Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Meendum Vikramaathithyan

Vijay’s Meendum Vikramadithyan – Episode 01

ருணின் கார் அடையாற்றில் கடற்கரைக்கு இணையாக இருந்த அந்தச் சாலையில் சறுக்கிச் சென்றது.

கடலில் குளித்துவிட்டு எழும் மஞ்சள் சூரியனையோ, உப்பு கலந்த காற்றையோ, மணலில் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களையோ, நடைபயிற்சி செய்பவர்களையோ (இளைஞிகள் உட்பட) அருண் கவனிக்கவில்லை. அவனது கவனம் சரிபாதி வண்டி ஓட்டுவதிலும் சரிபாதி அன்று செய்ய வேண்டியவைகளின் பட்டியலை மனப்பாடம் செய்வதிலும் இருந்தது.

அருணின் கார் அந்த மாளிகை வீட்டை நெருங்கியது, காவலாளி இரும்புக் கதவைத் தயாராகத் திறந்துவைத்துக்கொண்டு சல்யூட்டுடன் விரைத்து நின்றான்.

அருண் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் ஸ்டியரிங்கை ஒடித்துத் திரும்பி உள்ளே நுழைந்து நிறுத்தினான்.



Advertisement

வீட்டின் முன்னால் இருந்த புல்வெளியில் யோகா பாயை விரித்து மயூராசனம் செய்துகொண்டிருந்தாள் விஷாலி.

[the_ad id=”6605″]

“விக்ரம் எழுந்துட்டானா?” காரின் கதவைச் சாற்றியபடியே கேட்டான் அருண்.

Advertisement

“அவன் கிளம்பி ஆஃபிசுக்கே போய்ட்டான்!” விஷாலி மயிலைவிட்டு மனுஷியாகி எழுந்தாள்,

Advertisement

“என்ன செக்ரட்டரி நீ? பாஸைவிட சோம்பேறியா இருக்க?” வேலைக்காரப் பெண் நீட்டிய துண்டால் முகத்தைத் துடைத்துக்கொண்டாள்.

“போய்ட்டானா? எந்த ஆஃபிசுக்கு? ஏன் நான் வரதுக்குள்ள போனான்?” அருண் மீண்டும் தனது கார் கதவைத் திறந்து ஏறிக்கொள்ள முற்பட்டான்.

“டென்ஷனாகாதப்பா… ரத்தக்கொதிப்பு ஏறும்… யோகா பண்ணேனா ரிலாக்ஸா இருக்கலாம், என்னை மாதிரி… கத்துத் தரவா?” அவளது முகத்தில் குறும்பு விளையாடியது.

Advertisement

அருண் சட்டெனப் புரிந்துகொண்டு மீண்டும் கீழே இறங்கினான்.

வேலைக்காரப் பெண் சிரிப்பை அடக்க முயன்று கஷ்டப்பட்டாள்.

“என்ன சிரிப்பு? வேலயவிட்டுத் தூக்கிருவேன்!” விஷாலி மீது இருந்த எரிச்சலை அவள் மீது காட்டினான். அவளது சிரிப்பு சட்டென நின்றது.

“ஹலோ, நீ விக்ரமுக்கு பர்சனல் செக்ரட்டரினா இவ எனக்கு செக்ரட்டரி, உன்னால இவள ஒன்னும் பண்ண முடியாது! நீ சிரிடி…”

விஷாலி நின்றபடியே மெல்ல குதித்தாள். அவளோடு சேர்ந்து எகிறிக் குதிக்கும் நீண்ட குதிரைவால் கூந்தல் அருணை அணுஅணுவாக வதைத்தது. அவனது கோவமும் எரிச்சலும் மேலும் அதிகரித்தன.

”தெனம் காலைல இவன வம்பிழுக்கனுமா உனக்கு?”

அந்தக் குரலைக் கேட்டதும் அருண் இன்னும் கோவமானான்.

