Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

மயங்க தெரிந்த மனமே – 5

அத்தியாயம் 5

தோட்டத்தின் பின் நிறுத்தியிருந்த ஸ்கூட்டியின் சாவியை அதன் துவாரத்தில் சொருக முயன்று முயன்று தோற்ற லாவாவிடம்..

“லாவா.. ரொம்ப ராவா அடிச்சிட்டடி நீ.. உன்னால வண்டி ஓட்ட முடியாது.. கொடு நான் ஓட்றேன்” என விக்ரா கூற

“ஆமா நான் ராவா.. அடிச்சேன்.. நீ ரவை போட்டு அடிச்ச..” அவன் நெற்றியில் ஓங்கி தன் உள்ளங்கையால் ஒன்று வைத்து “நீயும் ராவா தா அடிச்சடா என் டுபுக்கு” என



Advertisement

சுரீரென எதுவோ நெற்றிக்குள் ஏற, இவனும் அவள் முதுகில் பதிலுக்கு வைத்தான் ஒன்று,

‘ஸ்..ஆ..’ என அலறியவளிடம் “ராவா அடிச்சேன் தான் ஆனால் கொஞ்சம் தான், நீ தான் தலைகால் புரியாம ரொம்ப அடிச்ச.. இப்படியே வண்டிய எடுத்துட்டு போய் எவன் கவுட்டுகுள்ளயாவது கொண்டு போய் விடு.. பின்னாடியே வரும் என் அத்த, அன்னியோட நீ செத்தடி என் வெண்ண மவளே” ராகம் போட்டு இழுத்தான் விக்ரவாண்டி.

ஏறிய போதையில் சிறிது இறங்கியது மீனாவை நியாபகபடுத்தியதில், “ஜாலியா இருக்குற நேரத்தில் ஏண்டா ஜகன் மோகினிய நியாபகபடுத்துற” போதையோடு ஏறி இறங்கியது குரல், கூடவே சாவியை இவன் கையிலேயே கொடுத்து “நீயே ஓட்டுடா சாம்பு மவனே” என

Advertisement

“சாம்பு மவனா? அடிங்.. யாரடி சொல்ற” படக்கென இவன் கேட்க

Advertisement

“உன்ன தாண்டா சாம்புமவனே.. நீ மட்டும் வெண்ணமவளேன்னு கூப்பிடுற, அதான் பழிக்கு பழி”

“ம்.. பழி வாங்குறதெல்லாம் சரிதான்.. அதென்ன சாம்பு மவனே” என்றபடி பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

“ஹ..ஹ..” பெரிதாய் சிரித்தவள்

Advertisement

“சமரசுவோட மவன்.. ஷார்ட்டா சாம்புமவன்.. எப்படி.. நல்லாயிருக்குல்ல..” என்றபடி இவன் பின்னே ஏறி அமர்ந்தாள்

‘ஷப்பா.. இது வேறையா?’ என நினைத்தவன் “ம்.. இருக்கு இருக்கு நல்லா இருக்கு” என சிலாகித்தவன் “அவர் எவ்ளோ பெரிய டெரர் பீஸூன்னு தெரியாம நீ வேற.. சாம்புமவன் பாம்புமவன்னுட்டு.. இப்படி குடிச்சு கூத்தடிச்சது மட்டும் தாடிக்கு தெரிஞ்சது.. அவர் கையில சாவுறதுக்கு, நேரா நாமளே சுடுகாட்டில் போய் பொணத்தோட பொணமா படுத்துற வேண்டியது தான்” என புலம்ப

“அய்ய மத்த பொணத்தோட படுத்தா நாறும்… நீயும் நானும் மட்டும் கட்டையெல்லாம் அடுக்கிவச்சு தனியா ஒன்னுல படுத்துக்கலாம்” என இவள் கூலாக சொல்ல

திடுக்கிட்டு அதிர்ந்தவன் “அடியே.. நான் சாவுறத பத்தி பேசுனா? நீ ஏதோ வேல்ட் டூர் போற கணக்கா, தனியா போகலாம்ன்ற” என

“எங்க போனலும் சரி என்னையும் உன்கூட கூட்டிபோ.. ஹான். கூடவே ரம்மும், சிக்கனும் எடுத்துட்ட போயிடலாம்” இவள் கூற
அவளது பேச்சில் எங்காவது சென்று கல்லில் முட்டிகொள்ளலாம் போல இருந்தது இவனுக்கு.

