Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Maruvak Kaathal Kondaen

மருவக் காதல் கொண்டேன்-23

காலையில் தூக்கம் கொஞ்சம், கொஞ்சமாக கலைய, கண் விழித்த உமையாளுக்கு, அரைகுறை தூக்கத்திலும், தான் இருக்கும் அறையின் வித்தியாசம் கண்களில் விழ, அடுத்த நொடி மூளை சுறுசுறுப்பானது.

தூக்கம் முற்றிலும் கண்களில் இருந்து விடைபெற்று ஓட, அறையை சுற்றிலும் பார்வையை ஓட்டிய படியே எழுந்து அமர்ந்தால் உமையாள்.

நேற்று நடந்த சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நினைவு வர, அப்போது தான், தான் இருப்பது கிருஷ்ணாவின் வீட்டில் என்பது புரிந்தது.

ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவள், எழுந்து தன்னை சுத்தப்படுத்தி கொண்டு, அறையை விட்டு வெளியே வர, மாடியில் இருக்கும் வரவேற்பறையில் அவளுக்காக கிருஷ்ணா காத்திருந்தான்.



Advertisement

உமையாள் வரவும், வேலையாள் வைத்துவிட்டு போய் இருந்த தேநீர் கோப்பையை கிருஷ்ண சுட்டிகாட்ட, அவளும் எதுவும் பேசாமல் அதை பருக ஆரம்பித்தாள்.

உமையாள் தன்னுடைய வீட்டில், தன்னுடன் தேனீர் அருந்த, ஏனோ கிருஷ்ணாவுக்கு அது கனவு போலவே தோன்ற, எங்கே பேசினால் அதன் இனிமை குறைந்தது விடுமோ, என்ற எண்ணத்தில் எதுவுமே பேசாமல் அமைதியாய் இருந்தான்.

கையும், வாயும் தீவிரமாக வேலையில் ஈடுபட்டு இருந்த போதிலும், கண்கள் அதன் பாட்டிற்கு அவளின் பிம்பத்தை உள்ளத்தில் நிரப்பி கொண்டிருக்க, ஏதோ சிந்தனையில் மூழ்கி இருந்த உமையாள், கிருஷ்ணாவின் பார்வையை உணரவே இல்லை.

Advertisement

உமையாள் தேநீர் அருந்தும் வரை, காதிருந்தவன், அவள் அருந்தி முடித்ததும், இருக்கையில் இருந்து எழுந்து, உமையாளை பார்த்து,

Advertisement

“வா உமையாள், நான் உன்னை வீட்டுல விட்டுட்டு வரேன்” என்று அழைக்க, உமையாளும், எதுவுமே பேசாமல் அவனை பின்தொடர்ந்தாள்.

நன்கு விடிந்துவிட்ட போதும், ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில், உமையாளின் அருகில் நடப்பதே கிருஷ்ணாவுக்கு உற்சாகமாக இருக்க, ஏனோ இன்றைய விடியலே வெகு அழகாக இருப்பதை போல தோற்றம் அவனுக்கு.

அவளின் அருகாமையே தன்னில் ஒரு அமைதியையும், நிறைவையும் விதைப்பதை உணர்ந்து, அதை ஆழ்ந்து அனுபவித்தபடி மௌனம் எனும் போர்வையில், ஒரு மோன நிலையிலே நடந்தான் கிருஷ்ணா.

Advertisement

ஏதோ சிந்தனையில் இருந்த உமையாள், தன் சிந்தனையையும், அவனின் மௌன நிலையையும் கலைக்கும் விதமாக,

“கிருஷ்ணா” என்று அழைக்க, தன் மோன நிலையில் இருந்து வெளிவந்த கிருஷ்ணா, அவளை என்ன என்னும் விதமாக ஏறிட்டான். அவனின் கேள்வியை புரிந்து கொண்ட உமையாள்,

“நேத்து நடந்ததை யாரு, எதுக்கு பண்ணாங்கனு தெரிஞ்சதா” என்று கேள்வி கேட்ட, இது வரை ஒரு இரசிப்பு நிலையில் இருந்தவன்,தீவிர பாவத்தை தத்து எடுத்து,

