Skip to content
Post Views: 102

அத்தியாயம்-26
வீட்டை அடைந்தபோது, மதிக்கு ஒரு ஃபோன் கால் வரவே அவள் பேசிக்கொண்டே வெளியிலேயே நின்றுவிட்டாள். ஆதி நேரே சமையலறைக்குள் சென்று, பிரிட்ஜில் இருந்து ஒரு குளிர்ந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தகிக்கும் தன் உடலை குளிர்விப்பது போல, தன் சட்டையை நனைத்தபடி அதை மடமடவென்று குடித்தான்.
அவனது ஒவ்வொரு செல்லிலும் அவளது தீண்டல் இன்னும் நீடித்திருப்பது போல் உணர்ந்தான்.அந்த உணர்வே அவனைப் பைத்தியமாக்கியது. அந்த நினைப்பிலிருந்து வெளிவருதற்காக தன் முகத்தில் கொஞ்சம் தண்ணீரைத் ஊற்றிக்கொண்டான். அந்தத் நீர்த்துளிகள் வழிந்து தரையில் சிதறின.
Advertisement
ஒரு பலத்த பெருமூச்சுடன், அவன் லிவ்விங் ரூமை நோக்கி நடந்தான்.
மதியின் முகம் வேதனையில் வாடியிருந்தது. அவளது கண்களிலிருந்து உருண்டு திரண்ட இரு நீர்மணிகள் எந்த கணமும் கீழே உருள ஆயத்தமாக இருந்தன.
‘திடீரென்று இவளுக்கு என்ன ஆச்சு…?’
Advertisement
அவளது சோகமான முகம் அவனது மற்ற எல்லா எண்ணங்களையும் மறக்கடிக்க அவளருகே விரைந்து சென்று
Advertisement
“மதி என்ன ஆச்சு…?” என்றான் மென்மையாக.
அவனை ஏறிட்டுப்பார்த்தவளின் கண்களிலிருந்து கண்ணீர் கன்னங்களில் வழிந்தோடியது .அவள் தேம்பி அழத்தொடங்கினாள்.
“த்ரிஷா…” என்று தன் அழுகைக்கு இடையே கூறினாள்.
Advertisement
“த்ரிஷாவா?”
“த்ரிஷா வாடிப் போயிட்டாளாம்…” என்று தன் குரலில் கடும் வலியோடு சொன்னாள்.
“நீ என்ன சொல்ற?”
அவளது வார்த்தைகளில் அவனுக்குத் தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை.
“இல்ல இல்ல… இது அந்த த்ரிஷா இல்லை.. இது வெர்ஷன் டூ ..”
அவனது குழப்பத்தைப் பார்த்து தன் வாக்கியத்தைத் திருத்திசொன்னாள். ஆனால்,அவளது இந்த விளக்கம் அவனுக்கு இன்னும் கூடுதலான குழப்பத்தைதான் தந்தது.
‘கடவுளே… இவளோட இந்த சூப்பர் டூப்பர் லாங்குவேஜை புரிஞ்சுக்க எனக்கு இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா மூளையைக் கொடு.. இப்ப இருக்கற மூளை பத்த மாட்டேங்குது’ என்று அவன் மனதிற்குள் கடவுளை வேண்டிக்கொண்டான்.
“மதி… ஃபர்ஸ்ட் அந்த த்ரிஷா யாருன்னு சொல்லு…”
“த்ரிஷா என்னோட ரோஸ் பிளான்ட்.. பெங்களூர்ல இருந்தப்ப வெர்ஷன் ஒன் வாடிப் போச்சு… அதனால சேலத்துல வெர்ஷன் டூ வாங்கி வச்சேன்… இப்போ அதுவும் வாடிப் போச்சாம், அம்மா சொன்னாங்க.. இனிமேல் பூக்காதாம்…” லேசாக விசும்பினாள்.
“யார்ரா இவ, இப்படியெல்லாம் ஒருத்தி இருப்பாளா..?” என்று கடுப்பானான்.
ஆனால் அதே நேரத்தில், அவளது அன்பால் நிறைந்த இதயத்தையும் அவன் ரசித்தான்.
‘மனுஷங்களை நேசிக்கிற மாதிரி தாவரங்களையும் நேசிக்கிறதுக்கு எவ்வளவு சாஃப்ட்டான, கைண்ட் ஹார்ட்டான மனசு இருக்கணும்…?’
அவனது முகம் கனிந்தது.
“மதி, நீ கவலைப்படாத… நாம த்ரிஷா வெர்ஷன் த்ரீ வாங்கிக்கலாம் சரியா?”
