Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மனதிலோர் மோகன ராகம்

மனதிலோர் மோகன ராகம் 22

மனதிலோர் மோகன ராகம்

அத்தியாயம் 22

கைப்பேசி அழைப்பை ஒருவர் துண்டிக்கிறார் என்றால் அதற்கு என்ன சமாதானம் சொல்லிய போதும், உண்மையில் இரண்டு காரணங்கள் தான். முதலாவது, அழைப்பினை ஏற்க முடியாத சூழலில் இருக்கிறார். உதாரணமாக வாகனம் ஓட்டியபடிக்கோ, முக்கியமான விவாதத்தின் இடையிலோ இருக்கலாம்.



Advertisement

இரண்டாவதும் பல நேரங்களில் நடக்கக் கூடியதும், அந்த நபருடன் பேசப் பிடித்தமில்லை என்ற காரணம் ஆகும். முதல் காரணமாக இருக்கும் பட்சத்தில், தன் அலுவல் முடிந்த சிறிது நேரத்தில் நிச்சயமாக மீண்டும் அழைத்துப் பேசியிருப்பர்.

ஒரு தடவைக்கு மேல் கைப்பேசியில் அநாகரீகமாக அழைத்துக் கொண்டே இருப்பது ராகாவிற்குமே பிடிக்காது. சமயங்களில் நடாஷா இது போலச் செய்வதுண்டு. ராகா அழைப்பை ஏற்கும் வரையிலும் விடாமல் அழைத்துக் கொண்டே இருப்பாள்.

“ஐ வில் கால் பேக் நோ! ஏன் இப்படித் தொடர்ந்து கூப்பிட்டுட்டே இருக்கீங்க. உங்க ஃபோன் கால் இம்பார்டெண்ட்னு எனக்கும் தெரியும் நட்ஸ். பட், காலை எடுக்க முடியாத சூழ்நிலையில இருக்கேன்னு நீங்களும் புரிஞ்சுக்கணும்” என்று கூட நடாஷாவிடம் சொல்லியிருக்கிறாள்.

Advertisement

அப்படிப்பட்ட ராகா, இன்று ஐந்து தடவைக்கும் மேலாகத் தொடர்ந்து சத்யாவின் எண்ணிற்கு அழைத்துக் கொண்டே இருந்தாள். முதல் இரு தடவைகளும் அழைப்பு துண்டிக்கப்பட்டது. மூன்றாம் நான்காம் முயற்சிகளில் முழு ரிங்கும் சென்றும் ஏற்கப்படவில்லை.

Advertisement

“ஓ, இவ தானே! அடிச்சுட்டே இருக்கட்டும்னு சைலண்டில போட்டுடானோ?” என்ற கோபம் மேலோங்கியது. அதன் பொருட்டுத் தான் அடைந்த எரிச்சலை அவனும் அடையட்டுமே என்ற ஆத்திரத்தில் மீண்டும் மீண்டுமாய் அழைத்தாள்.அவனது உதாசீனம் ராகாவை கோபத்தின் எல்லையில் நிறுத்தியிருந்தது.

“இதென்ன பொறுப்பில்லாத தனம்? நான் மட்டுமா கட்டி பிடிச்சேன்? அவனும் தானே மெய் மறந்து போய் நின்னான். அட்லீஸ்ட் ஒரு கர்டெஸிக்காவது ஃபோனை அட்டெண்ட் பண்ணா என்ன? அன்னிக்கு நடந்துகிட்டது தப்பு தான். இட் வாஸ் எ வீக் மொமெண்ட்னு சொல்லிட்டு, சாரின்னு ஏதாவது ரெண்டு வார்த்தை பேசிட்டு வைக்கறதுக்கு என்ன வந்துச்சு? ஃபோன் பண்ணறப்போ கட் பண்ணி விடறது எவளோ அவமானமா இருக்கு தெரியுமா?” என்று அனலாய் எழுந்த கோபம் அவள் வரையிலும் நியாயமானது தான்.

அவன் எடுக்க மாட்டான் என்ற தைரியத்தில், அவனை வெறுப்பேற்ற மீண்டும் மீண்டுமாய் அழைத்தவளுக்கு, மறுமுனையில் சட்டென அழைப்பு ஏற்கப்படவும், தடுமாற்றம் கொண்டது மனது.

