Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

புது வெள்ளை மழை

புது வெள்ளை மழை 21 2

எல்லாம் கீதா சொன்னதுதான். ஏற்கனவே கீதாவுக்குக் கயலை கண்டால் ஆகாது. இதில் நந்தாதான் அவள் கணவனை ஜெயிலில் போட்டான் என்ற ஆத்திரம் வேறு…. அதனால் அந்த வன்மத்தை, வாய்ப்புக் கிடைத்ததும் தீர்த்துக் கொண்டாள். 


தாரணிக்கு கேட்டதும் தலையே சுற்றியது. “இந்த மாதிரி ஒரு பெண்ணை அண்ணன் ஏன் கல்யாணம் செய்துக்கணும்?” அதை அவள் வாய்விட்டே கேட்டாள். 


“எல்லாம் பாவம் பார்த்துதான். அதுதான் சொன்னேனே, அவங்க வீட்லயே அவளைக் கொல்ல பார்த்தாங்கன்னு. அப்போதான் உன் அண்ணன் அவளைப் பார்த்திருக்கார். உங்க அண்ணனோட இரக்க குணம் தலைதூக்கி இருக்கும்.” 


“ஆமாம் அப்படித்தான் இருக்கும். இல்லைனா எதுக்கு அவசரமா கல்யாணம் பண்ணனும்?” 



Advertisement

“உங்க அண்ணன் எதோ ஆர்வக்கோளாருல கல்யாணம் பண்ணிகிட்டார். ஆனா அதுக்காக எல்லாத்தையும் மறந்திட்டு வாழமுடியுமா என்ன? அதுதான் அவர் ஒரு பக்கம், இவ ஒரு பக்கம் இருக்கக் காரணம்.” 


ராதிகா நன்றாக உருவேற்ற, அதைத் தாரணியும் அப்படியே நம்பினாள். ஆனால் உண்மையில் நந்தா கயலை விரும்பித்தான் திருமணம் செய்து கொண்டான் என்பது ராதிகாவுக்கு நன்றாகவே தெரியும். 

Advertisement


அவள்தான் திருமணத்தன்று நந்தாவையே தானே பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் வேண்டுமென்றே தாரணியிடம் வேறு சொன்னாள். 

Advertisement


நந்தா வேறு சில காரணங்களுக்காகக் கயலை இங்கே விட்டு வைத்திருக்க… தாரணியோ ராதிகா சொன்னதை நம்பி, கற்பனையாக ஒரு காரணத்தைத் திரித்துக்கொண்டாள். 


கயல் நந்தாவை ஏமாற்றித் திருமணம் செய்யவில்லை. நந்தா அவளைப் பற்றி எல்லாம் தெரிந்துதான் திருமணம் செய்து கொண்டான். இதைப் பற்றித் தாரணியோ ராதிகாவோ பேசினால் பாதிக்கப்படப் போவது அவர்கள்தான். 

மறுநாள் கல்லூரிக்கு சென்ற கயல், “எனக்கு இங்கிலீஷ் பேச சொல்லித்தரியா?” எனச் சமீராவிடம் கேட்டாள். 

Advertisement


“என்ன திடிர்ன்னு?” சமீரா கேட்க… முன்தினம் வீட்டில் நடந்ததைக் கயல் சொல்ல…. கேட்ட சமீராவுக்கு அப்படி ஒரு கோபம். 

“அவ யாரு உன்னைப் பத்தி பேச. தப்பு உன் மேலத்தான் கயல். நீ எல்லோருக்கும் ரொம்ப இடம் கொடுக்கிற.” 


“நான் என்ன பண்ணேன்?” 


“முதல்ல அவளுக்கு வேலை செய்றதை நிறுத்து.” 


“அது எப்படி முடியும்? அத்தைக்குத் தோசை ஊத்தும் போது, அவளுக்கு மட்டும் ஊத்த மாட்டேன்னு சொல்ல முடியுமா?” 


“அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீ அவளுக்கு வேலை செய்யக் கூடாது.” 


அவள் அந்த வீட்டின் மருமகள், அப்படியெல்லாம் சொல்லி விட முடியுமா என்ன? இருந்தாலும் சமீராவின் மன நிம்மதிக்காகச் சரி என்றாள். 


உடனே கயல்விழி ஒத்துக்கொண்டதிலேயே சமீராவுக்குப் புரிந்துவிட்டது. “நீ எனக்காகச் சொல்ற.” என்றாள். 


“அதை விடு, நீ எனக்கு இங்கிலீஷ்ல பேச சொல்லித்தருவியா மாட்டியா?” 

“அவ சொன்னான்னு எல்லாம் நீ ஏன் கத்துக்கணும்?” 