அவள் தன் புருவங்களைச் சுருக்கி அவனைப் பார்த்தாள்.
“நாம சேலம் போகும்போது நான் உனக்கு வாங்கித் தர்றேன்.. ஓகேவா?” என்று அவனையறியாமலேயே அவளுடன் சேலம் வருவதை உறுதிப்படுத்தியிருந்தான்..
அவளது முகம் அடுத்த கணமே பளிச்சென்று மாறியது.
“நிஜமாவா?”
“ஆமா…” என்று அவளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாகத் தன் கண்களை சிமிட்டினான்.
“உன்னோட மூடை(mood) மாத்துறதுக்கு என்கிட்ட ஒரு மெடிசின் இருக்குதெரியுமா…” என்றான் கண்களில் குறும்பு மின்ன.
அவள் கேள்வியாக பார்க்க,
“மாலா அம்மா பிரிட்ஜுக்குள்ள ஐஸ்கிரீம் வச்சிருக்கிறதை பார்த்தேன்.. உனக்கு வேணும்னா போய் எடுத்துக்கோ…”
ஐஸ்கிரீம் என்ற பெயரைக் கேட்டதும் சிறு குழந்தையைப் போல மிகுந்த உற்சாகத்துடன் அவள் பிரிட்ஜை நோக்கி ஓடினாள்.
அங்கு இருந்த கோன்களில் இருந்து அவளுக்கு மிகவும் பிடித்த ஸ்ட்ராபெர்ரி ஃபிளேவர் கோனை எடுத்து சுவைத்தாள்.
அவளைப் பின்தொடர்ந்து வந்தவன், கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டிக்கொண்டு, ஒரு பக்கமாக உதட்டைச் சுழித்துப் புன்னகைத்தபடி அவள் ஐஸ்கிரீம் சாப்பிடுவதை வேடிக்கை பார்த்தான்.
அவனது அந்த கேலியான பார்வையில் நாணியவள் அவனைக் கடந்து செல்ல முயன்றாள். ஆனால், சற்று முன்பு ஆதி தரையில் சிந்தியிருந்த தண்ணீரை அவள் கவனிக்காமல் மிதித்துவிட, கால் வழுக்கி நிலைதடுமாறி விழப்போக ஆதி சட்டென்று அவளது இடையைத் தாங்கிப் பிடித்து, அவள் கீழே விழாமல் தடுத்தான். கீழே விழுந்துவிடுவோமோ என்ற பயத்தில் அவள் அவனது தோள்களைக் கெட்டியாகப் பற்றிக்கொள்ள அந்த அவசரத்தில், அவளது கையில் இருந்த ஐஸ்கிரீம் கோன் தரையில் விழுந்தது.
ஆதி அவளது முகத்தை ஆச்சரியத்துடன் உற்றுப் பார்த்தான். அதிர்ச்சியில் அவள் கண்களை இறுக்கமாக மூடியிருந்த விதம், பயத்தில் வெளுத்த அவளது முகம், தன் சட்டையை பற்றியிருந்த அவள் பிடியின் அழுத்தம்… இவை அனைத்தும் சேர்ந்து அவனுக்குள் இதே போன்றதொரு சம்பவம் ஏற்கனவே நடந்தது போன்ற ஒரு விசித்திரமான மாயையை(Deja vu)தோற்றுவித்தது. மனக்கண்ணில் சட்டென்று தோன்றி மறைந்த பிம்பத்தில், தண்மதியின் முகம் தண்ணீரில் நனைந்திருந்ததைத் தவிர மற்ற எல்லாமே இதே போலத்தான் இருந்தது. ஒரே ஒரு கணம்தான் அதற்குப் பிறகு எல்லாம் இருண்டது. அப்படி ஒரு காட்சி தோன்றவே இல்லை என்பது போல அடுத்த நொடியே மறைந்து போனது. ஆனால், தான் பார்த்தது தண்மதியின் முகத்தைத்தான் என்பதில் அவனுக்கு சந்தேகமே இல்லை.ஆனால் அதில் இன்னும் கொஞ்சம் இளமையாகத் தெரிந்தாளே..
‘அது என்னது? நிஜம் போலவே இருந்ததே..”அவன் முற்றிலும் திகைத்துப் போனான்.
