Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

பொழியும் மேகம்...

பொழியும் மேகம்!… அத்தியாயம் 14

பொழியும் மேகம்!…

அத்தியாயம் 14

      பிருந்தாவுக்கு விசயம் சொல்ல படவும் பதறி போனாள். தங்கச்சி வீட்டில் சண்டை வந்தது, அப்பா ஊருக்கு வந்தது என்று எதுவும் தெரியாது. ரெண்டு நாளாக போன் பண்ணவில்லை. அன்று பேச வேண்டும் என்று நினைத்து இருக்க, இப்படி ஒரு விசயம். பிருந்தா முதலில் தன் கணவனுக்கு அழைத்து விசயத்தை சொல்லி விட்டாள்.

   சாரதா குடும்பம் தான் உறுதுணையாக நின்றார்கள். நர்மதாவுக்கு சுயநினைவே இல்லை. பிள்ளைகள் அழுகை கூட அசைக்க வில்லை.



Advertisement

  அந்த நேர கோபம், மயங்கி விழுந்த மகளை பார்த்து பால மரத்தான் மருமகனை எகிறினாலும், அவருக்கும் சென்னை தெரியாத ஊர் தான். மயக்கம் போட்ட மகள், அம்மா என்று அழும் பேத்திகளை வைத்து கொண்டு தடுமாறி தான் போனார். சொந்தம் என்று சாரதா குடும்பம் தான் உடன் நின்றது.

    பின்னவே முகுந்தன், தாமோதரன், நிரஞ்சன், மற்றும் சுசீலா குடும்பம் வந்து விட்டார்கள். நிரஞ்சன் ஒரு நிலையில் இல்லை. மனைவியை நினைத்து பயமாக இருந்தது. தள்ளி விடும் நோக்கமும் கிடையாது. அவனை மீறி அனிச்சையாக வந்த செயல். ஒரு பெரிய குழப்பத்தில் நின்று விட்டான்.

     அவன் மாறவே இல்லை. அடிப்படையில் அவன் அப்படி தான். அவனை அனுசரித்து , கணவன் மன நிலைக்கு தக்க விட்டு கொடுத்து, இதுவரை குடும்பத்தை இழுத்து சென்றது நர்மதா.

Advertisement

    அதனால் தான் நிரஞ்சன், தான் சரியா அல்லது தவறா என்ற மனநிலைக்கு போகவே இல்லை. பொதுவாகவே மனிதர்கள் ஒரு முடிவெடுத்து செயல் படும் போது அது மற்றவர்கள் மத்தியில் பாராட்டை பெற்றால் தன் பாதை சரி என்ற நம்பிக்கை இருக்கும். அதுவே தவறாகி, விமர்சனத்துக்கு உட்படும் போது தான் யோசிக்கும் மன நிலை வரும். தான் என்ன தப்பு செய்தோம், எந்த இடத்தில் தவறாகி நின்றோம் என்ற சிந்தனை எழும்.

Advertisement

        அப்படி யோசிக்கும் நிலையை கணவனுக்கு நர்மதா கொடுக்க வில்லை. குடும்பத்தில் வீணாக சண்டை, விவாதம், மனஸ்தாபத்தை தடுத்து குடும்ப வாழ்க்கையை சீராக கொண்டு செல்ல சில விட்டு கொடுப்பு, அனுசரிப்பு, சகிப்பு தன்மை அவசியம். அது இருவர் பக்கமும் இருக்கும் வரை குடும்பம் தெளிந்த நீரோடை தான். ஆனால் நார்மதாவே அது மொத்தமும் குத்தகைக்கு எடுத்து கொள்ள… நிரஞ்சன் திரும்பி நின்று யோசிக்க வேண்டிய அவசியமே இல்லாமல் போனது. நர்மதாவின் மறுபக்கத்தை புரிய வைக்க அவள் முயற்சி செய்ய வில்லையா அல்லது முயற்சி எடுத்தும் கணவன் உடன் பட வில்லையா ஏதோ ஒன்று, ஒரு பக்கம் மட்டுமே கட்டி இழுத்து கொண்டு சென்ற குடும்ப வாழ்க்கை அறுந்து விட்டது. இனி இரு பக்கமும் கட்டி இழுத்தால் குடும்ப வண்டி நகரும். அதற்கு இருவருமே சில கட்டங்களை கடக்க தான் வேண்டும்.

