Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

மகன்றில் ஒத்தாள் – 3.2

முன் இருந்த வீட்டில் வாசலுக்கு வந்தாலே யார் என்ன என்று நோட்டமிடும் சிலபல கண்களுக்கு பயந்தே தேவையில்லாமல் வெளியே வரமாட்டாள். இங்கோ அந்த பயம் பின்சென்றிருக்க மனம் மங்கும் போதெல்லாம் வாசலே வடிகாலாய் இருந்தது. ஒரு அமைதியை தந்தது. இந்த வாசலை விட்டால் வெயிலில் காய்ந்து கிடக்கும் மொட்டை மாடிக்குத்தான் செல்ல வேண்டும். தனிமைக்கு இதமாய் பால்கனி எல்லாம் கிடையாது. ஆனால் இங்கும் ஒரு சிக்கல் முளைத்திருப்பது அவனைப் பார்த்ததும் புரிந்தது.

முதல் சந்திப்பில் மன்னிப்பு வேண்டிய போது பேசாதிருந்தவனோ தற்போது இவள் முகம் எங்கு தென்பட்டாலும் முகம் மலர்ந்து சிரித்து வைத்தான். தன் எதிரே முகம் மலர்பவனை கண்டு இவளுக்கும் இதழ் வளைப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை. இருவருக்கும் இடையில் பேச்சொன்றும் இல்லையென்றாலும் சின்ன முறுவல் எப்போதும் பிரதானமாகிவிட, தற்போதும் அவளை கடந்து சென்றவன் இவள் தலை தென்படவும் நடையை நிறுத்தி இவள் முகம் கண்டு புன்முறுவல் பூத்தான்.

யாழினியோ இருந்த கடுப்பில் இவனை கண்டும் காணாதது போல் அலைபேசியில் கவனம் பதிக்க, அவனின் முகம் சட்டென மாறியது. நொடியும் அங்கு நிற்காது விருட்டென அங்கிருந்து நடையை கட்டினான் மணிகண்டன்.

‘போடா டேய்… நீ சிரிச்சா நானும் சிரிக்கணும்னு சட்டமா என்ன? மூஞ்சை திருப்பிட்டு போறான் பாரு.’ என்று சம்பந்தமின்றி அவனை வசவியது அவள் மனம்.



Advertisement

அதன்பின் அவள் புறம் பார்வை தவறி விழுந்தாலும், தலைகுனிந்து செல்வதையே வழக்கமாக்கி இருந்தான் மணி. அவளும் அலட்டிக் கொள்ளாமல் இருக்க, அப்படியே செல்வதாய் இல்லை அந்த நாள்.

வழக்கத்திற்கு மாறாக சச்சரவுக்கு விடுப்பு கொடுத்து குதூகளிப்பான ஓசைகள் பக்கத்து வீட்டிலிருந்து வர, யோசனையுடன் அலுவலகம் கிளம்பி வெளியே வந்தாள் யாழினி. பார்வை தன்னால் மணி வீட்டிற்கு செல்ல அவன் வீடு முன் நிற்கும் காரும் வீட்டினுள் இருந்து வேகமாய் வெளியேறும் மணியும்தான் தென்பட்டார்கள். மணி அவன் வீட்டு இரும்பு கேட்டை திறந்து மூடிய வேகத்தில் துரு பிடித்திருந்த அந்த கதவின் சில பகுதிகள் அதிர்வுடன் கீழே விழ, பாவையின் விழி கூர்மையாய் அவன் மீது பதிந்து அதிர்ந்து மீண்டது.

எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடுவேன் என்று போக்குக்காட்டும் நீர் உருண்டைகள் பல விழி ஓரத்தில் சுருண்டிருக்க, அதை ஒற்றைவிரல் கொண்டு சுண்டிவிட்டு நடந்தான் மணி. நடையில் ஒரு வேகம் தென்பட்டாலும் தோள்பட்டை தொங்கி தொய்வு தெரிந்தது அவனது உடல்வாகில். அதுவரை காரணமின்றி அவனை நிராகரித்த மனது லேசாய் சுணக்கமுற, அவனிடம் பேசலாமா வேண்டாமா என்று பட்டிமன்றம் நடத்தி முடிப்பதற்குள் அவள் வீட்டை கடந்திருந்தான் மணிகண்டன்.

Advertisement

“வாசல்ல நின்னு என்ன யோசிச்சிட்டு இருக்க யாழிமா?” என்ற மைனாவின் கேள்விக்கு இவள் மணி பற்றி கூற, 

Advertisement

“பிரச்சனை இல்லாத வீடு எது இருக்கு யாழிமா? அவங்க வீட்ல என்ன பிரச்சனையோ நம்ம என்ன செய்ய முடியும்? (Tramadol) நீ இதை பத்தி எல்லாம் தேவையில்லாம மனசுல ஏத்திக்காத…” என்பதாய் இருந்தது அன்னையின் அறிவுரை.

