ராகம் – 21.1
அதிர்துடியனும் ப்ரஷந்தினியும் பரிமாறி கொண்டிருந்தனர்… யாழி அருகே வரவும், ‘நீயும் யாழியோட சேர்ந்து உட்கார் மேன் நான் பரிமாருறேன்’ என்று பிரஷா கூற,
‘அதெல்லாம் முடியாது நான் சமைச்சதை என் பொண்டாட்டிக்கு நான் தான் பரிமாறுவேன்’ என்றவாறே பிரஷாவை முந்தி கொண்டு அவன் யாழிக்கு வைக்க,
Advertisement
எதற்கு எடுத்தாலும் கைபேசியை எடுத்து “ஹவ் டு.. ??வாட் டு..??, வேர் இஸ்…? இஸ் திஸ்..?” என்று எந்த சந்தேகம் என்றாலும் அதை சார்ந்தே பழகி இருப்பவளுக்கு இப்போது தாயின் பேச்சை சரி பார்க்க தானே யோசிக்க வேண்டிய நிலை.
ஆனால் சுகமதி, மரகதம், அதிர்துடியன்,ப்ரஷாந்தினி என்று அத்தனை பெரும் ஒரே நேரத்தில் அவள் சிந்தையை ஆக்கிரமித்ததில் இத்தனை நாட்கள் கேட்ட காணொளிகளா அல்லது தன்னை சார்ந்தவர்களா, யார் சரி..?? என்ற கேள்வி அவளை ஆட்டிபடைத்ததில் யாழிக்கு கிட்டத்தட்ட தலைவலியே வந்து விட்டிருந்தது.
எங்களுக்கு எல்லாம் தெரியும், முடியும் என்ற உறுதியோடு இத்தனை நாட்கள் பெரியவர்களின் பேச்சை கேட்பது அவர்கள் சொற்படி நடப்பது எல்லாம் ஏதோ அவர்களுக்கு அவப்பெயர் சேர்க்க கூடிய செயல் என்ற மாய உலகத்தில் இருந்தவள் இப்போது கணவனின் புறக்கணிப்பில் எழுந்த வலியையும் மீறி மரகதத்தின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து சுவை, மணம் எதுவும் உணராது தட்டில் விழுந்ததை விழுங்கி வைத்திருந்தாள்.
Advertisement
முரளியின் குடும்பம் கிளம்பவும் யாழியிடம் வந்தவன், ‘சரி யாழி நான் வெளில கிளம்புறேன்…’ என்றான்.
Advertisement
‘எ.. எங்கே’ என்று வாய் வரை வந்த வார்த்தையை அவள் நிறுத்த அதை புரிந்து கொண்டவனும்,
“இன்னைக்கு ஆருவோட டே…, முழுக்க அவ கூட தான் எப்படியும் நாங்க வர நைட் ஆகிடும்” என்றிட எதுவும் புரியாமல் போனாலும் ‘சரி’ என்று தலை அசைத்தாள்.
‘கிளம்பலாமாண்ணா’ என்றவாறே அங்கே வந்த ஆராதனா, யாழியை பார்த்ததும்
Advertisement
“அண்ணியும் கூட்டிட்டு போகலாமேண்ணா அவங்களும் எங்கயும் போகலையே” என்றிட,
நெற்றியை தேய்த்து விட்டு கொண்டு யாழியை பார்த்தவன்,
‘உனக்கு என் தங்கச்சி கூட வர ஓகேவா ..?? ப்ராப்ளம் இல்லையா..??’ என்று கேட்க,
‘ஏன் இப்படி ஒரு கேள்வி கேட்கிறான்..??’ என்பதாக அவனை பார்த்தவளுக்கோ இன்று அவனை இரவு வரை பார்க்க முடியாது என்ற எண்ணமே ஒரு வித வெறுமையை தோற்றுவிக்க உடனே ‘வரேன்’ என்றாள்.
