Skip to content
Post Views: 6,480
ஒருமுறை உமா வந்து கயல்விழியை அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள். இருவரும் பீச்சில் காலாற சிறிது நேரம் நடந்துவிட்டு வந்தனர்.
“எப்படி இருக்கக் கயல்?”
“நல்லா இருக்கேன் உமா அக்கா.”
“இப்ப எதுவும் கனவு வர்றது இல்லையே?”
Advertisement
“இல்லை… நீங்கத்தான் மாத்திரை கொடுத்திருக்கீங்க இல்லையா…. அதைப் போட்டதும் நல்லா துங்கிடுறேன்.”
“ஓ அப்படியா? ஆனா உனக்கு ஒன்னு தெரியுமா? நான் கொடுத்தது தூக்க மாத்திரை இல்லை. விட்டமின் மாத்திரைதான்.”
“ஏன்?” கயல் உமாவை புரியாமல் பார்க்க…
Advertisement
“நீதான் தேவையில்லாதது எல்லாம் நினைச்சு குழப்பிகிட்டு இருந்த. அதுதான் உனக்குக் கனவா வந்தது.”
Advertisement
“இந்த மாத்திரை போடு தூக்கம் வரும்ன்னு சொன்னேன். நீயும் அதை நம்பிட்ட.”
“உன்னோட பிரச்சனை என்னன்னு இப்ப புரியுதா?”
“உனக்கு உடம்புல ஒரு கோளாறும் இல்லை. நீயேதான் மனசை போட்டு குழப்பிகிட்ட. உன்னைக் கண்டதையும் நினைக்க விடக்கூடாதுன்னு தான் அப்படிப் பண்ணேன்.”
Advertisement
உமா சொன்னதைக் கேட்டு கயலுக்கு எல்லாம் புரிந்தது. “தேங்க்ஸ் கா…” என அவள் புன்னகையுடன் சொல்ல… அவளைத் தட்டிக் கொடுத்த உமா, “சும்மா இருந்தா தேவையில்லாதது எல்லாம் நினைக்க தோணும். எப்பவும் அக்டிவா இரு. எல்லாத்தையும் மறந்திட்டு நந்தாவோட சந்தோஷமா இருக்கணும்.” என்றாள்.
கயல்விழியும் உமா சொன்னதை பின்பற்ற, அவள் மனம் நன்றாகவே தெளிந்து இருந்தது. அதனால் மகிழ்ச்சியாகவும் உணர்ந்தாள்.
உமாவோடு பேசியதை கயல்விழி நந்தாவிடம் பகிர்ந்து கொண்டாள். இருவரும் ஐஸ்கிரீம் சாப்பிட்டதும், அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு வந்தனர்.
அவர்களுக்கு முன்பே வீட்டிற்கு வந்திருந்த குழலி, ‘ஏன் இன்னும் கயல் வீட்டிற்கு வரவில்லை?’ என்றுதான் நினைத்துக் கொண்டு இருந்தார்.
கயல் நந்தாவோடு வர…. மகனை பார்த்து மகிழ்ச்சியாகப் புன்னகைத்தவர், “வா நந்தா, நீ வரேன்னு சொல்லவே இல்லையே? உனக்கு முன்னாடியே தெரியுமா?” எனக் கயலை பார்த்து கேட்டார்.
“இல்லைமா அவளுக்கும் தெரியாது. இங்க ஒரு மீட்டிங் வந்தேன். அப்படியே உங்களை எல்லாம் பார்த்திட்டு போகலாம்ன்னு நினைச்சேன்.”
“ரெண்டு நாள் இருப்பியா?”
“இல்லைமா இன்னைக்கே கிளம்பனும். நைட் பத்து மணிக்கு ட்ரைன்.”
நந்தா இன்றைக்கே கிளம்பிவிடுவேன் என்றதும், கயல் முகம் காற்று போன பலூன் போலச் சுருங்கிவிட்டது. அவள் டீ போடுவது போல் உள்ளே சென்றுவிட்டாள்.
குழலி சென்று மகனுக்கு வீட்டில் இருந்த தின்பண்டங்களை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வந்தார். பிறகு அவனோடு உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார்.
கயல், அவர்கள் இருவருக்கும் டீ போட்டு கொண்டு வர…. அவளிடம் இருந்து டீயை வாங்கியவன், அவளையும் அருகில் உட்கார சொன்னான்.
“வேலை இருக்கு.” என்றவள் உள்ளே சென்றுவிட்டாள்.
