Skip to content
Post Views: 5,833
மனதிலோர் மோகன ராகம்
அத்தியாயம் 6
Advertisement
நடாஷாவும் ராகாவும் பயந்தது போலத் தான் சம்பவங்கள் நடந்தேறின. ஏ1 ஈவெண்ட்ஸ் சென்ற எவரையுமே அவர்கள் சமானியத்தில் விட்டுவிட மாட்டார்களென்பது இவர்கள் அறிந்த விஷயம்.
அதன் படிக்கே, அடுத்த தினம் மாலை நடாஷாவிற்கு அழைத்திருந்த சத்யா, “சாரி மேம் வி ஆர் சூசிங் ஏ1 ஈவெண்ட்ஸ்” என்று மட்டுமாக சொல்லியிருந்தான்.
Advertisement
Advertisement
“என்ன காரணம்னு சொல்லலியா?” என்று வினவிய குழுவிடம் சொல்வதற்கு நடாஷாவிற்கு எந்தப் பதிலும் இல்லை. “அதெல்லாம் சொல்லணும்னு அவங்களுக்கு அவசியமா என்ன? இந்த மட்டில உங்களை சூஸ் பண்ணலைன்னு கால் பண்ணி சொன்னதே பெரிய விஷயம் தான்” என்று சலித்துக் கொண்ட மைக்கிலின் கூற்று மிகவும் உண்மை.
“இன்னும் கொஞ்சம் எஃபர்ட் போட்டிருக்கணுமோ? பிரசண்டேஷன் டைம் கொஞ்சம் ஜாஸ்தி பண்ணியிருக்கலாம் “என்று நடாஷாவும் குழுவும் வாய்ப்பு நழுவிப் போன தவிப்பில் புலம்பிக் கொண்டனர்.
Advertisement
“மிருதுளா மேடமுக்கு நம்ம டீம் ரொம்ப பிடிச்சிருக்கு. அவங்க ஃபுல்லி இம்பிரஸ்ட் தான். இந்த மாப்பிள்ளை மிஸ்டர். சத்யாவுக்குத் தான் அவளோ பிடித்தமில்ல”
“பேசாம, கல்யாணப் பொண்ணுகளை மட்டும் அடுத்த தடவை இண்வைட் பண்ணி பிரசண்டேஷனை முடிச்சுக்கணும். கபில்ஸ் இண்வைட் பண்ணா இவனுக அந்த பொண்ணுகளையும் சேர்த்தி குழப்பிடறானுக” என்று தன் ஆற்றாமையை வெளியிட்டாள் வனிஷா.
“நல்லா தானே போச்சு எல்லாமே! அப்பறம் ஏன் அவன் திடீர்னு முருங்கை மரம் ஏறினான்?” என்று ராகா தன் நண்பர்களிடம் புலம்பினாலும், என்னவோ மனதின் உள்ளூர “உன்னால் தான்! உன்னைச் சந்திக்க விருப்பமில்லாமல் தான் அவன் ஷ்ருஷ்டீஸைத் தேர்ந்தெடுக்கவில்லை.” என்று தோன்றிக் கொண்டே இருந்தது.
“எனக்கு அவனை முன்ன பின்னே யார்னு கூடத் தெரியாது. அவனுக்கும் எனக்கு என்ன முன்ஜென்மத்து பகையோ! இப்போ சரியான நேரத்தில பழிவாங்கிட்டான். ஆனா, போறப்போ வரப்போவும் ஆளையே விழுங்கற மாதிரி நல்லா நல்லா லுக்கு விட்டான்!
‘
“பேசாம, அந்த பொண்ணு மிருதுளாவுக்கு கால் பண்ணி, உன் மாப்பிளை சரியான பொம்பாளை பொறுக்கி, லோஃபர், பொண்ணைப் பார்த்தா நாக்கை தொங்க போட்டுட்டு அலைவான்னு போட்டு குடுத்து இந்த கல்யாணத்தைக் கெடுத்துட்டா என்ன?” என்று தகிடு தத்தமாக அவளது மூளை வேலை பார்க்கத் துவங்கவும்,
“சே! தப்பு! நம்ம கம்பெனிய சூஸ் பண்ணலைங்கறதுக்காக, அந்த பொண்ணோட கல்யாணத்துக்கு வேட்டு வைக்க பார்க்கிறது நியாயமே இல்லைடீ” என்று அசரீரியாக மாறி அறிவுரை வழங்கியிருந்தான் மைக்கில்.