பெற்றோரிடம் அதிரும் ஆராதனாவும் சொல்லிக்கொண்டு வெளியில் செல்ல யாழியும் அவர்களிடம் விடை பெற்று வெளியில் வந்தாள்.
அதி காரை கொண்டு வந்து வாசலில் நிறுத்தவும், வழக்கம் போல முன் பக்க கதவை திறந்த ஆராதனா அப்போது தான் நினைவு வரவும் யாழி புறம் திரும்பி,
“சாரி அண்ணி நீங்க உட்காருங்க நான் பழக்க தோஷத்துல திறந்துட்டேன்” என்றிட..,
அதிர்துடியனோ அமைதியாக யாழியின் பதிலை எதிர்பார்த்து கொண்டிருந்தான்.
‘என்ன சொல்றீங்க…??’
“இல்ல இனி அண்ணாக்கு பக்கத்து சீட் உங்களோடது தானே..!! நான் மறந்து கதவை திறந்துட்டேன்னு சொன்னேன் நீங்க முன்னாடி உட்காருங்க நான் பின்னாடி உட்காருறேன்” என்றிட,
‘இல்ல…’ என்று அவள் அதிர்துடியனை பார்க்க அவனோ ஸ்டேரிங்கில் தாளமிட்டவாறு அவள் மீது தான் பார்வை பதித்திருந்தான்.
என்ன பதில் சொல்வது என்று ஒரு நொடி யோசித்தவள் அப்போது தான் அன்று அண்ணன் தங்கை இருவரும் ஏதோ முக்கியமான விஷயம் பேசியது நினைவில் எழ, ‘பரவல்ல ஆராதனா நீங்க முன்னாடி உட்காருங்க நான் பின்னாடி இருக்கேன்’ என்றாள்.
‘இல்ல அண்ணி நீங்க வாங்க.., நான் அண்ணா கிட்ட அப்புறம் பேசிக்கிறேன்’
‘இல்ல இல்ல நீங்க உட்காருங்க…’ என்றவள் பின்னே அமர்ந்தாள்.
‘கிளம்பலாமா..??’ என்று இருவரையும் கேட்டவன் காரை எடுக்க,
ஆராதனாவோ ‘அண்ணா நீங்க கொடுத்த குவெஸ்டீன்ஸ்க்கு ஆன்சர் ப்ரிபேர் பண்ணிட்டேன்.. என்று ஆரம்பிக்க அதற்கு அதிர் பதிலளிக்க என்று வழி நெடுக இருவரின் பேச்சுக்களும் முடியாமல் தொடர்ந்து கொண்டே இருந்தது.
ஆனால் யாழிக்கு எங்கே அதெல்லாம் கேட்டது பின்னாடி அமர்ந்திருந்திருந்தாலும் கண்ணாடியில் அவன் முகம் தெரியும் வகையில் அமர்ந்து கொண்டவளின் பார்வை என்னவோ அவனை விட்டு அகலமாட்டேன் என்பது போல பசைபோட்டு ஒட்டி கொண்டிருந்தது.
முதலில் மாலிற்கு அழைத்து சென்றவன் ஆராதனாவிர்க்கான உடைகளை பார்க்க தொடங்கி இருந்தான்.
‘அண்ணா நீங்க எடுங்க அதுக்குள்ள நான் கொஞ்சம் ஸ்டேஷனரி பார்த்துட்டு வரேன்’ என்று அவள் அடுத்த தளத்திற்கு கிளம்ப,
யாழிக்கோ எதுவும் கேட்க தோன்றவில்லை..,
‘உனக்கு பிடிச்சதை பாரு’ என்று அவன் கூறியும் நகராமல் யாழி அமைதியாக அவனை பார்த்திருக்க அடுத்த அரை மணி நேரத்தில் ஆராதனாவிர்கான அவன் தேர்வுகளை தனியாக அதிர்துடியன் எடுத்து வைத்திருந்தான்.
