Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Maruvak Kaathal Kondaen

மருவக் காதல் கொண்டேன்-10

நாட்கள் யாருக்காகவும் காத்திருக்காமல் நடைபோட, உமையாள் தெரிந்தே தன் வசீயின் மீதான காதலில் கரைய, கிருஷ்ணவோ, உமையாள் அறிமுகப்படுத்தும் புதுவித உணர்வில் இருந்து மீளவும் முடியாமல், ரசிக்கவும் முடியாமல் சிக்கி தவிக்க, வசீகரன் மட்டும் தன் நிலா பெண்ணின் மீதான காதலை உணர காலம் இன்னும் கனிந்து வராமல் இருக்க சுதந்திர பறவையாய்.

கிருஷ்ணாவின் வீட்டிற்கு சென்றிருந்த அன்று, அங்கிருந்து ஒரு பை நிறைய புத்தகங்களை அள்ளிகொண்டு வந்திருந்தாள் உமையாள். அவளின் நேரங்கள் எல்லாம் மீன்கள், புதினங்கள், வசீகரன், பொன்னம்மாவின் சமையல் என களவாடப்பட, உள்ளார்ந்த மகிழ்ச்சியோடு வலம் வர ஆரம்பித்தாள்.

வசீகரனோ, பாப்புவின் மகிழ்ச்சியே தன் மகிழ்ச்சி என அகம் மகிழ்ந்துவிட, அவசரமாக அலுவலகம் செல்வது, இடையில் வீட்டிற்கு வருவது, அவனின் பாப்புவோடு அரட்டை அடித்துவிட்டு நேரம் கழித்து உறங்குவது, என எல்லாமே இனிக்க, நாட்கள் சுவாரசியமாக கழிந்தது அவனுக்கு.

கிருஷ்ணாவோ, உமையாள் புதிதாக அறிமுகப்படுத்திய உணர்வுகளை இன்னும் இனம் காண முடியாத தவிப்பில் தான், ஒரே ஒரு முன்னேற்றமாக அந்த அலைகழிக்கும் உணர்வுகளிலும் ஒரு இதத்தை உணர ஆரம்பித்திருந்தான்.



Advertisement

அன்று சனிக்கிழமை, வழக்கமான கலந்தாய்வுக்காக நண்பர்கள் வசீகரனின் வீட்டிற்கு வந்தனர்.

பாலா கொஞ்சம் உற்சாகமாகவே இருந்தான், என்ன தான் கைபேசியில் பேசினாலும், இன்று அவன் உடன் பிறவா தங்கையை காண போகிறான் அல்லவா, அந்த மகிழ்ச்சி அவனுக்கு.

பார்க்கும் போது எல்லாம் அவனை படுத்தி எடுத்தாலும், பெண் பிள்ளைகளோடு வளராத அவனுக்கு உமாவின் மீது தனி பாசம் தான்.

Advertisement

ஒன்றாக வந்த நண்பர்கள், அவர் அவர்களின் கார்களை தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு வர, முதல் ஆளாக உள்ளே நுழைந்தது பாலா தான்.

Advertisement

ஆர்வமாக உள்ளே நுழைந்த அவன் மீது, ஏதோ வேகமாக வந்து மோத தடுமாறிய பாலா,”அய்யோ, அம்மா” என நெஞ்சை பிடித்துக்கொண்டு, கதவின் நிலைப்படியில் சாய்ந்து நிற்க, சரட், சரட் என்று இப்படியும் அப்படியும் சில உருவங்கள் அவனை கடந்து செல்ல, பாலா முழித்து கொண்டு நின்றான்.

