Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Manaithakka Maanbudaivayal

மனைத்தக்க மாண்புடையாள்

அத்தியாயம் 23

 

விதியின் சதியால் காலம் உதய்யை மீண்டும் ஆரம்ப புள்ளியிலே கொண்டுவந்து நிறுத்தினாலும் நம்பிக்கை என்னும் ஒளியை மட்டும் கேடயமாய் பிடித்துக் கொண்டு மீண்டும் முயற்சிக்க ஆரம்பித்தான்.ஆறு வருடம் அனுபவம் அதற்கு இன்னும் சற்று வலுவை சேர்த்தது.

ஆனால் நடந்தவை எல்லாம் அவன் நம்பிக்கையை ஆட்டம் காண செய்தது.



Advertisement

அன்று அப்படி தான் ஒரு தயாரிப்பாளரை சந்திக்க அலுவலக வரவேற்பறையில் காத்திருந்தான் உடன் அவன் நண்பர்கள் சசியும் அருணும்..

உதய் படம் பண்ண தொடங்கிய போதே தன்னோடு தன் தளபதி சசியை அழைத்துக் கொண்டான்.அனுபவம் வாய்ந்த ஒலிப்பதிவாளரையே படத்திற்கு நியமித்து இருந்தாலும் தன் நண்பனும் உடன் இருக்க வேண்டும் என்று அவனை தன்னோடு இணைத்துக் கொண்டதால் நடந்த பிரச்சனைகள் அனைத்தும் அவனும் அறிவான்.

அடுத்து அருண் அவனோடு தவரூபனின் உதவி இயக்குநராய் வேலை பார்த்தவன் தற்போதும் வேலை பார்த்துக் கொண்டிருப்பவன்..!!

Advertisement

“வேணும்னே நம்மை காத்திருக்க வைச்சிருக்காங்களோனு சந்தேகமா இருக்கு ஜி..”

Advertisement

சசி அருணிடம் சொல்ல அவனோ மூடிய கதவை பார்த்துக் கொண்டே,

“சந்தேகம் எல்லாம் வேணாம் ஜி..கன்ஃபார்ம் அப்படி தான்..போகும் போது நம்மை பார்த்துட்டு தானே உள்ளே போனார்..இவ்வளவு நேரம் ஆக அங்க என்ன ஆயிரங்கோடி ரூபாய் படத்துக்கு டிஸ்கஷனா  பண்ணிட்டு இருக்கார்..”

என்றவன், “நிஜமா இவராவே தான் இன்னைக்கு பார்க்க வர சொன்னாராடா..”

Advertisement

உதய்யை பார்த்து கேட்க,

“ஆமாடா..அக்‌ஷுவலி விஸ்வாவிற்கு கதை ரொம்ப பிடிச்சு இருக்காம்..இந்த படம் நடிக்கிறதில் ரொம்ப இன்ரெஸ்டடா இருக்கார்..அதான் நீங்க எப்ப படம் பண்ணாலும் நான் ரெடி..பட் ப்ரொடியூசர் மட்டும் பிடிங்க..என் பேரையும் யூஸ் பண்ணிக்கோங்கன்னு முன்னாடியே சொல்லி இருந்தார்..இப்ப இந்த ப்ரொடியூசரிடம் கூட அவர் தான் பேசி மீட்டிங் அரெஞ் பண்ணி இருக்கார்.. ‘கதை கேட்டுட்டு பிடிச்சு இருந்தால் பண்ணலாம்’ அப்படின்னு சொன்னாராம்..பார்ப்போம்..”

என்ற அவன் குரலில் பிடிக்கணுமே என்ற தவிப்பு இருப்பதை இருவருமே உணர்ந்து அவனுக்காக வேண்டிக் கொண்டனர்.

சில நிமிடங்களில் அங்கே வந்த ஒரு பெண்,

“உங்களை மட்டும் வர சொன்னாங்க சர்..”

என்று சொல்ல நண்பர்களிடம் தலையசைப்போடு உள்ளே சென்றான்.

