Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

புது வெள்ளை மழை

புது வெள்ளை மழை 18 1

புது வெள்ளை மழை

அத்தியாயம் – 18 


கல்லூரியில் சேர்ந்து நான்கு மாதங்கள் சென்று இருந்தது. அன்று வெள்ளிக்கிழமை என்பதால்… கயல்விழி தலைக்குக் குளித்து, கூந்தலை தளர்வாகப் பின்னி பூ வைத்து இருந்தாள். வெள்ளிக்கிழமை மட்டும் எப்போதும் புடவையில் தான் கல்லூரிக்கு வருவாள். 



Advertisement


“உன்னைப் பார்த்தா கல்யாணம் ஆன பொண்ணுன்னு நம்பவே முடியலை கயல். முதல்தடவை நீ புடவையில வந்தபோதுதான், வகுட்டில் குங்குமம் வச்சிருந்த
. அப்போதான் நீ கல்யாணம் ஆன பொண்ணுன்னு தெரியும்.” 


“கல்யாணம் பண்ணிக்கிட்டு உன் வீட்டுக்காரரை விட்டு இருக்கக் கஷ்ட்டமா இல்லையா?” 


இதுவரை இந்தக் கேள்வியைச் சமீரா ஒரு பத்து தடவையாவது கயல்விழியிடம் கேட்டு இருப்பாள். 

Advertisement


இதற்கு என்ன பதில் சொல்வது? கயல் தன்னுடைய கடந்தகாலத்தைப் பற்றிச் சமீராவிடம் இன்னமும் சொல்லவில்லை. மறைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால் ஏனோ தயக்கமாக இருந்தது. சமீரா தன்னைப் பற்றித் தவறாக நினைத்துவிடுவாளோ என்று அச்சமாக இருந்தது. 

Advertisement


கயல்விழி மெளனமாக இருக்கச் சமீராவே தொடர்ந்தாள். “எங்களோடதுல கூட நிறையப் பேர் வெளிநாட்டில வேலை பார்க்கிறாங்க. அவங்க கல்யாணத்துக்குப் பிறகு பொண்டாட்டியை இங்கயே விட்டுட்டு, அவங்க மட்டும் திரும்ப வெளிநாடு போயிடுவாங்க. வருஷத்துக்கு ஒரு தடவையோ ரெண்டு தடவையோதான் வருவாங்க.” 


“அந்தப் பொண்ணுங்க கல்யாணத்துக்குப் பிறகும் புருஷனோட இருக்க முடியாது. பிள்ளைகளை வளர்த்திட்டு மாமியார் மாமனாரோட தான் இருக்கணும்.” 


“இதுக்கு எதுக்குக் கல்யாணம் பண்ணிக்கணும் சொல்லு?” 

Advertisement

“நான் என் வீட்ல சொல்லிட்டேன். வசதி குறைவா இருந்தாலும் பரவாயில்லை. எனக்கு இங்க இருக்கிற மாப்பிள்ளையே பாருங்கன்னு.” 


சமீரா படபடப் பட்டாசாகப் பொரிய… கயல்விழி சிரித்து விட்டாள். 


“கவலைப்படாதே சமீரா, அப்படியே வெளிநாட்டு மாப்பிள்ளையா இருந்தாலும், உன்னையும் கூடக் கூடிட்டு போயிடுவார்.” 

“இந்தக் கதையே வேண்டாம் பா…. அப்புறம் எதாவது சாக்கு சொல்லி விட்டுட்டு போயிட்டா?” 


“நீ விவரம் தான்.” என்ற கயல், சமீராவின் பர்தாவை எடுத்து போட்டு பார்த்தாள். சமீரா கல்லூரிக்குள் வந்ததும், பர்தாவை கழட்டி பைக்குள் வைத்துக் கொள்வாள். மீண்டும் வெளியில் செல்லும் போதுதான் அணிவாள். 

“எனக்கு ரொம்ப நாளா இதைப் போட்டுக்கனும்னு ஆசை.” என்ற கயல்விழி அங்கிருந்த கண்ணாடி ஜன்னலில் தன்னைப் பார்க்க…. சமீரா அவள் நெற்றியில் இருந்த பொட்டை எடுத்து தன் நெற்றியில் வைத்துக் கொண்டாள். 


“ஏய் உன் சாமி கண்ணைக் குத்த போகுது.” 


“ஏன் உன் சாமி மட்டும் குத்தாதா?” 


இல்லை என்பதாகக் கயல்விழி தலையசைக்க… “அப்படித்தான் எங்க சாமியும்.” 

“பொட்டு வச்சதும் நீ ரொம்ப அழகா இருக்க.” என்ற கயல் சமீராவின் கண்ணம் வழித்துத் திர்ஷ்ட்டி கழித்தாள். 


