Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

புது வெள்ளை மழை

புது வெள்ளை மழை 30 2

“நாம அன்னைக்கு நைட் போனோமே அந்த வீடுதான். நீ இறக்கி விட்டுட்டு உடனே அங்க இருந்து கிளம்பிடு. திரும்பச் சாயங்காலம் அஞ்சு மணிக்குப் போய்க் கூடிட்டு வந்திடு. வேற யாருக்கும் தெரிய கூடாது.” 


“சரிங்க அய்யா.” 


செல்வம் வெளியே சென்றதும், “ஏன் அப்படிச் சொல்றீங்க?” எனப் பத்மா கேட்க, 


“யாரு எப்படி இருப்பாங்கன்னு சொல்ல முடியாது. ஒரு பாதுகாப்புக்குத்தான். நீயும் போனியா வந்தியான்னு இரு. யார்கிட்டையும் சொல்லிட்டு இருக்காத.” 



Advertisement


அன்பரசு சொன்னதைக் கேட்டு பத்மா அவரை முறைத்து பார்த்தார். “இப்படிச் சொல்றவர், ஏன் போய் மிரட்டிட்டு வந்தீங்க?” 

“அது ஒரு கோபத்தில போனேன்.” 


“உங்க மகள் உங்களை மாதிரி தான இருப்பா. இங்க வர மாட்டேன்னு சொல்லிட்டா.” 

Advertisement


பத்மா சொன்னதற்கு அன்பரசு பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் அவரையே பார்த்துக் கொண்டிருந்த பத்மா, “சரி நான் கிளம்புறேன். மதியம் வெளிய சாப்பிடுக்கங்க.” எனச் சொல்லிவிட்டு சென்றார். 

Advertisement


செல்லும் வழியில் மகளுக்குப் பிடித்த மல்லிகை பூ வாங்கிகொண்டு சென்றார். கார் நிற்கும் சத்தம் கேட்டதுமே, கயல் வாசலுக்கு வந்துவிட்டாள். 


“வாங்க மா…” என வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள். 


பத்மா சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. மகளையே பார்த்து இருந்தார். முன்பை விட இப்போது இன்னும் மகள் கண்ணுக்கு அழகாகத் தெரிந்தாள். முகத்தில் ஒரு தனிப் பொலிவு இருக்க… அதே சொன்னது, அவள் சந்தோஷமாக இருக்கிறாள் என்று. 

Advertisement


ஒரு அம்மாவுக்கு வேறு என்ன வேண்டும்? மகளின் சந்தோஷத்தை விட. 

“உட்காருங்க மா.” கயல் சொல்ல, 


அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவர், மகளையும் தன் அருகில் உட்கார வைத்து, “பூ மட்டும்தான் வாங்கிட்டு வந்தேன். பூவை வேண்டாம்னு சொல்லக் கூடாது.” எனத் தான் கொண்டு வந்த பூவை அவளுக்கு வைத்து விட்டார். 


“மாப்பிள்ளை எப்படி இருக்கார்?” 


“நல்லா இருக்கார். இருங்க உங்களுக்குக் குடிக்க எதாவது கொண்டு வரேன்.” 


கயல் எழுந்து உள்ளே செல்ல, பத்மாவும் அவளோடு எழுந்து உள்ளே சென்றார். கயல் டீ போட்டாள். 


“மதியத்துக்கு அவர் சாப்பிட வருவாரா?” 


“ஆமாம் மா, ரெண்டு மணிக்கு மேலதான் வருவார். இனிதான் சமைக்கணும்.” 


“என்ன சமையல்?” 


“உங்களுக்குப் பிடிக்குமேன்னு வேலை செய்றவங்களை மீன் வாங்கித் தர சொன்னேன். வாங்கிக் கொடுத்தாங்க. இனிதான் செய்யணும்.” 


“நீ மட்டும் எங்ககிட்ட இருந்து எதுவும் வாங்கிக்க மாட்டேங்கிற. நான் மட்டும் இங்க சாப்பிடனுமா?” பத்மா கேலியாகத்தான் கேட்டார். ஆனால் கயல்விழி அழுது விட்டாள். 


“இப்ப எதுக்கு அழற? நான் சும்மா விளையாட்டுக்தான் சொன்னேன். பிள்ளைங்க கோபப்பட்டாலும் பெத்தவங்க கோபபட முடியுமா?” 


