Second link VVT 5
மறுநாள் பார்த்துப்பார்த்து கிளம்பினான்.
இன்று எப்படியேனும் மனதில் இருப்பதை சொல்லிவிட வேண்டும் என்ற முடிவு அவனிடம் தீவிரமாய் இருந்தது.
ஸ்டேஷனில் போய் அவன் காத்திருக்க… காத்திருக்க… காத்திருக்க…
‘காத்திருந்து… காத்திருந்து காலங்கள் போனதடி!’ கதையானது.
Advertisement
வழக்கமாய் வரும் நேரம் தாண்டி போய்க்கொண்டிருந்தது. அவள் வரவில்லை.
அலைபேசியில் அழைத்து கேட்போம் என்றால், அப்போது தான் அவனுக்கு உரைக்கிறது அவளது எண் அவனிடம் இல்லை என்பது.
அப்படியே அமர்ந்திருந்தான்.
Advertisement
‘வேலை அதிகம் போல, அதான் லேட்’ அவனே ஒரு காரணத்தை கற்ப்பித்துக்கொண்டு, தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டு காத்திருந்தான்.
Advertisement
இருட்டத்தான் ஆரம்பித்ததே ஒழிய, அவள் வரும் சுவடே இல்லை.
குரு அழைத்தான்.
“எப்போடா வருவ? ஷூட் ஸ்டார்ட் பண்ணணும்?”
Advertisement
“வரேன்டா” என்ற அஜய்யின் குரல் பேதத்தை நொடியில் உணர்ந்துக்கொண்ட குரு, “என்னடா ஆச்சு?” என்று கேட்க,
“ஒண்ணுமில்ல!” என்றான் அஜய்.
அதற்குள் விவேக் குருவிடம் இருந்து வாங்கி, “சொல்லிட்டியாடா?” என்றான்.
மௌனமாய் இருந்தான் அஜய்.
“சரி நேர்ல வா, பேசிக்கலாம்!” என்று சொல்ல, அவனும் அங்கிருந்து மனமின்றி சென்றான்.
என்னதான் நண்பர்கள் சமாதானம் சொன்னாலும், ‘ஒரு நாள் தானே? அவளுக்கும் வேற வேலை வந்துருக்கும்’ என தன்னைத்தானே ஆறுதல்ப்படுத்திக்கொண்டாலும் ஏனோ அவன் மனம் ஒரு நிலையின்றி தவித்தது.
எப்போது விடியும், எப்போது அவளை பார்ப்போம் என்றே ராவை நீட்டித்தள்ளினான்.
அவள் வரும் நேரத்திற்கு முன்பே சென்று அவளுக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.
வருவோர் போவோரை எல்லாம் ‘அவளா? அவள்தானா?’ என்று அவன் பார்த்துவைக்க,
‘ப்ச்! எனக்கே இதெல்லாம் ஓவரா தான் இருக்கு’ என்று தோன்ற தான் செய்தது அவனுக்கும்.
நேரம் ஓடியது… ரயிலும் வந்தது…!
காத்திருந்த மக்கள் கூட்டம் திமுதிமுவென ஏற, சோர்ந்துப்போனான் அஜய்.
‘ஒருமாசமா தான் வர்றேன்னு சொன்னாளே? வேலை முடிஞ்சுருக்குமோ? அதான் வரலையோ?’
‘அவ நம்பர் கூட என்கிட்ட இல்லையே?’
‘வீடு, ஏரியா, ஆபிஸ்… ஒண்ணுமே தெரியாதே!’
‘அப்போ அவ்ளோதானா?’
கண்ணை மூடி சாய்ந்து அமர்ந்தான்.
நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் மனம் முரண்டியது.
தன் சிந்தனையில் அப்படியே அவன் இருக்க, ரயில் கிளம்பும் ஓசையும் கேட்டது, கூடவே,
“அஜய்…ஈஈஈ… வாங்க… ட்ரைன் கிளம்புது!” என்ற அவள் குரலும்…!
