Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

ராகம் – 24.1

“பொறுப்பானவளா..?? நானா…??” என்று இத்தோடு நூறு முறைக்கு மேல் தன்னை தானே கேட்டு கொண்டிருந்திருப்பாள் யாழி..,

சத்தியமாக அவளாலேயே இதை நம்ப முடியவில்லை…

பின்னே அன்று தாயிடம் ‘திருமணம்’ என்றால் என்னவென்று கேட்டதற்கு அவர் கூட பொறுப்பு என்றாரே தவிர அதை பற்றிய விளக்கம் கொடுக்கவில்லையே அப்படி இருந்தும் அவள் எப்படி பொறுப்பாக இருக்க முடியும்…??



Advertisement

சொல்லபோனால் பொறுப்பு என்றால் என்னவென்று தெரிந்து கொள்ள அன்று அவள் அதியின் நினைப்பில் கூகுளாண்டவரையும் கேட்கவில்லை திருமணத்திற்கு பின் கேட்பதற்கு போனும் கையில்  இல்லை அப்படி இருந்தும் அவள் பொறுப்பானவளாக இருப்பதாக சாரு கூறினால் அதை எப்படி நம்புவது..??

யாழியால் சுத்தமாக ஏற்க முடியவில்லை.

‘எப்படி..?? எப்படி இது சாத்தியம்’ என்று பல நேரம் இதே சிந்தனையில் உழன்று கொண்டிருந்தவள் பார்வை கையில் இருந்த போனில் பட உடனே அதை திறந்திருந்தாள்.

Advertisement

அவளது பல அழைப்புகளுக்கு பதிலின்றி போகவும் கைபேசியை வைத்து விட்டு புத்தகத்தை எடுத்து கொண்டு படிக்க அமர்ந்தவள் இரவு உணவை முடித்து கொண்டு அதிர்துடியனுக்காக காத்திருக்க தொடங்கினாள்.

Advertisement

ஆம் இப்போது கைபேசியை யாழி திறந்ததே இது குறித்து அதிரிடம் கேட்டுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தானே தவிர கூகுளெல்லாம் அவள் நினைவில் இல்லவே இல்லை…

அரசியல் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் நாடாளுமன்ற, சட்டமன்ற செயல்பாடுகள் குறித்த செய்திகளை பார்க்க தொடங்கிய பின் இப்போதெல்லாம் அவனுடன் உரையாடும் நேரம் அதிகரித்திருப்பதில் பாடம் சம்பந்தமாக மட்டுமின்றி பொதுவாகவே அவளுக்கு எழும் சந்தேகங்களை தீர்த்து வைப்பதும் கணவனே என்றாகி போயிருந்தது.

ஆனால் இரவு அவர்கள் அறைக்குள் நுழைந்த  கணவனின் முகத்தில் இருந்த அயர்ச்சியை கண்டவளுக்கு அது நேரம் வரை  கொண்டிருந்த சந்தேகங்கள் யாவும் மறந்து போக சட்டென புத்தகத்தை வைத்து விட்டு அவனிடம் சென்றவள்,

Advertisement

‘என்னாச்சு..?? ஏன் இவ்ளோ டையார்ட்டா இருக்கீங்க..??’ என்றவாறு அவன் கையில் இருந்த கணினி பையை வாங்கி இருந்தாள்.

‘தலைவலி யாழி’ என்றவாறே அவன் தன் சட்டை பட்டன்களை  கழற்றிவிட்டு அப்படியே மெத்தையில் சரிந்திருந்தான்.

யாழியோ அறையில் ஓடிக்கொண்டு இருந்த ஏசியை அணைத்து விட்டு பேனை போட்டவள் உடனே கீழே ஓடி சென்று அடுத்த  ஐந்து நிமிடத்தில் அவனுக்கான காபியோடு வர இங்கு அதிர்துடியனோ சோர்விலும் தலைவலியிலும் படுத்தவுடனே உறங்கி போயிருந்தான்.

‘என்னங்க எந்திரிங்க…’ என்று அவனை எழுப்பி காபியை குடிக்க வைத்தாள்.

அவன் குடித்து முடித்து படுக்க போக, ‘ஒரு நிமிஷம் இருங்க’ என்று அவன் தலையை தன் மடியில் தாங்கி நெற்றியில் தைலம் பூசி  இதமாக பிடித்து விட்டவள்  ‘இப்போ தூங்குங்க’ என்று அறை விளக்கை அணைத்து விட்டு வெளியில் வந்து பாடங்களை தொடர்ந்திருந்தாள்.

