Skip to content
Post Views: 4,739
அதேநேரம் அதே அன்பு வேறு ஒருவரிடம் இருந்து கிடைத்த போது, அதுவும் நீ இல்லையென்றால் உயிரையே விடுவேன் என்றதும், அவள் கண்களுக்கு அவன் உயர்வாகவே தெரிந்தான்.
அவர்கள் இனத்தைச் சேர்ந்தவன் இல்லை என்பதைத் தவிர, பாண்டியிடம் குறை சொல்லும்படி ஒன்றும் இல்லை. அவன் நல்லவன் தான். ஆனால் தன் குடும்பம் எப்பேற்பட்டது, இதெல்லாம் நடக்குமா எனக் கயல்விழி யோசிக்க மறந்தாள்.
அந்த நேரத்தில் பிரச்சனை முடிந்தால் போதும் என்றுதான் இருவருமே நினைத்தனர். எதிர்காலத்தைப் பற்றி யோசிக்க மறந்தனர். அவர்களின் வயது அப்படி. இளங்கன்று பயம் அறியாது.
காதலிக்கிறேன் என ஒத்துக்கொண்டாளே தவிர, கயல்விழியிடம் வேறு முன்னேற்றம் இல்லை. காதலை வளர்க்க தேவையான சூழ்நிலையும் இல்லை. அதனால் அவள் எப்போதும் போலவே சாதாரணமாக இருந்தாள்.
Advertisement
பாண்டி தாங்கள் காதலிப்பதாக அவன் நண்பனிடம் சொல்ல… அவன் சென்று இன்னொருவனிடம் சொல்ல… அவன் சென்று கயல்விழியின் சொந்தக்காரன் ஒருவன், அதே கல்லூரியில் படிக்கிறான், அவனிடம் சொல்லிவிட்டான்.
கல்லூரியில் இருக்கும்போதே, அவன் தன் நண்பர்களோடு வந்து பாண்டியை அடித்துவிட்டு எச்சரிக்கை செய்தவன், கயல்விழியையும் பார்த்து முறைத்து விட்டுச் சென்றான்.
எப்படியும் இன்றே வீட்டிற்குத் தெரிந்துவிடும் என்று கயல்விழிக்கு தெரியும். அப்போதுதான் வீட்டினரை பற்றிய பயம் வந்தது.
Advertisement
அவளை எதாவது செய்து விடுவார்களோ என்ற பயத்தை விட, பாண்டியை எதுவும் செய்து விடுவார்களோ என்றுதான் அவள் பயந்தாள்.
Advertisement
“நீ எங்கையாவது போயிடு பாண்டி.” கயல்விழி சொல்ல…
“நீயும் வா.” என்றான் அவன்.
அவனுக்கு நன்றாகத் தெரியும், இன்று கயல்விழியை விட்டுவிட்டால், அவனால் திரும்ப அவளைக் கண்ணால் கூடப் பார்க்க முடியாது என்று.
Advertisement
“நானா…” கயல்விழி அதிர்ந்து போய்ப் பார்க்க,
“நீ மட்டும் இப்ப என்னோட வரலைனா. நான் செத்துடுவேன். உண்மையிலேயே அதுதான் நடக்கும் கயல்.” பாண்டி அழுத்தம் திருத்தமாகச் சொல்ல… பாண்டியின் நண்பர்களும் அவன் சொல்வதுதான் சரி என்றனர்.
கயல்விழிக்கு யோசிக்க நேரமே கொடுக்கவில்லை. அப்போதே கல்லூரியின் பின்பக்க வாயில் வழியாக வெளியே சென்று, அந்தப் பக்கம் வந்த பேருந்தை கைகாட்டி அதில் ஏறிவிட்டனர். அதுவரை உடன் வந்த தேன்மொழி பேருந்தில் ஏறவில்லை.
ராம்நாட் வந்து, அங்கிருந்து மதுரைக்குப் பஸ் ஏறி, மதுரைக்குச் செல்லும் பாதி வழியிலேயே ஒரு கோவிலை பார்த்ததும் அங்கேயே இறங்கி விட்டனர்.
கல்லூரியில் பாண்டியை அடித்தவன், நேராகக் கயல்விழியின் அப்பா எங்கிருக்கிறார் என விசாரித்து, அவரின் மில்லுக்குச் சென்று அனைத்தையும் அவரிடம் சொல்லி முடித்தான்.
அவன் சொல்லி முடித்ததும், அன்பரசு அவனை விட்ட அறையில், அவனின் ஒருபக்க காதே கேட்கவில்லை.