Advertisement

அதிலும், கைப்பேசி எடுக்கப்பட்ட உடனே, “வாட்?” என்று மறூமுனையில் கர்ஜனையாகத்தான் கேட்டது சத்யாவின் குரல். மனதில் அத்தனை நேரம் நியூஸ் ரீல் போல் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்த அனைத்து கேள்விகளும், ஒரு நொடியில் மாயமாய் மறைந்து போய் விட்டன. மனத்திரை துல்லியமான கருப்பு நிறம் கொண்டு விட்டது.

“ஹலோ! கட் பண்ணறேன்னு தெரியுதுல. எதுக்குத் திரும்பத் திரும்பக் கூப்பிட்டு இருக்க?” என்ற கேள்வி நிஜமாகச் சத்யாவின் வாயிலிருந்து தான் வருகிறதா என்று சந்தேகம் கொள்ளும் படிக்கு அந்தக் குரலில் அத்தனை ஒரு வெறுப்புத் தொனித்தது.

சத்யாவின் குரல் கேட்கவும், எதற்காக அழைத்தோம் என்பதும், என்ன கேட்க வேண்டும் என்பதும் மறந்தே போய்விட்ட நிலையில், ராகா, கைப்பேசியை அத்தனை இறுக்கமாகக் காதின் அருகில் பிடித்திருந்தாள். கைகள் நடுங்குகிறதே என்ற அச்சம் வேறு.

“நான் என்ன தவறு செய்து விட்டேன்?” என்ற கோபம் ஒரு பக்கம், அதே நேரம், முற்றிலும் தன் அழைப்பைத் தவிர்த்து விடாமல், கடைசிக்குத் திட்டவேனும் சத்யா பேசுகிறானே என்ற சிறு நிம்மதி ஒரு பக்கம் என்று நின்றிருந்த அவள் செய்கே அவளுக்கே அருவருப்பூட்டியது.

“நான் வந்து..” என்று என்ன பேசவென்று ராகா தடுமாற்றமாய் யோசித்துக் கொண்டிருக்க, ராகாவின் தடுமாற்றம் பொதிந்த குரலைக் கேட்கவும், நொடியில் சத்யாவின் மனம் இழகித்தான் போயிற்று. குரலை வெகுவாகத் தாழ்த்திக் கொண்டவன், “ஒரு இம்பார்டெண்ட் மீட்டிங்ல இருக்கேன். முடிச்சுட்டு கூப்பிடறேன்” என்று செய்தி வாசிப்பவன் போல உணர்ச்சிகள் துடைத்த குரலில் சொன்னான்.

முன்னர், “வாட்?” என்ற கத்தலுக்கும், “அப்பறம் கூப்பிடறேன்” என்ற இறுதி பேச்சிற்கும் இடையில் நடந்தேறியிருந்த இருவரின் மனப்போராட்டமும் சொல்லில் அடங்காதது.

“பேசுவானோ மாட்டானோ?” என்ற தவிப்பில் அவளும், “என்ன பேச?” என்ற குழப்பத்தில் அவனும் என அந்த இரண்டு நிமிட பேச்சே பெரும் திணறலை உண்டாக்கியிருந்தது. கடந்து சென்ற இரண்டு மூன்று மாதங்களில் எத்தனை பேச்சுகள் இருவருக்குள்ளும் நிகழ்ந்திருக்கும்.

இன்னது தான் என்றில்லாமல், பொதுவாக அனைத்தைப் பற்றியும் சரளமாய் வாதிட்டு, சின்ன வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சமாதனம் ஆகி, மற்றவரை சீண்டலாய் குத்திக் காட்டி என எத்தனை இரவுகள் கடந்திருக்கும். அப்போதெல்லாம், “நீங்க ரெண்டு நிமிஷம் பேசறதுக்குக் கூடத் திணறல் ஏற்படற மாதிரி ஒரு காலம் வரும்” என்று கிஞ்சித்தும் எண்ணவில்லை.