“இல்ல உமையாள், போலீஸ் அங்க போறதுக்குள்ள, ஆக்சிடன்ட் ஆன கார் எல்லாம் அங்க இருந்து ரிமூவ் பண்ணி இருக்காங்க, ஆக்சிடன்ட் நடந்ததுக்கான ஒரு எவிடன்ஸ் கூட இல்லையாம், விசாரிக்க சொல்லி இருக்கேன், பார்ப்போம்” என்று வழக்கத்திற்கு மாறாக நீண்ட விளக்கம் கொடுத்தான்.

உமையாள் அவனின் விளக்கத்தை தலையசைத்து கேட்டு கொள்ள, சிறிது இடைவெளி விட்டு கிருஷ்ணா, மீண்டும்,

“சேஸ் பண்ணது என்னோட காரைனாலும், நீயும் இருக்கும் போது இப்படி நடந்து இருக்கு, இது யாருக்கு வச்ச குறின்னு இன்னும் தெரில, கொஞ்ச நாள் மைக் இல்லாம எங்கேயும் தனியா போகாத, கேர்புல் அஹ இரு சரியா” என்று சொல்ல, அவனின் குரலில் இருந்த பாவத்தில், உமையாள்,

“சரி கிருஷ்ணா, நான் பார்த்துகிறேன், நீங்களும் பார்த்து இருங்க” என்று சொல்ல, இருவரும் வசீகரனின் வீட்டிற்கு வந்து இருந்தனர்.

உமையாள் வீட்டின் உள்ளே செல்லும் வரை, அவளை பார்த்திருந்தவன், ஒரு பெருமூச்சுடன், தன் வீட்டிற்கு திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

தன் வீட்டின் பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கும், அந்த தனியார் நிறுவனத்திற்கு அழைத்து, வசீகரனின் வீட்டிற்கும், உமையாளுக்கும் தனி, தனியே பாதுகாப்பிற்கு ஆட்களை ஏற்பாடு செய்தான்.

அதன் பின் நாட்கள் அதன் போக்கில் செல்ல, ஒரு வாரத்தில் ஜெயவர்மரை வீட்டிற்கும் அழைத்து வந்தனர்.

காயங்கள் வெளியே பெருமளவு ஆறி இருந்த போதிலும், தையல் பிரிக்கும் வரை, மருத்துவர்கள் கவனமாக பார்த்து கொள்ள சொல்லி, அவருக்கான உணவு பட்டியலையும் கொடுத்து இருந்தனர்.

அவரின் உடல்நிலையை கணக்கில் கொண்டு, அவருக்கு தரைத்தளத்தில் ஒரு அறையை தயார் செய்ய சொன்னவன், அதோடு அவரை பார்த்து கொள்ள, ஒரு ஆண் செவிலியரையும் வீட்டோடு ஏற்பாடு செய்தான் கிருஷ்ணா.

மருத்துவமனையில் இருந்த வரை, ஜெயவர்மர் பாதி நேரம் மருந்தின் உபயத்தில் தூங்கிதான் கொண்டு இருப்பார்.

அவர் விழித்து இருக்கும் நேரத்தில் எல்லாம் உமையாள் தான் அவரிடம் எதாவது பேசிக்கொண்டு இருப்பாள்.

இப்போது ஓர் அளவு சரியாகி வீட்டுக்கு வந்ததிருந்த நிலையில், அவர் தான் நிறைய பேசினார் உமையாளிடம்.

அவரின் பேச்சு பெரும்பாலும் கிருஷ்ணாவை பற்றி தான் இருக்கும், உமையாளும் முகத்தில் எந்த உணர்வையும் பிரதிபளிக்காமல் கேட்டு கொண்டு இருப்பாள்.

ஜெயவர்மர் வீட்டுக்கு வந்ததும் தான், கிருஷ்ணா பெருமளவு ஆசுவாசமாக உணர்ந்தான். அலுவலகம் வேலைகளும் ஓர் அளவுக்கு இப்போது கட்டுக்குள் வந்து இருந்தன.