“சாம்பு..பூ…” சற்று அதிகமாகவே குரலை ஏற்றி அவனை நினைவுலகத்திற்கு கொண்டுவந்து “மீனா வை எப்படி சமாளிக்க போற” ஸ்கூட்டியை ஓட்டிக்கொண்டிருந்தவனின் தோளில் சரிந்தபடி இவள் கேட்க

“அத நான் பார்த்துகிறேன், வெண்ண.. நீ அமைதியா வா..” என இவளது வாயை அடைக்க, அவளோ அமைதியாய் இருப்பவளா என்ன? வாய் ஓயாது கேள்வி கேட்டே வந்தவளுக்கு, இவனும் பதில் சொல்லி கொண்டே வந்தான்.

இருவரும் பேசிக்கொண்டே வந்ததில் அர்த்தங்கள் இருந்ததோ என்னவோ.. ‘சாம்பு’ என அவளும் ‘வெண்ண’ என அவனும் அழைத்து கொண்ட உயிர் எழுத்துகளில் தான் எத்தனையாயிரம் அர்த்தங்கள் ஒளிந்திருந்தது.

ஒருவழியாய் எதிரில் வருபவர்களுக்கு சேதாரம் இன்றி அவளை வீட்டில் கொண்டு சேர்த்தவன்,

“நீ முதல்ல போ.. நான் பத்து நிமிஷம் கழிச்சு வரேன்.. அப்புறம், அத்த எது கேட்டாலும் வாய திறக்காத.. அமைதியா அப்படியே போய் படுத்துடு, இரண்டு மூனு மணிநேரம் தூங்கி எழுந்திரு.. சரியா போகும்.. இல்லைன்னா எனக்கு போன் பண்ணு” என அவளை உள்ளே அனுப்பி வைத்தான்.
இவளோ செல்லாமல் அவனையே பார்த்திருக்க

“லாவா.. என்னடி, வாந்தி எதுவும் வருதா” என இவளை நெருங்க…

“நோ.. வே.. எங்கம்மா சாம்பார் தான் வாந்திய வர வைக்கும். இது தேவாமிர்தம்.. தேங்க்ஸ் பார் தி சரக்கு மாமே.. சும்மா இறக்கையே இல்லாமல் பறக்குற பீல்” என

முப்பதியிரண்டு பற்களையும் காட்டிவிட்டு, “லோக்கல் ரம்மே சும்மா அள்ளுது.. அடுத்து என்ன பெத்த மவராசன் மிலிட்டரி வாங்கி வைக்குற கேன்டின் ரம்மை ஆட்டைய போட்டு டேஸ்ட் பார்க்கனும் என

“லோக்கலுக்கே இந்தாட்டம், அலும்பு தாங்கல, இதுல கேன்டின் ரம்மா.. உயிரோட இருப்பனு நினைக்கிற?”

“அதெல்லாம் இருப்பேன்டா டுபுக்கு” என இவள் வீட்டினுள் திரும்ப ‘ஏ.. எப்பா.. முடியலடா சாமி இவளோட’ விக்ரா, தலை உலுக்கி நிதானத்திற்கு வந்தவன், ஸ்கூட்டியின் மீதே சாய்ந்து நின்றுவிட்டான்.

இவளோ திறந்திருந்த கதவினூடே பூனையாய் புகுந்து, மீனாவை நோட்டம் விட, அவரோ காலையில் வாங்கிவந்த பொருட்களை ஆராய்ந்து கொண்டிருந்தார்.

‘ஹப்பா.. மீனா பிஸ்ஸியா இருக்கா, நாம புஸ்ஸிகேட் மாதிரி மெதுவா போய்டலாம்’ அவளுக்கு அவளே சொல்லி கொண்டு அவளறைக்கு சென்று கமுக்கமாய் படுத்துவிட்டாள்.

இவள் மாட்டிக்கொள்ள கூடாது என ஆயிரமாவது முறையாய் வேண்டிக்கொண்டவன், உள்ளேயிருந்து தாய் மகளின் கூக்குரல்கள் எதுவும் கேட்காததில் மனம் பெரிதாய் அமைதி கொள்ள, பத்து நிமிடங்கள் சென்று, வெளியே பைப்பில் வந்த நீரை அடித்து முகம் கழுவி, கொடியில் காய்ந்து கொண்டிருந்த ஒரு துணியில் துடைத்துவிட்டு “அத்த.. அத்த..” என அழைத்து கொண்டே வந்தான்.

