Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Maruvak Kaathal Kondaen

மருவக் காதல் கொண்டேன்-19

முன் உச்சி கொண்டை, மீதி முடி தோளில் புரண்டு விளையாட, இலகுவான உடை அணிந்து, நீச்சல் குளத்தின் நீரோடு குதி கால்களை மட்டும் உறவாடவிட்டு, தீவிர சிந்தனையின் வசம் இருந்த கிருஷ்ணாவை ஆதவனின் பொன்மஞ்சள் கிரணங்கள், பொன்னால் வடித்த சிலையென காட்டி கொண்டிருந்தன.

இன்று வழக்கத்துக்கு மாறாக கிருஷ்ணா அலுவலகத்தில் இருந்து சீக்கிரமே வந்து இருந்தான்.

மனம் தீவிர சிந்தனையிலே இருக்க, அவனுக்கு தனிமை தேவையாய் இருக்க, வசீகரனிடம் மட்டும் தான் கிளம்புவதாக சொல்லிவிட்டு கிளம்பி விட்டான்.

இவனின் நடவடிக்கையை வைத்தே, ஏதோ சரியில்லை என்று வசீகரன் கணித்து இருக்க கூடும். இன்றோ அல்லது நாளையோ தன்னிடம் விசாரிக்கலாம் என்று மனம் கூடுதல் தகவலும் தந்தது.



Advertisement

வசீகரனை பற்றி யோசிக்கும் போது தான், இன்று அவனின் முகம் அநியாயத்திற்கு பிரகாசமாக இருந்தது நினைவு வந்தது.

இவன் இருந்த மனநிலையில் அவனிடம் நின்று கேட்டறிய விருப்பம் இல்லாமல் கிளம்பி வந்துவிட்டான்.

ஓரு முக்கிய முடிவு எடுக்க வேண்டி இருந்ததால் தந்தையின் அலுவலகம் சென்றிருந்தவன், அதை பார்த்து முடித்துவிட்டு, தங்களின் அலுவலகம் வர, உமையாளும், பாலாவும் பேசியதை கேட்க நேர்ந்தது.

Advertisement

சரண்யாவின் மீது இவனுக்கு எந்த எண்ணமும் இருந்தது இல்லை. தன்னுடைய விருப்பமின்மையை வெளிப்படையாக காட்டியும், அவ்வப்போது தன்னை சந்திக்க வரும் சரண்யாவின் மீது கோபம் தான் இவனுக்கு.

Advertisement

இனி அவளின் விஜயம் அலுவலகத்தில் இருக்காது என்று நினைக்கும் போதே கொஞ்சம் நிம்மதியாக கூட இருந்தது.

கிருஷ்ணா,”தனக்கு காதல், திருமணம், இதில் எல்லாம் விருப்பம் இல்லை” என்று பலமுறை சொல்லியும், சரண்யா புரிந்து கொள்ளவே இல்லை.

இவனின் தந்தையும், சரண்யாவின் தந்தையும் அவளுக்கு மறைமுக ஆதரவு வேற. இவனின் தந்தையின் எண்ணம் இவன் அறிந்தது தானே.

Advertisement

 

[the_ad id=”6605″]

 

தான் பலமுறை அவளை புறக்கணித்தும், சிலமுறை வாய் திறந்து சொல்லியும் புரிந்து கொள்ளாத சரண்யா, ஒரே நாளில் உமையாள் சொல்லி எப்படி புரிந்து கொண்டாள் என்று இவன் யோசிக்க ஆரம்பித்தான்.

உமையாள் பேசியதை நினைவில் கொண்டு வந்து, ஒரு முறை அப்படியே ஓட்டி பார்க்க, அப்போது தான் புரிந்தது, உமையாள் சரண்யாவுக்கு அறிவுரை எல்லாம் கூறவில்லை, மாறாக அவளின் மனதை அவளுக்கே புரிய வைத்திருக்கறாள் என.

ஒவ்வொரு முறை உமையாளின் பெயரை மனதில் உச்சரிக்கும் போதே உதடுகள் தித்திக்கும் உணர்வு கிருஷ்ணாவுக்கு.