“அவர் ரொம்ப நல்லவர் மா… அவரை யாராவது எதாவது பேசினா என்னால தாங்க முடியாது. அது அப்பாவா இருந்தாலும்.” 


“உன் அப்பா குணம் தெரிஞ்சது தான. அவரே சொன்னார் எதோ கோபத்தில பேசிட்டேன்னு. இனிமே அப்படிச் செய்ய மாட்டார்.”
கயல் கொடுத்த டீயை குடித்த பத்மா, “நீ நகரு நான் சமைக்கிறேன்.” என்றார். 


“நீங்கதான எப்பவும் சமைக்கிறீங்க. இன்னைக்கு நான் சமைக்கிறேன், நீங்க சாப்பிடுங்க.” 


“நீதான் நம்ம வீட்டுக்கு வர மாட்டேன்னு சொல்லிட்ட, வந்த இடத்துலையாவது நான் சமைக்கிறேன்.” எனப் பத்மாதான் சமைத்தார். கயல் அவருக்கு உதவினாள். 


அந்தப் பக்கமாகச் சென்ற ஷில்பா, மீன் குழம்பின் வாசத்தில் கவரப்பட்டு வீட்டிற்குள் வந்தாள். 


“மீன் குழம்பா? எப்படி இப்படி வாசம் வருது. நான் வெச்சா எல்லாம் வர மாட்டேங்குதே.” அவள் சந்தேகம் கேட்க, கயல் சிரித்தாள். 


“என்னோட அம்மா வைக்கிறாங்க அதுதான்.” என்றதும், பத்மா வெளியே வந்தார். கயல் இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தாள். 


சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு ஷில்பா கிளம்ப, “இருங்க கொஞ்சம் குழம்பு கொண்டு போங்க.” என்றவர், கயலிடம், “நீ போய்க் கொடுத்திட்டு வா.” என ஒரு கிண்ணத்தில் மீன் குழம்பு கொடுத்து விட்டார். கயல் ஷில்பாவோடு அவள் வீடு வரை சென்றுவிட்டு வந்தாள். 


சமையல் முடித்ததும், அம்மாவும் மகளும் ஹாலில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். கயல் பத்மாவின் மடியில் படுத்துக் கொண்டாள். 


“அண்ணி எப்படி இருக்காங்க மா? நம்ம வீட்ல இருக்காங்களா, இல்லை அவங்க வீட்ல இருக்காங்களா.” 


“இங்கயும் அங்கேயுமா இருக்கா. எப்பவெல்லாம் அவளுக்கு உன் அண்ணனை நினைச்சு ஆத்திரம் வருதோ, அப்ப எல்லாம் இங்க வந்து எங்ககிட்ட காட்டிட்டு போவா.” 

“உங்களுக்குத்தான் கஷ்ட்டமா இருக்கும்.” 


“என்ன பண்றது? என் பையன் சரியில்லை, நான் அவளை என்ன சொல்ல முடியும்.” 


“சின்ன அண்ணனுக்காவது கல்யாணம் பண்ணலாம் இல்ல. வீடாவது கொஞ்சம் கலகலப்பா இருக்கும்.” 


“ஆமாம், சீக்கிரம் கல்யாணம் முடிச்சிட்டா நல்லா இருக்கும்.” 


அப்போது நந்தா வர, இருவரும் வேகமாக எழுந்தனர். 


ஏன் இவ்வளவு பதட்டம் என்பது போல் பார்த்தவன், “வாங்க அத்தை. நல்லா இருக்கீங்களா?” எனப் பத்மாவை பார்த்து கேட்டான். 


“நல்லா இருக்கேன் மாப்பிள்ளை. அம்மா தங்கச்சி எல்லாம் நல்லா இருக்காங்களா?” என அவர் பதிலுக்குக் கேட்டார். 


நந்தா பதில் சொல்லிக்கொண்டே கை கழுவிவிட்டு வந்து சாப்பிட அமர்ந்தான். கயல் அவனுக்குப் பரிமாறினாள். 


“நீங்களும் சாப்பிடலாமே.” நந்தா அழைக்க, 


“இருக்கட்டும் மாப்பிள்ளை, நீங்க முதல்ல சாப்பிடுங்க. நாங்க பிறகு சாப்பிடுறோம்.” என்றார் பத்மா. 


நந்தா சாப்பிட்டு விட்டு கிளம்பும் முன் அறைக்குள் செல்ல, பத்மா “போ…” என ஜாடை காட்ட, கயல் அவன் பின்னே சென்றாள். 