மீனாவிற்கு நாச்சியார் ஆகாதவள் தான், ஆனால் அண்ணன் மகனாயிற்றே.. இவன் குரல் கேட்டதும்

“விக்ரவாண்டி.. வாயா.. என்ன இந்த பக்கம், உக்காரு” கேட்டபடி சோபாவில் அமர சொல்ல.. அவனோ அமராது “அத்தை, விஜய்க்கு ஏதோ செய்முறை இருக்காமே, ஏதோ வாங்கனுமாம். உங்களை அப்பத்தா கூப்பிட்டுச்சு” என

“ஆமாம் விக்ரா.. ஆத்தா சொல்லுச்சு விடியமுன்னேயே போய் அம்மா சொன்னதெல்லாம் வாங்கியாந்துட்டேன்.. நீ முன்ன போ.. நான் எடுத்துட்டு வரேன்” என

“நீங்க ஏன்த்த சிரமபட்டுகிட்டு, இது தான..” டேபிளின் மேல் இருந்த பைகளை காட்டியவன், அதற்கு மீனா ‘அந்த்பை தான்’ என தலையசைக்கவும், தன் கையில் எடுத்து கொண்டான்.

“இரு விக்ரா, இந்த லாவன்யா வரட்டும், அவ வந்த பிறகு அவளையும் அழைச்சிட்டு போகலாம். அப்போவே மகா கூட போனா இன்னும் வரலை” என முடிக்கும் முன்பு

“அவ, அவ ரூமில் தூங்கிட்டு இருக்காத்தை.. அவளை அவ தூங்குறதை பார்த்துட்டு தான் உங்களை பார்க்க வந்தேன்” எனவும்

“என்ன சொல்ற” என திகைத்தவர் வேகமாய் அவளறைக்கு சென்று பார்க்க, கட்டிலில் பப்பரக்காவென கண்டமேனிக்கு படுத்து உறங்கி போயிருந்தாள்.

முகம் சுருக்கி பார்த்தவர் “என்ன, இந்நேரம் தூங்குறா.. இவ வந்தது கூட எனக்கு தெரியலையே!” மீனா குழம்ப

“வழக்கம் போல இரண்டு பேரும் சண்டை போட்ருபீங்க, ஏதாவது கோபமா இருக்கும்த்தை, நீங்க வாங்க அப்பத்தா உங்களை கூப்டுச்சு, நான் வேற மண்டபத்துக்கு கிளம்பனும்” இவன் முடிந்தளவிற்கு தள்ளி நின்று பேசியபடியே சமாளிக்க

‘தூங்கும் அவளை எழுப்பினால் தன்னை உண்டில்லை என செய்துவிடுவாள்’ தவிர விக்ராவை வைத்துகொண்டு தாமதிப்பது சரியில்லை, அதே நேரம் லாவாவை தனியாய் விட்டுவிட்டு, கதவை திறந்து போட்டு வரவும் முடியாது என அவளை உள்ளே வைத்து பூட்டிவிட்டு, ஒரு சாவியை ஜன்னல் வழியே அவள் கட்டிலில் தூக்கி எறிந்துவிட்டு, இன்னொரு சாவி எடுத்து கொண்டு விக்ராவுடன் கிளம்பிவிட்டார் மீனா.

சமரசுவின் முதல் சகோதரி தான் இந்த மீனா, உசிலம்பட்டியில் திருமணம் செய்து கொடுத்திருந்தாலும் கணவர் ஆர்மி என்பதால் பெரும்பாலும் பெரம்பலூரில் தான் வசிப்பிடம். பிற்காலத்தில் அதே ஊரை அவர்கள் நிரந்தரமாக்கி கொண்டனர்.

முதல் காரணம் மீனாவின் மாமியார் நாத்தனார் தொல்லையில் இருந்து விடுதலை, இரண்டாவது காரணம் லாவா பிறந்த பொழுதில் மீனா உடல்நலம் மோசமாகிவிட, கோதை தான் அவர் உடல்நிலையை மீட்டு கொணர்ந்தார்.

தாய்வீடு சொர்க்கம் தான் எந்த ஒரு பொண்ணுக்கும், திருமணம் முடிந்த பின்பும் தாய் வீட்டிலேயே இருக்கும் பாக்கியம் எத்தனை பெண்களுக்கு கிட்டும்.