மீண்டும் மதியம் நடந்தவைகளை மனம் யோசிக்க ஆரம்பிக்க, உமையாள், பாலாவிடம் சொல்லிய “காதல் இல்லா திருமணம்” இன்னுமே இவனை யோசிக்க வைத்தது.

முழுக்க முழுக்க காதலை அடிப்படையாக கொண்டு நடந்த திருமணத்தின் இலட்சணத்தை தான் இவன் அறிவானே.

உதடுகள் ஏளனமாக வளைய, கிருஷ்ணாவுக்கே அவனை நினைத்து ஆச்சர்யமாக இருந்தது. உமையாள் வந்த பிறகு தான், சிரிப்பு என்ற ஒன்று பற்றியே யோசிக்க ஆரம்பித்தவன் இவன்.

எப்படி, எதற்கு எல்லாம் சிரிக்க வேண்டும் என அவர்களை பார்த்து கற்றுக்கொள்ள நினைக்க, அவளோ வெகு இயல்பாக அவளை பற்றி நினைக்கும் நேரங்களில் எல்லாம் இவனுக்கு புன்னகையை பரிசளிக்கிறாள்.

அவள் வந்த பிறகு அவனில், அவனின் வாழ்க்கையில் தான் எத்தனை மாற்றங்கள். வேப்பங்காயாக கசந்த கல்யாணம் கூட அவனுக்கு இனிக்க ஆரம்பித்து இருக்கிறது.

எவ்வளவு தடுத்தும், இப்போது எல்லாம் மனம், “அவளுடனான வாழக்கை எப்படி இருக்கும்” என்ற கனவில் அழ்வதை இவனால் தவிர்க்க முடியவில்லை.

ஆனால் அதேநேரம் அவனின் காயங்களையும், தயங்களையும், தாண்டி அவனால் உறுதியாக இந்த உறவு வேண்டும் என்றும் எண்ண முடியவில்லை.

வசீகரனின் காதலை பற்றிய பேச்சை கேட்டதில் இருந்து, மனம் வேறு தன் காதலையும், காதலியான உமையாளையும், தன் வாழ்வில் தக்க வைத்து கொள்ள காரணங்களை அலச அடுக்க ஆரம்பித்து விட்டது.

மனதில் அவளின் மீதான காதலும், அதே மனதில் காதலினால் ஏற்பட்ட காயங்களும் இருக்க, அவனின் போராட்டங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

உமையாளின் மீது பொங்கி ததும்பும் காதலை, அவளுக்காக உருகும் உள்ளத்தை, எத்தனை நாட்கள் பிடித்துவைக்க முடியும் என்று அவனுக்கே விளங்கவில்லை.

தன்னை அடித்த தாயிடமே, ஆறுதல் தேடும் மழலை என அவளிடமே தன்னுடைய தயங்களையும், பயங்களையும் பகிர்ந்து, தெளிந்து கொண்டால் தான் என்ன???? என அவனின் மனம் யோசிக்க ஆரம்பித்தது.

“இப்படி செய்தால் என்ன??”என்று ஆரம்பித்த எண்ணம், நேரம் ஆக, ஆக, “அதுவே சரி” என்று வலுப்பட்டது.

இப்படி தீவிர சிந்தனையின் வசம் இருந்த கிருஷ்ணா, அலுவலகத்தில் இருந்து வந்த தன் தந்தை, தன்னை யோசனையுடன் பார்த்து கொண்டு சென்றதையும் கவனிக்கவில்லை.

அதே போல உமையாள் தன் தந்தையை காண வந்ததையும், உள்ளே அவருடன் உரையாடி கொண்டிருப்பதையும் அவன் உணரவில்லை.

ஒரு முடிவுக்கு வந்தவன், அப்போது தான் தன்னிலை உணர்ந்து, சுற்றி பார்க்க இருள் கவிழ்ந்து விட்டதும், வீட்டை சுற்றி விளக்குகள் ஒளிர்வதும் புரிய, நீண்ட நேரமாக இங்கேயே அமர்ந்து விட்டது புரிந்தது.