[the_ad id=”6605″]

அவன் பின்னாடியே வந்த வசீகரன், நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு நின்ற பாலாவை பார்த்து, கொஞ்சமே கொஞ்சம் கரிசனத்தோடு,

Advertisement

“என்ன ஆச்சு மச்சான்” என, அவனோ,

“வீட்டுக்குள்ள லாரி வருமா மச்சான், எனக்கு ஏதோ சரக்கு லாரி நேரே வந்து மேல மோதுன எபெக்ட், அதோ பாரு, அதோ பாரு, அது தான் என் மேல மோதுச்சி” என அவன் கைகாட்ட, அந்த திசையை திரும்பி பார்த்த வசீகரன் சிரிப்புடன்,

“மச்சான், அது சரக்கு லாரி இல்லடா, நம்ப சமையல்கார பொன்னம்மா அக்கா” என்று வசீகரன் சொல்லவும் தான், உற்று கவனித்த பாலா,

“ஆமா, அவங்க எதுக்குடா இப்படி பிரேக் பிடிக்காத லாரி கணக்கா இங்குட்டும் அங்குட்டும் ஓடிக்கிட்டு இருக்காங்க” என கேள்விகேட்டான்.

வசீகரனும் தனக்கும் தெரியவில்லை எனும் விதமாக உதட்டை பிதுக்க, ஏதோ தோன்ற அவன் பாலாவை பார்க்க, அவனும் வசீகரனை பார்க்க, இருவரும் ஒரே நேரத்தில்,

“உமா” என பாலாவும், “பாப்பு” என வசீகரனும் சொல்ல, அவர்கள் அழைத்தது கேட்டு வந்ததை போலவே எங்கிருந்தோ வந்த உமையாள், வீட்டின் நடுவில் நின்று கொண்டு,

“எல்லாரும் ஒளிஞ்சிசாச்சா, நான் கண்டுபிடிக்க வர போறேன்” என சத்தமாக அறிவித்தாள்.

அப்போது தான் வாசலில் நின்றிருந்த இருவரையும் பார்த்தவள், மெதுவாக அவர்களிடம் வரவும், அவளை முந்தி கொண்டு பாலா,

“என்ன கேம் உமா”, ஆர்வமே உருவாக கேட்க, உமையாளோ,

“கண்ணா மூச்சு”, என ஒரு அவசரத்தோடே பதில் அளித்தாள்,

“என்ன உமா என்னை விட்டுட்டு நீ மட்டும் கேம் விளையாடுற” என பாவம் போலவே பாலா கேட்க, உமையாளோ,

“நீங்க எல்லாம் அங்கிள்ஸ், யூத் மட்டும் தான் கேம்ல சேர்த்துப்போம்” என, கடுப்பான பாலா,

“எது இந்த ஐம்பது வயசு பொன்னம்மா அக்கா, அறுபது வயசு ஆறுமுகம் தாத்தா இவங்க எல்லாம் யூத், நாங்க அங்கிள் அஹ” என முறைக்க, அவனை அப்படியே டீலில் விட்ட உமையாள், ரகசிய குரலில்,

“அதை எல்லாம் விடுங்க, நீங்க முன்னாடியே வந்துட்டுட்டீங்க தானே, யார், யாரு எங்க ஒளிஞ்சி இருக்காங்கனு நீங்க பார்த்திருப்பிங்க இல்ல, நல்ல பிள்ளைங்க தானே, டக்கு டக்குனு எல்லாரும் எங்கன்னு சொல்லுங்க பார்ப்போம்” என இருவரையும் தாஜா பண்ண,

பாலா ஏதோ சொல்லவர, அவனை முந்தி கொண்ட வசீகரன்,

“கேம் தானே விளையாடுறீங்க, இதுல சீட்டிங் எல்லாம் பண்ண கூடாது, போ, போய் ஒழுங்கா நீயே கண்டுபிடி” என அவளை விரட்ட, அவளோ ஏதேனும் உதவி கிடைக்குமா என பாலாவை பார்த்தாள்.

பக்கத்தில் வசீகரன் இருக்க, பாலாவும் மழுப்பலாக சிரிக்க, அவனும் பதில் சொல்லும் வழியை காணோம் எனவும், பொங்கிய உமையாள் அவளின் காலை ஓங்கி தரையில் உதைக்க, பாலா தான் “ஆ ஆ ஆ” என கத்தினான்.