இறுக்கி பிடித்து கொண்டார் கிடைத்த வாய்ப்பை. ஆனால் நாச்சிக்கும், மீனாவுக்கும் ஆகவே ஆகாது.
நாச்சி ஏதாவது செய்தால் கோதை வழியே மீனாவிற்கும், மீனா மூலம் கௌரிக்கும் (சமரசுவின் இரண்டாவது சகோதரி) சென்றுவிடும்.

ஈரை பேனாக்கி பேனை பெருச்சாளியாக்கி நாச்சியிடம் வாங்கி கட்டி கொள்வார் மீனா. அதன் பொருட்டு இரண்டு தெரு தள்ளி இருந்த வீட்டை விலைக்கு வாங்கி அங்கேயே டேரா போட்டுவிட்டார் மீனா.

மீனாவிற்கு ஒரே பெண் தான் லாவன்யா. இரண்டாவதாய் ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்து போனதில் அடுத்த பிள்ளை பெற்றுகொள்ளும் முயற்சியை கைவிட்டுவிட்டார்.

அதன் பொருட்டாய் பாண்டிகளுடன் தான் வளர்ந்தாள். பாண்டிகளின் அடுத்தடுத்த வயதில் இவளும் அடங்குவாள். சிறு வயதில் இருந்து நால்வரின் புடைசூழ தான் வலம் வருவாள்.

மற்றவர்களை பொருத்தவரை, சகல பாதுகாப்போடும் இருக்கும் பெண் லாவா. ஆனால் வீட்டினரை பொருத்தவரை பாண்டிகள் குழுவில் ஐந்தாவது பாண்டியாய் சேர்ந்தவள் தான் இந்த லாவன்யா பாண்டி.

தாங்கள் கற்ற அத்தனை மொள்ளமாரிதனங்களை அவளுக்கும் கற்று கொடுத்தனர், அவளது மாமன் மகன்கள். இவள் பாசையில் சொன்னால் லகுடபாண்டிகள்.

கிட்டத்தட்ட அவர்கள் மத்தியில் மகுட பாண்டியாய் தான் வளர்ந்தாள்.

வம்பு, அடிதடி, வாய்தகராறு, கைத்தகராறு என எதையும் விட்டு வைக்காமல், பாண்டிகளுடனே வளர்ந்ததால் பெண்களுக்கு இயல்பாக இருக்கும் பயம் கூட இல்லாது, ‘எதுவாக இருந்தாலும் பார்த்துகலாம்’ என்ற திடகாற்றம் திண்ணக்கம் பெற்றவள்.

மீனா பயந்து நடுங்குவது கூட இவளது இந்த ஆண்பிள்ளை குணத்தை கண்டு தான்.
அப்படி வளர்ந்தவள் சமரசுவின் ஒன்றுவிட்ட அண்ணன் மகனான விஜய் மீது காதல் கொண்டாள்.

கடந்த மூன்று வருடங்களாய். ஆனால் அவனுக்கோ அதே ஊரில் தங்கள் வீட்டின் அருகே இருந்த மகாவின் மேல் காதல் பூத்து, அது கல்யாணத்தில் வந்து நிற்க, அதை கலைக்க தான் விக்ராவுடன் சேர்ந்து இந்த போராட்டம்.

எப்படி பார்த்தாலும் ஒருவருக்கொருவர் சொந்தம் என்கையில் அது அவர்களது கல்யாணவீடாய் மாற, அடித்து பிடித்துகொண்டு ஆளுக்கொரு வேலையை கையில் எடுத்து கொண்டு பம்பரமாய் சுழன்றனர் திருமண மண்டபத்தில்.

திண்டுகல்லில் இருந்த இன்னொரு சகோதரியும், பிள்ளைகள், கணவனோடு அன்றே வந்து சேர, மீனாவிற்கு துணை கிடைத்த மகிழ்ச்சி. தவிர மகா, விஜய் புற சொந்தங்கள், ஊர்காரர்கள், உற்றார் உறவினர்கள் என புடைசுழ்ந்து கலகலவென கிடந்தது அவ்விடம்.

