Skip to content
Post Views: 5,102
‘நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே…
நீலம் கூட வானில் இல்லை, எங்கும் வெள்ளை மேகமே…!
போகப்போக ஏனோ நீளும் தூரமே…
மேகம் வந்து போகும் போக்கில் தூறல் கொஞ்சம் தூறுமே!!!’
Advertisement
“இன்னும் கொஞ்சம் சாய்ஞ்சுக்கிட்டே போனன்னா, நம்ம ரெண்டு பேரும் ரோட்ல தான் கடக்கணும்!” என்ற மனோவின் குரலில் பாடலின் இதத்தில் இருந்து பட்டென வெளியே வந்தாள் கௌசி.
அவனது பைக் அந்த சாலையில் சீரான வேகத்தில் சென்றுக்கொண்டிருக்க, அவர்களுக்கு சற்று அருகில் வந்துருந்த வாகனத்தில் இருந்து ஒலித்த பாடலில் தான் மூழ்கி போயிருந்தாள் கௌசி.
“அப்படி என்னத்த அண்ணாந்து பார்த்துக்கிட்டே வர நீ?” மீண்டும் கேட்க, “ஒன்னும் இல்ல” என்றாள்.
Advertisement
“சொல்லு! ஒன்னும் இல்லாததையா பாக்குற?” விடாமல் கேட்டான்.
Advertisement
இப்பொழுதெல்லாம் அவன் அதிகமாக பேசுகிறான். ‘என்னிடம் பேசவே தோன்றாதா? பேசவே மாட்டானா?’ என்ற நெடுநாள் ஏக்கம் கரைந்து,
‘ஐயோ எதாவது கேட்டுட்டா பதில் சொல்லணுமே?’ என பதறும் நிலைக்கு ஆக்கிவிட்டிருந்தான் இச்சில தினங்களில்.
அவன் தன்னை சகஜமாக்கவே தன்னியல்பில் இருந்து மாறி நடப்பது அவளுக்கும் புரியதான் செய்தது. முடிந்தவரை அவளும் ஈடுகொடுக்க ஆரம்பித்தாள்.
Advertisement
“மழை வரும்ன்னு நினைக்குறேன் மாமா!” அவள் சொன்னதும் வண்டி ஓட்டியபடியே நிமிர்ந்து பளிச்சென்றிருந்த வானத்தை பார்த்தவன், “உனக்கு மட்டும் ஸ்பெசலா வரும் போலருக்கு” என்றான் கிண்டலாய்.
“வரும்ன்னு தோணுது!”
“பாப்போம்!” என சொன்னவனுக்கு அடுத்த நிமிடங்களில் கொட்டிய மழையை கண்டதும் ஆச்சர்யம் தாளவில்லை.
மழைக்கு ஒதுங்கி நின்று கால் மணி நேரம் கடந்தும் கூட, மழையை பார்ப்பதும், நமட்டு சிரிப்புடன் அவனை பார்க்கும் கௌசியை வெறிப்பதுமாய் அவன் இருக்க, கௌசிக்கு சிரிப்பை மறைக்க முடியவில்லை.
“சிரிக்காத! எப்படி மழை வரும்ன்னு சரியா சொன்ன? நான் பாத்தப்போ வானம் பல்லை காட்டிடுல்ல இருந்துச்சு?” சீரியசாய் கேட்பவனை கண்டு இன்னமும் சிரிப்பு வர,
“ஹையோ மாமா! கூகுள் சொல்லுச்சு!” என்றவள், வெதர் ரிபோர்ட்டை காட்டி கலகலக்க,
“ஓ! நான்கூட உன்னை ஒருநிமிஷம் மந்திரவாதி ரேஞ்சுக்கு நினைச்சுட்டேன்” என்றான்.
மனம் விட்டு சிரித்தவள், “ஆனா மாமா! கூகுள் சொல்லலன்னாலும் எனக்கு தெரியும், இன்னைக்கு மழை வரும்ன்னு!” என்றாள்.
