Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மனதிலோர் மோகன ராகம்

மனதிலோர் மோகன ராகம் 17

மனதிலோர் மோகன ராகம்

அத்தியாயம் 17

அடுத்த தினம் காலை அலுவலகம் சென்ற போதே, மிருது மனம் மாறிவிட்டாள் என்றும், நிச்சயதார்த்தம் இப்போதைக்கு இல்லை எனவும், சத்யாவின் சகோதரி வந்த பின்பு நடைபெறும் என்ற செய்தியும் ராகாவிடம் சொல்லப்பட்டது.



Advertisement

“பரவாயில்ல..ப்ரைட்ஜில்லா கொஞ்சம் போல நல்லவங்க போல. ஆரம்பத்தில தாம் தூம்னு குதிச்சு ஆர்ப்பாட்டம் பண்ணாலும், அப்பறமா எடுத்து சொன்னா புரிஞ்சுக்கற ரகமாத்தான் தெரியுது” என்று மைக்கில் மிருதுளா பற்றி பாராட்டுப் பத்திரம் வாசித்தான்.

ராகாவின் மனதும் அதையே தான் எண்ணியது. முதலில் கோபப்பட்டு கத்திவிட்டு பின்னர் யோசித்து வருத்தப்படும் ரகம் மிருதுளா என்று புலனானது. மிருதுவின் இந்தத் திடீர் மனமாற்றம் எதனால் ஏற்பட்டிருக்கும் என்று ராகாவால் யோசிக்காமல் இருக்க இயலவில்லை.

“கண்டிப்பா சத்யா, மிருதுவை சமாதானம் செய்திருப்பான். அதனால தான் மிருதுவோட மனசு மாறியிருக்கு” என்ற எண்ணமே மனதை பாராமக்கிவிட, “எப்படி சமாதானம் சொல்லியிருப்பான். பேபி, செல்லம்னு கொஞ்சியிருப்பானோ? உனக்காக நான் டெஸ்டினேஷன் வெட்டிங்க்கு சம்மதிச்சேன்ல அம்மு, எனக்காக இதைக் கூட நீ செய்ய மாட்டியான்னு கெஞ்சியிருப்பானோ?” என்று எண்ணும் போதே மனம் பிசையத் துவங்கியது.

Advertisement

ஏன் இப்படியெல்லாம் நினைத்து என்னை நானே வருத்திக் கொள்கிறேன். அவன் திருமணம் செய்யப் போகும் பெண்ணிடம் கோபித்துக் கொள்ளவும், முகம் தூக்கி வைத்திருக்கும் அவளைச் சமாதானம் செய்யவும் கடமைப்பட்டவன் தானே சத்யா. இதனால் எனக்கு ஏன் வருத்தம் ஏற்பட வேண்டும்? சத்யா, மிருதுவிடம் கொஞ்சலாய் பேசியிருப்பானோ என்று நினைக்க நினைக்க, என் மனதில் ஏன் பாரம் ஏற வேண்டும்?

Advertisement

இவ்வாறெல்லாம் யோசிக்காமல் இருக்க என்ன செய்ய? என்று காலைப் பொழுதின் பெரும்பான்மை சமயத்தைக் கழித்திருந்தாள். இப்போதைக்கு நிச்சயதார்த்தம் இல்லை என்பதால் இனி “சத்யா மிருதுளா” தம்பதியின் திருமண வேலைகளை உடனே கவனிக்கத் தேவையிருக்கவில்லை.

அடுத்ததாக இருந்த மற்ற வேலைகளை எடுத்துத் திட்டமிடத் துவங்கினாள். ஆனால் மனம் செய்து கொண்டிருந்த பணியில் லயித்தபாடில்லை. “சத்யா எப்படி மிருதுவைச் சமாதானம் செய்திருப்பான்? கொஞ்சியிருப்பானோ? கைப்பேசியில் முத்தமிட்டிருப்பானோ? ஒரு வேளை கைப்பேசியில் சமாதானம் செய்யாமல் நேரே சென்று சந்தித்திருந்தால்? கொஞ்சியிருந்தால்? நேரில் முத்தமிட்டிருந்தால்? கட்டியணைத்து கண்ணே மணியே என்று குளிர்த் ததும்பப் பேசி நிச்சயத்தை தள்ளி வைக்க முயற்சித்திருந்தால்” என்று நினைக்க நினைக்க வயிரெல்லாம் எரிந்தது.

