Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நிவி அம்மு - மன்னவன் மஞ்சத்தில்

மன்னவன் மஞ்சத்தில் 8

8.

மஞ்சம் – 8

பாட்டி அக்னிக்கு போனில் விஷயத்தை கூறி வர வைக்க,

“பாவத்துக்கு தண்டனை ஆயிரம் வழி இருக்கு நிவி. இது வழி கிடையாது.” என அடங்காத கோபத்துடன் கூறியவன்,



Advertisement

“உங்க மேல நிறைய மரியாதையும், அக்கறையும் இருந்துச்சு. ஆனா அது எல்லாத்தையும் இன்னைக்கு துடைச்சு போட்டுட்டேன். உங்களை மாதிரி ஒரு கொடூரமான மனிதர்களை நான் பார்த்ததே கிடையாது. உங்கள் குணத்துக்கு உங்களை சுத்தி ஒரு நல்லவர்கள் கூட இல்லை” என சூடாமணியைப் பார்த்து சூடாக கூறியவன், ஆத்திரம் கொஞ்சம் குறையவே இல்லை.

“தமிழ் ப்ளீஸ் போ. உன் நண்பன் வந்தா பிரச்சனை பெருசாகிடும். அவருக்கு அவர் குடும்பம் எவ்ளோ முக்கியம்னு தெரியும் தானே. உன் அப்பா, அம்மா நீ அடி வாங்குனா தாங்க மாட்டாங்க. போ.” என கெஞ்சியவள் அவன் அசையாமல் நிற்பதை கண்டு பட்டென்று அவன் காலில் விழுந்து விட்டாள்.

அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. அமரன் தவறு செய்திருந்தாலும், இப்போது பழி தமிழ் மீதுதான் விழும். இந்த நட்பு உடைய கூடாது என்று நினைத்தாள்.

Advertisement

அவனோ கட்டுக்கடங்காத கோபத்துடன் விறு விறுவென செல்ல, சூடாமணி தன் மகனை தூக்க, பாட்டி ஓடி வந்து ஒரு பக்கம் பிடித்துக் கொண்டார்.

Advertisement

அக்னி தன் பைக்கை மின்னல் வேகத்தில் கொண்டு வந்து நிறுத்தியவன் கண்களில் அவன் மனைவி மண்ணில் மண்டி போட்டிருப்பதும், தம்பி இரத்த வழிய தடுமாறி தாய், பாட்டி உதவியுடன் எழுவதையும் கண்டவன், முதலில் ஓடி வந்து தம்பியை தூக்கி நிற்க வைத்தான்.

அவன் வாயில் இருந்து வழிந்த இரத்தத்தை துடைத்தவன், “என்ன ஆச்சு? யார் அடிச்சது?” என கேள்வி எழுப்ப,

“உள்ள போகலாம் வாங்க.” என பாட்டி அழைக்க, அதையும் கண்டு கொல்லாமல், “எல்லாத்துக்கும் காரணம் இவள் தான் அண்ணா. இவளுக்காக உன் நண்பன் என்னை நாயை அடிக்கிற மாதிரி அடிச்சிட்டு போறான். அது மட்டுமா அம்மாவையும் மரியாதை இல்லாமல் பேசிட்டு போறான். எப்படி இருந்த நம்மளை இன்னைக்கு இந்த மொத்த தெருவே வேடிக்கை பார்க்குது.” என நெஞ்சம் விடைக்க கத்த,

Advertisement

அக்னிக்கு அனைத்தையும் விட அம்மாவை மரியாதை இல்லாமல் பேசியது தான் வலித்தது,

அவனோ கொஞ்சமும் யோசிக்காமல் எழுந்து நின்றவளை கழுத்தை பிடித்து திருப்பியவன், “அடி ஆள் வைக்கிறியா?” என் கொஞ்சமும் யோசிக்காமல் ஓங்கி அறைய அவன் அடித்த வீரியத்தில் அப்படியே சுற்றி சென்றவள் கீழே விழுந்து மயங்கி சரிந்தாள்.

“ஐயோ!” என தெருவில் நின்று வேடிக்கை பார்த்தவர்களுக்கு நெஞ்சம் துடித்து போனது.

அக்னி நேர்மையானவன் என்று ஊரே நம்பிய நம்பிக்கையை அக்னி இந்த நிமிடம் இழந்து விட்டான்.

கோபம் கண்ணை மறைக்க, கீழே விழுந்து கிடந்தவளை வெறிக்க பார்த்தவன், அவளை அப்படியே விட்டு, விட்டு தன் பைக்கை எடுத்துக் கொண்டு தமிழை தேடி சென்றான்.

ஒரு நொடி நிதானித்து என்ன நடந்தது என இருவரிடமும் கேட்டு இருக்கலாம்.

அதற்குள் தமிழ் பெற்றவர்கள் இருவரும் மகனுக்காக துடித்துக் கொண்டிருந்தனர்.

