Skip to content
Post Views: 608
மலர்கள் பூத்துக் குலுங்கி மணம் பரப்பிக் கொண்டிருந்த தோட்டத்தில் உலாவியபடி நந்தினியுடன் கதை அளந்து கொண்டிருந்தாள், சாருலதா.
நேற்றே அனுமதி பெற்றுவிட்டபடியால் இன்று அவள் வீட்டில் தான் இருந்தாள்.
காற்றில் வீசிய இயற்கையின் நறுமணத்தை ஆழ நுகர்ந்தபடி பூக்களை ரசிப்பதுவும், அவற்றை தொட்டு வருடுவதுமாக மெல்ல நேரம் கழிந்து கொண்டிருந்தது.
நெடுநாள் கழித்து எப்படி இருக்கிறாய் எனக்கேட்டு நந்தினிக்கு குறுஞ்செய்தி அனுப்பிய கணமே, இன்று வேலைக்கு மட்டம் போட்டதாக கூறிக் கொண்டு அரட்டைக்கு அழைத்து விட்டாள்.
Advertisement
இருவருமாக பற்பல ஊர்கதைகளை படு சுவாரஷ்யமாக உரையாடிக் கொண்டிருக்க,
“ஏம்மா சாரு..” என வீட்டு வாசலில் நின்று கொண்டு உரக்க அழைத்தார், கேஷவமூர்த்தி!
“மாமா கூப்பிடறாருடி!” – என்றாள்.
Advertisement
இருந்தாலும் அவளை அனுப்ப மனமில்லாதவளாய், “மகனையும், மருமகளையும் சேர்த்து வைக்க அந்த மனுஷன் என்ன பாடு படறாருல? பேசாம அந்த நிகிலை எப்படியாவது சுருட்டி போட்டுக்க வேண்டியது தான..” என்க,
Advertisement
“போடி இவளே! எனக்கே சில நேரம் சந்தேகம் வந்து தொலைக்கும், நிஜமாவே இந்த நிகில் எந்த ரகம் அப்படினு.. ஒருவேள கே’யா இருக்குமோனு கூட மாத்தி மாத்தி யோசிப்பேன், ஒரு ரசனையே இல்லாம இருக்கான் நந்து..” என்றாள் சலிப்பாக.
எப்போது அவனிடம் பேச முயன்றாலும் ஒரு வெட்டு இரண்டு துண்டென அவன் பேச்சைக் கத்தரித்துக் கொள்வது நினைவில் வந்து போனது. அவளிடம் மட்டுமல்ல, அவள் பார்க்க வேறு எந்தப் பெண்ணிடமும் அவன் வழிந்து உருகியதில்லை.
அப்போதெல்லாம் வளர்ப்பின் மகிமை என ஆசுவாசப்பட்டுக் கொண்டவளுக்கு, ‘ஒருநாள், ரெண்டுநாள்னா ஓகே.. காலம் பூரா இப்படியே இருக்கலாமா என்ன?’ என்று தான் இப்போது தோன்றுகிறது.
Advertisement
அவன் எப்படிப்பட்டவனோ.. பெண்கள் விடயத்தில் நூறு சதவீதம் தூய்மையானவன்! இது சாருலதாவின் உள்மனம் நிகிலனுக்கு வாரி வழங்கிய பெறுமதி மிக்க சன்மானம்..
கலகலவென நகைத்தவளின் சிரிப்பொலியை வெகு நேரம் வரை கேட்டுக் கொண்டிருந்தவள் மாமனார் நகராமல் தனக்காகக் காத்திருப்பதைப் பார்த்து விட்டு,
“நான் அப்பறம் கூப்பிடறேன்டி..” என கெஞ்சலாக உரைக்க,
“அப்பறம் கூப்பிடறியா? பிச்சுப்புடுவேன், பிச்சு! ஆமா! ஆல்ரெடி உன்கிட்ட சொல்லிட்டேன்.. நாலு மணியாகுறப்போ நான் உன் வீட்டு கேட் கிட்ட நிற்பேன், நீ ரெடியாகி வெளிய நின்னுட்டு இருக்கல! அப்பறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. பேட்மின்டன் விளையாடி ரெண்டு மாசமாக போகுது!” என்றாள் முதலில் மிரட்டலும், பிறகு சலிப்புமாக!
