Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

பிரியமே பிரிவேது

பிரியமே பிரிவேது! 12

அத்தியாயம் 12

மாலை ஆராத்யாவைப் பார்க்க பிரேம், விக்ரம் இருவரும் வர, ஆராத்யாவின் வண்டியையும் அவர்கள் எடுத்து வந்துவிட்டனர்.



Advertisement

அப்போது தான் அம்பிகாவும் ஸ்ருதியும் வந்திருக்க, அஜயை கல்பனா பார்த்துக் கொள்ள, நடந்ததை கார்த்திகா அவர்களிடம் கூறும் பொழுது தான் கல்பனாவிற்கும் தர்ஷினிக்கும் விஷயமே தெரிந்தது.

அப்பொழுதும் கூட ஆராத்யாவிடம் வேறு எதையும் யாரும் கேட்டுக் கொள்ளவில்லை. இன்னும் அவள் பயத்தில் இருந்து தெளியவில்லை என்றே எண்ணி இருக்க, கேட்கும் எண்ணமும் இப்போது இல்லை.

Advertisement

Advertisement

ஆராத்யாவிடம் நலம் விசாரித்து பத்திரமாய் இருக்க சொல்லி பிரேம், விக்ரம் கிளம்பும் சமயம் அவர்களுடன் கிளம்பி விட்டாள் கார்த்திகாவும்.

“சரி ஆரா! பார்த்துக்கோ.. ரெஸ்ட் எடு..” என்று சொல்லி தர்ஷினி கிளம்ப,

Advertisement

“தேங்க்ஸ் தர்ஷ்.. உங்க எல்லாருக்கும் நான் ரொம்ப கஷ்டம் கொடுத்துட்டேன்..” என்றாள் ஆராத்யா ரகுவிற்கும் சேர்த்து இவர்களிடம்.

“ஆரா! என்ன இது? நாளைக்கு எனக்கு ஒண்ணுன்னா நீ வந்து நிக்க மாட்டியா?” என தர்ஷினியும் கேட்க,

“நிச்சயமா? உங்க பாப்பாவே என்கூட தான் விளையாட போறா பாருங்க!” என்று கூறி சிரித்த ஆராத்யாவின் முகத்தில் சிறு தெளிர்வு தெரிய, புன்னகைத்து ஸ்ருதியிடமும் கூறிக் கொண்டு கிளம்பிவிட்டனர் தர்ஷினி, கல்பனா.

“ஜுரம் இப்ப பரவாயில்ல.. நைட்டுக்கு இட்லி செய்யுறேன்.. சாப்பிட்டு மாத்திரை போடலாம்!” என்று கூறி அம்பிகா எழுந்து செல்ல,

“என்ன ஆரா இது? இதுக்கு ஒரு முடிவே இல்லையா?” அனைவரும் சென்றபின் தோழியிடம் ஸ்ருதி கேட்டாள்.

“நான் எதையும் சமாளிச்சுடுவேன்னு நினைச்சுட்டு இருந்தேன்.. ஆனா எவ்வளவு வீக்னு இன்னைக்கு தான் தெரிஞ்சிகிட்டேன் ஸ்ருதி..” என்ற ஆராத்யா அவள்மேல் சாய்ந்து கொள்ள,

“எனக்கு ஒரு போன் பண்ணி இருக்கலாமே! பயந்துட்டியா ரொம்ப?” ஸ்ருதி கேட்க,

“எதுவுமே தோணல ஸ்ருதி.. ராம் சார் இல்லைனா என்ன ஆகி இருக்கும்னு தெரியல.. ரொம்ப ஹெல்ப் பண்ணிட்டாங்க.. தர்ஷினி, கார்த்திகா கூடவே இருந்தாங்க.. அதனால கொஞ்சம் ரிலாக்ஸா இருந்துட்டேன்..” என்ற ஆராத்யா,

“இனி இப்படி இருக்க மாட்டேன்.. மறுபடியும் மட்டும் அவன் என் கண்ணுல படட்டும்.. இனி நான் ஓடி ஒழிய எல்லாம் மாட்டேன்!” என்று கூற,

“ம்ம்ம்! சரி தான்.. கைய கீறி காய்ச்சல் வந்து படுத்தும் பேச்சை பாரு.. வாய் மட்டும் தான் உனக்கு.. சரி விடு.. ஆனா ஏதாச்சும் பண்ணனும்.. அவனை எல்லாம் சும்மா விட கூடாது!” என்று பேசியபடி இருந்தனர்.

