Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

புது வெள்ளை மழை

புது வெள்ளை மழை 28

புது வெள்ளை மழை



அத்தியாயம் – 28

மறுநாள் காலை கயல் பரீட்சைக்குக் கிளம்பும் போதே நந்தா சொல்லி இருந்தான். மதியம் தான் அவளைக் கல்லூரிக்கு அழைக்க வருவதாக. அதனால் சீக்கிரமே பரீட்சை முடித்துவிட்டு, அவள் அவனுக்காகக் காத்திருந்தாள். 


நந்தா, கல்லூரி வாயிலில் காரை நிறுத்த, கயல் விரைந்து வந்து காரில் ஏறினாள். 


“அதுக்குள்ள பரீட்சை எழுதி முடிச்சிட்டியா?” 



Advertisement


“நான் அப்பவே முடிச்சிட்டேன்.” 


“எதாவது எழுதினியா? இல்ல வெறும் பேப்பரை மடிச்சு கொடுத்திட்டு வந்துட்டியா?” 


நந்தா சிரித்துக்கொண்டே கேட்க, கயல் அவனை முறைத்தாள். அவன் காரில் இருந்து இறங்க… எதற்கு என்று பார்க்கும்போதே, அவள் பக்க காரின் கதவை திறந்தவன், “இறங்கு.” என்றான். 

Advertisement


எதற்கு என்று புரியாமல் கயல் இறங்கி நிற்க, “நீதான் இன்னைக்குக் கார் ஓட்டுற.” என்றான். 

Advertisement

நானா? கயல் திகைக்க… நீதான் என்றவன், காரில் ஏறி உட்கார்ந்தும் இருந்தான். 


கயல் சென்று ஓட்டுனர் இருக்கையில் உட்கார்ந்தவள், நந்தாவை திரும்பி பார்த்து புன்னகைத்துவிட்டு காரை எடுத்தாள். அவள் பதட்டப்படாமல் நிமிர்வாக அமர்ந்து காரை ஓட்டினாள். மெதுவாக ஓட்டினால் கூட… அதில் ஒரு நேர்த்தி இருந்தது.

நந்தா எப்போதுமே கவனித்து இருக்கிறான். எந்த ஒரு வேலையை எடுத்துக் கொண்டாலும், கயல் நேர்த்தியாகச் செய்வாள். இப்போது கார் ஓட்டும் போதும் அப்படித்தான். 

Advertisement


கவனம் சாலையில் இருந்தாலும், தன் கணவனின் முகத்தையும் ஆர்வமாகப் பார்த்துக் கொண்டாள். அவள் ஆர்வத்தைப் பொய் ஆக்காமல், “ரொம்ப நல்லா ஓட்டுற. நீ இவ்வளவு நல்லா ஓட்டுவேன்னு, நான் நிஜமா எதிர்பார்க்கலை.” என்றான். 


தன் கணவனிடம் பாராட்டு பெற்ற மகிழ்ச்சி கயல் முகத்தில் நன்றாகவே தெரிந்தது. அவள் வீட்டுக்கு செல்ல… நந்தா அவள் செல்ல வேண்டிய பாதையைச் சொன்னான். 


“நாம இப்ப வீட்டுக்கு போகலையா?” 


“இல்லை… வெளிய போய்ச் சாப்பிடலாம்.” 


அவர்கள் இருவர் மட்டும்தான் செல்வதாகக் கயல் நினைத்தாள். ஆனால் ஓட்டல் வாயிலில் காரை நிறுத்திவிட்டுப் பார்க்கும்போதுதான், அங்கே மற்றவர்களும் நிற்பது தெரிந்தது. 


மற்றவர்களைப் பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தாலும், தாரணியைப் பார்த்ததும், கயலின் முகம் மாறவே செய்தது. 


காரில் இருந்து இறங்குவதற்கு முன், “கயல், இனி தாரணி முன்னாடி மாதிரி இருக்க மாட்டா. அவ செஞ்சது தப்புன்னு அவ உணர்ந்திட்டா. நேத்து நைட் அவ வீட்டுக்கு வந்திருந்தா, உன்கிட்ட பேசனும்னு சொன்னா, ஆனா நீ தூங்கிட்ட. இந்த ட்ரீட் கூட உன் பிறந்தநாளுக்கு அவங்கதான் கொடுக்கிறாங்க.” 

முடிந்தவரை நந்தா வேகமாகச் சொன்னான், கேட்ட கயல்விழிக்கு ஆச்சர்யமாக இருந்தது. வருணும், தாரணியும் காரை நோக்கி வந்து கொண்டு இருந்தனர். இவர்கள் காரை விட்டு இறங்கியதும், உற்சாகமாக வரவேற்றனர். 