    தாமோதரன் மகன், மனைவி இருவரையும் வைத்து வாங்கி கொண்டே வந்தார். சுசீலா வாயே திறக்கவில்லை. அவர் தானே சம்பந்திக்கு அழைத்து சொல்லியது. பெரிய சண்டை வராமல் சமாதானமாக போனால் சரி என்ற மனநிலையில் அமர்ந்து விட்டார்.

  அங்கு பாலமரத்தான் வெளியே பிள்ளைகளை வைத்து உட்கார்ந்து இருந்தார். நர்மதாக்கு உள்ளே சிகிச்சை நடக்க, பிள்ளைகள் பயப்படும் என்று வெளியே வந்து விட்டார்.

Advertisement

    தாத்தா வாங்கி கொடுத்த இட்லியை சாமத்தாக சாப்பிட்டு கொண்டிருந்தது பெரிய குட்டி. ஆறு வயது பெண் என்பதால் கொஞ்சம் அடம் இல்லாமல் தாத்தா சொன்னதை கேட்டது. இந்த சின்ன குட்டி தான் எழும் போது அம்மா அல்லது அப்பா யாராவது உடன் வேண்டும். ஓயாத அழுகையில் இருக்க, தூக்கி வைத்து நடந்து கொண்டிருந்தார் தாத்தா.

   நிரஞ்சன் குடும்பம் உள்ள வந்தது. தன் அப்பாவை கண்டதும் ரெண்டு கையையும் விரித்து நிரஞ்சனை நோக்கி தூக்கு என்று அழுகையை கூட்டியது சின்ன குட்டி. ஒரு வித பயத்தில் வந்தவன், பிள்ளை அழுகவும் வேகமாக சென்று வாங்கி கொண்டான்.

   பால மரத்தான் தடுக்கவெல்லாம் இல்லை. எப்போதாவது வரும் தாத்தாவை விட, தினமும் தூக்கி வைக்கும் தந்தை செல்லம் அவள். எல்லோருக்கும் சங்கடமான அமைதி. நர்மதா இன்னும் எழ வில்லை. அவளுக்கு நன்றாகமல் பேச்சு வார்த்தை தொடங்க முடியாதே…

  சாரதா மகன் அங்கு இருக்க,

    “நர்மதா எப்படி இருக்கு?…” என்று தாமோதரன் கேட்டார்.

   “பெருசா ஒன்னும் இல்லை மாமா. பிரசர் மயக்கம். சாப்பிட கூட இல்லை போல…” என்று சொன்னான்.

   வருத்தமாக இருந்த போதும் ஒரு ஆறுதல். வேற எதுவும் பெரியதாக இல்லை. பால மரத்தான் நகர்ந்து விட்டார். மற்றவர்கள் நர்மதாவை காண உள்ளே செல்ல, நிரஞ்சன் மட்டும் தன் மக்களோடு இணைந்து கொண்டான்.

        நர்மதா இன்னும் கண் விழிக்க வில்லை. அவளுக்காக காத்திருக்க தொடங்கினார்கள். பால மரத்தான் மெல்ல வெளியே பேத்திகளை தேடி வந்தார். ஒரு பார்வை பிள்ளைகள் மேல் இருக்க வேண்டும்.

   வந்து பார்க்க, நிரஞ்சன் தோலில் சாய்ந்து உறங்கி இருந்தாள் சின்ன குட்டி. சஸ்டிக்கு ஊட்டி விட்டு கொண்டு இருந்தான் நிரஞ்சன். ஒரு பிள்ளை தோலிலும், ஒரு பிள்ளை மடியிலும் இருந்தது. மாமனாருக்கு ஒரு பெரு மூச்சு வந்தது,

        பொண்டாட்டி, பிள்ளை என்று பாசகாரன் தான் மருமகன். அதில் எல்லாம் குறை சொல்ல முடியாது. குடிக்கிறான், அடிக்கிறான், பெண் பித்தன் என்ற எந்த வரையறையிலும் நிரஞ்சன் கிடையாது. பொதுவாக பார்க்கும் போது நல்லவன் தான். அடிப்படையில் பார்த்தால் கொஞ்சம் கெட்டவன்.