அதே சமயம் அடுத்த இரண்டு மணி நேரத்தில் அதிர்துடியன் புன்னகை முகமாக வெளியில் வருவதை கண்டவள் ‘இப்போ ஓகேவா உங்களுக்கு..?? தலைவலி சரி ஆகிடுச்சா..?? இங்கயே சாப்பிடுறீங்களா..?? இல்ல கீழ வரீங்களா..??’ என்று அடுத்தடுத்து கேள்விகளை தொடுக்க,

“பீலிங் பெட்டர் !! நீ படி நான் போய் சாப்ட்டுக்குறேன்” என்றவன்  இன்னைக்கு டாப்பிக் டிவோர்ஸ் யாழி அதை பத்தி ப்ரிபேர் பண்ணு’ என்றவன் அடுத்த வாரம் தொழில்நுட்ப வளர்ச்சியும் அதன் சாதக பாதகங்கள் என்ற தலைப்பை கொடுத்திருந்தான், பின் பெருகி வரும் விபத்தின் காரணங்கள், அதை தொடர்ந்து கூட்டு குடும்பம் குறித்து என்று ஒவ்வொரு நாளும் புது புது பொது தலைப்புகள் கொடுத்து அது குறித்த தகவல்களை இணையத்தில் சேகரித்து அவளே அதை பற்றி  பேசும் வகையில் அவளை தயார் படுத்தி இருந்தான்.

பின்னே பல வருடங்களாக சிந்தித்து செயல்பட தெரியாமல் சிறு விஷயத்திற்கும் கைபேசியை எடுத்து கூகுளையும் யூடியூபையும் கேட்டு முடிவு செய்பவளுக்கு தனித்து இயங்குவது தன் அறிவை பயன்படுத்தி சூழலை கையாள்வது அடுத்த நிலைக்கு நகர்வது என்பது அத்தனை எளிதான காரியமல்ல…

அதே சமயம் சாரு கூறியது போல அவளது இலட்சியத்தையும் குடும்பத்தையும் போட்டு யாழி குழப்பி கொள்ளவே இல்லை இரண்டையும் அழகாக ஏற்று அதற்க்கான நேரத்தை ஒதுக்கி இருந்தாள்.

அதிர்துடியனும் இப்போதெல்லாம் தனக்காக யாழி செய்யும் எதற்கும் அவளை  மறுப்பதில்லை, என்ன ஒன்று அவனுக்காக விதவிதமாக சமைத்து அவளே பரிமாறி அவன் பாராட்டுக்காக அவன் முகம் பார்த்து நிர்ப்பவளை இழுத்தணைத்து முத்தாட துடிக்கும் மனதை கட்டுபடுத்த தான் அரும்பாடு பட்டுபோவான்.

மரகதமும் எந்நேரமும் படித்து கொண்டிருக்கும் பெண்ணின் சிறு ஆசைகளையும் மகனின் வார்த்தைக்காக தடுக்கவில்லை… பெரும்பாலும் காலை மற்றும்  இரவு உணவை அவரோ அல்லது சாருவோ ஏற்று கொண்டனர்.., மதியம் மட்டும் ஆருவும் யாழியும் சேர்ந்து சமைப்பர்.

இப்போதெல்லாம் பெரும்பாலும் அவளுக்கான நாட்களில் யாழியை லாங் டிரைவ் அழைத்து சென்று விடுவான், பயணத்தின் போது இருவரின் உரையாடலும் அன்றாட நாட்டு நடப்பை அலச தொடங்கி விடும்..

அதன் பின் யாழிக்கு எதை பகிரவும் அதிர்துடியன் வேண்டும்… எந்த சந்தேகமாக இருந்தாலும் முதலில் அவனுக்கு அழைத்து கேட்டுவிடுவாள்.., சந்தேகத்தை சாக்காக கொண்டு அவனுடனான நிமிடங்கள் இன்னுமே நீள்வதில் பெண்ணவளுக்கு பெரும் மகிழ்ச்சி. 

ஆனால் அடுத்த மூன்று மாதங்களில் புத்தகத்தை தாண்டி நடப்புகளை படிக்க படிக்க, செய்திகளை கேட்க சாதாரண அரிசி, கோதுமையில் தொடங்கி எங்கும் எதிலும் விரவி இருக்கும் உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை தன்னை சுற்றி நடப்பதை உற்று கவனிக்க தொடங்கியவளிடம் சிறுக சிறுக மாற்றம் தென்பட்டது.

