Skip to content
Post Views: 5,499
மனதிலோர் மோகன ராகம்
அத்தியாயம் 8
மிருதுவின் முடிவுக்கு இம்முறை சத்யாவால் மறுப்பு சொல்ல இயலவில்லை. “வேண்டவே வேண்டாம்” என்று சொல்லிவிட முடியாத படிக்கு தங்கள் நாடகத்தால் மிருது மற்றும் சத்யாவின் கைகளைக் கட்டிப் போட்டுவிட்டிருந்தனர் நடாஷாவும் ராகாவும்.
Advertisement
“இது ராகாவின் வேலையாக இருக்குமோ?” என்ற ஐயத்திற்கு அவசியமே இருக்கவில்லை. அவனைக் காண்கையில் இதழின் ஓரம் சற்றே விரிந்த ராகாவின் புன்னகையும், கண்களில் குறும்பு மின்ன அவன் திசை பார்க்காமல் அவள் நின்றிருந்த விதமே சத்யாவிற்குப் போதுமானதாக இருந்தது. அவளது செய்கைகளே அவளைக் காட்டி கொடுத்துவிட்டிருந்தது.
சத்யாவும் வெறுமனே அவளை ஜெயிக்க விட்டுவிடவில்லை. அவள் கூற்று, தனக்குத் தெரிந்துவிட்டது என்று இவனுமே ஜாடையாக காட்டினான் தான். ஆனால் அதையெல்லாம் ஒரு பொருட்டாக மதிக்கவில்லையே அந்த ராட்சஸி.
அவள் காரியம் வெற்றி பெற்றுவிட்ட களிப்பில் திண்ணக்கமாக நின்றிருந்தாள். ஆம் அவனைப் பொறுத்தவரையில் ராகா ராட்சஸி தான். அவளால் தான் அந்த நிறுவனத்தைத் தான் தேர்ந்தெடுக்கவில்லை என்று அவளுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.
Advertisement
“அதனால தான் மிருதுவையும் என்னையும் திரும்ப அவங்க கம்பெனிக்கு இழுக்க,இவளோ பெரிய ட்ராமா செஞ்சிருக்கா! சரி,இதே அக்கறையை கல்யாண வேலையிலும் காட்டினா குடுத்த காசுக்கு உபயோகமா இருக்கும். எப்படி எப்படியெல்லாம் டிசைன் டிசைனா பேசி மிருதுவோட மனசை மாத்திட்டா! ராட்சஸி!” என்று மீண்டுமாய் அவன் நினைத்துக் கொண்டான்.
Advertisement
அதிலும், அவன் மனதில் அந்தக் கடைசி வார்த்தையான “ராட்சஸி” கோபமாக வெளிப்படாமல், சற்றே அழகாய், சன்னமான ஒரு சிரிப்புடன் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சல் கலந்த ஒரு மெச்சுதல் வார்த்தையாகத் தான் வெளியேறியது.
சட்டென அவன் மனதின் எண்ணத்தை நினைக்க அவன் மீதே சற்று வெறுப்பு தோன்றியது. சாலையில் ஓர் அழகான பெண் கடந்து செல்கையில் அவளை பார்வையால் பருகுவது கூட ஒரு பெரிய பாதகமான செயல் அல்ல. ஆனால், ஒரு பெண் தன் மனதை திருடிவிடுவாள், தான் விழுந்து விடுவோம் என்று தெரிந்த போதும் அவளிடம் பழகுவதும், அவள் அருகே வேலை பார்ப்பதும், ஏன் அவளைப் பற்றி நினைப்பதும் கூடப் பெரிய தவறு என்று சத்யா எண்ணினான்.
அவள் இருக்கும் இடத்தில், அவள் கண்பார்வையில் தானும் சிறிது நாள் இருக்கப் போகிறோம். அவளுடன் சேர்ந்து சில காலமேனும் பயணிக்க போகிறோம் என்றெல்லாம் அவன் மனம் உவகை கொண்டு துள்ளாட்டம் போட எத்தனிக்கும் தறுவாயில் அவன் மூளை விழித்துக் கொண்டது.
