Skip to content
Post Views: 11,261
புது வெள்ளை மழை
அத்தியாயம் – 1
வருடம் 1992, இடம் சென்னை .
Advertisement
“ புது வெள்ளை மழை இங்குப் பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்குச் சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது . ”
பாடல் வரிகளுக்கு ஏற்ப கற்பனையில் முகம் தெரியாத பெண்ணுடன் டுயட் பாடிக்கொண்டிருந்த நந்தாவின் கனவு தற்காலிகமாகத் தடைபட …. கதவு திறக்கும் சத்தம் கேட்டு யார் என்று பார்த்தான் .
“ அண்ணா , லைட் கூடப் போடாம என்ன பண்ற ?” என்றபடி பவதாரணி அறைக்குள் வர ….
Advertisement
அவள் குரல் கேட்டு எழுந்த நந்தா , தன் தலைப்பக்கம் இருந்த ஸ்விட்ச்சை தட்ட … அறைக்குள் வெளிச்சம் பரவியது .
Advertisement
“ கொஞ்ச நேரம் என்னை நிம்மதியா பாட்டுக் கேட்க விட மாட்டியே … ” நந்தா சலிக்க …. பவதாரணியின் முகம் வாடியது .
“ அம்மாதான் உன்னைச் சாப்பிட கூடிட்டு வர சொன்னாங்க . ”
“ கோபமா …. நல்ல பாட்டு நடுவுல தடைபட்டதுனால அப்படிப் பேசிட்டேன் . ”
Advertisement
“ ஆமாம் நல்ல பாட்டு . புது இசையமைப்பாளர் ரஹ்மான்னு ஒருத்தர் மியூசிக் போட்டிருக்கார் …. அவரு யூத் , அதுதான் பாட்டு கூடச் செம்மையா இருக்கு … நீ படம் பார்த்துட்டியா அண்ணா ?”
“ இல்லை … ”
“ நாம ரெண்டு பேரும் நாளைக்குப் போகலாமா அண்ணா … ”
“ உன்னோட பார்க்கிற படமா இது … நீ உன் ஆளு கூடப் போ … ” நந்தா சொல்ல …. தாரணியின் முகத்தில் வெட்கம் படர … அதை அவன் ரசித்தான் .
“ ரெண்டு போரையும் சாப்பிட வர சொன்னா … இன்னும் மேல என்ன பண்றீங்க ?” அவர்கள் அம்மா குழலியின் குரல் கேட்க …. இருவரும் கீழே இறங்கி சென்றனர் .
“ நேரத்துக்குச் சாப்பிட கூட வராம அப்படி என்ன பண்ற நந்தா ?” என மகனை பார்த்து கேட்டவர் , உணவை இருவருக்கும் பரிமாற ஆரம்பித்தார் .
“ இங்க இருக்கிற வரைக்குமாவது நேரத்துக்குச் சாப்பிட கூடாதா ? வேலைக்குன்னு போயிட்டா உன்னால சாப்பாட்டைப் பத்தி நினைக்க முடியுமா ?”
“ சாப்பாடு மட்டும் இல்லை … வேற எதைப் பத்தியும் நினைக்க முடியாது . ஏன்னா இந்தத் தடவை போஸ்டிங் போட்டிருக்கிறது அப்படிபட்ட இடம் . ”
“ என்னடா இத்தனை நாள் வடநாட்டில இருந்த …. இப்பத்தான் நாம் ஊர் பக்கம் வந்திருக்கேன்னு சந்தோஷப்பட்டேன் , அதுவும் இல்லையா … ”
“ ராமநாதபுரம் மாவட்டம்னா சும்மாவா … பாசக்கார பயபுள்ளைங்க … அதோட ரொம்ப ரோஷமான பயலுங்களும் கூட …. ” என்றான் .
“ அந்தப் பக்கம் ஜாதி சண்டை எல்லாம் அடிக்கடி நடக்கும்னு சொல்வாங்களே … எப்படி அண்ணா சமாளிப்ப ?”
தாரணி கவலையாகக் கேட்க … அதைக் கேட்டபடி உள்ளே நுழைந்த வருண் , “ உங்க அண்ணன் உன்கிட்ட இருக்கிற மாதிரியே , எல்லார்கிட்டயும் இருப்பான்னு நினைச்சியா ? ”
“ எப்படா இவன் ஊரைவிட்டு காலி பண்ணி போவான்னு … நிறைய பேரை நொந்து போக வச்சிருக்கான் . நார்த்ல இருந்த வரை …. அங்கிருந்த பெரிய ஆளுங்க கண்ணுலையே விரலை விட்டு ஆட்டினவன் , இவனுக்கு மாற்றல் வந்ததும் , அதை எத்தனை பேர் அங்க கொண்டாடினாங்க தெரியுமா ?”
“ பயபுள்ள பார்க்கத்தான் பச்சபுள்ள மாதிரி இருக்கு ….. டெரர் பீஸ் . ”
வருண் சொன்னதைக் கேட்டு அப்படியா என்பது போல் தாரணி நந்தாவை பார்க்க … அவன் இல்லை என்று தலையசைத்தவன் , குனிந்து சாப்பிடுவது போல் வந்த சிரிப்பை அடக்கினான் .
