Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

புது வெள்ளை மழை

புது வெள்ளை மழை Final 1




இறுதி அத்தியாயம் 


முருகேசன் காரை ஓட்ட, நந்தாவும் கயலும் பின் இருக்கையில் உட்கார்ந்து சென்றனர். இருவருமே எதுவும் பேசவில்லை. அவரவர் யோசனையில் இருந்தனர். 


வீட்டிற்கு வந்ததும், குளித்தவர்கள், மதியம் வைத்த குழம்பே இருக்க, அதைச் சூடு செய்து, தோசை ஊற்றி சாப்பிட்டனர். 



Advertisement


சாப்பிட்டதும் குடிக்கப் பால் எடுத்து வருவதற்காகக் கயல் செல்ல, “நீ உட்காரு நான் எடுத்திட்டு வரேன்.” என்றவன், அவனே சென்று இருவருக்கும் கொண்டு வந்தான். 


பால் குடித்த பின்னரும், இருவரும் படுக்கச் செல்லாமல் உட்கார்ந்தே இருந்தனர். பேச வேண்டும் கண்டிப்பாகப் பேசியே ஆக வேண்டும். 

நந்தா கயலை இழுத்து தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டான். அவ்வளவுதான் அதற்கு மேல் கட்டுபடுத்த முடியாமல், அவள் தேம்பி அழுதாள். 

Advertisement


“நான் இதுக்குத்தான் ஹாஸ்பிடல்ல உன் பக்கத்துல வரலை. நீ அழுதா எனக்கு எதுவுமே ஓடாது.” 

Advertisement

மனம் விட்டு அழுதுவிட்டால், கொஞ்சம் சரியாகி விடுவாள் என்பதால்… நந்தா அவளைத் தடுக்கவில்லை. 

Advertisement

அழுகை நின்றதும், “இன்னைக்கு இப்படி ஆனதுக்குக் காரணம் நான்தான்.” என்றவள், நடந்த அனைத்தையும் சொன்னாள். ஆனால் அவள் அப்பாவிடம் நந்தாவை பிடிக்கும் என்று சொன்னதைப் பற்றி மட்டும் சொல்லவில்லை. 


நந்தாவுக்குத் தெரியும், அவள் அதைச் சொல்ல மாட்டாள் என்று. அதைப் பற்றிப் பேசினால் இருவருக்குமே சங்கடத்தைத் தரும் என்பதால்…. அவனும் தெரிந்து கொண்டதாகக் காட்டிக்கொள்ளவில்லை. 


“இப்படி ஆனதுக்கு நீ இல்ல காரணம். உங்க அப்பாதான். என்னைக்கு இருந்தாலும் அவருக்கு இது நடந்திருக்கும். தேவையில்லாம நீதான் நடுவுல மாட்ட இருந்த.” 


“இனியாவது எங்க அப்பா மாறுவாரா?” 


“உங்க அப்பா மாதிரி ஆளுங்களால் உடனே மாற முடியாது.” 


கயல் கவலையாக இருக்க, “நீ இதெல்லாம் யோசிக்காத. உன் அப்பாவுக்கு அவரைப் பார்த்துக்கத் தெரியும்.” என்றான். 


“நான் வருணை வர சொல்றேன். நீ அவனோட மெட்ராஸ் போ, எனக்கு மெட்ராசுக்கு மாற்றல் வந்துடுச்சு. இன்னும் உத்தரவா கைல கிடைக்கலை. கொஞ்ச நாள்ல வந்திடும். வந்ததும் நான் வரேன்.” 

கயல் இங்கிருந்தால் அந்தச் சம்பவத்தையே நினைத்திருப்பாள் என்றுதான் நந்தா இந்த முடிவுக்கு வந்தான். கயலுக்கும் அது புரிந்ததால்… சரி என்றாள். 

வருனோடு குழலியும் வந்திருந்தார். கிளம்பும் அன்று எல்லோருமாகச் சென்று அன்பரசுவை பார்த்து விட்டு, அப்படியே கயல் ஊருக்கு போவதையும் அவரிடம் சொல்லிவிட்டு வந்தனர். 


அன்பரசு தன்னைத் தாக்கியவர்கள் பற்றி எதுவும் தெரியாது என விசாரணையில் சொல்லிவிட்டார். அவர் வடிவேலு பற்றி எந்தப் புகாரும் கொடுக்கவில்லை. இது நந்தா எதிர்பார்த்ததுதான். 