வந்த அன்னைக்கே கிளம்புறதுக்கு எதுக்கு வரணும்? என மனதிற்குள் குமுறினாலும், வெளியே அமைதியாக இருப்பது போல் காட்டிக் கொண்டாள்.
பாத்திரங்களைக் கழுவ போட்டுவிட்டு, துணியை எடுத்து வந்து ஹாலில் உட்கார்ந்து மடித்து வைத்தாள். பிறகு அவள் மாடி அறைக்குச் செல்ல… சிறிது நேரம் சென்று நந்தாவும் வந்தான்.
அவள் முகம் கழுவிவிட்டு, வெளியே மாடியில் நின்று தலைவார… நந்தா அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து இருந்தான்.
“செடிக்கு எல்லாம் நல்லா தண்ணி ஊத்துற போலிருக்கு? நல்லா வளர்ந்திருக்கு.”
நந்தா சொன்னதற்குக் கயல் கஷ்ட்டப்பட்டுப் புன்னகைத்தாள்.
“என்ன ஆச்சு உனக்கு?”
அவன் கேட்டதற்கு ஒன்றும் இல்லை என அவள் தலையசைத்தாள்.
“மேடம் வாயை திறந்து பேச மாட்டீங்களோ? முனியம்மாகிட்ட இருந்து மெட்ராஸ் தமிழ் கத்துகிட்டியா இல்லையா?” என்றவன், குறும்பாகச் சிரிக்க…கயல்விழிக்கு கூடச் சிரிப்பு வந்துவிடும் போல் இருந்தது.
“நந்தா, உன் தங்கை வந்திருக்கா?” எனக் கீழே இருந்து குழலி குரல் கொடுக்க…. அவன் உடனே செல்ல… கயல் தலைவாரிக்கொண்டு சென்றாள்.
வருணும் வந்திருந்தான். எல்லோருமாக ஹாலில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
“ஏன் டா இன்னைக்கே கிளம்புற? ஒரு ரெண்டு நாளாவது லீவ் போட்டுட்டு வந்திருக்கலாம் இல்லையா?”
“இல்லை வருண். இப்ப லீவ் எடுக்க முடியாது. மீட்டிங் அதுதான் வந்தேன். அடுத்தத் தடவை வரும்போது கண்டிப்பா ரெண்டு நாளாவது இருக்கிற மாதிரி வரேன்.”
“ஏன் அண்ணா, நீங்க வர்றேன்னு முன்னாடியே சொல்லலை? இப்ப மட்டும் அம்மா போன் பண்ணலைனா, நீங்க வந்திருக்கிறதே தெரியாது.”
“எனக்கு எப்ப மீட்டிங் முடியும்னு தெரியாது தாரணி. சில நேரம் சாயங்காலம் கூட ஆகிடும். வந்து தலையைக் காட்டிட்டு போறதுக்கு எதுக்குச் சொல்லணும். அதுதான் சொல்லலை”
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே பரணியும் வந்துவிட… அண்ணனை பார்த்து ஆனந்த அதிர்ச்சி அடைந்தவன், அவனும் அதே கேள்வியைக் கேட்டான்.
குழலி எழுந்து சமைக்கச் செல்ல…. கயல்விழியும் அவரோடு சென்றாள். அவர் சப்பாத்தியும் முட்டை குருமாவும் செய்ய… கயல் அவருக்கு உதவினாள்.
கயலோடு நேரம் செலவழிக்க முடியவில்லையே என நந்தாவுக்கு இருக்க… அவன் எழுந்து சமையல் அறைக்குச் சென்றான்.
கயல் சப்பாத்தி போடுவதிலேயே தீவிரமாக இருப்பது போல் காட்டிக்கொள்ள…. நந்தா குழலியோடு பேசிக்கொண்டு இருந்தான்.
இரவு உணவு எல்லோரும் சாப்பிடும் போது, கயல்தான் பரிமாறினாள்.
“நீயும் சாப்பிடேன் கயல்.?” நந்தா சொல்ல, “நான் அப்புறம் சாப்பிடுறேன்.” என்றாள்.
நந்தாவுக்கு நன்றாகவே புரிந்தது. கயல் இயல்பாகவே இல்லை. சாப்பிட்டதும் மாடிக்கு சென்றவன், அங்கிருந்து அவளை அழைத்தான்.
கயல் அறைக்குள் வந்ததும், கதவை சாற்றியவன், அவளோடு அங்கிருந்த மெத்தையில் அமர்ந்தான்.
“என்ன ஆச்சு கயல்?”
கயல் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க… “நீ இப்படி இருந்தா நான் எப்படி ஊருக்குக் கிளம்புறது சொல்லு.” என்றான்.