நிச்சியம் வருகிறேன் என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்துக் கொண்டவள் சடுதியில் கேஷவனை நெருங்க,
“யாருமா ஃபோன்ல?” என்றார்.
விகல்பமாக எண்ணத் தோன்றாமல் நந்தினியுடன் பேசியதாகக் கூறி, இன்று மாலை கிரௌண்ட் வரை சென்று வர இருப்பதை மாத்திரம் சொல்லிக் கொண்டாள்.
அப்போதைக்கு எதையும் கூறாவிட்டாலும் கேஷவனின் சிறு முக மாறுதல் மாலையில் அவர் இதற்கு எதையாவது கூறி.. இல்லையில்லை, ‘நிகில் இருக்கிறான் அல்லவா.. அவனுடன் நேரம் செலவு செய்’ எனக் கூறியாவது தடை விதிக்கப் பார்ப்பார் என்று ஊகிக்க முடிந்தது.
ஏனைய நாட்களில் இருக்கும் சுதந்திரம் நிகிலன் வீட்டோடு இருக்கும் நாட்களில் அவளுக்குக் கிட்டாது. அவனுக்குப் பிடிக்காது, எதுக்கும் அவன் கிட்ட கேட்டுக்கோ என சம்பந்தமே இல்லாதவற்றுக்குக் கூறி அவனின் காலைப் பிடிக்கச் சொல்வார்கள்.
அதனாலேயே அவன் வேலைவெட்டி இல்லாமல் வீட்டில் ஓய்வாக இருக்கும் நாட்களில் எங்கும் செல்லவோ, வேறு எதற்குமோ வைத்துக் கொள்ள மாட்டாள்.
உண்மையை சொல்லப் போனால் இதுதான் அவளின் பார்வை நிகிலனை தன்னவன் என்கின்ற ஸ்தானத்தில் வைத்துப் பார்க்க பெரிதும் தயங்கும் காரணம்!
வீட்டில் நடக்கும் கூத்தையெல்லாம் பார்த்துக் கொண்டு படு குஜாலாக இருக்கிறானே என சில நேரங்களில் அவன் மீது கோபத்தில் கனன்று திரிவாள்.
அன்பு காட்டுவதில் எந்தக் குறையும் இதுவரை வைத்ததில்லை ஆகையால் பெரியவர்களை எதிர்த்துப் பேசி நியாயம் கேட்கவும் சாருவுக்கு வழியின்றி போனது.
இருவருமாக ஹாலைத் தாண்டி உணவறைக்கு நடந்து கொண்டிருக்கையில், சாருவின் அலைபேசி மீண்டும் அதிர்ந்தது.
திரையில் ஜெயசிம்மன் சார் என இருக்கக் கண்டதும் பரபரப்பானவள், “வெயிட் அ செகண்ட் மாமா!” என கூறிக் கொண்டு அலைபேசியுடன் மீண்டும் வெளியே ஓடி வந்தாள்.
வழமையான சுகநல விசாரிப்புகளைத் தொடர்ந்து, “இன்னைக்கு நீ வேற இங்க வரல, விஷாகனை சமாளிக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கும்மா!” என்றதும், சாருலதாவுக்கு மனமே உருகிற்று!
“என்ன சொல்றிங்க சார்?”
“ஆமாம்மா, உன்னையே தான் தேடறான். யாரையும் கிட்ட கூட வர விட மாட்டேங்குறான், ஒரே அழுகை! என்ன சொல்லுறதுனு தெரியல. இன்னைக்கு ஏதோ..”
“இருங்க சார், ஒரு பிஃப்டீன் மினிட்ஸ்ல நான் அங்க இருப்பேன்” என இடையிட்டாள் சாருலதா.
“ஆனாம்மா..”
“வரேன் சார். ரிலாக்ஸ்!” என்றவள் அழைப்பைத் துண்டித்ததும் மேல்மாடிக்கு விரைய,
“சாரும்மா, எங்க போற?” என்றாள் திலோ, சத்தமாக.
