Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Manaithakka Maanbudaivayal

மனைத்தக்க மாண்புடையாள்

அத்தியாயம் 22

 

உதய் உடலில் ஒவ்வொரு செல்களும் ஆக்ரோஷத்திலும் ஏமாற்றத்திலும் கொந்தளிக்க அதனை எங்கே கொட்டி தீர்ப்பது என்று தெரியாமல் கையில் உள்ளதை வீசி எறிந்து கண்ணில் பட்டவற்றை எல்லாம் தள்ளிவிட்டவன் அப்படியே மடங்கி சுவரில் சாய்ந்து அமர்ந்துவிட அவனை உச்சக்கட்ட அதிர்ச்சியில் பார்த்து நின்றாள் உதயா.

இதற்கும் முன் இத்தனை கோபத்திலும் வேகத்திலும் அவனைப் பார்த்தே இராதவளுக்கு அவனை எப்படி அணுகுவது என்றே தெரியவில்லை.



Advertisement

சில நிமிடங்கள் சிலையென சமைந்து நின்ற உதயா அவன் விழியோரம் துளிர்த்த கண்ணீரைக் கண்டு பதறியவளாய் ஓடி வந்து அவன் முன் மண்டியிட்டு,

“உதய்…உதய்..ஏன் இப்படி இருக்கீங்க..சொல்லுங்க உதய்..”

அவன் கன்னங்களை ஏந்தி முகத்தைப் பார்த்துப் பரிதவிக்க அவள் கண்களைச் சந்திக்க மறுத்தவனாய் அவள் கைகளைத் தட்டிவிட்டான்.

Advertisement

“நீ எழுந்துப்போ உதயா..நான் இப்ப பேசுற நிலைல இல்ல..நீ..நீ போய் தூங்கு..”

Advertisement

“நீங்க இப்படி இருக்கும் போது நான் போய் தூங்குவேனா..மச்..இங்க பாருங்க..முதல்ல என்னை நிமிர்ந்துப் பாருங்க உதய்..”

“போடிங்கிறேனா..போடி…என்னைக் கொஞ்சம் தனியா விடு..”

வேகமாய் கத்தியவன் தன்னிடம் இருந்து அவளைத் தள்ளிவிட விழுந்துவிடாமல் கீழே கையூன்றி சமாளித்தவள் அதற்கெல்லாம் அசரவில்லை.

Advertisement

மீண்டும் அருகில் வந்து,

“முடியாது..போக மாட்டேன்..கொஞ்ச நாளாவே உங்க முகமே சரியில்லை.நீங்களா பிரச்சனை என்னானு சொல்வீங்கன்னு பொறுத்து இருந்தது தப்பா போச்சு..இன்னைக்கு..இவ்வளவு ஆக்ரோஷம் ஏங்க..?? என்ன தான் நடக்குது..நீங்க சொல்லாமல் நான் விட மாட்டேன்..”

என்று அவள் தீர்க்கமாய் சொல்ல அவனுக்கு எரிச்சலும் கோபமும் அதிகரிக்க,

“நான் தோத்துப்போயிட்டேன் போதுமா…ரொம்ப ரொம்ப கேவலமா தோத்துட்டேன்.. ‘நான் எல்லாம் சரியா தான் செய்றேன்..யோசிச்சு நிதானமாய் செய்றேன்..எனக்கு வெற்றி நிச்சயம்ன்னு..’ இருமாப்போடு திரிஞ்ச என் திமிரை முறிச்சு நீ ஒன்னுமே இல்லடா மடையான்னு தூக்கி போட்டுட்டாங்க..போதுமா…கேட்டாச்சுல..காது குளிர கேட்டாச்சுல..சந்தோஷமா..போடி..”

என்று சீறியவனைக் கண்டு அவளுக்குக் கண்களில் கண்ணீர் உடைப்பெடுத்தது.

அவன் வார்த்தைகளால் வந்தக் கண்ணீர் அல்ல..அதற்குப் பின்னால் தெரிந்த அவன் வலியை உணர்ந்ததால் பெருகும் கண்ணீர்..!!

