Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Maiyam Kollum Puyal

Maiyam Kollum Puyal 6 2

“வா பா யுவன்”, என்று வரவேற்று அவனை அமர வைத்தாள் தாமரை.

“நீங்க இவ்வளவு பெரிய பணக்காரங்கன்னு எனக்கு தெரியாது ஆண்ட்டி”



Advertisement

“பணம் மட்டும் தான் பா இருக்கு”, என்று விரக்தியாக சொன்னாள் தாமரை.

“அதனால தான் யுக்தா அப்பா அப்படி இருக்காரோ? பரம்பரை பணக்காரங்கன்னா கொஞ்சம் கர்வத்தோட தானே இருப்பாங்க?”

Advertisement

Advertisement

“இது என் அப்பா வீடு யுவன். இந்த சொத்து எல்லாம் என் அப்பா சம்பாதிச்சது. என் வீட்டுக்காரர் அதை பாத்துக்குறார் அவ்வளவு தான்”, என்று ஆரம்பித்து அனைத்தையும் சொன்னாள்.

“எனக்குன்னு சொந்தக்காரங்க யாரும் இல்லைப்பா. எனக்கு அப்புறம் யுக்தாவுக்கு கொஞ்சம் ஆள் இருக்கணும். உன்னைப் பாத்த உடனே எனக்கு உன்னோட பொறுப்புணர்வு தெரிஞ்சது. இந்த வயசுலே இவ்வளவு தெளிவா இருக்குற நீ, எதிர் காலத்துல நல்லா வருவ. எனக்கு ஒரு உதவி பண்ணுவியா?”

Advertisement

“சொல்லுங்க ஆண்ட்டி”

“எனக்கு ஏதாவது ஆனா கூட நீ வாழ்க்கை முழுமைக்கும் யுக்தாவுக்கு துணையா இருக்கணும். செய்வியாப்பா?”

“ஆண்ட்டி நான்.. அவ்வளவு பெரிய ஆள் எல்லாம் இல்லை. காலேஜ்ல வச்சு என்னால அவளைப் பாத்துக்க முடியும். ஆனா வாழ்க்கை புல்லா என்னால எப்படி அவ கூட வர முடியும்? மெத்து பத்து நிமிஷம் அவ கிட்ட பேசினதுக்கே அவ அப்பா ரொம்ப கோப பட்ட மாதிரி இருந்துச்சு”

“இனி அவரைப் பத்தி யோசிச்சா என் மக இல்லாம போயிருவா. இதுக்கு மேல அவளுக்கு அனுபவிக்க வலின்னு எதுவும் இல்லை யுவன். அவ இனிமேலாவது நல்லா இருக்கணும்னு தோணுது. ஆனா என்ன செய்யன்னு எனக்கு ஒண்ணும் புரியலை. சரி நீ யுக்தாவைப் போய் பாரு. நான் உனக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன். கீழ இருக்குற அந்த ரூம்ல தான் இருக்கா, போ பா”, என்று சொன்னதும் தடதடக்கும் மனதுடன் அந்த அறைக்குள் நுழைந்தான் யுவன்.

அங்கே தளர்ந்த தோற்றத்துடன் அழுது அழுது வீங்கிய முகத்துடன் படுத்திருந்தாள் யுக்தா. அவன் கண்ணில் அவளுடைய காயம் தெரிய வில்லை என்பதால் அவளுக்கு என்ன ஆனது என்று தெரிய வில்லை. அதனால் சாதாரணமாக அவளை நெருங்கிச் சென்றான்.

அருகில் சென்று “யுக்தா”, என்று அவன் அழைத்ததும் அவன் குரல் கேட்டு கண் விழித்தாள் யுக்தா.

தனக்கு எதிரில் நின்ற யுவனை பார்த்து அவள் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.

பயத்துடன் அவனைப் பார்த்தவள் அடுத்த நொடி “அம்மா”, என்று அலறினாள். அவள் அலறலில் அவன் திகைத்துப் போனான். அவளது பயமும், அதுவும் தன்னைக் கண்டு அவள் கத்திய கத்தலும் அவனை அதிகம் பாதித்தது. அப்போது அங்கே வந்த தாமரை மகளை வாரி அணைத்து “பயப்படாத பாப்பா, அப்பா இங்க இல்லை. நான் தான் யுவனை வரச் சொன்னேன். பேசிட்டு இரு”, என்று சொன்னதும் தான் அவள் பயம் நீங்கியது. தாமரை அவ்வாறு சொன்னதும் தான் யுக்தாவின் பயம் அவளை விட்டு அகன்றது. கண்களை விரித்து அவனைப் பார்த்தாள். அவள் அறிந்து அவளுடைய வீட்டுக்கு வந்த முதல் ஆண்மகன் அவன் தான்.