“அவங்களைப் பத்தி நினைக்காத ராகா! யார் எப்படி யாரை சமாதானம் செஞ்சிருந்தா என்ன? அப்படியே முத்தம் குடுத்து கொஞ்சியிருந்தா தான் என்ன? அவளுக்கு உரிமைப்பட்ட முத்தம் தானே அது! உனக்கு என்ன வந்தது?” என்று பலவாறாகத் தன் மூளையைச் சலவை செய்து பார்த்தும் பயன் இல்லை.

Advertisement

மதியத்துக்கு மேல் அவளுக்கு வேலையே ஓடவில்லை. தன் அன்னையிடம் பேசினால் தேவலாம் என்று தோன்றியது. ராகாவிற்கும் அவள் அன்னைக்கும் ஒரு வித்தியாசமான புரிந்துணர்வு தான் எப்போதுமே நிலவும். பேசிய 10 நிமிடத்தில் ஏதேனும் ஒரு சச்சரவு கிளம்பியிருக்கும்.

தனிமையாக உணரும் சமயங்களில் அவள் அன்னையின் பேச்சை மிகவும் கேட்க விருப்பம் கொள்வாள். முத்து லட்சுமி அவளைச் சமாதானம் செய்துவிடுவாள் என்ற எண்ணத்தினால் அல்ல, “எதாவது பேசி ஒரு புது டென்ஷனை உருவாக்கிடுவாங்க. அதனால இருக்கற பழைய டென்ஷன் மறந்தே போயிரும்.” என்ற அதீத நம்பிக்கை தன் அம்மாவின் மீது உண்டு. அதிலும், “ஒரு அம்மா தன் பொண்ணுகிட்ட” என்னும் முத்துலட்சுமியின் ஒரு வாக்கியம் போதும் ராகாவை சூடேற்ற.

தன் தலைவலியைக் கூட பொருட்படுத்தாமல் அன்னைக்கு மதியம் அழைத்திருந்தாள். “சொல்லு டீ? என்ன இந்த நேரத்தில கூப்பிட்டிருக்க? இப்போ தான் உனக்கு என் நினைப்பு வந்துச்சா?” என்று மிகவும் பாசமாக அவர் பாணியில் பேசத் துவங்கினார்.

“சும்மா தான்மா. உன் நியாபகம் வந்துச்சும்மா. ஏன்மா ஒரு பொண்ணு தன்னோட அம்மாகிட்ட பேசணும்னு நினைக்கக் கூடாதா?” என்றாள் சீண்டலாக. முத்துலட்சுமிக்கு மகளின் நக்கல் புரியவில்லை.

“சரி, உன் மருமக என்ன சொல்லறா?” என்று வம்படியாக தன் அன்னையின் வாயைப் பிடுங்க ரேணு பற்றி கேள்வி கேட்டாள். “மருமகள்” என்ற ஒரு வார்த்தை போதாதா முத்துலட்சுமியின் மடை திறக்க?

“ஆமா பொல்லாத மருமக.. நீ தான் மெச்சிக்கணும்…” என்று துவங்கி, தன் காபியில் மாத்திரம் சக்கரை எப்படிக் குறைவாக இருந்தது, தன் தோசையை வேண்டுமென்றே எப்படிக் கருக்கிக் கொண்டு வந்து கொடுத்தாள், தன் பாசிபச்சை பட்டுப்புடவையின் ரவிக்கையை எப்படி வேண்டுமென்றே தொலைத்தாள் என்று ராமாயணம் பாடத் துவங்கியிருக்க, ராகாவின் தலை ஒரு பக்கமாய் விண்விண்னென்று வலிக்கத் துவங்கினாலும், சத்யாவைப் பற்றிய நினைப்பு கொஞ்சமாக அப்புறம் சென்றுவிட்டிருந்தது.

அம்மாவிடம் பேசிவிட்டு கைப்பேசியை அணைக்கவும் அவளுக்கு தன் தாயின் குரலொலி காதினுள் கேட்டுக் கொண்டே இருப்பதாய்த் தோன்ற, “மிஷன் சக்கஸ்” என்ற சிறிய அமைதியுடன் மீத தினத்தைக் கழித்தாள்.

