Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆனந்த பூந்தோரணம்

Aanandha Poonthoranam 51 1

ஆனந்தம் – 51

லட்சுமிக்கு இருப்பே கொள்ளவில்லை. வகுப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.. ஈசனிடமிருந்து இப்படி ஒரு செயலையும், இப்படியான பேச்சையும் அவள் எதிர்பார்க்கவில்லை..

அனைத்துக்கும் மேலாய் அவன்,  ‘என்ன உன் காலுக்கு விழணுமா…???’ என்றது.. அதை நினைக்கையில் அவளுக்கு இதயம் நடுங்கியது..

“ஈஸ் மாமா…” என்று உதடுகள் முணுமுணுத்துக்கொண்டிருக்க, உடம்பெல்லாம் வேர்த்தது.



Advertisement

விட்டால் சப்தம் போட்டு அழுதுவிடுவாள் போல..ஆனால் இருக்குமிடம் உணர்ந்து,  தன்னை தானே அடக்கிக்கொண்டு, வெகுநேரம் அவளால் தாக்குபிடிக்க முடியவில்லை.

பேராசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்க, “எக்ஸ்கியூஸ் மீ மேம்…” என்று எழுந்து நின்றுவிட்டாள்..

“எஸ்…” என்று அவரும் பார்க்க, வகுப்பில் இருந்த மொத்த கூட்டமும் அவளைத் தான் பார்த்தது..

Advertisement

“ஐம்… ஐம் ஃபீலிங் நாட் வெல்…” என்று சொல்லியவளின் முகமும் எப்படியோ இருக்க, ஸ்நேகாவோ, ‘என்னாச்சு நல்லாதானே வந்தா…’ என்று ஆராய்ச்சியாய் பார்க்க, பேராசிரியரோ, ஒருநொடி அவளைப் பார்த்தவர்,

Advertisement

“ஓகே… சிக் ரூம் போங்க.. ரொம்ப முடியலைன்னா வீட்டுக்கு சொல்லலாம்…” என, சரியென்று தலையை ஆட்டியவள் வேகமாய் வகுப்பில் இருந்து வெளியேறிவிட்டாள்..

ஸ்நேகாவிற்கோ, கல்லூரிக்கு வரும்போது என்னவோ லட்சுமி முகமே சரியில்லை என்று தோன்ற, அதையும் அவளிடம் கேட்க, வழக்கம் போல் லட்சுமி ஒன்றும் சொல்லவில்லை. அடுத்து வகுப்புகளும் ஆரம்பித்துவிட வேறெதுவும் பேச முடியவில்லை.

ஆனால் இப்போது லட்சுமி இப்படி பாதியில் எழுந்து சென்றுவிட, ஸ்நேகாவிற்கோ மிகவும் யோசனையாய் இருந்தது..

Advertisement

‘நல்ல பொண்ணு.. நல்ல வாழ்க்கை.. ஆனா ஏன் இப்படி கிரிட்டிக்கல் பண்ணிக்கிறா..??’ என்று யோசனை ஓட, காலை வேலை வகுப்புகள் முடிவதற்கான மணி ஒலிக்க, ஸ்நேகா வேகமாய் லட்சுமியைத் தேடி சென்றாள்..

சிக் ரூமில் இருப்பாள் என்று அங்கே சென்று பார்த்தால், அங்கேயும் இல்லை. வழக்கமாய் அமர்ந்திருக்கும் இடத்திலும் இல்லை என்றதும், வேகமாய் லட்சுமிக்கு அழைப்பு விடுக்க,

லட்சுமியோ“நான் வீட்டுக்கு போயிட்டிருக்கேன் டி..”என்றாள் தொண்டையை செருமி..

“வீட்டுக்கா….???”

“ஆமா டி.. என்னால அங்க இருக்க முடியல அதான் கிளம்பிட்டேன்…”

“அடிப்பாவி அப்போ கிளாஸ் கட் பண்ணிட்டியா??? முன்னாடியே சொல்லிருந்தா நானும் வந்திருப்பேனே டி…”

“ம்ம்ச் ஸ்நேகா… நான் லீவ் லெட்டர் கொடுத்திட்டு தான் கிளம்பினேன்..”