[the_ad id=”6605″]

உமையாள் தான், தன் காலை உதைக்கிறேன் என, பாலாவை மிதித்து இருந்தாளே, அவன் வலியில் கத்தவும்,

“எனக்கு ஹெல்ப் பண்ணல இல்ல, இதுவும் வேணும், இன்னமும் வேணும்” என தலையை சிலுப்பியவள், தன் சகாக்களை தேடி செல்லலானான்.

வசீகரனை, பாவமாக பார்த்த பாலா,
“ஏன் மச்சான், நீ தானேடா சொல்ல மாட்டேனு சொன்ன, என்னை எதுக்குடா எத்தி விட்டுட்டு போறா அவ” என கேள்வி கேட்க, வசீகரனோ,

“அது எல்லாம் அப்படி தான் மச்சான்” என சிரிக்க, பாலா அவனை பார்த்து ஏதோ கோவத்தோடு சொல்ல வர,அதேநேரம் இவர்களுடன் வந்து இணைந்தான் கிருஷ்ணா.

மூவரும் ஒரே நேரம் தான் வந்து இறங்கி இருக்க, ஒரு கைப்பேசி அழைப்பை வர, அதை பேசி முடிக்க பின்னாடி தேங்கிய கிருஷ்ணா, தன் அழைப்பை முடித்து வந்தவன், தனக்கு முன்னே வந்த இருவரும் உள்ளே செல்லாமல் வாசலிலே ஏதோ தர்க்கத்தில் ஈடுபட்டு கொண்டு நிற்பதை பார்த்து கேள்வியாய் நோக்கியபடியே அவர்களை நெருங்கினான்.

கிருஷ்ணாவை பார்த்ததும், அவனின் விழிகளில் இருந்த கேள்வியை பார்த்த இருவரும், எதும் சொல்லாமல் உள்ளே நுழைந்து, தங்களின் ஆஸ்தான இடமான வரவேற்பறையின் சோபாவில் அமர்ந்தனர்.

கிருஷ்ணாவுக்கு இன்று இங்கு வசீகரனின் வீட்டுக்கு வரவேண்டும் என்றதும், கொஞ்சம் யோசனை தான்.

முதலில் ஏதேனும் காரணம் சொல்லி, இந்த கலந்தாய்வை தவிர்க்கவே நினைத்தான் கிருஷ்ணா, அல்லது குறைந்தபட்சம் நடைபெறும் இடத்தையாவது மாற்ற தான் நினைத்தான்.

ஆனால் என்ன காரணம் சொல்வது என்று தான் அவனுக்கு புரியவில்லை. அதுபோக அப்பெண்ணை பார்த்து தான் பயம் கொள்வதா என்று ஒரு மனம் வேறு சிலிர்த்து எழ, எதுமே பேசாமல் இங்கு வந்துவிட்டான்.

ஆனால் அகத்தின் ஓர் ரகசிய அறையில், அன்று வீட்டுக்கு வந்து புத்தகம் எடுத்து சென்றதில் இருந்து பார்க்காத உமையாளை பார்க்க, தானாக கிடைத்த இந்த வாய்ப்பை தவறவிட கூடாது என்ற எண்ணம் இருந்தது என்பது தான் உண்மை.

நான்கு நாட்களுக்கு பிறகு அவளை பார்க்கப்போகும் ஆர்வம் ஒரு புறம், அவளை பார்த்தால் ஏற்படும் உணர்வுகளின் அலைகழிப்பை பற்றிய கவலை ஒரு புறம் என கலவையான உணர்வு குவியலாக அமர்ந்திருந்தாலும், முகமோ எப்போதும் போல உணர்வுகள் இன்றி தான்.

