Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மழை வரப் போகுதே

மழை 15

மொட்டை மாடியில் வெறும் தரையில் கையை தலைக்கு கொடுத்து படுத்திருந்தான் மனோகர்.

இரவு வானின் இருளை அவன் கண்களில் வெறித்திருந்தாலும் மனம் முழுவதும் இரு நாட்கள் முன்பு கெளசி பேசிவிட்டு சென்றதிலேயே தான் நின்றது.

கழுத்தில் கிடைந்த சங்கலியை அவள் எடுத்து நீட்டிய நொடி, அதில் இருந்த மங்கல்யத்தை கண்டவனுக்கு தன்னை மீறி ரோமக்கால்களில் சிலிர்ப்பு ஓடியது நிஜம்.

அதை அவன் கட்டிய நிமிடமும், அதை தொடர்ச்சியும்….மனம் தன்னால் பின்னோக்கி ஓடியது.



Advertisement

அந்த நடுநிசி நேரம் வீட்டின் கதவு தட்டப்பட்டதும் அவசரமாய் கதவை திறந்த புவனா, மகளை பார்த்ததும் தான் மூச்சே விட்டார்.

பின்னே வயசு பெண்ணை காணவில்லை என்றதும் பெற்ற வயிறு துடித்த துடிப்பை அவர் மட்டும் தானே அறிவார்.

ஆனால் அவர் நிம்மதி மூச்செல்லாம் வெறும் சில நொடிகள் தான்…

Advertisement

உணர்ச்சியற்ற முகத்துடன் வாசலில் நிற்கும் மூவருக்கும் வழிவிட்டவர், கதவை தாழ்போட்டுவிட்டு, “எங்கடி போன?” என்றார் மகளிடம்.

Advertisement

அவள் ஆணியடித்தார் போல அதே இடத்தில் நின்றாள். பதில் சொல்ல எத்தனிக்க கூட இல்லை.

“ஏய் சொல்லுடி” முதுகு காட்டி நின்றவளை தன் புறம் வெடுக்கென திருப்பியவருக்கு அப்போது தான் கழுத்தில் கிடந்த மஞ்சள் கயிறு கண்ணில் பட்டது.

அதிர்ச்சி மேலிட அப்படியே நின்றவரிடம், சுற்றி வளைக்காமல், “இவளுக்கு கல்யாணம் செஞ்சு வச்சுட்டேன்…” என்றவர் ஒரு நொடி நிறுத்தி, “மனோகர் கூட”என்றார்.

Advertisement

புவனாவுக்கு பேசக்கூட வரவில்லை.

‘ச்சை… என் காது தான் கெட்டுப்போச்சு போல!’ என்று நினைத்தார்.

மனைவியின் நிலை புரிந்தோ என்னவோ, தான் சொன்னதையே மீண்டும் ஒருமுறை அவர் அழுத்தமாய் சொல்ல, இப்போது முதல்க்கட்ட அதிர்ச்சி மறைய, ஆங்காரமும் ஆவேசமும் தலைத்தூக்கியது.

“கல்யாணமா? என் மவளுக்கு யாரை கேட்டு கல்யாணம் செஞ்சு வச்சீங்க நீங்க? அதுவும் போயும் போயும் இவனோட?” கண்கள் சிவக்க கத்தினார்.

கௌசிக்கு எதுவும் உரைக்கவில்லை. மனோவுக்கோ இதான் நடக்கும் என்று தெரிந்ததால் எந்த அதிர்வும் இல்லை.

“புரியாம பேசாத புவனா! உன் பொண்ணு என்ன காரியம் செஞ்சுருக்கா தெரியுமா? கொஞ்சம் விட்டுருந்தா அந்த வக்கத்தவனுக்கு கழுத்தை நீட்டிருப்பா!”

“இப்போ மட்டும் என்ன ஆகிப்போச்சாம்? கிணத்துல விழ போனவளை காப்பாத்தி கடல்ல தள்ளிவிட்டுட்டீங்க!”

“ப்ச்! உனக்கு எப்படி புரிய வைக்கிறது? இவ செஞ்சது மட்டும் ஊருக்குள்ள தெரிய வந்தா குடும்ப மானமே போய்டும் டி! நாளைப்பின்ன எவன் கட்டுவான் சொல்லு! அந்த நிமிஷம் எனக்கு வேற எதுவுமே தோணல!”