அந்த மாதம் குழலி மருமகளை அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்றிருந்தார். அப்போது எல்லாம் அடிக்கடி ஸ்கேன் எடுத்து பார்க்க மாட்டார்கள். எப்போதோ ஒருமுறைதான் எடுப்பார்கள். 


ஐந்து மாதம் ஆனதால் அவளை ஸ்கேன் எடுக்கச் சொல்லி அனுப்பினர். அதில் அவளுக்கு இரட்டை குழந்தைகள் என்று தெரிந்தது. 


“நான் நினைச்சிட்டே இருந்தேன் கயல், உனக்கு ஏன் வயிறு பெரிசா இருக்குன்னு. இப்பத்தானே தெரியுது, ஒன்னு இல்ல ரெண்டு குட்டிங்க இருக்குன்னு.” 


“பரவாயில்லை, உனக்கு முதல் தடவையே ரெட்டை குழந்தைங்க. இப்ப எல்லாம் ரெண்டு குழந்தைங்க தான் பெத்துக்கிறாங்க. உனக்கு ஒரே தடவையில வேலை முடிஞ்சது.” 

இரட்டை குழந்தைகள் என்றதும், எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் நந்தாவுக்குப் பயமாக இருந்தது. 

இருபது வயதுதான் கயலுக்கு முடிந்து இருக்கிறது. இரண்டு குழந்தைகளை எப்படிப் பெற்று எடுப்பாள் என அவனுக்கு மிகுந்த கவலை. ஆனால் கயல்விழியோ தைரியமாக இருந்தாள். 

நந்தாவின் இடமாற்ற உத்தரவு கைக்கு வந்ததும், அவன் மெட்ராஸ்க்கு கிளம்பி விட்டான். 


கிளம்புவதற்கு முன் அவனுக்கு வடிவேலுவை பற்றித் தெரிய வந்தது. அவர் எப்படித் திடீர் பணக்காரர் ஆனாரோ. அதே போல் திடீர் ஏழை ஆடிவிட்டார். தன் மாமனார் அவரை உயிரோடாவது விட்டாரே என நினைத்துக் கொண்டான். 


நந்தா வந்ததும் கயலுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றது. வார இறுதியில் வருணும், தாரணியும் வேறு இங்கே வந்துவிடுவார்கள், எல்லோரும் சேர்ந்து இருப்பதே மகிழ்ச்சியாக இருக்கும். 


இரட்டை குழந்தைகள் என்பதால்… குழலி மருமகளுக்காக விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டில்தான் இருந்தார். 


பிரசவத்துக்கு ஒரு மாதம் முன்பே பத்மா வந்துவிட்டார். வாசுவுக்குத் திருமணம் முடிந்து விட்டது. அவன் மனைவி கீதா போல் இல்லை. மிகவும் பொறுப்பான பெண். அதனால் நிம்மதியாக மகளைப் பார்த்துக்கொள்ள வந்துவிட்டார். 


இரட்டை குழந்தைகள் என்பதால்…. அதுவும் கயலுக்குச் சில பிரச்சனைகளும் இருந்ததால், பிரசவ தினத்துக்கு முன்பே அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுப்பது என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு இருந்தது. 

அன்பரசுவும் அன்று ஊரில் இருந்து வந்துவிட்டார். ஹோட்டல் அறையில் தங்கி இருந்தவர், மகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும் முன்பே மருத்துவமனை வந்துவிட்டார். 

பிரசவம் முடியும் வரை, நந்தாவுக்கு உயிரே இல்லை. அவன் தனியாக நின்று கொண்டிருந்தான். 

சிறிது நேரத்தில் ஒரு நர்ஸ் வந்து, பையன் பொண்ணு ரெண்டுமே பிறந்திருக்கு எனச் சொல்லிவிட்டு சென்றார். 


அதைக் கேட்டவுடன் பரணியும், தாரணியும் தங்களை போல என அப்படி ஒரு ஆட்டம் போட்டனர். 