“உனக்குத் தெரிஞ்சதும் விஷயத்தை என்கிட்டே வந்து சொல்ல வேண்டியது தான வெண்ணை, உன்னை யாருடா அவனை அடிக்கக் சொன்னது? அதுவும் பொண்ணு அங்க இருக்கும் போது…..” என்றவர்,
“டேய் கிருஷ்ணன், வாசு உடனே காலேஜ் போய்க் கயலை கூடிட்டு வாங்க. மத்ததை அப்புறம் பார்த்துக்கலாம்.” என்றார். ஆனால் அவருக்கு முன்தான் பாண்டி முந்திக்கொண்டானே.
ரோட்டோரம் இருந்த கோவில் உள்ளே அவர்கள் சென்றபோது, அந்நேரத்திற்குக் கோவிலில் யாருமே இல்லை.
கோவிலில் மரத்தில் இருந்த மஞ்சள் கயிற்றை எடுத்து பாண்டி கயல்விழியின் கழுத்தில் கட்டிவிட்டான். அதோடு உடனே அங்கிருந்து கிளம்பி, அவனின் நண்பனின் ஊருக்கு வந்துவிட்டனர்.
எப்படியாவது தப்பித்து மெட்ராஸ் சென்றுவிட வேண்டும் எனப் பாண்டி நினைத்திருக்க. ஆனால் நடந்ததோ வேறு…
கயல் கல்லூரியில் இல்லை என்றதும், அவள் அண்ணன்கள் உடன்பயின்றோரை விசாரிக்க…அவர்கள் அவள் தேன்மொழியோடு சென்றதாகச் சொன்னார்கள்.
தேன்மொழியின் வீட்டிற்கு அவர்கள் சென்றபோது, அவள் அப்போதுதான் கல்லூரியில் இருந்து வந்திருந்தாள். அவளை அடித்து மிரட்டி விஷயத்தை வாங்க. பாவம் அவள் குடும்பமே அரண்டு போய்விட்டது.
கயல்விழி பாண்டியோடு ராம்நாட் செல்லும் பேருந்தில் சென்றது தெரிந்து, இவர்கள் ஆட்களோடு அங்கே சென்று தேட… பிறகுதான் அவர்கள் மதுரை சென்ற விவரம் தெரிந்தது.
இவர்கள் மதுரையில் தேடிக்கொண்டிருக்க…. வேறு ஒருவரின் மூலம், அவனின் நண்பனின் ஊரில் இருக்கிறார்கள் எனத் தகவல் கிடைத்தது. இரவில்தான் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என கண்டுபிடிக்க முடிந்தது.
பாண்டி செத்து விடுவேன் என மிரட்டியே, கயல்விழியை அவன் இஷ்ட்டதிற்கு வளைத்தவன், அவள் அவனுக்காக வந்தும் செத்துதான் போனான். அதுவும் அவள் கண் எதிரிலேயே.
எல்லாவற்றையும் கேட்ட உமாவுக்குக் கயல்விழியை நினைத்துப் பாவமாக இருந்தது. இந்தப் பெண்ணின் இரக்க குணத்தைப் பயன்படுத்தி, அவள் வாயாலையே காதலிப்பதாகச் சொல்லவும் வைத்து, கல்யாணத்துக்கும் அவசரப்படுத்தி, கடைசியில் அவள் கண் எதிரிலேயே உயிரையும் விட்டால்… இந்தப் பெண்ணுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக இருக்காதா?
ஏற்கனவே மென்மையான மனம் படைத்தவள், அவளுக்கு இதைத் தாங்கிக்கொள்வது கஷ்ட்டம் தானே. கையால் பறிக்க வேண்டிய பூவை, கோடாரியால் வெட்டினால் என்ன ஆகும்? அதுதான் இப்போது நடந்திருக்கிறது.
இவளை எப்படியாவது இதிலிருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என நினைத்த உமா, “இதுல உன் தப்பு என்ன கயல்?” எனக் கேட்க….
“எல்லாமே என்னோட தப்புதான்.” என்றாள் அவள்.
இந்த எண்ணம் இருக்கும்வரை, அவளை இயல்பாக மாற்றுவது சிரமம் என்று உணர்ந்தவள்,
“சும்மா எல்லாத்தையும் தூக்கி உன் தலையில போட்டுக்கக் கூடாது. நீ போய்ப் பாண்டியை காதலிக்கிறேன்னு சொன்னியா? இல்லை அவனைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னியா?”