ஒரு வழியாக நண்பர்கள் தங்களின் கலந்தாய்வை ஆரம்பிக்க, வசீகரன் பேசிக்கொண்டு இருக்க, கிருஷ்ணா முயன்று அதற்கு செவிமடுத்து கொண்டு இருக்க, பாலாவோ வரவேற்பரையின் அருகில் வந்த உமையாளின் கவனத்தை தன் பக்கம் திருப்பும் முயற்சியில் இருந்தான்.

உமையாள், தன்னை பார்த்ததும், அவளுக்கு சைகை செய்கிறேன் பேர்வழி என இல்லாத குரங்கு சேட்டை எல்லாம் செய்துகொண்டு, ஒளிந்துகொண்டு இருப்பவர்களை கண்டுபிடிக்க உதவி கொண்டு இருந்தான்.

உமையாளுக்கு உதவி கொண்டு இருந்த பாலா ஏதோ தோன்ற திரும்பி பார்க்க, வசீகரனும், கிருஷ்ணாவும் அவனை தான் முறைத்து கொண்டு இருந்தனர். ஜெர்க்கான பாலா,

“ஆத்தி விளையாட்டு ஆர்வத்துல இந்த ரெண்டு பூதத்தை மறந்துட்டானே” என அரண்டு போய் பார்த்தவன்,

“அது வந்து மச்சான்….” என இழுக்க, இருவரும் பார்வையாய் மாற்றாமல் முறைக்க, வசீகரன்,

“இப்போ நாங்க என்ன பேசிக்கிட்டு இருந்தோம்னு சொல்லு பார்ப்போம்” என கேள்விவேறு கேட்க,

“இவனுங்க என்னடா, டீச்சர் மாதிரி கேள்வி எல்லாம் கேட்குறானுங்க, விட்டா ஸ்பாட் டெஸ்ட் எல்லாம் வைப்பானுங்க போலவே, என்னத்த சொல்லி சமாளிக்கிறது” என மனதிற்குள் யோசித்தவன், ஒரு யோசனை மின்னலடிக்க,

“எனக்கும் ஆசையா இருக்கும் இல்ல, அப்போ நான் விளையாட கூடாதா” என பாவத்தோடு கேட்க, அவனை தொடர்ந்து வசீகரன்,

“மீட்டிங் முக்கியமா இல்ல கேம் முக்கியமா” என, பாலா சற்றும் யோசிக்காமல்,

“கேம் தான்” என, இருவரும் எதிர்பாரா விதம் இவ்வளவு நேரம் இவர்கள் வழக்காடியதை வேடிக்கை பார்த்திருந்த கிருஷ்ணா,

“சரி போ”, என அனுமதி அளித்து இருக்க, பாலாவும், வசீகரனும் சேர்ந்து அவனை அதிர்ச்சியாக பார்க்க, கிருஷ்ணா மீண்டும் அழுத்தம் திருத்தமாக,

“விளையாடனும்னா போடா, போய் ஜாயின் பண்ணிக்கோ” என அவனை எட்டாவது அதிசயமாக பார்த்த பாலா, இன்னும் கொஞ்சம் சந்தேகத்தோடே கிருஷ்ணாவை பார்க்க, அவனின் எண்ணவோட்டத்தை புரிந்து கொண்ட கிருஷ்ணா,

“நீ நான் த்ரீ சொல்றதுக்குள்ள போறதா இருந்தா போகலாம், அப்புறம்” என அவன் பேசி முடிக்கும் முன்னே, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த எண்ணி சிட்டாக பறந்து இருந்தான் பாலா.

வசீகரனோ, “போவோமா, வேண்டாமா” என இரு மனதாக கிருஷ்ணாவை பார்க்க, கிருஷ்ணா, வசீகரனை பார்த்து புருவத்தை கேள்வியாக உயர்த்த, வசீகரன், ஆசிரியரிடம் அனுமதி கேட்கும் மாணவன் என,

“நானும் போகட்டுமா” என கேட்க, கிருஷ்ணா தலை அசைத்த அடுத்த நொடி, அவனும் சென்று அவர்களின் ஜோதியில் ஒருவனாகி இருந்தான்.