Advertisement
மனம் இதையெல்லாம் எண்ணினாலும், அவனது மூளை தெளிவான கட்டளைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தது. “சரி, அவ என்னவா வேணா இருந்துட்டு போறா! நீ யார், என்ன காரியத்துக்காக அங்க இருக்க இதெல்லாம் மறந்திடாத சத்யா. உன் கல்யாணம் வெறும் ரெண்டு ஃபேமிலி சேர்ற ஃபங்ஷன் மட்டும் இல்ல. இது உங்க கம்பெனி, அதோட வேல்யூஸ், உன் அப்பாவோட கவுரவம் இதெல்லாம் கலந்த நிகழ்ச்சி. சோ, எந்த சிக்கலும் இல்லாம பார்த்துக்கோ. டோண்ட் கோ பை யுவர் ஹார்ட். கோ வித் த ப்ரேயின்” என்று பாடம் எடுக்கத் துவங்கியது.
“சில் ப்ரோ சில். அதெல்லாம் சத்யா ரொம்ப நல்ல பையன். அவன் எல்லாமே நல்லபடியா பார்த்துக்குவான். நீ டென்ஷன் ஆகாத மாமே!” என்று அவன் மனது மூளைக்கு ஆறுதல் கூறி அமைதிபடுத்தி விட்டது. சத்யாவும் தன் அறிவின் அறிவுரைக்குச் செவிமடுத்து அப்போதைக்குத் தன் மனதிற்கு ஈரத் துணி போர்த்தி அமைதிபடுத்தியிருந்தான்.
*****
மிருதுளா-சத்யாவின் திருமண நிகழ்வு தங்கள் கம்பெனிக்கு மீண்டும் கிடைக்கப் பெற்றதில் நடாஷாவிற்கு மிகுந்த சந்தோஷம். “ என்ன ஒரு ஆனந்தம் அந்தக் கரடிக்கு” என்ற வாய்ஸ் மாடுலேஷனுடன் வலம் வந்த நடாஷா அவளது டீமிற்கு அன்றைய தினம் டின்னர் ட்ரீட் வைத்து தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டாள்.
பாதி உணவு உண்டு விட்டு, நடாஷா வேறு அவசர வேலையாக விடைபெற்றுக் கொள்ள, மைக்கில்,வனிஷா மற்றும் ராகாவும் பொறுமையாக மீதி உணவை உண்ணத் துவங்கினர். இருவரும் ராகாவிடம் மாறி மாறி கேள்விகளாய் தொடுத்தனர். அதிலும் மைக்கிலின் மனதில் இருந்த சந்தேகம் தீர்ந்த பாடில்லை.
“ஏ, ராகா, மறைக்காம சொல்லு, நீ தானே அஜுவோட டேப்ல இருந்த டீடெயில்ஸை மாத்தி வச்ச! ஏன் அப்படி பண்ண? பாவம்ல அஜு. உன்னால அவளுக்கு கெட்ட பேர்!” என்று தன் போக்கில் சொல்லிக் கொண்டே இருந்தான்.
அவனுக்கு அஜுவின் மேல் ஒரு சிம்பதி இருக்கிறது என்று ராகா அறிவாள். அந்த அக்கறையின் பேரிலேயே அவன் அஜுவிற்காக வாதாடுகிறான் என்பதையும் உணர்ந்திருந்த ராகா, பதிலேதும் பேசாமல் மெளனமாய் உண்டாள்.
ஆனால் மைக்கில் விட்ட பாடில்லை. “நாளைக்கு இந்த விஷயத்தினால அஜுக்கு வேலை போயிருச்சுன்னா என்னாகும்? ஏன் ராகா நீ இப்படி இருக்க? கொஞ்சம் கூட மனசாட்சியோட நடந்துக்க மாட்டியா?” என்று மைக்கில் சொல்லிக் கொண்டிருக்க, அவன் சற்று எதிர்பாரா வண்ணம் அந்த ரெஸ்டொரெண்டின் உள்ளே அஜு நுழைந்தாள்.
