Skip to content
Post Views: 6,316
புது வெள்ளை மழை
அத்தியாயம் – 13
அன்று இரவு உணவிற்குப் பிறகு குழலியை தவிர மற்ற அனைவரும் காரில் கடற்கரைக்குக் கிளம்பினர். பரணி காரை ஓட்ட அவன் அருகில் வருணும், பின் இருக்கையில் தாரணி, கயல்விழி, நந்தா உட்கார்ந்து சென்றனர்.
கயல்விழி அடிக்கடி தன் கணவனைப் பார்க்க, அவள் எதோ சொல்ல வருகிறாள் எனப் புரிந்து, அவன் அவள் பக்கமாகக் குனிந்து என்ன என்றான்.
Advertisement
அவன் சட்டென்று வெகு அருகில் வரவும், கயல்விழிக்கு ஒரு நொடி பேச்சே வரவில்லை. வேகமாகச் சமாளித்துக் கொண்டு, “சிற்பம் எல்லாம் இருக்குமே, அந்தப் பீச் பேர் என்ன?” என மெதுவான குரலில் கேட்க,
அவள் எதற்குக் கேட்கிறாள் எனப் புரிந்து கொண்டவன், அவள் காதில், “மஹாபலிபுரம்.” எனக் கிசிகிசுக்க…. கயல்விழி அந்தப் பேரை மனதிற்குள் பதிய வைத்துக் கொண்டாள்.
வருண், “புருஷனும், பொண்டாட்டியும் என்ன ரகசியம் பேசுறீங்க?”
Advertisement
நந்தா, “அதுதான் நீயே ரகசியம்ன்னு சொல்லிட்டியே டா.”
Advertisement
“பகல்ல வந்தாதான் சிற்பம் எல்லாம் நல்லா தெரியும். நைட் போறோம் பரவாயில்லையா கயல்.” வருண் கேட்க…
“பரவாயில்லை அண்ணா, அந்தப் பீச்லதான் சிர்ப்பமே இல்லையே.” கயல் சொன்னதும், அவளை ஆச்சர்யமாகப் பார்த்தவன்,
“அங்க சிற்பம் இருக்கு.” என்றான்.
Advertisement
“எனக்குத் தெரியும், அது வேற இடம். மஹாபலிபுரம் தான.”
“யாரு சொன்னா? இவனா. டேய் எட்டப்பா.” என வருண் நந்தாவை பார்க்க… அவன் சிரித்தான்.
“அவர் ஒன்னும் சொல்லலை எனக்கே தெரியும்.”
“பொய் சொல்லாத, இவன்தான் சொல்லி இருப்பான். டேய் இதைச் சொன்னியே, மெரீனாவில் டால்பின் வருமே அதைச் சொன்னியா?”
டால்பின் என்றதும் ஆச்சர்யமான கயல்விழி “நிஜமாவே டால்பின் வருமா?” என வாயை பிளக்க…
“பின்னே அதனாலதானே நைட் போறோம். இந்த டைம்தான் வரும்.”
“எத்தனை வரும்?”
“அடிப்பாவி என்ன சொன்னாலும் நம்புறாளே.” என நந்தா நினைக்க… தாரணியும், பரணியும் சிரிப்பை அடக்கிக் கொண்டு இருந்தனர்.
“நிறைய வரும். வா வந்து பாரு.” என்ற வருண், யாராவது இல்லைன்னு சொன்னீங்க, அவ்வளவுதான் என்பது போல் மற்றவர்களைப் பார்த்தான்.
பீச் வந்ததும், காரை நிறுத்திவிட்டு இறங்கி மணலில் நடந்தனர். கடற்கரை காற்று முகத்தில் மோத, அந்த நேரத்தில் நடந்து செல்வதே சுகமாக இருந்தது.
“என்ன இங்க வேற யாருமே இல்லை?” கயல்விழி கேட்க…
“அது அந்தப் பக்கம் கூட்டமா இருக்கும் அண்ணி. இங்க நாம ப்ரீயா இருக்கலாம்.” என்றான் பரணி.
“இந்தப் பக்கம்தான் கயல், டால்பின்கள் இருக்கும். அதுதான் இந்தப் பக்கம் வந்தோம்.” வருண் சொல்ல… அப்படியா என்பது போல் கயல்விழி பார்க்க…
“டேய் வருண், நீ என் பொண்டாட்டியை வச்சு காமெடி பண்ணிட்டு இருந்தேன்னு வச்சுக்கோ, என்கிட்டே அடி வாங்கிடுவ சொல்லிட்டேன்.”