“ஓடி போனவளை வெட்டிப்போட்டுட்டு வந்துருந்தா இந்நேரம் நிம்மதியா தலை முழுகிட்டு கருமாதி பண்ணிருக்கலாம்! இப்படி கண்டவனோட கல்யாணம் செஞ்சு வைக்கணும்ன்னு என்ன வந்துச்சு?”

“மனோ நம்ம வீட்டு பையன்! நான் சொன்னதுக்காக மறுவார்த்தை பேசாம தாலி கட்டிருக்கான்! அவனை ஏன் கண்டவன்னு நினைக்குற நீ?”

அன்பழகன் இப்படி கேட்டதும் தான் தாமதம்! முற்றத்தின் ஓரம் இருந்த வெண்கல கிண்ணம் ‘கணீர்’ரென அந்த தரையில் விழுந்து அலறியது.

அந்த சத்தத்தில் உறங்கிக்கொண்டிருந்த வீட்டின் மற்ற மூன்று உறுப்பினர்களும் பதறி எழுந்து வந்தனர்.

கௌசி வீட்டை விட்டு சென்றதே அவர்களுக்கு தெரியாது எனும்போது, நட்டநடு ராத்திரில் அங்கு நடப்பது ஒன்றுமே விளங்காமல் போக, தனபாக்கியம் தான் பெரியவராய் விவரம் கேட்டு அறிந்துக்கொண்டார்.

கௌசி மீது எக்கச்சக்க கோபம் இருந்தும், மனோகர் அவளுக்கு தாலி கட்டியது ஆசுவாசமாய் இருந்தது.

“மூத்த பொண்டாட்டி உறவு இழுக்குதோ….! ஒரு வருஷம் வாழ்ந்தவளுக்கு இருக்க மவுசு கூட இருவது வருஷமா உங்களுக்கு ஊழியம் பாக்குறவளுக்கு இல்லையே? அவ பக்க ஒட்டும் வேணாம் ஒறவும் வேணாம்ன்னு நான் தலைப்பாடா அடுச்சுக்க, நீ எக்கேடோ கெட்டுப்போன்னு ஒதுக்கிட்டீங்கள்ள என்ன? அடுத்த வேளை சோத்துக்கு வழியில்லாம வந்து நின்னவன் எல்லாம் இப்போ உரிமைப்பட்டவன் ஆகிட்டான்ல? ஆக்கிட்டீங்கள்ள?”

புவனா பேச பேச தனபாக்கியம் அவருக்கு எதிராய் மனோவுக்கு ஆதரவாய் வாய்கொடுக்க, இரு பக்கம் முடிவின்றி ஒரு சொற்போர் வெடித்து அந்த நள்ளிரவை நடுங்க வைத்தது.

அன்பழகனால் இருவரில் ஒருவரை கூட அடக்க முடியவில்லை.

மனோ காதுகளை மானசீகமாய் அடைத்துக்கொண்டு நின்றிருந்தான். மதனும் ஆரத்தியும் ஆளுக்கு ஒருவராய் சண்டையிடுபவர்களை சமாதானம் செய்ய போராட, கௌசி அப்போது கூட அசைந்தப்பாடில்லை.

அன்பழகனுக்கு எரிச்சல் எல்லை மீறியது. யார் காதுக்கும் விஷயம் போகக்கூடாதென இவர் அல்லல்ப்பட்டு நிற்க, இவர்கள் போடும் சத்தத்தில் ஊருக்கே விஷயம் தெரிந்துவிடுமோ என்ற அச்சம்!

கௌசியை தேட சொன்னவர்களிடம் கூட, ‘சரியா படிக்கலன்னு நாலு அடி போட்டேன்! கழுதை கோச்சுக்கிட்டு கிளம்பிடுச்சு!’ என்று தான் சொல்லியிருந்தார்.

கோவிலில் ஹரியை பற்றி கேட்டபோது, ‘மழைக்கு ஒதுங்கி நின்னேன்! என் கழுத்து சங்கிலியவே அறுக்க வந்துட்டான்! அதான் நாலு மிதி மிதிச்சேன்!’ என்று சமாளித்திருந்தார்.

மகளின் வாழ்க்கை வீணாகிவிடுமோ என்ற பயத்தில் எதை பற்றியும் யோசிக்காமல் சூட்டோடு சூடாய் காரியத்தை முடிக்க மனோவை தாலி காட்ட வைத்து எல்லாம் சரியாகிவிட்டது என நினைத்து ஓய்ந்து அமர வேண்டிய நேரம் அத்தனையையும் கெடுப்பதை போல இவர்கள் நடக்க, ரௌத்திரம் தலைக்கேறி காட்டு கத்தல் கத்தி இருவர் வாயையும் அடைத்தார் அன்பழகன்.

