Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Maiyam Kollum Puyal

Maiyam Kollum Puyal 4 3

”நீ நல்ல படிக்கணும் யுக்தா. பெரிய அளவுல நீ வரணும். உன் அப்பாவுக்கு அப்புறம் நீ தான் நம்ம தொழில்களை எல்லாம் காப்பாத்தணும். அதுக்கு உனக்கு தைரியம் வரணும்,.  இங்க என்ன போட்டி நடந்தாலும் அதுல நீ கலந்துக்கணும், நீ ஜெயிக்கிறியா தோக்குறியா எல்லாம் முக்கியமே இல்லை. நீ எல்லாத்துலயும் கலந்து கிட்டா தான் உனக்கு தைரியம் வரும். அப்புறம் ஏதாவது பசங்க பேசினா அவங்க கிட்ட பிரண்ட்லியா பேசு. அவங்க கண்ணைப் பாத்து தான் நீ பேசணும். அதுல ஏதாவது கயமை தெரிஞ்சதுன்னா அவங்க கிட்ட நீ சண்டை போட வேண்டாம். அவங்க கிட்ட இருந்து விலகிரு”

“சரி மா”



Advertisement

“பாப்பா அப்புறம்”

“அம்மா சொன்னதையே எத்தனை தடவை சொல்லுவ? நீ பயப்படாதேன்னு சொல்ல சொல்ல தான் எனக்கு பயமே வருது”, என்று சொன்னாள் யுக்தா.

Advertisement

Advertisement

“அம்மா உன்னை டென்ஷன் படுத்த சொல்லலை டா. நீ மாற மாட்டியான்னு தான் சொல்றேன். சரி நீ உள்ள போ. நான் கிளம்புறேன்”, என்று சொன்னதும் தன்னுடைய தாயிடம் சொல்லி விட்டு சென்றாள்.

போகும் மகளையே பார்த்துக் கொண்டு நின்றாள் தாமரை. சுற்றி அவள் கண்கள் ஓடியது.  வண்ண வண்ண உடைகளை அணிந்து மாணவர்களும் மாணவிகளும் புன்னகையுடன் ஆங்காங்கே கதை பேசிக் கொண்டிருந்தனர். இவர்களைப் போல தங்கள் மகள் ஏன் இல்லை என்று அவளுக்கு கவலையாக இருந்தது.

Advertisement

பிறந்ததில் இருந்து பயத்தை மட்டுமே அவளுக்கு பரிசளித்த தன்னுடைய கணவனை கண்டு எரிச்சலாக வந்தது. அவள் கண்கள் கூட கலங்கும் போல இருந்தது. மெதுவாக திரும்பி நடந்தாள்.

“உங்களுக்கு எல்லாம் வெக்கமா இல்லையா? இன்னைக்கு தான் முதல் நாள் காலேஜ்க்கு வரோம். எங்களுக்குள்ள எவ்வளவு எதிர்பார்ப்பு, சந்தோஷம், பயம் எல்லாம் இருக்கும். ஆனா எங்க மனசு புரியாம ரேகிங்க் அப்படிங்குற பேர்ல மேலும் பயங்காட்டுறீங்களே? இது நியாயமா?”, என்ற ஒரு ஆணின் காணீர் குரலில் அவசரமாக திரும்பிப் பார்த்தாள் தாமரை.

“ஏய் என்ன டா ஓவரா பேசுற? நாங்க உங்க சீனியர். எங்க கிட்ட வச்சிக்கிட்ட நாங்க என்ன செய்வோம்னு தெரியாது. ஒழுங்கா நாங்க சொல்றதை செஞ்சிட்டு போய்கிட்டே இரு”, என்று அவனிடம் சொன்ன ஒருவன் அங்கிருந்த பெண்ணிடம் “ஏம்மா உனக்கு நான் கேக்குறது காதுல விழலையா? உன் சைஸ் என்னன்னு சொல்லிட்டு போய்க்கிட்டே இரு”, என்றான் ஒருவன்.

