Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

3 பேர் 2 காதல் 1 கனவு

3..2..1 Episode 9. தோள் சாயத் தேவையில்லை!

மதுரை மல்லி மனைவிகள் தலையில் மணக்க, வேலைக்குச் செல்லும் மகளிருக்கு மலர்கொத்துகள் பறக்க, மகளிர் முன்னேற்ற கூட்டங்கள் மேடைகளில் முழங்க, மகளிர் மட்டும் பாடல்களை ரேடியோக்கள் ஒளிபரப்ப, அன்றைய மகளிர் தினம் அகிலமெங்கிலும் அழகாக அரங்கேறிக் கொண்டிருந்தது.

அல்லும் பகலும் போட்டியும் பந்தயமும் நிறைந்து பரபரப்பாய் இருந்த புவி ஐ.ஏ.எஸ். அகாடெமி, புடவைகள் உடுத்திய பெண்கள் புடைசூழ புதுப்பொலிவைப் பரப்பிக்கொண்டிருந்தது.

கார்த்தியையும், வசந்தியையும் முதல்முறை புடவையில் பார்த்த சேதுவுக்கு, அவர்களை அடையாளம் காண சிறிது நேரம் பிடித்தது. இருவரையும் ஆச்சர்யத்தோடும் ஆனந்தத்தோடும் பார்த்துக்கொண்டிருந்தான்.

“இங்க கார்த்தி, வசந்தின்னு ரெண்டு பொண்ணுங்க இருந்தாங்க. எங்கே போனாங்கன்னு தெரியல. நீங்க பார்த்தால், கொஞ்சம் வரச் சொல்லுறீங்களா?”, சேது கிண்டலுடன் கூற, கார்த்தியும் வசந்தியும் புன்முறுவல் பூத்தார்கள்.



Advertisement

“சரி, நீங்க ரெண்டு பேரும் ஸ்டேஜ் தெரியுற மாதிரி இடத்துல போய் உட்காருங்க. நான் ஸ்டால்லயிருந்து ஐஸ்கிரீம் வாங்கிட்டு வந்துடறேன்!” சேது கூறிவிட்டு, தன் தோள்பையை அவர்களிடம் நீட்டினான். அதை வாங்கிக்கொண்டு, வசந்தியும் கார்த்தியும் இருக்கைகளில் அமரச் சென்றார்கள்.

அனைத்து பேட்ச் மாணவ, மாணவிகளும் மகளிர் தின நிகழ்ச்சிக்கு வருகைத் தந்ததால், அரங்கமே கூட்டத்தில் நிரம்பி வழிந்தது.

கார்த்தியும் வசந்தியும் ஒருவாராக இருக்கைகளில் சென்று அமர்ந்தார்கள். அவர்கள் அமர்ந்ததும், சேதுவின் பையில் இருந்த அவனது மொபைல் போன் சிணுங்கத் தொடங்கியது.

Advertisement

கார்த்தி போனை வெளியே எடுக்க, ஸ்கிரீனில் பெயர் இல்லாமல் நம்பர் பளிச்சிட்டது. வசந்தி, போனை கார்த்தியிடமிருந்து வாங்கி அழைப்பை ஏற்க, மறுமுனையில், “ஹலோ”, என ஒரு பெண்ணின் குரல் இனிமையாக இசைத்தது.

Advertisement

வசந்தி பதில் கூறும் விதமாக, “ஹலோ, யார் பேசுறது?”, எனத் திரும்பிக் கேட்க, அழைப்பு உடனே துண்டிக்கப்பட்டது.

“சேது ஒன்னும் சாதாரண ஆள் இல்ல போலடி! நம்மக்கிட்ட எதையோ மறைக்கிறான். அவன் வரட்டும்… மாட்டினான் இன்னைக்கு!”, வசந்தி, கார்த்தியிடம் கூற, அதே நேரம், சேது ஐஸ்கிரீமுடன் அவர்களை நோக்கி வந்து, ஐஸ்கிரீம் கப்புகளை அவர்களிடம் நீட்டினான். அதை வாங்கிக்கொண்டு, இருவரும் நக்கலாக சிரித்தார்கள்.