“ அச்சோ … தாரணி என்ன அப்படிப் பார்க்கிற …… மாமாவை நம்பமாட்டியா நீ …. ” வருண் கேட்க … தாரணி அவனை முறைத்தாள் .
“ நலத்துக்கே காலம் இல்லை …. நீங்க சாப்பாடு போடுங்க அத்தை . ” என்ற வருண் , நகரத்தில் பிரபல வக்கீல் . நந்தாவின் நண்பன் … வருங்கலத்தில் அவன் தங்கையைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறவன் .
“ எப்படா கிளம்புற ?”
“ நாளைக்குக் கிளம்பனும் . ”
“ அடுத்து எப்ப எங்க கல்யாணத்துக்கு வருவியா ?”
“ ஆமாம் , ஒரு மூன்னு நாளாவது லீவ் போட முடியுமான்னு தெரியலை … எதுக்கும் என்னை நம்பி இருக்க வேண்டாம் . நீங்க எல்லாம் கல்யாண வேலையைப் பார்த்துக்கோங்க . ” என்றான் நந்தா .
“ நான் உங்க சித்தப்பா சித்தியை கூடிட்டுப் போய்ப் பத்திரிகை வச்சிட்டு வரேன் . ” என்றார் குழலி … அவருடைய கணவர் இப்போது உயிரோடு இல்லை ….
“ அண்ணா கடைசி நிமிஷத்துல வரமுடியலைன்னு சொன்ன , நான் கல்யாணத்தையே நிறுத்திடுவேன் . ”
தாரணி நந்தாவை மிட்ட ஆனால் மிரண்டதென்னவோ வருண்தான் .
“ ஏன் மா … என்னை டென்ஷன் பண்ற ? அதெல்லாம் அவன் வந்திடுவான் , வந்திடுவ இல்லைடா …. ” என அவன் தன் நண்பனை பார்த்து கேட்க …
“ வந்திடுவேன்னு தான் நினைக்கிறேன் . ” என நந்தா தன் தங்கையைப் பார்த்தபடி இழுக்க … அவள் முகம் வாடியது .
அதைக் காண பொறுக்காதவன் , “ எப்படியும் வந்திடுவேன் டா …. ” என்றான் உறுதியாக .
நந்தா என்கிற நந்தகுமார் IPS ஆபீசர் . ராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய ASP. நாம் என்ன செய்கிறோமோ அதுதான் கண்ணாடியில் தெரியும் . அதுபோல நந்தா நல்லவர்களுக்கு நல்லவன் , கெட்டவர்களுக்குக் கெட்டவன் .
ஆள் பார்க்க அமைதியாகத் தெரிந்தாலும் , மிகவும் அழுத்தமானவன் . பார்த்தா இள வயதா இருக்காரே … என்ன செய்துவிடுவார் என்று நினைப்பதற்குள் முடித்து இருப்பான் .
அவனுக்குச் சட்ட ஒழுங்கு ரொம்பவும் முக்கியம் . அதைப் பாதிக்கும் வகையில் யார் நடந்து கொண்டாலும் , அவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கவலையே படமாட்டான் . ஒரு காட்டுக் காட்டிவிடுவான் .
விரைவில் அவன் தங்கையின் திருமணம் நடக்க இருப்பதால் … அதைப் பற்றி வருணிடம் கலந்து பேசிக்கொண்டு இருந்தான் .
அதே நேரம் ராமநாதபுர மாவட்டத்தின் கீழ் வரும் ஊர் ஒன்றில் பரபரப்பாக ஆட்கள் சுற்றிக்கொண்டு இருந்தனர் .
“ டேய் கிடைச்சாங்களா …. ”
“ இன்னும் இல்லைப்பா … ”
“ இன்னைக்கு ராத்திரிக்குள்ள கண்டுபிடிக்கணும் . ஒருநாள் அவ அவன் கூடத் தங்கிட்டாலும் , அவளையும் சேர்த்து வெட்டு …. இல்லைனா அந்தப் பையனை மட்டும் வெட்டிட்டு , அவளை இங்க கொண்டு வாங்க . ” என்று போன்னில் கர்ஜித்தவர் , தொலைபேசியை நங்கென்று வைக்க …
அந்தப் பக்கம் கேட்டவனின் ரத்தமோ இன்னும் கொதித்தது . பொதுத் தொலைபேசியில் இருந்து வெளியே வந்தவன் , எந்தப் பக்கம் போவது என்று தெரியாமல் இருபக்கமும் பார்த்து வைக்க …
“ அண்ணே அவங்க இருக்க இடம் தெரிஞ்சிடுச்சு …. வாங்க . ” என ஒருவன் சத்தமாக அழைக்க …. அந்தப் பக்கம் ஓடினான் .
“ ச்சு … என்ன பண்ற உனக்குப் பயமாவே இல்லையா ?” பெண் குரல் தயங்கி கேட்க ….
