Skip to content
Post Views: 6,618
புது வெள்ளை மழை
அத்தியாயம் – 26
வீட்டிற்குச் சென்ற தாரணி மிகவும் இறுக்கமாக இருந்தாள். வருண் சிறிது நேரம் அவளுக்குத் தனிமை கொடுத்தவன், பிறகு அவளிடம் சென்றான்.
“நீ சரியாவே சாப்பிடலை. இந்தப் பாலையாவது குடி.” என அவன் பாலைக் கொடுக்க… தாரணி அவன் இடையைக் கட்டிக்கொண்டு அப்படி ஒரு அழுகை.
Advertisement
சிறிது நேரம் அவளை அழ விட்டவன், பிறகு அவளைச் சமாதானம் செய்து பாலைக் குடிக்க வைத்தான்.
“அண்ணன் என்னை வெறுத்திட்டார் இல்ல… இனி அவர் என்கிட்டே முன்னாடி மாதிரி இருக்க மாட்டார்.”
இல்லை என்று சொல்லவந்தவன், இப்போதே சொல்ல வேண்டாம் என நினைத்து, வேறு பேசினான்.
Advertisement
“நீயேன் அப்படி நடந்துகிட்ட? உனக்கு ஏன் கயலை பிடிக்க மாட்டேங்குது?”
Advertisement
“எனக்கு ஆரம்பத்துல கயலை பிடிச்சுதான் இருந்தது. ஆனா அதுக்குப் பிறகு எல்லோரும் என்னையும் அவளையும் சேர்த்து பார்த்து பேசினீங்க. அது எனக்குச் சுத்தமா பிடிக்கலை.”
“நீ சொல்றது சரி. ஆனா அதை நீ என்கிட்டே நேரடியாவே சொல்லி இருக்கலாமே. எதுக்குக் கயல்கிட்ட உன்னோட கோபத்தைக் காட்டின?”
“நீங்க எப்பவும் அவளைப் புகழ்ந்திட்டே இருப்பீங்க? அப்புறம் எப்படி உங்ககிட்ட சொல்றது?”
Advertisement
“நீயே யோசிச்சு பாரு? கயலோட கல்யாணம் எந்தச் சுழ்நிலையில நடந்தது. அந்தப் பொண்ணுக்கு பிறந்த வீட்டுச் சப்போர்ட் இல்லை. புதுசா ஒரு இடத்துக்கு வந்து இருக்கணும். உன் அண்ணன் கூட இருந்திருந்தா அது வேற மாதிரி. அவனும் இங்க இல்லை.”
“அந்தப் பொண்ணு ரொம்பத் தனியா பீல் பண்ணக்கூடாதுன்னு நான் எப்பவும் கயலுக்குச் சப்போர்ட் பண்ணுவேன். உன்னை இறக்கி பேசனும்னு நான் நினைச்சதே இல்லை.”
“உங்களுக்குக் கயலை பத்தி எல்லாமே தெரியுமா?”
“தெரியும், நந்தா கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லிட்டான்.”
“அண்ணன் கயலை காப்பாத்துறதுக்காகக் கல்யாணம் பண்ணிகிட்டாரா?”
“இல்லை... கயலை பத்தி தெரியறதுக்கு முன்னாடியே அவளை அவன் விரும்பினான். அதை என்கிட்டே சொல்லவும் செஞ்சான்.”
“முன்னாடியே அண்ணன் கயலை விரும்பினாரா? ஆனா ராதிகா வேற மாதிரி சொன்னா?”
“என்ன சொன்னா?”
“முதல்ல நீங்க சொல்லுங்க.”
இவளுக்கு அறையும் குறையுமாகத் தெரிந்ததால்தான் பிரச்சனை என்பதை உணர்ந்த வருண், நந்தா கயலை சந்தித்ததில் இருந்து, நடந்த அனைத்தையும் தாரணியிடம் சொல்லி விட்டான்.
எல்லாவற்றையும் கேட்ட தாரணிக்கு, நந்தா திட்டமிட்டே கயலை திருமணம் செய்து இருக்கிறான் எனப் புரிந்தது. அவள் வாழ்க்கையில் இருந்த சிக்கலை அவன் அழகாகச் சரி செய்துவிட்டான். ஆனால் உள்ளே புகுந்து தேவையில்லாமல் உலப்பியது அவள்தான் என இப்போது நன்றாகவே புரிந்தது.