“எப்ப்ட்ராஆஆஆ” என்று வியப்புடன் ராகா வாய்பிளக்க,
“பின்ன, உன் ஈவில் விட்ச் சிரிப்பு ஒண்ணு போதுமே! நீ நினைக்கறதை காட்டிக் குடுக்க! அப்பா சாமி! சீரியல் வில்லிய விட மோசம் மேன் நீ! அவிங்களாவது “ஏய்ய், ஆய் ஊய்ய்”ந்னு பக்கம் பக்கமா டயலாக் பேசிட்டு கப்புசிப்புன்னு அடுத்த ப்ளான் போட ஆரம்பிச்சிருவாங்க. ஆனா. நீ உன் ப்ளானை எக்ஸ்சிக்யூட் பண்ணாம விட மாட்டியே! ஈவில் விட்ச்” என்று சிரிப்பு மாறாமல் கூறினான் மைக்கில்.
“அவளோ அப்பட்டமாவா தெரியுது? இன்னும் பயிற்சி வேணுமோ அப்போ! சே! இந்த மனசு நினைக்கறதை இந்த முகம் காட்டிக் குடுக்காம இருக்க எதாச்சும் கோசிங் க்ளாஸ் போணுமப்பா! கடைசிக்கு இந்த சைக்கோ சிரிப்பை கண்ட்ரோல் பண்ணவாச்சும் ஆன்லைன் க்ளாஸ் போகணும்” என நினைத்துக் கொண்டாள்.
அன்றைய தினம் இரவு தன் படுக்கையில் விழும் போதும் கூட இதே எண்ணம் தான். “என்னால எதாவது டிஸ்டர்பென்ஸ் ஆகிரும்னு நினைச்சிருப்பானோ? சே! நாம என்ன அவளோ பெரிய வில்லியா? இல்லையே, சின்ன லெவல், மினியேச்சர் வில்லி தானே நானு? ஏன் இவன் வேண்டாம்னு சொல்லியிருப்பான்? கண்டிப்பா அவன் வேண்டாம்னு சொன்னதுக்கு ஒன் ஆஃப் த ரீசன் நானா தான் இருப்பேன்னு எனக்கு தோணுது” என்று நினைத்துக் கொண்ட தான் உறங்கிப் போனாள்.
அதே நேரம், சத்யா தன் வருங்கால மனைவி மிருதுளாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் தான் ஈடுபட்டிருந்தான். “ஷ்ருஷ்டீஸை” வேண்டாம் என்று சொல்லிவிட்டு, ஏ1 ஈவெண்ட்ஸ்ஸுக்கு சம்மதம் சொல்லியது மிருதுளாவிற்குக் கொஞ்சமும் பிடித்தமில்லை.
தீப்தி சொல்லியதன் விளைவாகவும், அவர்களது இன்ஸ்டா பேஜ்ஜில் பதிவேற்றப்பட்டிருந்த பல திருமண நிகழ்வுகளின் நேர்த்தியும், அதைவிடவும் அவளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து, நடந்து கொண்ட ஷ்ருஷ்டீஸின் நடாஷா மற்றும் ராகாவின் மீது ஏற்பட்டிடுந்த நன்மதிப்பு ஏனோ ஏ1 ஈவெண்ட்ஸின் அனிதா மீதும், அவள் அசிஸ்டெண்ட் அஜு என்று அழைக்கப்பட்ட அஜந்தா மீதும் ஏற்படவில்லை.
“நடாஷாவும் அவங்க டீமும் ரொம்ப மெனக்கெட்டு என்னோட ஐடியாஸ், விருப்பம், ஆசை, கனவுன்னு ஒவ்வொண்ணா கேட்டு கேட்டு தெரிஞ்சுகிட்டாங்க சத்யா! ஆனா இவங்க ஒரு கொஸ்டீன் கூட என்னைக் கேட்கலை. சீ சைட் டெஸ்டினேஷன் வெடிங்னு சொன்னதும், அவங்க ப்ரீ ப்ளாண்டா வச்சிருக்க நாலஞ்சு டெஸ்டினேஷன்ஸ் சொல்லறாங்க. எனக்கு என்ன விருப்பம்னு கேட்கக் கூட இல்லை.” என்று அங்கலாய்ப்பாகக் கூறினாள் மிருதுளா.