காரணம் இன்னும் விளங்கவில்லை என்றாலும் அது அவன் உள்ளத்தை முற்றிலும் உடைத்துவிட்டது என்று புரிய தவித்து துடித்துப் போனாள்.

சொல்லி முடிக்கையில் அவனுக்கும் உதடுகள் துடிக்க கலங்கிய கண்களின் கண்ணீரை விழுந்துவிடாமல் உள்ளிழுக்க முயல அதனையும் மீறி கன்னத்தில் முத்தாய் ஒரு துளிக் கண்ணீர் உருண்டோட அவ்வளவு தான் உதயா தன்னோடு இழுத்து அணைத்துக் கொண்டாள்.

திமிறி விலக முயன்றவனை விடாமல் தன்னோடு இறுக்கிக் கொண்டதில் ஒரு கட்டத்தில்  தளர்ந்தவனாய் சத்தமின்றி மௌனமாய் உடல் குலுங்க அழுதான்.

ஆம்.!! அழுதான்..!!

ஏமாற்றங்களும் அது தரும் வலிகளும் சுழற்றி அடித்து வலிகளை பொருக்கவும் முடியாமல் ஏமாற்றங்களை ஏற்கவும் முடியாமல் இயலாமையில் தவிக்கும் போதும் சரி, எதிர்பாராத சந்தோஷங்கள் அதீதமாய் குவிந்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் போதும் சரி அதன் கணம் தாளாது மனிதன் வெளிப்படுத்தும் முதல் உணர்ச்சி அழுகையல்லவா..!! அதில் ஆணென்ன..? பெணென்ன..?? 

எத்தனை நிமிடங்கள் அவர்களின் அந்நிலை நீடித்ததோ தெரியவில்லை.எதுவும் பேசாமல் தன்னுள் புதைந்திருந்த உதய்யின் தலையை கோதி ஆறுதல் படுத்திய உதயா,

“என்ன உதய்..தவரூபன் சாரோட எதாவது பிரச்சனையா..ம்ம்?”

தன் யூகத்தை மெல்லிய குரலில் இதமாய் கேட்க அவனும் தன்னிலை உணர்ந்து அவளிடம் இருந்து பிரிந்து அமர்ந்தான்.அழுகையோ..இல்லை அணைப்போ அவனை சற்று தெளிய செய்திருந்தது.

“ரூபன் சாரிடம் திட்டு வாங்கும் பாக்கியத்தை இழந்து தான் ரொம்ப நாளாச்சே..அப்படியே இருந்திருக்கலாம் போல..வேணும் தான்..எனக்கு நல்லா வேணும்..”

பல்லை கடித்து விரக்தியாய் பேசியவனை புரியாமல் பார்த்து,

“என்ன..என்ன சொல்றீங்க..”

என்று கேட்க நிமிர்ந்து பார்த்தவன்,

“உனக்கு தெரியாதா நான் தவரூபன் சாரிடம் இருந்து விலகிட்டேன்னு..”

என்று சொல்ல திகைத்தாள்.

“எ..எப்போ..”

“அஞ்சு மாசம் ஆச்சு..நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே..!! உங்க வீட்டில் கூட எல்லாருக்கும் தெரியுமே..உனக்கும் முந்தியே தெரியும்னு நினைச்சேன்..”

என்று அவன் மரத்தக் குரலில் சொல்லி மேலும் அவளை அதிரவைத்தான்.

அதனால் தான் அண்ணா அடுத்து என்ன..?? என்று கேட்டாரோ..!? என்ன செய்றேன் நான்..உதய் என்ன பண்றார்ன்னு கூட தெரியாமல்..’ தன்னையே கடிந்துக் கொண்டாள்.

“சாரி உதய்..நிஜமா எனக்கு தெரியாது..யாரும் என்னுட்ட சொல்லல..” என்று வருத்தம் நிறைந்த குரலில் சொன்னவள்,

“ஏன்..ஏன் விலகிடீங்க..”

