Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Maiyam Kollum Puyal

Maiyam Kollum Puyal 6 1

அத்தியாயம் 6 

எந்தன் மன ரணம் கூட

ஆறித் தான் போகிறது

உந்தன் பரிசத்தால்!!!



Advertisement

அடுத்த நாள் காலை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக விடிந்தது. எப்போதும் சுந்தரி பல முறை சத்தம் போட்ட பிறகு தான் யுவன் எழுந்து கொள்வான். ஆனால் இன்றோ சீக்கிரமே அவனுக்கு விழிப்பு வந்து விட்டது. அவன் நினைவு அனைத்தும் யுக்தாவைப் பற்றியே. இன்று கல்லூரியில் வைத்து யுக்தாவைப் பார்த்த பிறகு தான் அவனுக்கு நிம்மதி என்பதே வரும்.

Advertisement

மகனின் மனது புரிந்த சுந்தரியும் “அவளுக்கு ஒண்ணும் ஆகிருக்காது டா. நீ வேணும்னா பாரு. அவ நல்ல படியா காலேஜ்க்கு வருவா. ஆனா இதுக்கப்புறம் கொஞ்சம் பாத்து இரு டா கண்ணு. உன்னால பாவம் அந்த பொண்ணுக்கு எந்த பிரச்சனையும் வரக் கூடாது”, என்று அவனுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்.

Advertisement

“சரி மா, சரி மா”, என்று சுந்தரிக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாலும் அவனுக்கு அவளை கண்ணால் கண்ட பிறகு தான் நிம்மதி என்பதே வரும் என்று புரிந்தது. சுந்தரியின் ஆறுதல் எதுவும் அவன் மனதில் அமைதியைக் கொண்டு வர வில்லை.

Advertisement

காலை உணவைத் தவிர்த்து விட்டு அன்று எந்த எந்த பாடங்கள் இருக்கிறது என்று கூட தெரியாமல் நேற்று வைத்த பேகை அப்படியே எடுத்துக் கொண்டு சென்றான் யுவன்.

“என்ன இன்னைக்கு உன் பிள்ளை வேகமா ஒடுறான்?”, என்று கேட்ட படி சாப்பிட அமர்ந்தார் ஈஸ்வரன்.

“ஆமா அவன் ஏதாவது சாதிச்சி மெடல் வாங்கிட்டு வந்தா உங்க பிள்ளை. மத்த நேரம் எல்லாம் என் பிள்ளையா?”, என்று முறுக்கிக் கொண்டாள் சுந்தரி.

“விடு டி, ஒரு பேச்சுக்கு சொல்றது தான். என்ன விசயம்னு சொல்லு. ஏதாவது பரீட்சை வருதா? என்ன பரீட்சை வந்தாலும் கலங்கவே மாட்டானே? படிப்புல தான் அவன் புலியாச்சே”, என்று சொன்னவரின் குரலில் பெருமையே மிளிர்ந்தது.

“யுக்தான்னு ஒரு பொண்ணு அவன் கிளாஸ்ல படிக்குதுங்க. ரொம்ப பாவம் போல?”, என்று ஆரம்பித்து நடந்ததைச் சொன்னாள் சுந்தரி.

“இவனுக்கு எதுக்கு டி இந்த வேண்டாத வேலை? யார் எப்படி இருந்தா என்ன? அவளை மாத்தப் போறேன்னு சொல்லி இப்ப அந்த பிள்ளைக்கு பிரச்சனையைத் தான் உன் பிள்ளை உண்டாக்கிருக்கான்”

“பாவம்னு பேசிருக்கான். ஆனா அவ அப்பன் இப்படி இருப்பான்னு யாரு கண்டா? இனி அந்த பொண்ணு கிட்ட பேசக் கூடாதுன்னு தான் சொல்லிருக்கேன். பாப்போம்”

“சரி சரவணன் எந்திரிச்சிட்டானா?”

“அவனுக்கு ஆபீஸ் பத்து மணிக்கு தானே? மணி இப்ப எட்டு தானே ஆகுது? அவனுக்கு ஏதாவது வரன் வந்துச்சாங்க?”

“ஒரு இடத்துல கேட்டுருக்காங்க. வெண்மதின்னு பேரு. சரவணன் மாதிரியே பி. ஈ படிச்சிருக்கா. ஆனா வேலைக்கு எல்லாம் போகலையாம். நல்ல குடும்பம்னு தரகர் சொன்னார். ஜாதகம் கேட்டுருக்கேன். பாப்போம். சரி பாப்பா ஸ்கூல்க்கு கிளம்பிட்டாளா?”

“மறந்தே போயிட்டேன் பாருங்க. இந்த சுஜி கழுதையோட எனக்கு தலை வலி தான். அஞ்சு நிமிஷம் தூங்கிக்கிறேன்னு சொன்னா. இனி தான் எழுப்பனும்”

“சரி நீ அவளைப் போய் பாரு. நான் மீனுக்கு போன் பண்ணனும்”, என்று சொல்லி விட்டு தன்னுடைய மூத்த மகளை போனில் அழைத்து பேச ஆரம்பித்தார் ஈஸ்வரன்.