“ரெண்டுபேருக்கும் கொஞ்சமாவது மூளை இருக்கா? பகல்ல பாத்து பேசு, ராவுல அதையும் பேசாத’ன்னு சொல்லுவாங்க! வீட்ல எவ்ளோ பெரிய விஷயம் நடந்துருக்கு.. இதை மூடி மறைக்க பார்ப்பீங்களா? நீங்களே தண்டோரா போட்டுட்டு நிக்குறீங்க?”

அமைதியான இருவரில், “கல்யாணம் எங்க நடந்துச்சு! யாரெல்லாம் இருந்தா?” என்று அறியும் ஆவலில் வினவினார் தனபாக்கியம்.

“ஊர்த்தாண்டுன அம்மன் கோவில்ல தான்! யாரும் இல்ல… நாங்க மட்டும் தான் இருந்தோம்!” என்றதும்,

“அப்போ இந்த கயிறை கட்டுனதை யாருமே பாக்கலையா?” என்றார் புவனா ஆர்வமாய்.

“இல்லை!” என்று அன்பழகன் சொன்னதும் தான் தாமதம் என, “அப்போ இது வெறும் கயிறாவே தொலையட்டும்! நான் பெத்ததுக்கு இது வேண்டாம்” என்ற பேச்சோடு நொடி பொழுதில் கௌசி கழுத்தில் இருந்து அறுத்து வீசினார் அதை!

தன் கழுத்தை விட்டு அம்மஞ்சள் கயிறு அறுந்த கணம் தான் கெளசியென்ற சிலைக்கே உயிர் வந்ததை போல அவள் உடல் தடதடக்க, அதைக்கண்ட மனோவின் உடலில் இருந்த ‘உயிர்ப்பு’ மெல்ல மெல்ல அவனை விட்டு விலகி உடலை போல உள்ளமும் இறுக்கம் பூசிக்கொள்ள துவங்கியது.

நடந்தெல்லாம் நினைத்துப்பார்த்தவனுக்கு அப்போதைய சூழலுக்கும் இப்போதைய நிலைக்கும் எந்தவித மாற்றமும் இருப்பதாய் தெரியவில்லை.

காரியங்களும், காரணங்களும், காரணிகளும், காரணக்கர்த்தாக்களும் துளியும் மாறவில்லையே!!!

‘எல்லாம் அன்னையோட முடிஞ்சதா தானே இத்தனை நாளும் நினைச்சேன்… இவ மனசுல இப்படியொரு எண்ணம் படிஞ்சுருக்குன்னு தெரியாம போய்டுச்சே… முன்னமே தெரிஞ்சுருந்தா தெளிவா பேசிருக்கலாம்’

‘நான்கு வருடமாக உங்களை தான் என் கணவனாக நினைத்திருந்தேன்’ என அவள் சொன்னபோது மனதை அழுத்திக்கொண்டிருந்த ஏதோ ஒன்று தன்னால் கறைந்து, அகத்தின் கணம் குறைவதை போல இதமாய் தான் இருந்தது அவனுக்கு.

ஆனால், அதன் பிறகு?

இந்த எண்ணம் சரி கிடையாதே! ஒருபோதும் நடக்க வாய்ப்பே இல்லாத ஒன்றை எப்படி வளர விடுவது?

இரு நாட்கள் தாமதித்ததே பெரும் தவறென தோன்றியது அப்போது.

கெளசியிடம் முற்றும் முடிவாய் தன் முடிவை சொல்லிவிட வேண்டும் என எண்ணிக்கொண்டான்.

“ம்மா… எனக்கு ஒரு பத்து லட்சம் வேணும்! அப்பாக்கிட்ட பேசி அரேஞ் பண்ணு” என வந்து நின்றான் மதன்.

“எதுக்குடா அவ்ளோ?”

“என் பிரன்ட் கூட சேர்ந்து பிசினஸ் பண்ணப்போறேன்ம்மா! அவன் பங்கு பணம் ரெடி பண்ணிட்டான்! என் பங்கை குடுத்துட்டா தொழில் துடங்கிடுவோம்” அத்தனை சுலபமாய் சொன்னவனை ஆற்றாமையுடன் பார்த்தார் புவனா.