***********************************************

முக்கியமாக இப்போது தொழிநுட்ப யுகத்தில் பெருகி வரும் குற்றங்கள் அவளை மாபெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னே பிறந்த குழந்தை தொடங்கி, வயதான பெண்மணி வரை பாலியல் கொடுமைக்கு உள்ளாவதும், கைபேசியால் ஏற்படும் நொடி நேர கவன சிதறலும் அதனால் ஏற்ப்படும் உயிர் இழப்புகளும், தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தி அதன் மூலம் ஒரு கும்பல் சத்தமின்றி சம்பாதிப்பதும் அதற்கு அப்பாவி  பெண்கள் பெருமளவில் பலியாகி போவதும்…

ஆன்லைன் மோசடிகளால் பெருகி பல ஆண்கள் ஏமாறுவதும், பெண்களை தங்கள் வலையில் வீழ்த்தி அவர்களை தடம் மாற செய்து குடும்பங்களை சிதைப்பது என்று பெருகி வரும் குற்றங்களை படிக்க, பார்க்க தொடங்கியவளுக்குள் பெரும் மாற்றம்.

அதிலும் காதல் என்ற பெயரில் திருமணத்திற்கு முன் அத்துமீறுதல் சரியே அதுவும் தனி மனித சுதந்திரமே என்று வரையறுக்கபடுவது, அங்கிகாரம் இன்றி வாழ்ந்து புதுமை படைத்தல் ட்ரென்ட்டாகி போயிருப்பது, திருமணத்திற்கு பின் கள்ள உறவுகள் அதனால் கொலை , தற்கொலை என்று குற்ற செயல்கள் அதிகரித்து வக்கிரங்கள் நிரம்பி வழிவதை எல்லாம் கண்டவளுக்கு  தாள முடியவில்லை..,

தன்னை சுற்றி இத்தனை கொடூரங்கள் நடந்து கொண்டிருக்க அவளோ இதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல ஷேர்சேட், ஸ்னேப்சேட், செல்பி லைக்ஸ் என்று வேறொரு பேண்டசி உலகில் மூழ்கி கிடந்ததை உணர்ந்து வெட்கி போனாள்.

சிறுமிகளுக்கு நடக்கும் பாலியல் கொடுமைகள், காதல் என்ற பெயரில் அறியா பெண்களை வசப்படுத்தி விற்ப்பது, அவர்களை கொண்டு வீடியோ தயாரித்தல், பெண்களை மையபடுத்தி எளிதாக சம்பாதிக்கும் இலக்கோடு இன்றைய இளைஞர் பட்டாளம் திசை மாறி போயிருப்பதை கண்டு நொறுங்கி போனாள்.

பின்னே அவர்கள் வீட்டில் தாயாக, தாரமாக, குழந்தையாக பெண்கள் இல்லையா..?? எப்படி இது போல செய்ய முடிகிறது..??

பொது வெளிகளில் குறைந்து வரும் பாதுகாப்பு, பட்டன் கேமரா, பேனா கேமரா, என்று புது புது வடிவங்களில் கேமராக்கள் எங்கெங்கோ பொருத்தப்பட்டு பெண்களே அறியாமல் அவர்களை  வியாபராமாக்கி கொண்டிருப்பதும், தொழில் நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் அடுத்தவரின் கைபேசியில் ஊடுருவுதல் அவர்களின் அந்தரங்கங்களை அவர்களுக்கே தெரியாமல் திருடுதல் என்று பெருகி வரும் குற்றங்களின் வடிவம் கணக்கில் கொள்ள முடியாத அளவு விஸ்வரூபம் எடுத்து நிற்ப்பதை கண்டு அதிர்ந்து போனாள்.