“ஹாய் ராகா” என்று சொல்லிக் கொண்டே இவர்கள் அமர்ந்திருந்த டேபிளில் தானும் சேர்ந்து அமர்ந்து கொண்டாள். அஜுவை கொஞ்சமும் அந்த நேரத்தில் எதிர்பாராத மைக்கில் தடுமாற, வனிஷா என்ன பேசுவதென்று தெரியாமல் அமைதியாகிவிட, ராகா தான் பேச்சைத் துவங்கினாள்.
“அஜு. உன் ஆப்பிள் டேப் கொண்டு வந்திருக்கியா? எங்க எடு?” என்று கைகளை நீட்ட. அஜு என்ன எதற்கு என்று ஒரு பார்வை வீசிவிட்டு, தன் கைப்பையில் இருந்து அந்த டேபினை ராகாவிடம் நீட்டினாள்.
டேபை, திருப்பி, மைக்கிலின் முன் வைத்த ராகா, “இந்த ஃபைல் சேவ் ஆகியிருக்க டைமிங் பாரு. வெள்ளிக்கிழமை சாயந்தரம். அதாவது நாலு நாளைக்கு முன்னால. நீ சந்தேகப்படற மாதிரி நான் சண்டே அஜுவோட டேப்ல அந்த ஃபைலை சேஞ்ச் பண்ணி சேவ் பண்ணியிருந்தா சண்டே டேட் தான் காட்டியிருக்கும். சரியா” என்று சொல்லிவிட்டு, அமைதியாக டேப்பை திரும்ப அஜுவிடம் ஒப்படைத்தாள்.
அஜுவுக்கும் வனிஷாவிற்கும் நடப்பது புரியவில்லை. அஜு திருதிருவென ராகாவைப் பார்க்க, “அதொன்னும் இல்ல அஜு. மைக்கிலுக்கு என் மேல டவுட். சண்டே உன்னை பூ மார்கெட்ல மீட் பண்ணப்போ உன் டேப்பை நான் ரெண்டு நிமிஷம் வச்சிருந்தேன்ல. அப்போ உன்னோட ஃபைலை நான் ஆல்டர் பண்ணி, இருந்த மூணு க்ளையண்ட் டீடெயில்ஸையும் மாத்தி விட்டுட்டேன்னு சந்தேகம். அதனால தான் நீ இன்னைக்கு திட்டு வாங்கினியாம். புலம்பிட்டு இருந்தான்.” என்று ராகா சொல்லி முடிக்க,
அஜு அவசர அவசரமாக மறுத்தாள். “நோ நோ மைக்கில். இது முழுக்க என்னொட ஃபால்ட். மூணு ஈவெண்டுக்கும் ஒரே நாள்ல தான் பிரசண்டேஷன். அதனால நான் தான் கன்ஃபியூஸ் ஆகி, சொதப்பிட்டேன்.” என்று சற்றே முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு அஜு கூற மைக்கிலுக்கு பாவமாக இருந்தது.
அதே நேரம் தான் ராகாவை சந்தேகப்பட்டுவிட்டோமே என்று குற்ற உணர்ச்சியாக வேறு போயிற்று. தன் நண்பனின் எண்ணவோட்டத்தைப் புரிந்து கொண்ட ராகா, “நான் இந்த கன்ஃபியூஷனை அன்னைக்கே அவ டேப்ல பார்த்தேன். கலர் காம்பினேஷன் சொதப்பலா இருக்கே, இதெப்படி நல்லா இருக்கும்னு மட்டும் தான் யோசிச்சேன். மத்தபடி அவங்க க்ளையண்ட் மீட்டிங்ல என்ன டிசைட் பண்ணாங்களோ என்னவோ நமக்கென்ன தெரியும்னு அமைதியா இருந்துட்டேன்” என்று ராகா சொல்ல, மைக்கில் சற்றே அசவுகரியமாக நெளிந்தான்.
“இல்ல, மைக்கில் திஸ் இஸ் மை ஃபால்ட். அண்ட் அனிதா மேம்கிட்ட நான் அப்போவே டிஸ்கஸ் பண்ணேன். இதான் கலர் காம்போவான்னு ரெண்டு தடவை கேட்டேன். அவங்க நீ செய் பார்த்துக்கலாம்னு ஈஸியா சொல்லிட்டாங்க. அதுவுமில்லாம, எங்ககிட்ட வர்ற கிளையண்ட்ஸ் அவளோ சீக்கரம் இப்படி வேற கம்பெனிக்கு போக மாட்டாங்க. அதனால இந்த ப்ரீ வெட்டிங் டிசைன், சாம்பிள் டெகரேஷன்லலாம் நாங்க அவளோ மெனக்கெட மாட்டோம் உங்கள மாதிரி” என்று அஜு சொல்ல, மைக்கில் ஆமோதிப்பாய் தலையசைத்தான்.