மிருதுளாவின் ஆதங்கம் சத்யாவிற்குப் புரியாமல் இல்லை. அவள் சொல்ல வரும் கருத்தை அவனும் அமோதித்தான் தான். அனிதாவின் “ஏ1 ஈவெண்ட்ஸ்” மிகவும் இயந்திரத் தனமாகவே அவனுக்கும் தோன்றியது. இவர்களைப் போலவே திருமணத்தின் பொருட்டு விசாரிக்க வந்திருந்த மற்ற ஐந்தாறு தம்பதியருக்கும் சேர்த்து ஒன்று சேர்ந்தாற் போலத் தான் பிரசண்டேஷனே நடைபெற்றது. அதுவுமே அவனுக்கு பிடித்தமில்லை தான்.
“ஒவ்வொரு தம்பதிக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் கனவுகள் இருக்கும். எல்லாத்தையும் ஒண்ணு போல உட்கார வச்சு எல்லாருக்கும் ஒரே மாதிரி பிரசண்டேஷன் வச்சா எப்படி சரியாகும்?” என்று சத்யாவிற்கும் நெருடல் தான். ஆனால் தன் மனதின் எண்ணத்தை முழுவதுமாகப் பகிர்ந்து கொள்ளவில்லை.
“அந்த பொண்ணு என்ன இந்த பார்வை பார்க்கறா? அப்படியே ஆளையே முழிங்கிடும் போல. என்ன கண்ணு அது! கண்ணறாவிக் கண்ணு! என்னைப் பாரு, என்னைப் பாருன்னு ஒரு கண்ணு சொல்லிட்டேவா இருக்கும்? ஆனா அந்த பொண்ணு கண்ணு என்கிட்ட அதைத் தானே சொல்லுது! அந்த பிரசண்டேஷன் பண்ணற வரைக்கும் கூட எனக்கு “ஸ்ரிஷ்டீஸை” சூஸ் பண்ணலாம்னு தான் எண்ணமிருந்துச்சு”
“சின்ன சின்ன விஷயத்தையும் ரொம்ப மெனக்கெட்டு யோசிச்சு, ஒவ்வொரு டீடெயிலிங்கும் பண்ணாங்க. மணமக்களோட விருப்பத்தைக் கேட்டு செய்யக் கூடியவங்கன்னு அவங்க கவனிப்புலையே தெரியுது. ஆனா” என்று தன் எண்ணவோட்டத்தை சில நொடி நிறுத்திய சத்யா, கண்களை இறுக்க மூடி, அன்றைய தினத்தை மனதினுள் ஓடவிட்டான்.
மிருதுளா வரும் வரையிலும் அந்தப் பெண்ணை அவன் கொஞ்சம் போல சைட் அடித்துக் கொண்டிருந்தது என்னவோ நிஜம். அதுவும் அவன் பார்ப்பது அவளுக்கும் தெரிந்திருந்தது போலத் தான் தோன்றியது. ஏனென்றால் அங்கே இங்கே என இவன் அமர்ந்திருந்த அறையின் வழியாகவே நடமாடினாள்.
அதுவும் இவனைக் கடக்கும் போது மறக்காமல் சிரித்து விட்டும் போனாள். ஆனால் இதெல்லாம் ஏதோ சின்ன சில்மிஷத்தனமான கிறுக்கு என்று மட்டிலுமாக அவன் எண்ணியிருக்க, அந்த பிரசண்டேஷனின் போது அவள் கண்களையும் அவள் பேச்சையும் அவள் முகத்தையும் மட்டுமே முழுவதுமாகப் பார்க்க நேர்ந்த சொற்ப நொடிகளிலேயே அவன் நிலைகுலைந்து போனான்.
அளவுக்கு அதிகமாக எந்த ஒரு ஒப்பனையும் இல்லாத அவள் முகமும் அவன் மனதில் வாஸ்தவத்தில் படிந்து போனது. நரம்பெல்லாம் ஊடுரவிப் அவள் முகம், ஒவ்வொரு அணுவிலும் கலந்து விட்டாற் போலொரு மாயை உண்டானது.