“வரேன் ஆன்ட்டி” என்றதோடு சரி, ஐந்து நிமிடங்களில் தயாராகி வெளியே வந்தவள்,
“அர்ஜென்ட் மாமா, அந்த குட்டி பையனோட அப்பா தான் கால் பண்ணிருந்தாரு. உடனே போயாகணும், சாரி மாமா!” என்று கொண்டு அவர்களின் அனுமதிக்காகக் காத்திராமல் நகரப் போக,
“நிகிலை ட்ரோப் பண்ண சொல்றேன் இரு கண்ணு..” என்றாள் திலோ, சோபாவில் கால் நீட்டி அமர்ந்திருந்தவனைக் கடைக் கண்ணால் பார்த்தபடி!
“கார் இருக்குல்ல ஆன்ட்டி? நானே போய்க்குவேன்..”
“அதெப்படி நீ போவ? நிகில், நீ போய் சாருவை ட்ரோப் பண்ணிட்டு வந்துடு! நேத்து வந்ததுலேர்ந்து ரெண்டு பேரும் பேசிக்க கூட இல்லல?” என்றாள். கேஷவமூர்த்தி மௌனசாட்சியாக – அமைதியாக நின்றிருந்தார்.
என்ன நினைத்தானோ.. அலைபேசியை அணைத்து பாக்கெட்டினுள் போட்டுக் கொண்டு நிகில் எழுந்து கொள்ள,
“போற வழில விஷயத்தை அவன்கிட்ட சொல்லிடு சாரு!” என ரகசியக் குரலில் முணுமுணுத்தாள், திலோத்தமை.
இவனுடன் செல்வதே பெரிய சவால். அதில் இது வேறா என சலிப்பாகக் கண்களை மூடித் திறந்தவள் சம்மதமாக தலை அசைத்து விட்டுத் திரும்பி நடந்தாள்.
மெல்ல நடைபாதையில் வழுக்கி சாலைக்கு இறங்கியது கார்!
“நிக்கி..” என மெல்ல பேச்சை ஆரம்பித்தாள், சாரு.
இத்தோடு நாலைந்து தடவைகள் கேஷவனும், கேஷவன் மாற திலோவும் என அவளை அறிவுறுத்தியாகிற்றே! இதற்கு மேலும் அவனிடம் வேலைத் தள மாற்றம் பற்றி சாடைமாடையாகப் பகிர்ந்து கொள்ளாதுவிட்டால் அவர்களுக்கும் மனம் நொந்து போக வாய்ப்புண்டு.
“சொல்லு சாரு, என்ன விஷயம்? எதையாவது சொல்ல நினைக்கிறியா..” – என்றுமில்லாதவாறு மிக மென்மையாக வெளி வந்தது, நிகிலனின் குரல்.
‘நல்ல மூட்ல இருக்கான் போல’ என நினைத்துக் கொண்டவளாக,
“மாமா நேத்து ஒரு ஆக்ஸிடண்ட் மேட்டர் பத்தி சொன்னாரே? அந்த சின்ன பையனுக்கு கால் நரம்பு பாதிச்சு நடக்க முடியாம போய்டுச்சு. இனி பெட்ல தான் இருக்கணும்னு சீப் டாக்டர் கூட சொல்லிட்டாரு.
மாமாவுக்கு மனசே ஆறல, விஷயம் தெரிஞ்சதுலேர்ந்து எனக்குமே ரொம்ப வருத்தமாப் போச்சு. அதான் என்ன பண்றதுனு யோசிச்சி மாமாவோட கில்டி ஃபீலிங்கை இல்லாம பண்ணுறதுக்காக அவங்க வீட்டுக்கு போய் வர்றேன். அந்த குட்டி பையனை நான்தான் கவனிச்சிக்கிறேன்..” என்றவள் வாசுதேவனிடம் பேசி பணி மாற்றம் செய்து கொள்ள உதவி பெற்றுக் கொண்டது வரை கூறினாள்.
அனைத்தையும் செவியேற்றுக் கொண்டிருந்தவன், “உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை? பாவம் பார்த்து இப்படி நீயும், அவரும் சப்போர்ட் பண்ணுறதால அந்த வேலுசாமி பையன் இதுக்கு மேலயும் கேர்லெஸ்ஸா தான் இருப்பான்.
சட்டத்தோட பிடியில அவனைத் தண்டனை அனுபவிக்க விடுங்க. அதுக்கு பிறகு இரக்கப்பட்டு அவனுக்காக வாதாடுங்க, என்ன வேணா பண்ணிக்கங்க.