என்று கேட்க அவன் பார்வையை எங்கோ வைத்தபடி அமைதியாய் இருக்கவும் அவள் மீண்டும் ஏதோ சொல்ல முனைய அப்போது அவனே பேசினான்.

“நாம சென்னைல மீட் பண்ணோம்ல..அந்த டைம்ல என் முதல் படத்திற்கு நான் ஒரு ப்ரொடியூசரோட கமீட் ஆகி இருந்தேன் உதயா…”

என்று சொல்ல அவள் புருவங்கள் ஆச்சரியத்தில் உயர்ந்தது.

“..சினிமால என் முதல் படம் ஆழமா அழுத்தமா இருக்கணும்னு எதிலும் அவரசப்படாம ரொம்ப நிதானமா கிட்டதட்ட ஆறு வருஷமா என்னை மெறுகேத்திக்கிட்டு தான் இதில் இறங்கினேன்..இந்த ஃப்லீம் ப்ரொடெக்‌ஷன் கம்பெனியும் ரொம்ப பாப்புலர்..அதுவே என் படத்தோட வெற்றிக்கு வழிவகுக்கும்னு நம்பி ஐ சைண்ட் மை ஃபர்ஸ்ட் மூவி..அதே நேரம் தவரூபன் சாரோட மூவி ஷூட்டிங் உம் போயிட்டு இருந்தது.

எனக்கு வாய்ப்பு கிடைத்தபோது என்னை விட அவர் ரொம்பவும் சந்தோஷப்பட்டார்.அவருக்கு நான் வலது கை மாதிரி உதயா..ஷூட்டிங் நேரத்திலும் டிஸ்கஸன் நேரத்திலும் நான் இல்லேனா அவருக்கு ரொம்ப கோபம் வரும்…அப்படி பட்டவருக்கு நான் போறது கஷ்டம் தான்னாலும் நான் வளரணும் என்கிறதுக்காக சந்தோஷமாய் வாழ்த்தி தான் அனுப்பினார்.அவர் என்னுட்ட கேட்டது இப்ப எடுத்துட்டு இருக்கிற படம் முடிந்ததும் நீ விலகிக்கோன்னு தான்..நானும் சரின்னு வாக்கு கொடுத்தேன்..

ஆனால் என்னால சொன்ன சொல்ல காப்பாத்த முடியல..நம்ம கல்யாண பிரச்சனை ஒருபக்கம், இந்த ப்ரொடியூசர் ஒருபக்கம்னு கொஞ்சம் நெருக்கடியான சூழல்..! இதுல ரூபன் சர் படம் சில பிரச்சனையால உரிய நேரத்துல முடிக்க முடியாம இழுத்துக்கிட்டே போச்சு.. ப்ரொடியூசர் ஃபரஷர் கொடுத்திட்டே இருந்தார்..அதனால நான் ரூபன் சாரிடம் பாதிலே விலகிக்க போறதா சொல்லிவிட்டேன்..அப்போ அவருமே நிறைய டென்ஷனில் இருந்தார்..அந்த நேரத்தில் ஹீ நீட் மை ஃப்ரெஷன்ஸ்..அவ்வளவு பெரிய டைரக்டர் அவர்..தன் ஈகோவை விட்டு என்னிடம் இப்ப போகாத..இந்த படம் முடியட்டும்னு தானாவே சொன்னார்.ஆனால் இந்த ஃப்ரொடியூசர் கொடுத்த பிரஷரால எங்கே எனக்கு கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டு விடுவேனோன்னு பயம்..அதனால் சொல்லாமல் கொல்லாமல் ரூபன் சரிடம் இருந்து வந்துட்டேன்..திரும்ப அவரை சந்திக்க போகவே இல்லை.. இங்க என் படத்தோட வேலைகளில் இறங்கிட்டேன்..இடைல நம்ம மேரெஜூம் ஃபிக்ஸ் ஆகிடுச்சு..மேரேஜூக்கு இன்வெய்ட் பண்ண நான் போனப்ப கூட என்னை சந்திக்க மறுத்து காருண்யாட்ட என்னை வெளிய போக சொல்லி அனுப்பிட்டார்.அப்பலாம் ரொம்ப கஷ்டமா போயிடுச்சு..”