தாமரை அங்கிருந்து சென்றதும் அங்கே மௌனம் நிலவியது. தான் பேசாமல் அவள் பேச மாட்டாள் என்பதை உணர்ந்த யுவன் “உனக்கு என்ன ஆச்சு யுக்தா? நேத்து உங்க அப்பா உன்னை அடிச்சாங்களா?”, என்று கேட்டான் யுவன்.

“ம்ம்”, என்னும் விதமாய் தலையசைத்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாக பொழிந்தது.

“சாரி, என்னால தான் எல்லாம். நீ எவ்வளவோ சொன்ன? நான் தான் கேக்கலை. உன்னை வற்புறுத்தி கூட்டிட்டு போனேன். என்னை மன்னிச்சிரு யுக்தா”, என்று உண்மையான வருத்தத்துடன் சொன்னான். அவன் வருத்துவது பிடிக்காமல் “பரவால்ல”, என்றாள் யுக்தா.

“நீ பரவால்லன்னு சொன்னாலும் என் மேல உனக்கு கண்டிப்பா கோபம் இருக்கும்”

“அதெல்லாம் இல்லை”

“அப்படின்னா நாம இனி பிரண்ட்ஸ் தானே? என் கிட்ட பேசாம இருக்க மாட்டல்ல?”

“ஆனா அப்பா…. எனக்கு பயமா இருக்கே?”, என்று சொல்லும் போதே அவள் கண்களில் மிரட்சி தெரிந்தது.

“இனி உன் அப்பா உன்னை அடிக்கவே மாட்டாங்க. இனி அவர் கை உன் மேல படாது. நான் பட விட மாட்டேன் போதுமா?”, என்று கேட்டான் யுவன். அவன் குரலில் அவ்வளவு உறுதி இருந்தது.

அவன் சொன்னதைக் கேட்டு அவள் கண்கள் விரிந்தது. இது வரை தாமரையைத் தவிர தனக்கு யாரும் இல்லை என்று எண்ணிய யுக்தா மனதில் அவளுக்கென்று யுவன் இருக்கிறான் என்று ஆழப் பதிந்தது அந்த நிமிடத்தில் தான். எப்போதும் தனக்காக அவன் இருப்பான் என்று அந்த நிமிடம் முழுதாக நம்பினாள்.

அப்போது அங்கே வந்த தாமரை அவனுக்கு மட்டும் ஜூஸ் கொடுக்க “அம்மா எனக்கு”, என்று கேட்டாள் யுக்தா.

“உனக்கு இப்ப வேண்டாம் பாப்பா”

“ஏன் ஆண்ட்டி, அவளும் குடிக்கட்டும். ரொம்ப களைப்பா தெரியுறா”, என்று தாமரையிடம் சொன்ன யுவன் யுக்தா புறம் திரும்பி “இதோ இதுல நிறைய ஜூஸ் இருக்கு. இந்தா யுக்தா நீ குடிச்சிட்டு தா”, என்று சொல்லி டம்ளரை நீட்டினான்.

“அவளுக்கு வேண்டாம் யுவன், கொடுக்காத”, என்று அவசரமாக மறுத்தாள் தாமரை.

அவன் குழப்பமாக அவளைப் பார்க்க “அம்மா, எனக்கு வேணும், பிளீஸ்”, என்று கெஞ்சினாள் யுக்தா.

“வேண்டாம்னா வேண்டாம் பாப்பா”, என்று தாமரை சொன்னதும் யுக்தா முகம் சுருங்கிப் போனது.

“ஏன் ஆண்ட்டி? கொஞ்சம் குடிக்கட்டுமே?”, என்று கேட்டான் யுவன்.

“அவ ஜூஸ் குடிச்சா புண்ணுல நீர் வச்சிரும். அப்புறம் சீக்கிரம் ஆறாது பா. அவ தான் ரொம்ப கஷ்டப் படுவா”

“புண்ணா? என்ன புண்ணு/”

“உன் கிட்ட நடந்ததைச் சொல்லலையா??”, என்று கேட்டுக் கொண்டே யுக்தாவின் இரண்டு கையையும் எடுத்து அவன் முன் நீட்டினாள் தாமரை. இரண்டு உள்ளங்கைகளிலும் தீப்புண் கொப்பளித்துப் போய் இருந்தது. அதில் மஞ்சள் நிறத்தில் மருந்து தடவி இருக்க பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அதைப் பார்த்து அதிர்ந்து போனான் யுவன். இவ்வளவு பெரிய காயத்தை அவன் எதிர் பார்க்கவே இல்லை.

