Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

புது வெள்ளை மழை

புது வெள்ளை மழை 33 2

அவன் மருத்துவமனைக்குச் சென்றபோது, அந்த வளாகத்திற்குள் அவ்வளவு கூட்டம். எல்லோரும் அன்பரசுவுக்காக வந்தவர்கள், உள்ளே வரவேற்பு அறையில், கயல் ஒரு சேரில் சோர்ந்து போய் அமர்ந்து இருந்தாள். அவளுக்கு அழுவதற்குக் கூடத் தெம்பு இல்லை. பத்மாவும் மற்ற உறவினர்களும் தான் அழுது கொண்டு இருந்தனர். 


நந்தா அவளிடம் செல்லாமல் முதலில் மருத்துவரை பார்க்க சென்றான். அவனின் காக்கி உடையைப் பார்த்தே, யாரும் அவனைத் தடுக்கவில்லை. மருத்துவரின் அனுமதி பெற்று அவன் உள்ளே செல்ல, அவரும் அப்போதுதான் அறைக்குத் திரும்பி இருந்தார். 


“நான் ஏசிபி. நந்தகுமார். அன்பரசு என்னோட மாமனார். அவரைப் பத்தி விவரம் கேட்க வந்தேன்.” நந்தா முறையாக அறிமுகம் செய்து கொண்டு பேச, மருத்துவரும் உரிய பதில் அளித்தார். 


“அவருக்கு மண்டையில தான் பெரிய காயம். அங்க நிறையத் தையல் போட்டிருக்கோம். மத்தது எல்லாம் சின்னதுதான். அங்க நாலு, அஞ்சு தையல் போட்டிருக்கோம்.” 



Advertisement


“இப்ப மயக்கத்துல இருக்கார். ரெண்டு மணிநேரம் கழிச்சுக் கண் திறந்திடுவார். இன்னும் ரெண்டு நாள் ஹாஸ்பிடல்ல இருக்கணும்.” 


“பயப்படுற மாதிரி எதுவும் இல்லையே.” 

“இல்லை. நைட் தனி அறைக்கு மாத்திடலாம்.” 

Advertisement


“சரி டாக்டர்.”

Advertisement

 
மருத்துவரும் நந்தாவும் பேசிக்கொண்டே ஒன்றாக வர, அப்போதான் கயல் அவனைப் பார்த்தாள். 

மருத்துவர் என்ன சொல்வாரோ என எல்லோரும் பயந்து போய்ப் பார்க்க, அவர் நந்தாவிடம் பேசிவிட்டுச் சென்றுவிட்டார். 


நந்தா கயலைப் பார்த்தவன், பிறகு பத்மாவிடம் திரும்பி, “அத்தை பயப்பட ஒன்னும் இல்லை. இன்னும் கொஞ்ச நேரத்துல மாமாவை ரூமுக்குக் கொண்டு வந்திடுவாங்க. ரெண்டு நாள்ல வீட்டுக்கு போகலாம்னு சொல்லி இருக்காங்க.” என்றதும்தான், பத்மாவுக்கு உயிரே வந்தது. 

Advertisement


அடுத்து நந்தா வாசுவிடம், “இங்க எதுக்கு இவ்வளவு கூட்டம்? அப்பா நல்லா இருக்காங்கன்னு சொல்லி எல்லோரையும் அனுப்பு.” என்றான். 


ஏற்கனவே அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் அங்கு இருந்தார். “கேஸ் பைல் பண்ணிடீங்களா?” 


“எஸ் சார்.” 


“ஐயா கண்விழிச்சதும் அவர்கிட்டையும் விசாரிக்கணும்.”

 
“சரி.” என்றான். 

அங்கிருந்த கீதாவிடம் திரும்பியவன், “யாரையாவது அனுப்பி, வீட்ல இருந்து கயலுக்குப் புடவை கொண்டு வர சொல்லுங்க.” என அவன் சொல்ல, அவன் தன்னிடம் பேசுவான் என எதிர்பார்க்காத கீதா, திகைத்துப் போய்ப் பார்த்தாலும், அவன் சொன்னதைச் செய்யச் சென்றாள். 


கயல் புடவை முழுவதும் ரத்தம். அதைக் கவனித்துதான் சொன்னான். 


அவன் செய்வதை எல்லாம் கயல் பார்த்துக்கொண்டே தான் இருந்தாள். 

