Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

புது வெள்ளை மழை

புது வெள்ளை மழை 30 1

புது வெள்ளை மழை


அத்தியாயம் – 30 


மறுநாள் காலை நந்தா எழுந்து வந்த போது, கயல் தலைக்குக் குளித்துவிட்டு, சமையல் அறையில் இருந்தாள். அவளிடம் வந்தவன், அவளைப் பின்னால் இருந்து அணைக்க, “தள்ளிப் போங்க ஜன்னல் திறந்து இருக்கு.” என அவள் அவனின் கையை எடுக்க முயல, அவனின் அணைப்போ இன்னும் இறுகியது. 



Advertisement


ஒருமுறை ஜன்னல் வழியாக வெளியே யாரும் இல்லை என்பதை உறுதி செய்து விட்டு, நந்தா கயல்விழியின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமுட்ட பிறகே விலகினான். 


அவளுக்குத்தான் பதட்டமாகி விட்டது. அவன் இயல்பாக இருந்தான். 


“இன்னைக்கும் சீக்கிரம் எழுந்துட்டியா?” 

Advertisement


“ம்ம்…” 

Advertisement


“என்ன சமையல்?” 


“பொங்கல் சாம்பார்.” 


நந்தா என்ன கேள்வி கேட்டாலும், கயல் அவன் முகம் பார்க்காமல் பதில் சொன்னாள். அவள் முகம் சிவந்து இருக்க, நேற்றைய இரவின் பாதிப்பு என நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டான். 

Advertisement


“காபி கொடு.” என்றவன், ஹாலில் சென்று பேப்பர் படிக்க ஆரம்பித்தான். 


குனிந்த தலை நிமிராமல் கயல் காபி கொண்டு வர, “இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படி இருப்ப?” அவன் கேட்க, கயல் அவனைப் புரியாமல் பார்த்தாள். 


“நீ இப்படி வெட்கப்படுறியே அதைச் சொல்றேன்.” நந்தா சொன்னதும், கயலின் முகம் மீண்டும் சிவக்க, அவள் வேறு எங்கோ பார்த்தாள். 


“நாம ரெண்டு பேரும் ஒன்னு புரியுதா? நமக்குள்ள நடந்தது இயல்பான விஷயம்.” 


“இப்ப நான் என்ன பண்ணனும்?” 


“இப்படி என் பக்கத்துல வந்து உட்காரு.” 


கயல் நந்தாவின் அருகே அமர, அவள் கையில் இருந்து காபியை வாங்கிப் பருகியவன், “நல்லவேளை நேத்து நைட் நீ இப்படி வெட்கப்பட்டுகிட்டே இருந்திருந்தா, என் நிலைமை என்ன ஆகி இருக்கும் சொல்லு?” என்றதும், கயல் தன் கையால் அவன் வாயை பொத்தியவள், “போதும், எதுக்கு அதைப் பத்தியே பேசுறீங்க? வேற எதாவது பேசுங்க.” என்றான். 


கயலின் கையை விலக்கிவிட்டு, “நான் உன்கிட்ட மட்டும்தான் இது மாதிரி பேச முடியும்.” என்றவன், அவளை அனைத்து முத்தமிட, 


“இப்ப வேண்டாம்.” எனக் கயல் அவனிடம் இருந்து விலக, நந்தாவுக்கு ஏமாற்றமாக இருந்தது. 


அவன் நிலையை உணர்ந்தவள், “யாரவது வருவாங்க.” என்றாள் மெல்லிய குரலில். 


“யாரு வரப்போறாங்க?” நந்தா சொல்லிக் கூட முடிக்கவில்லை. வெளியே “அம்மா காய்.” என உரக்க குரல் கொடுத்தார் காய்கறி விற்பவர். 


சொன்னேன் பார்த்தீங்களா என்பது போல் கயல் பார்க்க, நந்தாவுக்கு எரிச்சலாக இருந்தது. அதற்குள் வெளியே இருந்து, “அம்மா காய் வாங்கலையா?” என மீண்டும் குரல் வர, இந்நேரம் அக்கம் பக்கம் உள்ளவர்கள் கவனம் இவர்கள் வீட்டின் மீதுதான் இருக்கும் எனப் புரிந்தது. 


“இதோ வரேன்.” எனக் குரல் கொடுத்தபடி கயல் சென்று கதவை திறந்தாள்.


“வீட்டுக்கே எல்லாம் வந்திடுதுன்னு பார்த்தா, இது வேற தொல்லையாய் இருக்கும் போலிருக்கே.” எனப் புலம்பியபடி நந்தா குளிக்கச் சென்றான். 


அவன் அலுவலகத்திற்குச் சென்றதும், அவன் வேலையில் முழ்கி விட்டான். மதியம் கமிஷனரை பார்க்க சென்றான். 


“வாங்க நந்தா, உட்காருங்க.” 


சிறிது நேரம் இருவரும் அலுவலக விஷயமாகப் பேசினர். பிறகு கமிஷனர் அவனிடம் சொந்த வாழ்க்கையைப் பற்றி விசாரித்தார். 