“பாத்தியாப்பா இவ நிலைமையை. இது மட்டும் இல்லை. இன்னும் இருக்கு”, என்று சொன்ன தாமரை அவள் கால் மேல் லேசாக மூடியிருந்த அந்த போர்வையை எடுத்து அவளது காலையும் காட்டினாள்.

வலது பக்க காலின் மேல் பெரிய அளவில் சூடு போடப் பட்டிருந்தது. அதைப் பார்த்து மேலும் அதிர்ந்த யுவன் “ஐயோ?”, என்று அலறிய படியே அவள் அருகில் அமர்ந்தான். இப்படி ஒரு நிலையை அவன் எதிர் பார்க்கவே இல்லை.

“கடவுளே இவ்வளவு வலியை இவ எப்படி தாங்கிட்டு இருக்கா? இது எல்லாம் என்னால் தானே?”, என்று எண்ணி அவன் கண்களில் கண்ணீர் வந்தது.

தனக்காக அழும் அவனை வியப்பாக பார்த்த படி அமர்ந்திருந்தாள் யுக்தா. இப்போது அவளது வலி கூட அவளுக்குத் தெரியவில்லை.

அப்போது யவனுடைய போன் அடித்தது. சுந்தரி தான் அவனை அழைத்திருந்தாள்.

அதை எடுத்தவன் “சொல்லு மா”, என்றான்.

“எங்க டா இருக்க? இன்னும் வீட்டுக்கு வரலை. ஆமா உன் குரல் ஏன் ஒரு மாதிரி இருக்கு? அழுதியா டா?”

“அம்மா யுக்தா… அவளுக்கு”, என்று அவன் திக்கித் திணற “அவளுக்கு என்ன டா? நீ இப்ப எங்க இருக்க?”, என்று சுந்தரி அவசரமாக கேட்டாள்.

அம்மாவிடம் சொல்லாமல் யுக்தா வீட்டுக்கு வந்தது தவறு என்று அந்த நிமிடம் உறைக்க சுந்தரியிடம் என்ன பதில் சொல்ல ஏந்துர் தடுமாறினான்.

அவனையே கவனித்துக் கொண்டிருந்த தாமரை “நான் பேசட்டுமா?”, என்று கேட்டாள். “அம்மா யுக்தாவோட அம்மா உன் கிட்ட பேசனுமாம்”, என்று சொல்லி விட்டு போனை தாமரையிடம் கொடுத்தான்.

தாமரை பேசிய படியே அந்த அறையை விட்டு வெளியே சென்று சுந்தரியிடம் நடந்த அனைத்தையும் சொன்னாள்.

“கவலைப்படாதீங்க, நாங்க இப்பவே அங்க கிளம்பி வரோம்”, என்று சொன்ன சுந்தரி கணவனை அழைத்துக் கொண்டு இங்கே கிளம்பினாள்.

யுவனுக்கோ யுக்தாவின் நிலைமையைப் பார்த்து கண்ணீரை அடக்கவே முடியவில்லை. அவன் அழுவதைத் தாங்க முடியாமல் “எனக்கு ஒண்ணும் இல்லை யுவன். நீ அழாத”, என்று சிறு குழந்தை போல் ஆறுதல் சொன்னாள் யுக்தா.

அந்த நிமிடம் அவனுக்கு அவளை அள்ளி எடுத்து கொஞ்ச வேண்டும் போல் இருந்தது. அவளது வலியை தான் வாங்கிக் கொள்ள வேண்டும் எண்ணினான். அவன் மனதில் எந்த விகல்பமும் இல்லை தான். ஆனால் அவளை கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டும் வேரூன்றியது. என்ன நடந்தது என்று அவளிடம் அவன் விளக்கமாக கேட்க அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் யுக்தா.

அப்போது அங்கே வந்த சுந்தரி மற்றும் ஈஸ்வரனை தாமரை தான் வரவேற்று யுக்தாவின் அறைக்கு அழைத்துச் சென்றாள். அவர்களைக் கண்டு யுவன் படக்கென்று கட்டிலில் இருந்து எழுந்து கொண்டான். யுக்தா அவர்களைப் பார்த்து மெல்லியதாக புன்னகைத்தாள் அவ்வளவே. மற்றபடி எதுவும் பேச வில்லை. அவள் வளர்ந்த விதமே அப்படி தான். அவளால் யாரிடமும் அதிகம் ஒட்ட முடியாது.