“நான் நல்லாத்தான் இருக்கேன்.” என்றாள் பட்டும் படாமல்.
ஏற்கனவே அவளை விட்டு பிரிந்து செல்லும் கடுப்பில் அவன் இருக்க… இதில் கயல் வேறு இன்னும் அவனை வெறுப்பேற்றிக் கொண்டு இருந்தாள்.
“உன்னைப் பார்க்கிறதுக்காகவே மீட்டிங் முடிஞ்சு, அவசரமா ஓடி வந்தேன். நீ இப்படி மூஞ்சியைத் தூக்கி வச்சிட்டு இருந்தா… எனக்கு ஏன் வந்தோம்ன்னு இருக்கு.” என்றவன், அங்கிருந்து எழுந்துகொள்ள..
எங்கே சென்று விடுவானோ என்ற அச்சத்தில், கயல் சட்டென்று அவன் கையைப் பிடிக்க… மீண்டும் அவள் அருகில் உட்கார்ந்தவன், அவளைத் தன் தோளோடு சேர்த்து அனைத்துக் கொண்டான்.
இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. வார்த்தைகள் தராத ஆறுதலை… இருவரின் ஸ்பரிசமும் உணர்த்தியது.
அவள் வாயைத்திறந்து சொல்லவில்லை என்றாலும், தன்னுடைய பிரிவு அவளைப் பாதிக்கிறது என்பதை நந்தா உணர்ந்தே இருந்தான்.
அவன் கிளம்பியபோது, அதற்குள் கயல்விழி சமாளித்துக் கொண்டாள். அவனைப் புன்னகை முகமாகவே வழி அனுப்பினாள்.
அன்று இரவு அவள் சாப்பிடவே இல்லை. தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு கண்ணீர் சிந்தினாள்.
மறுநாள் கயலை பார்த்த சமீரா, “நீ இன்னைக்குக் காலேஜ் வரமாட்டேன்னு நினைச்சேன். ஆனா வந்துட்ட. அண்ணா உன்னைக் காலேஜ் போகச் சொல்லிட்டங்களா?” எனக் கேட்டாள்.
“அவங்களைப் பத்தி நீ என்கிட்டே பேசாத. அவங்க நேத்து நைட்டே ஊருக்கு போயிட்டாங்க.” எனக் கடுப்பாகப் பதில் சொன்ன கயல் மேலும் தொடர்ந்தாள்.
“சும்மா வந்து தலையைக் காட்டிட்டு போறதுக்கு எதுக்கு வரணும்?”
“அவங்க முகத்தைக் கூட நான் நல்லா பார்க்கலை… அதுக்குள்ள கிளம்பிட்டாங்க.”
கயலின் முகம் சிவந்து, கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது. அவளைப் பார்க்கவே சமீராவுக்குக் கஷ்ட்டமாக இருந்தது.
“என்கிட்டே கத்தி என்ன ப்ரோஜனம்? அண்ணாகிட்ட சொன்னியா?”
சமீரா கேட்டதற்குக் கயல் இல்லை என்று தலையசைக்க.. ஏன் என்பது போல் சமீரா பார்த்தாள்.
அவனிடம் ஏன் தன்னால் உரிமை எடுத்து பேசமுடியவில்லை எனக் கயல் தன்னையே கேள்வி கேட்டுக்கொள்ள….. தங்கள் திருமணம் எந்தச் சூழ்நிலையில் நடந்தது என்பது அவள் நினைவுக்கு வர…. அவனிடம் உரிமை பாராட்ட… தனக்கு எந்தத் தகுதியும் இல்லை என்று நினைத்தாள்.
இதுவரை கூட்டுப்புழுவாக இருந்தவள், இப்போதுதான் வண்ணத்துபூச்சியாக மாறினாள். அதற்குள் மீண்டும் புழுவாகவே ஒடுங்கிவிட்டாள்.
“நல்லாத்தானே இருந்தா… ஏன் இப்ப ஒருமாதிரி இருக்கா?” எனச் சமீராவுக்கு ஒன்றுமே புரியவில்லை.
கயல்விழி அப்படித்தான். நந்தாவோடு இருக்கும் போதோ, பேசும் போதோ வண்ணத்துப்பூச்சியாகச் சிறகடிக்கும் மனம், அதே தனிமையில் இருக்கும் போது, பழையதை நினைத்து மீண்டும் கூட்டுபுழுவாக மாறிவிடும்.
ஏற்கனவே கயல்விழி குற்ற உணர்வில் இருக்க…. அதை மேலும் அதிகமாக்குவது போல் தாரணி நடந்து கொண்டாள்.
error: Content is protected !!