Skip to content
Post Views: 5,739
புது வெள்ளை மழை
அத்தியாயம் – 21
Advertisement
கயல்விழிக்கு கல்லூரி வீடு என்று பொழுது நன்றாகவே சென்றது. வீடு பராமரிப்பும் அவள் பாடத்தின் ஒரு பகுதி என்பதால்… வீட்டை இன்னும் எப்படி அழகுபடுத்துவது என்பதும் அவளுக்குக் கற்றுக்கொடுக்கபட்டது.
அதிலும் ஏற்கனவே அவளுக்கு அதில் ஆர்வம் அதிகம். அதனால் இன்னும் ஈடுபாட்டோடு கற்றுக் கொண்டாள்.
கற்றுக்கொண்ட விஷயங்களை அவள் வீட்டில் காட்ட, வீடு இன்னும் அழகாக மாறியது.
Advertisement
வெள்ளைத் துணிகளில் ஓரங்களை அழகாக மடித்துத் தைத்து. வண்ண நிற நூலால் பூ வேலை செய்து, அவர்களின் அரக்கு நிற சோபா குஷனின் தலைப்பாகத்தில் வருவது போல் வடிவமைத்து இருந்தாள்.
Advertisement
அதே போல் டைனிங் டேபிள் விரிப்பு, திரைசீலைகள் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறத்தில் கண்ணைக் கவரும்படி வடிவமைத்து இருந்தாள்.
அதுதவிரப் பாட் பெயிண்டிங், க்ளாஸ் பெயிண்டிங் என்று இன்னும் ஏதேதோ கற்றுக்கொண்டதை எல்லாம் செய்து பார்த்தாள். அவள் எதுவும் செய்யாமல் இருந்து பார்க்கவே முடியாது.
“அண்ணி, கொஞ்சம் கூட ரெஸ்ட்டே எடுக்க மாட்டீங்களா?” எனப் பரணி கூட ஒருநாள் கேட்டே விட்டான்.
Advertisement
“உட்கார்ந்திட்டு தானே பண்றேன். இதுல என்ன கஷ்ட்டம்.” என்றாள் கயல் பதிலுக்கு.
வீட்டிற்கு வரும் உறவினர்கள் கூட, “நீங்க வீட்டை ரொம்ப நல்லா வச்சிருக்கீங்க.” எனப் பாராட்டி விட்டே செல்வார்கள்.
இந்த மாதிரி வேலைகள் செய்யும் போது, அவள் கவனம் முழுவதும் அதில்தான் இருக்கும். வேறு எதையும் பற்றி அவள் யோசிப்பதே இல்லை. அவளுடைய தன்னம்பிக்கையும் தைரியமும் வளர்ந்து கொண்டே இருந்தது.
தாரணியும் மாசத்திற்கு ஒருநாள்தான் இங்கு வருவாள். அதுவும் ஞாயிற்றுக்கிழமை தான் வருவாள். அன்று முழுவதும் அவள் அம்மாவோடுதான் ஓட்டிக்கொண்டே இருப்பாள்.
வெளியில் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும், கயல்விழி மேல் அவளுக்குக் கோபம் இருந்தது. அவளுக்காத்தான் வருண் தன்னை இங்கே வர விடாமல் செய்து விட்டான் என நினைத்தாள்.
அவளின் கோபத்தைக் கயலும் உணர்ந்துதான் இருந்தாள். அவளைத் தாரணி தவிர்ப்பதில் இருந்தே புரிந்து கொண்டாள். அதனால் சமையலுக்குத் தேவையான உதவிகளைச் செய்துவிட்டு, எதாவது வேலை இருப்பது போல் தனது அறைக்கு வந்துவிடுவாள்.
தாரணி வந்து அவள் அம்மாவோடு இழையும் போது எல்லாம், கயலுக்கும் தன் அம்மாவை பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கும். அவள் பலமுறை பத்மாவை இங்கே வர சொல்லி அழைத்து விட்டாள். ஆனால் பத்மா வர மறுத்து விட்டார்.
“உங்க அண்ணன் வேற ஜெயில்ல இருக்கான். எந்த முகத்தை வச்சிக்கிட்டு சம்பந்தி வீட்டுக்கு வர்றது. நீ நல்லா இருக்க இல்ல அதே போதும்.” என்றுவிட்டார்.
நந்தாவும் அதன்பிறகு இன்னும் வரவே இல்லை. “அடுத்தத் தடவை வரும்போது, நாலு நாளாவது இருக்க மாதிரி வரணும். அதுக்குத்தான் வெயிட் பண்றேன்.” என்றான். அந்த நாள் என்று வருமோ தெரியாது.
நந்தாவின் அத்தை மகள் ராதிகா படித்து முடித்துச் சென்னையில் வேலை பார்க்க வந்தாள்.