வீட்டிற்கு வந்த தர்ஷினி நந்தாவிடம் விஷயத்தை கூறி, “என்னங்க இது? ஆராக்கு பிரச்சனைனு புரியுது.. ஆனா தலையும் புரியல வாலும் புரியல!” என்றாள்.

“எனக்கும் புரியலை தர்ஷி.. ரகுக்கும் தெரியுமானு தெரியலையே!” நந்தா சொல்லவும்,

“தெரிஞ்சிருந்தா நிச்சயமா உங்ககிட்ட சொல்லி இருப்பான்!” என்றாள்.

“ம்ம்.. சரி ரகுகிட்ட பேசுவோம்!” என்றான்.

மகேஸ்வரியிடமும் கார்த்திகா வந்து ஆராத்யாவைப் பற்றி கூற,

“என்ன இந்த பொண்ணை இவ்வளவு சோதிக்குறான் கடவுள்? எவ்வளவு சாந்தமா மகா லெட்சுமியா இருக்கு.. என்னவோ போ!” என்று அவரும் கவலை கொள்ள, ரகு ஆராத்யா பற்றி இன்னும் அவரிடம் யாரும் கூறிடவில்லை.

அனைத்தும் தெளிவான பின் மகேஸ்வரி அகிலனிடமும் கூறிவிடலாம் என முடிவு செய்திருக்க, “புருஷனுக்கு தெரியாம பாத்துக்க சொல்றிங்க.. இதனால எங்களுக்குள்ள பிரச்சனை வந்தா நீங்க தான் கோர்ட்டு கேசுனு அலையனும்!” என்று விளையாட்டாய் கூறி இருந்தாள் கல்பனா.

அன்று இரவே ரகுவிடம் நந்தா இதைப் பற்றி கேட்க, “ஆராக்கு பேரண்ட்ஸ் இல்ல.. சமீபமா ரெண்டு வருஷம் முன்னாடி தான் அச்சிடேன்ட்ல இறந்துட்டாங்க.. இவ்வளவு தான் எனக்கும் தெரியும் மாமா.. ஆனா இவன்… ப்ச்.. எனக்குமே தெரியல..” என்றான் குற்ற உணர்வாய்.

“சரி கூல் ரகு.. இனி என்ன பண்ணலாம்?” நந்தா கேட்க,

“நான் பாத்துக்குறேன் மாமா!”.

“என்ன பார்த்துப்ப?” என்ற கேள்வி அடுத்த நொடி வர, புரியாமல் பார்த்தான் ரகு.

“ரகு! உன் லவ் எனக்கு தெரிஞ்சதும் நான் என்ன சொன்னேன்னு நியாபகம் இருக்கா?” என்று கேட்க,

“ஆனா நான் என் லைஃப்ல எதையுமே விளையாட்டா எடுத்தது இல்லையே மாமா?” என்றான் நந்தா சொல்ல வருவது புரிந்து.

“இப்பவும் அதே தான் ரகு.. ஆராத்யாக்காகவே அவளை விரும்பின நீ அவளுக்கு என்ன பிரப்லம் வந்தாலும் கூட இருந்து பார்த்துக்கணும் இல்லையா?” என்று கேட்ட நந்தாவிற்கு,

“ஏன் மாமா? நான் அவளை பார்த்துப்பேன்னு உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?” என்றான் இன்னமும் அவன் சொல்ல வருவது புரியாமல்.

“நான் சொன்னதை நீ சரியா கவனிக்கல.. அவ கூட இருந்து பார்த்துக்கணும் சொன்னேன்..” என்று கூற, அது தெரிந்து அமைதியானான் ரகு.

“இன்னும் எவ்வளவு நாள் இப்படியே இருந்து அவளோட எம்டியாவே உன்னால எல்லாத்தையும் ஃபேஸ் பண்ண முடியும் நினைக்குற? அவளுக்கும் உன்னை புடிக்கணும்னு நீ நினைக்குறது சரி தான்.. ஆனா இவ்வளவு தள்ளி நின்னா நீ அப்ரோச் பண்றது கூட அவளுக்கு தெரியாமலே போய்டும் ரகு..” என்ற நந்தாவிற்கும் இதற்குமேல் தெளிவாக எப்படி கூற என புரியவில்லை.

“புரியுது மாமா!” என்ற ரகு, சில நொடி அமைதியாய் இருந்தவன், ஒரு பெருமூச்சோடு நிமிர்ந்து

“நான் பேசுறேன் மாமா.. சீக்கிரமே!” என்றான் தெளிவாய். ரகுவும் சரி என தலையசைத்து சம்மதமாய் புன்னகைத்தான்.