சத்யா தான் சொல்ல வந்த விஷயத்தை மட்டுமாய்க் கடத்தி விட்டு கைப்பேசியை அணைக்கவும், அவன் மனம் அவனை இன்ன வார்த்தைகள் என்றில்லாமல் வைதது.

“சரியான செல்ஃபிஷ் ஃபெல்லோடா நீ! தொடை நடுங்கி! அந்தப் பொண்ணை அப்படிக் கட்டிகிட்டு நின்னப்போ உனக்குத் தெரியலையா இது எவளோ பெரிய காம்ப்ளிகேஷன்னு! கொஞ்சமும் கூடச் செல்ஃப் கண்ட்ரோல் இல்லாதவனாடா நீ?”

“சின்னக் கேப் கிடைச்சாலும் அதை யூஸ் பண்ணிக்கற சராசரி புத்தி தானே உனக்கும் இருக்கு. ப்ர்வேர்ட்! உன்னை நம்பி, உன் கம்பெனியில இவளொ லேடீஸ் வேற வேலை செய்யறாங்க. நீ நல்லவன்னு நம்பி, உன் செக்ரடரி உன் கூட ராத்திரி பகல்னு யோசிக்காம பக்கத்தில நிக்கறா! சந்தர்ப்பம் கிடைச்சா தடுமாறிடுவ தானே பொறுக்கி!” என்று கண்டமேனிக்கு அவனுள் வார்த்தைகள் எழுந்தன.

உண்மையில் ராகா முதல் முறை அழைத்த போது தன் அலுவலக அறையில் தனியாகத் அமர்ந்திருந்தான். கைப்பேசியில் ராகா என்ற எண் மிளிரவும், அவனுக்கு ஏற்பட்ட படபடப்பில் என்ன செய்வதென்று மூளை யோசித்து ஒரு முடிவெடுக்கும் முன்னர், கைகள் தானாக அழைப்பைத் துண்டித்துவிட்டன.

ராகாவிடம் பேசப் பிடித்தமில்லை என்ற காரணத்தினால் இல்லை, என்ன பேச? எப்படிப் வார்த்தைகளைத் துவக்க? எங்கிருந்து ஆரம்பிக்க? என்ற குழப்பத்தில் தான் மீண்டும் அழைப்பைத் துண்டித்தான். ராகா திரும்பத் திரும்ப அழைப்பாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அவள் அழைப்பு மீண்டும் மீண்டும் வந்த போது, அவனுள் ஏற்பட்ட படபடப்பும், பயமும், எரிச்சலாய் வெளியே வந்து விழுந்தது.

“ஐய்யோ என்ன பேச? இவளுக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறதே” என்ற கவலை அவனைப் பரிவிக்க வைத்தது. அதிலும், முதலில் கோபமாகக் கத்திய பின்னர், மறுமுனையில் ராகாவிடமிருந்து எந்த வித சப்தமும் இல்லாமல் போகவும், சத்யா தவித்தான்.

“அழுறாளோ! அழாத ராகா! ஐம் சாரி, “என்று நெஞ்சில் எழுந்த வார்த்தைகள் தொண்டைக் குழியுடனேயே அமிழ்ந்து போயின. அவளைச் சமாதானப்படுத்த என்ன தகுதி இருக்கிறது எனக்கு? அவள் அழுகைக்குக் காரணம் நான் தானே!அதிலும் பயந்தாங்கொள்ளி போல அவளுக்கு அழைத்துப் பேசாமல், நடந்தவற்றைப் பற்றி விவாதிக்காமல், அழைப்பை மட்டும் துண்டித்துக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?”

இந்த எண்ணம் ஏற்படவும், தன் மீது எழுந்த கோபத்தை ராகாவிடம் காட்டிவிடாமல், பெருமளவு குறைத்துக் கொண்டவன், “மீட்டிங்ல இருக்கேன். அப்பறம் கூப்பிடறேன்” என்று சப்பைக்கட்டுக் காரணம் சொல்லி அப்போதைக்கு ஆசுவாசம் அடைந்தான்.