அடுத்த நொடி அவனை அறைந்திருந்தான் முதலில் பேசியவன். “ஏய்”, என்ற படி மற்றவர்கள் அனைவரும் அவனை அடிக்கப் போக “என் மேல ஒரு அடி விழுந்துச்சு, இன்னைக்கு நீங்க எல்லாரும் ஜெயில்ல கம்பி எண்ணுவீங்க. ரேகிங் சட்டப் படி குற்றம்னு தெரியாதா? அது மட்டும் இல்லாம எங்க அப்பா ஒரு ஜட்ஜ். நான் மட்டும் கம்ப்லைண்ட் பண்ணினா உங்க வாழ்க்கையே வம்பா போயிரும். என்னை ரேகிங்க் பண்ணினது, பொண்ணுங்க கிட்ட தப்பா பேசினதுன்னு உங்க மேல கேஸ் போட்டே உங்களை சாகடிச்சிருவாங்க”, என்றான் அவன். அவன் பெயர் யுவன். அவனும் அதே கல்லூரியில் தான் சேர்ந்திருந்தான். மிகவும் தைரியமானவன்.

அதில் மற்றவர்கள் அனைவரும் அவனை முறைத்துக் கொண்டே அவனை விட்டு விலகினார்கள். அந்த பெண்ணை பார்த்தவன் “நீ வா, இனி இவங்க யாரை ரேகிங்க் பண்ணுறாங்கன்னு பாக்குறேன்”, என்று சொல்லி அந்த பெண்ணை போகச் சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

“பர்ஸ்ட் இயர் பையனுக்கு இருக்குற திமிரைப் பாத்தியா டா? இவனை ஏதாவது செய்யணும் மச்சி. அவன் எப்படி உன்னையே அசிங்கப் படுத்திட்டு போகலாம்?”, என்று சீனியர் ஒருவன் கேக்க “ஆமா டா, இப்படி உசுப்பேத்தி என்னை ஜெயிலுக்கு அனுப்ப பாக்குறீங்களா? எனக்கு மூணு தங்கச்சிங்க. நான் அவங்களைப் பாக்கணும். நீங்க கூப்பிட்டதுனால தான் வந்தேன். இனி யாரையும் ரேகிங்க் பண்ண நான் தயாரா இல்லைப்பா”, என்று கழண்டு கொண்டான் அவன். மற்றவர்களும் அங்கிருந்து கலைந்தார்கள்.

சீனியர்களை மிரட்டி விட்டு நடந்து வந்து கொண்டிருந்த யுவனை  “தம்பி ஒரு நிமிஷம் இங்க வறீங்களா?”, என்று கேட்டாள் தாமரை. “என்னையா?”, என்று கேட்ட படி அவள் அருகில் வந்து நின்றான் யுவன்.

“நீ இங்க தான் படிக்கிறியாப்பா?”

“ஆமா ஆண்ட்டி”

“ரொம்ப தைரியமா பேசினப்பா. எனக்கு உன்னை நினைச்சு பெருமையா இருக்கு. உங்க அப்பா ஜட்ஜ் அப்படிங்குறதுனால வந்த தைரியமாப்பா?”

“அட நீங்க வேற? எங்க அப்பா ரிட்டயர்ட் தாசில்தார் தான் ஆண்ட்டி. அவங்க கிட்ட சட்டம் தண்டனைன்னு பேசினா பயந்துருவாங்கன்னு தான் அப்படி பேசினேன்”, என்று சிரித்தான் யுவன்.

அவன் பேச்சில் தாமரைக்கும் சிரிப்பு வந்தது. “உன் பேர் என்னப்பா?”

“என் பேர் யுவன் ஆண்ட்டி. இங்க தான் பயோடெக்னாலஜி பர்ஸ்ட் இயர் சேந்துருக்கேன்”

“அப்படியா? ரொம்ப சந்தோஷம். எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?”