      தந்தை மேல் சாய்ந்து குட்டி வாய் பிளந்து உறங்கும் பேத்தியை பார்த்து கொண்டு இருந்தார் பால மராத்தான். நர்மதாவுக்கு ரெண்டாவது பிரசவம் சென்னையில் தான் பார்த்தார்கள். எந்த குழந்தையாய் இருந்தாலும் சரி என்ற மனநிலை தான். ஆனாலும் மூத்தது பெண் இருக்க, ரெண்டாவது ஆண் குழந்தை, பேரன் பிறக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.

      சான்வி பிறந்தது நடு ராத்திரி. பெண் குழந்தை என்றதும் எல்லோர் முகத்திலும் ஒரு லேசான ஏமாற்றம். பிடிக்கவில்லை என்றெல்லாம் இல்லை. ஒரு பெண் குழந்தை இருக்க, மற்றது ஆணாக இருக்கலாம் என்ற ஆசை தான். அதை சாதாரனமாக சொன்னதற்கே நிரஞ்சன் அவ்வளவு கோபம்.

    இதில் நர்மதாவுக்கு கொஞ்சம் சிக்கல் வந்து தான் குழந்தை பிறந்தது. அதனால் எல்லோர் கவனமும் அவள் மீது இருக்க, குழந்தையை யாரும் போய் பார்க்க வில்லை. அதற்கும் அவ்வளவு கோபம்.

  என் பிள்ளையை யாரும் பார்க்க வில்லை என்று யாரிடமும் தராமல் நான்கு மணி நேரம் அவனே தூக்கி வைத்து சுற்றி கொண்டு இருந்தான். நர்மதா மயக்கம் தெளிந்து பிள்ளைக்கு பால் கொடுக்க தேடும் போது தான் குழந்தையவே மற்றவர்களிடம் கட்டினான்.

       அதில் எல்லாம் மாமனாருக்கு அவ்வளவு பெருமை. என் மருமகன் மாதிரி யாரும் கிடையாது என்று மார்தட்டிக் கொண்டவரை தான், மருத்துவமனை வாசலில் கட்டு போட்டு உட்கார வைத்து விட்டான் நிரஞ்சன்.

        தாமோதரன், முகுந்தன் இருவரும் பால மரத்தானை தேடி வந்தார்கள். அவர் தன் மருமகனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தவர். பின் மகள் அறைக்கு வெளிய கண் மூடி அமர்ந்து விட்டார். அவர் முகத்தில் அவ்வளவு வேதனை…

    அருகில் வந்த தாமோதரன், “நல்லவன் தான் சம்மந்தி. ஆனாலும் சில நேரம் புத்தி கெட்டு போகுது. நல்லா படிப்பான். எங்களுக்கு எந்த வேலையும் அவன் வச்சதே இல்லை. ஆரம்பத்துல இருந்தே அவன் சொல்ல கேட்டு நாங்க பழகிட்டோம். எல்லாத்திலும் முதல நிப்பான். படிப்பு, வேலைன்னு அவன் முடிவு சரியா தான் இருந்துச்சு. அவன் போக்குக்கே விட்டோம். தோலுக்கு மேல வளர்ந்ததும் கண்டிக்க முடியல…” தயங்கி தான் பேசினார் தாமோதரன்.

        அப்போது தான் லேசாக மயக்கம் தெளிந்த நர்மதா, கண் அசைத்து முழித்து பார்த்தாள். கையில் ட்ரீப்ஸ் ஏறி கொண்டு இருந்தது. சோர்வாக இருக்க மீண்டும் கண் மூடி கொண்டாள். நடந்தது வேறு நினைவு வர, வெளியே மாமனார் பேச்சு கேட்டது.