அவனுக்கு யாரிடமாவது இந்தப் பிரச்சனையைப் பற்றிப் பேசவேண்டியது அவசியம் என்று தோன்றியது. தன் உற்ற நண்பன் ரிஷியிடம் இதைப் பற்றிப் பேச இயலாது. ரிஷியின் மனைவி மானசி, மிருதுளாவிற்குத் தெரிந்தவள். ரிஷி என்றேனும் தன் மனைவியிடம் இதைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளும் பட்சத்தில் அவள் மிருதுவிடம் சொல்லிவிடக் கூடுமோ என்ற பயத்திலேயே உழல வேண்டும்.

“வேண்டாம். ரிஷிக்கும் இப்போ தான் கல்யாணம் ஆகியிருக்கு. தன்னோட மனைவிகிட்ட எதையும் மறைக்கக் கூடாதுன்னு நினைச்சு, நான் சொல்லற விஷயத்தைத் தன் வைஃப்கிட்ட சொல்ல நிறையச் சான்ஸ் இருக்கு.” என்ற நினைப்பில் ரிஷியிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர்த்துவிட்டான்.

அடுத்தப் படியாக அவன் நினைவில் வந்து நின்றது அவன் தமக்கை ஹரிணி தான். ஆனால் அவளிடம் சொல்லலாமா வேண்டாமா என்ற பெரிய போராட்டமே அவனுள் நடந்தேறியது. இந்த விஷயத்தை யாரிடம் எப்படிச் சொல்ல முடியும்? என்னவென்று நினைப்பார்கள்? அதிலும் ஹரிணி அவன் சொல்வதை உண்மை என்று கூட உணர மாட்டாள். ஏதோ வம்பிழுக்கிறான் என்று நினைப்பாள்.

இருந்தாலும் யாரிடமாவது கொட்டிவிட்டால் தேவலாம் என்ற எண்ணம் மேலோங்க, ஆனாது ஆகட்டும் என்று தன் அக்காவிற்கு அழைத்தான். சம்பிரதாய விசாரிப்புகள் முடித்து, மிருதுவின் தந்தையின் உடல் நிலை பற்றிய பேச்சு எழுந்தது.

“நான் காலையில மிருதுகிட்ட பேசினேன்டா. சொன்னாளா? ஷி இஸ் சோ அப்செட். பாவம். அவளோட இவளோ வருஷ வாழ்க்கையில பெருசா எந்தக் கஷ்டமும் அவ பார்த்தது இல்லை. அதுவுமில்லாம அவளுக்கு அவங்க அப்பா பெரிய ஹீரோ ஃபிகர். அவருக்கு உடம்பு முடியலைங்கவும் ரொம்ப உடைஞ்சு போயிட்டா. நான் பேசப் பேசவே, அக்கா, அக்கான்னு ரொம்பத் தேம்பி அழுதா. கஷ்டமா இருந்துச்சு. நான் அங்க இருந்தாலாவது கூட மாட ஹெல்ப்ஃபுல்லா ஆறுதலா இருந்திருக்கும்”

“ம்ம்ம்ம். ஆமா”

“என்னடா, நான் எஸ்ஸே மாதிரி கதை சொல்லிட்டு இருக்கேன். நீ வெறும் ஆமான்னு மட்டும் சொல்லற? எதாச்சும் பிரச்சனையாடா? நீயா எதையும் சொல்ல மாட்டியா வாய் திறந்து? என்னாச்சுடா?” என்று கேட்க, எங்கிருந்து துவங்குவது என்று நிறையத் தடுமாற்றம் காட்டினான்.

ஒரு பக்கம் சொல்லிவிடு, ஹரிணி உன் நன்மைக்காக மட்டுமே யோசிப்பாள். உன்னைத் தவறாக நினைக்க மாட்டாள் என்ற நம்பிக்கை இருந்தாலும், அக்காவிடம் சொல்வதில் இயல்பான ஒரு தயக்கம் இருக்கவே செய்தது.

“ஒண்ணுமில்ல.” என்று சில முறை சொல்லிப் பார்த்தும் பயனில்லாமல் போக, ஒரு வழியாகத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஷரிணியிடம் சொல்லத் துவங்கினான்.