கோல்ட் ப்ரேம் செய்யப்பட்ட கண்ணாடி, கழுத்தில் கணமாய் தொங்கிய தங்க சங்கிலியும், வெள்ளை நிற ஜிப்பாவிலும் காட்சியளித்த அவரை கண்டு,

“வணக்கம் சர்..” என்று உதய் சொல்ல அவனை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்தவர் தன் முன் இருந்த இருக்கையில் அமர சொல்லி எந்த கேள்விகளும் கேட்காமல் நேராக கதை சொல்ல சொல்ல அவன் முதலில் தயங்கினாலும் பின் முழு மூச்சோடு கதையினை விவரிக்க தொடங்கினான்.

அவன் கூறுவதை உன்னிப்பாக கேட்டு இடையிடையே சந்தேகங்கள் கேட்டு நகைச்சுவை காட்சிகளுக்குச் சிரித்து என அவர் ஈடுபாடோடு இருந்தது அவனை ஊக்கப்படுத்த இன்னும் உற்சாகத்தோடு மீதக் கதையையும் கூறி முடித்து அவர் பதிலுக்காக பார்த்திருந்த்தான்.

“எல்லாம் நல்லா இருந்தது தம்பி..நல்ல கதை..ஆனால் உங்களை நம்பி பணம் போட தான் யோசனையா இருக்கு..”

“ஏன் சர் அப்படி சொல்றீங்க…எடுத்த பட்ஜெட்ல சரியா முடிச்சிடுவேன் சர்..நீங்க தாராளமா என்னை நம்பலாம்..”

“அதில்ல மேட்டர்…காசிதேவனோட உன் பிரச்சனையை நானும் கேள்விப்பட்டேன்..எல்லாம் தயாரான நிலைல வேணாம்னு சொல்லிட்டானாமா..”

தன் சுழல் நாற்காலியில் சாய்ந்தமர்ந்து கேட்டப்போது மரியாதை பன்மை மறைந்திருக்க சில நொடிகள் அமைதி காத்தான்.

“ஆமாங்க சர்..என்னோட சாய்ஸஸ் எதுவும் அவங்களுக்கு பிடிக்கல..அவர் சொல்ற ஆர்டர் படி என்னால நடக்க முடியல..அதனால தான்..”

என்று சொல்ல,

“முதல் முதல்ல படம் பண்ண போற…அனுபவம் உள்ளவங்க சொன்னா கேட்டுகணும்..எல்லாம் நமக்கு தான் தெரியும்னு இருக்கலாமா..எத்தனை ப்ளாக்பஸ்டர் படம் அவங்க ப்ரொடக்‌ஷன்ல வந்திருக்கு..அவர் சொன்னபடி கேட்பதற்கு என்ன..”

என்று அவர் சொன்னதற்கு உதய் பதில் சொல்ல விரும்பவில்லை என்பதால் அமைதி காத்தான்.

“என்ன அமைதியாகிட்ட..??”

“இப்ப அதை பேச அவசியம் என்ன சர்..”

“இருக்கே..உன்னை நம்பி இறங்கிய பின்னாடி இதே மாறி நீ முரண்டு பண்ணால் நஷ்டம் எனக்குத் தானே..அதான் இதெல்லாம் பேசிடனும்ல..”

“என்ன சொல்ல வரீங்க சர்..”

“உன் கதை எல்லாம் ஓகே..ஆனால் சில இடத்துல மட்டும் கொஞ்சம் மாத்தணும்…அதை மட்டும் திருத்திக்கிட்டா..படம் சூப்பர் டூப்பர் ஹிட் தான்..”

என்று அவர் சொல்ல அதனை ஏற்க மனம் முரண்டினாலும்,

‘வளைஞ்சு கொடுத்து போறதில் என்ன தப்பு..கொஞ்சம்னு தானே சொல்றார்..அதனால பெருசா ஒன்னும் மாறிட போறது இல்ல..’

என்று புத்தி எடுத்துரைக்க,

“எங்க..என்ன மாத்தனும் சர்..”

என்றான் உதய்.