“நீங்களே முன்னாடி எனக்கு எல்லாத்தையும் சொல்லி இருக்கலாம் இல்லையா?”
“என்னோட விஷயம் எதையும் நான் உன்கிட்ட மறைச்சது இல்லை. அதோட நந்தாவுக்குக் கயலோட விஷயம் வேற யாருக்கும் தெரியறது விருப்பம் இல்லை. கயலோட மதிப்பு குறையும்னும் நினைச்சு இருக்கலாம்.”
“பாரு அவன் நினைச்ச மாதிரிதான நடந்தது. உனக்கு ராதிகா சொன்னா கூட, நீ தெரிஞ்ச மாதிரி காட்டி இருந்திருக்கக் கூடாது. அப்படியே உனக்கு யார்கிட்டையாவது சொல்லனும்னா என்கிட்டே சொல்லி இருக்கலாம். இல்லை உங்க அம்மாகிட்ட பேசி இருக்கலாம். அதைவிட்டு கயல் மனசு கஷ்ட்டப்படுற மாதிரி பேசி எவ்வளவு பிரச்சனை பண்ணிட்ட.”
“கயல் எவ்வளவு கஷ்ட்டபட்டிருக்கு தெரியுமா? நந்தா வெளிய தெரியாம மனநல டாக்டர்கிட்ட எல்லாம் கூடிட்டுப் போனான். அவன் அவளைக் கஷ்ட்டப்பட்டு இந்தளவுக்குக் கொண்டு வந்திருக்கான். ஆனா நீ எல்லாத்தையும் கெடுக்கிற மாதிரி நடந்துகிட்ட.”
“கயல் வாழ்க்கையில ஒரு தவறு நடந்திடுச்சு. அதுக்காகக் காலம் எல்லாம் அந்தப்பொண்ணு அப்படியே இருக்கனுமா என்ன?”
“உங்க அண்ணன் அவளை விரும்பி கல்யாணமும் பண்ணிகிட்டான். இனி கயலைப் பத்தி பேச யாருக்குமே உரிமை இல்லை. இது அவங்களோட வாழ்க்கை.” என்றான் வருண் தெளிவாக.
“நான்தான் ரொம்பத் தப்புப் பண்ணிட்டேன். இனி எங்க அண்ணன்கிட்ட நான் எந்த முகத்தை வச்சிக்கிட்டு பேசுவேன்.”
“திரும்ப லூசு மாதிரி யோசிக்கிற. நீ மனசு விட்டு பேசி, அவன்கிட்ட மன்னிப்பு கேளு. அதை விட்டு பேசாம இருந்தா… இன்னும் உங்களுக்குள்ள இடைவெளி அதிகமாகிடும்.”
“அண்ணன் என்னை மன்னிப்பாங்களா? அவங்க தனிக்குடுத்தனம் போறேன்னு சொன்னாங்களே.”
“அதை அவனைக் கயல் முன்னாடி சொல்ல சொல்லு பார்ப்போம். அதுக்குக் கயலே ஒத்துக்கமாட்டா. அதனால தானே உங்க அண்ணன் அவ இல்லாத போது சொன்னான்.”
வருண் சொன்னதைக் கேட்டு தாரணிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. “நிஜமாவா? எங்க அண்ணன் கூட யாருக்காவது பயப்படுவாரா என்ன?”
“உங்க அண்ணன் மட்டும் இல்லை. எல்லா ஆம்பிளைங்களும் பொண்டாட்டிக்கு பயப்படுவாங்க. ஏன் நான் இல்லை?”
“எனக்கு எங்க அண்ணன்கிட்ட பேச பயமா இருக்கு.”
“நீ கயல்கிட்ட ஒழுங்கா நடந்துகிட்டாலே போதும், உங்க அண்ணன் கோபம் குறையும்.”
“நீங்க சொல்றது கரெக்தான். ஆனா எனக்குக் கயலைப் பார்க்கவே சங்கடமா இருக்கு.”
“நீ இப்படி யோசிச்சிட்டே இருந்தேனா, உங்களுக்குள்ள இடைவெளிதான் அதிகமாகும்.”
“நீங்க எனக்காகப் பேசுறீங்களா?”