“ஒரு சின்னப் பிரச்சனை தான் ஹரிணி. நான் சொல்லறதை உடனே ஜட்ஜ்மெண்டலா கொண்டு போகாம, யோசிப்பேன்னு சொல்லு.”

“டேய் என்னடா என்னமோ பெரிய பீடிகையா போடற? என்ன விஷயம்னு சொல்லித் தொலைடா. விஷயத்தை விடவும் நீ குடுக்கற பில்டப் தான் பயத்தைக் கூட்டுது”

“மிருதுவை கல்யாணம் பண்ணிக்கப் பேசினப்போ எனக்குப் பெரிசா எந்தப் பெரிய எதிர்பார்ப்பும் இல்லை. தெரிஞ்ச பொண்ணு, ஃபேமலியும் பழக்கம். எல்லாமே ஒ.கேன்னு ஒரு ஈஸி கம்பர்டபிள் மேரேஜ் ப்ரபோசல். ஆனா”

“என்ன ஆனா? அவளைப் பிடிக்கலையா? அவ கூட க்ளோஸா பேசி பழக ஆரம்பிச்சதுக்கு அப்பறம் அவ கேரக்டர் பிடிக்காம போயிருச்சா?” என்றாள் ஹரிணி கொஞ்சம் பதற்றமாக.

“சே, சே! அதெல்லாம் இல்ல. அப்படியெல்லாம் அவ மேல குறை செல்ல முடியாது. எனக்குத் தான்..”

“டேய், தயவு செஞ்சு என் பிரஷரை ஏத்தாத! என்ன விஷயம்னு சொல்லிரு” என்று குரலை உயர்த்தினாள்.

“மிருதுவைப் பிடிக்கலைன்னு சொல்லலை. ஆனா, ஆனா வேற ஒரு பொண்ணைப் பிடிச்சிருக்கு” என்று ஒருவழியாகத் திக்கித் திணறி சொல்லி முடித்தான்.

“என்னடா இப்போ போயி இப்படிச் சொல்லற? அதுவும் அவ அப்பாவுக்கு உடம்பி வேற சரியில்ல. இப்போ போயி நீ கல்யாணத்தில இருந்து பேக் அடிச்சா எப்படிடா?”

“அய்யோ ஹரிணி, நான் பேக் அடிக்கலை. எனக்கு எல்லாச் சிட்யுவேஷனும் தெரியுது. அதனால தான் என்னால ஒரு முடிவுக்கே வர முடியல. இந்தப் பொண்ணு சொன்னேன்ல அவ கூட இருக்கறப்போ அவளோ ஹேப்பியா, கம்ஃபர்டபிளா ஃபீல் பண்ணறேன். பழகினதென்னவோ கொஞ்ச மாசம் தான்னாலும் ரொம்ப வருஷம் பேசி புரிஞ்சுகிட்ட ஒரு பர்சன் மாதிரி இருக்கு.” ஹரிணி மறுமுனையில் எதுவும் பேசாமல் அமையாக அவன் பேச்சைக் கவனிக்க, சத்யாவே மேலே தொடர்ந்தான்.

“அவ கூட இருக்கறப்போ என் மனசில ஏற்படற நிம்மதியும், சந்தோஷமும் மிருதுகூட ஒரு நாள் கூட ஏற்படலை. அதுக்காக நான் மிருதுளாவை தப்புச் சொல்லமாட்டேன். அவ கூட எனக்கு எந்தக் கனெக்டும் ஆகலைன்னு சொல்லறேன் அவ்ளோ தான். மிருதுவை கல்யாணம் பண்ணா, ஒரு சராசரி அரேஞ்ச் மேரேஜ் மாதிரி தான் என் வாழ்க்கை இருக்கும்”

“இந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணா அப்படியே விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில சிம்புவும் திரிஷாவும் ஜோடி சேர்ந்த எஃபெக்ட்ல இருக்குமா?” என்று ஹரிணி கேட்ட விதமே அவள் கோபத்தை உணர்த்தியது சத்யாவிற்கு. எதுவும் பேசாமல் வாளாதிருந்தான்.