“வயசுப் பெண்ணை எனக்கு வேற எங்கையும் தங்க வைக்க இஷ்ட்டம் இல்லை அண்ணி. அதனால்தான் உங்ககிட்ட அனுப்புறேன். நீங்க நல்லா பார்த்துப்பீங்கன்னு தெரியும்.” என நாத்தனார் போன்னில் சொன்ன போது, குழலிக்குமே மகிழ்ச்சியாக இருந்தது.
நந்தா திருமணம் முடிந்ததில் இருந்து விலகி இருந்த நாத்தனார், தானே போன் செய்து பேசியதும், அவருக்கு உச்சி குளிர்ந்துவிட்டது. ராதிகாவை அவளது அப்பா வந்து விட்டுவிட்டு சென்றார்.
ராதிகா யாரையும் கேட்கவே இல்லை. தானாகாவே மாடியில் இருந்த அறையை அவளுக்காக எடுத்துக் கொண்டாள். எப்போதுமே நந்தா இல்லாத போது வந்தால், அந்த அறையில் தான் தங்குவாள்.
ராதிகா தங்கள் அறைக்குச் செல்வது பார்த்து கயலின் முகம் மாற… அதைக் கவனித்த குழலி, “நீதான் எப்படியும் அங்க தனியா தூங்க மாட்டியே. அதனால் அவளே அங்க இருந்துகட்டும்.” என்றுவிட்டார்.
கயல் வழக்கம் போல் காலை எழுந்ததும், அவளது அறைக்குச் செல்ல… அவளது பொருட்கள் அறை வாசலில் வைக்கப் பட்டிருந்தது.
நந்தா ஒருமுறை இப்படி ராதிகாவின் பொருட்களை வெளியே வைத்து இருந்தான். அந்தக் கோபம் தான் ராதிகாவை பதிலுக்கு இப்படிச் செய்யத் தூண்டியது. அவளுக்கு நந்தாவை பழிவாங்கி விட்ட திருப்தி.
கயல் அவள் பொருட்களை எடுத்து வந்து கீழே வைத்துக் கொண்டாள். அன்றிலிருந்து அவள் வைஷ்ணவியின் அறையைதான் எல்லாவற்றிற்கும் பயன்படுத்தும்படி ஆனது.
கீழே பொதுவாக ஒரு குளியல் அறைதான் இருக்கும். அதனால் காலை எழுந்ததும் முதல் ஆளாகக் கயல் குளித்துவிட்டு வந்து விடுவாள்.
இவளாவது நம்மோடு நன்றாகப் பழகுவாளா எனக் கயல் நினைத்திருக்க…. அவளுக்கு வரவேண்டிய வாழ்க்கையைக் கயல்விழி பறித்துக் கொண்டாள் என்பது ராதிகாவின் எண்ணம். அதனால் கயல்விழியை விரோதியை பார்ப்பது போலத்தான் பார்த்து வைப்பாள்.
ராதிகாவும் தாரணி போலத்தான். ஒரு வேலையும் செய்ய மாட்டாள். ஆனால் சரியான நேரத்திற்குச் சாப்பிட மட்டும் வந்து விடுவாள். ஒருவர் என்றாலும் விருந்தினர் என்றால் வேலைதானே. இதே வீட்டு ஆட்கள் என்றால்… இருப்பதை வைத்து அனுசரித்துக் கொள்ளலாம்.
குழலிக்கும் எரிச்சலாகத்தான் இருக்கும். ஆனால் நாத்தனார் பெண் என்பதால்…. வெளியே காட்டிக்கொள்ள முடியாமல் இருந்தார்.
ராதிகா வந்திருப்பதால் அந்த வார இறுதியில் தாரணி வந்து இரண்டு நாட்கள் தங்கினாள். இதற்கு முன்பு இருவருக்கும் ஆகவே ஆகாது. ஆனால் இப்போது கயலை வெறுப்பேற்ற இருவரும் சேர்ந்து கொட்டம் அடித்தனர்.
வைஷ்ணவி, பகல் நேரத்தில் அவர் அறையில் ஓய்வு எடுக்கும் போது, கயல்விழி ஹாலில்தான் இருப்பாள். இவர்கள் இருவரும் வேண்டுமேன்றே தன்னை வெறுப்பேற்ற செய்கிறார்கள் எனப் புரிந்து கொண்டவள், அவர்களைக் கண்டுகொள்ள மாட்டாள்.
நந்தா தன் மீது தனிப்பட்ட விருப்பத்தைக் காட்டா விட்டாலும், கண்டிப்பாகத் தன்னைத்தான் திருமணம் செய்து கொள்வான் என ராதிகா நம்பி இருந்தாள்.