     “கல்யாணம் ஆனதும் அவன் பொறுப்பு எல்லாம் மருமக தான் பார்த்துச்சு. பெருசா சண்டை எதுவும் வந்ததில்லை சம்மந்தி. உண்மையை சொல்லணும்ன்னா நர்மதா தான் நிறைய விட்டு கொடுத்து போச்சு. புருசன், பொண்டாட்டி அவங்களுகுள்ள ஒற்றுமையா இருந்தா போதும்னு நாங்க பெருசா கண்டுக்கல. ஆனா, இப்போ தப்புன்னு தோணுது. அவன் ரெண்டு பிள்ளைக்கு தகப்பன். இந்த வயசுல எப்படி கண்டிக்க…” சங்கடபட்டு தான் பேசினார் தாமோதரன்.

   வேற வழியும் இல்லை. தப்பு செய்தது தன் மகன் எனும் போது நயந்து தான் பேச வேண்டும்.

         நிமிர்ந்த பால மரத்தான் “எம்புட்டு வளர்ந்தாலும் பெத்தவங்களுக்கு பிள்ளைக, பிள்ளைக தான் சம்மந்தி. எந்த பெத்தவங்களும் நமக்கு கீழ நம்ம பிள்ளைக நிக்கணுன்னு எதிர் பார்க்க மாட்டாங்க. நம்ம வாழ்ந்த வாழ்க்கையை விட நம்ம பிள்ளைக பல அடி முன்ன போகணும்னு தான் நினைப்போம். அப்படி முன்னாடி போறதுக்கு தான் நாம ஓடுற ஓட்டமும். எம் பெரிய மக பிருந்தா பிறக்கும் போதும் என் சம்பளம் வெறும் ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் தான். அதுல தான் மூணு பிள்ளைகளை படிக்க வச்சு, குடும்பத்தையும் ஓட்டினேன்…”

       “ஆனா , இப்போ பிருந்தா வாங்குற சம்பளம் எவ்வளவு தெரியுமா! எழுவத்தி ஐந்தாயிரம். நான் ரிடையர் ஆகும் போது கூட அம்புட்டு சம்பளம் வாங்குணது இல்லை. அவ்வளவு பெருமை எனக்கு… ஆனாலும், இன்னைக்கும் எம் பிள்ளைகளை கண்டிக்கிற உரிமை எனக்கு இருக்கு. தப்பு பண்ணினா அப்பான்ற பயம் அவங்களுக்கும் இருக்கு. ஏதாவது ஒரு பெரிய முடிவு எடுக்கும் போது என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம விட்டது கிடையாது. பிருந்தா ஆபீஸ்குள்ள நுழைந்தா இருக்குற முப்பது பேரும் எழுந்து நின்னு சல்யூட் வைப்பாங்க. அப்படி ஒரு பதவில இருந்தும், பிருந்தான்னு நான் அழுத்தி கோபமா ஒரு வார்த்தை சொன்னா போதும் கண்ணு ரெண்டும் கலங்கி போயிடும். எம்புட்டு உசரதுக்கு போனாலும் நம்ம பிள்ளைக நமக்கு இல்லன்னு போயிடுமா?… அவங்களுக்கு புரியாது சம்மந்தி. நம்ம வயசு வரும் போது தான் புரியும். நாம தான் சரி, தப்பை எடுத்து சொல்லணும். அந்த உரிமை எந்த வயசுலயும் பெத்தவங்க நமக்கு தான் இருக்கு…”

    “ சம்மந்தி…” என்று பாலமரத்தான் கைகளை பிடித்து கொண்டார் தாமோதரன்.

         அவரிடம் இருந்து இப்படி ஒரு தன்மையான பேச்சை எதிர்பார்க்கவே இல்லை.