“அப்போ அன்னைக்கு ஃபோன் கால்..”

“எனக்கும் அது ஆச்சரியம் தான்..என்னை போடான்னு விட்டுட்டாலும் எனக்கு கல்யாணம் ஆகி வாழ்த்தாமல் இருக்க அவருக்கு மனசு வரல..அதான் கால் பண்ணிட்டார்..என்னுட்ட சரியாவே பேசலைனாலும் உன்னிடம் இயல்பா பேசினது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்தது தெரியுமா..அந்த நல்ல மனுஷனை நோக அடிச்சதுக்கு தான் கடவுள் இந்த அடிய எனக்கு கொடுத்துட்டான் போல..”

“ஏங்க இப்படி எல்லாம் சொல்றீங்க..என்னாச்சு..”

“இன்னும் என்ன ஆகணும்..எல்லாம் முடிஞ்சிருச்சு..குருவி மாதிரி படத்திற்கு ஒவ்வொரு விசயத்தையும் தேடி தேடி சேகரிச்சேன்..நிறைய பேருட்ட பேசி ஹீரோ..ஹீரோயின்னு எனக்கான டீம்மை கொஞசம் கொஞ்சமா அசம்பிள் பண்ணிட்டு இருந்தேன்..அப்போ இருந்தே ப்ரொடியூசருக்கும் எனக்கும் எதாவது பேச்சிலே சண்டை வந்துக்கிட்டே இருந்துச்சு..பட் நான் புதுசு இல்லையா..அட்ஜெஸ்ட் பண்ணித்தான் போனேன்..கருத்து வேறுப்பாடு வந்தபோது எல்லாம் விளக்கி புரிய வைச்சு என் பொறுமையை ரொம்பவும் சோதிச்சாலும் பொறுத்து தான் போனேன்..மூவிக்கு ஸ்டில்ஸ் எடுத்து கிட்டதட்ட எல்லாம் ரெடியாகிடுச்சு..பூஜைப்போட்டு படத்தை தொடங்குவது தான் பாக்கின்னு இருந்த நிலைல..இன்னைக்கு மறுபடியும் ஒரு பிரச்சனை..மியூசிக் டைரக்டர் விசயத்தில்.. பேச்சு வளர்ந்ததுல ‘உனக்கெல்லாம் வாய்ப்பு கொடுத்ததே பெருசு..சொல்றதை மட்டும் செய்..’ அப்படிங்கிறா மாதிரி நிறைய பேசவும் கோபம் வந்து நானும் பேசிட்டேன்..அவர் என்மேல வன்மம் கொண்டு படத்தையே கேன்சல் பண்ணிட்டார்..”

கடைசி வரியை சொல்லும் போது அவன் உதடுகள் கோபத்தில் துடிக்க கை முஷ்டியை இறுக்கினான்.

“என்ன என்னவோ பெருசா நினைச்சு இருந்தேன்..ஆனால் ஆரம்பிக்க கூட இல்லாத நிலைல இழுத்து மூடியாச்சு..அந்தாள கன்வின்ஸ் பண்ண எவ்வளவோ முயற்சிப் பண்ணோம்..

‘நீயெல்லாம் டைரக்டரா இருக்க லாயிக்கே இல்லாதவன்..உன்னை நம்பி எவனும் பணம் போட மாட்டான்…வாய்ப்பு கொடுக்கவும் மாட்டான்..உன் குப்பை ஸ்கிரிப்ட் கால் காசுக்கு பெராது..’ அப்டி இப்டின்னு காரி துப்பாத குறையா சொல்லி அனுப்பிட்டான்..அத்தனை பேர் முன்னாடியும்..என் லைஃப்ல நான் இந்த அளவு அவமானம் பட்டதே இல்ல..அப்படியே உடம்பெல்லாம் எரியுது..”