அப்படியிப்படி என நேரம் கடந்தோட இரவு நடந்த அந்த நிச்சயதார்த்த விழாவில் மணமக்கள் ஜொலித்துகொண்டிருந்தனர் என்றால், டிஜே பிளேயுடன், மணமகளை அழைத்து வந்த லாவாவும், மணமகனை அழைத்துவந்த விக்ராவும் கூடவே பாண்டிகளும் என, ஆடலும் பாடலும் சேர்ந்து கலைகட்டி சுற்றியிருந்தோர் ஜொலித்து கொண்டிருந்தனர்.

ஒரு வழியாய் காலையும் அழகாய் விடிய, அலங்கரித்து கொண்டு மீண்டும் வந்துவிட்டாள் மண்டபத்திற்கு. கூட்டங்களோடு கூட்டமாய் மீனா அமர்ந்து கதையளந்துகொண்டிருக்க, அவரை முறைத்த லாவா.. எனக்கு அம்மாவும் சரியில்லை, அப்பாவும் சரியில்லை.

இவங்க சரியாய் இருந்தால் எனக்கெதுக்கு இவ்வளவு டென்சன்? தன் திருமணத்திற்கு தானே பிளான் போடும் நிலையை அறவே வெறுத்து, மீனாவை குதற முடியாததில், நகத்தை குதறிக்கொண்டிருந்தாள் பற்களால்.

“நைட்டே கடத்த சொன்னால் இந்த விக்ரா பய வேற, முகூர்த்த நேரத்துக்கு தூக்குவோம், அது தான் நல்லது யாரும் தேடி போக மாட்டங்க, எப்படியாவது நின்னு போன கல்யாணத்தை நடத்த தான் பார்ப்பாங்க, அது தான் உனக்கும் நல்லதுன்னு சொல்லிட்டான், முகூர்த்த நேரமும் இன்னும் அரைமணிநேரத்தில் முடிஞ்சிடும். இவன் இன்னும் என்ன புடுங்குறான்”

விழிகளை அங்குமிங்கும் சுழற்றியபடி, விக்ராவை தேடி இவள் வர, விக்ராவோ அவ்வப்போது குறிப்பிட்ட ஆட்களிடம், நேரடியாகவோ, இல்லை போனிலோ, இல்லை தூரத்தில் இருந்து சைகையிலோ பேசிக்கொண்டிருந்தான்.

எண்ணி பார்த்ததில் ஆறு பேர், அப்படியானால் இவர்கள் தான் கடத்தல் கும்பளா? நினைத்த மாத்திரத்தில் எம்பி குதித்தது லாவாவின் குட்டி இதயம். அதில் சுற்றம் உணராது இதழ் குவித்து ஒரு பறக்கும் முத்தத்தை அவனுக்கு அனுப்ப,

ஏதோ உறுத்தி சட்டென திரும்பி பார்த்த விக்ராவின் விழிகளுக்குள் லாவா விழ, கூடவே விழுந்தது காற்றில் பறந்து வந்த அவளது அழுத்தமான முத்தம். அதிர்ந்து போனான் விக்ரா.

இவன் பார்க்கிறான் என்றதும் மேலும், ‘என் செல்ல குட்டி’ என அவனுக்கு கண் திருஷ்டி கழித்து, இருகை விரல்களையும் உதட்டில் வைத்து அழுத்தி ‘ப்ச்சக்’ ‘ப்ச்சக்’ என இரு முத்தங்களையும் அவசரமாய் அவனை நோக்கி பறக்கவிட, இமையும் அசைக்காது நின்றுவிட்டான் விக்ரா.

அதிர்ந்து நின்ற விக்ராவிடம் , கட்டை விரலை உயர்த்தி காட்டி, ‘ஆல் தி பெஸ்ட்’ என உதடைசைத்துவிட்டு, நின்ற இடத்திலிருந்தே திரும்பி விஜயின் பக்கம் பார்வை திருப்பினாள்.

அங்கே அவனோ ஐயர் கூறிய மந்திரங்களை சொல்லியபடி, அழகிய பட்டு சட்டை வேஷ்டியில் அமர்ந்தபடி ராஜ தோரணையுடன், அக்னி குண்டத்தின் முன் அமர்ந்திருந்தவனை கண்களில் தேங்கிய காதலோடு பார்த்திருந்தாள்.