அஜு மேலே தொடர்ந்தாள். “நீங்க கிளையண்ட்ட காட்டற டெடிகேஷன்லாம் ஏ1ல சுத்தமா இல்லை. எங்க க்ளையண்ட்ஸ் கண்டிப்பா எங்களை விட்டு போக மாட்டாங்க. சோ, நாங்க மெயின் ஈவெண்ட்ஸ் மட்டும் தான் கான்சண்டிரேட் பண்ணுவோம். மத்ததெல்லாம் வேஸ்ட் ஆஃப் டைம் அண்ட் மணின்னு தான் மேனேஜ்மெண்ட்ல சொல்லுவாங்க” என்றாள் அஜு.
“அப்பறம் ஏன் நீ ஏ1லயே வேலை பார்க்கற? எங்க கம்பெனிக்கு வந்துரலாம்ல?” என்று சைக்கிள் கேப்பில் சிந்து பாட முனைந்தவனைக் கண்டு கலகலவென நகைத்த அஜு, “உனக்கு எப்படி உங்க கம்பெனி கம்ஃபர்டபுளா இருக்கோ! அது மாதிரி எனக்கு அங்க வர்க் பண்ணறது ஈஸியா இருக்கு. நல்ல ஃப்ரெண்ட்ஸ், நல்ல சாலரி, நல்ல ரெகக்னிஷன். இதெல்லாம் விட்டுட்டு நான் ஏன் உங்க கம்பெனிக்கு வரணும் சொல்லு” என்றாள் அஜு சிரிப்பு மாறாமல்.
“ம்ம், அதான் இன்னைக்கு திட்டிட்டாங்களே! அதனால கம்பெனி மாறலாம். தப்பில்ல”
“அவங்க பண்ண தப்பு என்னன்னு அவங்களுக்கு தெரியும். இதுனாலலாம் எனக்கு ப்ளாக் மார்க் ஆகாது. மோர் ஓவர் நாங்க இப்படி சாம்பிள் டெகரேஷன்லாம் என்னைக்கும் என்கரேஜ் பண்ண மாட்டோம். ஏதோ க்ளையண்ட் கேட்டுகிட்டதால, சரின்னு சம்மதிச்சாங்க. அவங்களுக்கு இது ஒரு பெரிய விஷயமே இல்ல.”
“ஆனாலும் அனிதா அப்படி திட்டினாங்களே!”
“ஏன் உங்க நடாஷா மேம் உங்களை திட்டறதே இல்லையா? ஹிந்தியும் கன்னடமும் கலந்து கட்டி திட்டுவாங்கன்னு ராகா சொல்லுவாளே” என்று சொல்லிய அஜு, ராகாவிடம் திரும்பி, “சரி ராகா, நான் கிளம்பறேன் தேங்கியூ ஃபார் இன்வைடிங் மீ. எனக்கு கொஞ்சம் டென்ஸ்டா இருந்துச்சு. அதான் நீ டின்னர் கூப்பிடவும் உடனே வந்துட்டேன். சரி, நான் கிளம்பறேன்.. நீ மெதுவா வாங்க” என்று சொல்லி விடைபெற்றுச் சென்றுவிட்டாள் அஜு.