இது தான் யுவனுடைய குடும்பம். யுவனின் அண்ணன் சரவணன் பி. ஈ முடித்து விட்டு எல். ஐ. சி யில் பணி புரிகிறான். அவனுக்கு திருமணத்துக்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். யுவனின் தங்கை சுஜிதா பதினோராம் வகுப்பு படிக்கிறாள். யுவனின் அக்கா மீனாட்சிக்கு திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகிறது. மீனாட்சியின் கணவன் செந்தில் ராணுவத்தில் பெரிய பதவியில் இருப்பதால் மீனாட்சியும் செந்திலும் டெல்லியில் வாசிக்கிறார்கள்.

கல்லூரிக்குச் சென்ற யவனுடைய கண்களோ யுக்தாவின் வரவுக்காக வாசலையே பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் காலேஜ் ஆரம்பித்த பிறகும் அவள் வரவில்லை.

“அவ இன்னைக்கு வர மாட்டா போல டா?”, என்றான் வருண்.

“அவளுக்கு ஒண்ணும் ஆகிருக்காதுள்ள?”, என்று பயத்துடன் கேட்டான் யுவன். அவனுக்கு இந்த உணர்வுகள் அனைத்தும் புதிது. யுக்தா அவன் மனதை அதிகம் பாதித்தாள்.

அப்போது சேகர் என்ற நண்பன் “டேய் யுவன், நீ நேத்து எதுக்கு போனை எடுக்கலை. என்னோட கெமிஸ்ட்ரி நோட் எடுத்துட்டு வரச் சொல்ல தான் கால் பண்னினேன். நீ என் காலை அட்டண்ட் பண்ணவே இல்லை. சரி என் நோட்டை எடுத்துட்டு வந்தியா?”, என்று கேட்டான்.

“ஐயையோ மறந்துட்டேன் டா சரி”

“போச்சு, இன்னைக்கு கெமிஸ்ட்ரி பீரியட் இருக்கு. மாட்டினா உன் பேரைத் தான் சொல்லுவேன்”, என்று அவன் முனங்கிக் கொண்டே அவன் செல்ல “இவன் வேற, இருக்குற டென்சன்ல நோட்டு கீட்டுட்டுனு புலம்பிட்டு இருக்கான்”, என்று புலம்பிய யுவன் தன்னுடைய போனை எடுத்துப் பார்த்தான்.

அதில் தெரியாத நம்பரில் இருந்து மூன்று அழைப்புகள் இருக்க “இது யாரா இருக்கும்?”, என்று குழம்பினான். பின் நெட் ஆன் செய்து யாரென்று பார்த்தான். அதில் தாமரை என்ற பெயர் வரவும் “வருண் யுக்தா அம்மா பேர் தான் டா தாமரை. அவங்க நம்பர்ல இருந்து கால் வந்திருக்கு”, என்றான்.

“அப்படியா ஒரு வேளை யுக்தா பண்ணிருப்பாளோ?”

“தெரியலை டா, இப்ப என்ன பண்ணுறது?”

“இந்த ஒரு பீரியட் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. அப்புறம் பிரேக் தான். அப்ப கால் பண்ணி கேப்போம். ஆனா அந்த பக்கம் பேசின அப்புறம் பேசு. திருப்பியும் யுக்தாவை நாம மாட்டி விட்டுறக் கூடாது. அவங்க அப்பா போன் எடுத்தா அவ மாட்டிப்பா”

“சரி வருண்”, என்று சொன்ன யுவனுக்கு அடுத்து ஒரு நிமிடம் கூட பாடம் மனதில் பதிய வில்லை. யுக்தாவே அவன் மனதை ஆக்ரமித்திருந்தாள். அதே போல அந்த பீரியட் முடிந்ததும் தாமரை எண்ணுக்கு அழைத்தான் யுவன்.

காலையில் இருந்து “வலிக்குது மா”, என்று அழுது கொண்டிருந்த யுக்தாவை சமாதானப் படுத்தி உணவு கொடுத்து மருந்து கொடுத்து அப்போது தான் தூங்க வைத்தாள் தாமரை.

அப்போது தான் அவளது போன் அடித்தது. அழைப்பது யுவன் என்றதும் ஒரு பெருமூச்சுடன் அதை எடுத்து காதில் வைத்தாள். யுவன் அந்த பக்கம் அமைதியாக இருக்க அந்த நேரத்திலும் அவன் பொறுமை தாமரையைக் கவர்ந்தது.

“யுவன், நான் யுக்தா அம்மா பேசுறேன் பா. நான் தான் உனக்கு கால் பண்ணேன்”, என்று தாமரையே பேச ஆரம்பித்தாள்.

“ஆண்ட்டி, நேத்து போன் சைலெண்ட்ல இருந்தது. அதான் நான் கவனிக்கலை. யுக்தா எப்படி இருக்கா? சத்தியமா எதுவுமே தப்பா நடக்கலை ஆண்ட்டி. ஆனா எல்லாமே தப்பா போச்சு. அவ இன்னைக்கு காலேஜ் வேற வரலை. ஏதாவது பிரச்சனையா?”