“ பயமாத்தான் இருக்கு … அதுக்காக நமக்குதான் கல்யாணம் ஆகிடுச்சு இல்லை …. ” என்றது ஆண் குரல் .
“ எனக்கு எங்க வீட்டை நினைச்சா பயமா இருக்கு . நம்மை அவங்க வாழ விடமாட்டாங்க . ”
“ பயப்படாத … இந்த இடம் அவங்களுக்குத் தெரியாது . நாளைக்குக் காலையில வெள்ளனவே நாம சென்னைக்குப் போயிடலாம் . அப்புறம் நம்மை யாரும் ஒன்னும் பண்ண முடியாது . ”
அவன் சொல்லிக்கொண்டிருந்த போதே … கதவை யாரோ முரட்டுத் தனமாக இடிக்க … இருவரும் பயந்து போய் அறையின் மூலைக்குச் சென்றனர் .
“ டேய் பாண்டி , ஓடிப்போயிடுங்க டா …. அவங்க ஆளுங்க வந்திட்டாங்க . ” நண்பர்கள் குரல் வெளியே கேட்க … எந்தப் பக்கம் செல்வது என்று தெரியாமல் , உள்ளே இருந்த இளஞ்சிட்டுக்கள் இரண்டும் தவிக்க ….
அப்போது கதவை உடைத்து உள்ளே வந்தவனோ , ஒரு நொடி கூடத் தாமதிக்கவில்லை …. அந்த ஆணின் கழுத்தில் ஒரே போடாகப் போட …. ரத்தம் எல்லாப் பக்கமும் சிதறியது .
தன் மேல் சிதறிய ரத்தத்தைப் பார்த்துதான் என்ன நடந்தது என்று அந்தப் பெண்ணுக்கு தெரியும் . தாலி கட்டிய அன்றே தன் கணவனை இழந்தவள் , அந்த அதிர்ச்சி தாங்காமல் மயங்கி விழுந்தாள் .
வெட்டியவனோ அவளை அலட்சியமாகத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு வெளியில் சென்றான் .
இரண்டு நாட்கள் சென்று , நந்தா ராமநாதபுரம் ASP யாகப் பொறுப்பு ஏற்க … அவனை வாழ்த்திய கமிஷனர் , “ நந்தா , உங்களைப் பற்றி நிறையக் கேள்விபட்டிருக்கேன் . இங்கேயும் நல்ல மாற்றம் வரும்னு எதிர்பார்க்கிறேன் .” என்றார் .
“ கண்டிப்பா சார் , என்னால முடிஞ்சது செய்வேன் . எனக்கு எந்த அரசியல் குறுக்கீடும் இல்லாம நீங்க பார்த்துக்கணும் . ”
“ அது ரொம்பக் கஷ்ட்டமாச்சே …. ” கமிஷனர் சிரிக்க …
“ அவன் நான் சொன்னாலும் கேட்க மாட்டான்னு சொல்லிடுங்க போதும் . ” என்றான் நந்தாவும் சிரித்தபடி …
“ அப்ப எனக்கு நிறையச் சோதனை வைப்ப …. ” என்றபடி கமிஷனர் வெளியே செல்ல … நந்தா அந்த வாரத்தில் நடந்த முக்கியமான நிகழ்வுகளைப் பற்றிப் பார்த்துக் கொண்டு இருந்தான் .
அங்கிருந்த உதவி ஆய்வாளரை அழைத்தவன் , “ ரெண்டு நாள் முன்னாடி யாரையோ வெட்டி கொன்னு இருக்காங்களே யார் அது ?” என விசாரித்தான் .
“ சார் , அது காதல் கதை சார் . பொண்ணு மேல்சாதி பொண்ணு , பையன் கீழ்சாதி … அப்புறம் விடுவாங்களா சார் … அதுதான் போட்டுடாங்க . ”
“ இதெல்லாம் இங்க ரொம்பச் சாதாரணம் சார் . ”
“ யாரு வெட்டினதுன்னு எதுவும் தெரிஞ்சிதா ?”
“ அதெல்லாம் அவங்க ஆளே ஒருத்தன் வந்து , முன்விரோதம் காரணமா நான்தான் கொன்னேன்னு சரன் அடைஞ்சிட்டான் . இதெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது சார் …. ”
கேட்ட நந்தாவுக்கு இன்னும் எவ்வளவு நாள்தான் சாதி வெறி பிடிச்சு அலையப் போகிறார்களோ என ஆத்திரமாக வந்தது .
“ சாதிகள் இல்லையடி பாப்பா … ” என எப்போதோ பாடி வைத்தான் பாரதி . ஆனால் நாடு எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும் , இன்னமும் சாதியை ஒழிக்க முடியவில்லை …. அதை அரசியல்வாதிகள் ஒழிக்கவும் விடமாட்டார்கள் . அப்போது தானே அதைச் சொல்லி ஒட்டு வாங்கலாம் .
என்று மாறுமோ நம் நாடு …..
error: Content is protected !!