Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

புது வெள்ளை மழை

புது வெள்ளை மழை 22 2

அதற்கு அடுத்த வாரத்தில் இருந்து தெருவில் ஓட்ட ஆரம்பித்தனர். அப்போதும் கயல் இருபது கிலோமீட்டர் வேகத்திலேயே ஓட்ட…. சொல்லிக் கொடுப்பவளுக்கு பொறுமை குறைந்தது. 


“மேடம் நீங்க இந்த ஸ்பீட்ல போனீங்கன்னா பின்னாடி வர்ற வண்டிக்காரன் எல்லாம் உங்களைத் திட்டிட்டு போவான்.” 

கயல் மண்டையை நன்றாக உருட்டுவாளே தவிர…. அவள் சொல்வதை மட்டும் செய்ய வராது. 

“முதல் கியர்லையே போக முடியாது மேடம். அடுத்தக் கியருக்கு மாறுங்க.” அவள் எரிச்சலை வெளிப்படையாகக் காட்ட… அது தந்த பயத்தில், கயல் இரண்டாவது கியர் வரை வந்தாள். ஆனால் மூன்றாவது கியருக்கு மாற்ற மட்டும் துணிச்சல் வரவே இல்லை.” 



Advertisement


ஒருகட்டத்திற்கு மேல் அவள் ஒன்றும் சொல்வது இல்லை. அவள் போக்கிற்கே விட்டுவிட்டாள். 


தினமும் அரைமணிநேரம் தான் வகுப்பு. கல்லூரி அருகிலேயே சில தெருக்களைச் சுற்றிவிட்டு. பிறகு அங்கிருந்து அவள் வீடு வரை அவளை ஓட்ட வைத்து அழைத்து வருவாள். அவள் வீட்டு வாசலில் விட்டுவிட்டு சென்று விடுவாள். 


அது ஒன்று கயலுக்கு மிகவும் வசதியாக இருந்தது. இல்லையென்றால் கல்லூரியில் இருந்து தனியாக அல்லவா வரவேண்டும். 

Advertisement

ஒரு நாள் கயலே அவளிடம் கேட்டுவிட்டாள். “ஏன் முன்னாடி எல்லாம் கோப படுவீங்க. இப்பெல்லாம் ஒன்னும் சொல்லறதே இல்லை.” 

Advertisement


“உங்க சார்தான் மேடம் காரணம். அவர்தான் ஒருநாள் எங்க ஆபீஸ்க்கு போன் பண்ணார். நீங்க மெதுவா ஓட்டினா பரவாயில்லைன்னு சொல்லிட்டார். அதோட உங்களை வீடு வரை விடச் சொன்னதும் அவர்தான். அதனால மேல பணம் கொடுத்திருக்கார்.” 


“யாரு வந்து பணம் கொடுத்தா?” 


“அவர் ப்ரண்ட் வந்து கட்டிட்டுப் போனார். பேரு எல்லாம் தெரியாது.” 

Advertisement


கயலுக்குப் புரிந்தது வருணாகத்தான் இருக்கும் என நினைத்துக் கொண்டாள். அவள் நந்தாவிடம் தினமுமே புலம்புவாள். 


“பாருங்க ஒருநாள் அந்த பொண்ணு. உனக்குச் சொல்லிக் கொடுத்தா எனக்கு மறந்திடும்ன்னு சொல்லப் போறா.” 


“இதுகிட்ட போய் மாட்டிகிட்டோமேன்னே அவ நினைக்கிறது, அப்படியே அவ மூஞ்சியில தெரியும்.” 


இப்படி நிறையக் கயல் சொல்ல… நந்தா அந்த நிறுவனத்துக்கே அழைத்துப் பேசி இருந்தான். ரொம்பவும் மிரட்டினால் கயல் வகுப்புக்கே போக மாட்டாள் என்பதே காரணம். 


அவன் சொன்னதைக் கேட்டு, கயலுக்கு வெட்கமாகப் போய்விட்டது. அவள் அதைப்பற்றி நந்தாவிடம் பேசியபோது. 


“இப்ப ஓட்டுறதை நல்லா பயமில்லாம ஓட்டு போதும். பழகினதும் தானா வேகமா போக வரும்.” என்றான். 


தாரணி முதலிலாவது கயல்விழியோடு எதாவது பேசிக்கொண்டு இருந்தாள். இப்போது அதுவும் இல்லை. கயல்விழிக்கு அதை நினைத்து வருந்தவெல்லாம் நேரம் இல்லை. அவள் மற்ற எல்லோரையும் விடப் பிஸியாக இருந்தாள். 


எப்போதும் அவள் அவர்களைக் கடந்து செல்லும்போது ராதிகாவும், தாரணியும் ஒருவரையொருவர் பார்த்துக் கேலியாகப் புன்னகைத்துக் கொள்வார்கள். 