“ச்சீ... அவ சொன்னதுக்கு யாரு கத்துகிறா. எனக்கே பேசனும்ன்னு ஆசையா இருக்கு. என் வீட்டுக்காரர் நல்லா படிச்சு, பெரிய வேலையில இருக்கும் போது, நான் அவர் அளவுக்கு இல்லைனாலும், கொஞ்சம் தெரிஞ்சு வச்சிகிட்டா நல்லதுதானே.” 


கயல் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும், நேற்று ராதிகாவும், தாரணியும் பேசியது அவளைக் காயப்படுத்தியே இருந்தது. அதுவும் தாரணி சொன்ன, எங்க அண்ணனுக்கு இவங்க பொருத்தம் இல்லைன்னு சொல்றியா? அது அப்படியே மனதில் பதிந்து போய் இருந்தது. 

அவள் அதைச் சரியான விதத்திலேயே எடுத்துக் கொண்டு இருந்தாள். முன்பு இருந்த கயல் இல்லை இப்போது. இப்படிச் சொல்லிவிட்டார்களே என்று அழவோ, அல்லது மனதில் வைத்து குமுறவோ இல்லை. மாறாகத் தான் நந்தாவுக்குப் பொருத்தமாக மாற வேண்டும் என்றே கயல் நினைத்தாள். 


தன்னை மட்டமாக நினைக்கும் ராதிகாவுக்கும், தாரணிக்கும் மத்தியில் தான் நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்று மனதில் பெரிய வைராக்கியமே எழுந்தது. 


வகுப்பு முடிந்ததும் கயலுக்குச் சமீரா ஆங்கில வகுப்பு எடுத்தாள். அடிப்படை இலக்கணமே கயலுக்குத் தெரியவில்லை. 


“கயல் நம்ம காலேஜ்லேயே எக்ஸ்ட்ரா கிளாஸ் எடுக்கிறாங்க தெரியுமா?” 


“அப்படியா என்ன க்ளாஸ் எல்லாம் எடுக்கிறாங்க?” 


“ஸ்போகேன் இங்கிலீஷ், கராத்தே, டூ வீலர் டிரைவிங், கார் டிரைவிங் எல்லாம் சொல்லித் தராங்க. காலேஜ் முடிஞ்சதுக்கு அப்புறம் கிளாஸ் போகணும்.” 


“சரி நான் அவர் ட்ட கேட்டுட்டு சேர்ந்துக்கிறேன்.” 


“நீ க்ளாஸ் போனா… நானும் வேணா டிரைவிங் க்ளாஸ் சேர்ந்துக்கிறேன்.” சமீரா சொல்ல… 


“நம்ம காலேஜ்லேயே சொல்லித்தரும் போது, அதுவும் நமக்கு நேரமும் இருக்கும் போது, ஏன் விடணும்? எல்லாமே கத்து வச்சிகிட்டா நல்லதுதானே.” என்றாள் கயல். 


கயல்விழி இப்போது எல்லாம் போன் அடித்தால் எடுப்பதே இல்லை. பெரும்பாலும் ராதிகாதான் எடுப்பாள். அதுவும் மாடி அறையில் இருந்தும் எடுத்துப் பேசலாம். 


முதல்முறை நந்தா அவளிடம் நன்றாகப் பேசினான். வெகு நாட்கள் கழித்து அவளிடம் பேசியதால்… நலம் விசாரித்தான். அவள் புதிதாகச் சேர்ந்திருக்கும் வேலையைப் பற்றி விசாரித்தான். பிறகு அடுத்தடுத்து வரும் நாட்களிலும் அவளே எடுத்து பேச, கடுப்பாகி விட்டான். 


“என்ன எப்பவும் நீயே போன் எடுக்கிற? நீ என்ன இந்த வீட்ல போன் அட்டெண்டரா?” எனக் கேட்டே விட்டான். 


“நான் இருக்கிற ரூம்ல போன் இருக்கு. அதுதான் எடுக்கிறேன். இது ஒரு தப்பா?” 


இவ அந்த ரூம்ல என்ன பண்றா? என நினைத்தவன், அவளிடம் எதுவும் சொல்லவில்லை. 


“கீழே எங்க அம்மாவை போன் எடுக்கச் சொல்லு.” என்றான்.
குழலி எடுத்ததும், அவரிடம் நன்றாக வைத்து வாங்கி விட்டான். 


“ராதிகாவுக்கு என்ன வேலை எங்க ரூம்ல?” 


“அவ எப்ப வந்தாலும் அங்க தான டா இருப்பா?” 


“அது கல்யாணத்துக்கு முன்னாடி. அப்பவே அது எனக்குப் பிடிக்காது. சரி கயல் எங்க இருக்கா?” 


“அவ என்னோட ரூம்ல இருக்கா?” 