அவன் வந்ததும், அந்த இடத்தின் நிலைமையே மாறிவிட்டது. மருமகனே சொல்லிவிட்டார் என்றதும், பத்மா தைரியமாகவே இருந்தார். 


கீதாவே தங்கள் காரில் வீட்டிற்குச் சென்று கயலுக்கு மாற்று புடவை கொண்டு வந்தாள். அவளுக்கும் நடந்த சம்பவம் அதிர்ச்சிதான். வெட்டு, குத்து எல்லாம் அவள் வாயில் எளிதாக வரும். சொந்த வீட்டிலேயே நடக்கும்போதுதான் அதன் வலி தெரிந்தது. 


அவள் கணவனோ ஜெயிலில். இந்த நிலையில் குடும்பத் தலைவருக்கு எதாவது ஆகினால், தங்களின் நிலை என்ன என்று கவலை வந்தது. 


அன்பரசுவுக்குக் கொடுத்த அறையில், பத்மாவையும், கயலையும் சென்று நந்தா இருக்கச் சொன்னான். கீதா கொண்டு வந்த புடவையைக் கயல் மாற்றியதும், கார் ஓட்டுனர் செல்வத்திடம், எல்லோருக்கும் குடிக்கப் பழரசம் வாங்கிவந்து கொடுக்கச் சொல்லி பணம் கொடுத்து அனுப்பினான். 


“ஜூஸ் வரும் குடிச்சிட்டு கொஞ்ச நேரம் படுத்திரு. இப்ப எதையும் யோசிக்காத.” எனக் கயலிடம் சொன்னவன், அறைக்கு வெளியே சென்று அங்கிருந்தவர்களை விசாரித்தான். 


பத்மாவுக்கு அப்போதுதான் கயலின் நினைவே வந்தது. அவளுக்கு இன்றைக்கு எவ்வளவு மன உளைச்சல் இருந்திருக்கும் என அவருக்கு நன்றாகவே தெரியும். அதுவும் கர்ப்பமாக வேறு இருக்கிறாள். 


செல்வம் வாங்கி வந்த மாதுளை சாரை, அவளுக்குக் குடிக்கக் கொடுத்து, “நீ இங்க கொஞ்ச நேரம் கால் நீட்டி படு கயல்.” என அங்கிருந்த மற்றொரு சிறிய படுக்கையை மகளுக்குக் காட்டினார். 


அவரும் கீதாவும் அதே அறையில் இருந்தனர். நந்தா வந்துவிட்டான் அவன் பார்த்துக்கொள்வான் என நம்பிக்கை இருந்ததால்…. அசதியில் கயல் படுத்ததும் உறங்கி விட்டாள். 


இரவு எட்டு மணி போல், அன்பரசுவை அறைக்குத் தள்ளு வண்டியில் உட்கார வைத்து அழைத்து வந்தனர். தலையில் பெரிய கட்டும், உடலில் அங்கங்கே சில கட்டுகள் போடப்பட்டிருந்தது. 


அவரைப் படுக்கைக்கு மாற்றியதும், அவரின் பார்வை பக்கத்துக் கட்டிலில் இருந்த மகளிடம் தான் சென்றது. 


“கயல் ஏன் இங்க படுத்திருக்கா? உடம்புக்கு எதுவும் முடியலையா?” அன்பரசுவால் மெதுவாகத்தான் பேச முடிந்தது. 

“அவ நல்லத்தான் இருக்கா, நான்தான் படுக்கச் சொன்னேன்.” 


“அவளை ஏன் இங்க வச்சிருக்க? வீட்டுக்கு அனுப்ப வேண்டியது தான.” 


“நீங்க நல்லா இருக்கீங்கன்னு தெரியாம உங்க மகள் வீட்டுக்கு போகமாட்டா.” என்றபடி நந்தா உள்ளே வந்தான். 

“எப்படி இருக்கீங்க?” அவன் விசாரிக்க, அன்பரசு நன்றாக இருப்பதாகச் சொன்னார். அப்போது மொத்த குடும்பமும் அங்குதான் இருந்தது. கீதாவின் பெற்றோரும் வந்திருந்தனர். கொஞ்ச நேரம் அவர்களைப் பேச விட்டான். 