அனைத்திற்கும் மேலாக சர்வசாதரணமாக மளிகை கடையில் பொருள் வாங்குவது போல நீதிமன்றங்களை நாடி  விவாகரத்து வாங்கும் தம்பதிகள், சிதைந்து கொண்டிருக்கும் குடும்ப உறவுகள், தடம் மாறி செல்லும் பிள்ளைகள், அவர்களின் அங்கமாகவே மாறிப்போன கைபேசி அதனால் ஏற்ப்படும் பிரச்னைகள், அகக்காரணிகள் மட்டுமின்றி புறக்காரணிகள் போதை பழக்கம், அழுத்தங்கள், தற்கொலைகள், வலுவிழந்து வரும் சட்டங்கள், பெண்களின் பாதுகாப்பை சீர்குலைக்கும் வகையில் வழங்கப்படும்  தீர்ப்புகள் … அப்பப்பாஆஆஆஅ இன்னும் என்ன என்று  இருநாட்கள் ஊன் உறக்கம் கொள்ள முடியாத அளவு யாழியின் மனதை அத்தனையும் ஆட்கொண்டு பிசைய அவளுள் பெரும் போராட்டம்.

“என்ன நடக்கிறது நாட்டில்..?? ஏன் இந்த திடீர்  மாற்றம்..? எதனால் நாடு அழிவு பாதையை நோக்கி போய் கொண்டு இருக்கிறது” என்று கடந்த இருபது முப்பது வருட வரலாறை முதலில் படித்து பார்க்க தொடங்கினாள் முக்கியமாக கைபேசியின் அசுர வளர்ச்சிக்கு முன் இருந்த நாடும் மக்களும், அவர்கள் சிந்தனையும், வாழ்வியலும் எப்படி இருந்தது என்று படிக்க தொடங்கினாள்.

படித்து முடித்தவளுக்கு அத்தனை எளிதில் மீள முடியவில்லை பின்னே எப்படி தான் இத்தனை அறிவீனமாக, கபடமற்று, வெகுளியாக  இருந்து இருக்கிறோம்… நாட்டில் பாதுகாப்பின்மை அதிகரித்து எண்ணி பார்க்கவே முடியாத கொடூரங்கள் நாள்தோறும் ஆங்காங்கே அரங்கேறி, இத்தனை அக்கிரமங்கள் தலை விரித்தாடி கொண்டிருக்கும் நிலையில் என்ன செய்து கொண்டிருந்தாள் அவள்..? என்ற சுயவிசாரணை ( self interrogation ) பெண்ணவளிடம்..!! 

அதிலும் ஆன்லைன் குற்றங்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் அரங்கேறும் மோசடிகள், பெண்களின் அறிவை, ஆளுமையை, தலைமை பண்பை, திறனை, எல்லாம் புறம்  தள்ளி அவர்களின் அழகை பிரதானபடுத்தி அழகு சாதன பொருட்களின் விளம்பரங்கள் எங்கும் நிறைந்திருப்பதை கண்டவள் திகைத்து போனாள்.

பின்னே பெண்ணின் புறத்தோற்றத்தை அழகு படுத்துவது தான் பெண் முன்னேற்றம், அதுவே அவளின் நம்பிக்கையை அதிகரிக்கும் எனும் வகையில் பெருகி வரும் அழகு நிலையங்களும் அழகுகளை நிபுணர்களுமே சாட்சியாகி இருப்பதை கண்ட யாழிக்கு இப்போதுதான் அதன் பின்னணி பிடிபட்டது…,

பின்னே அவள் யூடியூப் சேனலில் பெரும்பாலும் அவள் அழகை வருணித்து அதை மேலும் அழகாக்கும் படி தானே கருத்துகள் வரும்.. அழகு என்றால் பெண் என்ற கருத்தை ஆழமாக பெண்கள் மனதில் விதைத்து கருணை, பாசம், பொறுப்பு, அன்பு, நிதானம், பொறுமை  போன்றவற்றை அவர்களிடம் இருந்து சத்தமே இல்லாமல் திருடி செல்கிறதே இந்த சமூக வலைதளமும் ஊடகமும்.

அவர்கள் அழகை புகழ்ந்து பெண்களுக்கு விரிக்கப்படும் வலை அவர்களே அறியாமல் அவர்களை ஒருவிதமான மாயசுழலில் சிக்க வைப்பது, இது தான் நிஜம் என்று நம்பவைப்பது.., அதன் மூலம் அவர்களின் புகைப்படங்களை பகிர வைப்பது.