‘விஜய் , நீ நினைச்சே பார்க்காத ஒரு வாழ்க்கை, இன்னும் அரை மணி நேரத்தில் அரங்கேற போகுது விஜய்.. உனக்கே தெரியாமல் மூனு வருஷமா உன்னையே சுத்தி சுத்தி வந்திருக்கேன். அந்த மூனு வருஷத்து காதலை, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் உனக்கு புரிய வச்சு, உன்னை திக்கு முக்காட வைக்க வந்துட்டே இருக்கேன், விஜய்’ கல்யாண கனவுகளில் மிதந்து கொண்டிருந்தாள் லாவா.

தனியாக ஓம குண்டத்தின் முன் அமர்ந்திருந்தவனின் அருகே சென்று அமர துடியாய் துடித்து போனது அவள் மனது. மண்டபத்தின் சுவரில் பெரும் பகுதியை அடைந்திருந்த மணிகூண்டை பார்த்து பார்த்து ஒவ்வொரு வினாடிகளையும் கடத்தினாள்.

இதோ அவள் எதிர்பார்த்த அந்த நொடியும் வந்து சேர, “அழகிய அசுரா.. அழகிய அசுரா..” என்ற பாடலின் பிஜிஎம் அவளை கலைத்தது.

ஆம் அவளது ஆசை கனவுகள் நிறைவேற போகிறது என நேற்று இரவு தான் ஆசை ஆசையாய் எத்தனையோ பிஜிஎம்களை கேட்டு கேட்டு அதில் கேட்கும் போதே கிறங்க வைத்த இந்த பிஜிஎம்மை டவுன்லோட் செய்து, ரிங்க் டோனாக வைத்தாள்.

பாட்டாக வைக்க தான் ஆசை ஆனால் கேட்பவர்கள் என்ன நினைப்பார்களோ என பிஜிஎம் மட்டும் போதுமென விட்டாள்.
ரிங்டோன் செட் செய்த பிறகு வரும் முதல் போன் கால், வெட்கத்தோடு போனை எடுத்து பார்த்தவளுக்கு ‘விக்ரா’ காலிங்.. என டிஸ்பிளேயில் ஒளிர, முகம் இன்னமும் புன்னகையை பூசிக்கொள்ள, அவசரமாய் அதை காதுக்கு கொடுத்தாள்.

“டேய்.. மகாவை தூக்கிட்டியா?” கொள்ளை ஆசை அவள் குரலில்.

“ப்ச்.. அதுல தான் ஒரு பிரச்சனை நீ வா, பொண்ணோட ரூமுக்கு பக்கத்தில் ஒரு ரூம் இருக்குல்ல.. அங்க வா” என வைத்துவிட்டான்.

இன்னும் முகூர்த்தத்திற்கு பத்தே நிமிடங்கள் தான் இருக்க, இன்னமும் வந்து சேராத மகாவை நினைத்து மனம் இன்னமும் குதூகலிக்க விக்ரா சொன்ன அறைக்கு விரைந்தாள்.

ஆங்காங்கே ஆட்கள் நடமாட்டம் இருக்க, கதவை தள்ளிகொண்டு உள்ளே சென்றாள்.

விக்ராவும் இல்லாமல் மகாவும் இல்லாமல் அறையானது வெறிச்சோடி கிடக்க, “விக்ரா” என இவள் குரல் கொடுத்த அதே நேரம், அந்த அறையின் கதவு உட்புறமாய் பூட்டபட்டது விக்ராவின் கைகளால்.

குழப்பத்துடன் சுருங்கியது இவள் முகம்.

மென்மையான ஆரஞ்சு வண்ணத்தில் ஒயின்கலர் பாடர் பட்டுபுடவையில் கழுத்தை நிறைத்த சோக்கர், காதில் குடைபிடித்த ஜிமிக்கி, நெற்றியை அலங்கரித்த சுட்டி, கலகலத்த வளையல்கள், சிணுங்கும் கொலுசுகள், வாசம் நிறைத்த மல்லிகை, அத்தனை அலங்காரத்திற்கும் உயிர் கொடுப்பது போல் சந்தோஷத்திலும் புன்னகையிலும் மிளிர்ந்த முகம் என கல்யாண பெண்ணுக்கே டஃப் கொடுப்பவள் போல வந்து நின்றவளை விட்டு இமையும் சிமிட்டாது பார்த்திருந்தான்.