இது தான் என்று குறிப்பிட்டு சொல்வதற்கு இல்லாமல் அவள் நிறத்திற்கு ஏற்ப அவளுக்கு பிடித்த வகையில் சுடிதார், குர்தி, நைட் சூட், புடவை, ஸ்கேர்ட், டாப்ஸ் என்று அனைத்துமே எடுத்திருந்தான்.
திரும்பி வந்து அவன் தேர்வில் இருந்து தனக்கு பிடித்தமானதை ஆராதனா எடுத்து கொள்ளவும்,
‘போதுமா ஆரு..??’
‘போதும்ண்ணா’
‘புடவை அதிகமா எடுத்து இருக்க..??’
‘கண்டிப்பா இந்த முறை கிளியர் பண்ணிடுவேண்ணா கான்பிடன்ஸ் அதிகமாகி இருக்கு அதனால தேவை படும் இருக்கட்டும்’ என்றிட ‘சரி’ என்றவன் கேஷ் கவுன்டர் செல்ல,
இங்கு யாழியோ இதற்கு மேலும் தாங்க முடியாது என்பது போல “என்ன கிளியர் பண்ணுவீங்க..??” என்று கேட்க,
‘upsc எக்ஸாம் அண்ணி’ என்று கூற யாழிக்கோ மயக்கம் வராத குறை தான்
‘நீங்களும் படிக்கிறீங்களா..?? எவ்… எவ்ளோ நாளா..??’
‘காலேஜ் செகேன்ட் இயர்ல இருந்தே இது தான் என்னோட ஆம்பிஷன்னு முடிவெடுத்து அப்போ இருந்தே ஸ்டார்ட் பண்ணிட்டேன் அண்ணி.., அதி அண்ணா எனக்கு கைட் பண்றது மட்டும் இல்லாம புல் சப்போர்ட் அதுவும் வீட்ல எனக்கு கல்யாணம் பண்ணனும் சொன்னப்ப கூட upsc கிளியர் பண்ணின பிறகு பார்க்கலாம் சொல்லிட்டார்.
‘அப்படியா..??’ என்று விழிகள் விரிய பார்த்திருந்த யாழிக்கு இது புது செய்தி.
பின்னே திருமணம் முடிந்து அவள் அதிர்துடியன் வீட்டிற்கு வந்த இந்த சில நாட்களில் ஆராதனா சிறு வேலைகள் செய்யும் போது பார்த்திருக்கிறாள் மற்றபடி அதிகமாக வெளியில் பார்த்தது இல்லை..
“ஆமா அண்ணி.., பிரஸ்ட் அட்டெம்ப்ட்லயே ப்ரிலிம்ஸ் கிளியர் பண்ணிட்டேன் ஆனா மெயின்ஸ்ல கொஞ்ச பாயிண்ட்ல மிஸ் பண்ணிட்டேன் அதான் இந்த முறை விடகூடாதுன்னு இருக்கேன் நிச்சயம் கிளியர் பண்ணிடுவேன்” என்றவள்,
‘நீங்க அண்ணி..’ என்று கேள்வியாக நிறுத்த,
‘என்னது..??’
‘நீங்களும் ப்ரிபேர் பண்றீங்கன்னு அண்ணா சொன்னாங்க நாம கம்பையின் ஸ்டடி பண்ணலாமா கேட்டதுக்கு நீங்க இப்ப தான் இயர்லி ஸ்டேஜ்ல இருக்கிறதா சொன்னாரு நீங்களும் காலேஜ்ல இருந்தே ப்ரிபேர் பண்றீங்களா இல்ல எப்படி..??’ என்று கேட்க எச்சில் கூட்டி விழுங்கிய யாழி,
‘இல்ல இப்பதான் ஆ.. ஆரம்ப…’ என்று அவள் திணறி கொண்டு இருக்கும் போதே அதிர்துடியன் அவர்களை அழைக்க காரில் சென்று அமர்ந்தனர்.
அடுத்து கிருஷ்ணகிரி அணைக்கு அழைத்து சென்றவன் அவளுக்கு பிடித்த பொறித்த மீனை வாங்கிக்கொண்டு அங்கிருந்த பூங்காவில் அமர,
யாழியோ இன்னுமே திகைப்பில் இருந்து மீளாமல் அவர்களை பார்த்து கொண்டிருந்தாள்.