அங்கே பகிரப்படும் புகைப்படங்கள் கொண்டு அவர்களை நோக்கிய மீடியா வெளிச்சம், அதில் கவரப்பட்டு விட்டில் பூச்சிகளாக வீழும் பெண்கள், ரீல்ஸ், ஷார்ட்ஸ், ட்ரென்ட்டிங் என்று யாரோ ஒரு முட்டாள் தொடங்கி வைத்ததை கொண்டு சரியா தவறா என்று கூட சிந்திக்காமல் அந்தரங்கங்கத்தை  அம்பலமாக்கும் பெண்கள் என்று தனிமனித ஒழுக்கமின்றி, கட்டுபாடுகள் இன்றி குப்பையாகி கொண்டிருக்கும் மனித மனங்களை கண்டு வெதும்பி போனாள். 

அதே சமயம் இத்தனை தூரம் இல்லையென்றாலும் தானுமே ஒரு காலம் வரையில் இந்த மந்தைகளுக்கிடையில் தானே இருந்தோம் என்று அவளுக்கு தோன்றாமல்  இல்லை.., ஒருவேளை  இப்படியே முட்டாள் தனமாக தொடர்ந்திருந்தால் தன் வாழ்வு என்னவாகி இருக்கும்..?? என்ற அச்சம் அவளை ஆட்டி படைத்தது.., 

*************************************

நாட்கள் கடக்க இப்போதெல்லாம் யாழியின் பெரும்பான்மையான நேரத்தை படிப்பே விழுங்கி இருந்தது… யாழியின் சமூக பார்வை அதிகரித்து குடும்பத்தின் மீதான அவள் எண்ணம் மாறியதோடு அல்லாமல் அவளின் பேச்சு, செயல், சிந்தனை என்று அத்தனையிலும் பெரும் முதிர்ச்சி காணப்பட்டது. 

முக்கியமாக குறைந்து வரும் உறவுகளின் மேன்மை, வளர்ந்து வரும் நவநாகரீக யுகத்தில் பெருகி வரும் தனிகுடித்தனங்கள் அதனால் தம்பதியரும் குழந்தைகளும் சந்திக்கும் அழுத்தங்கள்  அதை விட இப்போது குடும்பமாக இல்லாமல் சேர்ந்து வாழுதல் அதிகரித்து இருப்பது எல்லாம் அவள் ஆதங்கத்தை அதிகரிக்க  செய்தது.

பின்னே குடும்பத்தை கொண்டே சமூகம் கட்டமைக்கபடும் போது இங்கு நாகரீக வளர்ச்சி, பெண் விடுதலை, புதுமை என்ற பெயரில்  குடும்பங்களே இனி இல்லாமல் போகும் என்ற நிலை என்றால் அது அதிர்ச்சிகரமானது தானே..!!!

இவை அனைத்திற்கும் மேலாக முக்கியமாக இத்தனை நாட்கள் அவள் கொண்டிருந்த பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம் குறித்த அவள் பார்வை சுக்குநூறாக உடைந்து சிதறி போயிருந்தது.

அவன் எதிர்பார்த்த மாற்றங்கள் இப்போது யாழியிடம் தென்படுவதை அதிர்துடியனும் தவறாமல் கவனித்து கொண்டு தான் வந்தான்.

அதனாலேயே சில நாட்கள் அவள் உறக்கமின்றி, உணவின்றி, அமரும் போதெல்லாம் ஏதாவது ஒரு வகையில் அவளை திசை திருப்பி மீண்டும் படிப்புக்குள் கொண்டு வந்திருந்தான். இப்போதெல்லாம் அதிர்துடியனுக்கு பிடித்ததை செய்வதை விட அவனுக்கு பிடிக்காததை செய்ய கூடாது என்ற புரிதல் அவளிடம்.

அடுத்து வந்த மாதத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக இத்தலைப்புகளிலேயே உழன்று கொண்டிருந்தவளிடம்  இறுதியாக ஆந்த்ரோபாலஜி (மானிடவியல்) குறித்து படிக்க சொல்லி இருந்தான் அதிர்துடியன், மேலும் சில வாரம் அது குறித்து ஆராய்ந்து ஆராதனாவுடன் விவாதித்து ஷூட் முடித்தவள் அன்று அதிர்துடியனிடம் சென்று நின்றாள்.

‘என்ன..??’ என்பதாக அவன் முகம் நிமிர்த்தி பார்க்க,

‘சாரி’ என்றாள் மெல்லிய குரலில் ,

‘எதுக்கு..??’

‘உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்’ என்றவளுக்கோ மனமெங்கும் சொல்லில் வடிக்கவியலா ரணம்  ஆனால் அதையும் மீறிய திடத்துடன் அவன் முன் நின்றிருந்தாள்.