அடுத்த நாள் அதிகாலை விமானத்திற்கு நந்தாவை வழி அனுப்பி வைத்துவிட்டு வந்த ரகு, எதிர்வீட்டைப் பார்க்க, அந்த ஊஞ்சல் தனியாய் இருக்கவும் பார்த்தபடி உள்ளே சென்றுவிட்டான்.

இன்று ஆராத்யா அலுவலகம் வர வாய்ப்பில்லை என்று தோன்ற, தான் கிளம்பும் முன்பாவது ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என நினைத்தவனுக்கு,

இரவும் ஜுரம் வந்திருக்குமா? மாத்திரை எடுத்திருப்பாளா? என ஒவ்வொன்றாய் தோன்ற, யாரையும் கேட்கவும் மனதின்றி கிளம்பி வெளியே வர, கல்பனா டிபன் பாக்ஸில் இட்லிகளை வைத்துக் கொண்டிருந்தாள்.

“அகி சாப்பிடலையா? எடுத்துட்டு போறானா?” என்று கேட்டு ரகு அமர,

“இது அவருக்கு இல்ல நார்.. தர்ஷி பிரண்ட்க்கு” என்றாள் கல்பனா.

“தர்ஷி பிரண்ட்டா..” என்று கேட்டு முடிக்கும் முன்பே அது யாரென்றும் நினைவுக்கு வந்துவிட

“ஓஹ்! நீங்க போறிங்களா?” என்றான் மெதுவாய்.

“அய்யோடா அக்கறை தான்.. போன் பண்ணி கேட்டீங்களா நார்? இப்ப பிவேர் எதுவும் இல்லையே?” என அவனிடமே கல்பனா கேட்க,

“அண்ணி!” என்றவன் ஒற்றை கையால் முகத்தை மறைத்து டேபிளில் ஊன்றிக் கொண்டான் கையை.

“அட வெட்கம் வேறயா?” என்று இன்னும் கல்பனா பேச,

‘அச்சோ! இருந்த பேரெல்லாம் போய்டும் போல!’ நினைத்து நேரே அமர்ந்தவன்,

“எனக்கு வைங்க.. நான் சாப்பிட்டு கிளம்புறேன்!” என்றான் இதற்கு மேல் எதுவும் பேச வேண்டாம் என்பதை போல.

“என்ன இப்படி சொல்லிட்டீங்க நார்? நான் உங்களையுமில்ல கூட்டிட்டு போய் தர்ஷி பிரண்ட்டை பார்க்கலாம்னு நினச்சேன்!” என கல்பனா வம்பு செய்ய,

“என்ன டி பண்ணிட்டு இருக்க நீ?” என்று வந்தார் மகேஸ்வரி அவர்கள் பேச்சை சரியாய் கவனிக்காமலே.

“இட்லி நீ கொண்டு போறதுக்குள்ள ஆறிட போகுது.. எடுத்ததும் உன் கையில தந்தேன்.. நீ இன்னும் வச்சுட்டு நிக்குற.. வர வர என்னை மதிக்குறதே இல்லை நீ” என்று பேசி அடுத்த ஈடு இட்லிகளை அங்கே வைத்துவிட்டு உள்ளே செல்ல திரும்ப,

“மாலை வேணா வாங்கிட்டு வரட்டுமா த்தை?”

“பார்த்தியா டா கொழுப்பை.. நீயாவது அமைதியான ஒரு பொண்ணை கல்யாணம் பண்ண பாரு!” என்று ரகுவிடம் சொல்லி செல்ல,

“அமைதிக்கு பெயர் தான் ஆரா..” என்று பாடியவள்,

“செட்டாகலையே நார்! பேரை மாத்திடுவோமா இல்ல பாட்டை மாத்திடுவோமா?” என்று வேறு அவனிடமே கேட்க,

“முடியல.. உங்களுக்கு தெரியாமலே இருந்திருக்கலாம்..” என்று கூறி வேக வேகமாய் உண்ண ஆரம்பித்தவன் முகத்தைப் பார்த்தவள்,

“அப்ப கூட லவ் பண்ணாம இருந்திருக்கலாம்னு சொல்ல வரலை பாரேன் உங்களுக்கு..ஹ்ம்ம்..” என்று பேசிக் கொண்டே இருக்க,

“என்ன அவன்கிட்ட போய் லவ்வு கிவ்வுன்னு பேசிட்டு இருக்க?” என்று மீண்டும் வந்தார் மகேஸ்வரி.

“ஒண்ணுமில்ல த்த! நார் யாரையோ லவ்வுதாராம்.. அதான் யார் என்னனு கேட்டுட்டு இருந்தேன்!”

