Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

புது வெள்ளை மழை

புது வெள்ளை மழை 28 3

அவர் பாத்திரம் கழுவ, கயல் சமையல் அறையில் காய்கறி நறுக்கிக் கொண்டு இருந்தாள். 


“உங்களுக்குப் புதுசா கல்யாணம் ஆகி இருக்கா?” 


“இல்லை, எங்களுக்குக் கல்யாணம் ஆகி பத்து மாசம் ஆகுது. நான் இத்தனை நாள் மாமியார் வீட்ல இருந்தேன்.” 


“ஓ…இங்க மூன்னு வீடு இருக்கே... அதுல இன்னொருத்தரும் அய்யா போலத்தான். அவருக்கும் பொண்டாட்டி ஊர்லதான் இருக்கு. அவர் மட்டும்தான் இங்க இருக்கார்.” 



Advertisement


அக்கம்பக்கம் யார் இருக்கிறார்கள் எனத் தெரிந்து கொள்வதில் கயலுக்கும் ஆர்வம் இருந்தது. 


“மத்த வீட்ல யாரு இருக்காங்க?” 


“ஒரு வீட்ல பெரிய ஆபீசர் குடும்பம் இருக்கு. அந்த வீட்ல பசங்க ரெண்டும் காலேஜ் படிக்குதுங்க. பையன் வெளியூர்ல படிக்கிறான். பொண்ணு மட்டும் இங்கயே படிக்குது.” 

Advertisement


“இன்னொரு வீட்ல ரெண்டு சின்ன பசங்க இருக்காங்க. பொண்ணு ஒன்னு, பையன் ஒன்னு. ரெண்டும் சரியான வாலுங்க.” 

Advertisement


“எல்லார் வீட்லயும் நீங்கதான் வேலை செய்றீங்களா?” 


“ஆமாம் வீட்டு வேலை நான் செய்றேன். சமையல் வேலை செய்ய இன்னொரு அம்மா வருது. அந்த ஆபீசர் வீட்ல மட்டும் சமையல் பண்ணும்.” 


பேசிக்கொண்டே அவர் பாத்திரம் விளக்கி முடித்து விட, “வீடு பெருக்கி துடைச்சிடவா?” எனக் கேட்டார். 

Advertisement


“இல்லை இன்னைக்குதான் துடைச்சேன். நீங்க துணி துவையுங்க.” 


அவர் துணி துவைக்கச் சென்று விட, கயல் சமையல் செய்தாள். துணி துவைத்து விட்டு வந்தவருக்கு, டீ போட்டுக் கொடுத்தாள். 


டீயை குடித்தபடி கயலை கவனித்தவர், “என்ன மா யோசிக்கிற?” என்றதும், 


“இல்லை இட்லிக்கு ஊற போடணும். ஆனா அரைக்கக் கிரைண்டர் இல்லை. அதுதான் யோசிக்கிறேன்.” என்றாள். 


“நீ ஊற போட்டு வை. நான் சாயங்காலம் வந்து ஆட்டு கல்லுல அரைச்சு தரேன்.” 


“இதுக்காக நீங்க திரும்ப வரணுமா, வேண்டாம்.” 


“நான் சாயங்காலம் ஒருதடவை பாத்திரம் கழுவ வருவேன். கொஞ்சம் முன்னாடியே வந்து உனக்கு அரைச்சு தரேன்.” எனச் சொல்லிவிட்டு சென்றார். 


கயல் அவர் சொன்னபடி இட்லிக்கு ஊற வைத்து விட்டு, நிறையப் பால் இருந்ததால் பால் பாயாசம் செய்தாள். நந்தா வருவதற்குள் ஒரு உறக்கம் போட்டும் எழுந்தாள். 


வரும் போதே அவசரமாகத்தான் வந்தான். “சீக்கிரம் சாப்பாடு எடுத்து வை, போகணும்.” என்றான். 


அவனுக்குச் சாப்பாடு போட்டு விட்டு, வெளியே தோட்டத்தில் இருந்த முருகேசனுக்குப் பாயாசம் கொண்டு போய்க் கொடுத்தாள். 


“எதுக்கு மா?” என்றவர், புன்னகையுடன் வாங்கிக் கொண்டார். 