“அப்ப உங்க மனைவி இங்க வந்தாச்சா? அதுதான் உங்க முகத்துல ஒரு தனிக்களை தெரியுது.” அவர் சொன்னதைக் கேட்டு நந்தா புன்னகைத்தான். 


“உங்களை ட்ரான்ஸ்பர் பண்ண சொல்லி மேல் இடத்துல இருந்து ப்ரெஷர் வந்துட்டே இருக்கு. ஆனா நீங்க வந்த பிறகு இந்த மாவட்டத்துல சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறைஞ்சு இருக்கு. அதனால நாங்க உங்க ட்ரான்ஸ்பரை எவ்வளவு முடியுமோ, அவ்வளவு தள்ளி போட்டுட்டே வரோம்.” 


“எனக்கு எந்த ஊர்னாலும் ஒண்ணுதான் சார். நான் எங்க இருந்தாலும் என் வேலையைத்தான் பார்க்க போறேன்.” 


“அதுதான் நிறையப் பேருக்கு பிரச்சனையா இருக்கு.” 


“அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது.” 


“எஸ் கரெக்ட். எப்ப வேணா உங்களுக்கு ட்ரான்ஸ்பர் வரலாம் நந்தா.” 


“நான் ரெடியாதான் சார் இருக்கேன்.” 


“ஆனா நீங்க இங்க இருந்து போகும்போது, பதவி உயர்வுலதான் போவீங்க.” 


“நன்றி சார்.” 


இரவு நந்தா உற்சாகமகவே வீடு திரும்பினான். அவனது உற்சாகத்திற்குக் காரணம் நமக்கா தெரியாது. கயல்தான் வேறு யாரு?


மறுநாள் காலை அவன் பேப்பர் படித்துக் கொண்டு இருந்த போது, வீட்டு போன் அடித்தது. நந்தா எடுக்க, அந்தப் பக்கம் பேசியது வருண். 


“டேய் மச்சான், எப்படி டா இருக்க?” 


“நல்லா இருக்கேன் டா மாப்பிள்ளை.” 


“அப்புறம் தனிக் குடித்தனம் எப்படிப் போகுது?” 


“ரொம்ப நல்லா போகுது.” 


“அப்ப குடும்பஸ்தன் ஆகிட்டேன்னு சொல்லு.” 


“என்ன டா? எனக்கு எதோ புதுசா கல்யாணம் ஆன மாதிரி கேட்கிற.” 

“கல்யாணம் மட்டும் தான ஆகியிருந்தது. மத்தது எல்லாம் நடந்துச்சா இல்லையா?” 


வருண் கேட்க வருவது நந்தாவுக்கா புரியாது. நன்றாகவே புரிந்தது. அவன் தனக்குள் சிரித்துக் கொண்டான். 


“டேய்,  கேட்டதுக்குப் பதிலை சொல்லு. ஒழுங்கா குடும்பம் நடத்துறியா இல்லையா?” 


“நைட் நேரம் கருணை காட்டுறா டா… ஆனா பகல்ல பக்கத்துல கூட விட மாட்டேங்கிறா.” 


“யாரவது வந்திடுவாங்கன்னு பயமா இருக்கும்.” 


“ஆமாம் அதுக்குத்தான்.” 


“எந்தத் தொந்தரவும் இருக்கக் கூடாதுன்னு தான்டா ஹனிமூன் போறது.” 


“நீ சொல்றது கரெக்ட். இந்த வாரமே கிளம்பிடுறேன்.” 


“முதல்ல அதைச் செய்.” 


“நேத்து அம்மாகிட்ட பேசினேன். உன் வீட்ல எல்லாம் எப்படி இருக்காங்க?” 


“எல்லோரும் நல்லா இருக்காங்க.” 


“அப்புறம் தாரணி எப்படி இருக்கா?” 


“நல்ல முன்னேற்றம். இங்க வீட்ல கூட அம்மாவுக்கு ஹெல்ப் பண்றா.” 


“அவ நல்ல பொண்ணு தான்டா. நாங்க எல்லோரும்தான் அப்பா இல்லைன்னு ரொம்பச் செல்லம் கொடுத்திட்டோம்.” 


“டேய், என் பொண்டாட்டிக்கு நீ சிபாரிசா. அதெல்லாம் நான் அவளை நல்லா பார்த்துப்பேன் கவலைப்படாம இரு. சரியா?” 


“சரி, எல்லோரையும் கேட்டதா சொல்லு.” 


நந்தா போன்னை வைத்ததும், “யாரு? வருண் அண்ணாவா?” என கயல் கேட்டபடி, நந்தாவின் அருகே உட்கார்ந்தாள்.


“ஆமாம் அவன்தான்.” 


“தாரணி அண்ணி எப்படி இருக்காங்க?” 


“ஏன் அதை நீ அவகிட்ட போன் பண்ணி கேட்கலாமே.” 


“சரி போன் பண்ணி பேசுறேன்.” 


“உங்க அம்மாகிட்ட பேசினியா?” 


“இல்லை இன்னும் பேசலை.” 


“வந்து எவ்வளவு நாள் ஆகுது? இன்னும் அவங்களுக்குப் போன் பண்ணவே இல்லையா நீ?” 