இப்ப அந்த ஆளு என்ன ஆக்ஷன் எடுக்கறாரோ அதுக்கு கொஞ்சம் அடங்கி இருக்காம எதுக்கு வீண் வேலை பார்க்கறீங்க? இதை சொன்னா டேட் கேட்க மாட்டாரு, நீயும் எப்படியும் காதுல வாங்கப் போறதில்லனு தெரியும்..” என்றான், எரிச்சல் மண்டியிட்ட குரலில்.
அவன் கூறியதிலிருந்த நியாயம் மண்டைக்கு உறைத்தபடியால் குறுக்குமறுக்காக எதுவும் பேசாமல் அமைதி காத்தாள், சாருலதா.
இங்கே அவள் குற்றம் புரிந்தவனுக்கு எந்த ஆதரவும் வழங்கவில்லை, உண்மையில் மாமனாரின் துயர் துடைப்பது மட்டுமே அவளின் குறிக்கோள்!
இருந்தாலும் கேஷவமூர்த்தியின் கவலையில் ‘வேலுசாமியின் மகன்’ பற்றிய பங்கும் இருக்கிறதே! நெடுநாட்களாக வேலை பார்ப்பவர் என்பதால் வேலுசாமி மீது கொண்ட பரிவு அவரை பதற்றங் கொள்ளச் செய்திருக்கிறது.
“அது சரி, இதயெல்லாம் இப்போ நீ எதுக்கு என்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்க?”
பெருமூச்சுடன் அவன் புறமாகத் திரும்பியவள், “ஆன்ட்டி தான் உன்கிட்ட சொல்லி வைக்க சொன்னாங்க, அதுக்காக தான் சொன்னேன். நீ எதுவும் பெருசா கற்பனை பண்ணி ஸ்ட்ரெஸ் ஆகிக்காத நிக்கி!” என்றாள் நிதானமாக.
அவனிடமிருந்து வெளியேறப் போகும் கேலி வார்த்தைகளுக்கான முன் கவசத்தைத் தான் போட்டு வைத்தாள்.
ஆனால் அதற்கு மாற்றமாக, “இன்னைக்கு நான் உன்கிட்ட ஆர்க்யூ பண்ற மூட்ல இல்ல!” என்பதோடு நிகில் சன நெருக்கடி மிக்க பாதையில் கவனமாகி விட,
“உஃப்!!!” எனப் பெரிதாக மூச்சை இழுத்து விட்டுக் கொண்டாள் சாருலதா.
பிறகு அவள் கூறிய லொகேஷனில் கார் சென்று நிற்கும் வரை இருவரிடமும் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை.
இந்த விடயத்தைப் பற்றி அவனிடம் கூறி வைக்க வேண்டிய அவசியம் நேராதிருந்தால் இந்த சொற்பம் கூட இருவரது வாயிலிருந்தும் உதிர்ந்திருக்காது. சுருங்கக் கூறின் இருவருக்கும் இருவரிடமும் உரையாடிக் கொள்ள இஷ்டமில்லை. வீணாக நேரம் செலவு செய்யவும் எண்ணமில்லை, அவ்வளவே!
கார் தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டதும், “தேங்க்ஸ்!” என நட்பாகப் புன்னகைத்து விட்டு இறங்கி நகர்ந்தவள் ஓட்டமும் நடையுமாக விஷாகனின் அறையை வந்தடைந்தாள்.
அங்கு தான் ஜெயசிம்மனும் புத்தகம் புரட்டிக் கொண்டிருந்தார்.
இவளைக் கண்டதும், “வாம்மா..” என இன்முகம் மாறாமல் வரவேற்றவர்,
“உனக்கு ஏதோ முக்கியமான ஆக்கேஷன்னு டாக்டர் சொன்னாரு. இருந்தாலும் மனசு கேட்கல. விஷாகன் பண்ணுன அராஜகத்துல மத்த எதுவும் யோசிக்க தோணல, சுயநலமா யோசிச்சி உன்னை அழைச்சி பதற்றப்படுத்திட்டேன். சாரிமா!” என மனதார மன்னிப்பு வேண்டவும் செய்தார்.
சாருலதா நிர்மலமாகப் புன்னகைத்தாள்.