உமையாளிடம் எப்படி, எப்போது பேசுவது என்ற சிந்தனையுடனே கிருஷ்ணா வீட்டை நோக்கி வர, அதே நேரம் உள்ளே இருந்து வெளியே வந்தாள் உமையாள்.

 

[the_ad id=”6605″]

 

கிருஷ்ணாவை பார்த்து உமையாள் புன்னகைக்க, உமையாளை பார்த்த கிருஷ்ணா அப்படியே நின்றுவிட்டான்.

சற்று முன்பு எடுத்து உறுதி நினைவு வர, “இன்றே அவளிடம் பேசினால் என்ன” என்று தோன்ற, புன்னகையுடன் தன்னை கடக்க போன உமையாளை,”உமையாள்” என்று அழைத்திருந்தான்.

கிருஷ்ணாவின் அழைப்பில் கொஞ்சம் ஆச்சர்யத்துடனே அவனை பார்த்த உமையாள், தன்னுடைய குரலிலும் ஆச்சரியம் தெளிக்க,

“என்ன கிருஷ்ணா” என்று கேட்க, நிறைய நிறைய தயக்கங்களுடன் கிருஷ்ணா,

“இப்போ பிரீ அஹ, இல்ல முக்கியமா எதும் ஒர்க் இருக்கா” என கேட்க, ஏன் கேட்கிறான் என்று புரியாமல், யோசனையுடனே

“இல்ல கிருஷ்ணா சொல்லுங்க” என்று கேட்க, கிருஷ்ணாவோ முன்னினும் அதிக தயக்கத்துடன்,

“கொஞ்சம் பேசணும், பேசலாமா” என்று கேட்க, என்னவாக இருக்கும் என்ற யோசனையுடன், சரி எனும் விதமாக உமையாள் தலையசைக்க, தான் இவ்வளவு நேரம் அமர்ந்திருந்த நீச்சல் குளத்தை நோக்கி சென்றான் கிருஷ்ணா.

கிருஷ்ணாவின் பின்னாலே சென்ற உமையாள், அவன் நீச்சல் குளத்தில் கால்களை விட்டுகொண்டு அமர, தானும் அப்படியே சற்று தள்ளி அமர்ந்தவள்,அவனை பார்த்தது,

“உங்களுக்கும் இப்படி தண்ணில குதிகால் நனைய உட்காருவது பிடிக்குமா, எனக்கும் பிடிக்கும்” என்று சொல்ல, கிருஷ்ணாவோ என்ன பதில் சொல்வது தெரியாமல் வெறுமனே அவளை பார்த்து வைத்தான்.

பின் அவனும் தான் எப்படி சொல்வான், “பெண்ணே அன்று நீ இப்படி அமர்ந்து இருந்தது, அழியா சித்திரம் என மனதில் இருக்க, அதன் தாக்கத்தில், இன்று மனம் மிகவும் அலைகழிப்புடன் இருக்க, அமைதி நாடி வந்தவன், என்னை அறியாமல் உன்னை போல இங்கு இப்படி அமர்ந்திருக்கிறேன்” என.

சிறிது நேரம் இருவரும் அமைதியாக இருக்க, ஒரு நீண்ட மூச்சை எடுத்துக்கொண்டு, எங்கோ தூரத்தில் பார்வையை நிலைக்கவிட்ட கிருஷ்ணா,

“உமையாள் காதலை பற்றி நீ என்ன நினைக்கிற” என்று கேட்க, உமையாளோ என்ன சொல்வது என்று யோசிக்க, அவளின் பதிலுக்கு காத்திருக்காமல், அவனே தொடர்ந்து,

“இந்த படத்துல, கதையில எல்லாம் வர மாதிரி காதல் நிஜத்துல இருக்காது போல”

எங்கோ வானவெளியில் பார்வை நிலைக்க, கிருஷ்ணா பேசி கொண்டு இருக்க, உமையாள் அவனையே பார்க்க, அவளின் பார்வையை உணராமல் கிருஷ்ணா,

“உனக்கு தெரியுமா என்னோட அப்பா, அம்மா காதலித்து கல்யாணம் பண்ணிகிட்டவங்க”

இப்போதும் அதே பார்வை தான், “இது எல்லாம் இப்போது ஏன் சொல்கிறான்” என்று உமையாள் அவனை பார்க்க,

