Skip to content
Post Views: 5,238
புது வெள்ளை மழை
அத்தியாயம் – 12
கயல்விழியின் வீடு விசித்திரமான மனிதர்களைக் கொண்டது . அன்பரசு முதலில் இருந்தே குடும்பத்துக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார் . அவர் தொழிலை பார்ப்பதிலும் , தங்கள் சமூகப் பணி செய்வதிலுமே அவரது நேரம் சென்று விடும் .
நவநீத கிருஷ்ணனும் , வாசுவும் அடுத்தடுத்து இரண்டு வருட இடைவெளியில் பிறந்தவர்கள் . அதன்பிறகு கயல்விழி பதினொரு ஆண்டுகள் இடைவெளி விட்டு பிறந்தவள் , அதனால் அவள் அந்தக் குடும்பத்தில் அதிகபடி என்றே அண்ணன்மார் இருவரும் நினைத்தனர் .
Advertisement
அதோடு கிருஷ்ணன், வாசு இருவருமே அந்தக் குடும்ப நிறமான கருமை நிறத்தில் இருக்க , சின்ன வயதிலேயே இறந்து போன , தன் அத்தையின் அழகை கொண்டு கயல்விழி பிறந்திருந்தாள் .
இவள் மட்டும் நிறமாக அழகாக இருக்கிறாளே என்று அது வேறு இருவருக்கும் அவள் மீது பொறாமை . அதுவும் கயல்விழி நடக்க ஆரம்பிக்கும்போது , அண்ணன்மார் இருவரும் பருவ வயதில் இருக்க , சின்னத் தங்கையை இருவரும் திரும்பி கூடப் பார்ப்பது இல்லை .
அன்பரசுவோ பிள்ளைகள் காலையில் எழும்போது உறங்கிக்கொண்டு இருப்பார் . இரவிலோ அவர்கள் உறங்கியதும் தான் வீட்டிற்கே வருவார் .
Advertisement
என்றாவது அதிசயமாக வீட்டில் இருக்கும் நேரமும் , பிள்ளைகளை மிரட்டிக் கொண்டுதான் இருப்பார் . அதனால் அவர் வண்டி தூரத்தில் வரும் ஓசையைக் கேட்டதுமே, பிள்ளைகள் ஆளுக்கொரு அறையில் சென்று முடங்கி விடுவார்கள் .
Advertisement
அவர் வீட்டில் இருக்கும் நேரம் பிள்ளைகள் சின்னச் சத்தம் கூடச் செய்ய மாட்டார்கள் . அவர் எப்போதுடா வெளியே செல்வார் என்பது போலவே வீட்டினர் இருப்பார்கள் .
பத்மாவுக்கு இரண்டு மகன்களுக்குப் பிறகு மகள் பிறந்ததில் மிகவும் சந்தோஷம் . அவர் மகளை இளவரசி போல நடத்துவார் .
கீதா அந்த வீட்டுக்கு மூத்த மருமகளாக வந்ததும் , அழகாக இருக்கும் நாத்தனாரை பார்த்து அவளுக்கு வயிறு எரியும் . கயல்விழி பற்றி ஒன்றுக்கு இரண்டாக அவள் அண்ணன்மார்களிடம் கோல் மூட்டுவாள் . அதைக் கேட்டுவிட்டு அவர்களும் ஆடுவார்கள் .
Advertisement
பள்ளிப்படிப்பை அதே ஊரில் முடித்த கயல்விழி , கல்லூரி படிப்பிற்காகப் பக்கத்தில் இருக்கும் டவுனுக்குச் செல்ல வேண்டியது இருந்தது . அதற்குமே அவளது அண்ணன்கள் ஆட்சேபனை தெரிவிக்க .
“ காலேஜ் போயிட்டு வந்திட்டு இருக்கட்டும் . நல்ல இடமா வந்தா படிப்பை நிறுத்திட்டுக் கல்யாணத்தை முடிச்சிடலாம் .” என்றார் அன்பரசு .
அந்தக் கல்லூரி அவர்கள் சமூகத்தினர் நடத்துவது . அதனால்தான் அதில் சேர்த்து இருந்தனர் . மற்ற சமூகத்தினரும் அந்தக் கல்லூரியில் படிப்பார்கள்தான் . ஆனால் மிகவும் குறைந்த அளவிலேயே .
கல்லூரி காலம் என்பது எல்லோருக்குமே வசந்தகாலம்தான் . அதே போலத்தான் கயல்விழிக்கும் இருந்தது . அவள் ஊரில் இருந்து , அந்தக் கல்லூரிக்குச் செல்லும் அனைவரும் ஒரே நேரத்தில் , ஒரே பேருந்தில்தான் செல்வார்கள் .