சார்ஜ் ஏறிய சிட்டி ரோபோ போல அவள் குரல் கேட்ட திக்கில் கால்களை செலுத்தினான்.
படிகட்டின் அருகே இருந்து எட்டிப்பார்த்து இவனை அழைத்துக்கொண்டிருந்தாள் அவள்.
மின்னல் வேகத்தில் உள்ளே ஏறி அவள் எதிரே நின்றவன், காலாகாலமாய் அவளை காணாததை போல பார்த்துவைக்க, அந்த பார்வை எல்லாம் அவளுக்கு புரியவில்லை.
“என்ன நீங்க? நான் தான் லேட்டா வந்து அவசரமா ஏறிட்டேன்னு நினைச்சா, நீங்க எனக்கு முன்ன வந்துக்கூட ஏறாம உட்காந்துருக்கீங்க?” என்றாள்.
பதில் சொல்ல வரவில்லை அவனுக்கு.
மூளை சட்டென அவனுக்கு ஒரு ஆணை பிறப்பிக்க, நொடியும் யோசிக்காது, “உங்க போன் நம்பர் குடுங்க!” என்றான்.
“உங்கக்கிட்ட இல்லையா?” என்றவள், “அச்சோ! என் கார்ட் நான் குடுக்கலையோ?” என கேட்டுக்கொண்டே கைப்பையில் இருந்து தன் கார்ட்டை எடுத்து அவனிடம் நீட்டினான்.
வாங்கிய மாத்திரத்தில் அதிலிருந்த பத்து இலக்கமும் பஜக்கென ஒட்டிக்கொண்டது அவன் கபாலத்தில்.
“நேத்து ஆபிஸ் லீவா நீங்க?”
அஜய் கேட்க, இயல்பாய் இருந்த அவள் முகம் துளியும் வாடியதோ என அவன் எண்ணும்போதே அதை மாற்றிக்கொண்டவள், “ஆமா! ஹியரிங் இருந்துச்சு! கோர்ட் போயிருந்தேன்! ரொம்ப டயர்ட்! அதான் அங்கிருந்து அப்டியே ‘கேப்’ புக் பண்ணி வீட்டுக்கு போயிட்டேன்!” என்றாள்.
“ஓ!” என்றவனுக்கு விளங்கவில்லை.
தெளிவுப்படுத்த வேண்டி, “எதாவது கேஸ் நடக்குதா?” என்றான்.
தன் பையில் இருந்து நீரை எடுத்து பருகியவள், “ம்ம்? ஆமா… என் டிவோர்ஸ் கேஸ் நடக்குது!” என்று மின்னாமல் முழங்காமல் அவன் தலையில் இடியை இறக்க, நின்ற இடத்திலேயே சமைந்துப்போனான்.
அவன் திகைப்பை, திகைப்பை மீறிய பாவத்தை எல்லாம் கவனியாதவள் வெளியே வேடிக்கை பார்த்தபடி, “செகன்ட் ஹியரிங்! டிவோர்ஸ் வாங்கியே தீரனும்ன்னு இருக்காங்க! நான் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டு வந்துட்டேன்!” என்று சொல்ல…
முடிந்தது…!
முதல்முறையாய் அவன் கண்கள் கசிந்தது…!
மூச்சுவிடுவதே சுமை என்றானது…!
துடிக்கும் இதயத்தை பிடுங்கி வீசவேண்டும் போல வெறியானது…!
அவள் தன்னுள் இத்தனை தூரம் ஆழ்ந்திருக்கிறாள் என்பதை அவன் உணர்ந்த தருணம் அது!!!
அவள் இல்லா நிஜம், தன்னை இத்தனை தூரம் மிரட்டும் என அவன் அஞ்சிய கணம் அது…!
‘அன்று என் வாழ்வின் ஏடானாள்…
இன்று அவ்வேட்டில் கோடானாள்…
எதிர்க்காலம் பார்த்து கிடந்த என்னை,
கடந்த நேற்றானாள்!’
-வாழலாம்…