கிருஷ்ணாவும் தான் என்ன செய்யவான், ஏற்கனவே அவனின் கண்கள் அவனின் பேச்சை கேட்காமல், உமையாளை கண்களில் நிரப்பும் முயற்சியில் படுஆர்வமாக இறங்க, அவனுக்கு கண்ணையும், கருத்தையும் கலந்தாய்வில் செலுத்தவே பிரம்ம பிரயத்தனம் செய்ய வேண்டி இருந்தது.

அவனின் நிலை புரியாமல், பாலா வேறு அவளோடு சைகை மொழியில் பேசிக்கொண்டு, இன்னும் திசைதிருப்ப, இவனுக்கு இன்னும் தான் கடுப்பானது.

எப்படியும் இன்று கலந்தாய்வு அவ்வளவு தான் என்று தெரிந்த பிறகு, எதற்கு அவர்களை வம்படியாக நிறுத்தி வைக்க வேண்டும், குறைந்தபட்சம் அவர்களாவது அவர்களுக்கு பிடித்ததை செய்து, நிம்மதியாக இருக்கட்டுமே என்று தான் அவர்களை அனுப்பி வைத்தான்.

அங்கு எல்லாரும் ஆர்ப்பாட்டமாக விளையாடி கொண்டு இருக்க, கிருஷ்ணா அதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பதை போல, தன் கவனத்தை முழுதும் வேலையில் குவித்து அதில் வெற்றிபெற்றான்.

“உன்னை இப்படி நிம்மதியாக இருக்க விடுவேன் என்று நினைத்தாயோ”என்று கட்டியம் கூறுவதை போல, வேக வேகமாக வந்த உமையாள்,

“நான் இந்த சோபாவின் பின்னாடி மறைய போறேன், பிலீஸ் பாலாவை இங்க வரவிடாதீங்க கிருஷ்ணா”, என்றவள் அவனை தாண்டி சென்று அந்த பெரிய “ட” சோபாவின் பின்புறம் மறைந்து அமர்ந்தாள்.

[the_ad id=”6605″]

அவள் பேசி சென்றதும், அப்படியே மடிக்கணிணியின் திரையை வெறித்தவாறே கிருஷ்ணா அமர்ந்து இருக்க, சற்று நேரத்திலே வந்து சேர்ந்தான் பாலா,

“ஏன் மச்சான், இங்க உமா வந்துச்சா” என கேட்க, கிருஷ்ணா பதிலுக்கு ஒரு உஷ்ண பார்வையையே அவனுக்கு பதிலாக்க, பாலாவோ,

“நாமளே இவன் கிட்ட பேச யோசிப்போம், உமா எப்படி இங்க வந்திருக்கும், ஏற்கனவே மீட்டிங் கேன்சல் ஆன கடுப்புல இருப்பான், எதுக்கு வான்ட்ட் அஹ போய் அவன் கிட்ட மாட்டனும், யூ டர்ன் போட்டுடு பாலா” என மனசாட்சி அறிவுறுத்த, இவனும் திரும்பி இரண்டு அடி எடுத்து வைத்தான்.

அப்போது தான் திடீரென, “நாம தான் கிருஷ்ணாக்கு பயப்படுவோம், இந்த உமா இவனையே கலாய்த்த பொண்ணாச்சே, ஒரு வேளை சோபா பின்னாடி மறைஞ்சி இருக்குமோ, அப்படியே நைசா போய் பார்ப்போமா” என மறுபடியும் திரும்பியவன், கிருஷ்ணாவின் அருகில் சென்றான்.