அவன் சொல்ல சொல்ல உதயாவின் நெஞ்சத்திலும் ஈட்டி சொருகியதுபோல் உயிர் வலிதர துடித்து போனாள்.முகம் தெரியாத அந்த தயாரிப்பாளன் மீது கன்மண் தெரியாமல் கோபம் குமிழிட்டது.

மனதில் சரமாரியாய் அவனை திட்டியவள் கணவனிடம்,

“அந்த ஆளு போனா போறான் விடுங்க..இந்த மாதிரி ஒருத்தரோட நீங்க படம் பண்ணாமல் இருக்கிறதே நல்லது தான்..தமிழ் சினிமால இவங்களை விட்டால் வேற ப்ரொடியூசர்ஸா இல்ல..உங்க திறமைக்கு வாய்ப்பு எல்லாம் தானா அமையும்..”

என்று  அவன் தலையை கோதி சொல்ல சலிப்புடன் உச்சுக் கொட்டி தலையை திருப்பிக் கொண்டான்.

“அட..உண்மையை தாங்க சொல்றேன்..இப்ப நீங்க படம் பண்ண ஆரம்பிச்சு இதெல்லாம் நடந்து இருந்தால் எவ்வளவு கஷ்டம்..அதுக்கு இது எவ்வளவோ தேவலாம் இல்லையா..இப்ப என்ன கெட்டு போச்சு..இவங்கள நம்பியா படம் எடுக்கணும்னு சென்னை கிளம்பி வந்தீங்க இல்லல..அப்புறம் இது இல்லேனா ஒன்னுமே இல்லேன்றா மாதிரி ஏன் ஃபீல் பண்றீங்க..இதைவிட பெட்டரா ஒரு அப்பர்ச்சுயூனிட்டி நமக்கு கிடைக்கும்..தொடர்ந்து முயற்சி பண்ணுங்க உதய்..”

என்றவள் அவன் சிந்தனையை மாற்றும் பொருட்டு வேறு விசயங்களை பேசினாள்.

உணவு வேண்டாம் என்றவனை கட்டாயப்படுத்தி அவன் வயிறு நிறைந்ததும் தான் விடுத்தாள்.

மறுநாள் பொழுது விடிய நேற்றுபோல் கோபம் இல்லை என்றாலுக் சோர்வாய் அமர்ந்திருந்த உதய்யை தனியாக விட்டு செல்லவே அவளுக்கு மனம் இல்லை.

இன்று ‘spread love’ விற்கான நாள்.இன்றைய பணியாய் அவர்கள் குழு தேர்ந்தெடுத்த இடம் ஓர் ஆதரவற்ற குழந்தைகள் இல்லம்.

‘இந்த ஒரு தடவை போகாமல் இருந்து விடலாமா’ என்று முதலில் யோசித்தவள் பின் அவனையும் அங்கு அழைத்து சென்றால் என்ன..?? என்று தோன்ற கண்கள் பளீச்சிட வேகமாய் யாருக்கோ அழைத்து பேசிவிட்டு உதய்யிடம் வந்தாள்.

“உதய்…வாங்க…கிளம்பலாம்..”

என்றழைக்க,

“எங்க..” என்றான் அசிரத்தையாய்..

“நேத்தியே சொன்னேன்ல..இன்னைக்கு ஒரு ஆர்ஃபனேஜ் போறோம்னு..நீங்களும் எங்களோட ஜாயின் பண்ணிக்கோங்க..”

“ம்ச்..எனக்கு இப்ப எங்கேயும் வர மூட் இல்ல உதயா..நீ யோயிட்டு வா..”

“அங்க வந்து பாருங்க..கண்டிப்பா உங்களுக்கு ரிலாக்ஸிங்கா இருக்கும்..வாங்க உதய்..கமான் கெட் அப்..”

என்று அவன் கையை பற்றி எழுப்ப முயல அவனோ துளியும் அசைந்து கொடுக்கவில்லை.

“படுத்தாதடி..நான் நல்லா தான் இருக்கேன்…வரலைன்னு சொன்னால் விட்டுடு..”