மகனை ஒரு முறை முறைத்த சுந்தரி யுக்தாவின் அருகில் சென்று அமர்ந்து அவள் தலையை வருடிக் கொடுத்தாள். “இப்ப எப்படி டா இருக்கு? ரொம்ப வலிக்குதா?”, என்று சுந்தரி கேட்டதும் ஆம் என்னும் விதமாய் தலையசைத்தாள் யுக்தா. கரிசனத்துடன் விசாரிக்கும் சுந்தரியை யுக்தாவுக்கு பிடித்துப் போனது.

ஈஸ்வரன் கூட அவளது நிலையைக் கண்டு கலங்கிப் போனார். சிறிது நேரம் அனைவரும் ஏற்கனவே நடந்ததைப் பற்றியே பேச தன்னைச் சுற்றி அவர்கள் நிற்பதும் தன்னைப் பற்றி பேசுவதும் யுக்தாவுக்கு தான் ஒரு மாதிரி இருந்தது.

அதை உணர்ந்த ஈஸ்வரன் “அவ ரெஸ்ட் எடுக்கட்டும், நாம கொஞ்ச நேரம் வெளிய இருக்கலாம்”, என்று சொல்லி மற்றவர்களை அழைத்து வந்தார்.

யுவனும் அங்கிருந்து நகர பார்க்க அவன் கையைப் பற்றினாள் யுக்தா. அவன் அவளைப் பார்க்க “ஒரு அஞ்சு நிமிஷம் இங்க இரேன்”, என்றாள்.

அவள் அருகே கட்டிலில் அமர்ந்தவன் “எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு யுக்தா. எனக்கு தெரிஞ்சு யாருமே இவ்வளவு கஷ்டப் பட்டு பாத்தது இல்லை. என்னால தான்னு எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு டா சாரி”, என்றான்.

“இது எனக்கு பழக்கம் தான். முன்னாடி எல்லாம் ஒரு இடத்துல தான் சூடு விழும். இந்த தடவை நானே கம்பியை பிடிச்சு மூணு இடத்துல வாங்கிக் கிட்டேன்”

“முன்னாடியும் உங்க அப்பா இப்படி தான் செய்வாரா?”

“ஆமா, இதோ இது கூட அவர் போட்ட சூடு தான்”, என்று தன்னுடைய முழங்கையைக் காட்டினாள். அந்த இடத்தில் காயம் நன்றாக ஆறியிருந்தாலும் தழும்பு மிச்சம் இருந்தது. அப்போது தான் அவள் பெல்ட்டால் அடி வாங்கிய தடமும் இருந்தது.

“ஏய் இது என்ன சிவப்பு சிவப்பா இருக்கு?”, என்று அவள் கையை ஆராய்ச்சி செய்து கொண்டே கேட்டான்.

“எப்பவும் முதல்ல பெல்ட் அடி தான் விழும். அப்புறம் தான் சூடு”, என்று அவள் உதட்டைப் பிதுக்கிய படி சொன்னதும் அவளை தன்னுடைய மார்பில் சாய்த்துக் கொண்டான் யுவன். அவளை தன்னுடைய கைக்குள் பத்திரப் படுத்தி வைக்க வேண்டும் என்ற வேகம் வந்தது.

அவளோ அவன் செய்கையில் திகைத்து போனாள். இது வரை அவள் எந்த ஆணிடமும் இப்படி நெருங்கியதில்லை. அதனால் அவன் கைக்குள் இருந்து விலக நினைக்க அவன் அவளை விட வில்லை.

அவளுக்கு மூச்சு மூட்டுவது போல இருந்தது. கூடவே அவனது வேகமான இதயத் துடிப்பையும் வெகு அருகாமையில் கேட்டாள்.

“சாரி அம்மு, சத்தியமா இப்படி எல்லாம் நடக்கும்னு எனக்கு தெரியாது டி. நான் பாவி. உன்னை இவ்வளவு கஷ்டப் பட வச்சிட்டு நான் கல்லு மாதிரி இருக்கேன்?”, என்று தன்னை மறந்து புலம்பிய படியே இருந்தான் யுவன்.

அவனது அம்மு என்ற வார்த்தை, டி என்ற அழைப்பு அவளுக்குள் புதுவிதமான மாற்றங்களை உருவாக்கியது. அவனை தன்னுடைய இதயத்துக்கு நெருக்கமானவனாக அவள் மனது மாற்றிக் கொண்டிருந்தது.

புயல் வீசும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!