“போச்சு!” என்று ரகு தலையில் கைவைக்க,

“நான் தான் அன்னைக்கே சொன்னேனே டி.. அகி இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்னான்னு சொன்னா கூட நம்புவேன்.. இவனை எல்லாம் அந்த லிஸ்ட்ல சேர்க்காத!” என்று இன்னும் அத்தனை நம்பிக்கையாய் சொல்லி செல்ல,

அண்ணியை முறைத்தவன், அன்னை சொல்லி சென்றதில் வருத்தமாகிவிட்டான்.

“அட காதல்ல இதெல்லாம் சாதாரணம் பா.. சீக்கரமா நல்ல விஷயம் சொல்லுங்க.. உங்க அம்மா சிட்டா பறந்துடுவாங்க!” என்றாள் கல்பனா.

சிரித்த ரகுவும் “தர்ஷி இன்னுமா எழுந்துக்கல?” என்று கேட்க,

“நீ வேற! அவ அப்பவே ஆராவை பார்க்க போய்ட்டா.. கால் பண்ணி இட்லி எடுத்துட்டு வர சொன்னா..  அதான் பேக்கிங்!” என்று கூறி கைகளில் அதை எடுத்துக் கொள்ள,

“அது சரி!” என்று சிரித்தவனும் சாப்பிட்டு கைகழுவி கல்பனாவோடு வெளியே வந்தான்.

இவர்கள் மூலமாவது ஆராவை பார்த்துவிட்டு செல்ல வேண்டும் என்று நினைத்து ரகு வர, அவன் காரை எடுக்க செல்லவும் கல்பனா கேட்டை திறக்க, அங்கே வண்டியை ஸ்டார்ட் செய்து கொண்டிருந்தாள் ஆராத்யா.

“என்ன பண்ணிட்டு இருக்கிறா இவ?” என வாய்விட்டே சொல்லிக் கொண்ட ரகு காரை எடுத்துக் கொண்டு வெளியே வர,

“நான் தான் அப்பவே சொன்னேனே கேட்டியா? உன் வண்டிக்கு கூட நீ போறது பிடிக்கல” என்று கூறிக் கொண்டு இருந்தாள் தர்ஷினி ஆராத்யாவிடம்.

தானும் விடுமுறை எடுப்பதாய் கூறி ஆராத்யாவை ஸ்ருதி வீட்டிலேயே இருக்க சொல்ல, வேண்டாம் வீட்டில் இருந்தாலும் வேண்டாத நினைவுகள் தொல்லை என நினைத்து ஸ்ருதியை அனுப்பிவிட்டு தானும் கிளம்ப, சற்று நேரத்தில் தர்ஷினியும் வந்து அதையே தான் கூறினாள்.

“ப்ளீஸ் தர்ஷ்! எனக்கே டவுனா பீல் ஆகுது.. அங்கே போய் பிரண்ட்ஸ் கூட கொஞ்சம் பேசி இருந்தா எல்லாம் சரியா போய்டும்..” என்று கூறி சமாளித்து வெளியே வந்து வண்டியை எடுக்க, அது நான் ஸ்டார்ட் ஆவேனா என்றது.

கல்பனாவும் தர்ஷினியும் அவளிடம் பேசிக் கொண்டு நிற்க,

“என்ன பண்றீங்க?” என்று கூறி அவர்கள் அருகே வந்து கார் விண்டோவை திறந்து கேட்டான் ரகு.

“அப்பப்பா! நானும் பார்த்தாலும் பார்த்தேன்.. உன் தம்பி மாதிரி ஒருத்தனை பார்த்ததே இல்ல தர்ஷி! உள்ள வெட்கப்பட்டு மூஞ்சை மூடினது என்ன.. இங்க அந்த பொண்ணு முன்னாடி கெத்த மெயின்டைன் பண்றது என்ன?” என்று சொல்ல, தர்ஷி வாய் மூடி சிரித்தாள்.

“பைக் ஸ்டார்ட் ஆகல சார்.. நீங்க கிளம்புங்க நான் வந்திடுறேன்!” என்றாள் ஆராத்யா அவன் கேள்விக்கு.

அதில் அவன் சகோதரியை திரும்பிப் பார்க்க, “இப்ப நீ பேசணுமாம் தர்ஷி!” என்று அதற்கும் தர்ஷி காதில் முணுமுணுத்தாள் கல்பனா.

முடிவில் தர்ஷினி புண்ணியத்தில் ரகுவுடன் காரில் ஆராத்யா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!