    “மருமகன் மேலவும் எனக்கு என்ன கோபம். சம்மந்தி, எல்லார் வீட்டிலும் சண்டை வரும். ஒரு நேரம் கோபத்துல வார்த்தை வெடிக்கும். எல்லா சண்டைக்கும் நாமளும் போய் பஞ்சாயத்து பண்ணனும்னு அவசியமில்லை. ஆனா, கை வைக்கிறது தப்பு இல்லையா சம்மந்தி. நேத்து நீங்க போன் பண்ணதும் அவசரமா ஓடி வந்தேன். பஸ்ல இடம் கூட கிடைக்கல. அடிச்சு புடிச்சு வந்து பார்த்தா…” என்றவறுக்கு வார்த்தை வர வில்லை.

    “ இதுக்கா நான் கல்யாணம் பண்ணி குடுத்தேன். எனக்கு கல்யாணம் ஆகி முப்பத்தி ஆறு வருசம் ஆச்சு. எங்களுக்குள்ள எவ்வளவோ சண்டை வந்த போதும் என் மனைவி மேல என் கை பட்டது இல்ல… தப்பு எம் மக மேலயே இருக்கட்டும். எனக்கு போன் பண்ணி இருக்கலாமில்ல. அந்த உரிமையை கூட என் மாப்பிள்ளைக்கு நான் குடுக்கலையா?… என் மகளை கல்யாணம் பண்ணி இருக்கீங்க. என் வீட்டுக்கு மட்டும் தான் நீங்க வரல. ஆனா என் குடும்பத்துல நீங்களும் ஒரு ஆள்… உங்களை சார்ந்த எல்லாம் எம் மகளை பாதிச்சா, அது என்னையும் பாதிக்கும். கட்டி குடுத்த உடனே என் கடமை முடிஞ்சதுனு ஒரு தகப்பனால ஒதுங்கி இருக்க முடியுமா! ரெண்டு நாள் தொடர்ந்து என் பிள்ளைக போன் பண்ணலன்னா எனக்கு சாப்பாடே இறங்காது…” பால மரத்தான் பேச பேச, முடியவில்லை தாமோதரனுக்கு…

        “சம்மந்தி விடுங்க. இவ்வளவு நீங்க எடுத்து சொல்லனுமா? எனக்கு பொம்பளை பிள்ளைக இல்லா தான். ஆனா, பெத்த தகப்பனா உங்க வலியை என்னால உணர முடியுது. அவன் சின்ன பையன் சம்மந்தி வாழ்க்கை புரியாம பேசுறான்…” என்று எடுத்து சொல்ல, நர்மதா அனைத்தையும் கேட்டு கொண்டு தான் இருந்தாள்.

   நெஞ்சு துடித்தது. தன் அப்பா குரல் இவ்வளவு இறங்கி ஒலித்ததை தாங்க முடியவில்லை.

      பாலமரத்தான் கடைசியாக ஒன்றை சொல்லியே விட்டார்… “எங்க அம்மா இறந்ததுக்கு கூட வருத்தம் இருந்துச்சு. ஆனா கண்ணீர் வரல. வயசாகி படுக்கையில இருந்து தான் போனாங்க… நல்ல படியா, வேதனை இல்லாம போகட்டும்னு நினைச்சேன். ஏன்னா, அப்பவே நான் தாத்தாவாகிட்டேன். அதனால் எங்க அம்மாவுக்கு நல்லா செய்து அனுப்பி வச்சேன். ஆனா இன்னைக்கு எம் பிள்ளை அடிவாங்கி பார்த்ததும், மயங்கி விழுந்ததும் என் நெஞ்சு துடிச்சது. அது தான் பெத்த பாசம் போல… நான் இன்னைக்கு சொல்றேன் சம்மந்தி. எம் மக சிரிச்ச முகமாக நல்லா இருக்கும்ன்னா, எம் பிள்ளையை விட்டு மருமகன் சொன்ன மாதிரி நாங்க ஒதுங்கி இருக்கோம். பொண்ண பெத்தவனுக்கு பிள்ளை நல்லா இருந்தா போதாதா…”

    “ சம்மந்தி என்ன பேசுறீங்க. நர்மதா உங்க மக, அது உங்க மக வீடு. அடுத்த எந்த விசேசத்துக்கும் மூத்த தலைமுறையாக நாம நிக்கனும். அவன் அவசரகாரன். கோபத்துல வாய்க்கு வந்ததை பேசி, அப்புறம் யோசிக்கிற ஆளு. அவனை விட்டு தள்ளுங்க…” என்று தாமோதரன் எடுத்து சொல்ல,