“அப்ப இங்க டால்பின் இல்லையா?” என்ற கயல்விழியை நந்தா ஒரு பார்வை பார்க்க… அதன்பிறகு கயல்விழி வாயை திறப்பாளா என்ன?
இரவு நேரம் என்பதால் கடல் வரை செல்லாமல், வெளிச்சமாக இருந்த இடமாகப் பார்த்து உட்கார்ந்தனர்.
“கயல் அங்க பார்த்தியா, அதுதான் எம்.ஜி.ஆர் சமாதி.”
“என்ன பீச் பக்கத்தில போய்ச் சமாதி இருக்கு.”
“பீச் பக்கத்தில இல்லை மா, பீச்லதான் இருக்கு. வரியா கிட்ட போய்ப் பார்க்கலாம்.”
“வேண்டாம், வேண்டாம். இந்த நேரத்தில போய் யாரவது சமாதிக்கு போவாங்களா? காத்துக் கருப்பு சுத்தும்.”
அவள் மறுத்த வேகத்தைப் பார்த்து எல்லோருக்கும் சிரிப்பு வந்தது.
“சரி இப்ப என்ன பண்றது?” வருண் கேட்க… பக்கத்தில் ஒரு குடும்பம் வட்டமாக உட்கார்ந்து விளையாடிக் கொண்டு இருந்தனர்.
“நாமும் விளையாடலாமா?” தாரணி கேட்க,
“போலீஸ் போய் இது மாதிரி எல்லாம் விளையாடுவாங்களா?” கயல் ஆச்சர்யப்பட…
“ஏன் நாங்க மட்டும் மனுஷங்க இல்லையா?” என்ற நந்தா தன் பாக்கட்டில் இருந்து கர்சீப் எடுத்தவன், “இந்தா பரணி நீ ஆரம்பி.” எனத் தன் தம்பியிடம் கொடுத்தான்.
பரணி நான்கு போரையும் சுற்றி வந்தவன், தாரணியின் பின்புறம் கர்சிப் போட, அவள் அதை எடுத்துக் கொண்டு அவனைப் பிடிக்கத் துரத்தினாள்.
பரணி அவள் கையில் மாட்டிக்கொள்ளவே இல்லை.
சிறிது நேரத்தில் அவனைப் பிடிக்க முடியாமல், அவள் திரும்பி வர… இப்போது அவள் முறை, அவள் வருணுக்கு போட, வருண் நந்தாவுக்குப் போட, நந்தா கயல்விழிக்கு போட்டான்.
கயல்விழி தன் கணவனைப் பிடிக்கத் துரத்த….நந்தா கடலை நோக்கி ஓடினான். கயல்விழி புடவை கட்டி இருந்ததால் மெதுவாகத்தான் ஓட முடிந்தது.
இருவரும் ஆள் நடமாட்டாம் இல்லாத இடத்திற்கு வந்திருந்தனர். கயல் திரும்பி பார்க்க… அவர்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்து வெகு தூரம் வந்திருந்தாள்.
“உங்க அண்ணன் பொண்டாட்டியை தனியா தள்ளிட்டு போயிட்டான். இப்போதைக்கு வர மாட்டான். வாங்க நாம அப்படியே நடந்திட்டு வருவோம்.” என வருண் மற்ற இருவரோடு வேறுபக்கம் சென்றான்.
“என்னங்க எனக்குப் பயமா இருக்கு நில்லுங்க.” கயல் சத்தமாகக் குரல் கொடுக்க… நந்தா கடலுக்கு வெகு அருகில் சென்றிருந்தவன், அங்கேயே உட்கார்ந்தான். கயல் தன் கணவனிடம் சென்றாள்.
“ஏன் இங்க வந்தீங்க?”
“நீ இன்னும் கடலை பார்க்கலையே.”
“இந்த இருட்டில என்ன தெரியும். எனக்கு அந்தப் பக்கம் பார்க்கவே பயமாயிருக்கு.” என்றவள், திரும்பி தன் கணவனைப் பார்த்தபடி உட்கார்ந்தாள்.
“எதுக்கெடுத்தாலும் பயமா இருக்குன்னு சொல்றதை முதல்ல விடு கயல்.”
“நீ பார்க்க பயப்படுற இந்தக் கடலுக்குள்ள, இப்ப கூட ஆயிரகணக்கானவங்க இருக்காங்க தெரியுமா?”