நந்தா சாப்பிட்டதும் கிளம்பி விட்டான். “நீ பொறுமையா உட்கார்ந்து சாப்பிடு. நான் கிளம்புறேன்.” என அவன் விடைபெற்று செல்ல, கயலுக்கு அதற்குள் போய் விட்டானே என்று இருந்தது. 


சாப்பிட்டு விட்டு டிவி பார்த்துக் கொண்டு இருந்தாள். சொன்னது போல், புஷ்பா வந்துவிட்டாள். 


வீட்டுக்குப் பின்கட்டில் இருந்த உரலை கழுவிவிட்டு, அவள் மாவு அரைக்க, கயல் எதிரில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டு இருந்தாள். 


புஷ்பா அக்கம்பக்கம் கதை எல்லாம் சொல்லி விட்டாள். 


“ரெண்டு பசங்க இருக்காங்க சொன்னீங்க? அவங்க இருக்க மாதிரியே தெரியலையே.” 

“அவங்க லீவுக்குப் பாட்டி, தாத்தா வீட்டுக்கு போயிருக்காங்க. அதுதான் இந்த இடமே அமைதியா இருக்கு. அவங்க அம்மா ரொம்ப நல்ல மாதிரி. அந்த ஆபீசர் பொண்டாட்டி மாதிரி இல்ல.” 


அவர் சொல்லிக் கொண்டிருந்தபோதே, “புஷ்பா, அப்பவே வந்தியே இன்னும் இங்க வராம என்ன பண்ற?” எனக் குரல் கேட்டது, 


“சொன்னேன் இல்ல… எப்படிக் கரெக்ட்டா நோட்டம் விடுது பாரு. இதுதான் போலீஸ்ல இருந்திருக்கணும்.” என்றவள், 


“இரும்மா, இங்க வேலையை முடிச்சிட்டு வரேன்.” எனக் குரல் கொடுத்தாள். 


“அந்த அம்மாவுக்கு நான் வேற வீட்ல வேலை செய்றதே பிடிக்காது. என்னைப் போகவே விடாது. எதாவது வேலை கொடுத்திட்டே இருக்கும்.” 


பேசிக்கொண்டே வேகமாக மாவை வழித்து உரலை கழுவி விட்டு, அவள் எழுந்து கொள்ள, கயல் பாயாசம் கொண்டு வந்து கொடுத்தாள். 


“ஒரு டப்பாவுல போட்டு கொடுக்கிறியா? என் பையனுக்குப் பிடிக்கும்.” 


கயலுக்கு அவரின் நிலை புரிந்தது. தன் பிள்ளையை விட்டுவிட்டு தான் மட்டும் சாப்பிட ஒரு தாயிக்கு மனம் வராது. அவள் சொன்னபடியே செய்தாள். 


புஷ்பாவும் சென்ற பிறகு கயலுக்குப் பொழுதே போகவில்லை. ஆறு மணி ஆனதும், விளக்கு ஏற்றி சாமி கும்பிட்டாள். அதற்காக வாசல் கதவை திறந்து வைத்தவள், ஹாலில் உட்கார்ந்து இருந்தாள். 


“ஹலோ, நான் வரலாமா?” எனக் குரல் கேட்டதும், திடுக்கிட்டுப் போய்த் திரும்பி பார்த்தாள். 

இளவயது பெண்மணிதான் நின்று கொண்டு இருந்தார். 

“என் பேரு ஷில்பா. நான் உங்க பக்கத்துக்கு வீட்ல இருக்கேன்.” என்றதும், கயல் புன்னகையுடன் வரவேற்றாள். 


“வாங்க, வாங்க.” 


“உங்க பேரு என்ன?” 


“என் பேரு கயல்விழி. நீங்க ஊருக்கு போயிருக்கீங்கன்னு புஷ்பா சொன்னாங்க.” 


“அது என் பசங்க மட்டும்தான். நான் இங்கதான் இருக்கேன்.” 


“ஓ… உங்க ஊர் எது.” 


“நாங்க கர்நாடகா.” 


“தமிழ் நல்லா பேசுறீங்க?” 


“பெங்களூர் மக்கள் நல்லா தமிழ் பேசுவாங்கங்க. நீங்கதான் அங்க நிறையப் பேர் இருக்கீங்களே. வந்து எங்களுக்குச் சொல்லி கொடுத்துடீங்க.” 