பொதுவாக இவன் வந்த, சற்று நேரத்திற்கு எல்லாம் உமையாள் கிளம்பி வீட்டிற்கு சென்று விடுவாள். வாசலில் இவளுக்காக மைக்கேல் காத்திருப்பார்.

தந்தையின் அறையின் பக்கம் ஒரு கண் வைத்து கொண்டே, வரவேற்பறையில் அமர்ந்து, தன் வேலையை பார்ப்பான் கிருஷ்ணா.

அன்றும் வீட்டுக்கு வந்த கிருஷ்ணா, உடை மாற்றிவிட்டு, வரவேற்பறைக்கு வந்தவன், மடிக்கணினியுடன் மல்லுக்கட்ட ஆரம்பித்தான்.

அந்த நேரம் அவனின் தந்தையின் கைபேசிக்கு வேலை சம்பந்தமான ஒரு அழைப்பு வர, மடிக்கணினியில் அவர்களுக்கு ஏதோ தகவல் பார்த்து சொல்லி கொண்டே, அவர்களுடன் உரையாடி கொண்டு இருந்தான் கிருஷ்ணா.

அந்நேரம் அவனின் கைபேசிக்கு அழைப்பு வர, அழைப்பவரை பார்த்தவன், அதன் சத்தத்தை குறைத்துவிட்டு ஏற்கனவே பேசி கொண்டு இருந்த அழைப்பில் கவனமாகி விட்டான்.

அந்நேரம் உமையாள் ஜெயவர்மரின் அறையில் இருந்து வெளியே வர, கிருஷ்ணாவுக்கு மீண்டும் அவனின் கைபேசியில் அழைப்பு வந்தது.

மீண்டும் அழைப்பு வர யோசித்த கிருஷ்ணா, உமையாளை கையைக் காட்டி அழைத்தவன், தன் கைபேசியை அவளிடம் கொடுத்து, பேசுமாறு கண் அசைவு செய்தவன், மீண்டும் தன் அழைப்பில் ஆழ்ந்து விட்டான்.

முதலில் கிருஷ்ணா அவனின் கைபேசியை கொடுத்ததும், முழித்த உமையாள், அழைப்பவரின் பெயரை பார்த்ததும், அழைப்பை ஏற்க, அந்த பக்கம்,

“கிருஷ்ணா” என்று ஆரம்பிக்க, உமையாள்,

“சொல்லுங்க அண்ணா” என்று கேட்க, பாலாவோ,

“சாரி உமா, நான் கிருஷ்ணாவுக்கு கால் பண்றதுக்கு பதில் உனக்கு பண்ணிட்டேன் போல” என்று உண்மையாகவே சொல்ல, உமையாளோ,

“அண்ணா இது கிருஷ்ணா போன் தான், அவங்க அங்கிள் போன்ல ஏதோ பிசினஸ் கால்ல இருக்காங்க, அதான் என் கிட்ட கொடுத்து பேச சொன்னாங்க” என்று தகவல் சொல்ல,

அந்த பக்கம் சட்டென அமைதியாகி விட, தன்னை சுதாரித்து கொண்டு மீண்டும் பாலாவே,

“சரி உமா, எனக்கு ஒரு இன்பர்மேஷன் கொஞ்சம் அவசரமா வேணும் அதுக்கு தான் கால் பண்ணேன், அவனை அந்த கால் முடிச்சிட்டு, எனக்கு கால் பண்ண சொல்லு” என்று அழைப்பை துண்டித்தான்.

பாலாவின் அமைதிக்கான காரணத்தை உமையாளாலால் புரிந்து கொள்ள முடிந்தது. கிருஷ்ணா அவனின் கைப்பேசி, கைக்கடிகாரம் என அன்றாடம் அவன் பாவிக்கும் பொருட்களை எப்போதும், யாரின் வசமும் கொடுக்க மாட்டான்.