“அதானே பார்த்தேன்.. ஆமா நீ ஏன் இப்படி இருக்க, என்ன பிரச்சனை இதெல்லாம் எனக்கு தெரியாது, ஆனா எதுவா இருந்தாலும் கொஞ்சம் மனசை ரிலாக்ஸ் பண்ண பாரு லஷ்மி… நீ இப்படி இருக்கிறது உனக்கும் நல்லது இல்ல.. உன் லைப்க்கும் நல்லது இல்ல..” என,

லட்சுமி எதுவும் சொல்லாமல் “சரி ஸ்நேகா…” என்றுமட்டும் சொல்லி அழைப்பை துண்டித்தாள்.

லட்சுமிக்கோ மனதில் எழும் எண்ணங்களை கட்டுப்படுத்த வழித் தெரியவில்லை.. இத்தனை நாளில் கொஞ்சம் கொஞ்சம் அவள் மனதும் மாறிக்கொண்டு தான் இருக்கிறது. ஒரு பக்கம் விருப்பம் இன்னொரு பக்கம் பிடிவாதம் என்று அவளுக்குமே இந்த சூழலை ஒருநிலையில் கையாளத் தெரியவில்லை.. அப்படியிருக்கையில் ஈசனும் இப்படி நடந்துவிட, இப்போது மொத்தமாய் நொறுங்கிப்போனாள்..

‘ஏன் டி லட்சுமி… ஏன் இப்படி இருக்க??? முன்னாடி எல்லாம் இப்படியா இருந்த?? இப்படி நீயும் கஷ்டப்பட்டு, ஈஸ் மாமாவையும் கஷ்டப்படுத்தி இதென்னடி வாழ்க்கை….’ என்று தனக்கு தானே கேட்டாலும் அவளிடம் பதில் இல்லை..

‘விரும்பி கல்யாணம் பண்ண.. ஆனா அந்த சந்தோசத்தை முழுசா அனுபவிச்சியா? உன்னோட பாசத்தை தான் முழுசா ஈஸ் மாமாக்கிட்ட காட்டுனியா? அவர் தான் எல்லாத்துக்கும் பிடிவாதமா இருப்பார்னா நீயுமா??.. யாராவது ஒருத்தர் விட்டுகொடுத்து போனா தான வாழ்க்கை நல்லாயிருக்கும்..

ஈஸ் மாமா என்ன உன்மேல பாசமாயில்லாம இருக்காங்களா என்ன.. அவங்களுக்கு இவ்வளோ தான் வெளிக்காட்டத் தெரியுமா இருக்கும். இல்லை நீயாவது மனசு விட்டு பேசணும்.. எதுவுமேயில்லாம அவங்களாவே உன் மனசுல இருக்கிறத புரிஞ்சுக்கிறணும்னா எப்படி..’ என்று முதல் முறையாய் லட்சுமியின் மனம் ஈசனுக்கு ஏதுவாய் பேசியது.

“ஈஸ் மாமா பண்றது தப்பு.. பேசுறது தப்புன்னு அவங்க மேல தப்பு கண்டுபிடிச்சிட்டே நான் தப்பு பண்றேனோ…” என்று எண்ண, அவளால் எதையும் ஒரு முடிவிற்கு கொண்டு வர முடியவில்லை.

மூடியிருக்கும் விழிகளுக்குள் கருமணிகள் இங்கும் அங்கும் அலைபாய, அவள் மனதும் அதற்கேற்ற தாளத்தில் அசைந்தது.. ஆம் ஈசனின் பேச்சும் செயலும் அந்த நொடியில் லட்சுமியின் மனதை அசைத்தது உண்மை தான்..

 “ஆண்டிபட்டி எல்லாம் இறங்குங்க…” என்று பேருந்து நடத்துனர் குரல் கொடுக்க, பேருந்தை விட்டு இறங்கினாள்.

நேராய் வீட்டைப் பார்த்து நடைபோட, அப்போது தான் ஈசன் தோட்டத்திற்கு போய்விட்டு, கேபிளுக்குத் திரும்பிக்கொண்டிருந்தான்.. லட்சுமி அவளது யோசனையில் நடந்து வர, அதே நீண்ட தெருவின் மற்றொரு பக்கத்தில் ஈசன் வண்டியை செலுத்த, ஒருவரை ஒருவர்  கவனிக்கவில்லை..