“எப்படி!?”
“எல்லாம் அப்படிதான்!”
“அட… எப்படின்னு சொல்லு”
“ம்ம்! கார் ஸ்டார்ட் ஆகலன்னு நீங்க என்னை பைக்குல ஏத்திகிட்டு போறதை பார்த்தும் எங்கம்மா சாமியாடாம நின்னாங்கள்ள…! அப்போ மழை வரணும் தானே?” என்றவள்,
“மழை நின்னு ரெண்டு நாள் ஆச்சு, வாங்க போலாம்” என்று பைக்கை நோக்கி ஓடினாள்.
சிரித்துக்கொண்டு ஓடும் அவளை பார்க்கையில், மனம் லேசாகி போனது அவனுக்கு.
தேங்காய் நார் கயிறுகள் செய்ய, தேங்காய் மட்டைகளை தண்ணீர் விட்டு ஊறவைத்து, இரண்டு மூன்று மணிநேரம் கழித்து ‘விலோயிங்’ எனும் இயந்திரத்தில் இட்டு ᝄகழிவுகளை நீக்கி ‘நார்’ எடுத்தனர்.
அந்த நாரை ‘சில்வரிங்’ மற்றும் ‘ஸ்பின்னிங்’ இயந்திரத்தில் கொடுத்து கயிறாக மாற்றினர்.
அந்த இருவது சென்ட் இடத்தை இருமுறை முழுவதுமாய் சுற்றி வந்து அங்கு நடக்கும் வேலைகளை கவனித்தாள் கௌசி.
“தென்னைமரங்கள் நம்ம நாட்ல தான் அதிகமா இருக்குறதால வெளிநாட்டுல இந்த கயிறுக்கு செம்ம டிமேண்ட்” என்றபடியே கையில் டீயுடன் வந்தான் மனோ.
அவனிடம் இருந்து வாங்கிக்கொண்டவள், “அப்போ எக்ஸ்போர்ட் மட்டும் தான் பண்றோமா?” என்றாள்.
“எக்ஸ்போர்ட்டும் பண்றோம்! அதைத்தாண்டி கேரளால நல்லா சேல் ஆகும்… நம்ம ஊருல சேலம், பொள்ளாச்சி, சிவகங்கை இங்கல்லாம் நிறைய வாங்குறாங்க”
“ஓ!” என்றவள், அங்கிருந்த மெசின்களை பார்த்து, “இதெல்லாம் நார்த்’ல இருந்து வாங்குனதோ?” என்று கேட்க,
“ஏன், இதெல்லாம் அங்க தான் கிடைக்குமா என்ன?” என்றவன், “எல்லாம் நம்ம பட்டுகோட்டைல வாங்குனது…” என்றான்.
‘இதெல்லாம் இங்கேயே கிடைக்குதா?’ என அதிசயமாய் பார்த்தாள்.
“இந்த பிசினஸ்’க்கு மூலப்பொருளே தேங்காய் நார் தான்! மதுரை, கன்னியாகுமரி, சேலம், கோவை அதில்லாம கேரளா… அங்கிருந்தெல்லாம் லோட் எடுப்போம்!
எப்போவாது நார்’ருக்கு தட்டுப்பாடு வந்து யானை விலை சொல்லுவானுங்க! அதனால விலை கம்மியா இருக்கும்போதே வாங்கி….அதோ அங்க இருக்குல்ல குடோனு… அதுல அடுக்கிடுறது!”
அவன் சொன்னதெல்லாம் கிரகித்தபடி சுற்றிலும் பார்த்தவள், “முக்கால்வாசி லேடீஸ் தான்… இல்ல?” என்றாள் அங்கே பணிபுரிபவர்களை காட்டி.
“ஆமா! அவங்க செய்யுற மாதிரி தான் இருக்கும்… ரொம்ப சிரமம் இருக்காது!” என்றான்.