அஜு செல்வதையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த மைக்கில், “நிஜம்மாவே அப்போ நீ எதும் பண்ணலையா? நான் தான் உன்னை தப்பா நினைச்சுட்டேன் ராக்ஸ்.. சாரி யார்” என்று உச் கொட்டத் துவங்க,
“இரு இரு அதுக்குள்ள ஃபீலிங்ஸை கொட்டாத. “தேங்கியூ பா , நீ எதுவுமே செய்யாம இருந்ததுக்குன்னு ஏப்பா, போப்பா விளம்பரம் வருமே அது மாதிரி அமைதியா இருந்துட்டேன். வர்ற வாய்ப்பை நழுவ விட மனசில்ல எனக்கு! அவங்க கலர் காம்பினேஷன் அஜுவோட டேப்ல பார்க்கவுமே கண்டிப்பா மிருதுளாவுக்கு பிடிக்காதுன்னு எனக்கு புரிஞ்சது. அதனால தான் ஒரு சின்ன கேம் ப்ளே பண்ணி, அவங்களை முதல்ல நாம டிசைன் பண்ண ரூமுக்கு உள்ள வர வச்சேன். வித் நடாஷாஸ் ஹெல்ப். எனக்கு கண்டிப்பா தெரியும் நம்ம டிசைன்ஸ் மிருதுவுக்கு பிடிக்கும்னு.” என்று கூறிய ராகா,
“நான் கொஞ்சம் கெட்டவ தான் மைக். ஆனா நீ நினைக்கற அளவுக்கு அவளோ கெட்டவலாம் இல்ல. சரியா!” என்று முடித்துக் கொண்டாள். “ஆடர் கிடைக்கறது பெரிய விஷயம் இல்ல. இனி இவங்களை சாடிஸ்ஃபை பண்ணி அவங்க கல்யாணம் முடியற வரைக்கும் கூட இருந்து பார்த்துக்கணும். அதான் கஷ்டமான விஷயமே!” என்று அதுவரையிலும் அமைதியாக இருந்த வனிஷா கூற, ஆமோதிப்பாய் தலையசைத்தனர் ராகாவும் மைக்கிலும்.
உணவை முடித்துக் கொண்டு நண்பர்கள் விடைபெற்று சென்று விட, ராகா தான் தங்கியிருந்த பேயிங் கெஸ்ட் வீட்டில் வந்து சேர்ந்து அவள் அறைக்குள் தஞ்சம் புகுந்தாள். அடித்துப் போட்டது போல உடம்பில் அப்படியொரு அலுப்பு. ஒரு தினம் முழுக்க கண்விழித்து வேலை பார்த்தபடியால் தோன்றிய கண் எரிச்சல் மற்றும் கழுத்து வலி.
தொப்பென கட்டிலில் கிடந்தவளுக்கு உண்மையில் கண்ணைக் கட்டிக் கொண்டு தூக்கம் வந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி வந்துவிட்ட பாடில்லை. விட்டத்தை வெறித்துக் கொண்டு சில நிமிடம் படுத்தாள். பக்க வாட்டில் திரும்பிப் படுத்தாள். முதுகுத் தண்டு சாய்ந்து கொள், எங்கேனும் என்னைக் கொண்டு போய் சாய்வாக நிறுத்து என்று கெஞ்சியது.
அதற்காக வேணும் பாவப்பட்டு மீண்டும் விட்டம் பார்த்துப் படுத்தாள். அவள் எண்ணவலைகள் அன்றைய தினத்தின் நிகழ்வுகளை மீண்டும் ஒருமுறை ஓட்டிப் பார்த்தது,
“இந்த மைக்கில் பாரேன். என்னை எப்படி சந்தேகப்பட்டிருக்கான்னு. அப்படியா நான் இன்னொருந்தங்க ப்ராஜெக்டை சொதப்பி விடுவேன்? வர்ற வாய்ப்பை நழுவ விடாம இருக்க என்ன பண்ணலாம்னு தான் நான் யோசிச்சேன். அடுத்தவங்க வாய்ப்பை தட்டி பறிச்சுக்கற அளவுக்கு என்னைக் கெட்டவளா யோசிச்சிருக்கான் பாரு? இவளோ தான் இவன் என்னை புரிஞ்சுகிட்டதா?” என்று யோசித்தாள்.