அவள் அமைதியெல்லாம், மாலை ஏழு மணி வரையிலும் தான் நீடித்தது. அலாரம் வைத்து அழைத்ததைப் போல மாலை ஏழு மணிக்கு சத்யாவிடமிருந்து அவள் எண்ணிற்கு அழைப்பு வந்தது.

இரண்டு முறை தொடர்ந்து அடித்த அழைப்பை ஏற்காமல் கைப்பேசியையே வெறித்துக் கொண்டிருக்க முடிந்த ராகாவால், மூன்றாவது முறையாக வந்த அழைப்பை எடுக்காமல் இருக்க இயலவில்லை. “எதாவது எமர்ஜெஞ்சியா இருக்குமோ?” என்று சப்பைக் கட்டுக் காரணம் ஒன்றைத் தானாகவே கற்பித்துக் கொண்டு அழைப்பை எடுத்தாள்.

“ஃப்ரீயா இருக்கீங்களா ராகா? இல்லை டிஸ்டர்ப் பண்ணிட்டனா?” என்று சத்யா சற்றே தயக்கத்துடன் வினவினான். “ஆமா, டிஸ்டர்பென்ஸ் தான், நீ எப்போ என் லைஃப்ல வந்தியோ அப்போ இருந்தே டிஸ்டர்பென்ஸ் தான்” என்று சொல்ல நினைத்த நாவை கட்டுப்படுத்திக் கொண்டு,

“அது..கொஞ்சம் வேலையா இருந்தேன். சொல்லுங்க சத்யா!” என்று முடிந்தமட்டிலும் எட்ட நின்றே எச்சரிக்கையாகப் பேசினாள்.

“இல்ல, வந்து..” என்றவன், ராகா மறுமுனையில் வாளாதிருக்க, “ஒண்ணும் இல்ல. சும்மா தான் கூப்பிட்டேன். நீங்க வேலையா இருக்கீங்கன்னு யோசிக்கலை. சாரி டிஸ்டர்ப் பண்ணிட்டேன்னு நினைக்கறேன்” என்று லேசாக குரல் கம்ம அடிபட்ட தொனியுடன் பேசினான்.

அவன் குரலில் தென்பட்ட குழப்பம் கண்டு, தானாக ராகாவின் மனது இளகிப் போயிற்று. “ச்சே ச்சே! டிஸ்டர்ப்லாம் இல்ல. நீங்க சொல்லுங்க சத்யா! என்ன விஷயம்?” என்று பேசி விட்டது அவள் உதடுகள்.

“ஃப்ரீன்னா, நைட் டின்னர் போலாமா? வேற ஏதாவது தோசை கடைக்கு?” என்று சத்யா வினவுவான் என ராகா எதிர்பார்க்கவில்லை தான். ஆனால் அவன் கேட்டது மிகவும் பிடித்திருந்தது. அவன் கேட்ட நொடி அது வரையிலும் மனதை அழுத்திக் கொண்டிருந்த ஏதோ ஒன்று சடசடவென உள்ளிழுத்துக் கொண்டு மறைந்து போய்விட்டது போலொரு நெகிழ்வு.

மகிழ்ச்சியைக் குரலில் காட்டிக் கொள்ளாமல் இருக்க பெரும்பாடு பட்டாள்.

தன் மனதிற்கு வலிக்கும் என்று தெரிந்தே, மிருதுளாவை சத்யா எப்படிச் சமாதானப்படுத்தியிருப்பான் என்ற நிழல் பிம்பத்தை வலுக்கட்டாயமாக மனதினுள் கொணர்ந்தாள். இதயம் நொடியில் ரணமாய் மாறியது.

“அது, நான்..நான் டின்னர் சாப்பிட்டுட்டேனே சத்யா!”

“பரவாயில்ல ராகா. நீங்க சாப்பிட வேணாம். எனக்கு கம்பெனியாவது குடுக்கலாம்ல.” என்றான் அவன் வம்படியாக. “டேய் என்னை நிம்மதியா இருக்க விடமாட்டியா நீ? பாவமா தெரியலை என்னைப் பார்த்தா?” என்று பரிதவித்தவள்,

“இரு இன்னைக்கு உனக்கு ஒரு முடிவு கட்டறேன். இன்னைக்கு உங்கிட்ட நான் எரிஞ்சு எரிஞ்சு பேசறதைப் பார்த்து, இனி என் பக்கமே நீ திரும்பிப் பார்க்கக் கூடாது” என்று உறுதி செய்து கொண்டு, “சரிங்க. போலாம்” என்று பதிலளிக்க, இம்முறை மறுமுனையில் சத்யா உவகையில் துள்ளலானான்.