“என்ன தங்கம் இப்படி பண்ணிட்ட? உனக்கு இவ்ளோ கோபம் வராதே? சூடாமணி பத்தி உனக்கு தெரியாதா? அக்னிக்கு தெரிஞ்சா என்ன நடக்குமோ?” அவன் அன்னை பரிதவித்து நிற்க,

“அம்மா அக்னி கொஞ்சம் நேர்மையானவன், அவளோ மோசம் கிடையாது.” என தன் குடும்பத்தை சமாதானம் செய்து கொண்டிருந்தான். நண்பன் மீது வைத்த நம்பிக்கையில்.

“தமிழ்!” என்று அக்னி குரல் ஓங்கி ஒலித்தது.

“தங்கம் அக்னி தான் வந்திருக்கான். அவன் குரலே சொல்லுது அவன் கோபத்தை. நீ இங்கேயே இரு. நான் போய் அவன் கிட்ட பேசுறேன்.” என அவன் தந்தை தடுக்க,

“அப்பா அவன் கிட்ட நான் எடுத்து சொல்லி புரிய வைக்கிறேன். நீங்க பயப்டுற மாதிரி எதுவும் நடக்காது.” என இருவருக்கும் நம்பிக்கை கொடுத்து வெளியே வர, அக்னி நண்பன் நம்பிக்கையை உடைப்பது போல, அவன் சட்டையை பிடித்து இழுத்து வந்து வீதியில் வீசியவன், எதைப்பற்றியும் யோசிக்காமல் சரமாரியாக தாக்கினான்.

இருவருக்குள்ளும் இருந்த நட்பு முறிந்து போனது.

தமிழ் ஏமாற்றத்துடன் அவன் கொடுத்த அடிகளை வாங்கி கொண்டான் “அக்னி என் மகனை விடு, அவன் பாவம். விடு அக்னி.” என அவன் தாய் ஓடிவர, அவன் காதில் அதெல்லாம் விழவில்லை.

“என் அம்மாவை பேச உனக்கு என்ன உரிமை இருக்கு? அவள் இப்போ என் பொண்டாட்டி. அவளுக்கு அங்க என்ன நடந்தா உனக்கு என்ன? அவளை வெட்டி கொன்னு போட்டாலும் யாருக்கும் கேட்க உரிமை கிடையாது.” என்று ஆக்ரோஷமாக கத்திக் கொண்டே அவனை தாக்க, சிலர் வந்து அக்னியை தடுத்து பார்த்தனர், அவனை கட்டுபடுத்த முடியவில்லை. அவர்களை உதறி தள்ளி விட்டான்.

“தமிழ்!” என கத்திக் கொண்டே ஓடி வந்த அவன் அன்னையை கவனிக்காமல் தள்ளி விட, அதுவரை நண்பன் தானே? என்று அடி வாங்கியவன் தன் அன்னை கீழே விழுந்ததில் “அம்மா!” என முழு பலத்துடன் கத்திக் கொண்டு ஓடினான்.

அக்னி தள்ளி விட்ட வேகத்தில் அவர் சுவரில் மோதி கீழே விழுந்து இருக்க,

அக்னி அப்போது தான் தன்னிலை அடைந்தான்.

“அம்மா!” என தமிழ் தன் அன்னையை தூக்க, அவர் நெற்றியில் இருந்து இரத்தம் கசிய “நமக்கு சண்டை வேண்டாம் தங்கம். தவம் இருந்து உன்னை பெத்தது யாரோ ஒருத்தன் கையாள அடி வாங்கவா? யார் வம்பும் நமக்கு வேண்டாம்.” என மகன் காயங்களை பார்த்தபடி அழுதார்.

அக்னி உள்ளம் துடித்தது. அதுவும் அவர் கூறிய மூன்றாவது மனிதர் என்ற வார்த்தை அவனை கூனி போக செய்தது. “நீயும் என் மகன் தான் அக்னி.” என்றவர் இன்று மூன்றாவது மனிதர் என்று கூறியதை கேட்டு மனம் உடைந்து போனது அவனுக்கு.

“அம்மா!” என அக்னி ஓடி வர,

“அங்கேயே நில்லு.” என தமிழ் கை நீட்டி தடுக்க, அக்னி கால்கள் ஆணி அடித்தார் போல் அப்படியே நின்றது.

“யாருக்கு யார் அம்மா? இவங்களா உன்னை பெத்தவங்க?” என் தமிழ் விழிகள் சிவக்க கேட்க,

அக்னி உறைந்து போனான்.

“தமிழ்…” என எதையோ சொல்ல வர,

“இனி என் பெயரை கூட நீ சொல்லாத. உன் குடும்ப விஷயத்தில் நான் தலையிட மாட்டேன். எனக்கும் உனக்கும் எந்த உறவும் கிடையாது. இன்னையோடு நீ எனக்கு மூன்றாவது மனிதன் தான். இனி என் முகத்தில் கூட முழிக்காத. நீ இருக்க திசை பக்கம் கூட நான் வர மாட்டேன். வெளியே போ.” என்றான் அவனை பார்க்க கூட விரும்பாமல்.