அதைக் கயல்விழியும் கவனித்து இருக்கிறாள். இவங்களுக்கு நாம அப்படி என்ன கேவலமா தெரியறோம்ன்னு தெரியலையே என நினைத்துக் கொண்டாள். இப்போதெல்லாம் அந்தப் பார்வையும், சிரிப்பும் அவளை எரிச்சல் படுத்திக்கொண்டு இருந்தது. 


அன்று சனிக்கிழமை ராதிகாவும் தாரணியும் வெளியே சுற்றிவிட்டு மாலைதான் வீட்டிற்கு வந்தனர். குழலி அன்று வீட்டில் இல்லை. உடன்வேலை பார்ப்பவர் வீட்டு திருமணதிற்குச் சென்றுவிட்டார். நாளைதான் வீடு திரும்புவார். 


வருணும் அன்று மாலை வந்து இருந்தான். அப்போது நந்தாவின் சித்தப்பா ராஜேஷும், சித்தி சகுந்தலாவும் வீட்டிற்கு வந்தனர். அவர்களைக் கயல் வரவேற்று உபசரித்தாள். அவர்களை இரவு உணவு அருந்தாமல் அவள் விடவே இல்லை. 


“நீ எங்க நந்தாவுக்கு ரொம்பவே பொருத்தமான பொண்ணுதான். என்ன சுறுசுறுப்பு? நீ வீட்டை பொறுப்பா பார்த்துக்கிறதுனாலதான், குழலி அக்கா வீட்டை பத்தி கவலைப்படாம நிம்மதியா வெளிய நாலு இடம் போக முடியுது.” 


“பாவம் அவங்களும் அத்தான் இறந்ததுக்கு அப்புறம் அவ்வளவா எங்கையும் வெளிய போனது இல்லை. இப்ப நாலு இடம் போயிட்டு வர்றது, அவங்களுக்கும் நல்லா இருக்கும் போலிருக்கு.” 


“மருமகளுக்கு ரொம்ப ஐஸ் வைக்கிற மாதிரி இருக்கே.” என அவர் கணவர் கேலியாகக் சொல்ல… 

“உங்க அண்ணியும் தாங்க சொன்னாங்க. அதோட உங்க அண்ணி கொஞ்சம் வயசானவங்களா தெரிஞ்சாங்க. இப்ப மருமகள் வந்ததும் கொஞ்சம் இளமையா தெரியுறாங்க. மனசுல சந்தோசம் இருந்தாலே, அது வெளிப்படையா தெரியும் இல்லையா.” என்றார் சகுந்தலா. 


“கரெக்ட்தான் நீ சொல்றது. நம்ம கவலைகள்தான் நம்மைச் சீக்கிரம் வயசானவங்களா காட்டுது.” எனத் தன் மனைவியின் கருத்தை ராஜேஷும் மோதித்தார். 


“பொண்ணுங்களா, நீங்களும் இப்படிக் கயலைப் போல இருக்கணும்.” எனச் சகுந்தலா தாரணியையும், ராதிகாவையும் பார்த்து சொல்ல… 


அதற்கு எப்போதும் போல் தாரணியும், ராதிகாவும் ஒருவரையொருவர் பார்த்து உதட்டை பிதுக்கி நக்கலாகச் சிரிக்க… பார்த்த சகுந்தலாவின் முகம் மாற…. வருணுக்குக் கோபம் வந்தது. கயலுக்குக் கூட எப்போதும் போல் அலட்சியபடுத்த முடியவில்லை. 


அவர்கள் கிளம்பியதும், தாரணியிடம் வருண், “உனக்கு வர வர மரியாதைன்னா என்னனே தெரியலை…. அவங்க பெரியவங்க சொல்றாங்க, நீ எதோ நக்கலா சிரிக்கிற.” 

“வேற ஒண்ணுமில்லை உன் சேர்க்கை சரியில்லைன்னு நினைக்கிறேன்.” என்றவன், ராதிகாவை பார்க்க, அவள் புரிந்த மாதிரியே கட்டிக் கொள்ளவில்லை. வருணை பார்த்து புன்னகைத்தாள். 


“வந்தா தின்னுட்டு பேசாம போக வேண்டியது தான…. எதுக்கு அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணனும்?” தாரணி சொல்ல… 


“அதுதான வருண் அண்ணா. நாங்க படிச்சிருக்கோம், சம்பாதிக்கிறோம். எங்க சொந்தகால்ல நிற்கிறோம். நாங்க எதுக்கு வீட்டு வேலை பண்ணனும்? படிக்காம வேலைக்குப் போகாத பொண்ணுங்க வீட்டு வேலை மட்டும்தான் பார்க்க முடியும். நாங்க அப்படியா?” ராதிகா கயலை பார்த்துக்கொண்டே சொல்லி முடித்தாள். 

“ராதிகா, நீ சொல்றதும் கரெக்ட் தான். அதே போல நீங்க எல்லாம் சாப்பிடாம இருந்திட்டா இன்னும் நல்லது. வேளைக்கு வந்து ஏன் கொட்டிக்றீங்க?” என்ற வருண் கயலை பார்த்து சிரிக்க… பதிலுக்குக் கயலும் கேலியாகச் சிரித்தாள். 