அது அந்த வயதுக்கே உரிய ஆசை. அவர்கள் இருவர் மட்டுமே வகுப்பு அறையில் இருந்தனர். கயல்விழிக்காகச் சமீராவும் கல்லூரி முடிந்ததும், நிதானமாகத்தான் கிளம்புவாள். 


“காலேஜ் முடிஞ்சு இவ்வளவு நேரம் ஆகுது. நீங்க ரெண்டு பேரும் இங்க என்ன பண்றீங்க?” என்ற குரல் கேட்டு, இருவருக்கும் தூக்கி வாரிப்போட, பயத்தோடு இருவரும் திரும்பி பார்த்தனர்.  அங்கே நந்தா கைகட்டியபடி கதவில் சாய்ந்து நின்று இவர்களையே பார்த்துக் கொண்டு இருந்தான். 


காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் மெட்ராசில் நடந்தது. அதற்காக அவன் மெட்ராஸ் வந்திருந்தான். ஆனால் அவன் வருவது பற்றி வீட்டில் ஒன்றும் சொல்லவில்லை. 


காலை ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி, நேராக அவனுக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த ஹோட்டல் அறைக்குச் சென்று குளித்துத் தயாராகிக் கூட்டதிற்குச் சென்றுவிட்டான். 


காலை ஒன்பது மணிக்கு ஆரம்பித்த கூட்டம், ஒரு மணிக்குத்தான் முடிந்தது. அங்கேயே அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்து இருந்தார்கள். 


கயல்விழியைப் பார்க்க போகும் ஆவலில், நந்தா சாப்பிட்டேன் என்று பெயருக்கு கொரிப்பதை கவனித்துக் கொண்டிருந்த கமிஷனர், “உங்க மனைவி இங்கதான் இருக்காங்க இல்லையா நந்தா. நீங்க வேணா கிளம்புங்க.” என்றதும், அதற்காகவே காத்திருந்தது போல், அவன் உடனே கிளம்பிவிட்டான். 


அவளை எப்படியாவது கல்லூரி விடும் நேரத்தில் சென்று பிடித்து விட வேண்டும் என்றே வேகமாக வந்தான். அவன் வந்தபோது சரியாகக் கல்லூரி விட்டு அனைவரும் வெளியே வர…. கயல்விழி வருவதற்காகக் காத்திருந்தவனுக்கு ஏமாற்றமே கிடைத்தது. 

“ஒருவேளை முன்பே சென்றிருப்பாளோ?” என நினைத்தவன், எதற்கும் உள்ளே சென்று பார்த்துவிடலாம் என உள்ளே சென்றான். 


அவனின் காக்கி உடையைப் பார்த்து வாயிற்காவலர் அவனை எதுவும் கேட்கவில்லை. இருந்தாலும் நந்தாவே அவரிடம் விவரம் சொல்லிவிட்டு உள்ளே சென்றான். 

வழியெல்லாம் கயல் எங்காவது தென்படுகிறாளா எனப் பார்த்துக்கொண்டே வந்தவன், கடைசியில் அவள் இன்னும் வகுப்பு அறையிலேயே இருப்பதைப் பார்த்தான். 

சமீராவுக்கு அவன்தான் நந்தா என்று தெரியவில்லை. அவள் யாரோ என்று நினைத்து பயந்து போய்க் கயலிடம் இருந்த தன் பர்தாவை இழுத்தாள். 


அதைக் கவனித்த நந்தா, “நான் வெளியில இருக்கேன். சீக்கிரம் வா.” எனக் கயலிடம் சொல்லிவிட்டுச் சென்றான். 


சமீராவுக்கு அப்போதுதான் அவன் யாரென்று புரிந்தது. அவள் கயல்விழியைப் பார்க்க.. திடிரென்று நந்தாவை பார்த்தது அவளுக்கும் அதிர்ச்சிதான். ஆனால் அவள் முகத்தில் பயம் இல்லை. லேசான வெட்கமே இருந்தது. 


சமீரா தன்னுடைய பர்தாவை அணிந்துகொள்ள…. கயல் அவளிடம் இருந்த தன் பொட்டை எடுத்து வைத்துக் கொண்டாள். இருவரும் வகுப்பு அறையை விட்டு வெளியே சென்றனர். 


“இவர்தான் உன் அவரா?” 


“ம்ம்.
..” 


“இப்படியா திடிர்ன்னு வந்து நிற்பார்
. அதுவும் யுனிபார்ம்ல. போலிசை பார்த்ததும், ஒரு நிமிஷம் எனக்கு மூச்சே நின்னுடுச்சு.” சமீரா சொன்னதைக் கேட்டு கயல்விழி சிரித்தாள். 

“சிரிக்காத கொன்னுடுவேன்.” பேசியபடி அவர்கள் இருவரும் நந்தா இருந்த இடத்திற்கு வந்திருந்தனர். 