ஏனெனில் தன் தவறை உணர்ந்த மகிழ்வு இனி இது போல செய்யபோவதில்லை என்பதால் உண்டான நிமிர்வு.., 

அவள் முகம் பார்த்திருந்தவனின் முன் அமர்ந்தவள்,

“அன்று தான் கொண்டிருந்த முட்டாள்தனமான சிந்தனைகளால் அவனுடனான திருமணத்தை மறுத்ததில் தொடங்கி அனைத்தையும்  எடுத்து கூறியவள் இப்போது தான் அவள் எத்தனை முட்டாளாக மிகவும் மோசமான உதாரணமாக இருந்திருக்கிறாள்” என்பதை கூற அதிரின்  புருவங்கள் ஆச்சர்யத்துடன் மேலேறியது..,

பின்னே செய்த தவறை ஒப்புக்கொள்ளவும் எத்தனை அசாத்திய தைரியம் வேண்டும்..!! 

“அது… அது மட்டும் இல்லை கல்யாணத்துக்கு முன்னாடி  நா… நான் அப்பா கிட்ட உங்க கூட லிவிங் ரிலேஷன்ஷிப்ல இருப்பேன்னு சொன்னேன்” என்றதும் அதிர்துடியனின் பார்வை கூர்மை பெற அதில் யாழி நெஞ்சில் படபடப்பு கூடியது வியர்த்த கரங்களை கோர்த்துக்கொண்டு தொடர்ந்தவள்,

‘சாரி சாரி சாரி ப்ளீஸ் சாரி’ என்று அவன் கரங்களை பிடித்து கொண்டாள்.

‘உங்களுக்கு இது எல்லாம் பிடிக்காதுன்னு எனக்கு தெரியும் ஆனா நீங்க, எனக்கு.., உங்களை ரொம்ப ..’, என்றவளுக்கு வார்த்தை சதி செய்ய தடுமாறியவள்,

‘அச்சோ ப்ளீஸ் நிஜமாவே அதோட அர்த்தம் தெரியாம மேம்போக்கா பேசிட்டேன் ஆனா அது எவ்ளோ பெரிய அபத்தம்ன்னு இப்ப தான் புரியுது.. ‘

‘அப்படியா ஏன்..??’

‘உங்களுக்கு நான் அப்படி சொன்னதுல கோபம் இல்லையா…??’ என்று அவள் எதிர் கேள்வி கேட்க,

‘கோபமா..??’ என்று அவளை பார்த்தவனுக்கு இப்போதும் மகேஷ் அதை கூறியபோது ஏற்பட்ட கட்டுக்கடங்கா சினம் தலை  தூக்கிட முயன்று தன்னை கட்டுபடுத்தி அவளை பார்த்தவன், 

‘முதல்ல ஏன் அப்படி சொன்ன சொல்லு..??’ என்று அவன் கேட்கவும் அவளும் அன்றைய தன் மனநிலையை எடுத்து கூற,

‘சோ நான் உன்னை கட்டுபடுத்த கூடாது ஆனா நான் வேணும் அதனால தான் அந்த முடிவு அப்படி தானே..’

‘சாரி நீங்க எப்பவும் அப்படி பண்ண  மாட்டீங்க அது உங்களை புரிஞ்சிக்காத என்னோட அறிவீனம்…’

‘அப்படியா எதுவும் பண்ண மாட்டேன்ன்னு எப்படி இவ்ளோ நம்பிக்கையா சொல்ற..??’

‘எனக்கும் இப்போ உங்களை கொஞ்சம் புரியுது அந்த புரிதல் கொடுத்த நம்பிக்கை…’ என்றாள் பெண்…

ஆம் இத்தனை மாதங்களில் அவளை வருடி செல்லும் அவன் பார்வை, ‘சாப்ட்டியா..?? படிச்சு முடிச்சிட்டியா..?? இப்போ ஸ்டமக் பெயின் பரவாலையா..??’ என்று தொடங்கி வேலைக்கு நடுவில் அவளுக்கு அழைத்து ஒலிக்கும் அவன் குரல் கொள்ளை காதலை அவளுக்கு கடத்தி விடுகிறதே..!!

மெய் காதலின் அர்த்தத்தையும் அவளை உணர வைத்திருந்தான் நம் நாயகன்.