அக்னி புரிந்து கொண்டான். தமிழ் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் அவன் மனதில் இருந்து வருவதை. இந்த நொடி அவனின் பல வருட உயிர் நட்பு முறிந்து போனது.

“அம்மா நான் வேணும்னு பண்ணல.” என குரல் உடைய கூற,

“எனக்கு என் தமிழ் மட்டும் என்னை அம்மா ன்னு கூப்பிட்டா போதும். தயவு செய்து விட்டுடு. எனக்கு இருக்கிறது ஒரு பிள்ளை. அவனை அளாக்கி அவன் குடும்பத்துடன் வாழுறதை நான் பாக்கணும். உன் கையால் அடி வாங்கி சாகவா நான் என மகனை பெற்றேன். உன் தம்பியை என் பிள்ளை அடிச்சது தப்பு தான். என்ன இருந்தாலும் நீ சூடாமணி க்கு பிறந்தவன் தானே. அதை நிருபிச்சிட்ட. இனி என் மகன் உங்க தெரு பக்கம் கூட வரா மாட்டான். எங்களை மன்னிச்சிடு.” என கை கூப்பி கூறியவர், மகனை அணைப்பாக அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்று கதவை மூடி விட்டார்.

அக்னி அப்படியே கூடாக தேங்கி நின்றான் மூடிய கதவுகளை பார்த்தபடி.

“நீ எப்போ வேணாலும் வரலாம். போகலாம் டா. இது உன் வீடு. உனக்காக கதவு திறந்தே இருக்கும்.” என்ற காலங்கள் போய் இன்று இவன் உள்ளே வரக்கூடாது என்று மூடி கொண்டனர்.

உயிரை வேரோடு வெட்டி சாய்ப்பது போல துடித்தான்.

“அக்னி உன்னை ரொம்ப நல்லவன்னு நினைச்சேன். ஆனா நீயும் இப்படியான்னு? யோசிக்க வச்சிட்ட.” ஒரு தாத்தா அவனை பார்த்து கூற, அங்கிருந்த அனைவரின் பார்வையும் அதே போல் தான் அவன் மீது படிந்தது.

இரண்டாவது முறையாக வாழ்வில் தோற்று போனதாக உணர்ந்தான்.

அப்படியே நிற்க தன்மானம் தடுக்க, தன் வண்டியில் ஏறி அமர்ந்தவன் மீண்டும் ஒரு முறை நண்பன் வீட்டை பார்த்தான்.

நண்பன் நின்று சிரிக்கும் ஜன்னலை பார்த்தான்.

அங்கு தமிழ் நிற்கவில்லை.

தளர்வாக வீட்டிற்கு வர அவன் மனைவியோ கொளுத்தும் வெயிலில், சுடு தரையில் அப்படியே கிடந்தாள்.

உயிரே நிற்பது போல் வலிக்க, அவசரமாக வண்டியை நிறுத்து விட்டு ஓடி வந்தவன், அவள் அருகில் வந்ததும் அதிர்ந்து போனான்.

அவன் அடித்த அடியில் அவள் முகம் வீங்கி இருந்தது.

அப்போது தான் உணர்ந்தான் நிதானமாக இல்லாமல் கோபம் கொண்டதை, வெட்கியபடி அவளை கையில் அள்ளிக் கொண்டு வீட்டிற்குள் வர, “அண்ணா இவளை எதுக்கு திரும்ப உள்ள தூக்கிட்டு வர? இந்த ராசி இல்லாதவள் இந்த வீட்டில் அடி எடுத்து வைத்ததில் இருந்து வீடே சுடுகாடாக மாறிடுச்சு.”

அக்னி தன் தம்பியை பார்ப்பதை தவிர்த்து,

“அம்மா தமிழ் உங்களை என்ன சொன்னான்?” என்றான் அன்னை கண்களை பார்த்து.

முன்பே கேட்டிருக்க வேண்டியது.. மிகவும் தாமதமாக கேட்கிறான்.

சூடாமணி பதில் சொல்ல முடியாமல் தடுமாற, அந்த தடுமாற்றத்தை வைத்தே கண்டு கொண்டான் உண்மையை.

அவனுக்கு தொண்டை குழி அடைத்தது.

பேச அவனிடம் வார்த்தைகள் இல்லை.

தீராத ஏமாற்றம் அவன் உடல் முழுவதும் புகை போல் பரவியது. சொல்ல முடியாத வலி அவன் இதயத்தை தீவிரமாக வதைக்க, கையில் சுமந்திருந்த அல்லி கொடியை ஏந்தியபடி அறைக்குள் வந்தவன், அவளை மெதுவாக கட்டிலில் கிடத்தினான்.

அவளை வாகாக படுக்க வைத்தவன், சமையல் அறை உள்ளே நுழைந்தான். சுடு தண்ணீர் வைத்து காட்டன் துணி எடுத்துக் கொண்டு அறைக்குள் வந்தவுன், சூடான தண்ணீரில் துணியை முக்கி தண்ணீரை பிழிந்து, அவளின் வீங்கிய கன்னத்துக்கு ஒத்தடம் கொடுத்தான்

தொடரும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!