விக்ரம் பால்கனியிலிருந்து எட்டிப் பார்த்தபடிப் பேசினான். “பணக்காரன்” என்று பார்த்தவுடன் சொல்லிவிடலாம். உயரமான, தசைகள் இறுகிய உடற்கட்டோடு கூடைப்பந்தாட்ட வீரனைப் போல இருந்தான். சென்னையில் மட்டுமே பதினைந்து அலுவலகங்கள் இருக்கும் ஒரு பெரிய நிறுவனத்தின் முதன்மை நிர்வாக இயக்குனர் என்று விக்ரமைக் கணிப்பது கடினம். மூன்றாமாண்டு கல்லூரி மாணவன் என்பீர்கள்!

“மேல வாடா! நீயும் தெனம் அவகிட்ட ஏமாந்து போற… எப்பத்தான் தேறுவியோ!”

விஷாலி உதட்டைச் சுழித்து ஆள்காட்டி விரலை மடக்கி நீட்டி அழகு காட்ட, அருண் அவளை முறைத்துவிட்டு உள்ளே சென்றான்.

அடுத்த அரைமணியில் மூவரும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

[the_ad id=”6605″]

அருண் அன்றைய வேலைகளையும் சந்திப்புகளையும் விக்ரமுக்குச் சொல்லிக் கொண்டிருந்தான்.

விக்ரமும் “ம்ம்ம்”, “ம்ம்ம்” என்று கேட்டுக்கொண்டே சாப்பிட்டான்.

விஷாலி அருணையே குறும்பாகப் பார்த்துக்கொண்டு சாப்பிட்டாள். அருண் அவளைக் கவனிக்காதவன் போல இருந்தான்.

விக்ரமின் கைப்பேசி சிணுங்க அவன் அதை எடுத்துப் பார்த்து “அன்னோன் நம்பர்!” என்றுவிட்டுப் பேசினான்.

“ஹலோ… ஆமா… ம்ம்… ம்ம்… சரி, ஆபிஸ்ல வந்து பாருங்க… வாங்க!” அழைப்பைத் துண்டித்தான்.

“யாரு?” அருண் ஆவலாய் வினவினான். பொதுவாக விக்ரமின் சொந்தக் கைப்பேசிக்கு மிக நெருங்கியவர்களின் அழைப்பு மட்டும்தான் வரும். மற்ற எல்லாம் அருணிடம் இருக்கும் எண்ணிற்குத்தான் வர வேண்டும்.

“சரியா சொல்லல, என்னைப் பார்க்கனும்னு மட்டும் திரும்பத் திரும்பச் சொன்னாரு…”

“இந்த நம்பர் எப்படிக் கிடைச்சது?” அருண் தன்னையே கேட்பவனைப் போலக் கேட்டான்.

“அத விக்ரம் உன்கிட்ட கேக்கனும்! நீ அவனுக்கு செக்ரட்டரியா? அவன் உனக்கு செக்ரட்டரியா?” விஷாலி இடையில் புக, அருண் கோவமானான்.

“இவ என்ன ரொம்ப அதிகமா டீஸ் பன்றா விக்ரம்! இது நல்லதில்ல!”

“உங்க சண்டைல என்னை இழுக்காதீங்கப்பா… காத்தால அடிச்சுக்குவீங்க சாயங்காலம் ஃப்ளர்ட் பண்ணுவீங்க…” விக்ரம் மிக இயல்பாகத்தான் அதைச் சொன்னான்.

விஷாலியின் முகம் சட்டெனச் சிவந்தது, “அண்ணா…” என்று குழைந்தாள்.

அருண் மசியவில்லை “ஃப்ளர்ட்? விக்ரம் நீ தப்பா-”

“என்னை இழுக்காதனு சொல்லிட்டேன்ல… சாப்டாச்சுனா கிளம்பு, போலாம்!” விக்ரம் எழுந்து கைகழுவச் சென்றான்.

அருண் விஷாலியை முறைத்தபடியே எழுந்துகொண்டான். அவள் பார்வையில் சற்றும் குறும்பு குறையவில்லை, அருணை நோக்கிக் காற்றில் மெள்ள, மிக மெள்ள முத்தமிட்டாள்.

வேலைக்காரப் பெண் “ஹுக்கும்” என்று வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தாள்.

***

“ஃபோன்ல யாருனு சொல்லலையே?” அருண் காரில் நுழைந்தபடியே கேட்டான்.