       “ஒரு வகையில மருமகன் சொல்றது சரி தான். நாம இருக்க போறது அஞ்சு வருசமோ பத்து வருசமோ… காலத்துக்கும் துணை கணவன், மனைவி. அவங்களுக்குள்ள ஒத்துமையா இருக்கட்டும். என் பேத்திய நான் தூக்கி வச்சு இருந்தாலும், அவங்க அப்பா மேல இருக்குற ஓட்டுதல் எம் மேல வராது. கொஞ்ச நாள் நான் கூட்டி போறேன். அப்புறம் பேசி மருமகன் வந்து கூட்டி போகட்டும்…” என்று பால மரத்தான் சொல்ல,

   அவர் கைகளை பிடித்து கொண்ட தாமோதரன் நெகிழ்ந்து போனார். தன் மகன் தப்பு செய்து இருக்க, அவர் மகளை கல்யாணம் செய்த ஒரு காரணத்திற்காக நிரஞ்சனை விட்டு கொடுக்காத அவர் குணம். உண்மையில் சிலிர்க்க வைத்தது. தாமோதரன் வாய் விட்டே சொல்லி விட்டார்.

   “சம்மந்தி நீங்க ஒரு உன்னதமான மனிதர்…”

 முகுந்தன், தன் தம்பி அருகில் வந்து நின்றான். சான்வி இன்னும் தூங்கி கொண்டு தான் இருந்தாள். சஸ்டி தந்தை மடியில் மடியில் தான் அமர்ந்து இருந்தாள். நிரஞ்சன் உள்ளே சென்று மனைவியை பார்க்க வில்லை. அந்த தைரியமும் அவனுக்கு இல்லை.

         “அவ எப்படி இருக்கா முகுந்தா…” குரலில் ஒன்றும் தெரிய வில்லை.

         “நிரஞ்சா உனக்கு அறிவுரை சொல்ற அளவுக்கு எனக்கு அனுபவம் இல்லை. ஆனா ஒன்னு சொல்றேன். நர்மதாவ சாதரணமாக நினைச்சு, நம்ம பொண்டாட்டி தான நம்ம தாண்டி எங்க போயிருவான்னு நினைச்சு நீ விட்ட… இழக்க போறது நீ நர்மதாவ இல்லை உன் குடும்பத்தை. நிரஞ்சனுகுன்னு இருக்குற குடும்பத்தை. நம்ம எல்லாரும் ஒரே குடும்பம் தான். அதுல மாற்றம் இல்லை…”

  “ஆனா, உன்னை நம்பி பல வருசம் வாழ்ந்த வாழ்க்கையை, குடும்பத்தை விட்டு ஒரு பொண்ணு வந்து இருக்கா… உங்களை நம்பி ரெண்டு சின்ன குழந்தைகள் இருக்கு… நீ தனி மனுசன் கிடையாது. ஒருத்தன் தனியாள இருந்தா தான் அவனுடைய சிந்தனை, செயல், விருப்பம் எல்லாம் சுதந்திரமானதும். நமக்கு குடும்பம் இருக்கு. அந்த குடும்பதுகுள்ள மனைவிக்குன்னு ஒரு கட்டுப்பாடு வைக்கிறோம். அப்ப கணவனுக்கும் சில கட்டுப்பாடு இருக்கு. அந்த கட்டுப்பாட்டை தளர்த்த நினைச்சா குடும்பம் உடையும். அப்புறம் இப்ப நிக்கிற மாதிரி தனியா தான் நிக்கணும். தனியா நிக்கிறதுக்கு எதுக்கு வேலை, சம்பாத்தியம், சொத்து, கார், வீடு எல்லாம்… உன் பிள்ளைக முகத்தை பாரு. ஒரு மணி நேரம், வெறும் ஒரு மணி நேரம் உன்னால உம் பிள்ளைகளோடு தனியா நிக்க முடிஞ்சதா… அப்புறம் எதுக்கு இவ்வளவும், யோசி நிரஞ்சா …” என்று தோலை தட்டி கொடுத்து நகர்ந்து விட்டான்.