அணையை சுற்றி நடந்து கொண்டிருந்த போதும் அண்ணன் தங்கை இடையே பல விவாதங்கள் கேள்வி பதில்கள் என்று போய் கொண்டிருந்தது..
அதை கண்ட யாழிக்கோ, “கணவன் தங்கைக்கு கொடுக்கும் ஆதரவு அவளுக்காக செலவிடும் நேரம் எல்லாம் படிப்பினாலா..??” என்ற கேள்வி பிறந்து அவளை யோசனையில் ஆழ்த்தியது.
‘அண்ணா செல்பி எடுக்கவே இல்லையே’ என்று ஆராதனா திடீரென கேட்க,
‘மறந்துட்டேன்டா’ என்றவாறு தன் கைபேசியை எடுத்தவன் யோசனையுடன் நிற்கும் யாழியிடம்,
‘என்ன அங்கேயே நின்னுட்ட வந்து நில்லு’ என்று அழைக்க அதியின் கையை பிடித்து கொண்டு நின்ற ஆராதனாவும் ‘வாங்க அண்ணி என்று மறுகையை அவளோடு கோர்த்து கொண்டு போஸ் கொடுக்க நீரின் பின்னணியில் மூவரையும் அழகாக படம் பிடித்திருந்தான்.
யாழிக்கோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அதே சமயம் அதிர்துடியன் கைபேசியை அணைத்துவிட்டு முன்னே செல்ல இவளும் அவனை தொடர்ந்தாள்.
அணையில் இருந்து கிளம்பி அடுத்து புக் ஷாப், ஐஸ்க்ரீம் பார்லர், என்று ஆராதனா சொன்ன இடங்களுக்கு வண்டியை செலுத்தியவன் இறுதியாக டின்னரும் அவள் விருப்பத்திற்கு ஏற்ப முடித்து கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தான்.
************************************************
அதிர்துடியன் பெற்றோரிடம் பேசிக்கொண்டு இருக்க அறைக்கு திரும்பிய யாழி முகத்தில் தீவிர யோசனை பல கட்ட சிந்தனைகளுக்கு பிறகு அவள் சிற்றறிவிற்கு எட்டிய அளவில் அவள் சுயமாக யோசித்து ஒரு முடிவு எடுத்திருந்தாள்.
அது கலெக்டர் ஆவது என்பது..!!
ஆம் எப்பாடுபட்டாவது முட்டி மோதி தன்னால் இயன்றதை செய்து அவனுக்கு பிடித்த படிப்பை படித்து அவனை மகிழ்விப்பது என்ற முடிவிற்கு வந்து விட்டாள்.
அவனிடம் கூறிய பொய்யை நிஜமாக்க தீர்மானித்து விட்டாள்.
தன்னால் முடியுமா..?? தனக்கு வருமா..?? என்ற எண்ணமே இல்லாமல் அவனுக்காக அவனுக்கு பிடித்த ஒன்றை செய்து அவன் மனதில் இடம் பிடித்து விடும் வேகம் மட்டுமே…
“இத்தனை நாட்கள் அவளுக்காக அவனுக்கு பிடித்த எதையும் செய்ய வேண்டாம் என்று தடுத்தவனால் இதை தடுக்க முடியாதே ஏனெனில் கலெக்டர் ஆவது அவள் லட்சியம் என்று கூறி இருக்கும் நிலையில் அவனுக்கும் அது தான் பிடிக்கும் என்று தெரிந்த பின் அவள் செய்வதை அவனால் தடுக்க முடியாதே…”
அப்படி அவள் படிக்கும் போது நிச்சயம் ஆராதனா போலவே எந்த கட்டுப்பாடும் விதிக்காமல் அவளுடனும் நேரம் செலவிடுவானே அது போதுமே அவளுக்கு.., மனதில் எழுந்த மகிழ்ச்சியுடன் கப்போர்டை திறந்து புத்தகங்களை எடுத்து வரிசை படுத்தி அடுக்கி இருந்தாள்.
upsc தேர்வு குறித்த அடிப்படை அறிவு கூட இல்லாதவள் இப்போது அதை அடைய முயற்சிக்க போகிறாள்.