அறுவை சிகிச்சை முடித்தவுடன் குழந்தைகளை வெளியே கொண்டு வந்து விட்டனர். ஆனால் கயல் மயக்கமாக இருந்தாள். சாதாரணமாக எல்லோருக்கும் சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்துவிடும். ஆனால் கயலுக்கு வெகுநேரம் வரை மயக்கம் தெளியவே இல்லை. 


அவளுடைய ரத்த கொத்திப்பு வேறு மிகவும் குறையாக இருந்தது. அவளுக்குச் சில மாதங்களாகவே அப்படித்தான் இருக்கிறது. மருத்துவர்கள் அதைச் சரி செய்ய முயன்றனர். 


நந்தா குழந்தைகளைக் கூடப் பார்க்கவில்லை. தான் கயலோடு சேர்ந்துதான் குழந்தைகளைப் பார்க்கப்போவதாகச் சொல்லி விட்டான். 

நேரம் செல்ல செல்ல எல்லோருக்குமே கொஞ்சம் பதட்டம் தொற்றிக்கொண்டது. அதுவரை பேரக் குழந்தைகளைக் கொஞ்சிக் கொண்டிருந்த அன்பரசு கூடப் பயந்து விட்டார். 

“கடவுளே என்ன தண்டனைனாலும் எனக்குக் கொடு. என் மகளுக்குக் கொடுக்காதே. இனி ஒரு உயிர் என்னால எப்பவும் போகாது.” என வேண்டியபடி இருந்தார். 


எல்லோரையும் கொஞ்சம் மிரட்டி பார்த்து விட்டே கயல் கண்களைத் திறந்தாள். அதன்பிறகுதான் எல்லோருக்கும் உயிரே வந்தது. 

அறைக்கு வந்ததும், முதலில் கணவனைத்தான் தேடினாள். அவர்களுடைய சந்தோஷமான தருணம் அல்லவா. 


அவளது அருகில் வந்த நந்தா “எப்படி இருக்கக் கயல்? ரொம்ப வலிக்குதா?” எனக் கேட்க, இல்லை எனத் தலையசைத்தாள். 


“நீங்க குழந்தைகளைப் பார்த்துடீங்களா?” 


“இன்னும் இல்லை.” 

“ஏன்?” 


“நீ எங்களை மிரட்டின மிரட்டல்ல யாரு குழந்தையைப் பார்க்கிற மூட்ல இருந்தோம்.” வருண் சொல்ல, கயல் புரியாமல் பார்த்தாள். 


சொல்லாதே என்பது போல், நந்தா வருணுக்கு ஜாடை செய்ய, 


“உன்னோட சேர்ந்துதான் குழந்தைகளைப் பார்க்கனும்னு, நீதான அவனை மிரட்டி வச்சிருக்க.” எனப் பேச்சை மாற்றினான். 


“நான் அப்படி எல்லாம் சொல்லவே இல்லை.” எனக் கயல் சொல்லிக் கொண்டிருந்த போதே, பத்மா தனது பேத்தியையும், குழலி தனது பேரனையும் தூக்கிக் கொண்டு வந்தனர். 


கயல் கட்டிலில் சாய்ந்து படுத்திருக்க, அவள் மீது பையனையும், நந்தாவின் கையில் பெண்ணையும் கொடுத்துவிட்டு, அவர்களுக்குத் தனிமை தந்து எல்லோரும் வெளியே சென்றனர். 

நந்தா கட்டிலின் அருகில் இருந்த இருக்கையில் உட்கார்ந்து, மகளை வாகாக வைத்துக் கொண்டான். 

இருவரும் இருவரிடம் இருக்கும் குழந்தைகளையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு இருந்தனர். 


இரண்டு குழந்தைகளும் ஒரே நேரத்தில் கண் திறந்து பார்க்க, “ஹே ஒரே மாதிரி பண்றாங்க.” கயல் குதுகலிக்க, 


“ரொம்பச் சந்தோஷப்படாதே, இனி எல்லாமே ஒரே நேரத்தில்தான் பண்ணுவாங்க. அப்ப தெரியும் உனக்கு.” 


“ஆமாம் இல்ல. ஆனா எங்க அம்மா இன்னும் கொஞ்ச நாள் இருக்கேன்னு சொல்லி இருக்காங்க.” 


“நான் பார்த்துகிறேன் கயல், கவலைப்படாதே.” நந்தா சொல்ல, கயல் அவனை முறைத்தாள். 