“உங்க அப்பா தொழிலே அத்தனை கடக்கு! கூட மாட போய் நின்னின்னா அவருக்கு எவ்ளோ ஒத்தாசையா இருக்கும்?”

“அதான் ஒருத்தனை சோறு போட்டு வளர்க்குறீங்களே? அவன் தான் அவருக்கு வலதுகை, இடது கை எல்லாம்”

“ம்ம்ம்… இப்படி உரிமைபட்டவன் உதவாக்கரையா ஒதுக்கி நிக்குறனால தான் பிச்சைக்காரன் கூட கல்லால பங்கு கேட்குறான்”

“ப்ச்…ம்மா… எதுக்கு இந்த பேச்செல்லாம் இப்போ? அப்பாட்ட பேசி பணத்தை ரெடி பண்ணுங்க”

“உங்கப்பா குடுப்பாருன்னு நினைக்குறியா? அப்படியே அவர் மனசு வச்சாலும் எடுத்து நீட்ட வேண்டிய இடத்துல ‘அவன்’ இருக்கான்! அவனை மீறி ஒத்த பைசா உன் கைக்கு வராது”

“அவன் யாரு எனக்கு குடுக்க மாட்டேன்னு சொல்ல?” எகிறினான் மதன்.

“அதை தான் நானும் கேட்குறேன்! நம்ம பணத்தை கட்டியாள அவன் யாரு? உன் இடத்தை நீ விட்டுக்குடுத்ததால தான் இப்போ அவனுக்கு இவ்ளோ கிராக்கி ஆகிப்போச்சு”

யோசித்தான் மதன். அம்மா சொல்வதும் சரியென்றே தோன்றியது.

“இங்கப்பாரு மதன், முன்னாடி உன் ஆத்தா கிழவி சப்போர்ட்ல அவன் நின்னான்! இப்போ அதுவும் இல்லை! நாளைக்கு உன் கல்யாணம் முடிஞ்சு உன் மாமனார் வீட்டு பக்கம் தான் நீ சாயப்போற! அது எனக்கு நல்லாவே தெரியும்! அப்படி நீ போன பிறகு திரும்பி இங்க வந்தா உனக்குன்னு குடுக்க ஒரு திருவோடு கூட மிஞ்சாது பார்த்துக்கோ!”

அன்னையின் பேச்சை கலக்கத்தை கொடுக்க, “இப்போ என்னம்மா செய்யுறது?” என்றான்.

“அப்படி கேளு!!!” என்றவர் அவனிடம் செய்ய வேண்டியதை சொல்ல, முதலில் முரண்டினாலும், பின் சந்தோசமாய் காரியத்தில் இறங்க சென்றான் அவன்.

காலையில் இருந்து கௌசியை தேடிக்கொண்டிருந்தான் மனோகர். அவன் கண்ணில் மட்டும் அவள் சிக்கியப்பாடில்லை. நேரம் போக போக அவள் வேண்டுமென்றே தன்னை தவிர்க்கிறாளோ என்றே தோன்ற ஆரம்பித்து விட்டது அவனுக்கு.

பொருத்து பொருத்து பார்த்தவன் வேறு வழியின்றி ஹாலில் அமர்ந்து நகசாயம் பூசிக்கொண்டிருந்த ஆர்த்தியிடம் சென்றான்.

அவளிடம் அவன் கடைசியாக பேசியது எப்போதென்று நினைவு கூட இல்லை. ஒரே வீட்டில் இருந்தும் கூட பல முகங்களை அவன் நிமிர்ந்தும் பார்ப்பதில்லையே!?

“க்கும்… ஆர்த்தி…”

பக்கத்தில் கேட்ட ஆண்குரலில் சற்றே திடுக்கிட்டு திரும்பியவள் மனோவை கண்டதும், அசட்டையாய் திரும்பிக்கொண்டு தன் வேலையை தொடர்ந்தாள்.

“ஆர்த்தி… உன்னைத்தான்…!”

“ஹும்? என்கிட்டயா பேசுற?” வியப்பாய் தான் இருந்தது அவளுக்கு.

“ம்ம்… கௌசியை பார்த்தியா?”

அவள் பேரை சொன்னதுமே முகம் சுளித்து, “அதானே பார்த்தேன்!” என்றவள், வெகு அசிரத்தையுடன், “அவளுக்கு வாட்ச்மேன் வேலை பாக்குறது தானே உன் முழு நேர வேலையே! அதை எப்படிப்பா கோட்டைவிட்ட!?” என்றாள் எள்ளலாய்.