“ஹீரோவுக்கு ஈக்வல்லா ஹீரோயின்னும் பல இடத்துல ஸ்கோர் பண்றாங்க..அது நல்ல விசயம் தான்..ஆனால் காதல்..?? ரெண்டு பேரும் என்னய்யா பாவம் பண்ணாங்க..ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை சேர்ந்தே பயணம் பண்றாங்க..ரெண்டு பேருக்கும் இடைல காதல் இருந்தா தானே சுவாரஸ்யமா இருக்கும்..”

என்றுக் கூறி அவரே அவர்களுக்குக் காட்சிகான லீடும் கொடுக்க சங்கடமாய் அவரை பார்த்தவன், 

“சர்….இது திரில்லர் கதை தானே..வெறும் இரண்டே நாளில் நடக்கும் நிகழ்வுகள்..இதுல நிறைய முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும் போது..காதல் காட்சிக்கு முக்கியத்துவம் இல்லையே சர்..அது மட்டும் இல்லாமல் ஹீரோவும் ஹீரோயின்னும் நண்பர்கள் தான் சர்..ஹீரோவிற்கு காதலியும் இருக்கிறாள்.. இவன் வருகைகாக காத்திருக்க மாதிரி சொல்லியிருந்தேன்..அப்படி இருக்கும் போது..”

என்று அவன் முடிக்காமல் நிறுத்த அவரோ பெருசாக அலட்டிக்கொள்ளாமல்,

“இது ஒரு விசயமா..ஒன்னு அவன் அந்த பொண்ண உண்மையா காதலிக்கல..ஹீரோயின் மேல காதலை உணர்ந்தபோது தான் அவனுக்கு அந்த பொண்ணு மேல இருந்தது வெறும் ஈர்ப்புன்னு உணர்ந்தான்னு..இல்லேனா அந்த பொண்ணு அவனை ஏமாத்திட்டானு முடிச்சிடு..”

என்று அவர் புதுக் கதை ஒன்றை ஓட்ட உதய்யிக்கு தலைவலியே வந்துவிட்டது.

“இல்லங்க சர்..”

“இல்ல.. நொல்லங்காத..நான் சொல்றத கேளு..காலங்காலமா ஹீரோ காதலி தான் ஹீரோயின்னு இருக்கு..நீ என்னமோ புதுசா சொல்ற..காதல் இல்லாம சுவாரஸ்யமா இருக்காது…”

“என்னால சுவாரஸ்யமா கொடுக்க முடியும் நம்புங்க சர்..”

“மக்களுக்கு அதெல்லாம் புடிக்காது..இப்படி இப்படி இருந்தா தான் நம்ம ஆடியன்ஸ் ஏத்துப்பாங்க..”

“அவங்களுட்ட கொண்டு போய் சேர்க்கிறதுக்கு முன்னாடியே இது பிடிக்காதுன்னு எப்படி சர் சொல்வீங்க..சும்மா மக்களுக்கு இதான் பிடிக்கும் இதான் பிடிக்கும்னு சொல்லி அரைத்த மாவே அரைக்கணுமா..அவங்களுக்கு எது புடிக்கும்னு நீங்க சொல்லாதீங்க..பார்த்துட்டு அதை அவங்களே முடிவு பண்ணட்டும்..”

பொறுமையாய் நிதானமாய் பேசவேண்டும் என்று எவ்வளவோ கட்டுபாடு விதித்து தான் வந்திருந்தான்.ஆனால் இந்த வாயை கட்டுப்படுத்த முடியாமல் வார்த்தைகள் பட்டென்று வந்து விழுந்தது.

“ஓஹோ அப்புறம்..”

என்று நக்கலாய் கேட்டு,

“நீ திமிறு பிடிச்சவன்னு சொன்னப்ப கூட நம்பல..ஆனால் என்னுட்டயே உன் திமிர காட்டுற..ஒரு படமும் பண்ணல அதுக்கு முன்னாடியே இவ்வளவு ஏத்தமா..? ரெண்டு ஷார்ட் ஃப்லீம் எடுத்து யூடியூப்ல போட்டா நீயெல்லாம் பெரிய டைரக்டர்னு நினைச்சிக்கிட்டு இருக்கியா..”