பாலாவும் அவனது நண்பர்களும் அங்கேயிருந்த கடை ஒன்றில் நின்றிருக்க, ஈசனின் புல்லட் சத்தத்திலேயே பாலா “எங்க அண்ணன்…” என்று சொல்ல,

“அண்ணன் மட்டுமில்ல, மதினியும் வர்றாங்க…” என்று அவனது நண்பன் எதிர் திசையில் கை காட்ட, லட்சுமி சுற்றுபுறத்தில் கவனமேயில்லாமல் நடந்து வந்துகொண்டிருக்க, ஈசனும் அப்படித்தான் வருவது போலிருந்தது.

‘ரெண்டு பெரும் என்ன இப்படி வர்றாங்க……’ என்று யோசிக்கும் போதே ஈசன் இவர்களை சமீபித்திருக்க, பாலா வேகமாய் ஓடியவன் “அண்ணா பார்த்து வா…” என்று கத்தியபடி, லட்சுமியை பிடித்து தள்ளி நிறுத்தினான்..

அப்போது தான் கணவன் மனைவி இருவருக்குமே புரிந்தது.. எப்படியொரு  ஒருநிலையில் வந்திருக்கிறோம் என்று.. கொஞ்சம் விட்டால் ஈசனே லட்சுமியை வண்டியில் இடித்திருப்பான்… இது தோன்ற ஈசன் சட்டென்று புல்லட்டில் இருந்து இறங்கிவிட, லட்சுமியும் திகைத்தபடி நின்றிருந்தாள்.

“ரெண்டு பேரும் பார்த்து வர மாட்டீங்களா…” என்று பாலா கடிய,

‘இவ என்ன இப்போவே வந்திட்டா…’ என்று ஈசன் பார்க்க, லட்சுமியோ ஒன்றும் சொல்லாமல் தலையை தாழ்த்திக்கொள்ள,

“வேற ஒரு யோசனைடா…” என்றான் ஈசன் சமாளிப்பாய்..

 அடுத்து லட்சுமியிடம், “உனக்கென்னாச்சு… நான் கவனிக்கலைன்னா இந்நேரம் நீ புத்தூருக்கு போயிருக்கனும்…” என்ற பாலாவிடம், லட்சுமி பதிலே பேசவில்லை..

ஈசனை நேருக்கு நேராய் பார்க்கும் துணிவு இப்போது அவளிடம் இல்லை.. என்னவோ மனம் படபடவென்று அடித்துக்கொள்ள அப்படியே நின்றிருந்தாள்.  ஈசனுக்கும் லட்சுமியிடம் எதுவும் கேட்க அந்த நேரத்தில் தோன்றவில்லை. காரில் நடந்த பேச்சுக்களே அப்போது மனதில் வர, ஈசனும் அவளை பார்க்காமல் தன் தம்பியைப் பார்க்க,

பாலாவோ “இப்படியே ரெண்டு பெரும் நிக்கிறதா உத்தேசமா…” என்றான்.

“என்னடா..??” என்று ஈசன் கேட்க, லட்சுமியோ, “நா… நா வீட்டுக்கு போறேன்…” என்று அவர்களை கடந்து சென்றிவிட,

‘என்னாச்சு இவளுக்கு…’ என்பது போல் தான் அண்ணனும் தம்பியும் பார்த்து நின்றனர்..

“என்னண்ணா… லட்சுமிக்கு எதுவும் உடம்பு சரியில்லையா…??”

“இல்லடா.. காலையில நான்தான் கொண்டு போய் விட்டேன்…” என்று சொல்லும் போதே ஈசனுக்கு ‘இப்போ என்ன மனசுல போட்டு வந்திருக்காளோ..’ என்று தோன்ற யோசனையாய் அப்படியே அவள் போகும் வழியை பார்த்து நின்றான்..

ஈசனை பார்த்த பாலாவோ, “அண்ணா… இந்நேரம் லட்சுமி வீட்டுக்கே போயிருக்கும்…” என, லேசாய் ஒரு சிரிப்பை கொடுத்தவன், “ஆமா டா.. இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க..??” என்றான் கேள்வியாய்..