அது ஒரு தனியார் பேருந்து . அதனால் வண்டி புதிதாகப் பளபளவென்று இருக்கும் . காதை கிழிக்கும் சத்தத்தில் சினிமா பாட்டு வேறு …. பெண்கள் எல்லாம் சீட்டில் அமர்ந்து வர … பையன்கள் எல்லாம் நின்றபடி அலப்பறை செய்து கொண்டு வருவார்கள் .
கயல்விழி பாவாடை தாவணியிலேயே அத்தனை விதம் வைத்து இருப்பாள் . எல்லாமே உயர்ந்த ரகம் . தன் நீளக் கூந்தலை தளர பின்னி , தினமுமே மல்லிகை பூ வைத்துக் கொண்டு வருவாள் . அதோடு கழுத்தில் ஒரு லாங் செயின் , காதில் சின்ன ஜிமிக்கி கையில் வாட்ச் அணிந்து கொண்டு இருப்பாள் . பார்த்ததுமே பெரிய வீட்டுப் பெண் எனத் தெரியும் .
கயல்விழி பேருந்து நிலையம் சென்ற போது , அவள் தோழி தேன்மொழியும் அரக்கபரக்க வந்து சேர்ந்தாள் .
“ நல்லவேளை இன்னும் பஸ் வரலை .” தேன்மொழி நிம்மதி பெருமூச்சு விட …
“ உனக்கு எத்தனை தடவை சொல்றேன் , முகத்தை நல்லா துடைச்சிட்டு பவுடர் போடுன்னு . பாரு திட்டு திட்டா இருக்கு .” என்றவள் , தன் கைகுட்டையால் தேன்மொழியின் முகத்தைத் துடைத்து விட்டாள் .
“ நானும் உன்னை மாதிரி இருந்தா பவுடர் போட தேவை இல்லை .”
“ ஏன் நானும் தான் போடுறேன் .”
“ ஏற்கனவே வெள்ளச்சி தான பிள்ள நீன்னு . இன்னும் உனக்குப் பவுடர் வேற கேட்குதா ?”
“ அப்பத்தான் பிள்ளை எண்ணெய் வழியாது .” எனப் பதில் கொடுத்த கயல்விழி, “ போட்டது தெரியாத மாதிரி போடணும் .” என்றாள் .
“ உனக்கு என்ன உங்க அம்மா எல்லா வேலையும் பார்ப்பாங்க . என் வீட்ல நான் இல்ல எல்லா வேலையும் செஞ்சு வச்சிட்டு வர வேண்டியதா இருக்கு . கிளம்புற அவசரத்துல அப்படியே போட்டுட்டு வரேன் .”
“ எதாவது சாக்கு சொல்லு . ஒரு பத்து நிமிஷம் முன்னாடி கிளம்பினா என்ன ? அன்னைக்கு உன்னைத்தான் பயலுங்க கேலி பண்ணாங்க .”
“ என்னன்னு ?”
“ ம்ம் .. . சுண்ணாம்பு அடிச்ச சுவருன்னு .”
“ இருக்கட்டும் , ஒரு நாள் என்கிட்டே மாட்டாமலா போயிடுவானுங்க , அப்ப இந்தத் தேன்மொழி யாருன்னு காட்றேன் .”
ஆண்கள் பெண்கள் இருபாலரும் படிக்கும் கல்லூரி என்றாலும் , மாணவர்கள் மாணவிகளிடம் அத்தனை எளிதாகப் பேசி விட முடியாது . ஜாடைமாடையாகத் தான் பேசுவார்கள் .
வகுப்பறையில் கூட மாணவர்கள் ஒரு பக்கம் , மாணவிகள் ஒரு பக்கம் என்றுதான் உட்கார்ந்து இருப்பார்கள் .
பாண்டியும் கயல்விழியின் வகுப்புதான் . மாநிறத்தில் கலையான முகம் . மிகவும் நன்றாகப் படிப்பான் .
ஒருநாள் பேருந்தில் கல்லூரிக்குச் செல்லும்போது, படியில் நின்று கொண்டு வந்தவன் , அவன் நோட்டுப் புத்தகத்தை ஜன்னல் வழியாக , யார் இருக்கிறார்கள் எனப் பார்க்காமல் கொடுக்க … கயல்விழியும் தேன்மொழியும் தான் உட்கார்ந்து இருந்தனர் .
நோட்டை திறந்து பார்த்த தேன்மொழி , “ ஹே, நம்ம பாண்டியோட நோட்டு டி .” என்றதும் , கயல்விழி அதை வாங்கிப் பார்க்க … அது அவனின் கணக்கு நோட்டு .