“ஓ இதுதான் இருக்க இடம் கொடுத்தா, படுக்கப் பாய் கேட்கிறதா? இப்பத்தான் மா எனக்கு இந்தப் பழமொழிக்கு அர்த்தம் தெரிஞ்சிருக்கு.” 


“ஏன் நந்தா இவ்வளவு கோபம்? நான் வேணா அவளைத் தாரணி ரூம்ல தங்கிக்கச் சொல்றேன். சில நேரம் வருண் வந்தா தங்குவாரேன்னு நினைச்சேன்.” 


“வருண் என்ன என்னை மாதிரி வெளி ஊர்லையா இருக்கான். அதெல்லாம் அவன் அட்ஜஸ்ட் பண்ணிப்பான். அவன் வந்து தங்கும்போது, ராதிகாவை உங்க ரூம்ல இருக்கச் சொல்லுங்க.” 


“சரி சொல்லிடுறேன்.” 


“அவ இன்னைக்கே எங்க ரூமை காலி பண்ணனும்.” 


“சரி, கயல்கிட்ட பேசுறியா?” 


“இப்ப எனக்கு மூட் இல்லை. உங்க மருமகள் மேல கோபமா இருக்கேன். அவ என்கிட்டே ஒரு விஷயமும் சொல்றது இல்லை.” 


“உன் பொண்டாட்டி எப்படியும் தனியா தூங்க மாட்டா. அதுதான் ராதிகா வேணா இருக்கட்டும்ன்னு நான்தான் சொன்னேன்.” 


கயல் இரவு உறங்க மாட்டாளே தவிர, மற்றபடி மற்ற நேரம் அவள் அந்த அறையில் தான் இருப்பாள் என்பது நந்தாவுக்குத் தெரியும். 


“அம்மா, என் ரூமை என் பொண்டாட்டி யூஸ் பண்றது வேற... மத்தவங்க யூஸ் பண்றது வேற. எனக்கு வேற யாரும் யூஸ் பண்ணா பிடிக்காது.” என நந்தா தெளிவாகச் சொல்லிவிட… குழலிக்கு அது புரிந்தது. 


“சரிடா வச்சிடவா எனக்கு வேலை இருக்கு.” 


“சரி மா. நான் அப்புறம் பேசுறேன்.” 


குழலி போன்னை வைத்ததும், நந்தாவும் போன்னை வைக்கக் சென்றான். அப்போது அவனுக்கு மீண்டும் போன்னை வைக்கும் சத்தம் கேட்டது. நந்தாவின் முகம் கடுமையாக மாறியது. 


கீழே குழலி போன்னை எடுத்ததும் ராதிகா வைக்கவில்லை. அப்படியே காதில் வைத்திருந்து, இவ்வளவு நேரம் அவர்கள் இருவரும் பேசியதை ஒட்டு கேட்டு இருக்கிறாள். 


கேட்டா கேட்கட்டுமே… இனிமேவாவது நாகரிகமா நடந்துக்க ராதிகாவுக்குத் தெரியுதா பார்க்கலாம் என நந்தா நினைத்துக் கொண்டான். 


ராதிகாவும் அங்கே கொதித்துப் போய்தான் இருந்தாள். இப்படி ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்திருக்கும் போதே, உனக்கு இவ்வளவு திமிரா? என நினைத்த ராதிகாவுக்கு, மேலும் காழ்ப்புணர்ச்சியே அதிகம் ஆகியது. 


இரவு உணவுக்குக் கீழே வந்தவளிடம் குழலி, “நந்தா இந்த வாரம் வந்தாலும் வருவான் போலிருக்கு ராதிகா. நீ உன் சாமான் எல்லாம் எடுத்திட்டு வந்து தாரணி ரூம்ல இருந்துக்கோ.” என்றவர், கயலிடம், “நீ எப்பவும் போலவே உன் சாமான்களை மேல வச்சுக்கோ.” என்றார். 


கயல் முகம் வெளிப்படையாக மகிழ்ச்சியைக் காட்ட… ராதிகாவுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. 


“என்னால இப்ப உடனே எல்லாம் கீழ வர முடியாது அத்தை. நாளைக்கு வேணா பார்க்கலாம்.” என்றாள். 


ராதிகா நினைத்தது போல் கயல் அறைக்காக எல்லாம் மகிழவில்லை. நந்தா இந்த வாரம் வருகிறான் என்பதுதான் அவள் மகிழ்ச்சிக்குக் காரணம். 


ராதிகா மேற்கொண்டு பேசியது எல்லாம், அவள் காதில் விழவே இல்லை. நந்தா வருகிறான் என்பதிலேயே, அவள் அப்படியே கனவு உலகுக்குச் சென்று இருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!