“நீ உன் பிறந்தநாள்ன்னு இந்த அண்ணாகிட்ட சொல்லவே இல்லை பார்த்தியா?” 


“நானேவா சொல்வேன், நீங்கதான் கண்டுபிடிக்கணும்.” வருணுக்கு கயலும் சிரித்துக்கொண்டே பதில் கொடுத்தாள். 


பேசிக்கொண்டே எல்லோரும் ஹோட்டலின் உள்ளே செல்ல, அங்கே குழலியும் பரணியும் ஏற்கனவே உட்கார்ந்து இருந்தனர். 


“நீங்க காலேஜ்ல இருந்து நேரா வந்துடீங்களா அத்தை.” 


“ஆமாம் பரணி வந்து கூடிட்டு வந்தான்.” 


எல்லோரும் இருக்கையில் அமர்ந்ததும், ”கயல், நீ இதுக்கு முன்னாடி ஹோட்டல்ல, என்ன எல்லாம் சாப்பிட்டிருக்க?” என வருண் கேட்டான். 


“நான் கல்யாணத்துக்கு முன்னாடி ஹோட்டலுக்குப் போனதே இல்லை. இவரோடதான் ஒருதடவை போயிருக்கேன். அப்ப சாதம்தான் சாப்பிட்டோம்.” 


“இங்க சாப்பிட்டு பாரு அசந்துடுவ.” என்றான். 


அப்படி என்ன வரப்போகிறது? எனக் கயல் ஆவலாகப் பார்க்க, ஒரு மெகா சைஸ் தட்டு அவள் முன்பு வைக்கப்பட… அதில் சின்னக் கிண்ணங்களில் விதவிதமான உணவு பதார்த்தங்கள் இருந்தது. 

“இவ்வளவா? பார்த்ததுக்கே வயிறு நிரஞ்சிடும் போலையே. இது பேர் என்ன?” 

“இது பேர் பஞ்சாபி தாளி. எப்பவும் சாப்பிடுறது போல இருக்கக் கூடாது. உனக்குப் புதுசா இருக்கனும்ன்னு தான் இங்க கூடிட்டு வந்தோம்.” தாரணி சொல்ல, கயல் இன்னும் ஆச்சர்யம் விலகாமல் பார்த்துக் கொண்டு இருந்தாள். 


“எவ்வளவு நேரம் பார்த்திட்டே இருப்ப? சாப்பிடு.” என்றான் நந்தா. 


“எதுல இருந்து ஆரம்பிக்கிறதுன்னே தெரியலை?” 


கயல் சொன்னதைக் கேட்டு மற்றவர்கள் சிரித்தனர். “ஸ்வீட்ல இருந்து ஆரம்பி.” என்றான் வருண்.

இனிப்பிலேயே மூன்று வகைகள் இருந்தது. அது தவிரக் குட்டி குட்டி பூரிகள், ரொட்டி, பரோட்டா, தொட்டுக்கொள்ளக் குழம்பு வகைகள், ஜீரா ரைஸ், புலாவ், தயிர் சாதாம், பாதாம் கீர் என எல்லாமே இருந்தது. 


ஒவ்வொன்றையும் கயல் எடுத்து ருசி பார்த்து, அது என்ன என்று அலசி ஆராய்ந்து சாப்பிட…. அவளோடு தாரணியும் குழலியும் இணைந்து கொண்டனர். ஆண்கள் மூவரும் உணவை ஒரு கட்டு கட்டினர். அவர்கள் கொடுத்ததற்கும் மேலாக இன்னும் வேறு வாங்கிச் சாப்பிட்டனர். 


கடைசியாகப் பீடா வர…. அதைச் சாப்பிட கூட வயிற்றில் இடம் இல்லை. கொஞ்சம் நேரம் அங்கயே உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். 


அப்போது தாரணி வருணிடம் எதோ சொல்ல… “அவன் நீயே கொடு.” என்றான். 


“உன்னுடைய பிறந்தநாளுக்கு எங்களோட பரிசு.” என்று சொல்லி தாரணி ஒரு பையைக் கயலிடம் கொடுத்தாள். 


“எதுக்கு இதெல்லாம்?” கயல் தயங்க. 


“முதல்ல வாங்கு.” என்றான் நந்தா. 

கயல் வாங்கிப் பையைப் பிரித்துப் பார்க்க… உள்ளே அவளுக்கு வேலைப்பாடுகள் அமைந்த சுடிதார் இருந்தது. 