பாலா அங்கிருந்து நகர்ந்ததும், மீண்டும் திரையில் முயன்று பார்வையை திரும்பிய கிருஷ்ணா, பாலா மறுபடியும், இவன் அருகே வரவும் அவனை கேள்வியாக பார்க்க, அவனோ இவனின் பார்வையில் தடுமாறி,

“பின்னாடி ஒரு தடவை பார்த்துட்டு போகட்டுமா” என கேட்க வந்தவன், அவனின் பார்வையிலே மிரண்டு,

“ஒன்னும் இல்ல மச்சான்” என்று வேக வேகமாக அங்கிருந்து நகர்ந்தான். அதற்குள் மறைந்திருந்த வசீகரன், பாலாவை அவுட் ஆக்கி விட, மற்றவர் எல்லாம் தங்கள் மறைவிடத்தில் இருந்து வெளியே வந்தனர்.

தானும் தன்னுடைய மறைவிடத்தில் இருந்து வெளியே வந்த உமையாள் கிருஷ்ணாவை பார்த்து,

“தேங்க்ஸ் கிருஷ்ணா” ஒரு புன்னகையுடன் சொல்ல, அவளின் புன்னகையோ, அல்லது இவனை பார்த்து மிரண்டு போன பாலாவின் முக தோற்றமோ அல்லது இரண்டுமோ சேர்ந்து ஒரு அழகிய ஒரு குறும் நகையை கிருஷ்ணாவின் அதரங்களில் தோற்றுவித்தது.

எதற்கு சிரிக்க வேண்டும், எப்படி சிரிக்க வேண்டும் இதற்கு எல்லாம் சிரிக்கலாமா என சிரிப்பதற்கே பாடம் படிக்க முயன்றவன், இப்போது வெகு இயல்பாக குறுநகையை பூத்திருந்தான்.

அவனின் குறுநகையை பார்த்து வியந்து உமையாள், தன் தலையை அழகாக வலது பக்கத்தில் சரித்து, ஒரு கண்ணை மூடி, ஆள்காட்டி விரலையும், கட்டைவிரலையும் ஒன்றாக அதரங்களின் அருகே கொண்டு வந்தவள், அதை அப்படியே மெல்ல விரித்து புன்னகை செய்ய சொல்ல, அவளுக்கு கட்டுப்பட்டு அவனின் அதரங்களும் குறுநகையை புன்னகையாக மாற்ற, அந்த அற்புத நிகழ்வுக்கு உமையாள் மட்டுமே சாட்சியாய்.

அதன்பிறகு உமையாளும் அவர்களோடு விளையாட்டில் கலந்து கொள்ள, கிருஷ்ணா மட்டும் கண்ணு மடிக்கணிணியில் நிலைக்கவிட்டு, எண்ணம் எல்லாம் எங்கோ பறக்க அமர்ந்திருந்தான்.

ஒருவழியாக எல்லாரும் விளையாடி முடித்து வந்து அமர, வேலையாட்கள் எல்லாம் விடைபெற்று சென்றனர்.

வசீகரன், பாலா, உமையாள் மூவரும் கிருஷ்ணாவின் அருகிலே சோபாவில் அமர, உமையாள் தன் மீன்களுக்கு உணவளிக்க எழுந்து சென்றாள்.

அப்பொழுது தான் மீன் தொட்டியை பார்த்த பாலா, ஏதோ கேட்க வர அதேநேரம் உமையாள் தொட்டியின் அருகே செல்ல, தொட்டியின் அங்கும், இங்கும் நீந்தி கொண்டு இருந்த மீன்கள் எல்லாம், ஒன்றாக உமையாள் சென்று நின்ற பக்கம் ஒன்றாக வந்து சேர, பாலா அப்படியே அதிர்ச்சியில் நின்றுவிட்டான்.

அவன் அதுவரை இப்படி பார்த்ததே இல்லை. நாயோ இல்லை பூனையோ வளர்த்தவர்கள் உணவு வைக்க அருகில் வந்தால் அவர்களை நெருங்கி வருவதை பார்த்திருப்போம்.