படிப்பிலே, அழகிலே கயல்விழியை விடத் தான் தானே உயர்ந்தவள். அப்படியிருக்க, தன்னிடம் இல்லாதது, அப்படி இந்தப் பெண்ணிடம் என்ன இருக்கிறது என்று நந்தா அவளை மணந்து கொண்டான்? இதுதான் ராதிகாவுக்கு எப்போதும் தோன்றும் கேள்வி.
அந்தக் குமுறல் அவள் மனதுக்குள்ளேயே இருக்க… வேண்டுமென்றே கயலை எதாவது மட்டம் தட்டி பேசுவாள். தாரணிக்கு தான் பேசினால் தானே பிரச்சனை ஆகும். அதனால் ராதிகாவை பேச விட்டு வேடிக்கை பார்ப்பாள்.
ராதிகா எப்போது கயலை மட்டம் தட்டலாம் என்றே காத்திருப்பாள். அன்று அவளுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. பெரும்பாலும் போன் வந்தால் கயல்தான் எடுப்பாள். நந்தாவாக இருக்குமோ என ஆவலாகவே எடுப்பாள். அன்றும் வீட்டில் போன் அடிக்க… கயல்விழிதான் எடுத்தாள்.
அந்தப் பக்கம் வேறு யாரோ பேச…. ராதிகா எனப் பெயரை கேட்டதும், “ஒரு நிமிஷம்.” என்றவள், “ராதிகா அக்கா உங்களுக்குத்தான் போன்.” எனப் போன்னை மேஜையில் வைத்துவிட்டு சென்றாள்.
ராதிகா உடன் வேலை செய்யும் பெண்தான் அழைத்து இருந்தாள். சிறிது நேரம் அவளோடு ஆங்கிலத்தில் உரையாடிவிட்டு வந்தவள், “தாரணி, உன் அண்ணிக்கு இங்கிலீஷ்ல பேச கூடத் தெரியாதா? என் ப்ரண்ட் இங்கிலிஷ்ல கேட்டதுக்கு, தமிழ்ல பதில் சொல்லி இருக்கா. என் ப்ரண்ட் கேலி பண்றா. என் மானமே போச்சு.”
“நாலு வார்த்தை இங்கிலிஷ்ல பேச கூடத் தெரியலை… இவ எல்லாம் அத்தானோட எப்படித்தான் குடும்பம் நடத்தி, குப்பை கொட்ட போறாளோ? அத்தான் I.P.S படிச்சிருக்காங்க. அவங்களுக்குப் போய் இப்படி ஒரு பொண்டாட்டி.” என ராதிகா எள்ளி நகையாட.”
கிடைத்தது வாய்ப்பு என்று நினைத்த தாரணி, “அப்ப இவங்க என் அண்ணனுக்குப் பொருத்தம் இல்லைன்னு சொல்றியா? எனக்கும் அதுதான் புரியலை… இவ்வளவு படிச்ச எங்க அண்ணன், படிக்காத பெண்ணை ஏன் கல்யாணம் பண்ணாருன்னு?” எனக் கயலை ஓர விழியால் ஆராய்ந்து கொண்டே சொன்னாள்.
கயல் அப்போது துணியில் பூ வேலைதான் செய்து கொண்டு இருந்தாள். அவள் காதில் எதுவும் விழுந்தது போலவே காட்டிக்கொள்ளவில்லை.
அதைக் கண்டு ராதிகாவுக்கு ஆத்திரமாக வந்தது. அவள் தாரணியை அழைத்துக் கொண்டு அவளது அறைக்குச் சென்றாள்.
“எனக்குத் தெரியும் அத்தான் ஏன் இவளை கல்யாணம் பண்ணாங்கன்னு.”
“உனக்குத் தெரியுமா எப்படி?”
“இவளோட அண்ணியை என் அம்மா ஒரு கல்யாணத்துல பார்த்தாங்க. அவங்களே தேடி வந்து, எங்க அம்மாகிட்ட நடந்தது எல்லாம் சொன்னாங்களாம்.”
“என்ன சொன்னாங்க?”
“ஆளு பார்க்க எப்படி ஊமை மாதிரி இருக்கா. ஆனா இவ ரொம்ப மோசமான பொண்ணு.”
“என்னன்னு தான் சொல்லேன்.”
“நான் சொல்ல மாட்டேன் பா… அப்புறம் என் தலைதான் உருளும்.”
“ப்ளீஸ் ராதிகா சொல்லு… தெரியலைனா என் மண்டையே வெடிச்சிடும்.”
“சரி சொல்றேன். ஆனா உனக்குத் தெரிஞ்ச மாதிரி காட்டிக்கக் கூடாது. வேற யார்கிட்டயும் சொல்லக் கூடாது. ” என்றவள், தனக்குத் தெரிந்ததை எல்லாம் சொல்ல ஆரம்பித்தாள்.
error: Content is protected !!