அது ஏனோ, அவனுக்கு ஒவ்வாத விஷயம் என, வசீகரன் சொல்லி இவளும் அறிந்த விஷயம் தான் அது.

ஆனால் இன்று தன்னிடம் எப்படி கொடுத்தான் என்று யோசித்தபடி, இவள் கைபேசியை பார்க்க, அதன் திரையில் இருந்த புகைப்படத்தில் இவளின் பார்வை நிலைகுத்தி நின்றது.

உமையாள் இங்கு வந்த புதிதில், இவர்கள் நால்வரும் மால் சென்ற போது எடுத்த புகைப்படம் அவனின் கைபேசியின் திரையில் நீளவாக்கில் இல்லாமல், பக்கவாட்டில் இருந்தது.

நால்வருமே இருக்கும் அந்த புகைப்படத்தில், கிருஷ்ணாவும், உமையாளும் இருக்கும் பகுதி திரையின் நடுவில் வருமாறும், மற்ற இருவரும் இருக்கும் பகுதி, கைபேசியில் திரையில் அடுத்த பக்கத்திற்கு போனால் தெரியுமாறும் வைக்கப்பட்டு இருந்தது.

இதை பார்த்த உமையாளுக்கு, இதை எந்த விதத்தில் எடுத்துகொள்வது என்று தான் புரியவில்லை. ஏனென்றால் அவர்கள் இருவர் மட்டும் இருக்கும் புகைப்படம் அல்ல அது, அவன் அவர்கள் இருக்கும் பகுதியை மட்டும் வெட்டியும் வைக்கவில்லை.

ஒருவேளை அந்த புகைப்படம் நன்றாக இருப்பதாக நினைத்து கூட அவன் வைத்து இருக்கலாம். “தான் தான் அதிகம் யோசிக்கிறோமோ” என, தன்னை தானே திட்டியும் கொண்டாள் உமையாள்.

வீட்டிற்கு செல்லும் முன் பாலா சொல்லிய தகவலை ஒரு காகிதத்தில் எழுதி, அவனிடம் இதை படிக்குமாறு சைகை செய்து விட்டு, அவனின் கைபேசியை அந்த காகிதத்தின் மீது வைத்து விட்டு தான் சென்றாள் உமையாள்.

முக்கியமான அழைப்பில் இருந்த கிருஷ்ணாவும் உமையாளில் முகத்தையோ, அந்த முகத்தில் இருந்த பாவத்தையோ கவனிக்கவில்லை.

அன்றும் அப்படி தான், ஜெயவர்மரின் செவிலியர் ஏதோ தகவல் பார்க்க வேண்டும் என ஜெயவர்மரின் மருத்துவ அறிக்கையை கேட்க, அதுவோ கிருஷ்ணாவிடம் இருந்தது.

ஜெயவர்மர், அதை சென்று வாங்கிவர உமையாளை பணிக்க, இவளும் அதை வாங்குவதற்காக அவனின் அறைக்கு சென்றாள்.

அறையின் கதவை தட்டிவிட்டு உமையாள் காத்திருக்க, அலுவலகம் செல்ல தயாராகி, அறையின் கதவை திறந்த கிருஷ்ணாவின் முகத்தில், முதலில் இவளின் வரவை எதிர்பார்க்காத ஆச்சரியம், பின்பு அது அப்படியே மகிழ்ச்சியாய் உருமாற, அந்த மகிழ்ச்சி முகத்திலும் பிரதிபளிக்க அவளையே பார்த்தான்.

அவனின் பாவனையில் கொஞ்சம் திகைத்த உமையாள், தன்னை சமாளித்து கொண்டு, அவனிடம்,

“இல்ல அங்கிளோட நர்ஸ், அவரோட மெடிக்கல் ரிப்போர்ட் கேட்குறாங்க, ஏதோ பார்க்கணுமாம்” என்று சொல்ல, கிருஷ்ணாவோ,

“ஓ, சரி உள்ள வா உமையாள்” என்று அவளை உள்ளே, அழைத்துவிட்டு, முன் சென்றவன் ஒரு அலமாரியை திறந்து குடைய ஆரம்பித்தான்.