“டேய் இதப்பாரு. நீ சொல்லற பொண்ணு நல்லவளாவே இருக்கட்டும். இந்தக் கனெக்ட் கருமாந்திரம்லாம் உண்மைன்னே இருக்கட்டும். ஆனா, நீ பேசற லாஜிக்கை யோசிச்சு பாரேன். கல்யாணம்னு ஒன்னு தான் ஆகலை உங்க ரெண்டு பேர்த்துக்கும். பட், உனக்கும் மிருதுவுக்கும் கல்யாணம் ஆகப் போகுதுன்னு நம்ம சர்கிள் முழுக்கத் தெரியும். நீங்களும் சும்மா இல்லாம, உங்க பங்குக்கு மேஜனீன்ல பேட்டி குடுத்து உலகத்துக்குகெல்லாம் சொல்லியிருக்கீங்க!”

“ஹரிணி தெரியுது! ஆனா,”

“இரு இரு நான் இன்னும் பேசி முடிக்கலை. நீ அதுக்குள்ள என் வாயை மூட வைக்கப் பார்க்காத! நான் ஒரே ஒரு கேள்வி கேட்கறேன். இந்நேரம் உனக்கும் மிருதுவுக்கும் கல்யாணம் ஆகிடுச்சுன்னு நினைச்சுக்கோ! இப்போ நீ இந்த உன் லவர் பொண்ணை மீட் பண்ணற, அப்போ என்ன சத்யா பண்ணியிருப்ப? என் வைஃப் கூடக் கனெக்ட் ஆகலை. இவளை பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு இருப்பியா?”

சத்யா மெளனமாய்ச் செவிமடுத்தான்.

“சொல்லு, என்ன பண்ணியிருப்ப. மிஞ்சிப் போனா ரெண்டு ஏக்கப் பெருமூச்சு விட்டுட்டு, “அடடா இவளைக் கல்யாணம் பண்ணியிருந்தா நல்லா இருந்திருக்குமே”ன்னு மனசுக்குள்ள புலம்பிட்டு அடுத்த வேலை என்னன்னு பார்க்கப் போயிருப்ப. ஆமா தானே!”

“ஆமா” என்ற சத்யாவின் குரலில் சுரத்தேயில்லை.

“இங்க பாரு உன் மனசு தப்புக்கும் சரிக்கும் நடுவில் நிக்குதுடா. அதான் உன் பிரச்சனை. அந்தப் பொண்ணுகிட்ட உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறேன்னு வாக்கு குடுத்துட்டியா? ஐ மீன் .. நான் என்ன கேட்கறேன்னு புரியுதுல்ல?” என்றாள் அதட்டும் குரலில்.

“ம்ம்ம். புரியுது. நான் ஒரு தடவை அவளை ஹக் பண்ணேன் அது மட்டும் தான். நீ சொல்லற மாதிரி, நினைக்கற மாதிரியெல்லாம் எதுவும் இல்ல. எந்த தப்பும் பண்ணலை. இன்ஃபாக்ட் உன்கிட்ட அவளைப் பிடிச்சிருக்குன்னு சொன்னதைக் கூட அவகிட்ட நான் சொன்னதில்ல.”

“நல்லது! இனியும் சொல்லாத! சரியா!  யார் இந்தப் பொண்ணு? எனக்குத் தெரியுமா? உன் ஸ்கூல் ஃப்ரெண்டா? எப்படிப் பழக்கம்?”

“அது, அது வந்து  எங்க மேரேஜ் ஈவெண்ட் மானேஜ்மெண்ட் டீம்ல இருக்கற பொண்ணு. “ என்றவன் அவள் பெயரைச் சொல்லாமல் தவிர்த்திருந்தான்.

“அட்றா சக்கை. உனக்கு மிருது கூட மேரேஜ்னு அவளுக்குத் தெரிஞ்சும் உன் கூட இவளோ க்ளோஸா பழகறா, உன் மனசை மாத்தியிருக்கான்னா, அவ நீ சொல்லற மாதிரி நல்லவளா, லவ்வபிளா, ஒரு கனெங்க்ட் குடுக்கற டைப்பா எனக்குத் தெரியலை.”