“திரும்பி பாரு.” என அவன் காட்டிய திசையில் பார்த்தவளின் முகம் மலர்ந்தது.
தூரத்தில் வெளிச்சங்கள் முதலில் சிறு சிறு புள்ளிகளாகத் தெரிந்து. பிறகு சர விளக்கு போல் தெரிந்தது. அவை பெரிய கப்பலில் இருந்து தெரிந்த வெளிச்சங்கள்.
உற்று பார்க்க பார்க்க… அவள் பார்வைக்கு இன்னும் நிறையக் கப்பல்கள் தட்டுபட்டது.
“பார்த்தியா அந்தப் பக்கமும் மனுஷங்கதான் இருக்காங்க. இப்ப பயமா இருக்கா?” நந்தா கேட்க… இல்லையென்று தலையசைத்த கயல்விழி, இன்னும் ஆர்வமாகக் கடலைத்தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
நந்தா சிறிது நேரம் அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தவன், “கிளம்புவோமா… ரொம்ப நேரம் ஆகிடுச்சு.” என்றதும், கயல்விழி எழுந்துகொள்ள, இருவரும் திரும்பி நடந்தனர்.
அப்போது லுங்கி கட்டிய ஆள் இவர்களை நோக்கி வர…. கயல்விழி பயந்து போய் நந்தாவின் கையை இறுக பிடித்தாள். ஆனால் அவனோ எதிரில் வந்தவனைப் பார்த்துப் புன்னகைத்தான்.
“எப்ப அண்ணா வந்தீங்க?” என அவன் கேட்க… கயல்விழி இருவரையும் ஆச்சர்யமாகப் பார்த்தாள்.
“இன்னைக்குதான் வந்தேன். இவங்க என்னோட மனைவி.”
“உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சா? சொல்லவே இல்லை.” என்றவன், கயல்விழியைப் பார்த்து “வணக்கம் அண்ணி.” என்றான்.
கயல்விழி பதிலுக்கு வணக்கம் எனக் கரம் குவிக்க… அவன் அவளை ஆச்சர்யமாகப் பார்த்தான்.
“அண்ணி ஊர்ப்பக்கமா அண்ணா.”
“ஏன் கேட்கிற?”
“சிட்டி பொண்ணுங்க எல்லாம் எங்களை மாதிரி ஆளுங்களை மதிக்க மாட்டாங்களே, அதுதான் கேட்டேன்.”
அவன் சொன்னதைக் கேட்டு சிரித்த நந்தா, “நானும் மெட்ராஸ் பையன்தான் டா.” என்றவன், கயல்விழியிடம் திரும்பி, “இவன் ஸ்டீபன், இங்க இருக்கக் குப்பத்தைச் சேர்ந்தவன். நான் படிக்கும் போது, தினமும் காலையில இங்க வந்துதான் உடற்பயிற்சி பண்ணுவேன். அப்ப பழக்கம்.” என்றான்.
“எப்ப அண்ணா கடலுக்குப் போகலாம். இந்தமுறை அண்ணியையும் கூடிட்டு போகலாமா?”
“இந்த முறை இல்லை டா. அடுத்த முறை வரும்போது தகவல் சொல்றேன். சரி நாங்க கிளம்புறோம். இந்தப் பணத்தை வச்சுக்கோ. நம்ம பசங்களுக்கு எங்க கல்யாண ட்ரீட்ன்னு சொல்லிடு.”
“சரிண்ணா…” எனப் பணத்தை வாங்கிக்கொண்டு சந்தோஷமாக விடைகொடுத்தான்.
அவனை விட்டு தள்ளி வந்ததும், “எப்பவும் உருவத்தை வச்சு நல்லவங்களா கெட்டவங்களான்னு முடிவு பண்ணாத. இது சிட்டி, இங்க அழுக்கா இருக்கிறவங்க எல்லாம் கெட்டவங்களும் இல்லை. அழகா உடை அணிஞ்சு இருக்கிறவங்க எல்லாம் நல்லவங்களும் இல்லை.… புரியுதா.”
“சாரி, திடிர்ன்னு பார்த்ததும் பயந்துட்டேன்.”
“ஓகே, ஆனா யாரு என்ன சொன்னாலும், உனக்கு நல்லாத் தெரியாம நம்பிடாத.”
“வருண் அண்ணா தானே சொன்னாங்க.”