“எங்க வீட்ல பிரச்சனை வராம இருந்தா தான் அதிசயம். கொஞ்சம் பிரச்சனை தான். சரி நேத்து அங்க என்ன நடந்துச்சுப்பா?”, என்று கேட்டதும் நடந்ததைச் சொன்னான் யுவன்.

“உன் மேல தப்பில்லை யுவன். எல்லாம் என் வீட்டுக்காரர் மேல தான்”, என்று சொன்ன தாமரைக்கு கணவரை நினைத்து வெறுப்பாக வந்தது.

“யுக்தா எப்படி இருக்கா ஆண்ட்டி? எனக்கு அவளை கண்ணுல பாத்தா தான் நிம்மதியா இருக்கும். நிஜமாவே தப்பா எல்லாம் இல்லை ஆண்ட்டி. நீங்க நம்புறீங்க தானே?”, என்று தவிப்பாக வந்தது யுவனின் குரல்.

“நான் உன்னை நம்புறேன் பா. அதனால தான் அன்னைக்கே அவளை பாத்துக்கோன்னு சொல்லிட்டு வந்தேன்”

“நீங்க பாத்துக்கோங்கன்னு சொன்னீங்க. ஆனா நானே அவளுக்கு பிரச்சனையை உண்டு பண்ணிட்டேன். நாளைக்கு அவ காலேஜ்க்கு வருவாளா ஆண்ட்டி?”

“அது வந்து… அவளால கொஞ்ச நாளைக்கு காலேஜ்க்கு வர முடியாதுப்பா”

“என்ன ஆச்சு ஆண்ட்டி?”

“யுக்தா… அவளுக்கு…”

“ஆண்ட்டி அவளுக்கு என்ன? அவ நல்லா இருக்கா தானே?”

“நீ கொஞ்சம் வீடு வரைக்கும் வரியா பா? சாயங்காலம் கூட வந்தா போதும்”

“யுக்தாவோட அப்பா….”

“அவர் இப்ப ஊர்ல இல்லை”

“நான் வந்தா அவருக்கு தெரிஞ்சு… எதுவும் ஆகிறக் கூடாதுள்ள?”

“இனி ஆகுறதுக்கு என்ன இருக்கு? இனியாவது என் பொண்ணு நல்லா இருக்கணும். அதுக்கு உன் உதவி எனக்கு தேவை”

“சரி ஆண்ட்டி, நான் நாலு மணிக்கு வரேன்”

“அட்ரஸ் தெரியுமா யுவன்?”

“தெரியும் ஆண்ட்டி யுக்தா சொல்லிருக்கா”

“என்னது எங்க வீட்டு அட்ரஸ் யுக்தா சொன்னாளா? அவ இந்த அளவுக்கு பேசின ஒரே ஆள் நீ தான் பா”

“அது நீங்க அவ கிட்ட என்னைப் பத்தி சொன்னதுனால கூட  இருக்கலாம். ஆனா என் பிரண்ட்ஸ் கூட எல்லாம் நல்லா தான் பேசினா”

“நீ கூட இருந்ததுனால அவங்க கூட பேசிருக்கலாம். மத்த பொண்ணுங்க மாதிரி அவ மாறினா எனக்கு போதும். ஆனா அவ அப்பா அவளை மாற விட மாட்டிக்கார். நீ சாயங்காலம் வா பா, நேர்ல பேசலாம்”

“சரி ஆண்ட்டி, இப்ப அவ கிட்ட பேச முடியுமா?”

“அவ இப்ப தான் தூங்குறா? நீ சாயங்காலம் வந்து பாரு”

“சரி ஆண்ட்டி”, என்று சொல்லி போனை வைத்த யுவனுக்கு யுக்தாவுக்கு அப்படி என்ன ஆகியிருக்கும் என்று கவலையாக இருந்தது. அன்று முழுவதுமே எதிலும் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறினான்.

ஒரு வழியாக காலேஜ் முடிந்ததும் அவசர அவசரமாக யுக்தாவின் வீட்டுக்கு கிளம்பினான். அங்கே தனியாக செல்வதற்கும் அவனுக்கு பயமாக இருந்தது. யாரையும் அழைத்துச் செல்லலாம் என்றால் அதற்கும் தயக்கமாக இருந்தது.

அங்கு சென்றதும் அவள் வீட்டைப் பார்த்து அவன் மிரண்டது நிஜம். அவனுடைய வீட்டில் கீழே இரண்டு அறையும் மாடியில் இரண்டு அறையும் உண்டு. அதுவே அவனைப் பொறுத்த வரை பெரிய வீடு. ஆனால் யுக்தாவின் வீடு அவனது வீட்டை போல நான்கு மடங்கு பெரியதாக இருந்தது.

செக்யூரிட்டி அவனிடம் “யாருப்பா நீ?”, என்று கேட்டார்.

“தாமரை மேடத்தை பாக்க வந்தேன். அவங்க தான் வரச் சொன்னாங்க”, என்றான்.

தாமரையும் அவனை உள்ளே விடும் படி சொல்ல அவனை போக விட்டார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!