“அதும் எப்படி தெரியுமா, பார்த்ததும் காதலாம், நாலு வருஷம் உருகி உருகி காதலித்து கல்யாணம்”

தன் பெற்றோரை பற்றி அவர்களின் காதலை பற்றி கிருஷ்ணா பேச, அன்று ஜெயவர்மர் சொல்லியதும், பாதியிலே நிறுத்தியதும் இவளுக்கு நினைவு வர, யோசனையோடு கிருஷ்ணாவை நோக்க,

“அப்பா பெரிய ஜமீன் குடும்பம், அம்மா ஓர் அளவுக்கு வசதியான குடும்பம் தான், ஆனா என்னோட தாத்தாக்கு, அம்மா குடும்பம் பிச்சைக்கார குடும்பமா தான் தெரிஞ்சாங்க போல, தன்னோட பையன் காதல் தெரிஞ்சதும் மனிஷன் ஆடி தீர்த்துட்டார்”

அமைதியே உருவாக உமையாள், அவன் சொல்லுவதை கேட்க, அவனோ ஏதோ நினைவுகளின் பிடியில் இருந்தான் போலும்,

“அப்பாவை ஹௌஸ் அரரெஸ்ட், அம்மா வீட்டு ஆளுங்களை ஆள் வச்சி மிரட்டுரதுனு எல்லாமே பண்ணார், ஆனா அப்பா அவரை எதிர்த்து, அவர் காவலில் இருந்து தப்பிச்சி, அம்மாக்கு அவங்க வீட்டுல அவசர கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணி இருக்க, என்ன பண்றதுன்னு புரியாம, இவருக்காக யாருக்கும் தெரியமா வீட்டை விட்டு வெளியேறிய அம்மாவை கல்யாணம் பண்ணாரு”

போராடி காதலில் வென்று, சேர்ந்து இருக்கிறார்கள் என்று புரிய, இதற்கும் கிருஷ்ணாவின் முகத்தில் இருக்கும் பாவத்திற்குமான காரணம் புரியாமல், அவனையே பார்க்க, அவன் தொடர்ந்து,

“படத்துல, கதையில் எல்லாம் இங்க சுபம் போட்டு முடிச்சிடுவாங்க இல்ல, ஆனா நிஜத்துல அதுக்கு அப்புறம் தானே வாழ்க்கையே இருக்கு, சந்தோஷமா கல்யாணம் பண்ணி, படிப்பை வச்சி வேலையில் சேர்ந்து, சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை ஆரம்பித்து, ஒரே வருஷத்துல நானும் பொறந்தாச்சு”

ஒரு இடைவெளி விட்டவன், ஒரு பெருமூச்சுடன் மீண்டும் சொல்ல ஆரம்பித்தான்,

“அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா இவங்களுக்குள்ள பிரச்சனை வர ஆரம்பிச்சது, ராஜா வீட்டு கண்ணுக்குட்டியா வளர்ந்துட்டு, ரொம்பவே சாதாரணமான வாழ்க்கை, அவரின் அறையை விட சிறிய அளவிலான வீடு, சொகுசா வளர்ந்துட்டு இப்படி இருக்க வேண்டி இருக்கேனு எரிச்சல், இன்னொருத்தர் கிட்ட கைகட்டி வேலை பார்க்கிற எரிச்சல், அங்க படுற அவமானம், அங்க காட்ட முடியாத கோவம்னு, எல்லாத்தையும் அப்பா, அம்மா கிட்ட காமிக்க ஆரம்பிச்சாரு”

இப்போ தான் உமையாளுக்கு அவன் சொல்லி கொண்டு இருக்கும் கதையின் போக்கு புரிய ஆரம்பித்தது,

 

[the_ad id=”6605″]

 

“நான் வளர, வளர தினமும் சண்டை தான், என்னை வளர்க்க இன்னும் பணம் தேவைப்பட, ரெண்டு பேருக்கும் எப்பவுமே பிரச்சனை தான், ஒரு அளவுக்கு பொறுத்து போன அம்மா, அவங்களும் பதிலுக்கு பேச ஆரம்பிக்க, மாறி மாறி வார்த்தையாலே குத்தி கிழிச்சிக்கிட்டாங்க ரெண்டு பேரும்”