என்றபோது அவன் கோபம் எல்லையை கடக்க இனி பேசி பயன் இல்லை என்று எழுந்து வெளியே வந்துவிட்டான்.

ஆர்வமாய் பார்த்த நண்பர்களிடம் இல்லை என்பதாய் தலையசைத்தவன் நடந்ததை கூறினான்.

“இவன் போறான் மச்சான்..உப்மா கம்பெனி..”

என்று சசி சொல்ல அருணோ,

“சொல்றேன் தப்பா நினைக்காத மச்சான்..இன்னும் கொஞ்சம் டைம் எடுத்துக்கலாம்டா..மறுபடியும் ரூபன் சாரிடமே வந்துடேன்..”

என்றான் தயக்கமாய்..

“எந்த முகத்த வைச்சிட்டு வருவேன்..மன்னிப்பு கேட்டு மறுபடியும் போய் நின்னால் அவர் நிச்சயம் சேர்த்துப்பார் தான்..ஆனால் அவர் முகத்தை என்னால ஏறெடுத்தும் பார்க்க முடியாதுடா..குற்றவுணர்ச்சி என்னை கொன்னுடும்…”

என்று சொன்னவனிடம் என்ன மறுமொழி கூறுவது என்று தெரியாமல் அவர்களும் அமைதிக் காக்க அதே நேரம் அலைப்பேசி சிணுங்கியது.உதயா தான்..!!

“ஹலோ உதயா..”

“எங்க இருங்கீங்க உதய்..”

என்று அவள் கேட்டதற்கு தான் இருக்கும் இடத்தை சொல்ல,

“ஹோ..வீட்டுக்கு தான் போறீங்களா..இல்ல வேற எங்கயும் போகணுமாங்க..?”

“வீட்டுக்கு தான்..ஏன்ம்மா..”

“எனக்கு வொர்க் முடிஞ்சிது..அப்படியே வந்து என்னை பிக்கப் பண்ணிக்கோங்க..”

என்று சொல்ல இது அடிக்கடி நடப்பது தான் என்பதால் அவனும் சரி என்று வைத்துவிட்டான்.

“சரிடா நான் கிளம்புறேன்..உங்களையும் தேவையில்லாம அலை கழிக்கிறேன்..சாரி மச்சான்..இனி நான் பார்த்துக்கிறேன்..என்னால நீங்க தேவை இல்லாம அலையாதீங்கடா..”

“லூசு மாதிரி பேசாதடா..நல்லது நடக்கும் போது மட்டும் கூட இருக்கணும்..பிரச்சனை வரும் போது எங்க வேலையை பார்த்துட்டு போவோமா..? எதுவா இருந்தாலும் சேர்ந்தே ஃபேஸ் பண்ணலாம்..இப்ப மூட்டிட்டு கிளம்பு..”

என்றுக் கூறி அவனிடம் இருந்து அவர்கள் விடைபெற்று செல்ல நண்பர்களின் அன்பில் மகிழ்ந்தாலும் கூடவே மனதும் பாரமானது.

அங்கிருந்து நேராய் உதயாவின் அலுவலகம் சென்று அவளை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

“ஹே..போன விஷயம் என்னாச்சு..”

என்று ஆர்வமாய் கண்ணாடி வழி தன் முகம் பார்த்த மனைவியிடம் கட்டைவிரலை கவிழ்த்துக் காட்டி, “ஊத்திக்கிச்சு..”

என்றவன் அங்கே நடந்ததை கூறினான்.

“இவங்கலாம் சும்மா நாலு லவ் சீனுக்கு மட்டும் வந்தால் கூட அவங்களை ஹீரோயின்னு அக்‌ஷெப்ட் பண்ணிப்பாங்க..ஆனால் ஹீரோவோட லவ் இல்லைனா அவங்களை எவ்வளவு கெத்தா காட்டினாலும் ஒத்துக்க மாட்டாங்க போல..”