சேது என்னவென்று புரியாமல் விழித்தான்.

Advertisement

“இப்போலாம் யாரை நம்புறதுன்னே தெரியல கார்த்தி. நம்மக் கூடவே இருப்பாங்க… ஆனால், நம்மக்கிட்ட ஒரு விஷயத்தையும் சொல்ல மாட்டாங்க!”, வசந்தி பெருமூச்சுடன் கூறினாள்.

“இப்போ என்ன ஆச்சு, வசந்தி? முதல்ல நடந்ததைச் சொல்லு,” என்று புரியாமல் சேது கேட்டான்.

“உன்னோட வாழ்க்கையில, எங்களுக்குத் தெரியாமல் ஏதோ ஒரு பொண்ணு இருக்கிறா? சரிதானே?”, வசந்தி கேட்க, சேதுவின் முகம் சட்டென மாறியது. புதைந்திருந்த அவளது நினைவுகள், பூகம்பமாய் வெடித்து வெளியே வரத் தொடங்க, அவன் முகம் கலவரமடைந்தது.

அதனைக் கவனிக்காத வசந்தி மேலும் தொடர்ந்தாள். “முதல்ல உன் போனை அன்லாக் செஞ்சு கொடு. பேஸ்புக், இன்ஸ்டா எல்லாமே செக் செய்யணும். எங்களுக்குத் தெரியாமல் எப்படி உன் ஆளை ஒளிச்சு வச்சுருக்குறேன்னு கண்டுபிடிக்கிறேன்!”, வசந்தி துப்பறிவாளர் போல பேச, உணர்ச்சிகளை அடக்க முடியாமல், அடக்கிக் கொண்டு சேது பேசத் தொடங்கினான்.

“எக்ஸாம்க்கு படிக்க ஆரம்பிச்சதிலிருந்து சோசியல் மீடியா பக்கமே போகல. பேஸ்புக், இன்ஸ்டாவோட பாஸ்வேர்ட் கூட மறந்துடுச்சு. அதெல்லாம் விடு. என்னதான் சொல்ல வர்ற, வசந்தி? எனக்குப் புரியல!”, சேது குழப்பத்துடன் கூறினான்.

“ஏதோ ஒரு நம்பரிலிருந்து ஒரு பொண்ணு கால் செஞ்சாடா. நான் பேசியதும், சட்டுனு அழைப்பை கட் செஞ்சிட்டா! யாருடா அது?”, வசந்தி ஆர்வமாய்க் கேட்டாள்.

சேது தனது போனை அன்லாக் செய்து, வசந்தியிடம் நீட்டினான். “நீயே திரும்ப அந்த நம்பருக்குக் கால் செய்து யாருன்னு கேளு,” சேது கூற, வசந்தி அந்த எண்ணிற்குத் திருப்பி அழைத்தாள்.

“ஹலோ, இந்த நம்பர்லயிருந்து கால் வந்திருந்துச்சு. யாருன்னு கேட்டதும் கட் ஆகிடுச்சு. யார் கால் செய்தது? என்ன விஷயம்ன்னு தெரிஞ்சுக்கலாமா?”, வசந்தி நிதானமாய்க் கேட்டாள்.

மறுமுனையில், “இது கம்பெனி கால். எங்க கம்பெனி நடத்தின லக்கி டிரா கண்டஸ்ட்ல சேது வின்னராகத் தேர்வாகி இருக்கிறார். அது விஷயமாகத்தான் கால் செய்திருந்தோம். சேதுகிட்ட போனைத் தர்றீங்களா?”, அந்த பெண் மென்மையாகக் கூற, வசந்தி போனை மியூட் செய்து விட்டு, சேதுவிடம் திரும்பினாள்.