மீண்டும் ஒரு இடைவெளி, இறுக்க கண்களை மூடி திறந்தவன் மீண்டும் விட்ட இடத்தில் இருந்து பேச ஆரம்பித்தான்,

“நான் ஐந்தாவது வரைக்கும் படிச்சது கவர்ட்மெண்ட் ஸ்கூல்ல தான், வீட்டுல ஒன்னு சண்டையா இருக்கும், இல்ல அம்மா ஒரு பக்கம், அப்பா ஒரு பக்கம் ஏதாவது யோசிக்கிட்டே இருப்பாங்க, அதும் இல்லைனா அம்மா ஒரு மூலையில் உட்கார்ந்து அழுதுகிட்டு இருப்பாங்க,
எனக்கு நேரத்திற்கு சாப்பாடு மட்டும் கொடுத்துடுவாங்க, அதை தவிர அவங்களுக்கு என்ன கவனிக்கவோ, என் கிட்ட கேட்கவோ, பேசவோ எதுமே இருக்காது, அதனால் வீட்டுல எப்பவுமே நான் அமைதி தான்,அப்புறம் ஸ்கூலையும் அதுவே பழகிடுச்சி”

இப்போது உமையாளுக்கு அவனை பார்த்து கண்கள் கரிக்கும் போல இருக்க, முயன்று அவனின் பேச்சில் கவனத்தை திருப்பினாள்,

“எனக்கு அப்போ பத்து வயசு, ஒரு நாள் நான் ஸ்கூல் முடிச்சு வீட்டுக்கு வந்தா, எங்க வீட்டுக்கு முன்னாடி பெரிய கார் நின்னுகிட்டு இருந்தது, உள்ளே போனா, என்ன வேக வேகமா, இருக்குறதுல ஒரு நல்ல ட்ரெஸ் அஹ போட்டுட்டு வர சொல்லி அப்பா சொன்னாங்க, நானும் ரெடியானதும், நாங்க மூனு பேரும் கார்ல போன இடம் என்னோட அப்பா வழி தாத்தா வீட்டுக்கு”

ஒரு அமைதி கிருஷ்ணாவிடம், அவனின் மனதில் என்ன நினைக்கிறான் என்று புரியாமல் அவனின் முகத்தையே உமையாள் பார்க்க, அவனே மீண்டும் தொடர்ந்தான்,

“என்னோட பாட்டிக்கு ரொம்ப உடம்பு முடியலை அப்போ, அவங்க கடைசியா தன்னுடைய பையனை பார்க்கணும்னு சொல்ல அதுக்காக தான், என்னோட தாத்தா ஆள் விட்டு எங்களை கூட்டிகிட்டு வர சொல்லி இருந்தார் போல, பத்து வருஷம் ஆகி கூட அவருக்கு அவர் பையன் மேல இருந்த கோவம் குறையவே இல்லை, அப்புறம் அப்பா, என்ன பார்த்த பாட்டி உடம்பு சரி ஆக, எங்களையும் அவங்க கூடவே இருக்க சொல்லி கேட்க, அப்பா யோசிக்கவே இல்ல உடனே சரினு சொல்லிட்டாரு”

இனியாவது எல்லாம் சரியா நடந்து இருக்கும் என்று உமையாள் நினைக்க, கிருஷ்ணாவோ வேறு சொன்னான்,

“இங்க வந்ததுக்கு அப்புறம் அப்பா, தாத்தாவோட பிசினஸ் அஹ பார்க்க ஆரம்பிச்சாரு, அவருக்கு அவரோட அப்பாகிட்ட அவரை நிரூபிக்கும்னு வெறி, நேரம் காலம் பார்க்காம வேலை பார்த்தாரு, அம்மாவை பத்தி யோசிக்கவே இல்லை, அப்பா வசதினு தெரிஞ்சி இருந்தாலும் இவ்ளோ வசதின்னு அம்மாக்கு தெரியாது போல, இந்த ஆடம்பரத்தை பார்த்த மிரட்சி, மாமனார், மாமியாருக்கு தன்னை பிடிக்கலைனு அப்பட்டமாய் புரிய, அந்த வீட்டில் உணர்ந்த அந்நிய தன்மை, ஆதரவாய் இருக்க வேண்டிய கணவன் வேலை வேலைனு ஓட, ரொம்ப இன்செக்கியுர்ட் அஹ பீல் பண்ணி இருப்பாங்கனு நினைக்கிறேன்”