    கலங்கும் போல இருந்த கண்களை இமை தட்டி தடுத்து கொண்டான்.

   டிரிப்ஸ் முடிந்து நர்மதா நிமிர்ந்து அமர்ந்தாள். யாருக்கும் என்ன பேசுவது என்று தெரிய வில்லை. எல்லோரும் அவள் முகத்தை தான் பார்த்து நின்றார்கள். சுசீலாவும் பக்கத்தில் தான் நின்று இருந்தார். பெண் துணை வேண்டும் என்று…

  பிருந்தா இன்னும் வர வில்லை. அவள் வேலை இடம் அவுட்டர் என்பதால் கொஞ்சம் தாமதமாகும்.

    நிரஞ்சன் வந்து வாசலில் நின்றான். கையில் சின்ன குட்டி இருந்தது. மகனை கண்டு சுசீலா தான். நர்மதா என்று அழைக்க, தலை குனிந்து அமர்ந்து இருந்தவள் நிமிர்ந்து பார்த்தாள்.

    முகத்தின் வீக்கம் கொஞ்சமும் குறைய வில்லை. பந்து மாதிரி வீங்கி இருந்தது. தாமோதரன், முகுந்தன், சுசீலா என்று ஒவ்வொருவராக பார்த்து வந்தவள் கண் பார்வை அங்கு பரிதாபமாக அமர்ந்து இருந்த தந்தையியில் வந்து நிலைத்தது. அவரின் கையில் இருந்த காயத்தை பார்த்ததும் மூக்கு விடைக்க, நெஞ்சு துடித்தது.

  சுசீலா மருமகள் அருகே வந்து தோலை தொட, பட்டென்று தன் கழுத்தில் கிடந்த தாலி கொடியை கழற்றி கொடுத்து விட்டாள்.

   யாரும் மூச்சே விட வில்லை. அந்த நொடி என்ன நடந்தது என்றே புரியாமல் ஒருவரை பார்த்து கொண்டார்கள்.

  “நர்மதா…” திகைத்து போய் தந்தை அழைக்க,

   “என்னால முடியாது… எங்க அப்பா, அவர் எங்க அப்பா. அவர் மேல கைய வச்சு உங்க பையனோட செயலை என்னால என்னைக்கும் மறந்து, எதுவும் நடக்காது மாதிரி வாழ முடியாது…” வாய் குளறியது, கை மீண்டும் நடுங்கியது.

  பார்த்தவர்களுக்கு புரிந்தது. நர்மதா நிதானத்தில் இல்லை. அவளுக்கு தெளிவும் இல்லை. அப்பா என்ற வார்த்தையில் இருந்து வெளி வரவே இல்லை.

    “ நர்மதா… என்ன காரியம் பண்ணி இருக்க…” இதுவரை மருமகளுக்கு என்னவோ என்ற பயத்தில் இருந்த சுசீலாவுக்கு கோபம் வந்தது.

   “சுசீலா, மருமக நிதானத்துல இல்லை விடு…” என்று தாமோதரன் சொன்னார்.

   அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது. முகுந்தன் முன்னே வந்து,

    “நர்மதா …” என்று அழைத்து பார்த்தான்.

      “எங்க அப்பா அவர். மருமகன் கிட்ட அடி வாங்குற வயசா அவருக்கு… எவ்வளவு பெரிய வலி. என்னால கடக்க முடியல மாமா. நினைக்கும் போதே என் இரத்தம் கொதிக்குது. எவ்வளவு மரியாதையான மனுசன். மாப்பிள்ளைன்றத தாண்டி ஒரு வார்த்தை பேசாத மனுசனை கைல கட்டு போட்டு உட்கார வச்சுட்டார் உங்க தம்பி. அதை சாதரணமா என்னால கடக்க முடியுமா… எதுவும் நடக்காதா மாதிரி உங்க தம்பி கூட சிரிச்சு பேசி வாழ முடியுமா?… என்னால முடியல…” கண்ணீர் பொங்கியது.