எல்லாம் அவனுக்காக அவன் மீதான காதலுக்காக..!!
அன்று இரவு அதிர் அறைக்கு வந்த போது யாழி புத்தகத்தோடு அமர்ந்திருப்பதை கண்டவன்,
‘தூங்கலையா..??’ என்று கேட்க,
‘இல்ல படிச்சிட்டு தூங்குறேன்…’
‘இது என்ன புதுசா..?? உனக்கு சீக்கிரம் தூக்கம் வந்துடுமேடி எப்பவும் காலையில தானே படிப்ப ‘
‘இல்ல இன்னையில் இருந்து நைட்ல படிக்க போறேன்’
‘ஆனா இது புது இடம்…’
“இல்ல இப்போ பழகிடுச்சி அதோட படிக்கிறப்போ தூக்கம் வராது..” என்று கூற,
அதிரின் பார்வை பெரும் ஆச்சர்யத்தோடு அவள் மீது படிந்தது.
‘நிஜமா படிக்க போறியா..??’ என்று கண்கள் மின்ன அவன் கேட்கவும்,
“ஆமா ஆனா இங்க லைட் போட்டு படிச்சா உங்களுக்கு டிஸ்டர்ப் ஆகாதா..?? நான் வெளில போய் படிக்கட்டா இல்ல..” என்று தயங்கி நிற்க,
‘பரவால்ல நான் ஐ மாஸ்க் போட்டுக்குறேன் நீ படி இல்ல உனக்கு எங்க கம்போர்டபளா இருக்கோ அங்க போய் படி’, என்றிட அவனுக்கு தலை அசைத்தவள்,
‘நீங்க டெஸ்ட் வைக்கறேன் சொல்லிட்டு எனக்கு வைக்கவே இல்ல’
‘மறந்துட்டேன் யாழி இப்பதான் நீ படிக்க ஸ்டார்ட் பண்ணிட்டியே சீக்கிரமே வைக்கிறேன்’ என்று ஐ மாஸ்கை தேடி எடுத்தவன் ‘உனக்கு ஏதாவது ஹெல்ப் வேணுமா..??’ என்று கேட்க,
‘இல்ல வேண்டாம் நீங்க தூங்குங்க’ என்றாள் அவன் வேலை பற்றி ஏற்கனவே மகேஷ் கூறியதை வைத்தும், ஆட்கள் இல்லை என்றால் யோசியாமல் அவனே கிரானைட் கற்களை தூக்கி ஏற்றி இருக்கிறான் என்று விஷ்ணு சொல்லியும் கேட்டு இருப்பவளுக்கு இரவிலும் அவனை விழிக்க வைத்து கஷ்டம் கொடுக்க விருப்பம் இல்லை.
சுத்தமாக எந்த அடிப்படை அறிவும் இல்லாமல் தேர்விற்கு தயார் ஆவது என்பது அத்தனை எளிதல்ல ஆனால் அதையும் அவனுக்காக செய்ய தயாராகி இருக்கிறாள்.
‘ஏதாவது தேவைன்னா தயங்காம எழுப்பு’ என்று ஐ மாஸ்க்கை மாட்டியவாறே படுத்தவன் ‘ஆல் தி பெஸ்ட்’ என்றிட,
புன்னகையுடன் ‘குட் நைட்’ என்ற யாழியோ மேலும் சில நிமிடங்களுக்கு அங்கிருந்து அகலாமல் அவன் உதட்டில் உறைந்திருந்த புன்னகையில் மெய் மறந்து நின்றிருந்தாள்.