கட்டிலில் சாய்ந்திருந்த விஷாகன் அவளைக் கண்டதும் கமலமாக மலர்ந்து சிரிக்க,
“நீ வர்றதா சொன்னதும் தான் கொஞ்சம் அடங்கினான். என்னனு கேளும்மா! இப்படியே போனா எங்களுக்கும் கஷ்டம், உனக்கும் கஷ்டமாப் போய்டும்..” என மனம் வருந்தினார் ஜெயசிம்மன்.
புரிந்ததாகத் தலை அசைத்தவள், “குட்டி பையா.. என்னாச்சு?” எனக் கேட்டபடி அவனருகே அமர்ந்து கொள்ள, ஓரிரு நிமிடங்களை அவளையே பார்த்திருந்தவன்,
“எங்கயும் போகாதீங்கக்கா, பயமாருக்கு!” என முணுமுணுப்பாகக் கூறியபடி அவளின் மடி சாய்ந்தான்.
சாருலதா ஜெயசிம்மனைப் பார்க்க, கீழுதட்டைக் கடித்து கண்களிலிருந்து சீறிப் பாய்ந்த கண்ணீரைக் கட்டுப் படுத்த முயன்றவர், தன் முயற்சியில் தோல்வியைத் தழுவியவராக அவ்விடம் விட்டு அகன்றார்.
“என்ன பயம்.. உன்னை யார் என்ன சொன்னாங்க விஷுக்குட்டி?” – தலை கோதியபடி மென்குரலில் கேட்டாள். அந்த ‘பயம்’ எதனால் உருவானது என அவளால் ஓரளவு ஊகிக்கவும் முடிந்தது தான்!
தலையை இருபுறமாக ஆட்டி மறுத்தபடி, “தெரியல, பட் ரொம்ப பயமா இருக்கு..” என்றவனின் உடல் நடுக்கம் சாருலதாவை அதிரச் செய்தது.
அந்த ரா நேர விபத்து பக்குவப்பட்ட மனதையுடைய விஜிதாவையே அந்த அளவுக்கு பாதித்திருக்கும் பட்சத்தில் இவனெல்லாம் எம்மாத்திரம் என்று தான் தோன்றியது.
“இங்க பாருங்க விஷுக்குட்டி, இங்க யாரும் உன்னை எதுவும் செய்ய முடியாது. உன்னோட அப்பா, அம்மா, நான், உன் கேர்டேக்கர் அக்கா, இன்னும் நிறைய பேர் இருக்கோம். நீயே பார்த்திருப்பல்ல?”
“ம்ம்ம்..” என மெலிதான முனகல் அவனிடமிருந்து.
நிகிலன் கூறியதைப் பற்றி நினைவு கூர்ந்தது சாருவின் மனம். எவ்வளவு அழகாக, சந்தோஷமாக இருந்த குடும்பமிது! ஒரே ஒருவனின் கவனயீனத்தால் ஒரு குருவிக் கூடு கலைந்து, மூன்று உயிர்கள் தங்களின் நிம்மதியையும் ஆசுவாசத்தையும் தொலைத்திருக்கின்றனவே!
அவனுக்காக மாமா இவ்வளவு வருந்தத் தேவையில்லை, இன்று அவனுக்கு படிப்பினை கிடைக்காமல் போனால் இன்னொரு நாள் இதே அவலம் இன்னொரு குடும்பத்துக்கும் நேரக் கூடும் என மனம் நிகிலன் கூறியவற்றுக்கு நியாயம் கற்பித்தது.
ஜெயசிம்மன் ஏதாவது சட்ட ரீதியாக முந்திக் கொண்டு விட்டால் ஒருவனின் எதிர்காலம் வீணாகி விடுமே என்ற அவரின் கவலையை விட, சிறுவனின் நிலைமை பூதாகரமானதாகத் தெரிந்தது, சாருவுக்கு.
நிமிடங்கள் மெதுவாக மௌனத்தில் கழிய, சிறு இடைவெளிக்குப் பிறகு, ‘அம்மாவைப் பார்க்கணும்’ என அவனே தான் சாருவை விட்டு விலகினான்.
அவனை மெல்ல வீல்ஷேரில் அமர்த்தி விஜிதாவின் அறைக்கு அழைத்துச் சென்றவள் அவர்களின் உணர்வு பூர்வமான பந்தத்தைப் பார்த்திருந்து விட்டு அவனையும் அமைதிப்படுத்தி, ஜெயசிம்மனிடம் கூறிக் கொண்டு புறப்பட்டாள்.