“ஏதோ பேர் சொன்னான், சரியா கவனிச்சுக்கல… என்னப் பார்க்கனும்னே திரும்பத் திரும்பச் சொன்னான், ஆஃபிசுக்கு வாங்கனேன், வந்தா உள்ளவிட மாட்றாங்கனான்!”

விக்ரம் வண்டியைக் கிளப்ப விஷாலி ஓடி வந்தாள்,

“என்னையும் டிராப் பண்ணிட்டுப் போ…ண்ணா…” பதிலை எதிர்பாராமல் பின்னால் ஏறி அமர்ந்துகொண்டாள்.

அருணின் முதுகில் அவள் பார்வை உறுத்தியது, ரியர்வியூ கண்ணாடியில் ஒரு கணம் அவள் கண்களைப் பார்த்துப் பார்வையைத் திருப்பிக்கொண்டான்.

வண்டியில் கனமான அமைதி நிலவியது. விக்ரம் மெல்லிய புன்னகையோடே  வண்டி ஓட்டினான். வண்டி அடையாறு பாலத்தைத் தாண்டிப் பறந்தது.

“என்னைக் கூட ஒருத்தன் அடிக்கடி காண்டாக்ட் பண்றான் விக்ரம், உன்னைப் பார்க்கனும், முக்கியமான விஷயம்னு திரும்பத் திரும்பச் சொல்றான்…”

”ம்ம்ம்…” விக்ரமின் கவனம் சாலையிலேயே இருந்தது.

“அவன் பேரு கூட… ம்ம்ம்ம்….

“பட்டி!”

அருண் சொல்லவும் விக்ரம் சட்டென பிரேக் போடவும் வண்டி தார்ச்சாலையில் சிராய்த்துக்கொண்டு நின்றது. மூவரும் ஒரு குலுங்குக் குலுங்கினர்.

“என்னடா?” என்று அருண் அதிர்ச்சியாக விக்ரமைப் பார்க்க விக்ரம் முன்னால் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

நடுச்சாலையில் ஒருவன் வண்டிக்கு முன் விக்ரமையே உற்றுப் பார்த்தபடி அசையாமல் நின்றுகொண்டிருந்தான்!

[the_ad id=”6605″]

* * * * *

விக்ரம் சட்டென அதிர்ச்சியிலிருந்து மீண்டு வண்டியைவிட்டு இறங்கினான்.

அருண் பின்தொடர்ந்தான். இறங்கும் முன் விஷாலியை இறங்க வேண்டாம் என்று செய்கையால் கூறிவிட்டுத்தான் இறங்கினான்.

“யோவ்… அறிவில்ல? இப்படி வண்டிக்கு முன்னாடி வந்தா நிப்ப? அதுவும் மெயின் ரோட்ல?”

எதிரில் நின்றவன் பதில் சொல்லவில்லை. விக்ரமையே கண்கொட்டாமல் பார்த்தான்.

விக்ரம் அவனை நெருங்கி மார்பில் கைவைத்துப் பின்னால் தள்ளினான். அருண் ஓடிச்சென்று விக்ரமைப் பிடித்துக்கொண்டான்.

“ரோட்ல பிரச்சனை வேணா விக்ரம், ட்ராஃபிக் ஜாம் ஆகுது, கூட்டம் கூடுது… வா…”

விக்ரம் எதிரில் நின்றவனையே முறைத்தபடி இருந்தான். சற்று தவறியிருந்தால் அவன் மீது வண்டி ஏறியிருக்கும் என்ற அதிர்ச்சி அவனிடம் கோவமாக மாறியிருந்தது.

“வா விக்ரம், கூட்டம் கூடுது, உன்னை அடையாளம் கண்டுக்கிட்டாங்கனா நல்லதில்ல…”

அதற்குள் ஒரு போக்குவரத்துக் காவலர் அங்கு வந்துவிட அருண் அவரிடம் நடந்ததை விளக்கினான். தன்னை அறிமுகம் செய்துகொள்ளக் காவலரின் தொனி நட்பு கலந்து மாறியது.

விஷாலி வண்டியை ஓட்டிச்சென்று சாலை ஓரமாக நிறுத்தியிருந்தாள். அருண் விக்ரமைக் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தான்.