முன்தினம் கணக்கு சார் வீட்டுபாடம் கொடுத்த கணக்கை போட முடியாமல் திணறி , அப்படியே கயல்விழி விட்டிருந்தாள் . அதைப் பாண்டி சரியாகப் போட்டிருக்க …. ஏற்கனவே சார் திட்டுவாரோ எனப் பயந்து கொண்டு இருந்தவள் , அவள் நோட்டை திறந்து அந்தக் கணக்கை காபி அடித்தாள் .
அடுத்த நிறுத்தத்தில் பேருந்து நின்று விட்டு மீண்டும் கிளம்ப , கூட்டம் கொஞ்சம் குறைத்து இருந்தது . ஜன்னல் வழியாக அவள் எழுதுவதைப் பார்த்த பாண்டிக்கு சிரிப்பாக வந்தது .
வேகமாக எழுதி முடித்து விட்டு நிமிர்ந்தவள் , பாண்டி தன்னையே பார்க்கவும் , அவளுக்கு ஒரு மாதிரியாகி விட்டது .
அன்றிலிருந்து தினமும் பாண்டி அவனின் நோட்டை தேன்மொழியிடம்தான் கொடுப்பான் . அதை வாங்கிக் கயல்விழி கணக்கை பார்த்து போட்டுக்கொள்வாள் .
முதல் செமஸ்டர் நெருங்க … ஒருநாள் வகுப்பிற்குள் கயல்விழி நுழையும்போது , பாண்டி அவனின் நண்பனிடம் பேசுவது போல் சத்தமாகப் பேசினான் .
“ இத்தனை நாள் சாரை ஏமாத்தியாச்சு . பரீட்சை வரப்போகுதே மார்க் வந்தா தெரிஞ்சு போகுமே …” என அவன் கயல்விழியைப் பார்த்துக் கொண்டே சொல்ல … அவன் என்ன சொல்கிறான் என அவளுக்கு நன்றாகவே புரிந்தது .
வீட்டுப் பாடத்தைக் காப்பி அடித்துக் காட்டிவிட்டாள் . ஆனால் பரிட்ச்சையில் கணக்கு போட தெரியாமல் என்ன செய்வாள் ?
“ ஹே தேனு , அவன்கிட்ட நமக்குக் கணக்கு சொல்லி கொடுக்கச் சொல்லுடி .” எனக் கயல்விழி நச்சரிக்க … வேறுவழியில்லாமல் தேன்மொழி பாண்டியிடம் கணக்கு சொல்லித் தர சொல்லி கேட்டாள் .
தேன்மொழியும் பாண்டியும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் . அவர்கள் இருவரும் பேசிக்கொண்டால் பிரச்சனை வராது .
கல்லூரியில் கூட அவரவர் ஆட்களோடுதான் நட்பு பாராட்டுவார்கள் . பெற்றோரே , நம்ம ஆளுங்க கூட மட்டும் பேச்சு வச்சுக்க எனச் சொல்லித்தான் அனுப்புவார்கள் . ஆனால் கயல்விழிதான் எந்த ஏற்றத்தாழ்வும் பார்க்காமல் தேன்மொழியோடு நட்பு பாராட்டுவாள் .
அன்றிலிருந்து வகுப்பு இல்லாத வேளைகளில் , வகுப்பறையிலேயே பாண்டி கணக்கு சொல்லிக் கொடுக்க … கயல்விழி , தேன்மொழியோடு இன்னும் சிலரும் கற்றுக் கொண்டனர் .
அந்தச் செமஸ்டரில் கணக்குப் பரீட்சை அன்று , பாண்டி கயல்விழியையே பார்த்துக் கொண்டு இருந்தான் . அவள் ஒழுங்காக எழுதுவாளா என அவனுக்குக் கவலை .
கேள்வித்தாளை கையில் வாங்கிய கயல்விழி அதைப் படித்துப் பார்த்தவள் . பாண்டியை பார்த்து நம்பிக்கையாகப் புன்னகைக்க …. அப்போதுதான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது .
அவள் பரிட்ச்சை நன்றாகவே எழுதி இருந்தாள் . மறுநாள் வழக்கம் போல் கல்லூரிக்குச் செல்லும்போது , பாண்டி அவனின் நோட்டை கொடுக்க … அதில் கயல்விழி எதோ எழுதுவதைப் பார்த்தான் .
பாண்டிக்கு அது என்ன என்று தெரிந்து கொள்ளும் வரை பரபரப்பாக இருந்தது . தேன்மொழி கொடுத்துவிட்டு சென்ற நோட்டை அவன் திறந்து பார்க்க … அதில் நன்றி என்று எழுதி இருந்தது .