இங்கு உமையாள் தொட்டியின் அருகில் செல்லவும், எல்லா மீன்களும் அவள் இருந்த பக்கம் நீந்தி வந்தன. அதனை பார்த்து வாயை பிளந்த பாலா,

“ஹே உமா எப்படி இப்படி” என வியந்து பார்க்க, உமையாளோ குறும்புடன்,

“பின்ன, ட்ரெயின் பண்ணது யாரு நானாச்சே” என சொல்ல, அதையும் உண்மை என்று நம்பிய பாலா கண்களை விரித்து,

“உண்மையாவா உமா” என கேட்க, அவனின் பாவனையில் உமையாளும், வசீகரனும் அடக்கமாட்டாமல் சிரித்துவிட, பின்பு உமையாளே,

“அச்சோ அண்ணா, நீங்க செம இன்னசென்ட் அஹ இருக்கீங்க, என்ன சொன்னாலும் அப்படியே நம்புறீங்க, கோல்ட் பிஷ் பழக ஒரு ஒரு வாரம் ஆகும், அதுக்கு அப்புறம் இப்படி தான், நானு இல்ல, நீங்க பக்கத்துல வந்தாலும் உங்க கிட்டயேயும் இப்படி வரும்” என விளக்க, அவளை ஆவென பார்த்த பாலா,

“உனக்கு எல்லாமே தெரியுது உமா” என சிலாகிக்க, வசீகரனோ,

“அவ அப்படி தான், ஒரு விஷயம் பிடிச்சி போய்ட்டா, அதை பற்றி அடிவரை தெரிஞ்சிக்குவா, அதே மாதிரி அப்படி கண்ணும் கருத்துமா பார்த்துப்பா தெரியுமா” என அவளை புகழ, பாலா மேற்கொண்டு ஏதோ, ஏதோ மீன்களை பற்றி கேள்வி கேட்க ஆரம்பித்தான்.

இவ்வளவு நேரம் அவர்களின் உரையாடலை செவிமடுத்து கொண்டிருந்த கிருஷ்ணாவின் எண்ணங்கள் அங்கேயே நின்றுவிட்டது.

அவனின் மனதில் எங்கேயோ என்னவோ தித்திப்பாய் இறங்கிய உணர்வு. அதன்பிறகு அனைவரும் கிளம்ப, அதிக நேரம் ஆகவில்லை என்பதால் பாலாவும் அவனின் வீட்டுக்கு செல்ல, கிருஷ்ணாவும் அவனின் வீட்டுக்கு வந்துவிட்டான்.

பல வண்ண பூச்செண்டை போன்று,உலகத்தின் மலர்களை எல்லாம் கொட்டி கவிழ்த்தது போல, வாசமிக்க, வண்ணமிக்க மலர்களால் நிரம்பி வழிந்தது அந்த கானகம்.

அதிகாலையா அல்லது அந்திமாலையா என பிரித்தறிய முடியாத ஒரு பொன்னிற பொழுது அது.

தான் அணிந்து இருக்கும் அந்த வெள்ளை நிற சட்டையை தாண்டி ஊடுருவும் குளிரை கொஞ்சமும் கணக்கில் கொள்ளாமல், பனி மறைத்த அந்த கானகத்தில், யாரை நோக்கிய தேடல் என்று தெரியாமலே, கிருஷ்ணா அந்த மலர் வனத்தில் இங்கும் அங்கும் தேடும் படலத்தை நடத்திக்கொண்டு இருந்தான்.

தேவதையென ஒரு பெண், இவனை போலவே வெண்ணிற உடையில் இவனுக்கு சற்று முன் நின்று கொண்டிருப்பது தெரிய, தன் தேடலின் பொருள் அந்த தேவதை தான் தெரிந்து, தெளிந்து அவளை எட்டிபிடிக்க கிருஷ்ணாவும் நடையில் வேகத்தை அதிகப்படுத்தலானான்.

இவன் அத்தேவதை பெண்ணை நெருங்க நினைக்க, நினைக்க, தூரம் அதிகம் ஆவது போல பிரம்மை தோன்ற, எங்கே அந்த தேவதையை தவிர விட்டுவிடுவேனோ என்ற பதட்டத்தில் இவன் ஓட ஆரம்பித்தான்.