என்றவள்,

“தமிழ் சினிமால எவ்வளவோ வித்தியாசமா புதுவித கதைகரு எல்லாம் தியட்டரைக் கலக்கிட்டு இருக்கு..இந்தாளு இன்னும் பழைய பஞ்சாங்கமாவே இருக்கார்..நாளைக்கே நீங்க பெரிய டைரக்டர் ஆனதும் இவரும் வந்து உங்களோட படம் பண்ணனும்னு க்யூல நிப்பாங்க..அப்போ நாம சீன் காட்டிக்கலாம்..விடுங்க..”

என்று அவள் வீராப்பாய் சொல்ல, “ம்க்கும்..”

என்று சலித்துக்கொண்டு,

“நீ ஆகாச கோட்டை கட்டிக்கிட்டே இரு..”

என்று சொல்ல அவன் முதுகில் ஒன்று வைத்து,

“எல்லாம் ஆகுற விசயம் தான்..நடக்குதா இல்லையான்னு மட்டும் பாருங்க..”

என்று சவாலாய் கூறியவள் சற்று தொலைவில் தெரிந்த உணவகம் ஒன்றை காட்டி,

“உதய்..உதய்..அந்த ரெஸ்டாரெண்ட் போகலாம் அங்க நிறுத்துங்க..”

என்க,

“ஏன்..பசிக்குதா..” 

என்று கேட்டாலும் பைக்கை அங்கே கொண்டு சென்று நிறுத்தினான்.

குலாப் ஜாமூன் ஆர்டர் செய்தவள் அது வரும்முன் தன் கைப்பையில் இருந்து ஒரு கவரை எடுத்து அவனிடம் நீட்ட கேள்வியோடு அதனை வாங்கி பார்த்தவன் முகம் அதனை பார்த்ததும் பிரகாசம் ஆனது.

“ஹே..ப்ரமோஷனா..சொல்லவே இல்ல..செம்மடி..இதை தானே நீ முதலில் சொல்லியிருக்கணும்..”

என்று அவன் ஆர்பாட்டமாய் சொல்ல அந்நேரம் வந்த குலாப் ஜாமூனை எடுத்து அவளுக்கு ஊட்டிவிட ஆசையாய் அதனை வாங்கி கொண்டாள்.

“இவ்வளவு சீக்கரம் கிடைக்கும்னு நினைக்கல உதய்..இன்னும் பொறுப்பு கூடிப்போச்சு..லைட்டா நர்வஸா இருக்கு..”

என்று அவள் கூற புன்னகைத்தவன், 

“உன் திறமைக்கு இதைவிட இன்னும் நீ மேல மேல போவ..”

என்று ஆதூரமாய் சொல்ல இந்த இனிய செய்தியால் உதய்யின் அன்றைய நிராகரிப்பு பின்னுக்குச் சென்றது.

நாட்கள் நகர உதய் மிகவும் தீவிரமாய் தன் படத்திற்கான வாய்ப்பு தேடி அலைந்தான்.

தயாரிப்பு நிறுவனங்கள் பலவற்றில் ஏறி இறங்கியதில் பணம் தான் செலவானதே தவிர சரியான பதில்கள் இல்லை.இன்னும் சிலர் லட்சியமே படுத்தவில்லை.மனம் கொஞ்சக் கொஞ்சமாய் தளர்ந்தது.தன் கனவு நிறைவேறாதோ என்று பயம் வர தொடங்கியது.வார இறுதிகளில் ஊருக்குச் செல்வதையும் தவிர்த்தான்.அவனுக்கு எங்கேயும் செல்ல விருப்பம் இல்லை.

அவன் சிந்தனை முழுவதும் படம்..!! படம்..!!படம்..! என்றே நிறைந்து இருப்பதால் உதயா பேசுவதைக் கூட சில நேரங்களில் காது கொடுத்துக் கேட்க முடியவில்லை.

அதிலும் அன்று பெரிதாக மதியிடம் என் பொண்டாட்டியை ராணி மாதிரி பார்த்துபேன் என்று சவால் எல்லாம் விட்டுவிட்டு இன்று ஒரு வேலை கூட இல்லாத நிலையில் தான் இருக்க அவர் முகத்தில் எப்படி விழிப்பது என்று அவமானமாய் இருந்தது.