“அப்புறம் ஒரு வருஷத்துல பாட்டி இறந்துட்டாங்க, அடுத்த ரெண்டு வருஷத்துல அம்மா உடம்பு சரி இல்லாம படுக்கையில விழுந்துட்டாங்க, கொஞ்ச நாளிலே நிரந்தரமா போய்ட்டாங்க”

கண்களை இறுக்கி மூடிய கிருஷ்ணாவின் இடது கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணீர் இறங்க, உமையாள் ஆதரவாக “கிருஷ்ணா” என்று அழைக்க, தன்னை சுதாரித்து கொண்ட கிருஷ்ணா,

“இங்க தாத்தா வீட்டுக்கு வந்த அப்புறம் தான் என்ன வசீகரன் படிச்ச ஸ்கூல்ல சேர்த்தாங்க, அங்க தான் நாங்க ரெண்டு பேரும் பிரின்ட் ஆனோம், அம்மா போனப்போ, கரன் தான் எனக்கு ரொம்ப சப்போர்ட் அஹ இருந்தான்”

தன் நண்பனின் நினைவில் ஒரு நிமிடம் முகம் கனிந்தவன், மறுநிமிடம் பேச ஆரம்பித்தான்,

“தாத்தா என் கிட்ட மட்டும் நல்லா பேசுவாறு, அவர் மட்டும் தான் என்கிட்ட பேசுவாறு, அதனால் அவர் சொல்றதை எல்லாம் நான் கவனமா கேட்டுப்பேன், பேச்சுனா அவசியத்துக்கு மட்டும் தான் இருக்கணும், உணர்வுகளை முகம் பிரதிபலிக்க கூடாது, இப்படி நிறைய நிறைய சொல்வாரு, நான் அமைதியா இருக்குறதுல அவருக்கு ரொம்ப பெருமை, அவர் என்னை அடுத்த ஜமீன் வாரிசா தான் உருவாக்குனாரு, வீட்டுல என் கிட்ட பேசுற ஒரே ஜீவன் அவர்தான், அதனால எனக்கு அவருக்கு பிடிச்ச மாதிரி தான் இருக்கணும்னு தோணுச்சு, ஏற்கனவே நான் அமைதி தானே அதனால எனக்கு அது பெரிய பிரச்சனையாவும் இல்ல”

கிருஷ்ணா அவன் வளர்ந்த விதத்தை, வளர்க்கபட்ட விதத்தை சொல்லி முடிக்க, உமையாள் தான் சிலையென அமர்ந்து இருந்தாள்.

எத்தனை தடவை இவளே நினைத்து இருக்கிறாள், “எப்படி இவனால் பேசாமலே இருக்க முடிகிறது” என, ஆனால் இப்போது கிருஷ்ணா சொல்லியதை வைத்து பார்க்கும் போது தான் அவளுக்கு புரிந்தது.

அவனின் சின்ன வயதில், அவனோடு பள்ளியில் நடந்தவைகளை பற்றி ஆர்வமாக கேட்கவோ, பேசவோ யாருமே இல்லாமல், சின்ன, சின்ன விஷயங்களை கூட பகிர்ந்து கொள்ள ஆள் இல்லாமல், அப்பா, அம்மா இரண்டு பேரும் அவர்களின் சுயத்தில் மூழ்கி இவனை ஊமையாய் ஆக்கி இருக்கிறார்கள் என்று.

ஏற்கனவே பெற்றோரின் அன்றாட சண்டையை பார்த்து பார்த்து, தனக்குள் சுருண்டு போய், ஒரு மாதிரி இறுகி போய் இருந்து இருக்கிறான்.