ஒரு கட்டத்தில் அப்பெண்ணை நெருங்கி, ஒரு நிமிடம் தாமதித்தால் கூட அவள் மறைந்து விடுவாளோ என்ற பயத்தில் இதயம் முரசுகொட்ட, கொஞ்சம் இறுக்கமாகவே அத்தேவதை பெண்ணின் கையை பிடித்தான் கிருஷ்ணா.

[the_ad id=”6605″]

அத்தேவதை பெண்ணுக்கு, அவளின் கடை கண் பார்வையையும் இவனுக்கு பரிசளிக்க விருப்பம் இல்லையோ, இவன் புறம் திரும்பாமலே நிற்க, அப்பெண்ணை நெருங்கிய கிருஷ்ணா, அவளை பின்புறம் இருந்து அணைக்க, அந்த அமைதியான சூழலில் மெல்லிசை இசைக்க ஆரம்பித்தது.

கிருஷ்ணாவின் அணைப்பில் இருந்து விலகிய அத்தேவதை பெண், இசைக்கு ஏற்ப மெதுவாக சுழன்றாட ஆரம்பிக்க, கிருஷ்ணாவும் தன் தோளில் புரலும் நீண்ட குழல் அசைந்தாட, அவளோடு சேர்ந்து சூழல ஆரம்பித்தான்.

இசையின் வேகம் அதிகரிக்க, அதிகரிக்க இருவரின் நடன அசைவுகளின் வேகமும் அதிகரிக்க, இருவரும் அசுரவேகத்தில் சுழல ஆரம்பித்தனர்.

இசை இறுதி கட்டத்தை நெருங்கி முடியவும், இசைக்கு ஏற்றபடி நடனமாடிய இருவரும் தங்கள் நடனத்தை முடிக்கும் போது, ஒருவர் மற்றவரின் அணைப்பில், கண்ணோடு கண் நோக்க, ஒருவரின் மூச்சுக்காற்று மற்றவரை தகிக்கும் தூரத்தில் நின்றிருந்தனர்.

கிருஷ்ணாவின் கண்களில், இதுவரை அவனே நினைத்துப்பார்க்கா அளவில் காதல் வழிய, இமைக்காமல் அப்பெண்ணையே பார்த்திருக்க, அப்பெண் இவனை பார்த்து தன் தலையை சற்று சாய்த்து, அதரங்கள் பிரித்து, அழகிய புன்னகையை சிந்தினாள்.

அடுத்த நிமிடம் கிருஷ்ணா அப்பெண்ணின் அதரங்களை சிறையெடுக்கும் உத்தேசத்தோடு அக்காரிகையை நோக்கி குனிய, அவன், அவள் ஆதாரங்களை நெருங்க இருந்த அந்த கடைசி நொடியில், திடுக்கிட்டு கண் விழித்தான் கிருஷ்ணா.

கொஞ்ச நேரம் எங்கே இருக்கிறான் என்றே புரியாமல் மலங்க மலங்க விழித்துக்கொண்டு இருந்தான் கிருஷ்ணா.

அறையில் இயங்கி கொண்டிருந்த ஏ.சியையும் மீறி உடல் முழுதும் வேர்வையில் குளித்திருக்க, கனவின் தாக்கம் தாங்காமல் தலையை இரு கைகளில் தாங்கிய படி அப்படியே அமர்ந்திருந்தான்.

எதற்கு இப்படி ஒரு கனவு, அதும் அவன் உணர்ந்த அந்த உணர்வுகள், அவளுக்கான அவனின் தேடல், அவளை கண்ட நொடி அவன் அடைந்த பரவசம், அப்பெண்ணை இழந்துவிடுவானோ என்ற தவிப்பு, இதையெல்லாம் விட அவனின் மொத்த தவிப்புக்கும் காரணமாய் இருந்தது, அவன் கைகளில், அவனின் அணைப்பில் இருந்த அப்பெண் உமையாள் என்பது தான்.

காதல் கொள்வோம்………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!