கிருஷ்ணாவின் அறையை பார்வையால் அளப்பது கூட நாகரிகம் இல்லை என்பதால், தனக்கு முன்னால் கிருஷ்ணா தலையை விட்டு கொண்டு இருந்த அலமாரியை தான் பார்த்து கொண்டு இருந்தால் உமையாள்.

அது மிக முக்கியமான அலுவலகம் சம்பந்தமான பொருட்கள் வைக்கும் அலமாரி போலும், மிக கவனமாக, பொறுப்பாக கையாளப்படுவது, அதை பார்க்கும் போதே புரிந்தது.

முழுதும் பலவிதமான கோப்புகள் நிரம்பி வழிந்த அந்த அலமாரியில், ஒரு அடுக்கின் ஓரத்தில், ஏதோ ஒன்று துணிப்போல கவனமாக மடிக்கப்பட்டு, தனியாக வைக்கப்பட்டு இருந்தது.

அங்கு இருந்த மற்ற பொருட்களில் இருந்து வித்தியாசமாக தெரிந்த அந்த துணி உமையாளின் கவனத்தை கவர, அதை உற்று கவனித்து பார்க்க, அதை அடையாளம் தெரிந்து கொண்ட அவளின் கண்கள், ஆச்சர்யத்தில் விரிந்தது.

கிருஷ்ணா அதேநேரம் மருத்துவ அறைக்கையை எடுத்துக்கொண்டு திரும்ப, தன்னுடைய முகபாவத்தை சடுதியில் மாற்றி கொண்டால் உமையாள்.

அவனிடம் இருந்து அதை வாங்கி கொண்டு வந்து கொடுத்தவள், கவனமாக முகத்தில் எதையும் காட்டாமல் இருக்க, மதியம் ஜெயவர்மர் உணவு உண்டு உறங்க, அந்த நேரத்தில் தான், தான் காலையில் பார்த்ததை பற்றி யோசிக்க ஆரம்பித்தாள்.

உமையாள் இங்கு வந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகி இருந்த நேரம் அது, ஒரு நாள் இரவு வரவேற்பறையில் உமையாள் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருக்க, வசீகரன் மடிக்கணினியில் ஏதோ வேலை பார்த்து கொண்டு இருந்தான்.

அப்போது “பச்சை கிளிகள் தோளோடு” பாட்டில் கமல் மருதாணி வைக்கும் காட்சி திரையில் ஓடி கொண்டிருக்க, அதை பார்த்த உமையாள், தனக்கு அருகில் அமர்ந்து, வேலையில் மூழ்கி இருந்த வசீகரனை அழைத்து,

“கரன் எனக்கு மருதாணி வேணும்டா” என்று அந்த பாட்டை பார்த்து கொண்டே சொல்ல, அவள் சொல்லியதை கேட்ட, வசீகரனின் கரங்கள் ஒரு கணம் நின்று மீண்டும் தன் வேலையை தொடர்ந்தது.

அந்நேரம் அதை சொல்லிய உமையாளும், அதன்பிறகு தொலைக்காட்சியில் ஆழ்ந்து, அதை சுத்தமாக மறந்து விட்டாள்.

உமையாளின் வீட்டில், அவள் மருதாணி எல்லாம் நினைத்து கூட பார்க்க முடியாத விஷயம், அதனால் அவர்களின் பாட்டி இருந்த வரை, உமையாள் வரும் போது எல்லாம் மறக்காமல் மருதாணி வைத்துவிடுவார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று அந்த பாட்டை பார்க்கவும், அவளுக்கு  அந்த நினைவு வந்து இருக்கிறது என்பதை புரிந்து கொண்ட வசீகரன் ஒரு வசீகர புன்னகையை சிந்தினான்.

மறுநாள் உமையாள் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்தவள், தன்னை சுத்தப்படுத்தி கொண்டு, நேராக அவளின் மீன்களிடம் தான் சென்றாள்.