“சும்மாதாண்ணா.. இப்போ கிளம்பிடுவோம்..” என்றதும், ஈசனும் சரியென்று கிளம்பிவிட்டான்.

வீட்டுக்கு வந்த லட்சுமியோ யாரிடமும் பேசாமல் நேராய் மேலே செல்ல, முத்தழகு தான் அவளைப் பார்த்தவர், “ஏ லட்சுமி.. என்ன வந்திட்ட…” என்று கேட்க, அவளோ பதிலே சொல்லாமல் சென்றுவிட்டாள்.

“மரகதம்.. இங்க வா.. இவள பாரு.. அதுக்குள்ள வீட்டுக்கு வந்துட்டா.. கேட்டா பதிலே இல்லாம போறா…” என்று மரகதத்தை அழைக்க,  “என்னத்தை….” என்றபடி வந்தார் மரகதம்..

“லட்சுமி இப்போவே வந்திட்டா… நான் கூப்பிட கூப்பிட வேகமா போயிட்டா…”

“ஒருவேளை உடம்பு எதுவும் சரியில்லையோ…” என்று சொல்லிக்கொண்டே மரகதம் மேலே போக, அங்கே லட்சுமியோ குப்புற படுத்து அழுதுகொண்டு இருந்தாள்.

என்ன முயன்றும் அவளால் கண்ணீரை மட்டும் கட்டுப்படுத்த முடியவில்லை.. இத்தனை நாள் இல்லாமல் மனம் மிக மிக வலித்தது.

“லட்சுமி.. லட்சுமி.. என்னாச்சு.. எதுக்கு இப்படி அழுதிட்டு படுத்திருக்க.. நேத்தே இருமிட்டு இருந்த.. உடம்பு எதுவும் முடியலையா..??” என்றபடி லட்சுமியை, மரகதம் எழுப்ப, லட்சுமி வேகமாய் கண்களை துடைத்து எழுந்தமர்ந்தாள்..

“என்ன லட்சுமி… அதுக்குள்ள வந்துட்ட.. என்ன செய்யுது…???”

“என்.. எனக்கு ஒண்ணுமே தெரியலை அத்தை… நான்.. நான் சுத்த வேஸ்ட்… எனக்கு எதுவும் தெரியலை.. உங்களுக்கு நல்ல மருமகளாவும் இல்லை… ஈஸ் மாமாக்கு நல்ல பொண்டாட்டியாவும் இல்லை…” என்று முகத்தை மூடிக்கொண்டு இன்னும் சத்தமாய் அழ, ‘ஐயோ என்னாச்சு….’ என்பது போல் திகைத்து பார்த்தார் மரகதம்..

“லட்சுமி… அழாத… இங்க பாரு… நீ நல்ல பொண்ணு லட்சுமி.. உன்னப்போல வேற யாரு எங்களுக்கு நல்ல மருமகளா இருக்க முடியும் சொல்லு.. உன்னைவிட  அவனுக்கு யார் நல்ல பொண்டாட்டியா இருப்பா… நீயா எதையாவது மனசுல போட்டு வைக்காத…” என்று ஆறுதல் சொல்ல, லட்சுமியோ சமாதானம் ஆவது போல் தெரியவில்லை.

“இல்லத்தை… நான் ரொம்ப சுயநலமா இருந்திட்டேன்.. ஆனா.. ஆனா உண்மையான அன்பு சுயநலமா இருக்காது தானே…” என்று கண்ணில் நீர் வடிய, தலையை ஆட்டி கேட்டவளுக்கு என்ன சொல்வார் மரகதம்.

‘கடவுளே இந்த பிள்ளைய என்ன செய்ய… என்ன பிரச்சனைன்னும் தெரியாம என்ன சொல்ல….’ என்று கைகளை பிசைந்துகொண்டு நிற்கும் போதே, கீழே ஆட்கள் வந்திருக்கும் சத்தம் கேட்க,

முத்தழகு “மரகதம் கீழ வா…” என்று அழைத்தார்.