கழுத்தில் ஊசலாடிய அந்த ஒற்றை கல் வைரத்திற்குப் இணையாக ஜொலித்த அவள் கண்களை விட்டு அவனால் பார்வையை விலக்க முடியவில்லை. கண் வழியாக அவனைச் சிறையெடுத்து, மீள முடியாத ஆழத்திற்கு இழுத்துச் செல்லும் மாயக்காரியாய் மாறிவிட்டிருந்தாள் ராகா. அவனை அவள் ஏறெடுத்துப் பார்க்கும் சிற்சில நொடிகளைக் கூடத் தாக்குப் பிடிக்க இயலாத பலவீனமானவனாகத் தன்னை அவன் உணர்ந்த நொடி அது தான்.
சத்யாவின் கண்கள் அவள் முகம், புருவம், நாசி, உதடு என்று மனத்திரையில் சிறிது சிறிதாகப் பதிவு செய்தபடிக்கு ஊர்ந்து வந்து அவள் வைர டாலரில் தொக்கி நின்றது. கீழே பார்வையைச் செலுத்து என்று முழு மனமும் ஊந்தித் தள்ள, சரியாக அந்த நேரம் அருகே அமர்த்திருந்த மிருதுவின் கால்கள் எதார்த்தமாக அவன் மீது இடிக்க, அந்த தொடு உணர்ச்சியால் சட்டென சுய நினைவு பெற்றவன் ஆனான்.
மிருதுளா இவனது அவஸ்தையை உணர்ந்தெல்லாம் இவன் காலை இடிக்கவில்லை. எதார்த்தமாகவே அவள் கால்கள் அவனைத் தொட்டன. அந்த உணர்வு கூட இன்றி,அவள் இன்னமும் ராகாவின் பேச்சிலேயே முழு கவனத்தையும் பதித்திருந்தாள்.
கதிகலங்கிப் போனது போல ஆகிவிட்டது சத்யாவிற்கு. “சே! கொஞ்சம் சும்மா சைட் அடிக்கறது ஒ.கே!அவ டிரஸ், பேசறது, சிரிக்கறதுன்னு கொஞ்சம் பார்த்தமா ரசிச்சமான்னு இல்லாம, இதென்ன இன்ச் பை இன்ச் ரசிச்சுட்டே போற! அதுவும் உன் கல்யாணத்துக்காக ஈவெண்ட் புக் பண்ண வந்த இடத்தில என்ன வேலை பார்த்துட்டு இருக்க நீ?”
“நல்ல வேளை வைர டாலரோட நிறுத்திகிட்ட, இன்னமும் கீழ யோசிக்கலை அதுவே பெருசு போ!” என்று உச்சு கொட்டிக் கொண்டவன், “போடா போடா! நீ கொஞ்சம் நல்லவன் தான்டா!” அதன் தன்னைத் தானே பாராட்டுக் கொண்டவன், அதன் பின்னர், மறந்தும் கூட அவள் முகத்தை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
திரையின் பின்னால் தெரிந்த அவளது நிழல் உருவம் கூட அவனைப் பாடாய்ப்படுத்தியது. மற்றவர் பார்வைக்கு கலைந்திருந்த முடிக்கற்றைகள் நிழல் உருவத்தில் பேய் தனமாகக் காணப்பட்டிருக்கலாம். “ப்ப்ப்ப்ப்பே” போன்று அசிங்கமாகவோ , “பேஏஏஏஏஏஏஏஏஏஏய்” போன்று கொடூரமாகவோ கூடத் தோன்றியிருக்கலாம். ஆனால் சத்யாவிற்கு அந்த கலைந்திருந்த கற்றை கூந்தல் கூட, அழகாய், ஓவியமாய், ஆர்வமூட்டுவதாய் தோன்றிவிட்ட பின்பு தான் தடுமாறிப் போன சத்யா, அவள் நிழலுருவத்தைக் கூடக் காணக் கூடாது இனி என்று முடிவெடுத்தான்.
அதன் பின்னர் ராகாவின் தோள்பட்டையில் மட்டுமே கண்களைப் பதித்தான். அது கூட அவள் பிரசண்டேஷனை முடிக்கும் வரைக்கும் தான். வேறெங்காவது பார்த்துக் கொண்டிருந்து, அதை மிருதுளா கவனித்து கேள்வி கேட்கும்படிக்கு ஆகிவிடக் கூடாது என்ற எண்ணதினாலேயே மனதை கணினி திரையின் மீது பதித்தான்.