“உனக்காக நான் பேசுவேன். ஆனா நீ பேசினா சீக்கிரம் பிரச்சனை சரி ஆகும்.”
“நான் பேசி அண்ணா பேசலைனா? அதை என்னால தாங்கிக்க முடியாது.” சொல்லுபோதே தாரணி அழுது விட, அவளை ஆறுதலாக அணைத்த வருண் “ஏன் அப்படி நினைக்கிற? நந்தா உன்னை விட்டுக்கொடுக்க மாட்டான்.” என்றான்.
அங்கே கயல் உறக்கம் வருகிறது எனச் சொல்ல… “பரிட்சையை வச்சிக்கிட்டு தூங்குவியா, ஒழுங்கா படி.” என நந்தா மிரட்டிக் கொண்டு இருந்தான்.
“எனக்கு நாளைக்கு லீவ்தாங்க. அதோட அது ஈஸியான பரிட்சைதான். நான் ஏற்கனவே படிச்சிட்டேன்.” என்றாலும் அவளை விடவில்லை. கொஞ்ச நேரம் படி என்றான்.
அவன் சொன்னதற்காகக் கயல் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தாள். அந்நேரத்திற்கு நந்தா வெளிமாடிக்கும், அறைக்கும் நடந்து கொண்டு இருந்தான்.
முதலில் விருப்பம் இல்லாமல் படிக்க உட்கார்ந்தவள், பிறகு பாடத்தில் முழ்கிவிட்டாள். அவள் படித்து முடித்துப் புத்தகத்தை மூடி வைத்த போது, நள்ளிரவாகி இருந்தது.
இரவு உடையை எடுத்துக்கொண்டு குளியல் அறைக்குச் சென்றாள். வெயில் காலம் எனபதால், இரவும் ஒருமுறை குளித்து விடுவாள்.
அவள் வெளியே வந்தபோது நந்தா அவளுக்காகக் காத்திருந்தான். இங்க வா என்றவன், அவள் கண்களைப் பொத்தி வெளிமாடிக்கு அழைத்துச் சென்றான்.
வெளிமாடியின் நடுவே சின்ன மேஜையில் பிறந்தாநாள் கேக் வைத்து, அதில் நிறைய மெழுகுவர்த்தி ஏற்றி வைத்திருந்தான். சுற்றிலும் ரோஜா பூ செடிகள் வைத்து, அந்த இடத்தை மேலும் அழகாக்கி இருந்தான்.
கயலுக்குப் பார்த்ததும் ஆச்சர்யம் தாங்கவில்லை. நந்தா அவளைக் கேக் வெட்ட சொல்ல… கயல் மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டு கேக் வெட்டினாள்.
அவள் இது போல் வாழ்க்கையில் பிறந்தநாள் கொண்டாடியதே இல்லை. கயலுக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. கண்ணீர் வந்துவிடும் போல் இருந்தது. சந்தோஷமான நேரம், அதனால் அழுது விடக்கூடாது எனத் தன்னையே கட்டுப்படுத்திக்கொண்டாள்.
நந்தா கேக்கை எடுத்து அவளுக்கு ஊட்டிவிட… வாயைத் திறந்து வாங்கிகொள்ளவே அவள் அவ்வளவு வெட்கபட்டாள்.
“இப்ப நீ எனக்குக் கொடுப்பியா இல்லையா?” நந்தா கேட்க… கயல் வெட்கபட்டாலும் அவன் விரும்பியதை செய்தாள்.
“எனக்குச் சாக்லேட் கேக் ரொம்பப் பிடிக்கும். இன்னும் கொஞ்சம் எடுத்துக்கட்டுமா?”
“எல்லாம் உனக்குத்தான்.”
கயல் ஒரு பெரிய துண்டாக எடுத்து சாப்பிட… நந்தா அவள் சாப்பிடும் அழகை ரசித்தான். கயல் அவனுக்கும் வேண்டுமா என்று கேட்க… நந்தா பதில் சொல்லாமல் வாயை மட்டும் திறக்க… கயல் அவனுக்கு ஊட்டி விட்டாள்.
இருவருமாகக் கேக் சாப்பிட்டு முடிக்கவும், மழை வரவும் சரியாக இருக்க… கயல் மீதம் இருந்த கேக்கை உள்ளே கொண்டு போய் வைத்துவிட்டு வந்தாள்.