“ஆளுங்க வந்திருக்காங்க போல லட்சுமி.. வேணும்னா நீ முகத்தை கழுவிட்டு வா… நான் கீழ போறேன்… அழாம இரு…” என்று அவள் முகத்தை துடைத்துவிட்டுச் செல்ல,

“ம்ம்…” என்று மட்டும் தலையை உருட்டினாள்.

‘சாரி ஈஸ் மாமா….’ என்று மனதிற்குள் கூறிக்கொண்டவளுக்கு, ஈசனிடம் நேரில் பேசும் தைரியம் மட்டும் வரவேயில்லை.. என்ன சொல்வாள்.. எதை சொல்வாள்.. எப்படிச் சொல்வாள்.. ஒன்றுமே புரியாமல் கைகளை பிசைந்துகொண்டு அமர்ந்திருக்க, அவளது அலைபேசியும் சிணுங்கத் தொடங்கியது..

ரேவதி தான்.

அழைப்பை ஏற்கவும் “உனக்கு இப்போ லஞ்ச் ப்ரேக் தான டி.. அதான் கூப்பிட்டேன்…” என்றாள்

“நான் வீட்ல தான் டி இருக்கேன்… சொல்லு கல்யாண பொண்ணு என்ன விஷயம்…” என்று கொஞ்சம் இயல்பாய் பேசுவது போல் பேச,

“உடம்பு எதுவும் சரியில்லையா லஷ்மி… வாய்ஸ் எப்படியோ இருக்கே…” என்று ரேவதி சரியாய் கண்டு பிடித்துவிட்டாள்..

“கொஞ்சம் சளி பிடிச்சிருக்கு அதான்… ஆமா நீ என்ன பண்ற..” என்று பேச,

“என் அப்பாவும் அம்மாவும் உங்க வீட்டுக்கு தான் வந்திருக்காங்க.. வர வெள்ளிக்கிழமை கல்யாண புடவை எடுக்க போறோம்.. அதான் கூப்பிட வந்திருக்காங்க…” என்றாள் ரேவதி.

‘ஓ… ரேவதி அப்பா அம்மா தான் வந்திருக்காங்களா…’ என்று நினைத்த லட்சுமி,

“சரி டி நான் ரூம்ல இருக்கேன்.. கீழ போய் அவங்கக்கிட்ட பேசுறேன்….” என்று வைத்துவிட்டு வேக வேகமாய் முகத்தை கழுவி, கொஞ்சம் உடையை சீர் செய்து கீழே சென்றவள், “வாங்க மாமா.. வாங்கத்தை….” என்று சிரித்தபடி அவர்களை வரவேற்க, மரகதம் மெச்சுதலாய் தன் மருமகளைப் பார்க்க, முத்தழகுவும் அப்படித்தான் பார்த்தார்.

“என்ன லட்சுமி காலேஜ் போகலையா..???” என்று விசாரித்தனர் இருவரும்.

“அது… அரைநாள் தானாம்.. வந்துட்டா…” என்று லட்சுமி பதில் சொல்வதற்குள் மரகதம் முந்திக்கொண்டார்.

ரேவதியின் அப்பா, தாங்கள் வந்த விஷயத்தை கூற,  முத்தழகு, “ரொம்ப சந்தோஷம்.. வீட்ல இருக்க பிள்ளைங்களுக்கு கல்யாணம்னாலே ரொம்ப சந்தோசம்… மரகதம் நீயும் லட்சுமியும் போயிட்டு வந்திடுங்க….” என,

“அவளுக்கு காலேஜ் இருக்குமே அத்தை… இங்க எல்லாம் அப்படியே விட்டுட்டு நானும் போக முடியாதே….” என்று மரகதம் தயக்கமாய் சொல்ல,

“வர வெள்ளிக்கிழமை கவர்ன்மென்ட் லீவ் தான் அத்தை…” என்றாள் லட்சுமி..

“ஓ.. அப்போ ரொம்ப சரி லட்சுமி நீ ரேவதி கூட போயிட்டு வா..” என்றவர்,  “தப்பா எடுத்துக்க கூடாது.. கல்யாணத்துக்கு எல்லாரும் கண்டிப்பா வருவோம்.. இப்போ என் மருமக வருவா…” என்று லட்சுமியை மட்டும் போகும் படி சொல்லிவிட்டார் மரகதம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!