“தேங்கியூ ராகா. ரியலி… நான் உங்க ஹாஸ்டல் கீழ தான் வெயிட் பண்ணறேன். நீங்க ரெடியாகி வாங்க”

“ஐஞ்சு நிமிஷம்.. வந்திடறேன்” என்றுவிட்டு கைப்பேசியை அணைத்தாள்.

“ஓ,கீழ தான் நிக்கறியா? அப்போ எப்படியும் நீ கூப்பிட்ட உடனே நான் வந்திருவேன்னு நினைச்சு இங்க வெயிட் பண்ணியிருக்க. நல்லா வெயிட் பண்ணு. அரை மணி நேரமாச்சும் ஆகாம நான் கீழ வரமாட்டேன்.” என்று கருவிக் கொண்டவள், எவ்வளவு மெல்லமாகத் தயாராக முடியுமோ அவ்வளவுக்கு மெல்ல மெல்லத் தயாரானாள்.

நடுவில் சத்யா அழைத்தால், “ரெடியாகிட்டு வர வேண்டாமாங்க. சும்மா சும்மா கூப்பிட்டுகிட்டே இருக்கீங்க” என்று வெடுக்கென சொல்லிவிட வேண்டும் என்றெல்லாம் முடிவெடுத்திருக்க, சத்யாவிடமிருந்து ஒரு முறை கூட அழைப்பு வரவில்லை.

சத்யா அழைத்தவுடன் ஐந்து நிமிடத்தில் தயாராகிவிட்டவளுக்குத் தான், வெறுமனே உட்கார்ந்திருக்க பொறுமை வாய்க்கவில்லை. இழுத்துப் பிடித்து இருபது நிமிடங்கள் அங்கே இங்கே என அறையில் உலாத்தியவள், “சே, போலாம்” என்று பிஜியை விட்டு வெளியேறினாள்.

பிஜியின் வாயிலில் வளர்ந்திருந்த பிங்க் ப்ளாசம் மரத்தின் மீது ஒரு காலை வாகாக வைத்து சாய்ந்த படிக்கு வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருந்த சத்யாவைக் கண்டதும் அவளது தயக்கங்கள் போன இடம் தெரியவில்லை.

கண்கள் விகசிக்க, அவன் அருகில் ஓட்டமும் நடையுமாய் சென்றவள், “ரொம்ப  நேரம் வெயிட் பண்ண வச்சுட்டேனா?” என்று தான் முதலில் வினவினாள்.

“ஆமா, கொஞ்ச நேரம் ஆகிடுச்சு” என்று அவன் சொல்லப் போவதில்லை என்று தெரியும் அவளுக்கு. அப்படி ஏதாவது சொல்லும் பட்சத்தில், “ரெடி ஆக, முன்ன பின்ன தான் ஆகும்” என்று பதில் எல்லாம் தயார் படுத்தியிருந்தாள். ஆனால் அவனோ,

“என் அக்கா ஹரிணி ஐஞ்சு நிமிஷத்தில கிளம்பிருவேன்னு சொன்னா, சாலிட்டா அரை மணி நேரம் பண்ணிடுவா கிளம்ப. சோ, வெயிட் பண்ணறதெல்லாம் எனக்கு பழக்கப்பட்ட விஷயம் தான்” என்றான் சத்யா இலகுவாக. அவன் தோள் குலுக்கலுடன் சிறு முறுவலையும் சிந்த அவனுடன் சேர்ந்து புன்னகைக்காமல் இருக்க ராகாவால் முடியவில்லை.

இன்றும் அவன் காரில் வந்திருக்கவில்லை போலும். அவளுடன் சேர்ந்து பேசிக் கொண்டே நடக்கலானான்.

“நீங்க கார்ல வரலியா? எப்படி வந்தீங்க” என்று இம்முறை கேட்டே விட்டிருந்தாள். அதற்கும் தோள் குலுக்கியவன், “பெங்களூர் டிராஃபிக்குக்கு மெட்ரோவும், நடராஜா சர்வீஸும் தான் பெஸ்ட். சும்மா ஒரு கெத்துக்காக ஆடி, பி.எம்.டபிள்.யூ, மினி கூப்பர்னு வாங்கி நிறுத்திக்கலாம். பட் ட்ராவல்க்கு இதெல்லம் சென்சிபிள் ஆப்ஷன் இல்ல என்னைப் பொறுத்தவரைக்கும்” என்று பதிலளித்தான்.