நந்தா வாசல் படியில் உட்கார்ந்து மழையை ரசித்தவன், கயல் நிற்பதை பார்த்ததும், அவளை இழுத்து தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டான். சிறிதுதான் இடம் இருந்ததால் இருவரும் நெருக்கமாக உட்கார்ந்து இருந்தனர்.
“மழை வரும்னு நினைக்கவே இல்லை.” நந்தா சொல்ல,
“இன்னைக்குக் கொஞ்சம் வெக்கை அதிகம்தான். அதுதான் மழை வந்திருக்கு.” என்றாள் கயல்.
இருவரும் நிலவு வெளிச்சத்தில் மழையை ரசித்துக் கொண்டு இருந்தனர். மழை நின்றதும்தான் இருவரும் எழுந்து உள்ளே சென்றனர்.
கயல்விழி கேக்கை பத்திரபடுத்திவிட்டுப் படுக்கச் செல்ல… “கயல்…” நந்தா அழைக்க, நின்று அவனைத் திரும்பி பார்த்தாள்.
அவளைத் தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தவன், அவள் நெற்றில் வழிந்த கேசத்தைக் காதின் பின்புறம் ஒதுக்கிவிட்டு, இதமாக நெற்றியில் இதழ் ஒற்றினான்.
கயல் எதிர்ப்பார்க்கவே இல்லை இப்படி ஒரு முத்தத்தை, அவள் திகைத்து போய் நிற்க… அடுத்து கன்னத்திலும் முத்தமிட்டான். வெளியே மழை மீண்டும் வேகம் எடுக்கும் சத்தம் கேட்டது.
அவன் அவளது இதழ்களை மெல்ல வருட… கயல் அவன் கைபிடித்துத் தடுத்தாள். அவள் கையை விலக்கிவிட்டு குனிந்து மிருதுவாக அவளது இதழில் முத்தமிட்டான்.
பூவை முத்தமிட்டது போல் உணர்ந்தான். அவ்வளவு மென்மையான இதழ். அந்த முத்தம் போதாது என்று தோன்ற, மீண்டும் முத்தமிட்டான். இந்தமுறை இன்னும் சற்று அழுத்தமாக.
ஒவ்வொரு தடவை முத்தமிடும் போதும், இன்னும் வேண்டும் என்றுதான் தோன்றியதே தவிர, போதும் என்று மட்டும் தோன்றவே இல்லை.
இந்தமுறை முத்தம் முடிவு பெறாமல் நீண்டு கொண்டே செல்ல… வலுக்கட்டாயமாக அவனிடம் இருந்து இதழ்களைப் பிரித்த கயல், அவன் மார்பில் சாய்ந்தே இளைப்பாறினாள்.
நந்தா அவளை அணைத்துக்கொண்டு இருந்தவன், அவள் முகத்தை நிமிர்த்திப் பார்க்க… மொத்த ரத்தமும் முகத்திற்குப் பாய்ந்தது போல், முகம் சிவந்து கிடந்தது.
இதுக்கே இப்படியா என நினைத்ததும், அவன் முகத்தில் மென்னகை அரும்பியது.
கயல் அவனிடம் இருந்து விலகி மெத்தையில் சென்று படுக்க… நந்தா விளக்கை அணைத்துவிட்டு, அவள் அருகில் படுத்தவன், அவளை இழுத்து தன் தோள் வளைவில் படுக்க வைத்துக் கொண்டான்.
அவள் அவன் பக்கமாகத் திரும்பி படுத்துக் கண்மூடிக்கொள்ள, நந்தாவும் இன்று இவ்வளவு போதும் என்று நினைத்தவன், கண் மூடி உறங்கினான்.
எப்போதும் நந்தாதான் முதலில் எழுந்துகொள்வான், இன்று கயல் விழித்தபோது நந்தா இன்னமும் உறங்கிக் கொண்டு இருந்தான்.
கயல் குளித்துத் தயாராகிக் கீழே சென்றபோது, குழலி கல்லூரி செல்ல கிளம்பிக் கொண்டு இருந்தவர், அவளை ஆச்சர்யமாகப் பார்த்தார்.