“வாசு, நீ அத்தையைக் கூடிட்டுப் போய்ச் சாப்டிட்டு வந்திடு. நைட் நீயும் அத்தையும் இங்க இருங்க. உனக்கு உதவியா வேணா ரெண்டு பேர் வச்சுக்கோ. அதுக்கே மேல வேண்டாம். மத்தவங்களை வீட்டுக்கு அனுப்பிடு.” 


“நாளைக்கும் பார்க்க நிறையப் பேர் வருவாங்க. முக்கியமானவங்களை மட்டும் பார்க்க விட்டா போதும், ரொம்ப நேரம் பேச விட வேண்டாம்.” 


“சரி நான் இங்க துணைக்கு இருக்கேன். நீங்க போய்ச் சாப்பிட்டு வாங்க.” 


நந்தா யாருக்கும் மறுத்து பேச இடமே கொடுக்கவில்லை. இவன் சொல்ற மாதிரி எல்லாம் நாம ஏன் கேட்கணும்? என வாசு நினைத்தாலும், வெளியே ஒன்றும் சொல்ல முடியவில்லை. 


எல்லோரும் சென்றதும், நந்தா கட்டிலின் அருகே ஒரு நாற்காலியில் அமர்ந்தவன், “என்ன நடந்துச்சு சொல்லுங்க?” என்றதும், அன்பரசு தனக்கு நடந்த தாக்குதல் பற்றிச் சொன்னார். 


“நீங்க ஏன் அங்க போனீங்க? உங்க கூட எப்பவும் ஆட்கள் இருப்பாங்களே?” என்றதும், அன்பரசு பதில் சொல்லாமல் கயலைப் பார்த்தார். அவள் இன்னும் உறங்கிக் கொண்டுதான் இருந்தாள். 


“இவ வேலை தானா. சரி நான் அவளை விசரிச்சுகிறேன். ஆனா உங்களுக்கு யார் மேலையாவது சந்தேகம் இருக்கா?” 


“சந்தேகம் இல்லை. எனக்கு நல்லாவே தெரியும். இது அந்த வடிவேலுவோட வேலைதான்.” 

“எப்படிச் சொல்றீங்க? உங்களுக்கு அவர் மட்டும்தான் எதிரியா என்ன?” 


“இதே வேற யாராவதுன்னா என்னைப் போட்டிருப்பாங்க.” 


அவர் அதைக் கூடச் சாதாரணமாகச் சொல்ல, நந்தாவுக்கு வியப்பாக இருந்தது. 


“நீங்க அவங்களைத் தடுக்கலையா?” 


“பக்கத்துல கயல் இருந்தா, நான் எதாவது பண்ணா, கோபத்துல அவளை எதாவது பண்ணுவாங்க, அதனாலதான் அப்புறம் பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன்.” 


“உங்களுக்கு நான் புதுசா சொல்ல எதுவும் இல்லை. இன்னைக்கு உங்க மேல கை வச்சவங்களுக்கு, நாளைக்கு உங்க குடும்பத்து மேல கைவைக்க ரொம்ப நேரம் ஆகாது.” 


“மாறுவதும் மாறாததும் உங்க விருப்பம். ஆனா இனி உங்க மகளைப் பார்க்கணும்னா நீங்கதான் வரணும். நான் என்னைக்கும் அவளை உங்க வீட்டுக்கு அனுப்ப மாட்டேன்.” 


“இன்னைக்கு மட்டும் அவளுக்கு எதாவது ஆகியிருந்தா, அதுக்கு முழுக் காரணமும் நீங்கதான். அப்புறம் நான் என்ன பண்ணியிருப்பேன்னு எனக்கே தெரியலை.” சொல்லும் போதே அவன் குரலில் அவ்வளவு கோபம். 


நந்தா சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லி விட்டு எழுந்துகொள்ள, அன்பரசு “இன்னைக்குக் கயல் சொன்னா, அவளுக்கு உங்களை ரொம்பப் பிடிக்குமாம். ஆனா அதை உங்ககிட்ட சொல்ல முடியலைன்னு சொன்னா.” என்றதும், நந்தா நின்று அவர் பேசுவதை உன்னிப்பாகக் கவனித்தான். 


“எனக்குச் சொல்ல என்ன தகுதி இருக்குன்னு என் பொண்ணு கேட்டா.” 