அவனின் தாத்தாவும், கிருஷ்ணா வயதுக்கு ஏற்ற மாதிரி இல்லாமல், அமைதியாய் இருந்ததை பார்த்து, அவனின் பிரச்சனையை புரிந்து கொள்ளாமல், பேரனின் அமைதியில் பூரித்து போய், அவனுக்கு அதையே தொடர போதித்து இருக்கிறார்.

பெரியவர்கள் ஒட்டு மொத்தமாக செய்த தவறில், சிறிய வயதிற்கே உண்டான எந்த மகிழ்ச்சியையும் அனுபவிக்காமல் வளர்ந்து, உணர்ச்சிகளையே வெளிக்காட்டி கொள்ளாமல், யாரிடமும் இயல்பாக பேசாமல் தனி தீவு மாதிரி இருக்கிறான் என்று புரிய உமையாள் அவளையும் அறியாமல் ஒரு பெருமூச்சை வெளியிட்டாள்.

சிறுது நேரம், அந்நாட்களின் நினைவில் அமைதியாய் இருந்த கிருஷ்ணா, மீண்டும் பேச ஆரம்பித்தான்,

“என்னோட சின்ன வயசுல அப்பா, அம்மா ஏன் சண்டை போடுறாங்கன்னு எனக்கு புரியாது, ஆனா அவங்க கோவமா பேசிக்கும் போது பயமா இருக்கும், கொஞ்சம் பெரியவனானதும் பணம் பற்றாக்குறை அதனால் தான் பிரச்சனைனு புரிஞ்சி, இது வேணும், அது வேணும்னு எதுமே கேட்கமாட்டேன், நாங்க தாத்தா வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் எல்லாம் சரி ஆகிடும்னு நான் நினைச்சேன்”

இத்தனை வருடம் பேசமால் இருந்தற்கு எல்லாம் சேர்த்து வைத்து கிருஷ்ணா பேச, உமையாள் அமைதியே உருவாக அமர்ந்து இருந்தாள்,

 

[the_ad id=”6605″]

 

 

“ஆனா எதுமே சரி ஆகல, ரெண்டு பேரும் பழைய மாதிரி சண்டை போடல, அதே நேரம் பேசிக்கவே இல்லைனு நினைக்கிறேன், அம்மா இறந்த நேரம் எனக்கு பதிமூன்று வயசு, என்னால அம்மாவோட உணர்வுகளை புரிஞ்சிக்க முடிஞ்சுது, எனக்கு அப்போ அப்பா மேல தான் கோவம் வந்தது, முன்னாடி ரெண்டு பேரும் சண்டை போட்டாங்க, அது ஒரு இயலாமையின் வெளிப்பாடா வச்சிகிட்டா கூட, அப்போதும் அது தப்பு தானே, வீட்டை விட்டு வெளியே வந்து கல்யாணம் பண்ணா இப்படி தான் இருக்கும்னு தெரியும் இல்ல, அப்புறம் எதுக்கு கோவம், எதுக்கு வார்த்தையால ஒருத்தரை ஒருத்தர் குத்தி கிழிக்கனும்”

உமையாளோ அவன் பேசுவதை செவிமடுத்து கொண்டு சிலையென அமர்ந்து இருக்க, அவனோ விடாமல் பேசி கொண்டு இருந்தான்,

“தாத்தா வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் அப்பா, அம்மாவை கேர் பண்ணி இருக்கணும், அவங்க பயத்தை போக்கி, நம்பிக்கை கொடுத்து இருக்கணும், நாலு வருஷம் காதலிச்சு, பத்து வருஷம் வாழ்க்கை நடத்தி என்ன புண்ணியம், அம்மாக்கு அப்பா மேல நம்பிக்கை இல்லை, இருந்து இருந்தா அந்த இன்செக்கியுரிட்டி பீல் வந்து இருக்காது, இவருக்கு அவங்க உணர்வுகளே புரியாம இருந்து இருக்கு, புரிஞ்சி இருந்தா, அவங்க பயத்தை சரி பண்ணி இருந்தா, இந்நேரம் அம்மா இருந்து இருப்பாங்க இல்ல”