பிரசண்டேஷனின் போதும் அவனுக்கு வெகுவான நெருடல் தான். ஏனென்றால் கணினி திரையில் காட்டப்பட்ட படங்கள் யாவுமே கண்ணையும் மனதையும் கவரும்படிக்கு இருந்தது. “ஐய்யயோ! இதென்ன இப்படி இம்பிரசிவ்வா பிரசண்ட் பண்ணா, இந்த மிருதுளா உடனே இவங்களை புக் பண்ணனும்னு அடம்பிடிப்பாளே!” என்ற கவலை வேறு பிடித்துக் கொண்டது.
“அடங்கொப்பா, பத்து நிமிஷ பிரசண்டேஷன்லையே இந்த பாடு படுத்துது. இதில இவளை வேலைக்கு வச்சுகிட்டு நான் எப்படி நிம்மதியா கல்யாணம் பண்ணிக்கறது? ஈவெண்ட் மேனேஜ் பண்ணறோங்கற பேர்ல இவ குறுக்கா மறுக்கா ஓடிட்டே இருப்பா. இவளை தப்பா ஒரு பார்வை கூட பார்க்காம இருக்கணும். அதை விடவும் அப்படி கிப்படி லேசா பார்த்தாலும் அதை மத்தவங்க கவனிச்சு தொலைச்சா பெரிய வம்பாப் போயிரும்.இவகிட்ட இருந்து தள்ளி இருக்கறது தான் நல்லது” என்ற எண்ணம் பிரதானமாகத் தோன்றியிருக்க, எப்படியாவது இந்த ஆடரை “ஷ்ருஷ்டீஸ்”க்குக் குடுக்கக் கூடாது என்று அந்த நொடியே முடிவெடுத்தான்.
அவன் எதிர்பார்த்தது போலவே “ஷ்ருஷ்டீஸின்” வாய் ஜாலத்தில் மயங்கிப் போன மிருதுளா, விட்டிருந்தால் உடனே அவர்களை ஒப்பந்தப்படுத்தியிருப்பாள். நல்லவேளை அதை உள்ளே புகுந்து தடுத்துவிட்டிருந்தான் சத்யா.
அடுத்த தினம் ஏ1 ஈவெண்ட்ஸ் சென்ற போது, அவர்களது கவனிப்பு தனித்துவம் வாய்ந்ததாகத் தோன்றாவிடினும், அதை இதைக் கூறி மிருதுளாவை சரிகட்டியிருந்தான்.
“பாரு மிருது! நம்ம கல்யாணம் கொஞ்சம் பெரிய க்ராண்ட் ஈவெண்ட் மட்டுமில்ல, நம்ம லைஃப்ல ரொம்ப ரொம்ப முக்கியமான ஈவெண்ட். நான் அதை அப்படித்தான் பார்க்கறேன். அதை புதுசா ஒரு கம்பெனிகிட்ட குடுத்து ரிஸ்க் எடுக்கணுமா?”
“ஷ்ருஷ்டீஸ் ஒண்ணும் சின்ன கம்பெனி இல்ல. அவங்களுக்கு இது மாதிரி நிறைய மாரேஜ் வெண்ட்ஸ் பண்ண எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு” என்று சற்றே எரிச்சலுடன், மிருதுளா நடாஷாவின் ஷ்ருஷ்டீஸிற்கு ஆதரவாகவே சத்யாவுடன் வாதிட்டாள்.
ஆனால் சத்யாவும் விடுவதாய் இல்லை. “நம்ம லைஃபோட பிக் ஈவெண்ட். இதுல ரிஸ்க் எடுக்க எனக்கு மனசு வரலை. உனக்குத் தேவை ஒரு சீ ஷோர் டெஸ்டினேஷன் வெட்டிங். அதை யார் பண்ணா என்ன? இன்ஃபாக்ட் இந்த டெஸ்டினேஷன் வெடிங் காண்செப்ட்லான் எனக்கோ என் ஃபேமலிக்கோ கொஞ்சமும் இஷ்டம் இல்ல. எல்லாருமே உன்னோட ஆசைக்காகத் தான் அட்ஜஸ்ட் பண்ணிக்கறோம். என் ஃபேமில எல்லாருமே கல்யாணத்தை பெங்களூர்ல நடத்த தான் நினைக்கறாங்க. அவங்களை உனக்காகவும், உன்னோட ஆசைக்காகவும் எவளோ கன்வின்ஸ் பண்ணியிருக்கேன் தெரியுமா? ஆனா நீ சின்ன விஷயம் கூட எனக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்க மாட்டியா மிருது?” என்று எமோஷனலாகத் தாக்கியிருந்தான்.