“வாடா… அவன போலிஸ் பார்த்துக்குவாறு…”

“செம இடியட்றா அவன்! என் வண்டிலயா வந்து சாவனும்!” விக்ரம் இன்னும் தணியவில்லை.

அதற்குள் குறுக்கே வந்தவன் காவல் அதிகாரியை மீறி இவர்களிடம் ஓடி வந்தான்.

“அண்ணா… அண்ணா…” அவன் கண்களில் கண்ணீர் பெருகிக் கன்னத்தில் வழிந்தது.

விக்ரமும் அருணும் இப்போதுதான் அவனைக் கவனித்துப் பார்த்தனர். இளைஞன்தான். இருபத்தைந்து வயதுதான் இருக்கும்.

“என்ன டா?” என்றான் அருண் கோவமாக.

“அண்ணா…” அவன் குரல் தழதழத்தது.

விக்ரம் அவனைப் புதிராகப் பார்த்தான். அவன் முகத்தைப் பார்க்கப் பார்க்க ’இவனை எங்கேயோ பார்த்திருக்கிறோம்’ என்ற எண்ணம் ஓங்கியது.

“நான்… நான்தாண்ணா பட்டி!” என்றான் அவன். கண்ணீர் நிற்கவில்லை.

”எந்தப்-” கேட்டு முடிக்கும் முன்பே அருணுக்குப் புரிந்துவிட்டது.

“விக்ரம்… இவன்தான் நமக்கு ஃபோன் பண்ணிட்டே இருந்தவன் போல…”

விக்ரம் ஏதும் பேசாமல் அவனையே பார்த்துக்கொண்டு நின்றான். அவனும் தனது பார்வையை விக்ரமைவிட்டு விலக்கவில்லை.

“வண்டில ஏறுங்க டா, நடுரோட்ல நின்னுக்கிட்டு!” விஷாலி கடுப்போடு கத்தினாள்.

“ரெண்டே நிமிஷம்… உங்க கூட பேசனும்…ண்ணா… தயவு செஞ்சு… ரெண்டே நிமிஷம்…” அவன் கெஞ்சினான்.

“ஆள்வார்பேட்ட ஆஃபிசுக்கு மதியாணமா வ-”

அருண் முடிப்பதற்குள் விக்ரம் இடைவெட்டினான், “வண்டில ஏறு!”

“என்னடா? இவன் யாரு என்னனே தெரியாது, வண்டில ஏறுனு…” அருண் சொல்வதைக் கேட்காமல் விக்ரம் வண்டியில் ஏறி முன்னால் அமர்ந்துகொண்டான். விஷாலியை ஓட்டுநர் இருக்கையில் இருந்து எழச் சொல்லவில்லை.

அந்த இளைஞனும் வந்து பின் சீட்டில் ஏறிக்கொள்ள, அருண் முணுமுணுத்தபடியே வந்து அவனோடு பின்னிருக்கையில் ஏறிக்கொண்டான்.

இந்தப் பரபரப்பில் விக்ரம் தன்னை அவனது வண்டியை ஓட்டவிட்டுவிட்டதை எண்ணி மகிழ்ந்தவளாய் விஷாலி வண்டியைக் கிளப்பினாள்.

சற்று நேரம் எல்லோரும் அமைதியாகவே வந்தனர். விக்ரம்தான் மௌனத்தைக் கலைத்தான்.

”சொல்லுங்க பட்டி, உயிரைப் பணயம் வெச்சு என்னைச் சந்திக்க வேண்டிய அளவுக்கு என்ன முக்கியமான விஷயம்? பணம் ஏதாச்சு வேணுமா?”

“அண்ணா-”

“யப்பா, நானே இவன இவ்ளோ தடவ அண்ணானு கூப்டதில்லப்பா… விஷயத்தச் சொல்லு, பாசத்த அப்பறம் பொழிஞ்சுக்கலாம்!” விஷாலி தனது இயல்பான குறும்போடு சொன்னாள். வண்டி ஓட்டும் உவகையில் அவள் சற்றுமுன் நடந்திருந்த நிகழ்வை மறந்திருந்தாள்.