“வாவ் !! சரி இப்போ சொல்லு அப்படி என்ன அபத்தம் லிவிங் ரிலேஷன்ஷிப்ல”

“இது மேற்கத்திய கலச்சாரமா இருந்து இப்போ கொஞ்சம் கொஞ்சமா நம்ம நாட்டுக்குள ஊடுருவி இப்போ பெரும்பாலானவர்கள் மனதில் இது தான் சரி என்ற நிலையை உருவாக்கிடுச்சி…, இதனால குடும்ப அமைப்பு சிதறி போறது மட்டும் இல்லாம மொத்தமா சமூக கட்டமைப்பையே சீர்குலைக்குது…  முக்கியமா அதில் இருக்க கூடிய பெண்களின் உயிருக்கோ மானத்திற்க்கோ பாதுகாப்பு கிடையாது..,  அதிலும் பெற்றவர்களை எதிர்த்தோ இல்லை அவங்களுக்கு தெரியாமயோ அங்கீகாரமற்ற உறவில் நுழையும் பலர் வாழ்க்கை ரொம்ப சீக்கிரமே அஸ்த்தமிச்சு போயிடுது..”, 

‘ஏன் திருமணம் இல்லாத வாழ்வு அதிகரிக்குது யாழி..??’

இங்க யாருமே பொறுப்பு எடுக்க தயாரா இல்லைங்க, அதுல ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லை ரெண்டு பேருமே அப்படி தான் இருக்காங்க பெண்கள் மட்டுமில்லை ஆண்களுக்கும் தங்களோட பொறுப்புகளை சொல்லி வளர்க்க வேண்டும்”

“அது மட்டும் இல்லை இங்கு யாரும் விட்டு கொடுத்து வாழ தயாராக இல்லை.. நான், எனக்கு, என்னுடையது என்ற எண்ணமே பிரதானபடுத்தபடுது.., அதான் கூட்டு குடும்பம் மட்டும் இல்ல திருமணம் என்ற கட்டமைப்பும் சிதறிட்டு வருது இது ஆரோக்கியமானது இல்லை நிச்சயம் இதில் சாதகத்தை விட பாதகமே அதிகம் பல ஆண்கள் தங்கள் தேவைக்காக பெண்களை இது தான் புதுமை, இது தான் நாகரீக வளர்ச்சி, இது தான் சுதந்திரம் என்ற பெயரில் மூளை சலவை செய்து விழ வைக்குறாங்க..”

‘வாவ் !! வெரி குட் !! சரி இதுக்கு என்ன காரணம்ன்னு நினைக்கிற..??’

“டெக்னாலஜி ..!! எல்லாமே இப்போ கைகளுக்குள் அடக்கம் என்ற நிலையாகிய பின் நல்லது எந்த அளவு பாமர மக்களுக்கு போய் சேருதோ அதை விட சீக்கிரமாவே கெட்டது போய் சேர்ந்துடுது..  அதோட திரைப்படங்கள், சமூக வலைதளங்களின் ஆதிக்கமும் அதுக்கு ஒரு காரணம் நல்லதை விதைக்க முடியாட்டியும் காலமாற்றம் சொல்லி நஞ்சை தூவி மக்கள் மனதை கெடுக்க வேண்டாம்”.

“அடுத்து மீடியா ரொம்பவே பவர்புல் மீடியம் ஆனா அதோட பொறுப்பை உணராம டிஆர்பிக்காக விளம்பரத்துக்காக தார்மீக பொறுப்பை உணராமல் இஷ்டத்துக்கு இயங்குது…, இது புரியாத சிலர் அந்த புகழ் வெளிச்சத்துக்கு ஆசைப்பட்டு…” என்றவளுக்கு அதற்கு மேல் தொடர முடியவில்லை,

‘வெல் .. அப்புறம்..’

‘ப்ளீஸ் திரும்ப அந்த டாப்பிக் கேட்காதீங்க எனக்கு.., என்னால இன்னுமே எதையும் டைஜஸ்ட் பண்ண முடியலை ஆனா எனக்கு நீங்க இன்னும்…’ என்று ஒருகணம் தயங்கியவள் பின் குரலை செருமி, 

‘ப்ளீஸ் சொல்லுங்க இப்படி சொன்னதால உங்களுக்கு என் மேல கோபம் இல்லையா..??’ என்றாள் பெரும் தவிப்புடன்.

‘அதான் உனக்கு என்னை புரியுமே நீயே பதிலை கண்டுபிடி’ என்று கிளம்பிவிட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!