‘பெரிசா பேசுனியே..உன் லட்சணம் இது தானா..’

என்பதுபோல் மதிவாணன் பேசினால் பதில் சொல்ல தன்னால் முடியுமா என்று அவன் மனம் பின்னடைய ஜெகன் ஜெய்பூரிற்கு மீண்டும் பயணமான போது கூட ஊரிற்கு வர மறுத்துவிட்டான்.

 

கணவனின் போக்கு உதயாவிற்கு மிகுந்த கவலையைக் கொடுத்தது.அவர்கள் இன்பமாய் கழித்த நாட்கள் கானல் நீர் போல் தோன்றி மறைய அந்த நாட்களை மீண்டும் பெற அவள் மனம் ஏங்கியது.அதிகம் யோசிக்காமல் வாழ்க்கையை அதன் ஓட்டத்தில் ஏற்றுக்கொள்ளும் பழைய உதயை மீண்டும் காண மாட்டோமா..?? ஆசையில் தவித்தது.அவன் காட்டும் அக்கறையில் குழந்தையாய் தான் இருந்த  நாட்களை மீண்டும் காண,அவன் காதலில் கரைந்திடத் துடித்தது…!! 

இவ்வாறு தன்னுடைய ஏக்கங்களிலும் தவிப்புகளிலும் தத்தளித்த பெண்ணவள் மெல்ல மெல்ல கணவனின் உணர்வுகளை உள்வாங்க தொடங்கினாள்.

சின்ன வார்த்தையில் கூட ரோஷம் பார்க்கும் உதய் தற்போது தன் லட்சியத்திற்காக அவன் சந்திக்கும் அவமானங்களையும் அதில் அவன் அடையும் வேதனைகளையும் காணும்போது தன்னுடைய எதிர்பார்ப்புகள் மிகவும் சிறுமையாய் தோன்றியது.

ஒரே பாட்டினில் லட்சியத்தை எட்டுவது கற்பனையில் வேண்டுமானால் சாத்தியம் ஆகலாம்.நிஜத்தில் அதற்கான போராட்டங்கள் நிறையவே இருக்க, 

‘உன் இன்ப துன்பங்களில் பங்கு கொள்வேன்..’ என்று அக்னி சாட்சியாய் கூறிவிட்டு தற்போது அவனிடம் இன்பத்தை மட்டுமே எதிர்ப்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் என்று அவள் மனமே கேள்வி கேட்க தன்னை திருத்திக்கொண்டாள்.

அவனோடு இருக்கும் நேரங்களில் முடிந்த அளவு அவன் சிந்தனையைத் திசை மாற்றுவதில் முனைப்பாக இருந்தாள்.அவன் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்தாள்.தோல்விகளில் துவண்டுவிடாமல் தோள் சாய்த்து ஆறுதல் அளித்தாள்.

அடுத்து பணம்..!! பணம் அவர்களுக்குப் பிரச்சனை இல்லை தான்.உதயா அவர்கள் தேவைக்கு அதிகமாகவே சம்பாதிக்கிறாள்.அதே சமயம் கடையின் வருமானத்தில் ஒரு பகுதி உதயிடம் வருவதுபோல் தான் அமைத்திருந்தார் செந்தில்நாதன். மகன் என்ன செய்தாலும் சரி என்ற ஆணித்தரமான எண்ணம் கொண்ட மனிதர் அவர்..அவன் எவ்வளவு செலவு செய்தாலும் ஏன், எதற்கு என்று ஒரு வார்த்தை கேட்க மாட்டார்.ஆனாலும் தந்தை உழைக்கத் தான் ஒன்றுமே செய்யாமல் அவர் சம்பாதித்த பணத்தை இத்தனை வயதிற்கு பிறகும் எடுத்து உபயோகிக்க மனம் வெட்கியது.அதனை அவன் சொல்லாமலே உணர்ந்துக்கொண்ட உதயா தங்கள் வீட்டுச் செலவுகளை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டாள்.அது அவ்வளவு எளிதாகவும் இருக்கவில்லை.

