

“எ… எனக்குப் பெ… பெருசா எ… எதுவும் செ… செய்ய வே… வேண்டாம்… உ… உனக்கு எ… என்ன செய்றியோ, அதையே எ… எனக்கும் செ… செய்,” என்றான் புன்னகையுடன்.

அவளும் உள்ளே சென்று தக்காளிச் சட்னியும் தோசையும் செய்ய மாவை எடுத்து வைத்தாள்.

வாசலில் நின்றவன், “ஏ… ஏதாவது உ… தவி செ… செய்யட்டுமா?” என்று கேட்டான். திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தவள் முகத்தையே அவனும் பார்த்தான்.

“இல்லை யூரன் வேண்டாம், நானே மேனேஜ் பண்ணிப்பேன்,” என்று கூறிவிட்டுத் தன் வேலையைப் பார்க்கத் தொடங்கினாள்.

இவனோ, “துரா! நா… நான் இ… இங்க இ… இருக்கிறது உ… உனக்குச் ச… சங்கடமா இருக்கா? நா… நான் எ… ஏதாவது பண்ணிடுவேன்னு ப… பயமா இருக்கா?” என்றான்.

அவளோ கத்தியைத் தூக்கிக் காட்டி, “இதுக்கு மேலே பேசினா வாயைக் கிழிச்சிடுவேன். போய் உங்க வேலையைப் பாருங்க,” என்றாள். அவள் தன் வேலையைப் பார்க்க, இவனும் சிரித்துக்கொண்டே தொலைக்காட்சியைப் பார்த்தான்.

இருவரும் ஒன்றாகத்தான் சாப்பிட்டார்கள்; ஆனாலும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. இருவரும் உண்டு முடிக்க, அவளிடமிருந்து தட்டை வம்படியாக வாங்கிக்கொண்டான்.

“ப்ளீஸ், இ… இந்த ஒ… ஒரு வேலையாவது நா… நான் பார்க்கிறேன்,” என்றபடி தட்டுகளை வாங்கிக்கொண்டு சமையலறைக்குச் சென்றவன், சிங்க்கில் கிடந்த இரண்டு மூன்று பாத்திரங்களையும் சேர்த்து கழுவி வைத்துவிட்டு வந்தான்.

அதன்பின் எதுவும் பேசிக்கொள்ளாமல், பார்வையாலேயே விடைபெற்று அவரவர் அறைக்குள் சென்றனர்.

இவள் அவனைப் பற்றிய யோசனையுடன் விழித்திருக்க, அவனோ அவளுடன் செலவழித்த நேரத்தை எண்ணிக்கொண்டே கண்களை மூடினான்.

மறுநாள் அவள் கண்விழித்து வெளியே வந்தபோது, அவளது தாய் மரகதத்தின் புகைப்படத்திற்குப் பூ வைத்து விளக்கேற்றப்பட்டிருந்தது.

வாசலுக்குச் சென்று பார்த்தபோது, சின்னதாக, அழகான கோலம் போடப்பட்டிருக்க, ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தாள். மீண்டும் உள்ளே வர, சமையலறையில் சத்தம் கேட்கவே எட்டிப் பார்த்தாள்.

அவன் தான் தேநீர் தயாரிப்பதற்காக அடுப்பில் பால் வைத்திருந்தான். அதிர்ச்சியுடன் உள்ளே வந்தவள், “நீங்க ஏன் இதெல்லாம் பண்றீங்க?” என்றாள்.

“இ… இதெல்லாம் நா… நான் வீட்ல எ… எப்பவும் செ… செய்யுற வே… வேலைகள்தான். எ… எனக்கு வேலை இ… இல்லாதப்போ நா… நான் இ… இந்த வேலைகளையும் பா… பார்ப்பதுண்டு! பிரஷ் ப… பண்ணிட்டு வா, காஃபி கு… குடிக்கலாம்,” என்றான் அவளைப் பார்க்காமலேயே.

அவன் முதுகையே வெறித்துப் பார்த்தவள், எதுவும் சொல்லாமல் தன் அறைக்குள் சென்று காலைக் கடன்களை முடித்துவிட்டு வந்தாள். சுடச்சுட காபி தயாராக இருக்க, அதை வாங்கிப் பருகினாள்; அது அமிர்தமாக இருந்தது.