கிருஷ்ணாவின் குரல் உடைய, உமையாள் அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் தவிக்க, கிருஷ்ணாவோ அதற்கு அவசியமே இல்லை என்பது போல,

“பச் எனக்கு காதல் கல்யாணம் சொன்னாலே கடுப்பா இருக்கு, நாளைக்கு நானும் கல்யாணம் பண்ணி என்னோட அப்பா, அம்மா மாதிரி குழந்தையை கவனிக்காம விட்டு, அது இன்னொரு கிருஷ்ணாவா, ஜடம் மாதிரி எதுக்கு வாழறோம்னு தெரியாம ஒரு வாழ்க்கை வாழனும்”

என்று விரக்தி முக்குளித்த குரலில் பேச, “பெற்றோரின் சண்டையை மட்டுமே பார்த்து வளர்ந்ததினால் கல்யாணத்தின் மீது அவனுக்கு இருக்கும் ஒவ்வாமை புரிய”, இவ்வளவு நேரம் மௌன சாமியாராக இருந்த உமையாள், தன் திருவாய் மலர்ந்து,

“என்ன கிருஷ்ணா நீங்க இப்படி பேசுறீங்க, இப்போவே இவ்ளோ யோசிக்கிற நீங்க கல்யாணம் ஆனா அந்த வாழ்க்கையை சந்தோஷமா கொண்டு போக எவ்ளோ யோசிப்பிங்க, எனக்கு தெரிஞ்சி உங்களுக்கு கல்யாணம் ஆன, கண்டிப்பா அவங்களை மாதிரி எந்த தப்பும் பண்ண மாட்டீங்க, ரொம்ப கவனமா உங்க மனைவியை பார்த்துப்பிங்க, அதோட உங்க குழந்தைக்கு உங்களுக்கு கிடைக்காத அன்பு, அரவணைப்பு எல்லாம் கொடுத்து சூப்பர் அஹ வளர்பிங்க” என்று சொல்ல, கிருஷ்ணா அவளையே தான் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான்.

உமையாள் பேச பேச, கிருஷ்ணாவுக்கோ இத்தனை வருட எண்ணத்தை, பயத்தை சடுதியில் மாற்றி கொள்ள முடியவில்லை என்றாலும், அவளின் கூற்றுபடி நடக்கவும் வாய்ப்பு இருப்பது புரிந்தது.

உமையாளின் பேச்சு ஒரு நம்பிக்கையை விதைக்க, மனமோ அதன் தயக்ககள், காயங்களை கடந்து, “உமையாளுடன் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தால் தான் என்ன” என்று யோசிக்க ஆரம்பித்தது.

இவனின் எண்ணத்தின் போக்கை அறியாத உமையாள், அவனின் அமைதியை கலைக்காமல் சிறிது நேரம் அமைதியாக இருந்தவள், பின்பு,

“கிருஷ்ணா” என்று அழைக்க, அவளின் அழைப்பில் தன் கனவில் இருந்து வெளி வந்தவன், அவளை பார்த்து, அதரங்களின் நெளிந்த குறுநகையுடன்,

“தேங்யு உமையாள், தேங்யு சோ மச்” என்று உணர்ந்து சொல்ல, அவனுக்கு பதில் அளிக்காத உமையாள், தன் தலையை அழகாக வலது பக்கத்தில் சரித்து, ஒரு கண்ணை மூடி, ஆள்காட்டி விரலையும், கட்டைவிரலையும் ஒன்றாக அதரங்களின் அருகே கொண்டு வந்தவள், அதை அப்படியே மெல்ல விரித்து புன்னகை செய்ய சொல்ல, வழக்கம் போல உமையாளின் அந்த செய்கை கிருஷ்ணாவின் முகத்தில் இருந்த குறுநகையை, புன்னகையாக உருமாற்ற, பின்பே அவனிடம் விடைபெற்று கிளம்பினாள் உமையாள்.

சீக்கிரமே தன் காதலை அவளிடம் சொல்ல வேண்டும் என கிருஷ்ணா நினைக்க, விதியோ வேறு திட்டம் தீட்டி இருந்தது.

காதல் கொள்வோம்…………………….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!