ராகாவிற்கு என்றுமே மெட்ரோ தான். அதை விட்டால் அவ்வப்போது மைக்கிலுடன் வண்டியில் தொத்திக் கொள்வாள். இதை அவள் சொல்லவும், இருவரின் பேச்சும் பெங்களூர் மெட்ரோ, சென்னை மெட்ரோ, சென்னையின் வெயில், பெங்களூரின் மெல்லிய ஊசி குத்தும் குளிர் என தடம் பிடித்து வடம் பிடித்தது.

இன்னது தான் பேச வேண்டும் என்ற வரை முறையெல்லாம் இருக்கவில்லை. பேசுவதற்கு ஏதுவாக ஏதோ ஒன்று இருக்கவே செய்தது. அன்றைய இரவு உணவை அதே போன்றொரு மிகவும் ஆடம்பரம் இல்லாத நடுத்தரக் கடையில் முடித்துக் கொண்டு, திரும்ப பிஜி வந்து சேர இரவு பத்தாகி விட்டிருந்தது.

பிரியும் வேளையில் தவறாமல், “ஒ.கே ராகா! நாளைக்கு பார்க்கலாம். பை” என்று சொல்லிவிட்டுச் செல்பவனைக் காண ஏக்கமும் கோபமும் என இருவித உணர்வுகளும் ஒருங்கே உண்டாயின.

“நாளைக்கு பேச என்ன இருக்கு?” என்றோ, “நாளைக்கும் மீட் பண்ணப் போறோமா?” என்றோ கேட்க நா எழவில்லை. “பை” என்று சிரிப்புடன் கையசைத்து நடப்பவனைச் சிறிது நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்து விட்டுத் தன் பிஜியினுள் சென்றாள்.

இந்த இரவு நேர உணவும், நடையும் மறு நாளுடன் நின்று போய் விட்டதா என்று கேட்டால் இல்லை தான். தினமும் ஒரு புதிய கடையினை நோக்கி இருவரது பயணங்களும் இலக்கில்லாமல் தொடர்ந்தன.

மிருது பற்றிய பேச்சையோ, திருமணம் குறித்த சங்கதிகளையோ மறந்தும் கூட இருவரும் பேசிக் கொள்ளக் கூடாது என்பதில் குறியாய் இருந்தனர். சிற்சில சமயம், ராகா, தன்னை மறந்தோ, அல்லது சத்யா என்ன சொல்லுவான் என்று ஆழம் பார்க்கும் பொருட்டோ, மிருதுவின் பெயரை தன் பேச்சில் கொண்டு வருவாள்.

அந்தக் கேள்வியை அப்பட்டமாய் தவிர்க்காவிடினும், கேட்ட கேள்விக்கு உண்டான பதிலை தயங்காமல் கொடுத்துவிட்டு, ராகாவை மேலே தொடர விடாமல் வேறு விஷயத்தை எடுத்து பேசத் துவங்கிவிடுவான் சத்யா.

மிருதுவைப் பற்றியப் பேச்சைத் தவிர்க்கிறானா என்று யோசித்தால், தவிர்க்கிறான் தான். அவனாக அவளைப் பற்றிய பேச்சைத் துவங்க மாட்டான். அதற்காக ராகாவாக மிருதுளா பற்றி கேள்விகள் கேட்கும் பொழுது, நழுவாமல் கேட்ட கேள்விக்கு உண்டான பதிலைத் தயங்காமல் சொல்லுவான்.

இப்படித்தான் ஒரு நாள், உணவை முடித்துக் கொண்டு திரும்ப அவளை பிஜியில் விட நடந்து வந்து கொண்டிருக்க, இருவரது பேச்சும் கல்லூரிக் கால காதல், ஒரு தலை க்ரஷ் சுற்றி நடந்து கொண்டிருந்தது.

“உங்களோட பெஸ்ட் கேர்ள்ஃப்ரெண்டுன்னு யாரை சொல்லுவீங்க?” என்று பேச்சு வழக்கில் கேட்டிருந்தாள்.