“அவ அந்தப் பையனை பிடிச்சுதான் போனான்னு நினைச்சேன். ஆனா எனக்கு அவளைப் பிடிக்கலைன்னுதான் போய் இருக்கா.” 


“நான் அவகிட்ட அன்பா இருந்திருந்தா, அவ என்கிட்ட அந்தப் பையனை பத்தியும் சொல்லி இருப்பா.” 

“கையாள பறிக்க வேண்டிய முள்ளை. நான் அருவாளால் வெட்டிட்டேன். எனக்கு அப்படித்தான் தெரியும்.” 


நந்தா சிறிது நேரம் மெளனமாக இருந்தான். பிறகு சொன்னான், “உங்க பொண்ணு வார்த்தையால் சொன்னது இல்லையே தவிர, அவளுக்கு என்னை எவ்வளவு பிடிக்கும்னு, என் மனசுக்கு புரிய வச்சிருக்கா. அதனால அதைப் பத்தி நீங்க கவலைப்படாதீங்க. என் பொண்டாட்டி என்ன நினைக்கிறான்னு கூட எனக்குத் தெரியும்.” 


அவன் மனைவியைக் குறித்துப் பேசும்போது, அவனுக்கு இருந்த நம்பிக்கையும், காதலும் வெளிப்படையாகத் தெரிய, அன்பரசு அமோதிப்பாகத் தலையசைத்தார். அவருக்குச் சந்தோஷமாக இருந்தது. 


கயல் இன்னமும் உறங்க, நந்தா அவளை மெதுவாகத் தட்டி எழுப்பினான். எழுந்துவிட்டாலும் கூட எங்கே இருக்கிறோம் என்று அவளுக்குத் தெரியவில்லை. 


“உங்க அப்பா வந்திட்டார் பாரு.” நந்தா சொல்ல, கயல் வேகமாகத் திரும்பி பார்த்தாள். 


அன்பரசு கட்டிலில் சாய்ந்து அமர்ந்து இருந்தார். 


“ரொம்ப வலிக்குதா?” கயல் கேட்க, 


“இல்லை வலியே இல்லை.” என்றார் அன்பரசு. மகளுக்காகப் பொய் சொல்கிறார் என நந்தாவுக்குத் தெரியும். 


“உனக்கு உடம்புக்கு நல்லாத்தானே இருக்கு.” 


“ம்ம்…” 


அப்போது பத்மா உள்ளே வந்தவர், “உனக்கும் சேர்த்து இட்லி வாங்கிட்டு வந்திருக்கேன்.” என்றார். 

“நான் குளிச்சிட்டுதான் மா சாப்பிடணும். 


“நீ இதுக்கு மேல வீட்டுக்கு போய், எப்ப குளிச்சு? எப்ப சாப்பிடுவ? நான் ரெண்டு இட்லி ஊட்டி விடுறேன். நீ அப்புறம் வீட்ல போய்ச் சாப்பிட்டுக்க.” 


“சாப்பிடு கயல்.” நந்தாவும் சொல்ல, பத்மா மகளுக்கு இட்லியை கொடுத்தார். 


அன்பரசு மகளையே பார்த்துக் கொண்டு இருந்தார். கிளம்பும் போது கயல், “நான் நாளைக்கு வரேன்.” எனச் சொல்ல, 


“வேண்டாம் நீ வரவேண்டாம். இங்கதான் இத்தனை பேர் இருக்காங்க இல்ல.” என அன்பரசு பட்டென்று சொல்லிவிட, கயலின் முகம் வாடிவிட்டது. 


“அப்பா வீட்டுக்கு வந்ததும் வா.” என்றார் பத்மா. 


“ஏன் பிள்ளைதாச்சி பெண்ணை அலைய வைக்கிற. எனக்கு ஒன்னும் இல்லை. நான் நல்லா இருக்கேன். நீ அம்மாகிட்ட போன் பண்ணி பேசிக்க, வீணா அலைய வேண்டாம்.” 


அன்பரசு சொல்வதில் இருந்தே, அவருக்குத் தான் வருவதில் விருப்பம் இல்லை எனக் கயல்விழிக்குப் புரிந்தது. அது நந்தாவின் விருப்பம். அதற்காகத்தான் அவர் அப்படிப் பேசுகிறார் என அவளுக்குத் தெரியவில்லை.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!