“இன்னைக்கு உனக்குக் காலேஜ் இல்லையே… வெளிய எங்கையும் போறியா?”
“இன்னைக்கு என்னோட பிறந்தநாள் அத்தை.”
“அப்படியா முன்னாடியே சொல்லி இருக்கலாம் இல்லையா…. பிறந்த நாள் வாழ்த்துக்கள் கயல்.” என்றவர், உள்ளே சென்று பணம் கொண்டு வந்து கொடுத்தார்.
“இருக்கட்டும் அத்தை.”
“முன்னாடியே தெரிஞ்சிருந்தா நான் எதாவது வாங்கி வச்சிருப்பேன். பரவாயில்லை, நீயே உனக்குப் பிடிச்சதா வாங்கிக்கோ.”
கயல் அவருக்குக் கேக் கொடுக்க…. சிறிது எடுத்துக் கொண்டவர், “காலை வேளைக்கு மாடும்தான் சமையல் செஞ்சிருக்கேன். மதியம் நீங்க சூடா செஞ்சு சாப்பிடுங்க.” என அவர் சொல்லிக் கொண்டிருந்தபோதே நந்தா அங்கு வந்தான்.
“அம்மா, நாங்க மதியம் வெளிய சாப்பிட்டுகிறோம்.”
“சரி, ஆனா கோவிலுக்கும் போய் உங்க ரெண்டு பேர் பேர்லையும் அர்ச்சனை பண்ணிட்டு வந்திடுங்க.”
“சரி மா. கயல், காபி கொடு.” என்றவன் மாடிக்கு சென்றுவிட்டான்.
கயல்விழி கேக்கை துண்டுகள் போட்டு உணவு மேஜையில் வைத்தாள். காலையில் பரிமாறும் வேலை எல்லாம் இல்லை. அவரவரே போட்டு சாப்பிட்டுக்கொள்வார்கள். நந்தாவுக்குக் காபி எடுத்துக் கொண்டு மாடிக்கு சென்றாள்.
கயல் கொடுத்த காபியை வாங்கி பருகியவன், காலி டம்ளரை மேஜையில் வைத்துவிட்டு, அவளைத் தன் முன் நிறுத்தி ரசித்துப் பார்த்தான்.
“பிறந்த நாள் வாழ்த்துக்கள்.” என்றவன், அவள் நெற்றியில் முத்தமிட,
“அத்தை கோவிலுக்குப் போகச் சொல்லி இருக்காங்க.” என்றவள், அவனிடம் இருந்து விலகினாள்.
“முத்தம் கொடுத்தா கோவிலுக்குள்ள விட மாட்டாங்களா?” நந்தா சந்தேகம் கேட்க….
விழிகளை விரித்துப் பார்த்தவள், “குளிச்சிட்டு வாங்க கோவிலுக்குப் போகணும்.” என்றாள்.
அவளைக் கொஞ்சம் சீண்டி பார்க்க எண்ணி, “உனக்கு நான் முத்தம் கொடுத்தது பிடிக்கலை, அதுதான் இப்படிப் பண்ற?” என்றான்.
“நான் ஒன்னும் அப்படிச் சொல்லவே இல்லை.”
“அப்ப பிடிச்சிருக்கா?”
“இப்ப என்ன வேணும் உங்களுக்கு?”
“ஒரே ஒரு முத்தம் கொடு விட்டுடுறேன்.” நந்தா கேட்டதும், கயலுக்கு முகம் சிவந்து விட்டது. அவன் அவளது முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
“இப்பவா?”
“ஏன் இப்ப கொடுத்தா என்ன?”
“ரொம்ப வெளிச்சமா இருக்கே.”
“அதுக்கு?”
“நான் நைட் கொடுக்கட்டுமா?”
“சரி, ஆனா நைட் கண்டிப்பா கொடுக்கணும்.”
அப்போதைக்குத் தள்ளிபோட்ட நிம்மதி கயலுக்கு. இரவு என்றால் இன்னும் வசதி என்ற எண்ணம் நந்தாவுக்கு.
வீட்டு டெலிபோன் அடிக்க, நந்தா எடுத்துப் பேசினான். கயல்விழி ஆர்வமாகப் பார்த்து இருந்தாள். பத்மாதான் அழைத்து இருந்தார். அவன் அவளிடம் போன்னை கொடுத்துவிட்டுச் சென்றான்.