கயல் பதில் சொல்லாமல் மௌனம் காக்க, நந்தாவுக்குக் காரணம் புரிந்தது.
“எனக்கும் உங்க அப்பாவுக்கும் இருக்கிறது எங்க தனிப்பட்ட பிரச்சனை. அதுல நீ ஏன் உன் அம்மாவை இழுக்கிற? பாவம், அவங்க என்ன பண்ணுவாங்க.” 


“அவங்களுக்குப் போன் பண்ணி பேசு. அவங்களை நேர்ல பார்த்திட்டு வர்றதுன்னா கூடப் போயிட்டு வா. கார் வேணா ஏற்பாடு பண்றேன்.” 


“சரி நான் இன்னைக்குப் போன் பண்றேன்.” கயல் சொல்ல, நந்தா அவளைப் பார்த்து புன்னகைத்தவன், அவள் கன்னத்தைத் தட்டி கொடுத்து விட்டுச் சென்றான்.

 
காலை வேலை எல்லாம் முடிந்த பிறகு கயல்விழி தன் அம்மாவை போன்னில் அழைத்தாள். 


“என்ன கயல்? நானும் நீ போன் பண்ணுவ பண்ணுவன்னு பார்த்தா, போன் பண்ணவே இல்லை. இங்க வந்திட்டியா இல்லையா?” 


“வந்து நாலு நாள் ஆகுது. அப்பாவுக்குத் தெரியுமே உங்ககிட்ட சொல்லலை.” 


“அப்பாவுக்குத் தெரியுமா, எப்படி?” 


“அவர் தானே வீடு வரை வந்து மிரட்டிட்டு போனார்.” 

“என்ன சொல்ற? புரியிற மாதிரி சொல்லு.” 


கயலுக்கு இருந்த அத்திரத்தை எல்லாம் அவள் அம்மாவிடம் கொட்டி விட்டாள். இது நடக்க வேண்டாம் என்றுதான், இதுநாள் வரை பத்மாவை அழைக்காமல் இருந்தாள். 


“உனக்கு உங்க அப்பாவை பத்தி தெரியாதா? விடு அவர் சொன்னதை நினைச்சு கவலைப்படாதே.” 


“அவர் மேல தப்பை வச்சிக்கிட்டு, இங்க வந்து இவர் மேல கோபப்படுறார். கொஞ்சமாவது நியாயமா இருக்கா?” 


பத்மாவுக்குக் கயல் பேசுவதைக் கேட்டு ஆச்சர்யமாக இருந்தது. மகளுக்குக் கோபப்படக் கூட தெரியுமா என நினைத்தார். 


“சரி விடு கயல். எப்ப நம்ம வீட்டுக்கு வர.” 


“நான் இப்ப வரலை மா, வேணா நீங்க வாங்க.” 


“சரி நானே வரேன். நேத்து தான் முறுக்கு செஞ்சேன் வரும் போது கொண்டு வரேன்.” 


“எனக்கு அந்த வீட்ல இருந்து எதுவும் வேண்டாம்.” 


“ஏன் கயல் இப்படி எல்லாம் பேசுற?” 


“வீட்டு மாப்பிள்ளையை விரோதியை போல நடத்திறவர்கிட்ட இருந்து எங்களுக்கு எதுவும் வேண்டாம். நீங்க அங்க இருந்து ஒன்னும் கொண்டு வரக் கூடாது சொல்லிட்டேன்.” 


கயலுக்கு இப்படியெல்லாம் கூடப் பேச வருமா என நினைத்தவர், “சரி, நான் எதுவும் கொண்டு வரலை.” என்றார். 


பத்மா மகளைப் பார்க்க போகும் ஆவலில் உடனே புடவை மாற்றிக் கிளம்ப, அன்பரசு அவரையே பார்த்தார். 


“செல்வம் வண்டியை எடு.” 


“சரிங்க மா.” 


பத்மா எங்கே செல்கிறார் என்று இன்னமும் சொல்லவில்லை.
எங்கே போகிறோம் என எப்படிக் கேட்பது என யோசித்த கார் ஓட்டுனர், “பக்கத்துலேயா, தூரமா…” என்றதும்தான், தான் கயலின் வீட்டு முகவரி வாங்கவில்லை எனப் பத்மாவுக்கு நினைவு வந்தது. 


“உங்க அய்யாவையே கேளு அவருக்குத்தான் தெரியும்.” என்றார். 


இடத்தைச் சொல்லாமல் முகவரியை சொல்ல சொன்னால், என்ன சொல்வது? அன்பரசுவுக்குக் கோபம் வந்துவிட்டது. 


“என்ன ரொம்பக் கொழுப்பு கூடி போச்சா? எங்க போறேன்னு சொன்னத்தனே தெரியும்.” எனக் கோபத்தில் உறும, 


“ம்ம்… கயல் வீட்டுக்கு போறேன். அட்ரெஸ் உங்களுக்குத் தானே தெரியும்.” என்றார் பத்மா அலட்சியமாக. 


கயலை பார்க்க செல்கிறார் என்றதும், அன்பரசுவின் முகத்தில் கோபம் இல்லை. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!