பின் ஒருவாறு தன்னை மீட்டெடுத்து புத்தகங்களை பார்வை இட்டவள், ‘முடிந்த வரை தானே முயலலாம் முடியாது போகும் பட்சத்தில் காலை அவனிடம் கேட்டு கொள்ளலாம்’ என்ற முடிவிற்கு வந்துவிட்டாள்.
ஆனால் எங்கிருந்து தொடங்குவது எப்படி தொடங்குவது என்று புரியவில்லை பேசாமல் அதி போட்டு வைத்த டைம் டேபிளை கொண்டு ஆரம்பிப்போம் என்று அவள் எண்ணிய அதே நேரம் அவளருகே அரவம் உணர்ந்து யாழி தலை உயர்த்தி பார்க்க அதிர்துடியன் தான் நின்றிருந்தான்.
‘என்ன… என்னங்க..??’
“நீ படிக்கிறேன் சொன்னதுல எனக்கு வந்த தூக்கமும் போயிடுச்சிடி கொஞ்ச நேரம் உன் கூட இருக்கேனே.. இருக்கலாமா..??” என்று கேட்க,
அவளுடன் அவன்..!! கசக்கவா செய்யும்..??
‘ஹ்ம்ம்’ என்று ஜோராக தலையசைத்தவள் ‘ஆனா உங்க தூக்கம் கெடாதா…?? என்று அவனுக்காக கேட்க,
‘உன்னை விட தூக்கம் முக்கியம் இல்லடி’ என்றவாறே அவள் கையில் இருந்த புத்தகத்தை வாங்கியவன் பின் தன் மேஜை இழுப்பறையை திறந்து அதில் இருந்து சிலபஸ்சை எடுத்து வந்தவன் முதலில் அவளுக்கு பாடத்திட்டங்களை விளக்கிட யாழிக்கோ இவ்வளவு படிக்க வேண்டுமா..?? என்ற அயர்ச்சி அதை தொடர்ந்து முடியுமா..?? என்று கேள்வி ஒரு புறம் எழுந்தாலும் முடியும்…, முடியனும், முடிய வேண்டும் என்று தனக்கு தானே சொல்லி கொண்டவள் அவன் கூறிய விஷயங்களை கர்ம சிரத்தையாக கேட்டு கொண்டாள்.
தெளிந்த அறிவையும் ஞானத்தையும் ஆழ்ந்த கல்வி அறிவை தவிர வேறு எது கொடுத்துவிட முடியும்..?? அதனால் தான் அழகாக அவன் மீதான அவள் காதலை கொண்டு அவனையும் தேட வைத்து அவனுக்காகவே அவனை அடையும் வழியாகவே படிப்பையும் கொண்டு வந்து நிறுத்தி விட்டான் அவள் நாயகன்.
அவனும் இரு நாட்களாக அவளை, அவள் தவிப்புகளை, தேடல்களை கவனித்து கொண்டு தானே இருக்கிறான் அதோடு சுகமதியும் அவனுக்கு அழைத்து யாழியை கடுமையாக பேசியதை கூறி இருந்தார்.
எத்தனை தான் மற்றவர்கள் எடுத்து சொன்னாலும் அது குறித்து தெளிவாக யோசிக்க முடியாமல் தவித்து கொண்டிருக்கும் யாழியை நிச்சயம் ஆழ்ந்த கல்வி அறிவு தெளிவு பெற வைத்து செம்மைபடுத்தும் என்ற எண்ணத்தோடு அவள் படிக்க ஆரம்பிக்கவும் சென்று படுத்தான்.
யாழியோ இரவு இரண்டு வரை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அறிமுகத்தை அடிப்படை உரிமைகளை படித்து எழுதி பார்த்து கொண்டு இருந்தவள் இரவு இரண்டாகவும் அப்படியே மேஜையில் தலை கவிழ்ந்து இருந்தாள்.
அடுத்து வந்த நாட்களிலும் படிப்பை தவிர்த்து வேறு எதை பற்றிய சிந்தனையும் இல்லாமல் அதிரிடம் கேட்டு பாடங்களை படித்து கொண்டிருந்தாள்.
************************************