“ம்ம். காலேஜ் படிக்கறப்போ ஒரு சீனியர் அக்காவை ரொம்ப பிடிக்கும். அவங்களுக்கும் என் மேல இண்டிரஸ்ட் இருக்குன்னு தெரியும். பட், என்னை விட ஒரு வயசு ஜாஸ்தின்னு காரணம் காட்டிக் காட்டி என்னை அவாய்ட் பண்ணுவாங்க. ஆனா, யாரும் இல்லாதப்போ நான் பேசினா என்கிட்ட பேசாம போகவும் மாட்டாங்க” என்றான் ஒரு குறும்புச் சிரிப்புடன்.

“ஓஓஓஓஓ..”

“ஏ அவளோ பெரிய ஓஓஓலாம் இல்ல. சின்ன ஓ தான். விட்டிருந்தா நான் அவங்களுக்கு ப்ரபோஸ் பண்ணியிருப்பேன். ஆனா, அதுக்குள்ள அவங்க முந்திகிட்டாங்க”

“என்னது? முந்திகிட்டாங்களா? ஐ மீன் அவங்க ப்ரபோஸ் பண்ணிட்டாங்களா?” என்றாள் கண்கள் விரிய.

“சே, சே! அப்படி நடந்திருந்தா தான் நல்லா இருந்திருக்குமே! நான் ப்ரபோஸ் பண்ணறதுக்கு முன்னாடி அவங்க முந்திக்கிட்டு, அவங்க கல்யாண இன்விடேஷனை நீட்டிட்டாங்க” என்றான் சோகமாக.

“சரி அந்தக்கா போனா போகட்டும் விடுங்க. அதான் மிருதுளா இருக்காங்களே” என்று யோசிக்காமல் சொல்லிவிட்டிருந்தாள். தன் தவறை உணர்ந்தவள், “ஐ மீன், மிருதுளாவும் உங்க காலேஜ் தானே!” என்று ஏதோ சமாளிக்க எத்தனித்தாள்.

பக்கவாட்டில் நடந்து கொண்டிருந்த சத்யா ஒரு நொடி தன் நடையில் சிறிய தோய்வைக் காட்டினான். ஆனால் மறுகணமே சுதாரித்து பதில் சொன்னான். “மிருது காலேஜ் படிக்கறப்போலாம் ஜஸ்ட் தெரிஞ்ச ஒரு பொண்ணுங்கற அளவு தான் பழக்கம். அப்பாவோட ஃப்ரெண்ட் டாட்டர். ஒரே ஸ்கூல்ல எனக்கு கீழ படிச்ச ஜீனியர். தட்ஸ் இட். காலேஜ் டைம்ல பெருசா டைம் ஸ்பெண்ட் பண்ணி பழகினதுலாம் இல்ல” என்று கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் பதில் வந்தது.

அங்கிருந்து அப்படியே அவன் கல்லூரிக் காலத் தோழர்கள் பற்றியும், அவர்களுடன் சேர்ந்து வயநாடு சென்றிருந்த சமயம் அவர்கள் சென்ற காரினை வழிமறித்த ஒற்றை யானையைப் பற்றியும் எனப் பேச்சு திசை மாறியிருந்தது. அதாவது திசையினை மாற்றியிருந்தான் என்று சொல்வதே உண்மை. இப்படியாக இருவரின் நட்பும், நாளொரு வண்ணமும், பொழுதொரு டின்னருமாகச் செம்மையாகச் சென்று கொண்டிருந்தது.

அன்றைக்கும் நகரில் புதிதாய் உதயமாகியிருந்த “ஃப்யுஷன் டைப்” உணவகம் ஒன்றிற்குச் சென்றிருந்தனர். பாவ் பாஜியை சீஸ் ஃபாண்டே போன்று சிறிய குழாயில் ஊற்றி, அடியில் மெழுகுவர்த்தி கொண்டு சூடாக்கி, பாவ் பன்னை சிறு சிறு துண்டுகளாய் வெட்டி, அந்த குழாயைச் சுற்றியும் வைத்திருந்தனர்.

பல் குத்தும் குச்சியால் பாவ் பன்னைத் எடுத்து, பாஜியில் முக்கி இருவரும் ருசி பார்த்துக் கொண்டிருக்க, சற்றும் எதிர் பாராத விதமாக, மிருதுளாவின் உயிர் தோழி மின்னி, தன் காதலனுடன் அந்த உணவகத்தின் உள்ளே நுழைந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!