“எதுக்கு..இங்க தனியா சோக பிஜியம் போட்டு ஃபீல் பண்ணிட்டு இருக்கவா..? இந்த கதைலாம் வேணாம்..வாங்க..வாங்க..வாங்க..”

அவனை விடாமல் நச்சரிக்க அவள் தொல்லை தாங்க முடியாமல்,

“உன்னோட பெரிய இம்சைடி..”

என்று எழுந்து செல்ல,

“ஆமா..நான் இம்சையரசி 23 புலிகேசியாவே இருந்துட்டு போறேன்..நீங்க கிளம்புங்க..”

என்று படாதப்பாடு படுத்தி அவனோடு புறப்பட்டதும் தான் ஆசுவாசமானாள்.

அங்கே வந்து சேர்ந்தபோது உதயாவின் குழு இவர்களுக்காக காத்திருந்தது.அதில் கல்பனாவை தவிர அவனுக்கு யாரையும் தெரியவில்லை.ஆனால் அவர்களுக்கு இவனை நன்றாக தெரிந்திருக்க அனைவரும் வழிய சென்று அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

அதன்பின் உற்சாகத்தோடு அன்றைய திட்டங்களை கலந்துபேசி சுறுசுறுப்போடு அதனை செயல்படுத்த அனைத்தையும் கவனித்தபடி அமைதியாகவே இருந்தான் உதய்.

மைதானத்தில் இல்லத்தின் அனைத்து குழந்தைகளும் ஒன்றுகூடியிருக்க இந்த குழுவை அறிமுகப்படுத்திய தாளாளர் இவர்கள் பேச வழிவிட்டு ஒதுங்கி நின்றார்.

இல்லத்தில் எப்பொழுதாவது இது போல் ஆட்கள் வந்தால் அன்று தங்களுக்கு புதிதாய் ஏதோ கிடைக்க போகிறது என்று குழந்தைகள் அறிந்திருந்ததால் ஆர்வத்தோடும் ஆசையோடும் நிற்க அவர்கள் முகத்தை பார்த்தே அதனை உணர்ந்துக் கொண்ட உதயிக்கும் மனம் நெகிழந்தது.அந்த பிஞ்சுகளில் சிரிப்பிற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தோன்றியது.

அந்த குழந்தைகளை வயது வாரியாக நான்கு பிரிவாக பிரித்துக் கொண்டவர்கள் ஒவ்வொரு குழுவிற்கு இரண்டு பேர் பொறுப்பெடுத்துக் கொண்டனர்.அப்பொழுது தான் அவர்கள் வயதிற்கு ஏற்றார்போல் ஏதோ ஒன்றை கற்று தர முடியும் என்று..!!

அதாவது பதினைந்தில் இருந்து பதினேழு வயது பிள்ளைகளுக்கு உலகில் விரிந்து கிடக்கும் கல்வி வாய்ப்புகள் பற்றியும் மென் திறன்கள் வளர்த்துக் கொள்வது பற்றியும் அவர்களுக்கு சலிக்காத வகையில் சுவரஸ்யமாய்  உரையாடி அவர்களோடு பேசி,பேச வைத்தனர்.மற்றொரு குழு விளையாட்டை தேர்ந்தெடுத்துக் கொண்டனர், பத்திலிருந்து- பதினான்கு வயது பிள்ளைகளுக்கு கணினியை இயக்கவும் அதன் செயல்பாடுகளையும் சொல்லிக் கொடுத்தனர்.

இதில் உதய்-உதயாவின் குழு ஒன்பது வயதிற்கு கீழ் உள்ள பிள்ளைகள்.ஒரு அறையில் அந்த பிள்ளைகள் அனைவரும் அமர வைத்துவிட்டு அவர்கள் முன் சென்று அவள் நிற்க அந்த அறையிலே ஓரத்தில் கைக்கட்டி சுவரில் சாய்ந்து நின்றுக் கொண்டான் உதய்.