அந்த மாயையிலிருந்து விடுபட அவன் தன் கண்களை இருமுறை சிமிட்டிக்கொண்டான். அவனது பார்வை அவளது ரோஜா இதழ்களின் மீது விழுந்த அடுத்த கணம், அவன் தன் ‘டேஜாவூ’ நினைவுகளைப் பற்றி முற்றிலும் மறந்தான். அவள் சற்று முன்பு சாப்பிட்ட ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீமின் இளஞ்சிவப்பு நிறப் படலம் அவளது மேல் உதட்டில் படிந்திருக்க அந்த இடத்திலேயே அவன் பார்வை நிலைத்து நின்றது. உடல் முழுவதும் ஓர் இனம் புரியாத சிலிர்ப்பு பரவ, அவனது பார்வை இன்னும் தீவிரமானது.
ஆதியின் தகிக்கும் பார்வையின் வெம்மையைத் தாங்க முடியாமல், அவள் மெதுவாகத் தன் கண்களைத் திறந்தபோது. தாபத்தோடும் தீராக் காதலோடும் தன்னை உற்றுப் பார்த்திருந்த இரு சாக்லேட் நிற விழிகள் அவளை அப்படியே வாரிசுருட்டி விழுங்குவதற்காக காத்திருந்தன.
அவளது உதடுகளையே அவன் வெறித்துப் பார்ப்பதைக் கண்டு அவளது கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. அவளது வயிற்றுக்குள் ஏதோ ஒன்று தீயாய் உருண்டது, அவள் பதற்றத்தில் எச்சில் விழுங்கினாள்.
‘இவரு ஏன் என்னை இப்படிப் பார்க்கிறாரு?’’
அதே நேரத்தில், தன் உதடுகளில் ஏதோ பிசுபிசுப்பாக இருப்பதை உணர்ந்து அதைத் துடைப்பதற்காக மதி கையை உயர்த்திய போது, அவளது கையை சட்டென்று பற்றித் தடுத்தான். ஆதித்யா.
தான் ஏதோ ஒரு கனவுலகில் இருப்பது போலவும், அதே சமயம் பல காலமாக தனக்கிருந்த கற்பனை நிஜமாவது போலவும் உணர்ந்தவன், கணமும் தாமதிக்காமல் சட்டென்று குனிந்து, அவளது உதடுகளில் ஒட்டியிருந்த பனிக்கூழை அவள் இதழோடு சேர்த்து மென்மையாக சுவைத்தான்.
கணப்பொழுதே நீடித்திருந்தாலும், அந்த இதழ்களின் மென் தீண்டல் பாய்ச்சிய மின்சாரத்தில் இருவருமே மெய்சிலிர்த்துப் போனார்கள். ஆதி மெதுவாகத் அந்தப் பனிக்கூழின் குளிர்ச்சியை தன் தகிக்கும் வாய்க்குள் விழுங்கினான். அவனுக்கு எப்போதும் ஸ்ட்ராபெர்ரி ஃபிளேவர் பிடித்ததில்லை, ஆனால் இன்று அதைவிட சுவையான ஒன்று இந்த உலத்திலேயே இல்லை என்று தோன்றியது.
மதியோ அவனது செயலிலும் ஆழ்ந்த பார்வையிலும் ஒருபுறம் திகைத்துத் திணறிப்போக, மறுபுறம் அவளது கன்னங்களோ வெட்கத்தில் சிவந்து தகித்தன.
அவனுக்குள் கட்டுக்கடங்காமல் எழுந்த ஆவல், இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராபெரியைச் சுவைக்க பேராசை கொண்டது. இருந்தாலும், பின்னாளில் இருவருமே நினைத்து வருந்தக்கூடிய எந்த ஒரு செயலையும் செய்துவிடக் கூடாது என்று அவன் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டான். அவனது கட்டுக்கடங்காத ஆசைக்கும், பகுத்தறியும் மனசாட்சிக்கும் இடையே ஒரு பெரிய கயிறிழுக்கும் போட்டியே நடந்தது.
அவனது மனப்போராட்டத்தைப் புரிந்துகொண்டவள் போல, அவனது சொல்லாத அந்தத் தேவைக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கும் விதமாக, அவனருகே இன்னும் கொஞ்சம் நெருங்கி வந்தாள். கைகள் தானாக அவன் கழுத்தில் மாலையாக கோர்த்துக்கொள்ள கண்மூடி நின்றாள்.
அவளது அந்த நிபந்தனையற்ற தூய சரணாகதி, அவனது கட்டுப்பாடுகள் அனைத்தையும் தவிடுபொடியாக்கியது. பேராவலோடு அவளைத் தன்னோடு சேர்த்து இழுத்து அணைத்தவாறு அவளது மென்மையான உதடுகளின் மேல் தன் இதழ்களை வன்மையாகப் பதித்து, அவளை அழுந்த முத்தமிட்டிருந்தான்.