“அவன் உன்னோட விளையாடுறான். ஆனா வெளி ஆளுங்ககிட்ட கவனமா இருக்கணும்.”
“அவங்க சொல்றது பொய்ன்னு எப்படித் தெரியும்?” கயல்விழி கேட்க…அவள் வெகுளித்தனத்தைப் பார்த்து நந்தா புன்னகைத்தான்.
“அவங்க சொல்றது உண்மைன்னு உனக்குத் தெளிவாகிற வரை கேள்வி கேளு. ரெண்டு கேள்வி அதிகமா கேட்கிறதுனால யாருக்கு என்ன கஷ்ட்டம் சொல்லு.”
“ம்ம்... சரி.”
“அதோட நாட்டில என்ன நடக்குதுன்னு தெரிஞ்சு வச்சுக்கோ. பேப்பர் படி, டிவியில் நியூஸ் பாரு. இதுவரை வீட்டு பறவையா இருந்துட்ட… இனி வெளி உலகத்தையும் தெரிஞ்சிக்கணும்.”
“நான் எப்பவும் உன்னோட இருக்க முடியாது கயல். அதுவும் இப்ப கொஞ்ச நாளைக்குக் கண்டிப்பா முடியாது. நான் இன்னும் ரெண்டு நாள்ல கிளம்பிடுவேன். அப்புறம் நீதான் உன்னைப் பார்த்துக்கணும்.”
“நீ இங்க இருந்துப்பியா?” எனக் கேட்ட நந்தாவின் குரலில், அத்தனை கவலை தெரிந்தது.
உடன் அவனது கவலையைப் போக்க வேண்டும் என்ற எண்ணம் கயலுக்குத் தோன்ற. “அதுதான் அத்தை, வருண் அண்ணா, தாரணி அண்ணி, பரணி எல்லாம் இருக்காங்களே. என்னைப்பத்தி கவலைப்படாம போயிட்டு வாங்க. நான் இருந்துப்பேன்.” என அவள் நம்பிக்கையாகச் சொல்ல.. நந்தாவின் முகமும் மலர்ந்தது.
காரில் திரும்பி செல்லும்போது வழியிலேயே வருணும், தாரணியும் அவர்கள் வீட்டில இறங்கிக் கொள்ள… “அம்மாகிட்ட நாளைக்கு வீட்டுக்கு வரோம்ன்னு சொல்லு டா.” என்றான் நந்தா.
“கயல், நாளைக்குக் கண்டிப்பா வரணும் என்ன? ஆனா உங்க வீட்லயே சாப்டிட்டு வந்திடுங்க. இங்க உங்க தாரணி அண்ணி சமையல்தான். அப்புறம் எதாவது எக்குத்தப்பாக நடந்தா நான் பொறுப்பு இல்லை.” வருண் சொல்ல… கயல்விழியால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“சரிண்ணா…” என அவள் தலையாட்ட…. “உள்ள வாங்க உங்களுக்கு வச்சுகிறேன்.” என்றாள் தாரணி கடுப்பாக.
“உனக்கு அடிவாங்காம தூங்க முடியாதே. போ, போய் நல்லா வாங்கு.” என்ற நந்தா, பரணியைக் காரை எடுக்கச் சொன்னான்.
வீட்டிற்கு வந்தவர்களைப் பார்த்து குழலி, “என்ன சிற்பம் எல்லாம் பார்த்தாச்சா?” எனப் புன்னகையோடு கேட்க,
“போங்க அத்தை. அங்க சிற்பம் எல்லாம் கிடையாது.” எனக் கயல் வெட்கப்பட…
“சரி பால் குடிச்சிட்டு தூங்குங்க.” என்றதும், கயல் அவளே சென்று எல்லோருக்கும் பால் கொண்டு வந்தாள்.
அவள் குழலிக்கும், பரணிக்கும் கொடுத்துவிட்டு திரும்ப, அதற்குள் நந்தா அங்கு இல்லை. அவன் மாடி ஏறி சென்று கொண்டிருந்தான்.
“என்னங்க பால்,” என் அவள் சொல்வது காதில் விழாதது போல், அவன் அறைக்குச் சென்று விட…. கயல்விழியும் அவன் பின்னே சென்றாள்.
“இந்தாங்க பால்.” அவன் எடுத்ததும், கயல்விழி வெளியே செல்ல திரும்ப,
“இப்ப எங்கப் போற? இங்கயே இரு.” என்றான் நந்தா.