“ரொம்ப நல்லா இருக்கு.” கயல் சொல்ல, 


“உனக்காகத் தாரணிதான் செலக்ட் பண்ணா. இந்த ஹோட்டல் கூடப் போகலாம்னு சொன்னது அவதான்.” வருண் மனைவியைத் தாங்கி பேச…. 


“ரொம்ப நல்லா இருந்துச்சு அண்ணி. உங்களாலதான் இன்னைக்கு வித்தியாசமா சாப்பிட்டு இருக்கேன். எனக்கு இப்படியெல்லாம் இருக்கும்ன்னு தெரியாது.”கயல் சொல்ல, கேட்ட எல்லோருக்குமே மகிழ்ச்சியாக இருந்தது. 


அதுவும் தாரணிக்கு கேட்கவே வேண்டாம். அவ்வளவு சந்தோஷமாக உணர்ந்தாள். வருண் சொன்னதற்குக் கயலும் அப்படியா எனக் கேட்டுவிட்டு இருந்திருக்கலாம். ஆனால் அவள் அப்படி இருக்கவில்லை. தாரணி அவளுக்காக ஒன்று செய்தபோது, அவள் அதை மதித்துப் பேசியது, இதமாக இருந்தது. 


இப்படி நாமும் இருக்க வேண்டும் எனத் தாரணி நினைத்துக் கொண்டாள். 


அங்கிருந்து கிளம்புவதற்கு முன் தட்டில் இருத்த பீடாவை ஆளுக்கு ஒன்று எடுத்து போட்டுக் கொண்டனர். கயல் அதுவரை வெத்தலை பாக்கு போட்டதே இல்லை. 


“வெத்தலை பாக்கு போட்டா மாடு முட்டும்.” அவள் பீடாவை கையில் வைத்துக் கொண்டு சொல்ல… 


“அது கல்யாணத்துக்கு முன்னாடி. இப்பதான் உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு இல்லை. நீயும் போடலாம்.” வருண் சொன்ன பிறகே கயல் வாயில் போட்டுக்கொண்டாள். 


அதைச் சுவைத்தவளின் விழிகள் ஆச்சர்யத்தில் பெரிதாக விரிந்தது. “ரொம்ப நல்லா இருக்கு. ஒண்ணுதான் தருவாங்களா?” அவள் கேட்டதும், எல்லோருக்கும் சிரிப்பு வந்துவிட்டது. 


வருண் அங்கிருந்த சர்வரை அழைக்க, நந்தா தடுத்தான். “ஒண்ணுதான் சாப்பிடனும். ரொம்பப் போட்டா ஒருமாதிரி இருக்கும்.” 


எல்லோரும் காரின் அருகே வந்தனர். “நீயே ஓட்டு.” எனக் காரின் சாவியை நந்தா கயலிடம் கொடுத்தான். 


“நல்லா கார் ஓடுறீங்க அண்ணி.” தாரணி சொல்ல… கயல் புன்னகைத்தாள். இப்போதுதான் முதல்தடவையாகத் தாரணி கயலை பாராட்டி பேசி இருக்கிறாள். 


“அதைக் கத்துகிறதுகுள்ள உங்க அண்ணி படுத்தின பாடு, எனக்கு மட்டும்தான் தெரியும்.” நந்தா சோகமாக சொல்ல,


“ஆமாம், சொல்லிக் கொடுத்த அந்தப் பொண்ணுதான் இன்னும் பாவம்.” 


கயல் சொன்னதைக் கேட்டு புன்னகைத்த நந்தா, “அதையும் ஒத்துகிற பார்த்தியா, நீ ரொம்ப நல்லவ கயல்.” என்றான். 


“உண்மைதானே சொன்னீங்க.” கயலும் புன்னகைக்க… இருவரையும் கவனித்த தாரணிக்கு ஒன்று மட்டும் புரிந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் விரும்புகிறார்கள் என்று. நல்ல மனநிலையிலேயே எல்லோரும் வீடு திரும்பினர். 


ஊருக்கு கிளம்பும் வரை கயல்விழியும் தாரணியும் ஒன்றாகவே இருந்தனர். 


“இந்தப் பொண்ணுங்க பேசினாலும் ரொம்பப் பேசுங்க போலிருக்கு.” என வருண் சொல்ல, நந்தா சிரித்தான். 


இரவு இரயிலில் ஏறி உட்கார்ந்ததும் கயல் நந்தாவை பார்த்து புன்னகைக்க… 

“இப்போதான் உனக்கு என்னைத் தெரியுதா? மத்தவங்களைக் கூடக் கண்டுக்காம அப்படி என்னதான் பேசுவீங்க?” எனக் கேட்டான். 