“அவன்தான் எல்லாத்தையும் ஆரம்பிச்சு இருக்கான். அப்ப பின்விளைவுகளைப் பற்றி அவன்தான் யோசிச்சு இருக்கணும்.”
“என்னைக் கேட்டா இதெல்லாம் பாண்டியோட அவசரத்துனால வந்ததுன்னு சொல்வேன். அப்படியும் நீ அவனை ஏமாத்த நினைக்கலையே. அவன் கூப்பிட்டதும் போகத் தான செஞ்ச.”
“எத்தனை பெண்கள் காதலிச்சவனைக் கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறாங்க?”
“உன் அப்பா இப்படிச் செஞ்சா, நீ என்ன பண்ணுவ?”
உமா சொன்னதைக் கேட்டதும் கயல்விழி வேறு விதமாகவும் யோசிக்க ஆரம்பித்தாள்.
“அவங்கவங்களுக்கு என்னவோ அதுதான் நடக்கும் புரியுதா? சும்மா கண்டதையும் நினைச்சுக் குழப்பிக்கக் கூடாது.”
“பழசை மறந்திடுன்னு சொல்லலை… நினைக்காமல் இருக்க முயற்சி செய்.”
“அதையே நினைச்சு உன்னையே நீ வருத்திகிட்டா மட்டும்? நடந்தது எதுவும் மாறப்போறது இல்லை. உனக்குப் புது வாழ்க்கை அமைஞ்சிருக்கு. அதை நல்லபடியா தக்க வச்சுக்கோ.”
“நான் ஒரு பத்து நாளுக்கு மாத்திரை தரேன். அதைப் போட்டுட்டு தூங்கு. நல்லா தூக்கம் வரும். நீ வேணா பாரு கனவே வராது.” என்றவள், விட்டமின் மாத்திரைகளை தான் கொடுத்தாள்.
எப்போதுமே மருந்து மாத்திரையை விட நம்பிக்கையே சிறந்தது. உனக்கு ஒன்றும் இல்லை. நீ நன்றாக இருக்கிறாய் என்பதே மிகுந்த ஊட்டமளிக்கும்.
பிறகு இருவரும் வேறு விஷயங்கள் பேசிக்கொண்டு இருந்தனர். சிறிது நேரத்தில் வந்த நந்தா காரில் இருந்தே ஹாரன் அடிக்க… கயல்விழி எழுந்து சென்றாள்.
நந்தா உமாவிடம் பிறகு போன் செய்வதாக ஜாடை காட்டினான். அதைப் புரிந்து கொண்டு உமா கை அசைத்தாள்.
என்ன பேசினார்கள் எனக் கயல்விழியிடம் நந்தா கேட்கவே இல்லை. அவளை அழைத்துக் கொண்டு கடற்கைரைக்கு எதிரே இருந்த உணவகத்திற்குச் சாப்பிட சென்றான். லாபியில் இருந்து பார்க்க கடற்கரை நன்றாகத் தெரிந்தது.
“இதுதான் மெரீனா பீச். நீ சொன்ன சிற்பம் எங்க இருக்கு?” நந்தா கேட்க… பார்த்த கயல்விழியின் முகத்தில் அசடு வழிந்தது.
“இது அது இல்லை போலிருக்கு.” என்றாள்.
“ஹா... ஹா… புரிஞ்சிடுச்சா?”
“உங்களுக்கு அப்பவே தெரியும் இல்ல, பிறகு ஏன் சொல்லலை?”
“நீ பேசினது பார்த்து எனக்கே சந்தேகம் வந்துடுச்சு.” என்றான்.
கயல்விழி அதையும் நம்ப…. நந்தாவுக்குச் சிரிப்பை அடக்குவது சிரமாக இருந்தது.
“அங்க போகலாமா?” கடற்கரையைக் காட்டி கயல்விழி கேட்க,
“இந்த நேரத்திலேயா? எப்படியும் உன் அண்ணன் இன்னைக்கு உன்னை இங்க கூடிட்டு வருவான் பாரு.” என்றான்.
இருவரும் வீடு வந்து சேர நான்கு மணி ஆகிவிட்டது. ஹாலில் வீட்டினர் இருக்க… எல்லோருமாக உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
“இன்னைக்கு நைட் மெரீனா பீச் போகலாமா?” வருண் கேட்க…. கயல்விழி நந்தாவை பார்க்க…. அவன் அவளைப் பார்த்து கண்சிமிட்டி சிரித்தான்.
error: Content is protected !!