அவனோடு தனியறையில் இருப்பது தயக்கமாக இருந்த போதிலும், சரி என்பதாகத் தலையை உருட்டினாள்.
இருவரும் பால் குடித்ததும், அவள் தம்ளர்களைக் கீழே வைக்கச் செல்ல… “கொடு நான் போய் வச்சிட்டு வரேன்.” என்று கீழே சென்றவன், திரும்பி வரும் போது, அவளது பெட்டியையும் கொண்டு வந்தான்.
“டிரஸ் மாத்திக்கோ.” என அவன் சொல்ல…. மாற்று உடைகளை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் சென்றாள்.
நைட்டி அணிந்து கொண்டு வருவாள் என்று பார்த்தால், பாவாடை சட்டை அணிந்து கொண்டு வந்தாள். மேலே ஒரு தாவணியை வேறு போர்த்திக்கொண்டு வந்தாள்.
நைட்டியை விட இதுதான் ஒரு மார்க்கமாக இருப்பதாக அவனுக்குத் தோன்றியது.
“சட்டைதான போட்டிருக்க, அதற்கு மேல ஏன் ஷால் போட்டிருக்க.” அவன் சந்தேகம் கேட்க,
“மேலாக்கு போடாம இருக்கக் கூடாதுன்னு எங்க அம்மா சொல்வாங்க.” என்றாள்.
“ஓ… சரி படுத்துக்கோ.” என்றவன், அவளுக்குப் படுக்கையைக் காட்டினான்.
படுக்கச் சென்றவள், நினைவு வந்து, உமா கொடுத்த மாத்திரையை எடுத்து போட்டுக் கொண்டாள்.
“என்ன மாத்திரை அது?”
“உமா அக்கா கொடுத்தாங்க. போட்டா தூக்கம் நல்லா வருமாம். கனவே வராதாம்.” என்றாள்.
நந்தாவுக்குத் தெரியும். அவன் உமாவிடம் மாலை பேசி இருந்தான். ஆனால் வேண்டுமென்றேதான் கேட்டான்.
அந்த அறையில் கட்டில் இல்லை. மெத்தை மட்டும் தான். ஆனால் மெத்தை பெரிதாக இருந்தது. கயல்விழி சுவரின் ஓரமாக ஒட்டி படுத்துக் கொண்டாள்.
“பார்த்து, சுவத்தைப் பேத்திட்டு அந்தப் பக்கம் போயிட போற.” நந்தா சொல்ல…கயல்விழிக்கு அவன் கேலி செய்கிறான் என்ற அளவு புரிந்தது.
டேப்ரெக்கார்டில் இளையராஜா பாடலை மெலிதாக ஒலிக்க விட்டவன், அவளின் அருகே சற்று இடைவெளி விட்டு படுத்துக் கொண்டான்.
“உனக்குப் பாட்டு தொந்தரவா இருக்கா?”
“இல்லை.”
“எனக்கு இப்படிப் பாட்டு கேட்டுட்டே தூங்க ரொம்பப் பிடிக்கும்.”
“ம்ம்…”
“பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று.
நீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று.
தீர்த்தக்கரை ஓரத்திலே.
தேன்சிட்டுகள் உள்ளத்திலே
கல்யாண வைபோகம்தான்.”
அந்தப் பாட்டு முடிந்து அடுத்தப் பாட்டு ஆரம்பிக்கும்போது பார்த்தால், அதற்குள் கயல்விழி உறங்கி இருந்தாள்.
நேற்று பயணம் செய்தது, இன்று அலைந்தது எல்லாம் சேர்ந்து அசதியில் உறங்கினாள். அதையும் விட உமா பேசியதும் ஒரு காரணம்.
நந்தா விலகி இருந்த தாவணியை அவளுக்கு ஒழுங்காகப் போர்த்தி விட்டான். தான் அவளை நெருங்கினால், அவள் மறுக்க மாட்டாள் என்று தெரியும். ஆனால் அப்படிச் சேரும்போது, அவள் மனதில் எந்தக் குழப்பமும் இல்லாமல், தான் மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைத்தான்.
அவள் என்னவோ தூங்கி விட்டாள். நந்தாதான் உறங்குவதும், நடுவில் விழித்து அவளைப் பார்ப்பதுமாக இருந்தான். நள்ளிரவுக்கு மேல்தான், இனி எழுந்துகொள்ள மாட்டாள் என நிம்மதியாக உறங்கினான்.
error: Content is protected !!