அவனின் அசையாத பார்வையை கண்டு கைகளை அவன் முன்பாய் அசைத்து

“ஏய், மகாவை எங்கடா.. அவளை விட்டுட்டு, நம்பளை ரூமுக்குள்ள வச்சு பூட்டிருக்க?” என கேட்க

“காரணமா தான்.. உக்காரு” என கட்டிலை காட்ட
அதில் அமர்ந்தபடி

“என்னடா எதுவும் பிரச்சனையா?” என

“ம் பிரச்சனை தான்” என்றவன் அவள் முகத்தையே விடாது பார்த்திருக்க

“என்ன பிரச்சனை.. சொல்லுடா.. முகூர்த்த நேரம் வேற முடிய போகுது” கொஞ்சமாய் டென்ஷன் ஏறியது அவளுக்கு.

இவனோ ஒரு வார்த்தை கூட பேசாது நேரத்தை கடத்தி கொண்டிருக்க, வரிசை வரிசையாய் இவள் கேட்டு தள்ளிய எந்த கேள்விக்கும் பதிலளிக்காது பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு எதையோ தேடிக்கொண்டிருந்தான்.

நேரத்தையும் கடத்துகிறான் என அப்போது தான் அவளுக்கு புரிய, “டேய் எதுவும் விளையாடுறியாடா? உன் விளையாட்டெல்லாம் அப்புறமா வச்சுக்கடா” வயிற்றில் சிறிதாய் புளியை கரைத்தது அவனது மோன நிலை.

அறையின் வெளியே அதே நேரம் கெட்டி மேள சத்தம் காதை பிளக்க, அது அவளது இதயத்தையும் இரண்டாய் பிளந்து “விக்ரா..” என இவள் அதிர்ந்து விழித்த கனம், பேண்ட் பாக்கெட்டில் தேடிக்கொண்டிருந்ததை எடுத்தவன், அவள் என்ன ஏது என உணரும் முன்பே லாவாவின் கழுத்தில் போட்டிருந்தான்.

அங்கே மகா கழுத்தில் விஜய் தாலி கட்டிய அதே நேரம் இங்கே விக்ரா லாவாவின் கழுத்தில் தாலி கட்டி இருந்தான். லாவாவிற்கு இரண்டொரு நிமிடங்கள் ஆனது சூழ்நிலை உரைப்பதற்கு.

கழுத்தில் கிடந்த தாலியை கையில் எடுத்து வைத்து, “எ.. எ.. ன்ன வி…க்ரா, இ..தெ..ல்லாம்” இவளது திக்கி வந்த கலக்கம் கலந்த கேள்வியே காட்டி கொடுத்தது அவளது மனநிலையை.

எந்நேரமும் படபடவென பேசியே பதறவைப்பவளுக்கு, அன்று வார்த்தைகளே வரவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் மட்டுமே கோடாய் இறங்க
அவளது அழுகையையும் கேள்வியையும் தாங்கமுடியாதவனாய் இவன் கட்டிலில் இருந்து எழுந்து கொண்டு மறுபுறமாய் திரும்பி நின்றான்.

சிறுவயது நினைவு தெரிந்த நாளில் இருந்து எல்லாமே விக்ரா தான் அவளுக்கு, யாராவது கேலி கிண்டல் செய்தால் கூட புகார் கொடுப்பதே அவனிடம் தான்.

உண்டு இல்லை என செய்துவிடுவான் அவளை அழவைத்தவர்களையும், மனம் கலங்க வைத்தவர்களையும். ஆனால் அவனே அழவைப்பான் என கனவிலும் நினைக்கவில்லை அவள்.

இதுவரை தன்னை பற்றிய நிறைய ரகசியங்கள் தன் தாய்க்கு கூட தெரியாது.

ஆனால் லாவன்யாவின் நிழலான விக்ரவிற்கு அத்தனையும் தெரியும். தெரியும் வகையில் தான் இருக்கும் அவனுடனான நட்பு.

காதல் கைகூட நண்பர்களை துணைக்கழைப்பது தான் வழக்கம், இவளும் நண்பனான இவனை நாட, விக்ரா செய்தது என்னவோ பெரும் துரோக செயலாக முடிந்துவிட்டிருந்தது.

அத்தனை நம்பிக்கை வைத்த நண்பனா இத்தனை பெரிய துரோகத்தை செய்தது இன்னமும் நம்ப மறுத்து, கண்ணீர் வழிய வழிய இமை சிமிட்டாது பார்த்திருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!