    “நிரஞ்சா சாரி கேளுடா..” என்று முகுந்தன் கண் காட்ட,

  “வேண்டாம் மாமா. அவங்க மன்னிப்பு எனக்குள்ள எந்த மாற்றத்தையும் தராது. இனி அவங்க உணர்ந்தாலும் என் வலி குறையாது. என்னை அடிக்கட்டும், அது பரவாயில்ல. எம் புருசன், சேர்ந்து வாழ்ந்து நல்லது எல்லாம் பார்த்து இருக்கேன். எங்க அப்பா என்ன பண்ணினார். இவரை நம்பி தன் பொண்ணை கொடுத்தார். அப்படி என்ன கோபம். உங்க அப்பா வயசு தான அவருக்கு… உங்க அப்பா மேல உங்களுக்கு இருக்குற பாசம், எங்களுக்கு இருக்காதா… அவர் வாழ்க்கையையே எங்களுக்காக தான் வாழ்ந்தார். அவருக்கு நான் எவ்வளவு பெரிய அவமானத்தை தேடி குடுத்துட்டேன்…”

   “நாங்க மூணு பேரு. மூணு பேருக்கும் சம்மந்தம் பண்ணி, பேரன், பேத்தி பார்த்திட்டார். மத்த சம்மந்த வீட்டுகாரங்க முன்னாடி எவ்வளவு அசிங்கம். இன்னொரு மருமகன், மருமகள் இருக்காங்க. எங்க அப்பா மரியாதையே போச்சு. எங்க அப்பா மரியாதை எனக்கு முக்கியம் இல்லையா. யாருக்கும் எங்க அப்பா இளக்காரமா இருக்க கூடாது. எனக்கு மூணு அத்தைங்க இருக்காங்க. அவங்க வீட்டுல எங்க அப்பாக்கு எவ்வளவு மரியாதை தெரியுமா?… இன்னமும் எங்க அப்பாவ முன்ன வச்சு தான் எல்லாம்… சாதாரண வேலையா இருந்தாலும் மரியாதையான வாழ்க்கை எங்களது… எங்க அப்பா பேருக்கே ஒரு மரியாதை இருக்கும். ஆனா, ஒரு பொண்ணை பெத்து, அதை கட்டி கொடுத்து இவ்வளவு அவமான படனுமா?…” நிரஞ்சன் இரும்பு மாதிரி நின்று மனைவியை பார்த்து கொண்டு இருந்தான்.

      “நான் என்ன சரியில்லாத பொண்ணா… என் வளர்ப்பு சரியில்லையா? அனுசரிச்சு குடும்பம் நடத்தலையா… என் ஒழுக்கம் சரியில்லையா?…”

   “நர்மதா…” என்ற ஒரு அதட்டல்.

      “கேட்பேன். என்னை அடிச்சாங்க தான. மூச்சு விட்டேனா, வாயடக்கி போகல. நான் அவர் பொண்டாட்டி. எங்க அப்பா மேல கை வைக்க நீங்க யாரு? உங்களுக்கு என்ன தகுதி இருக்கு. அவர் பொண்ணை கட்டினதால தான் கை வச்சீங்க. அப்படி ஒரு வாழ்க்கையே எனக்கு வேணாம்…” அவேசம் நிறைந்து நின்றது அவள் குரலில்…

  நிரஞ்சன் மனைவி அருகில் வந்தான். என்னவோ என்று எல்லோரும் பார்க்க, கையில் இருந்த பிள்ளையை அவளிடம் கொடுத்தவன், வெளியேறி விட்டான். அப்போது தான் வந்திருந்த பிருந்தா, தங்கையை அதிர்ந்து போய் பார்த்தாள்.

      தன் மனைவி தான். இத்தனை வருடம் சேர்ந்து வாழ்ந்த மனைவியே ஒரு நிமிடம் அந்நியமாக, யாரோ போல தெரிந்தாள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!