“அண்ணா… நா… நான்… உங்கக்கிட்டத் தனியா… பேசனும்…”

“என்ன விளையாடுறியா? நீ யார்னே தெரியாது…” அருண் கோவமாக, விக்ரம் கைகாட்டி அவனை அமைதியாக்கினான்.

“இவங்க இருந்தாலும் தனியா இருக்குற மாதிரிதான், பரவால்ல சொல்லு…”

அவன் தயங்கினான்.

”யோவ், எங்களுக்கு நிறைய அப்பாயிண்ட்மெண்ட்ஸ் இருக்குய்யா! வண்டிக்குக் குறுக்க வந்து மறிச்சதுக்கு உன் மேல கேஸ் குடுக்காமவிட்டது பெரிய தப்பு!” அருண் அலுத்துக்கொண்டான்.

விக்ரம் அதீத அமைதியோடு இருந்தான்.

இளைஞன் விக்ரமையே ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“சொல்ல வேண்டியத இங்கயே சொல்லு பட்டி… என்னால இப்போதைக்குத் தனியாலாம் வர முடியாது!” விக்ரம் மௌனம் கலைந்து சற்றுக் கடுமையாகப் பேசியதும், அந்த இளைஞனின் முகத்தில் இலேசான ஏமாற்றம் வெளிப்பட்டது.

“அண்ணா… நான் பட்டி! நீங்க… நீங்கதான் விக்ரமாதித்யன்! உஜ்ஜைனி பேரரசன்… உங்கள-” அவன் முடிக்கும் முன்பாக விஷாலி வாய்விட்டுச் சிரித்தாள்.

“வண்டிய எங்கயாச்சு விட்ராதம்மா தாயே!” அருண் தன் எரிச்சலையெல்லாம் அவள் மீது கொட்டினான். ஆனால் அதில் வெறுப்பு இல்லை!

“இங்கப் பாரு தம்பி, இது ஏதாச்சு விளையாட்டா? எங்கயாச்சு கேமராவ ஒளிச்சு வெச்சுக்கிட்டுக் கிண்டல் பண்ற பைத்தியக்காரத்தனமா? விஷாலி வண்டிய நிறுத்து, அருண் இவன இறக்கிவிடு!” விக்ரம் சட்டென மிகக் கடுமையானான்.

இளைஞனின் முகத்தில் அச்சமும் பதற்றமும் சடசடவென அதிகரித்தன.

“அண்ணா… விளையாட்டெல்லாம் இல்ல… உண்மை… இதோ… இதோ பாருங்க…” என்று தனது பையில் இருந்து எதையோ எடுத்து நீட்டினான்.

[the_ad id=”6605″]

அது ஒரு தங்க மோதிரம். அதன் பதக்கம் பெரியதாய் கைக்கடிகாரம் அளவு இருந்தது. நடுவில் சிறிய நெல்லிக்காய் அளவிலான ஒரு சிவந்த மாணிக்கக் கல்லும் அதைச் சுற்றி சிறு சிறு கற்களும் பதித்துச் சூரியனைப் போன்ற வடிவில் இருந்தது. அவன் அதை வெளியில் எடுத்த நொடி வண்டிக்குள் பளிச்சென்று வெளிச்சம் கூடியிருந்தது.

அருண் கண்கள் அகல அதைப் பார்த்தான். அந்த அழுக்கு இளைஞனிடம் அப்படி ஒரு மோதிரத்தை அவன் எதிர்பார்க்கவில்லை.

விக்ரமும் வியப்போடு அதைப் பார்த்தான்.

“இது உங்க முத்திரை மோதிரம்… கணையாழி!” அவன் அதை விக்ரமை நோக்கி நீட்டினான்.

அதைக் கையில் வாங்கிய நொடி விக்ரமின் தலைக்குள் ஆயிரமாயிரம் பிம்பங்கள் தோன்றி மறைந்தன. விக்ரம் சட்டென மயங்கி விழுந்தான்.

”விக்கீஈ….” அருண் அலற, விஷாலி மயங்கிய விக்ரமைக் கண்டு அதிர்ந்து வண்டியைத் தாறுமாறாகச் செலுத்திச் சாலையின் ஓரத்தில் எதன் மீதோ இடித்து நிறுத்தினாள்!

[the_ad id=”6605″]

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!