“ஏதோ பெரிய பிரச்சனையாதான் இருக்கும். பாவம்மா அழுதுட்டே போறான். இதுமாதிரி பசங்க அழுது நான் பாத்ததே இல்லை அதான் லைட்டா ஷாக் ஆகிட்டேன்.”

“நேரமாகுது கிளம்பு.” யாழினி அந்த நிகழ்வை விட்டு வெளியே வராமல் இருப்பதை உணர்ந்த மைனா மகளை அலுவலகத்திற்கு செல்ல உசுப்ப, அவளும் அரைமனதாய் அங்கிருந்து வண்டியை கிளப்பிக்கொண்டு மிதமான வேகத்தில் சென்றாள். 

Advertisement

வீட்டை தாண்டிய சில மைல்களிலே சாலை ஓரத்தில் நடந்து போகும் மணி கருத்தில் பதிய, ஏற்கனவே மனம் மணியிடமிருந்தது வெளிப்பட்ட கண்ணீர் துளிகளில் மீளாது சுழன்று அல்லாட, வண்டியை விரட்டி அவன் முன் சென்று நிறுத்தினாள்.

வழி மறித்து குறுக்கே வண்டி வந்து நிற்கவும் மணி நிமிர்ந்து பார்க்க, “தேங்க்ஸ்” என்றபடி பளிச்சென யாழினி வண்டியில் தென்பட்டாள்.

முதல் சந்திப்பில் மன்னிப்பு பிறகு சிறு பெரு முறுவல்கள் தற்போது இரண்டாம் முறை இப்படி வழி மறித்து எதற்கு இந்த தேவையில்லாத நன்றி என்றுதான் பார்த்து வைத்தான் மணிகண்டன்.

“என்ன நான் எப்போ பேசினாலும் காதுல வாங்க கூடாதுனு இருக்கீங்களா?” அவனின் மெளனம் அவளை பேச வைக்க,

“புரியல?” என்ற வழக்கமான குழம்பிய முகமே அவனிடம்.

“சரிதான் நான் பேசுறது காதுல விழுந்தாலும் அது உங்களுக்கு புரியாதே.” என்று நொடித்தாள் யாழினி. அதுவரை தன் எண்ணங்களில் அமிழ்ந்திருந்தவன் சற்று தெளிந்து,

“எப்போதும் புரியாத மாதிரி பேசுனா எனக்கு எப்படி புரியும்? இப்போ எதுக்கு தேங்க்ஸ் சொல்றீங்க?”

“சொன்ன வார்த்தையை காப்பாத்துனதுக்கு.” என்றாள் யாழினி.

அவள் எதைச் சொல்கிறாள் என்று புரியாதவன் சற்று கடுப்பாகி, “என் பின்னாடியே வந்து எப்போ பேசுனாலும் தலையும் வாலும் இல்லாம எனக்கு புடிபடாத மாதிரியே பேசுறீங்க? எதை பத்தி சொல்றீங்கன்னு நீங்க சொன்னாதான் எனக்குத் தெரியும்.”

அதுவரை யாழினிக்கு அவன் மீது இருந்த பரிதாபம் கோபமாய் உருமாற, “என்ன ஓவரா பேசுறீங்க? அன்னைக்கு ஒரு சாரி சொல்ல அவ்வளவு பேச்சு இன்னைக்கு இப்படி? நான் பேசுறது உங்களுக்கு பிடிக்கலைன்னா எதுக்குங்க பார்க்கும் போதெல்லாம் ஏதோ பிரென்ட் மாதிரி பிஹேவ் பண்ணீங்க?” இந்த சில தினங்களில் அவர்களுக்கிடையில் நடந்தேறிய சின்ன பரிமாற்றங்களை அவள் குறிப்பிட, அவனின் கடுப்பு நீர் பட்ட கனலாய் அடங்கியது. 

சற்று தயங்கியவன், “எங்க வீட்ல பேசுறது எல்லாம் உங்களுக்கு கேக்குதுன்னா கண்டிப்பா என்னை பத்தி தெரிஞ்சிருக்கும். இருந்தாலும் நீங்க என்கிட்ட அதை காட்டிக்கவே இல்லை. சாதாரணமா பேசுனீங்க. என்னை பத்தி தெரிஞ்சவங்க பார்வையில வித்தியாசம் இருக்கும் ஆனா உங்க பார்வை என்னை பிரிச்சு பார்க்கல. என்னையும் மதிச்சவங்க நீங்க… அதான் உங்க மேல ஒரு மதிப்பு…” என்று அவன் இழுக்க, யாழினி முறைத்தாள்.