அதை பாண்டி பிடித்துக் கொண்டான். அன்றிலிருந்து நோட்டில் அவன் எதாவது எழுதி வைப்பதும் , அதற்குக் கயல்விழி பதில் எழுதுவதுமாக நாட்கள் சென்றது .
இருவரும் நேரடியாகப் பேசிக் கொள்ளததால் … தேன்மொழியைத் தவிர மற்ற யாருக்கும் அவர்கள் இடையே இருந்த நட்பு தெரியாது .
முதலில் சாதாரணமாகத்தான் எதாவது எழுதுவான் . ‘ என்ன சாப்பிட்ட ?’, ‘ வீட்டுப் பாடம் செஞ்சிட்டியா ?’ என ஆரம்பித்து ‘ இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்கே .’ எனப் பாதை மாற ஆரம்பித்து , ‘ உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு . என்னை உனக்குப் பிடிச்சிருக்கா ?’ என்ற கேள்வியில் வந்து நின்றது .
அவன் காதலிக்கிறேன் என்பதைத் தான் மறைமுகமாகச் சொல்கிறான் எனப் புரியாத கயல்விழி , பிடித்திருக்கு என எழுதி விட்டாள் .
பாண்டி அவளும் தன்னைக் காதலிப்பதாகக் கனவு உலகத்தில் மிதந்தான் . தேன்மொழியை எப்படி அவளுக்குப் பிடிக்குமோ, அப்படித்தான் பாண்டியையும் கயல்விழிக்குப் பிடித்திருந்தது .
பாண்டி காதலை மனதில் வளர்த்துக்கொள்ள … கயல்விழி அவனை நண்பனாகத்தான் பார்த்தாள் .
ஒருநாள் இதயம் ஒன்றின் படம் வரைந்து , அதில் இருவரின் பெயரையும் பாண்டி எழுதி வைத்திருக்க … அப்போதுதான் அவனின் உண்மையான எண்ணம் கயல்விழிக்குப் புரிந்தது .
உண்மையாகவே அவள் பயந்து விட்டாள் . அன்றிலிருந்து அவள் பாண்டியை நிமிர்ந்து கூடப் பார்ப்பது இல்லை . சில நாட்கள் அவளைக் கவனித்த பாண்டி தவிக்க ஆரம்பித்தான் .
கயல்விழி பேருந்தில் உட்காரும் இருக்கையையும் மாற்றிக் கொண்டாள் . தேன்மொழிக்கு ஒன்றும் புரியவில்லை . அவளும் கயல்விழியிடம் எதுவும் கேட்கவில்லை .
ஒருநாள் தேன்மொழி வீட்டிற்காகத் தண்ணீர் எடுக்க ஆற்றிற்கு சென்ற போது , அவளிடம் வந்த பாண்டி , அவன் கயல்விழியை விரும்புவதாகச் சொல்ல … கேட்ட அவளுக்கும் அதிர்ச்சிதான் .
“ என்ன சொல்ற பாண்டி இதெல்லாம் நடக்குமா ?”
“ நடக்காம என்ன ? உன் ப்ரண்ட் ஏன் திடிர்ன்னு மாறிட்டா ?” என அவன் கயல்விழியைக் குறை சொல்ல …
“ நிஜமாவே கயல் உன்னை அப்படி நினைக்கலை … எனக்குத் தெரியும் . அவ உன்னை ப்ரண்டா தான் பார்க்கிறா .” தேன்மொழி சொல்ல , அதைப் பாண்டி நம்புவதாக இல்லை .
“ இல்லை அவ என்னை விரும்புறா . என்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்னாளே … இப்ப என்னை ஏமாத்த பார்க்கிறா ? அவ மட்டும் இல்லைனா நான் செத்துடுவேன் .” பாண்டி சொல்லிவிட்டு சென்று விட்டான் .
இதை அப்படியே தேன்மொழி கயல்விழியிடம் சொல்ல … அவன் செத்து விடுவான் என்றதும் , அவளின் இரக்க குணம் தலை தூக்க …. அவன் உண்மையிலேயே எதாவது செய்து கொள்வானோ என்ற பயத்தில் , அவன் விருப்பத்திற்குக் கயல்விழி சம்மதித்தாள் .
அவள் வீட்டின் சூழ்நிலை அதற்கு ஏற்ற மாதிரிதான் இருந்தது . வீட்டில் அவளிடம் அவள் அம்மாவை தவிர வேறு யாரும் அன்பு பாராட்டவே இல்லை .
error: Content is protected !!