ஷில்பா வெகுநாள் பழகியதை போலப் பேச… கயல் புன்னகையுடன் ஊரில் இருந்து கொண்டு வந்த நொறுக்குத்தீனியை எடுத்து வைத்தாள். 


கயல் காபி போட சமையல் அறைக்குச் செல்ல, தட்டை கையில் எடுத்துக் கொண்டு ஷில்பாவும் அங்கு வந்து நின்று பேசினாள். 


“நீங்க நல்லா சமைப்பீங்களா… காலையில நான் டிபன் தரேன்னு சொன்னதுக்கு உங்க வீட்டுக்காரர் வேண்டாம்னு சொல்லிட்டார்.” 

“உங்களுக்கு எதுக்குச் சிரமமுன்னு நினைச்சு இருப்பார்.” 


சிறிது நேரத்தில் ஷில்பா கிளம்ப, “வேலை இருக்கா? கிளம்பிடீங்க.” கயல் கேட்க, 


“ஊர்ல இருந்து மாமனார் மாமியார் வந்திருக்காங்க. அதுதான் பிஸியா இருக்கேன். அவங்க போனதும் நாம சேர்ந்து, ஒரு கலக்கு கலக்கலாம்.” 


“நம்மை மாதிரி போலீஸ்காரங்களைக் கல்யாணம் பண்ணவங்க, நாமதான் சேர்ந்து சுத்தணும். அவங்க நம்மோட சுத்தனும்னு எதிர்பார்க்க கூடாது.” என்றாள். 


இந்த ஒரு நாளிலேயே கயலுக்கு அது புரிந்து இருந்தது. கயலின் பொறுமையை வெகுவாகச் சோதித்து விட்டு, அன்று நந்தா வீட்டுக்கு வந்த போது இரவு பத்து மணி. 


இன்றுதான் ஊரில் இருந்து வந்திருக்கிறாள், இன்றே இந்த நிலையா? 


கயல் கொதி நிலையில் இருந்தாள். பேசினால் எங்கே கொந்தளித்து விடுவோமோ என வாயை இறுக மூடிக்கொண்டு, அவனுக்கு இரவு உணவு எடுத்து வைத்துக் கொண்டு இருந்தாள். 


நந்தா அமைதியாகச் சென்று குளித்து விட்டு வந்தவன், மனைவியின் முகத்தைப் பார்த்து விட்டுச் சிரித்துக் கொண்டான். 


நந்தா சாப்பிட உட்கார, அப்போது யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டதும், அவன் கதவை திறக்க எழுந்து சென்றான். 


“இப்ப யாருப்பா?” எனக் கயலுக்கு எரிச்சலாக இருக்க, அவளும் சமையல் அறை வாயிலில் நின்று யார் என்று பார்த்தாள். 


ஜன்னல் வழியாகப் பார்த்த நந்தா, கயலை திரும்பி பார்த்து விட்டு வேகமாகக் கதவை திறந்தான். 

நம்மை ஏன் பார்கிறார் எனக் கயல் நினைக்க, வெளியே அவளின் அப்பா அன்பரசு நின்று கொண்டு இருந்தார். 


“வாங்க.” நந்தா சொல்லிக் கூட முடிக்கவில்லை. அன்பரசு பொரிய ஆரம்பித்து விட்டார். 


“நீங்க பண்றது சரியில்லை. அவங்களை விட நீங்க யாரு? நான் ரொம்பப் பொறுமையா இருந்துட்டேன். என் பையனை உள்ள வச்ச போதே, நான் யாருன்னு காட்டி இருக்கணும்.” 


நந்தாவுக்கும் கோபம் வந்துவிட்டது. “நீங்க யாருன்னு காட்டுங்களேன், நானும் பார்க்கிறேன்.” என்றான் திமிராக. 


“இந்தத் திமிருக்கு அனுபவிக்கப் போறீங்க. நான் என்ன பண்றேன்னு சொல்ல மாட்டேன், செய்வேன்.” சொல்லிவிட்டு திரும்பிய அன்பரசு, அப்போதுதான் அதிர்ச்சி விலகாமல் நின்று கொண்டிருந்த மகளைப் பார்த்தார். 


அவருக்கு அவள் இங்கே இருப்பது தெரியாது. அவள் மெட்ராஸில் இருக்கிறாள் என நினைத்து இருந்தார். கயலின் முகத்தைப் பார்த்ததும், இருவரும் பேச்சை நிறுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!