“உங்க மதிப்பு என்னனு கொஞ்ச நேரம் முன்னாடிதான் பார்த்தேனே! நான் என்னவோ துரத்தி துரத்தி உங்ககிட்ட வந்து பேசுற மாதிரி சொல்றீங்க? ஏதோ அன்னைக்கு கொடுத்த வாக்கை காப்பாத்துனீங்கனு தேங்கஸ் சொல்லலாம்னு பாத்தேன்.” என்று அவள் இயல்பாய் பேசிய அத்தருணம் முதல் நட்பான உரையாடல் இருவருக்குள்ளும் அரங்கேறியது.

“அதுதாங்க எனக்கு புரியல எதுக்கு இந்த நன்றி இப்போ?”

“உங்க குரல் எங்க வீட்ல கேக்குறது இல்லை.” அவள் காரணம் சொல்லவும் கற்பூரமாய் பிடித்துக்கொண்டான் மணி. 

“அதுக்கு முன்னாடியும் என் குரல் கேட்டு இருக்காது. என் வீட்ல உள்ளவங்க குரல்தான் கேட்டு இருக்கும். அம்மா அதிகமா டென்ஷன் ஆவாங்க. டென்ஷன் ஆனா என்ன பேசுறோம்னு தெரியாம கத்திடுவாங்க.” 

“அம்மாவுக்கு சப்போட்டா?” என்று விழி உயர்த்தினாள் யாழினி.

“அம்மாவாச்சே!” என்று அசட்டு சிரிப்பு சிரித்தான். அவன் நிலை அவளுக்கு தெரிந்தபின் மறைக்க ஒன்றுமில்லை அவனிடம்.

“இப்போ நல்லா பேசுறீங்க. ஆனா அன்னைக்கு பார்த்தும் பாக்காத மாதிரி இருந்தீங்க?” அவள் முகம் திருப்பிய நாளை நினைவு கூர்ந்து அவன் கேட்க,

அவன் குறிப்பிடும் நாள் நினைவில் வர, யாழன் சிந்தனை மீது ஆற்றாமை வந்தது மீண்டும்.

தன் கேள்விக்கு அவள் முகம் காட்டும் பாவனைகளை என்னவென்று நினைத்தானோ, “வேலையில பிரச்சனையா?” என்று யோசனையாக கேட்டான்.

என்னதான் நட்பாய் பேசினாலும் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு நட்பு பாராட்டவில்லை இன்னும். என்ன சொல்லலாம் என்று அவள் யோசியும் முன்னரே அவன் எடுத்துக் கொடுக்க அதையே பிடித்துக்கொண்டாள் யாழினி.

“ஆமாங்க… சண்டே கூட வேலை விஷயமா போன் வந்துட்டே இருந்தா கடுப்பாகும்ல…” 

“லீவ் இல்லாம வேலை அதிகம் இருக்கிறது உங்களுக்கு பிரச்சனை. அது இல்லாததுதான் எனக்கு பிரச்சனை. ஆகமொத்தம் வேலை தாங்க ஒட்டுமொத்த சிக்கலுக்கும் காரணம். உங்களுக்கு வேலை இருக்கும் கிளம்புங்க…” தன் ஆதங்கத்தையும் இடையே சொருகி வருந்திய மணி அவளுக்கு நேரமாகும் என்று நினைத்து அவளை வழியனுப்ப,

“ஓகே மணி. அப்புறம் பார்க்கலாம்.” அவன் விழி ஓரமாய் திரண்டிருந்த நீர்த்துளிகள் மறைந்துவிட்ட நிம்மதியில் யாழினி கிளம்ப முயல,

“இவ்வளவு பேசிட்டு உங்க பேர் சொல்லாம போறீங்க?” என்று நிறுத்தினான் மணி.

“யாழினி.”

“மணிகண்டன்.” என்றான் முறுவலுடன்.

“மணிகண்டனா? மணி மணினு உங்க அம்மா மூச்சுக்கு முந்நூறுவாட்டி கத்தவும் அதுதான் உங்க பேருனு நினைச்சேன்.” 

மென்முறுவல் பரிமாற்றம் ஒன்று நிகழ, 

“பை MK.” என்று விடைபெற்றாள் யாழினி.

அவளது அழைப்பில் பற்கள் அனைத்தும் மின்ன, “MK! கெத்தா நல்லாதான் இருக்கு.” என்று தனக்குள் சொல்லிப் பார்த்து சிரித்து நின்றான் மணிகண்டன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!