“சொல்லுங்க ஆண்ட்டி”

“என் மக யுக்தாவும் உங்க கிளாஸ் தான். இன்னைக்கு தான் முதல் நாள் காலேக்கு வரா. உனக்கு டைம் கிடைக்கிறப்ப அவளுக்கு ஏதாவது பிரச்சனை வராம பாத்துக்குவீயா? அவ கொஞ்சம் பயந்த சுபாவம். அவ மத்த பொண்ணுங்க மாதிரி கிடையாது. எல்லாத்துக்கும் ரொம்ப பயப்படுவா. அவ அப்பா அவளை அப்படி மாத்திட்டார்”

“கவலைப்படாதீங்க ஆண்ட்டி. நான் பாத்துக்குறேன்”, என்று சொன்ன யுவன் அவளைப் பார்த்து புன்னகைக்க அவன் புன்னகையில் கவரப் பட்டாள் தாமரை.

“சரிப்பா, நான் கிளம்புறேன். நல்லா படிக்கணும் சரியா?”, என்று அவனிடம் சொன்ன தாமரை “கடவுளே இனியாவது என் மக வாழ்க்கை மாறனும். இன்னும் குழந்தையாவே இருக்காளே?”, என்று வருந்திய படி வீட்டுக்கு கிளம்பிச் சென்றாள்.

தனக்குரிய கிளாசுக்குள் நுழைந்த யுவன் யுக்தாவை தேடினான். முதலில் அவன் கண்ணில் விழுந்தது அவள் அழகை விட அவளது அந்த செயல் தான்.

மற்ற பெண்கள் எல்லாம் அருகில் அமர்ந்திருந்தவர்களிடம் பேசிக் கொண்டிருக்க யுக்தா மட்டும் ஜன்னல் வழியாக எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

அன்றைய நாள் அறிமுகப் படலத்தில் கடந்தது. என்னோட பேர் யுக்தா, அப்பா பேர் செல்வம், பிஸ்னஸ்மேன் இதைத் தவிர வேறு எதையும் அவள் சொல்ல வில்லை.

மற்றவர்கள் தங்களின் பொழுது போக்கு பற்றி பேசினார்கள். யுக்தாவோ இந்த மூன்று தகவலைத் தவிர வேறு எதுவும் சொல்ல வில்லை. முதல் நாளே அவளது அழகு அனைவரின் மனதையும் கவர்ந்தது என்றால் அவளது அமைதி அனைவரின் கண்ணையும் உருத்தியது. அனைவரும் என்ன இந்த பொண்ணு இப்படி அமைதியா இருக்கு என்று பேசிக் கொண்டார்கள்.

அடுத்து வந்த நாட்களில் உம்மாணாமூஞ்சி, சிடுமூஞ்சி, திமிர் பிடிச்சவ என்றெல்லாம் பெயர் வாங்கி விட்டாள். அனைத்தையும் யுவன் கவனித்துக் கொண்டு தான் இருந்தான். அவள் இப்படியே இருந்தால் கிளாசில் உள்ள அனைவரும் அவளை ஒதுக்கி விடுவார்கள் என்று அவனுக்குப் புரிந்தது.

ஆனால் அவளிடம் பேச தான் அவனுக்கு பயமாக இருந்தது. இருவரும் ஒரே கிளாசில் இருந்தாலும் அவள் அவனை திரும்பிக் கூட பார்க்க வில்லை. அவள் அவனை மட்டும் அல்ல. அங்கிருந்த எந்த ஆண்களையும் திரும்பி பார்க்க வில்லை. அவளுக்கு அருகில் இருந்த மித்ரா மட்டுமே யுக்தாவிடம் பேசினாள். யுக்தாவோ அவள் கேட்பதற்கு பதில் சொல்லி விட்டு அமைதியாக இருந்து கொள்வாள். இதையெல்லாம் யுவன் கவனித்துக் கொண்டு தான் இருந்தான். அவளை எப்படி அந்த கூட்டுக்குள் இருந்து வெளியே கொண்டு வருவது என்று அவனுக்கு கவலையாக இருந்தது.

புயல் வீசும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!