“இன்னைக்கு என்ன முகம் ரொம்பப் பளபளன்னு ஜொலிக்குது. உங்க அம்மா வந்ததுனாலா?”நந்தா கேலியாகச் சொல்ல, கயல் பெரிதாகப் புன்னகைத்தாள். 


“சரி நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க, நான் கிளம்புறேன்.” என்றவன், பத்மாவிடம் சொல்லிக்கொண்டு வாசல் வரை சென்றவன், மீண்டும் உள்ளே வந்தான். 


“அத்தை வாசுவை கொஞ்ச நாளா நல்லதம்பியோட பார்க்கிறேன். அவன் ஆளு சரி கிடையாது. சொல்லி வைங்க. எதாவது சிக்கல்ல மாட்டி விட்டுட போறான்.” 


“சரிங்க மாப்பிள்ளை. நான் கண்டிப்பா சொல்றேன். இவனாவது ஒழுங்கா இருப்பான்னு நினைச்சேன்.” 

“சரி நான் கிளம்புறேன்.” 


நந்தா சென்றதும், தங்கள் இருவருக்கும் உணவு எடுத்து வைத்த கயல், “யாரு மா அந்த நல்லதம்பி?” எனக் கேட்டாள். 


“நல்லதம்பியோட அப்பா முன்னாடி நம்மகிட்ட தான் வேலை பார்த்தார். அப்புறம் திடிர்ன்னு பணக்காரர் ஆனார். அப்புறம் அவருக்கு ரொம்பக் கர்வம் வந்துடுச்சு. அதுல இருந்து உங்க அப்பாவுக்கு அந்த ஆளை சுத்தமா பிடிக்காம போயிடுச்சு. அதனால பேச்சு வாரத்தைக் கிடையாது. ஆனா உன் அண்ணன் எதுக்கு அவன் பையனோட சுத்துறான்.” 


“சரி, நான் உன் அப்பாகிட்ட சொல்லிடுறேன். இனி அவர் பாடு.” 


மாலை வரை தாயும் மகளும் ஊர் கதை எல்லாம் பேசினர். பத்மா கிளம்பும் போது, கயலுக்குக் கஷ்ட்டமாக இருந்தது. 


“இன்னைக்கு இங்கயே இருக்கலாம் இல்லமா?” 


“இப்பத்தான் நீயே மாப்பிள்ளையோட சேர்ந்து இருக்க. நான் வேற எதுக்கு இடைஞ்சலா? நான் திரும்ப அடுத்த வாரம் உன்னைப் பார்க்க வரேன்.” 


“அடுத்த முறை வரும்போது கண்டிப்பா தங்கணும். இப்ப பத்திரமா போங்க.” 


பத்மா வீட்டிற்கு வந்தபோது, அன்பரசு அங்கேதான் இருந்தார். ஆனால் பத்மா அவரிடம் எதுவும் பேசவில்லை. இரவு சமையல் செய்யச் சென்றுவிட்டார். 

இரவு உணவு சாப்பிடும் போது, அன்பரசு அவராகவே கேட்டார்.
“எப்படி இருக்கா உன் பொண்ணு?” 


“என் பொண்ணா, அவளுக்கு அப்பா நீங்கதானே.” பத்மா நறுக்கென்று கேட்க, அன்பரசு முறைத்தார். 


“போலீஸ் மாப்பிள்ளை வந்ததும், உனக்குக் கூட ரொம்பத் தைரியம் வந்துடுச்சு போல…” 


“தெரிஞ்சா சரி. நான் அவ எப்படி இருக்கான்னு கேட்கவே இல்லை. பார்க்கும் போதே தெரியுது, நம்ம வீட்ல இருந்ததை விட ரொம்ப நல்லா இருக்கா.” 


இப்போது அன்பரசு முறைக்கவில்லை சாதாரணமாகத்தான் இருந்தார். 


“அவ தப்பே பண்ணலையா?” என அவர் கேட்க, பத்மாவுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. 


அங்கே இரவு சீக்கிரமே வீட்டிற்கு வந்த நந்தா, கயலிடம் மூன்று நாட்களுக்குத் தேவையான உடைகளை எடுத்து வைக்கச் சொல்ல, “எங்க போறோம்?” கயல் கேட்க, 


“அது அங்க போய்த் தெரிஞ்சிக்கோ. நாளைக்குக் காலையில சீக்கிரம் கிளம்பனும்.” என்று மட்டும்தான் நந்தா சொன்னான். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!