“இவதான் என்னோட ப்ரண்ட் சமீரா.” கயல் அறிமுகம் செய்ய…சமீரா முகம் இன்னும் தெளியவில்லை. அவளைப் பார்த்த நந்தாவுக்கு அவளின் நிலை புரிந்தது. 


“சாரி மா, நான் அப்படித் திடிர்ன்னு வந்திருக்கக் கூடாது.” என்றான். 


“பரவாயில்லை அண்ணா நான் கிளம்புறேன்.” எனச் சமீரா விடைபெற… 


“இருடி நானும் வரேன்.” எனக் கயல் சொன்னது கேட்க… அவள் அங்கு இருந்தால் தானே… சிட்டாகப் பறந்து விட்டாள். 

“எல்லாம் உங்களால தான்.” 


“உன்னாலதான். காலேஜ் முடிஞ்சா ஒழுங்கா வீட்டுக்கு போகாம, ரெண்டு பேரும் என்ன பண்ணிட்டு இருந்தீங்க?” 


“அது சும்மா விளையாட்டுக்கு. நான் வீட்டுக்குச் சீக்கிரம் போய் என்ன பண்றது? தனியாத்தானே இருக்கணும். அதுதான் நாங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசிட்டு கிளம்புவோம்.” என்றவள், அப்போதுதான் நினைவு வந்தவளாக, “ஆமாம் நீங்க இன்னைக்கு வரேன்னு சொல்லவே இல்லையே?” என ஆச்சர்யமாகக் கேட்க… 


“இப்பவாவது கேட்கணும்ன்னு தோனுச்சே.” என்ற நந்தா தான் வந்த விவரம் சொன்னான். 


இருவரும் வெளியே வந்து, அங்கிருந்த காரில் ஏறினர். நந்தா வண்டியை அவன் தங்கி இருந்த ஹோட்டலுக்கு விடச் சொன்னான். 


“என்னோட லக்கேஜ் அங்க இருக்கு எடுத்திட்டு போயிடலாம்.” என்றவன், ஹோட்டல் வந்ததும், “கொஞ்ச நேரத்தில வந்திடுறோம்.” என டிரைவரிடம் சொல்லிவிட்டு, கயலை அழைத்துக் கொண்டு சென்றான். 


அறை மிகவும் வசதியாக இருந்தது. நந்தா உடை மாற்ற, கயல்விழி, அங்கிருந்த குளிர்சாதனப் பெட்டியை திறந்து ஆராய்ந்து கொண்டு இருந்தாள். 

“என்ன பார்க்கிற?” 


“ஜில் தண்ணி இருக்கான்னு பார்க்கிறேன்.” 


அவள் சொன்னதைக் கேட்டு புன்னகைத்தவன், ஹோட்டல் உணவறைக்குத் தொடர்பு கொண்டு, “இரண்டு ஃபலூடா கொண்டு வர சொன்னான்.” 


அறையில் இருந்த தொலைபேசியில் அவன் அலுவலகத்திற்குத் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டிருக்கும்போது, கயல்விழி அவனின் உடைகளை மடித்து வைத்தாள். 

அப்போது ஐஸ்கிரீம் வந்துவிட… அவளைச் சாப்பிடும்படி ஜாடை செய்தான்.
அவள் இரண்டு வாய் சாப்பிட்டு விட்டு மேஜையில் வைக்க… அதற்குள் நந்தாவும் வந்துவிட்டான்.

அவள் அருகில் உட்கார்ந்தவன், தானும் ஒன்றை எடுக்க, “ஐயோ” எனக் கயல் அலற… நந்தா திடுக்கிட்டுப் போனான். 


“அது நான் சாப்பிட்டது.” என அவள் சொல்ல… அவளைப் பார்த்து முறைத்தவன், “இதுக்குத்தான் இந்தக் கத்து கத்துனியா? ஏன் உன்னோடது நான் சாப்பிட கூடாதா?” என்றவன், அவளுடயதைத்தான் சாப்பிட்டான். 


அவனையே பார்த்தவள், பிறகு அங்கிருந்த இன்னொன்றை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள். 

“அப்புறம் எப்படி இருக்க?” 


“நல்லா இருக்கேன்.” 

“எனக்காகச் சொல்றியா? இல்லை உண்மையாவே சொல்றியா?” நந்தா கயலின் முகத்தையே பார்க்க…. 


“உண்மையாதான் சொல்றேன்.” என்றாள். 


அது உண்மையும் கூடத்தான். அவளுக்கு இங்கே ஒரு பிரச்சனையும் இல்லை. அதுவும் சமீராவின் நட்பு கிடைத்ததும், இன்னும் மகிழ்ச்சியாகவே இருக்கிறாள். தாரணிதான் சிறு சிறு பிரச்சனைகள் செய்வாள். அதைக் கயல் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டாள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!