“ஏதோ லக்கி டிரா கண்டஸ்ட்ல வின் பண்ணியிருக்கியாம்! பேசுறியா?”, வசந்தி கேட்க, “லக்கி டிரான்னு சொல்லி, வரவெச்சு பணம் வாங்கி மோசடி செய்யுறதுதான் இப்போ புது ட்ரெண்ட். நான் இல்லன்னு சொல்லி, நீயே கட் செஞ்சிடு!”, சேது அவஸ்தையோடு கூற, வசந்தி அன்மியூட் செய்தாள்.

“சேதுங்குற பேர்ல இங்க யாரும் இல்ல. ராங் நம்பர்!”, என்று கூறி வசந்தி கட் செய்தாள்.

சேதுவிடம் திரும்பி, “ஒரு நிமிஷம் உன்னையப் போய்த் தப்பா நினைச்சுட்டேனே! சாரி டா!”, தயங்கியபடி வசந்தி கூறிய அதே நேரம், நிகழ்ச்சியின் ஆரம்பத்தை மேடையில் அறிவித்துக் கொண்டிருந்தாள் தொகுப்பாளினி.

நிகழ்ச்சியை சேது ரசிக்க முடியாதபடி, பல நாள் புதைந்து கிடந்த அவளது நினைவுகள், அவன் அனுமதியின்றி அவனை இம்சித்துக் கொண்டிருந்தன. இவ்வளவு வருடங்கள் கழித்து அவள் எதற்குத் தன்னை அழைக்க போகிறாள்? அவளாக நிச்சயம் இருக்காது!  இன்னும் முடிந்து போன அந்த உறவை எண்ணி, தனது மனம் ஏன் இப்படி ஏங்குகிறது என்பது புரியாமல், தன்னையே நொந்து கொண்டான் சேது. வெகு நேரம் கடந்தும் நிகழ்ச்சியில் அவன் மனம் இலயிக்கவே இல்லை.

கலைநிகழ்ச்சிகளில் ஒன்றாக கார்த்தியைக் கவிதை சொல்ல மேடைக்கு அழைத்தாள் தொகுப்பாளினி.

தான் எழுதிவந்த கவிதையை எடுத்துக்கொண்டு கார்த்தி மேடையேறினாள்.

”அனைவருக்கும் வணக்கம்! இந்த மகளிர் தினக் கவிதையை ஒரு ஆணின் பார்வையிலிருந்து எழுதியிருக்கேன்”, என்று கூறியபடி அதை வாசிக்கத் தொடங்கினாள் கார்த்தி.

 

பெண்ணே!

அன்பான அன்னையாய்,

தாலாட்டும் தங்கையாய்,

தூய்மையான தோழியாய்,

அழகான துணைவியாய்,

மிருதுவான மகளாய்,

மெருகேறிய மருமகளாய்,

சமூகத்தின் கூட்டுக்குள்,

நீ அடைந்தது போதும்!

 ~

 திட்டமிடா திசையில்,

வட்டமிடா வானில்,

கரையில்லா கடலில்,

முடிவில்லா முதலில்,

உனக்கான உன்னைச் செதுக்கிடு!

புதிதாக விதி படைத்திடு!

இனி,

உலகுக்காக நீ அல்ல,

உனக்காகவே இந்த உலகம்!

 ~

 உனக்கான உலகை நீ உருவாக்கிட,

தடை ஏதும் வந்தால்,

திக்கற்ற திசையில் நீ திணறி நின்றால்,

திகைக்க வேண்டாம், தவிக்க வேண்டாம்!

தோழர்கள் நாங்கள் இருக்கிறோம்,

துயரத்தில் தோள் கொடுக்க!

துணிந்து செல் தோழி,

விண்மீன்களுக்கு வெளிச்சம் தர!