“புரிந்து கொள்ளுதல்” என்ற வார்த்தை மனதில் ஊடுருவ, அவள் மனம், அவள் சொல்லாமலேயே அவள் சொன்னதை விளக்கிக் கொண்ட சத்யாவை ஒரு கனம் எண்ணிப் பார்த்தது. “அவனும் இப்படி தானே நினைச்சிருப்பான். என்னை ரொம்ப பெரிய வில்லி அளவுக்கு இமேஜின் பண்ணியிருப்பான்ல” என்ற யோசனையும்,
“சரி, அவன் என்ன நினைச்சா என்ன?” என்ற மனநிலையும் அடுத்தடுத்து ஏற்பட்டது. “சே! அவனைப் பத்தி இப்போ என்ன நினைப்பு வேண்டிக் கிடக்கு? எப்படியோ இந்த மாரேஜ் ஆடர் நமக்கு வந்திருக்கு. இதை சூப்பரா எக்ஸிகியூட் பண்ணிடணும்” என்ற எண்ணத்தை மனதினுள் வலுவில் திணித்தாள்.
என்ன தான் மற்றவரின் முன் அவள் நடித்தாலும், தன் சொந்த மனசாட்சியிடம் மாட்டிக் கொள்ளத்தானே முடியும். ஏமாற்ற முடியாதல்லவா. சத்யாவைப் பற்றி ராகா நினைக்கத் துவங்கியதுமே, புத்துணர்வு பெற்று எழுந்து அமர்ந்துகொண்ட அவள் மனசாட்சி, “அவன் உன்னை எப்படி பார்த்துட்டு இருந்தான்னு கவனிச்சியாடீ?” என பாயிண்ட் எடுத்துக் கொடுத்தது.
“சும்மாவே தூக்கம் வராம புரண்டுட்டு இருக்கேன். இதுல இதுவேற புதுசா மனசுக்கு பாயிண்ட் எடுத்து குடுக்குதே!” என்று சலித்துக் கொண்ட போதும், சத்யாவைப் பற்றி நினைப்பது ஏனோ பிடித்திருந்தது ராகாவிற்கு.
“ம்ம்ம் கவனிச்சேன் கவனிச்சேன். என்னமோ நான் செமயா ப்ளான் பண்ணி மிருதுவையும் அவனையும் ஏமாத்தி ஆடர் பிடிச்சுட்ட மாதிரி கண்ணைக் குறுக்கிட்டு, இதுக எப்படி இந்த கல்யாணத்தை நடத்தப் போகுதோன்னு யோசனையோட தான் பார்த்துட்டு இருந்தான். கவனிச்சேன்” என்றாள் ராகா தன் மனசாட்சியிடம்.
“ஏ அவன் அப்படியெல்லாம் பார்க்கலைடீ டெவில். அவன் எவளோ ரொமேண்டிக்கா உதட்டை கடிச்சுட்டு உன்னையே பார்த்தான் தெரியுமா?” என்று மீண்டுமாய் விட்ட இடத்தை எடுத்துக் கொடுத்தது மனசாட்சி.
“எது, அவன்? ரொமேண்டிக்கா? என்னைப் பார்த்தான்? அதை நீ பார்த்த? ஒரு கோடிப்பு.. ஒரு கோடி.. நீ பார்த்த” என்ற ரீதியில் எண்ணியவளுக்கு உண்மையில் சிரிப்பு தான் எழுந்தது.
உதட்டைக் கடித்துக் கொண்டு சற்றே சிறிய புன்னகையுடன் அவன் நின்றிருந்தது வாஸ்தவம் தான். ஆனால் அதில் ரொமேண்டிக்காகவெல்லாம் எதுவும் தென்படவில்லை. ஒரு வேளை இருந்ததோ?
“சே, சே அப்படியெப்படி இருக்க முடியும்? அவனோட கல்யாணத்துக்குன்னு வந்துட்டு இப்படி பொறுக்கி தனமாவா நடந்துக்குவான்?”
“பின்ன அன்னைக்கு ஆபீஸ்ல ஜாலியா உட்கார்ந்து சைட் அடிச்சுட்டு தானே இருந்தான்!”
“அது சும்மா! போறப்போ வரப்போ பார்க்கரதெல்லாம் ஒரு விஷயமா? இதைப் போயி பெருசா யோசிச்சுகிட்டு. கிறுக்குபய மவளே!” என்று முன்னும் பின்னுமாக உரையாடிக் கொண்டிருந்தவள் அப்படியே தூங்கிப் போனாள்.
error: Content is protected !!