தன் மீன் நண்பர்களுடன் சிறிது நேரம் செல்வழித்தவள், இன்னும் வசீகரன் அலுவலகத்தில் இருந்து வராதாதல், தொலைக்காட்சியை இயக்கி அதன் முன் அமர, சமையல் கட்டில் இருந்து மருதாணி வாசம்.

அந்த வாசம் நாசியை தீண்டிய அடுத்த நொடி, உற்சாகமே உருவாக உமையாள் சமையலறையில் நுழைய, அங்கு பொன்னம்மா, ஊற வைத்த ஒரு துண்டு புளி, பாக்கு சேர்த்து மருதாணியை அரைத்து கொண்டு இருந்தார்.

வசீகரன் தான் பொன்னம்மாவிடம் மருதாணி பறித்து எடுத்து வர சொன்னான் என்று தெரியவும் இவளுக்கு இன்னும் குஷியாக விட்டது.

உமையாள் ஆர்வத்தை பார்த்த பொன்னம்மாவே, மருதாணி அரைத்த கையோடு இவளின் கைகளில் வைத்தும்விட்டார்.

இவளும் சமர்த்தாக வைத்து கொள்ள, இரண்டு கைகளிலும் வைத்து முடிக்கவும், வாசலில் கார் சத்தம் கேட்கவும் சரியா இருக்க, வசீகரன் தான் வந்து விட்டான் என இவள் வேகமாக வாசலுக்கு விரைந்தாள்.

வழக்கமாக வீட்டில் அணியும் நீள பாவடை தான், இன்று காலை தடுக்க, இரண்டு கைகளிலும் மருதாணி இருப்பதால், பாவாடையை தூக்கவும் முடியாமல், நடைபழகும் மழலை என இவள் தத்தி தத்தி வாசற்கதவை நெருங்கும் நேரம், அந்த நீளபாவாடை காலை தடுக்கி விட்டது.

கையில் இருக்கும் மருதாணி கலையாமல் இருக்க கைகள் இரண்டையும் முன்னால் நீட்டியவள், எதையும் பிடிக்காமல் நிற்கிறேன் பேர் வழி என காற்றில் கதகளி ஆடி கொண்டு இருந்தாள்.

முன்னால் நீட்டி கொண்டு இருந்த கைகள், திடிரென எதிலோ இடித்து நிற்க, நிமிர்ந்து பார்த்தால் கிருஷ்ணா நின்று கொண்டிருந்தான்.

மருதாணி இட்ட இவளின் வலது கை, அவன் அணிந்திருந்த வெள்ளை சட்டையின் இடப்பக்கத்தில், அவளின் கை அச்சை, அழகிய ஓவியமாக பதித்து இருந்தது.

இவள் பதறி தன் கைகளை எடுக்க, இவளை ஒரு பார்வை பார்த்த கிருஷ்ணா, குனிந்து தன் சட்டையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, அவனின் வழக்கம் போல எதுவுமே பேசாமல், கையில் இருந்த பொருளை உள்ளே வந்து வைத்துவிட்டு, நிற்காமல் சென்று விட்டான்.

அதன்பிறகு வசீகரன் கொஞ்ச நேரம் கழித்து தான் வந்தான். வந்தவன், கிருஷ்ணா கொடுத்து சென்ற பொருட்களை எடுத்து ஆராய்ந்தவன், எல்லாம் சரியாக இருக்கவும், அதே இடத்தில் வைத்துவிட்டு, வரவேற்பறையில் அமர்ந்து இருந்த உமையாளின் அருகில் வந்து அமர்ந்தான்.