‘நான் எதுக்குமே லாயக்கு இல்லைன்னு முடிவு பண்ணிட்டியா..அதுவா..இதுவா..’

லபோ திபோவென உதய் குதிக்க அவனுக்கும் மேல் சண்டைப்பிடித்தாள்.

“இதுவே நான் வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்தா நீதானே என்னையும் பார்த்துப்ப..?? அப்போ நான் மட்டும் உன் பணத்தில் வாழ்ந்தால் பரவாயில்லை..உனக்கு நான் சம்பாதித்த பணத்தை உபயோகித்தால் தலையிரக்கமா..? நீயும் நானும் வேற வேற இல்லைடின்னு டயலாக் மட்டும் பெரிசா விட்ட..இப்ப உன் பணம் என் பணம்னு பிரிச்சு பேசுறீயாடா..”

என்று காளியாய் மாறி ஆடியவள்,

“இப்ப இதுக்கு ஒத்துக்கலன்னா..நாளைக்கு நீ எவ்வளவு சம்பாதிச்சாலும் அதில் ஒரு பைசா கூட நான் தொட மாட்டேன்..”

என்று தீர்க்கமாய் சொல்ல உதய் தான் தழைந்துப்போனான்.

அதுவே கோபம் தணிந்ததும்,

“நீங்க முழு மனசா உங்க முயற்சியில் கவனமா இருங்க..வேற எந்த கவலையும் உங்க மனசில் அண்டக் கூடாது..சரியா..என் உதயகுமாரா..!!”

என்று தலைகோதி கன்னம் ஏந்தி சமாதானம் சொல்லவும் மறக்கவில்லை.

இன்று தன் அருகில் நித்திரையில் இருக்கும் மனைவியின் வரிவடிவத்தைப் பார்த்திருந்தவனுக்கு அது தான் ஞாபகம் வந்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நின்று நிதானமாய் அவள் முகம் பார்த்து இரசிக்கிறான்.நெஞ்சம் அவள் கொண்ட நேசத்தை எண்ணி நெகிழ்ந்தது.

காதோரக் கூந்தலை ஒதுக்கி கன்னக் கதுப்பையை வருடி,

“நமக்கு கல்யாணம் ஆகி ஃப்யூ மன்த்ஸ்  தான் ஆகுது..ஆனால் எனக்கு உன்னோடு ஆண்டாண்டு காலம் வாழ்ந்த மாதிரி இருக்குடி.. ‘என்ன தெரியும் என்னை பத்தினு..’ ஒருவாட்டி உன்னைக் கேட்டு இருக்கேன்..இப்ப என்னைவிட உனக்கு தான் என்னைப் பத்தி எல்லாம் தெரியுது..என் ஒவ்வொரு அசைவையும் உணர்ந்துப்போற..ஏண்டி..ஏண்டி..உனக்கு இவ்வளவு காதல்..?இவ்வளவு அன்பு..? நான் என்ன தவம் செஞ்சேன் இந்த அழகு தேவதை எனக்கே எனக்குன்னு கிடைத்ததுக்கு..”

என்று பேச அவனுக்குப் பதில் சொல்ல வேண்டியவள் சற்றும் அசையாமல் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள்.

“உனக்கு என்மேல் கோபமே வராதா உதயா..உனக்காக நான் ஒன்னுமே செய்யலை..நீ என் பக்கத்தில் இருக்கும்போது கூட வேற சிந்தனையில் தான் இருந்திருக்கேன்..நான் நானாகவே இல்ல..நீ மட்டும் பக்கத்தில் இல்லைனா நான் என்ன ஆகியிருப்பேன்..”

என்றவன் அவள் நெற்றியில் அழுத்தமாய் இதழ் பதித்து,

“போதும்டி..உன்னை நிறைய கஷடப்படுத்திட்டேன் உதயா…இனியும் உன்னை எந்த கவலைக்கும் ஆளாக்க மாட்டேன்…இந்த அன்சர்டெய்ன் லைஃப் வேணாம்…தினம் தினம் நம்பி நம்பி ஏமாறவும் வேணாம்..நாமளும்  மத்த கப்பிள்ஸ் மாதிரி நிம்மதியா ஒரு வாழ்க்கை வாழுவோம்..என்ன சரியா..”