வீடு சென்றதும், மதிய உணவருந்தியதோடு உடை மாற்றிக் கொண்டு நேராக கிரௌண்ட்டைத் தான் வந்தடைந்தாள்.
இடையில், “காலைல உன்னை ட்ரோப் பண்ண வந்தவன், எங்க போனான்னே தெரியல. இன்னுமே வீட்டுக்கு வரல, எங்க போய்ட்டானோ..” என்ற புலம்பலுடன் புதுத் தகவலும் கிட்டியது.
மாலை மங்கி இருள் சூழத் தொடங்கும் வரை விளையாடி விட்டு களைத்துப் போய் மர இருக்கைகளில் இளைப்பாறினர். நந்தினியின் கடைக்கண் பார்வை தோழியில் பதிந்தது.
அதை உணர்ந்து பல்லிளித்தவள், “நானே பாவம் பார்த்து உனக்கு வெற்றியை விட்டுத் தந்துட்டேன். இருந்தாலும் பரவாயில்ல, இந்த சண்டே ஷாப்பிங் போய் வரலாம் என்ன..” என தாராள மனதுடன் கூட,
“உதை விழும் பார்த்துக்க.. நீ விட்டுத் தந்தியா!!” என அவளைக் குனிய வைத்துக் கும்மினாள், நந்தினி.
வேக மூச்சிழுத்தவாறே சத்தமாக சிரித்த சாருலதா, “விடுடி, இந்த அடி அடிக்கிறியே! உனக்கு புருஷனா வாய்க்க போறவன் கதி அதோகதி தான்..” என்க, நந்தினி வெட்கப்பட்டாள்.
“பார்றா, கருமோ! வெட்கப்படறியாடி..” – சாருலதா மேலும் சீண்ட,
“இப்போ தான் ஜாப் பிக்ஸ்ட் ஆகிடுச்சே! அதுனால என்னை ரொம்ப நாள் வெயிட் பண்ண வைக்க மாட்டாராம், நெக்ஸ்ட் மந்த்தோ.. அதுக்கு அடுத்த மந்த்தோ குடும்பத்தோட வந்து பேசுறதா சொன்னாருடி..” என்றாள், நந்தினி.
மூன்றரை வருடக் காதல்! இருவரின் நேசக் கதை வீட்டில் சிக்கியதும் அடி உதை என கொடுமைப்படுத்தா விட்டாலும் ‘ஒழுங்கான ஜாப் இல்லாம அவனுக்கு உன்னைக் கட்டிக் கொடுக்க முடியாது’ என ஸ்ட்ரிக்ட்டாக மறுத்து விட்டார், நந்தினியின் தந்தை!
அவர் கூறுவதிலும் நியாயம் உள்ளதே! எனவே மறுப்பேதும் பேசாமல், காதலனுடனான தொடர்பையும் துண்டித்துக் கொள்ளாமல் காத்திருக்கலானாள் நந்தினி.
அந்த காத்திருப்புக்கு வெகுமதியாய் தினேஷுக்கு கல்வி வாரியத்தில் – நல்ல பதவியில் வேலை கிடைத்திருக்க.. அடுத்த கட்டமாக அவன் வீட்டாரோடு பெண் பார்க்க வர இருக்கிறானாம்..
அது பற்றி சிலாகித்து, இடையிடையே நாணப்பட்டு, இன்னும் சில இடங்களில் உணர்ச்சி வசப்பட்டு என வெகு சுவாரஷ்யமாக அவள் கூறியவற்றை சிறு தலை அசைப்புடன் கேட்டுக் கொண்டிருந்தாள், சாருலதா. உயிர் தோழியின் மகிழ்வில் அவளது உள்ளமும் பூரித்துப் போய் கிடந்தது.
அதே உற்சாகத்துடன் இரவைக் கழித்தவள் மறுநாள் ஜெயசிம்மன் வீட்டுக்கு சென்ற போது, டாக்டர் வாசுதேவப் பிரதாப்பிடம் நல்ல திட்டு! பாரபட்சமின்றி அவளை வார்த்தைகளால் வறுத்து வாங்கினான்.
ஈற்றில் அவன் முன்னிலையிலேயே கண்களில் கண்ணீர் முட்டி நிற்கவாயிற்று, சாருலதாவுக்கு!
தொடரும்..
error: Content is protected !!