அப்போது தான் உமையாளிடன் அமைதி வித்தியாசமாக இருக்க,

“என்ன ஆச்சி பாப்பு, நீ கேட்டனு பொன்னம்மா அக்கா கிட்ட சொல்லி மருதாணி எடுத்துக்கிட்டு வர சொல்லி இருந்தனே, மருதாணி வச்சதும் ஹாப்பி அஹ இருப்பனு பார்த்தா, என்ன வழக்கத்தை விட சைலண்ட் அஹ இருக்க, சரி இல்லையே” என அவளை பார்த்து கேட்க, அவளோ,

“பொன்னம்மா அக்கா வச்சி விட்டங்களா, அப்போ கார் சத்தம் கேட்டுதா, நான் நீ தான் வந்துட்டனு வேகமா வந்தனா”

கதை சொல்லும் பாவனையில் சொல்ல, வசீகரனும் ஆர்வமாக,

“ஹ்ம்ம் அப்புறம் என்ன ஆச்சி” என்று கேட்க அவளோ மருதாணி இட்ட தன் கைகளை பார்த்தவாறே,

“அப்போ ஸ்கர்ட் ஸ்லிப் ஆகி”

“ஸ்லிப் ஆகி”

“கிருஷ்ணாவை இடிச்சிட்டேன்” என்று சொல்லி முடிக்க, வசீகரனோ,

“என்ன கிருஷ்ணா ஏதும் திட்டினானா” என்று கேட்க, இவளோ,

“அது எல்லாம் இல்லை” என்று சொல்ல, ஒரு வேளை இடித்ததற்காக வருந்துகிறாளோ என்று எண்ணிய வசீகரன்,

“பரவாயில்லை விடு, தெரியாம தானே பண்ண, கிருஷ்ணா ஒன்னும் தப்பா எடுத்துக்க மாட்டான்” என்று சொல்ல, உமையாள்,

“இல்ல கரன், அவங்க சட்டைல மருதாணி கரை ஆகிடுச்சி” என்று சொல்ல, வசீகரனோ,

“அச்சச்சோ இன்னைக்கு போட்டுட்டு வந்த ஷர்ட்லையா, அது அவனுக்கு பிடிச்ச ஷர்ட்” என்று சொல்ல, உமையாளோ

“கரன் உனக்கே இது ஓவரா இல்லை, அது வெள்ளை ஷர்ட் அதுல என்ன இருக்கு பிடிக்க” என்று கேட்க, வசீகரனோ,

“இல்ல பாப்பு, அது ஹால்ப் வையிட் ஷர்ட், அதும் அந்த மெட்டீரியர்ல ரொம்ப நாளா தேடி, வாங்குன ஷர்ட் அது”, என்று விளக்க, அவனின் விளக்கத்தில் உமையாள் முகம் சுருங்க, அதை பொறுக்காத வசீகரன்,

“சரி விடு பாப்பு, நான் அவனுக்கு அதே மாதிரி வேறு ஷர்ட் வாங்கி கொடுத்துடுறேன்” என்று சொல்லி இவளை சமாதானப்படுத்தியது இவளுக்கு இன்னும் நினைவில் இருந்தது.

இன்று பார்த்தால் அந்த சட்டை, முக்கியமான அலுவலக கோப்புகளுடன், அதும் அந்த மருதாணி அச்சுடன்.

வசீகரன் சொல்லியபடி, அந்த சட்டை அவனுக்கு பிடித்தம், ஆனால் இப்போது உபயோகப்படுத்த முடியாததால் அங்கு இருக்கிறாதா அல்லது தன் மருதாணி அச்சிற்காக அங்கு இருக்கிறதா?????

அந்நேரம் உமையாளுக்கு கிருஷ்ணாவின் மீது கொள்ளை கொள்ளையாக கோபம் வந்தது.

அன்று கைபேசியில் இருந்த புகைப்படமும் சரி, இன்று அந்த சட்டையும் சரி, இவளை ஒரு முடிவுக்கு வர விடாமல் குழப்ப தான் செய்கிறது.

“இது எல்லாம் சாதரணமாக நடக்க, நாம் தான் அதிகம் யோசிக்கிறோமோ” என்று ஒரு மனது சொன்னால், இன்னொரு மனமோ, “இல்லை இதில் நிட்சயம் என்னவோ இருக்கிறது”, என்று அடித்து சொல்லியது.

உமையாளின் இந்த சிந்தனைகளுக்கு விடையாக, கிருஷ்ணாவின் காதல் மனம் அவளுக்கு புரியுமா?????

காதல் கொள்வோம்………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!