என்று அவளிடம் சொன்னவன் மனதில்  தீர்க்கமான முடிவொன்று குடிகொண்டது.

‘நாளை சனிக்கிழமை தானே..’

என்று நினைவு வந்தபோது ஊருக்குப் போகியும் கிட்டதட்ட ஒன்றரை மாதம் ஆகிவிட்டது என்பது ஞாபகம் வந்தது.

‘நான் வரவில்லையென்றால் என்ன..நீ போய்விட்டு வா..’ என்று எவ்வளவோ சொன்னாலும் உன்னைத் தனியே விட்டுப்போக மாட்டேன் என்று அழுத்தமாய் இருந்து விட்டாள்.

“அப்பா – அம்மா கூட அடிக்கடி இங்க வந்து ஸ்டே பண்ணாங்க..பட் இவ வீட்டில் யாரும் வரவும் இல்லை..இவளும் போகல..ரொம்ப மிஸ் பண்ணுவால்ல..”

என்றெண்ணியவன் உடனே இருவருக்கும் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்துவிட்டு நேரத்தைக் கூட கவனிக்காமல் உடனே தன் தமக்கைக்கு அழைப்பும் விடுத்தான்.

“ஹலோ..என்னடா..இந்நேரத்தில்..ரெண்டுப் பேரும் நல்லா இருக்கீங்கல்ல..”

என்ற வெண்பாவின் பதட்டமான குரலில் தான் மணியைப் பார்த்துவிட்டு,

“நல்லா இருக்கோம்..பிரச்சனை எதுவும் இல்ல..நேரம் பார்க்கலைக்கா..சாரி..சாரி..தூங்கிட்டியா..”

என்றான்.

“இல்லடா..ஒரு டிரஸ் நாளைக்கு டெலிவரி கொடுக்கணும்..இன்னும் அதை முடிக்கல..அதுக்கான வேலையைத் தான் பார்த்துட்டு இருக்கேன்.. உனக்கு வீட்டிலே வேலை பார்க்கத் தனியா ரூம் அமைச்சு கொடுத்தது தப்பா போச்சு..நேரங்கெட்ட நேரத்தில் வந்து உட்கார்ந்து இருக்க..’ அப்படின்னு சொல்லி உங்க மாமா என்னை முறைச்சு பார்த்துட்டு இப்ப தான் தூங்கப் போனார்..”

என்று அவள் சொல்ல,

“அக்கோவ்..உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா..”

என்று அவன் வாய்விட்டுச் சிரிக்க கொஞ்ச நாளாய் அதிகம் பேசாமல் உர்ரென்றே இருந்த தம்பி சிரிக்கவும் அவளுக்கு ஆச்சரியம் தான்.

“என்னைவிடு..நீ என்ன இந்த நேரத்தில் கால் பண்ணிருக்க..”

“ம்ம்ம்..நாளைக்கு ஊருக்கு வரோம்..அதைச் சொல்லத் தான்..”

“ஹே..நிஜமாவா சொல்ற…ஈவினிங் இந்த உதயாட்ட எப்ப வருவன்னு கேட்டதுக்கு தெரியலண்ணின்னு சொன்னா…”

“அவளுக்குத் தெரியாது தான்..இப்ப தான் டிக்கெட் போட்டேன்…நாளைக்கு காலைல திடீர்ன்னு வந்து நிற்கும் போது..வயசான காலத்தில் நீ பட்டுன்னு நெஞ்சை பிடிச்சு விழுந்துட்டேனா..அதான் முன்னெச்சரிக்கையா சொல்லிட்டேன்..வைச்சிடவா…”

என்று குறும்பாய் சொல்ல,

“கொழுப்புடா உனக்கு..வாடா உன்னை பார்த்துக்கிறேன்…”

என்று ஃபோனை வைத்தவளுக்கு அவர்கள் வருகிறார்கள் என்ற செய்தியில் அகமும் முகமும் மலர்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!