தான் வைத்திருந்த ஒரு பெரிய பேக்கை உதய்யிடம் கொடுத்த உதயா,

“ஹாய் குட்டீஸ்..என்னடா அக்கா,அண்ணனை எல்லாம் ஸ்போர்ட்ஸ் கேம்ஸ்னு ஜாலியா போயிட்டாங்க..இந்த அக்கா இங்க க்ளாஸிற்கு கூட்டிட்டு வந்துட்டாங்களே..பாடம் எடுக்க போறாங்களோன்னு ஒரு டெரர் லுக் உங்க எல்லார் முகத்திலும் தெரியுது..அங்க பாரு..அந்த தம்பி கைக்கட்டி வாய்ல கைவைச்சு அவன் மிஸ்ஸை பார்க்கிறா மாதிரியே என்னை பார்க்கிறான்..ஏன்..ஏன் பசங்களா இவ்வளவு பவ்வியமா பார்க்கிறீங்க..நாங்க உங்க ஃப்ரெண்ட்ஸ் தான் ஓகே..எங்க அழகா எங்களுக்கு ஒரு ஹாய் சொல்லுங்க பார்ப்போம்..”

என்று தொடங்கி அவர்களையும் சில நிமிடம் பேச வைத்தவள் பின்,

“ஓகே..நாம குட்டி கேம் விளையாடலாம்..இந்த பேக்ல என்ன இருக்கு தெரியுமா..கிஃப்ட்ஸ்..உங்களுக்கான கிஃப்ட்ஸ்…நான் சின்ன சின்னதா சில டாஸ்க் கொடுப்பேன் அதை யாரு செஞ்சு முடிக்கிறாங்களோ அவங்களுக்கு ஒரு கிஃப்ட்..நல்லா கேட்டுக்கோங்க டாஸ்க் செய்றவங்களுக்கு தான் கிஃப்ட்..வேடிக்கை பார்க்கிறவங்களுக்கு இல்ல..”

என்று சொல்ல பிள்ளைகளும் ஆர்வமாய் தயாராகினர்.சொன்னதுபோல் சிறு சிறு ப்ரெய்ன் கேம்ஸை கொடுத்து அவர்களை செய்ய வைத்து அதற்கு பரிசை உதயை கொடுக்க சொல்லி குழந்தைகளோடு குழந்தையாய் அவள் செய்யும் சேட்டைகளை கண்டு மனம் விட்டு சிரித்தான்.அவர்கள் ஆர்வமோடு ஓடியாடி செய்யும் அரட்டைகளில் ஒதுங்கி நின்ற அவனும் சேர்ந்துக் கொள்ள சற்று நேரத்தில் தன்னை மறந்து அவர்களை உற்சாக மூட்டியவன் மனதின் கவலைகளும் காணாமலே போனது.

முடிவில் அங்கிருந்த அத்தனை பிள்ளைகளும் பங்கேற்றனர் என்பதற்கு சாட்சியாய் எல்லார் கையிலும் ஒரு பரிசு பொருள் இருந்தது.

மதிய உணவும் இவர்கள் பொறுப்பு தான் என்பதால் உணவு வேளையில் குழந்தைகளை அமர வைத்து தங்களுக்குள் ஒருவரையொருவர் சீண்டிக்கொண்டும் வம்பிழுத்துக் கொண்டும் அனைவருக்கும் பரிமாறிவென கலகலப்பாய் செல்ல அன்றைய நாளின் முடிவில் விடைப்பெறும் போது அந்த பிள்ளைகள் பொழிந்த அன்பு மழையில் அனைவருக்குமே ஓர் ஆத்ம திருப்தி..!!

அதே மன நிறைவில் உதயா,

“ஹாப்பியா..” என்று ஒற்றை புருவத்தை உயர்த்திக் கேட்டபோது பொது இடம் என்பதை மறந்தவனாய் அவள் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட அருகில் நின்ற நண்பர்கள் “ஓஹோ..” என்று கேலியாய் ஆர்பரிக்கவும் வெட்கத்தோடு அவனிடமே தஞ்சம் புகுந்தாள் மனையாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!