தொண்டை வழியே காபி இறங்குவதைப் பார்த்தவன், ‘என்ன சொல்லப் போகிறாள்?’ என்று ஆர்வமாகப் பார்த்தான். அவனது பார்வையை உணர்ந்து, “நல்லா இருக்கு மதியூரன்,” என்றாள்.

‘யூரன்’ என்று கூப்பிட்டிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பான். முழுப் பெயரைச் சொன்னதும் சட்டென அவன் முகம் வாடிப் போனது. அதை அவள் கவனித்தாலும் ஏதும் காட்டிக்கொள்ளாமல், “என்ன டிஷ் செய்யட்டும்?” என்று கேட்க வந்தவனை முந்திக் கொண்டு கேட்டாள்.

“இல்ல… நான்…” என்று அவன் இழுக்கும்போதே, அவளது பார்வையைக் கண்டு வாயை மூடிக்கொண்டான்.

“இட்லி, சட்னி,” என்றபடி அவள் உள்ளே செல்ல, இவனோ பேப்பர் படித்தான். அவள் குளித்து முடித்து வர, சட்னி அரைத்து, இட்லி அவித்து சாப்பிட்டுவிட்டு வேலைக்குச் செல்ல இருவரும் வெளியே வந்தனர்.

அவள் தன் வண்டியை நோக்கி நகர, “துரா!” என்று அழைத்தான்.

‘என்ன?’ என்பது போலப் பார்த்தாள்.

“இ… இல்லை… ஒரே இ…இடத்துக்குத்தான் வே… வே…வேலைக்குப் போ… போ… போறோம், ஒ… ஒண்ணா ஒ…ஒரே பை… பை… பைக்ல போலாமே! பெ… பெ… பெட்ரோல் செ… செ… செலவு மி… மி… மிச்சம்… உ… உனக்கு நா… நான் டிரைவரா இ… இ… இருக்கிறதுல எ… எனக்கு ஆ… ஆட்சேபனை இல்லை…” என்று தோளைக் குலுக்கினான்.

“டிரைவர் சம்பளம் கேட்கலைன்னா எனக்கும் ஆட்சேபனை இல்லை,” என்று அவனைப் போலவே தோளைக் குலுக்கினாள்.

“ச…ச… சம்பளம் வே… வே… வேண்டாம், வேணும்னா வா…வா… வாடகையில க… க… கழிச்சுக்கலாம்,” என்றான் கிண்டலாக. அவளோ முறைக்க, “ஜ.ஸ்ட் ஃபோ ஃபார் ஃபன்” என்றான் கண் சிமிட்டி. அவளுக்குள் பட்டாம்பூச்சி பறந்தாலும், சடுதியில் அவன் மீது கோபமும் வந்துவிடுகிறது.

அவனது வண்டியில் ஏறி அமர்ந்துகொண்டாள். வண்டி அந்தத் தெருவைக் கடந்து செல்ல, வழக்கம் போல மக்கள் அவர்களை வித்தியாசமாகப் பார்த்தனர்.

அடிக்கடி மதியூரன் வந்துபோகும்போதே மக்களின் பார்வை ஒரு மாதிரியாகத்தான் இருக்கும். அதைக் கண்டுகொள்ளாமல் கடந்து செல்பவள், இன்று அவர்கள் பார்வையிலும், அதில் தொக்கி நிற்கும் கேள்விகளையும் கருத்தில் கொள்ளாது அவனோடு சென்றாள்.

***

“இவர் தான் உனக்கு நான் பார்த்த மாப்பிள்ளை, மது,” எனச் சித்தி ஒருவரைக் காட்ட, அவரோ தன் இரு மகள்களையும் இரண்டு கைகளால் அணைத்தபடி மதுராவைத் துளைத்துப் பார்த்தார்.

அவரது ஒரு மகள், “டாடி, இந்த ஆன்ட்டி ரொம்ப கருப்பா இருக்காங்க!” என்றது அனைவர் காதிலும் விழ, மெல்ல மகளின் முதுகில் தட்டி ‘பேசக் கூடாது’ என்றார் அந்த மாப்பிள்ளை.

அங்கிருந்த மதியூரனோ, சித்தி அழைத்து வந்த குடும்பத்தையும், ‘மாப்பிள்ளை’ என்று அழைத்து வந்தவரையும் கண்டு அதிர்ந்து போய் நின்றான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!