அவன் எதிர்பார்த்தபடியே மிருதுளா இந்த முறை தாழைந்து போனாள். சத்யா நிறைய அவளுக்காக விட்டுக் கொடுக்கிறான் என்பது அவளுக்கும் தெரியும் தான். ஏன் அவள் வீட்டாருக்குமே இந்த டெஸ்டினேஷன் வெட்டிங்கில் உடன்பாடில்லை. சத்யாவை முன் வைத்து தான் எல்லாமுமே அவள் நடைமுறைப்படுத்துவது. அதனால் அவனை முற்றிலுமாக எதிர்த்துக் கொண்டு ஷ்ருஷ்டீஸைத் தேர்ந்தெடுக்க அவள் முனையவில்லை.
“சத்யா இந்த டெஸ்டினேஷன் வெட்டிங்கே வேண்டாம்னு சொல்லலியே. அவன் சொல்லற கம்பெனி பெட்டரா இருக்கும்னு நினைக்கறான். அதுவும் ஏப்ப சேப்பையான கம்பெனி இல்லையே! ஏ1 ஈவெண்ட்ஸும் இண்டஸ்டிரில பெரிய ஆளுங்க தான்.”
“இன்ஃபாக்ட், சத்யா சொல்லறது என்ன? புது கம்பெனிக்கு கொடுத்து, அவங்க அனுபவம் இல்லாம எந்த சங்கடமும் வந்திடக் கூடாது. அவளோ கூட்டத்தை சமாளிக்கத் தெரியாம காம்ப்ளிகேட் பண்ணிக்குவானேன்? அதுலையும் நம்ம லைஃபோட ரொம்ப இம்பார்டெண்ட் ஈவெண்ட்டை. ஏற்கனவே நிறைய அனுபவம் இருக்க பெரிய கம்பெனிக்குத் குடுக்கறது தானே நல்ல முடிவு. இதைத் தானே சத்யாவும் சொல்லறார். இதுல தப்பில்லையே!” என்ற தெளிவும்,
“சரி, எந்த கம்பெனியா இருந்தா என்ன? நமக்கு சீஷோர் வெட்டிங் நடந்தா போதும்” என்ற முடிவும் ஒருசேரத் தோன்றியிருந்தது.
*****
சத்யாவையும், மிருதுளாவையும், அவர்களது கடற்கரை திருமண நிகழ்வையும், அது கைக்குக் கிடைக்காத வருத்தத்தையும் பற்றியும், ஒரு வாரம் வரையில் பிதற்றிக் கொண்டிருந்த நடாஷாவின் குழு கொஞ்சம் போல அந்த விஷயத்தை ஓரம் தள்ளிவிட்டு அடுத்து வந்த வேலைகளில் கவனம் பதிக்கத் துவங்கியிருந்தது.
மற்றவர்கள் நிகழ்வை மறந்துவிட்டிருந்தாலும், ராகாவால் மட்டும் நிம்மதியாக அடுத்த வேலையைப் பார்க்க இயலவில்லை. “இவளோ பெரிய ஈவெண்ட் கைநழுவிப்போகத் தான் காரணமாகிவிட்டோமோ” என்ற கவலையுடனேயே சுற்றிக் கொண்டிருந்தாள்.
“கல்யாணத்துக்கு இன்னமும் நிறைய நாட்கள் இருக்கு. இன்னும் நிட்சயதார்த்த ஃபன்ஷன் கூட முடியலை. எப்படியாவது இவங்களை நம்ம கம்பெனிக்கு திரும்ப கூட்டிட்டு வந்துட முடியுமான்னு பார்க்கணும்” என்ற எண்ணத்திலேயே இருந்தாள்.
அன்று வேறு ஒரு ஈவெண்டிற்காக பூக்கள் வாங்க ஆசியாவின் மிகப்பெரிய பூக்மார்கெட்டான K.R Marketல் மைக்கிலுடன் சுற்றி கொண்டிருந்த ராகாவின் கண்களில் அவள் சிக்கினாள்.
அந்த அவள், ஏ1 ஈவெண்ட்ஸ்லில் பல்வேறு ஈவெண்ட் எக்ஸ்சிக்யூடிவ்களில் ஒருத்தியாக வேலை பார்க்கும் அனிதாவின் அசிஸ்டெண்ட் அஜு என்றழைக்கப்பட்ட அஜந்தா.
******
error: Content is protected !!