கனவுகளுக்கு கதை எழுத!…”

~

அவள் முடித்ததும், அனைவரும் கரகோஷம் எழுப்பினார்கள். மகிழ்ச்சியோடு மேடையிலிருந்து கார்த்தி கீழே வர, அவளை நோக்கி கதிர் வந்து கொண்டிருந்தது அவளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

“உங்க கவிதை எனக்குச் சுத்தமாகப் பிடிக்கலைக் கார்த்தி! எவ்வளவு பழமையான சிந்தனை?” எவ்வளவு காலம்தான், ஒரு பெண் சாயுறதுக்கு ஆணோட தோள்கள் வேணும்! சாயாமல் அவள் நிமிர்ந்து கம்பீரமாய் நிக்கட்டுமே! என்ன தப்பு?”, கதிர் கடுப்புடன் கூற, அவனது கூரிய வார்த்தைகள் கார்த்தியைக் குத்திக் கிழித்தது. கண்களின் கவலையை மறைக்க முடியாமல், கனத்த மனத்தோடு வசந்தியின் அருகில் வந்தமர்ந்தாள்.

அடுத்து, பாடல் பாடுவதற்காக வசந்தியும் அதற்கு நடனமாட மிருணாளினியும் அவளது தோழிகளும் மேடையேற, அடுத்த நிகழ்ச்சித் தொடங்கியது.

“சிங்கப்பெண்ணே… சிங்கப்பெண்ணே…”, பாடலை இனிமையாக வசந்தி பாட, மிருணாளினியும் அவளது தோழிகளும் வியக்கும்படி நடனமாட, வீற்றிருந்த அனைவருக்கும் புல்லரித்தது. எழுந்து நின்று கைதட்டினார்கள். கார்த்தியின் கண்கள் கலங்கியேவிட்டது.

கலைநிகழ்ச்சிகள் முடிவடைந்து பரிசுகள் அறிவிக்கும் நேரம் வந்தது. அனைவரது நெஞ்சமும் படபடத்துக்கொண்டிருந்தது. தேர்வுகளின் மிகக் கடினமான தருணம், தயார் செய்யும்போதோ, தேர்வெழுதும்போதோ வருவது அல்ல. முடிவுகளுக்காக காத்திருப்பதுதான், மிகுந்த வலியை ஏற்படுத்தும்.

”நேற்று நடந்த தேர்வுல முதல் மார்க் வாங்கி, புத்தகத்தைப் பெற போவது…,“ தொகுப்பாளினி நிறுத்த, அனைவரது இதயத்துடிப்பும் இமாலய உயரத்தை எட்டியது. “மிருணாளினி…” மைக்கில் அவள் பெருமையுடன் கூற, தங்களது தோல்விகளின் வருத்தங்களை மறைத்து அனைவரும் கரகோஷம் எழுப்பினார்கள்.

மிருணாளினி மேடையை நோக்கி நடக்க, “வாங்க! நாம வெளியே போகலாம்!”, என்று சேது கூறினான். அவனைத் தொடர்ந்து வசந்தியும் கார்த்தியும் மேடையின் எதிரே நின்ற வாசலை நோக்கி நடந்தார்கள். முதல் தோல்வியின் வலி, மூவருக்கும் மூச்சை முட்டியபடி, நெஞ்சை அடைத்தது.

“கொஞ்சம் நில்லுங்க!”, என்று சிரித்துக்கொண்டு கதிர் அவர்களை வழிமறைக்க, அது கார்த்திக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அதேநேரம், தொகுப்பாளினி மேடையில் கார்த்தியின் பெயரை அழைக்க, மூவரும் குழம்பிப் போனார்கள்.

“கார்த்திகேயினி.. உங்களத்தான் பரிசு வாங்க கூப்பிடுறாங்க. போய் புத்தகத்தையும் பரிசுகளையும் வாங்கிட்டுப் போங்க. நேற்றைய தேர்வில் இரண்டு பேர் முதல் மார்க் எடுத்துருக்கீங்க!,” கதிர் கூற, ஆனந்தக் கண்ணீரோடு மேடையேறினாள் கார்த்தி. தங்களுக்கே புத்தகம் கிடைத்தது போல, பேரானந்தத்துடன் சேதுவும், வசந்தியும் கைதட்டி கார்த்தியை உற்சாகப்படுத்தினார்கள்.