பத்மா கயலுக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொன்னார்.
அவள் பிறந்தநாளுக்கு என்றே நந்தா வந்தது, கேக் வெட்டியது என்று எல்லாவற்றையும் கயல் சொல்ல… கேட்ட பத்மாவுக்குச் சந்தோஷமாக இருந்தது.
பிறந்த வீட்டில்தான் மகள் இதுமாதிரி சந்தோஷங்களை அனுபவிக்கவில்லை. புகுந்த வீட்டிலாவது அவள் நன்றாக இருக்கிறாளே.. அவர் மனதிற்குள் நந்தாவுக்கு நன்றி சொன்னார்.
“அம்மா, உங்களுக்குத் தெரியுமா, நாளைக்கு நாங்க கிளம்பி அங்க வரோம்.”
மகள் வருகிறாள் என்றதும், பத்மாவுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அப்போதே அவளுக்குப் பிடித்தது எல்லாம் செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டார்.
“உங்களைப் பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு மா. நாம நம்ம கோவிலுக்கு எல்லாம் போயிட்டு வரலாம்.”
கயல் பேசுவதை எல்லாம் கேட்டபடி குளியல் அறையில் நின்று நந்தா முகசவரம் செய்து கொண்டிருந்தான். மனைவி இவ்வளவு உற்சாகமாகப் பேசி இன்றுதான் பார்க்கிறான்.
நந்தா குளித்து விட்டு வந்ததும், இருவரும் சாப்பிட கீழே இறங்கி சென்றனர். நல்லவேளை ராதிகா வேலைக்குச் சென்றுவிட்டாள். பரணி மட்டுமே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.
“என்ன அண்ணி இன்னைக்குக் காலையிலேயே கேக் இருக்கு.”
பரணி கேட்டதற்கு, கயல் புன்னகைக்க…. நந்தா பதில் சொன்னான்.
“இன்னைக்கு உங்க அண்ணிக்கு பிறந்தநாள் டா.”
ஓ அப்படியா என்றவன், கயலுக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னான்.
“அண்ணா, நீங்க இன்னைக்குக் கண்டிப்பா ட்ரீட் கொடுக்கணும். நைட் வெளிய போகலாமா?”
பரணி சொன்னதற்கு நந்தா பதில் சொல்லாமல் சாப்பிட, கயல் இருவரையும் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
“சொல்லுங்க அண்ணா போகலாமா?”
“இன்னைக்கு வேண்டாம் பரணி. நேத்து வீட்ல என்ன நடந்துச்சுன்னு உனக்கே தெரியும். வருணும் தாரணியும் இல்லாம நாம மட்டும் போனா நல்லா இருக்காது.”
“ஏன்? அவங்களும் வரட்டும்.”
“நான் இப்ப அவங்களைக் கூப்பிடுற மூட்ல இல்லை.”
நந்தா கண்டிப்பாகச் சொல்ல… கயலுக்கு அழுகையே வந்துவிட்டது.
“உங்ககளை விட அவங்க சின்னப் பொண்ணுதானே, நீங்க கொஞ்சம் விட்டுக் கொடுத்தாதான் என்ன?” கயல் கேட்க,
“நான் இப்ப விட்டுக் கொடுத்தா, அவ செஞ்சது தப்புன்னு அவ உணரவே மாட்டா.” என்றான் நந்தா.
“நீங்க எனக்காக அவங்ககிட்ட சண்டை போடுறது எனக்குப் பிடிக்கலை.”
“நான் உனக்காக மட்டும் பேசலை… அவ வருண்கிட்டயும் அப்படித்தான் நடந்துக்கிறா. அவளுக்குத் தெரியனும், அண்ணன் தம்பி எல்லாம் எப்பவும் கூட வரமாட்டாங்க. புருஷன்தான் நமக்கு எல்லாம்னு அவளுக்குப் புரியணும்.”
“அண்ணன் சொல்றது கரெக்ட்தான் அண்ணி.” என்று பரணியும் நந்தாவுக்குப் பேச… கயலுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
சாப்பிட்டுவிட்டு பரணியும் வெளியே சென்றுவிட்டான். கயல் அப்படியே உட்கார்ந்து இருந்தாள்.
error: Content is protected !!