“பசங்களா, உங்க அப்பாவை இப்பவே நல்லா பார்த்துக்கோங்க. நாளையில இருந்து நடு ராத்திரிதான் வீட்டுக்கு வருவார். அப்புறம் அடையாளம் தெரியாம போயிடப் போகுது.” 

தன்னைக் கேலி செய்யும் மனைவியின் காதை பிடித்துத் திருகியவன், “ரொம்பப் பேசுற.” என்றான். 


அதற்குள் பத்மா குழலி இருவரும் உள்ளே வந்து, ஆளுக்கு ஒரு குழந்தையைத் தூக்கி கொண்டனர். அவர்களோடு அன்பரசுவும் வந்தார். சிறிது நேரம் மகளோடு இருந்துவிட்டு கிளம்பி விட்டார். 


“கயல் ரொம்பப் பேசக் கூடாது. நீ படுத்து தூங்கு. பிரசவம் சாதாரண விஷயம் இல்லை.” குழலி சொல்ல, கயல் படுத்துக் கொண்டாள். 

அவளை ஐந்தாம் நாள் வீட்டிற்குச் சென்றுவிட்டு, திரும்பத் தையல் பிரிக்க ஒருநாள் வர சொன்னார்கள். ஆனால் அதற்குப் பத்மா ஒத்துக் கொள்ளவில்லை. 


குழந்தையை வைத்துக் கொண்டு இங்கும் அங்கும் அலைய வேண்டாம். தையலும் பிரித்த பிறகு, இரண்டு நாட்கள் சென்று மொத்தமாக வீட்டுக்குச் செல்லலாம் எனச் சொல்லிவிட்டார். 


அது பெரிய மருத்துவமனை. அறை வாடகையே அதிகம் வரும். இருந்தாலும் மாமியார் சொல்லிவிட்டார் என்று நந்தா பணம் கட்ட சென்றபோது, ஏற்கனவே அன்பரசு கட்டிவிட்டதாகச் சொல்ல, அவன் கயலிடம் வந்து கத்தினான். 


கயல் பத்மாவிடம் சொல்ல, “முதல் பிரசவம் நாங்கதானே கயல் பார்க்கணும். சும்மா எல்லாத்துக்கும் தடை சொல்லக் கூடாது.” 


“நீயும், மாப்பிள்ளையும் எப்படியோ இருந்துக்கோங்க. ஆனா நாங்க எங்க பேரப் பசங்களுக்குச் செய்றதை எல்லாம் வேண்டாம்னு சொல்லாதீங்க. இதை நான் சொல்லலை உன் அப்பாதான் சொல்லச் சொன்னார்.” என்றார். 


கயல் அதை அப்படியே நந்தாவிடம் சொல்ல, அவன் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டே இருந்தான். 


“எங்க அப்பா என்னவோ கள்ளக்கடத்தல் பண்ணி சம்பாதிக்கிறா மாதிரி ரொம்பப் பில்ட்அப் கொடுக்காதீங்க என்ன?” கயல் சொல்ல, நந்தா அவளை முறைத்தான். 


உண்மையில் மருத்துவமனையில் இருந்ததால்தான் ஓரளவுக்குச் சமாளிக்க முடிந்தது. கயலை அங்கிருக்கும் நர்ஸ்கள் பார்த்துக் கொள்வார்கள். குழந்தையையும் அவர்களே குளிப்பாட்டி கொடுத்து விடுவார்கள். பத்மா உடனிருந்து பார்த்துக் கொள்வார். 


குழலி வீட்டில் இருந்து சமையல் செய்து கொடுத்து விட, அதைப் பரணியோ, நந்தாவோ ஏன் சில நேரம் வருண் கூடக் கொண்டு வருவான். 


கயலுக்குத் தையல் பிரித்து, வயிற்றுப் புண் எல்லாம் ஆற்றிய பிறகு, அவள் நன்றாக நடக்க ஆரம்பித்ததும்தான், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். 


வீட்டிலும் ஆட்கள் அதிகம் என்பதால்… குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதில் சிக்கல் இல்லை. குழந்தைகள் நள்ளிரவுக்கு மேல் தூங்கினால், காலையில்தான் எழுவார்கள். இரவில் நந்தாவும், பரணியும் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!