“நாங்க பேச மட்டுமா செஞ்சோம். பேசிட்டே எவ்வளவு வேலை பார்த்தோம்.” 


நந்தா கயலின் வலது கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான். 


“அப்புறம் உன் நாத்தனார் கூட ராசி ஆகிட்ட போலிருக்கு.” 


“நாங்க எப்ப சண்டை போட்டோம்.” கயல் ஆச்சர்யமாகக் கேட்க, “ம்ம்… அப்படியா?  நடத்து நடத்து.” என்றான் நந்தா. 


“ஆமாம் சமீராகிட்ட என்ன சொன்ன?” 


“நான் எதுவும் சொல்லலை.” 


“சமீரா பொய் சொல்ல மாட்டா. நீ உண்மையைச் சொல்லு.” 


“எனக்கு எதுவும் நியாபகம் இல்லை.” 


“நீ என்ன சொல்லி இருப்பேன்னு எனக்குத் தெரியாதா? என்னை கட்டிபிடிக்கனும் போல இருக்குன்னு சொல்லி இருப்ப. என்னைக் கிஸ் பண்ண முடியாம ரொம்பத் தவிச்சேன்னு சொல்லி இருப்ப.” 


நந்தா பேசிக்கொண்டே செல்ல… கயல் அவன் வாயை பொத்தினாள். 


“உங்களைப் பார்க்காம இருக்கக் கஷ்ட்டமா இருக்குன்னு சொன்னேன், அவ்வளவுதான்.” கயல் முணுமுணுக்க… 


“இதை நான் கேட்கும் போதே சொல்லி இருக்கலாம் இல்லை.” 


“அதுதான் என் வாயில இருந்தே வர வச்சுடீங்களே.” 


“இது பேர்தான் போட்டு வாங்கிறது. குற்றவாளிங்க கிட்ட பேசும் போது, இப்படித்தான் அவங்க செய்யாதது எல்லாம் சேர்த்துச் சொல்வோம். ஐயோ இதுக்கு நாம செஞ்ச குற்றமே பரவாயில்லைன்னு ஒத்துக்குவாங்க.” என நந்தா சிரிக்க, 


“நீங்களும் உங்க போலீஸ் புத்தியும். உங்ககிட்ட மாட்டுகிறவன் பாடு திண்டாட்டம்னு சொல்லுங்க.” 


“யார் என்கிட்டே மாட்டினாங்களோ இல்லையோ. ஆனா நான் உன்கிட்டதான் வசமா மாட்டி இருக்கேன்.” சொல்லும் போதே நந்தாவின் குரல் குழைய, பார்வையும் மாற… பார்த்த கயல்விழியின் முகம் சிவந்து, அவள் வேடிக்கை பார்ப்பது போல் ஜன்னலின் பக்கம் திரும்பிக்கொண்டாள். 


“ஏசி கோச் இது. ஜன்னல் வழியா எல்லாம் பார்க்க முடியாது. நீ என்னைப் பாரு.” நந்தா கயலின் முகத்தைப் பற்றித் தன் பக்கம் திருப்ப, கண்களால் எதிர் இருக்கையில் இருந்தவர்களைக் காட்டிய கயல், “சாப்பிடலாமா?” எனப் பேச்சை மாற்ற, 


“இன்னைக்கு ஒருநாள் தான். நாளைக்கு எல்லாம் இப்படி என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது.” நந்தா சொல்லும்போதே, அவளின் வயிற்றில் மீண்டும் பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பித்தது. 


இரவு உணவுக்குக் கொண்டு வந்த இட்லியை இருவரும் சாப்பிட்டுவிட்டு, சிறிது நேரம் உட்கார்ந்து இருந்தனர். 


“நீ நடுவில் இருக்கும் சீட்ல படுத்துக்கோ.” என்றவன், அவள் படுக்க வசதி செய்து கொடுத்தான். அவன் கீழேதான் படுக்க வேண்டும். ஆனால் எதிரில் இருந்தவரை இந்தப் பக்கம் மாற்றிவிட்டான். 


“ஏன் அவரை இங்க வர சொல்றீங்க?” 


“நான் அங்க இருந்தாதான் உன்னைப் பார்க்க வசதியா இருக்கும்.” என்றவன், கயல் படுக்க உதவிசெய்து விட்டு, எதிர்புறத்தில் சென்று படுத்துக் கொண்டான். 


நந்தாவின் அந்தச் சின்னச் செயல் கூடக் கயலுக்குப் பெரிதாகத் தோன்றியது. அவள் சொந்த வீட்டில் கூட அவள் இவ்வளவு பாதுகாப்பாக உணர்ந்தது இல்லை.






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!