அவர்களின் முதல் முத்தம் என்பதால், இருவருக்குமே அதில் எந்த முன் அனுபவமும் இருக்கவில்லை.
ஆதி அவளது இதழ்களை மெதுவாகச் சுவைத்து, லேசாகக் கடித்தான். இருந்தாலும் அவனுக்குள் ஏதோ குறையாக இருந்தது. இன்னும் ஏதோ வேண்டும் என்று மனம் அலைப்புற்றது, ஆனால் என்ன குறைகிறது என்று அவனுக்குத் தெரியவில்லை.
அந்தத் தவிப்பில் அவன் அவளது கீழ் உதட்டை கொஞ்சம் வலிக்க கடித்துவிட, அவள் திடுக்கிட்டு மூச்சிரைத்தபடி,
“ஆதி…” என்று அவன் பெயரை முணகினாள்.
அந்த அழைப்பில் அவன் திகைத்துப் பிரம்மித்து போனான்,’சார்’ என்ற வார்த்தை இல்லாமல் அவள் அவனது பெயரை மட்டும் அழைப்பது இதுவே முதல் முறை.
அவனுடைய பெயர் இதற்கு முன்பு இவ்வளவு இனிமையாக அவன் காதில் ஒலித்ததில்லை. அவன் ஆதூரமாக அவள் முகத்தைக் கைகளில் ஏந்தி.
“என்ன சொன்ன?”
மதி ஒருவித மயக்க நிலையிலேயே தன் கண்களைத் திறந்து அவனைப் பார்த்தாள். அவன் என்ன கேட்கிறான் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.
“இப்ப நீ என்ன சொன்ன தண்மி?” அவன் கிசுசிசுத்த குரல் தன்னுள் எழுப்பிய உணர்ச்சிப்பிரவாகத்தை அடக்கியபடி,
மரத்துப் போன தன் மூளையை தட்டி எழுப்பி அவனுக்கு ஏதாவது ஒரு பதிலைக் கூற முயன்றாள். அவளையறியாமலேயே அவளது உதடுகள்
“ஆதி…” என்று சொல்லி முடிப்பதற்குள் தன் பெயரை விழுங்குவது போல, அவளது இதழ்களைத் தன் இதழ்களால் மீண்டும் பூட்டியிருந்தான்.
மதியின் கால்கள் அப்படியே ஜெல்லி போலத் தளர்ந்து போக, அவளை இடையோடு அணைத்து அவள் எடை முழுவதையும் தன் மீது சாய்த்துக்கொண்டான், அவள் கூந்தல் காட்டில் கை நுழைத்து லேசாக இறுக்கினான், அந்த மென் வன்மையில் “ஆ” என்று அவள் வேக மூச்சிழுக்க, அதையே தன் அனுமதியாகக்கொண்டு நாவை உள் நுழைத்து தன் தேடலைத்தொடங்கினான். அவளின் தண்ணென்ற நாவைத்தீண்டிய கணம் அவன் மூளையில் ஷார்ட் சர்கியூட் ஆனது போல் அங்கங்கே வெடித்துச்சிதறி வாணவேடிக்கை நிகழத்தொடங்கியது. காற்றுப்புக கூட இடமின்றி இருவர் உடலும் ஒட்டியிருந்த நெருக்கமும் போதாமல் அவளை இன்னும் தன்னோடு இறுக்க,எங்கோ மூழ்கிக்கொண்டிருந்தவள் ஆதாரத்திற்காக அவன் பிடரியின் அடர்ந்த கேசத்தை வலிக்க பற்றியிருந்தாள்,
உடல் தீண்டிய பாகங்கள் அனைத்தும் தாபத்தில் பற்றி எரிய இருவருக்குமே மூச்சுத் திணறல் ஏற்பட்டபோது தான் அவன் அவளை விடுவித்தான்.
ஆனாலும் அவளைத் தன் அணைப்பிலேயே வைத்தபடி, அவளது செக்கச்சிவந்த முகத்தைப் பார்த்தான். உப்பி சிவந்த கன்னங்களுடன் வெட்கத்தில் பூரித்து கண்மூடி நின்றவளைப் பார்த்து,
“மோமோஸ்” என்று அவன் இதழ்கள் தானாக முணுமுணுத்தது..
‘என்னோட மோமோஸ்’ அவனது இதயம் அதற்கும் ஒரு சொந்தம் கொண்டாடும் அடைமொழியைச் சேர்த்துக் கொண்டது. அவளை அப்படியே கடித்து தின்ன வேண்டும் போல் இருந்தது.