மனோவுக்கு அவள் தன்னை ஒருமையில் விளிக்க விளிக்க வாய்வரை சூடான வார்த்தைகள் வந்தது. முயன்று அடக்கிக்கொண்டு அவன் நிற்க,

“மாமா…!!!” என்றழைத்தாள் கௌசி.

அதற்குமேல் ஆர்த்தியிடம் அவனுக்கு வேலை இல்லையே!

“எங்க போன? பாக்கவே முடியல” என்றவன் பேசிக்கொண்டே தோட்டத்திற்கு செல்ல, அவளும் பின்னோடு சென்றாள்.

“இ…இங்க தான் மாமா!” என்றவளுக்கு வார்த்தை முழுதாய் வரவில்லை. பார்வை எங்கோ இருந்தது.

“காலைல இருந்து தேடுறேனே!” என்றவன் அப்போது தான் அவள் முகத்தை கண்டான். ஏதோ தப்பு செய்தவள் போல திருதிருத்து நின்றவளை கண்டு துணுக்குற,

“நான் ஆர்த்திக்கிட்ட பேசும்போது எப்படி கரெக்ட்டா வந்த?” என்றான்.

அவனிடம் போக்குக்காட்டி ஒளிந்து இருந்தவள் தனக்காக அவன் ஆர்த்தியிடம் சென்று பேசுவான் என்பதே விம்மிதம் எனும்போது, பதிலுக்கு அவள் மரியாதை குறைச்சலாய் பேசுவதை கேட்டபின்னும் கால்களை கட்டிப்போட்டு வைக்க இயலவில்லை அவளால்.

“சொல்லு!” என்றான்.

அவள் பதிலின்றி நிற்க, பெருமூச்சொரிந்தவன், “இங்க பாரு கௌசி! நான் எல்லாத்தையும் நல்லா தெளிவா….” என ஆரம்பித்தபோதே அவசரமாய் கரம் நீட்டி ‘பேசாதே’ என்பதை போல தடுத்தாள் அவனை.

அவன் கேள்வியாய் பார்க்க, “எனக்கு நீங்க என்ன சொல்லப்போறீங்கன்னு தெரியும் மாமா! உங்க வாயால அதை கேட்க வேண்டாம்ன்னு தான் உங்க கண்ணுலேயே படாம இருந்தேன்” என்றவள்,

“கல்யாணம் மட்டும் தான் பொண்ணுங்களுக்கு வாழ்க்கையா? ஆம்பளை இல்லாம இருக்க முடியாதா என்ன? படிப்பு இருக்கு, அடுத்து ஒரு நல்ல வேலைக்கு போனும்! போற இடத்துல மனசு லயிக்கலாம்! வாழ்கை மாறலாம்! எப்பவோ நடந்ததை பெருசுப்பண்ணிட்டு முடிவு தேடுனா சரி வராதுல மாமா?

வாழ்கை ரொம்ப பெருசு! அது நமக்கு நிறைய ஆச்சர்யங்களை ஒளிச்சு வச்சுருக்கும்! அது எதையும் தேடாம கைக்கு கிடைக்குறதையே போதும்ன்னு நினைச்சு சட்டிக்குள்ள குதிரை ஓட்டுறோம்!”

ஆழமாய் மூச்செடுத்தவள், “நான் தெளிவா இருக்கேன் மாமா! என் வாழ்க்கையை நல்லவிதமா நான் கொண்டு போவேன்! பழசை நினைச்சு ஒடுங்கிப்போக மாட்டேன்! ப்ராமிஸ்!” என்றவள் சிறு சிரிப்போடு அவனை கடந்து செல்ல, தான் சொல்ல அவளுக்கு சொல்ல வந்ததை எல்லாம் தன் மனம் படித்தார் போல பேசி செல்லும் அவளை, அவளின் அந்த உயிர்ப்பற்ற சிறு சிரிப்பை கண்டவன், சமைந்து நின்றான்.

அவன் சொல்ல நினைத்தது தான்… ஆனால், அதை அவள் சொல்லி செல்லும்போது….??? மனதுக்குள் என்னவோ உடைக்கிறதே!!!

உடைந்ததை கண்டுக்கொள்ள ஆசைக்கொண்டான் மனோகரன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!