“அப்படியில்ல ஹரிணி. நீ நினைக்கற மாதிரி இல்ல”

“என்ன இல்ல! அழகான பணக்கார பையன்னு உன்னை வளைச்சு போட்டுச் செட்டில் ஆகப் பார்க்கறா! இது புரியாம நீ என்னமோ தெய்வீக காதல் ரேஞ்சுக்கு பேசிட்டு இருக்க!”

“ஹரிணி அப்படியில்ல. நான் அவளை ஒரு தடவை ஹக் பண்ணி…” என்ற சத்யாவை மேலே பேச விடவில்லை அவன் அக்கா.

“நேர்ல மட்டும் இருந்தேன்னு வை பளார்னு அறைஞ்சிருப்பேன். எந்தக் காலத்தில இருக்க நீன்னு எனக்குத் தெரியலை. அவன் அவன் எல்லாமே பண்ணி முடிச்சுட்டும், வீ ஆர் ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்னு பை சொல்லிட்டு கை குலுக்கிட்டு போயிட்டு இருக்கக் காலத்துல, ஹக் பண்ணானாம் அதனால உறுத்தலா இருக்காம்.”

“இன்னும் சொல்லப் போனா அந்தப் பொண்ணுக்குத் தான் உண்மையா உறுத்தலா இருக்கணும். இன்னொருத்திக்கு நிச்சயம் ஆன ஆம்பிளையைக் கட்டிபிடிக்க எப்படி அலவ் பண்ணா அவ! அதில இருந்தே அவ கேரக்டர் தெரியுதா இல்லையா?” என்று சத்யா என்ன பேசிய போதும், ராகாவின் மீதான தன் அபிப்பிராயத்தை ஹரிணி மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்று புரிய, சத்யா மேலே வாதாடவில்லை.

“நான் சொல்லறதை நல்லா மனசில வாங்கிக்க. உனக்கு மிருது கூட ஒரு நல்ல அழகான லைஃப் காத்திருக்கு. அதை உன் எமொஷன்ஸ்ங்கற பேர்ல கெடுத்துக்காத. புரியுதா?”

“ம்ம்ம்”

“என்ன வெறும் ம்ம்ம். வாயைத் திறந்து சொல்லு. புரியுதா?” என்றாள் மீண்டும் அழுத்தமாக.

“புரியுது!”

“குட்!. நீ என்ன பண்ணற! அந்தப் பொண்ணைப் பத்தின எண்ணத்தை ஓரமா தூக்கி போட்டுட்டு அடுத்த வேலையைப் பாரு. மனசு ரொம்பக் கஷ்டமா இருந்துச்சுன்னா,

“ஐம் வெரி சாரிம்மா. ஒரு எமோஷன்ல அப்படி ஹக் பண்ணிட்டேன். வெரி சாரின்னு” ஒரு மெசேஜ் பண்ணிடு. என்னைக் கேட்டா, இந்த மெசேஜ் கூட அநாவசியம் தான்னு சொல்லுவேன். நீ பேச ஆரம்பிச்சா, இந்த மாதிரி பொண்ணுக அதை அவளோ லேசில விடமாட்டாங்க.”

“அப்படியே தொத்திகிட்டே தான் இருப்பாங்க. அவ நம்பரை ப்ளாக் பண்ணிட்டு, அமைதியா விட்டுடு. என்ன?” என்று பலத்த அறிவுரை வழங்கினாள். இன்னும் சிறிது நேரம் பேசிவிட்டு, தன்னால் எவ்வளவு விரைவில் இந்தியா வர இயலுமோ அப்போது வந்து விடுவதாய் வாக்களித்துக் கைப்பேசியை அணைத்தாள் ஹரிணி.

ஹரிணி பேசியதை அமைதியாக மனதில் அசைபோட்ட வண்ணம் நீண்ட நேரம் அமர்ந்திருந்த சத்யா, ஒரு முடிவை எட்டியிருந்தான். அதன் பொருட்டு, “மீட் மீ அட் க்ரீன் லேண்ட் ஹோட்டல் பை 7 பிஎம்” என்று ராகா திரும்ப அழைத்துவிடும் முன்னர், அவள் எண்ணிற்குக் குறுஞ்செய்தி அனுப்பினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!