அவனது ஆசைகள் அனைத்தும் காதலின் பேரலையாக மாறி, எந்தக் கணமும் அவனை மூழ்கடிக்கத் தயாராக இருந்த சமயம் திடீரென்று எங்கிருந்தோ வந்த அவனது உள்மனதின் குரல் இடி முழக்கத்தைப் போல அவனது காதுகளில் வந்து மோதியது.
“எதிர்காலத்துல நான் யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டா, அது அவளா மட்டும்தான் இருக்கும்.. அவ இல்லன்னா வேற யாரும் இல்லை…”
தன் ஆழ்மனதில் எதிரொலித்த தன் குரலைக் கேட்டதும், அவன் அதிர்ச்சியில் சட்டென்று பின்வாங்கினான். அதன்பின் அவனால் அவளது முகத்தை நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை. தான் செய்த குற்றத்தின் வீரியம் அவனுக்குள் இறங்க இறங்க, அவன் மேலும் மேலும் குற்ற உணர்ச்சியில் நெருப்பின் மேல் நிற்பவன் போல் தவித்தான்.
“என்ன காரியம் பண்ணிட்ட.. என்ன தைரியத்துல டா மதியைத் தொட்ட.?” அவனது மனசாட்சி அவனை உலுக்கியது.
‘நான் எப்படி இவ்வளவு சீக்கிரமா தன்னிலை இழந்தேன்..? இல்ல.. இது சரியில்லை.. கண்டிப்பா இவளுக்கு இது நியாயமில்லை..’
அவன் ஒரு ‘ஸாரி’யை முணுமுணுத்துவிட்டு, ஏதோ பேய் துரத்துவது போல வேக வேகமாக மாடிப் படிக்கட்டுகளை நோக்கி ஓடினான்.
மதி ஒரு ஜாம்பியை போல தள்ளாடியபடி தன் அறைக்குச் சென்று, அப்படியே படுக்கையில் விழுந்தாள். கை தானாக உயர்ந்து தன் சிவந்த உதடுகளைத் தொட்டுப் பார்த்தது..
அவர்களுக்குள் சற்று முன்பு என்ன நடந்தது என்பதை அவளால் இன்னும் முழுமையாக கிரகிக்க முடியவில்லை.புயலிலே சிக்கி மீண்டது போல் இருந்தது.
அவனுடைய இதழ்கள் இன்னும் தன் உதடுகளின் ஒட்டியிருப்பது போன்ற உணர்வில் உடல் சிலிர்த்தது.அவன் அணைத்து இறுக்கிய இடங்களெல்லாம் கொதித்தது.
இதழ் முத்தம் எப்படி இருக்கும் என்று அவளுக்குள் எத்தனையோ கற்பனைகளும் ஆசைகளும் இருந்தன. ஆனால் அவளது கற்பனைக்கும் நிஜத்திற்கும் சம்பந்தமே இல்லை என்று இன்றுதான் அவளுக்குத் தெரிந்தது.
அது முற்றிலும் அவளது கற்பனைக்கும் விவரிப்புக்கும் அப்பாற்பட்ட ஒன்றாக இருந்தது. அதை இதயத்தால் உணர முடியுமே தவிர, வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
இந்த நாள் தனக்குள் இவ்வளவு ஆச்சரியமான புதையல்களை மறைத்து வைத்திருக்கும் என்று அவள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
வாழ் நாள் முழுவதற்கும் நினைத்து நினைத்து திளைக்கும் அளவிற்கு அத்தனை இனிய நினைவுகளை இந்த ஒரு நாளில் பரிசாக அளித்துவிட்டான் அவளின் ஆதித்யா.
இந்த நாளின் இறுதியில், கண்களில் அவன் எழில் வதனம் மட்டுமே நிறைந்திருக்க, காதுகளில் அவனது ஆழ்ந்த குரல் ரீங்காரமிட, நாசி அவனுக்கே உரித்தான மணத்தை மட்டுமே அடையாளம் கண்டிருக்க, இதழ்கள் அவனது முத்தச்சுவையில் இன்னும் லயித்திருக்க, உடல் முழுவதும் அவன் தீண்டல் மட்டுமே உயிர்த்திருக்க, மனம் முழுவதையும் அவன் நினைவுகளே ஆக்கிரமித்திருக்க, அவளது இதயம் அவன் ஒருவனுக்காக மட்டுமே துடித்திருக்க, இப்படி அவளது உயிரும் உணர்வும் ஏகோபித்தமாக அவன் ஒருவன் பெயரை மட்டுமே ஆராதித்துக் கொண்டிருந்தன.
ஆதி ஆதி ஆதி..
தொடரும்..
error: Content is protected !!