அதைப் பார்த்து தாரணிக்கும் ராதிகாவுக்கும் அப்படி ஒரு கோபம் வந்தது. இவர்கள் இதற்கு முன் இப்படித்தானே கயலை வெறுப்பேற்றினார்கள். 


“நாங்க வாங்கிற சம்பளத்துக்கு, எல்லா வேலைக்கும் ஆள் வச்சிட்டு எங்களால ராணி மாதிரி உட்கார்ந்து சாப்பிட முடியும்.” தாரணி திமிராகச் சொல்ல… ராதிகாவும் அதை ஆமோதிப்பது போல் தலையசைத்தாள். 


“வெரி குட். சரி அப்படியே இருந்துக்கோங்க.” என்றவன் கயலிடம், “நீ சாப்டிட்டுப் போய்ப் படு கயல். அவங்க சொன்ன மாதிரி அவங்க ராணி மாதிரி உட்கார்ந்து சாப்பிடுவாங்க. நீ அவங்களுக்கு எதுவும் பண்ண வேண்டாம்.” என்றவன், வீட்டிற்குக் கிளம்பிவிட்டான். 


திடிரென்று விருந்தினர் வந்ததால்… அதுவும் அவர்கள் உடனே கிளம்ப… அவசரத்தில் கயல் அவர்களுக்கு மட்டும்தான் செய்திருந்தாள். 


வருண் சொன்னாலும் மனம் கேட்கவில்லை. மதியம் வைத்த சாம்பார் இருந்தது. அதைச் சூடு செய்து டேபிளில் வைத்து விட்டு. வேண்டுமென்றால் இருவரும் தோசை ஊற்றிக்கொள்ளட்டும் என்று நினைத்தவள், இருந்த சாதத்தைப் போட்டு சாப்பிட்டு விட்டு அறையில் சென்று படுத்து விட்டாள். அசதியில் படுத்து உறங்கியும் விட்டாள். 


தாரணியும் ராதிகாவும் முதலில் வீம்பாக உட்கார்ந்து இருந்தனர். எப்படியும் கயல் வந்து கேட்பாள் என்று இருவரும் நினைத்து இருக்க… அவள்தான் அப்போதே உறங்கி விட்டாளே. 


பசி வந்ததும் பேசியது எல்லாம் மறந்து போக.. இருவரும் சமையல் அறையைச் சென்று உருட்டினர். ஆனால் அங்கே சாம்பாரை தவிர வேறு ஒன்றும் இல்லை. 

அப்போது பரணி வந்தான். அவனைப் பார்த்ததும், இருவரும் அவனிடம் எதாவது வெளியே வாங்கித் தர சொல்லி கேட்டனர். 


“என்னால முடியாது. ஏன் வீட்ல இருக்கிறது சாப்பிட வேண்டியது தான.” 

“வீட்ல எதுவும் இல்லைடா?” 


பரணி அவர்களை நம்பாமல் சென்று பார்த்தவன், “இதோ சாம்பார் இருக்கே.” என்றான். 


“அதை ஊத்தி குடிக்கச் சொல்றியா?” ராதிகா நக்கலாக கேட்க, 


அவர்கள் வீட்டை பத்தி அவனுக்குத் தெரியாதா,“தோசை மாவு எப்பவும் வீட்ல இருக்குமே?” என்றான். 


“யாரு தோசை ஊத்துறது? உன் அண்ணிதான் ஆளுக்கு முன்னாடி சாப்பிட்டுப் போய்ப் படுத்திட்டாளே.” 


“இத்தனை நாள் அவங்கதான் செஞ்சாங்க. ஏன் அவங்களை விட நீங்க ரெண்டு பேரும் பெரியவங்கதான? நீங்களே ஊத்தி சாப்பிடுங்க.” என்றான். 


“எனக்குத் தோசை ஊத்த வராது டா.” தாரணி சொல்ல… 


“எனக்கும் ஊத்த தெரியாது.” என்றாள் ராதிகா. 


அவர்கள் இருவரும் சொல்வதை நம்பும் அளவுக்குப் பரணி ஒன்றும் முட்டாள் இல்லை. 


“மாவு இருக்கு, சாம்பார் இருக்கு, இதுக்கு மேல என்ன வேணும்? சாப்பிட்டா சாப்பிடுங்க இல்லைனா போய்ப் படுங்க.” என்றவன், அவனது அறைக்குள் சென்று விட்டான். 

பிறகு இருவரும் வேறு வழியில்லாமல் அவர்களே தோசை ஊற்றி சாப்பிட்டனர். 


இன்றைக்குத்தானே இருவரும் வருணிடம் வீராப்பாகப் பேசினார்கள். ஒருநாள் கூட ஆகவில்லை அதற்குள்ளேயே இந்த நிலைமை. அதை நினைத்து இருவரும் கொதித்துப் போய் இருந்தனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!