அனைவரும் மகிழும்படி ஆனந்தமாய் நகர்ந்தது அன்றைய மகளிர் தினம். மகளிர் தினத்தின் சிறு கொண்டாட்டத்தைக்கூட மனது நினைக்காத வண்ணம், வகுப்புகள் அடுத்தடுத்து நடந்துகொண்டிருந்தது. இடையில் கிடைத்த அந்த சிறிய இடைவேளையில், கார்த்தி, வசந்தி, சேது மூவரும் வெளியே வந்தார்கள்.

“கலக்கிட்ட கார்த்தி! முதல் மாதிரித் தேர்வுலயே முதல் மார்க்… நாம இதைக் கொண்டாடியே தீரணும்”, சேது குஷியுடன் கூற, அவனை ஆமோதித்தபடி வசந்தியும் “சேது சொல்றது சரிதான். நாம இந்த வெற்றிய நிச்சயம் கொண்டாடனும். ஆனால் எப்படி கொண்டாடறது சேது?” ஆர்வமாய்க் கேட்க, சேது தொடர்ந்தான்.

“ஐயாகிட்ட நம்ம பட்ஜெட்டுக்கு ஏத்த ஒரு சூப்பர் ஐடியா இருக்குது! சொல்றேன் கேளுங்க. சாயங்காலம் வகுப்பு முடிஞ்சதும், மெட்ரொ எடுத்து சென்னை சென்ட்ரல் போறோம். அங்கிருந்து மெரினா பீச்சுக்குப் போய், சுண்டல் சாப்பிட்டுட்டே கடலை ரசிக்கிறோம். எப்படி என்னோட ஐடியா?”, சேது கேட்க, அவனை மறுத்தவாறு கார்த்தி உடனே கூறினாள், “என்னால முடியாது சேது. வகுப்பு முடியவே ஆறு மணிக்கு மேலாகிடும். அதுக்கப்புறம் பீச்சுக்குப் போறதுல்லாம் சரியா எனக்குப் படலை!”.

“சென்னைக்கு வந்து ஆறுமாசமாகியும் ஒரு பீச்சுக்குக்கூட போகலைன்னா எப்படி கார்த்தி? அடுத்தவாரம் எல்லா வகுப்புகளும் முடிஞ்சிடும். முழு நேரமும் படிச்சிட்டேதான் இருப்போம். இன்னைக்கு ஒருநாள் பீச்சுக்குப் போகலாமே?”, வசந்தி ஆர்வமாய்க் கேட்க, “அதுக்கில்லடி.. இன்னும் இரண்டு மாசத்துல எக்ஸாம் வருது. அது முடிச்சிட்டு நிம்மதியா போகலாமே!’, கார்த்தி மீண்டும் மறுத்தாள்.

சேது தொடர்ந்தான். “உன்னோட பிரச்சனை என்ன தெரியுமா கார்த்தி? உன்னோட ஆழ்மனசுல போய் யாரோ நீ ஒரு நல்லபொண்ணுன்னு சொல்லி சொல்லி உன்னை ஆழமாக நம்பவெச்சிருக்காங்க. சின்ன சின்ன சந்தோஷங்கள் கூட உனக்குக் குற்ற உணர்ச்சிய ஏற்படுத்துது. நான் ஒரு வழி சொல்றேன். தினமும் காலைல எழுந்ததும், நான் ஒரு தறுதலை, நான் ஒரு தறுதலைன்னு பத்து தடவை சொல்லு. அப்போதான் உன் நல்லபொண்ணு மனநோய் சரியாகும். இன்னிக்கு நாம போறோம், அவ்வளவுதான்!”, சேது கறாராகக் கூற, வேறு வழியில்லாமல் கார்த்தியும் சம்மதித்தாள்.

ஆர்ப்பாட்டமில்லாத ஆனந்தம் கூட ஆபத்தாகுமா?

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!