அன்றைய பொழுது எப்படி போனது என்றே கௌசிக்கு தெரியாதவண்ணம் நிமிடங்கள் கூட நொடிகளாய் கடந்து ஓடியது.
அதற்கு காரணம் புதிதாய் ஒன்றை கற்றுக்கொள்வதாலா, அல்லது மனோவுடன் பேசிக்கொண்டே இருந்ததாலா என்று கேட்டால், நிச்சயமாய் பதில் சொல்ல முடியாது அவளால்.
மாலை நெருங்கியதும் மனோவுடன் மீண்டும் ஒரு பைக் பயணம்…
காலையில் வரும்போது ஒரு பக்கமாய் அமர்ந்தவளை இப்போது இருப்பக்கமும் கால் போட்டு அமர சொன்னான் மனோ.
‘காலைல பாட்டு கேட்டுக்கிட்டே சாஞ்ச மாதிரி இப்போவும் சாஞ்சுட்டன்னா? நீ டபுள் சைடே உட்காரு!’ என்றுவிட்டான்.
காலை போல பாடல் எதுவும் ஒலிக்கவில்லை என்றாலும், கௌசியின் மனது ஒரு இதமான நிலையில் தான் இருந்தது.
தன்னோடு அவன் இருப்பதே அத்தனை தைரியமாய் தன்னை உணரவைப்பதை வியப்பாய் உணர்ந்தாள்.
வண்டி சட்டென நிற்க, “என்னாச்சு மாமா?” என்றாள்.
“இறங்கு!”
மறுபேச்சின்றி இறங்கினாள்.
“பாட்டி, ரெண்டு முழம் பூ குடுங்க!” வண்டியில் அமர்ந்துக்கொண்டே அவன் சொல்லவும் தான் இரண்டடி தள்ளி கூடையுடன் அமர்ந்திருந்த பாட்டியை கவனித்தாள் கௌசி.
“பூவெல்லாம் எதுக்கு மாமா?”
“ஏன் பூ வைக்கக்கூடாதா?”
“அப்படி இல்ல!”
“நானும் நீ வந்த நாள்ல இருந்து பாக்குறேன்! முகத்தை கண்ணாடில பாக்குறியா இல்லையான்னு கூட தெரில எனக்கு! ஏதோ ‘தேமே’ன்னு உடுத்துற… முன்னாடி கண்ணாடியை விட்டு உன்னை நகர்த்தவே நாலு ஆள் வேணும்!”
“ஹாஹா! அன்னைக்கு அம்மா சொன்னாங்கன்னு ட்ரெஸ் பண்ணதுக்கே ஆர்த்தி மினுக்கிட்டு இருக்கன்னு திட்டுறா! இதுல முன்னாடி மாதிரி எல்லாம் செஞ்சா எவ்ளோ பேச்சை கேட்கணுமோ?” சிரித்துக்கொண்டு சொன்னாலும் அவள் கண்கள் கலங்க தான் செய்தது.
அதற்குள் இருந்த வாடிக்கையாளரை அனுப்பிவிட்டு, மனோவிடம் திரும்பிய பாட்டி,
“என்னா பூப்பா வேணும்?” என்றிட,
“ஜா…” கௌசி சொல்லும்முன்னே, “ஜாதிப்பூ குடுங்க!!!” என்றிருந்தான் மனோ.
கூடவே அவள்புறம் திரும்பி, “அதானே பிடிக்கும்?” என்று வேறு கேட்க, தலை தன்னால் ஆடியது.
பூவை வாங்கியதும், அந்த பாட்டியிடமே ஹெர்ப்பின்னும் வாங்கி அவளை வைத்துக்கொள்ள சொல்ல, அவள் சூடியபின்னும், “ஏத்தி இறங்கி இருக்கான்னு பாக்க வேணாமா உனக்கு? எப்பவும் பூ வச்சா நாலு பேருக்கிட்ட வந்து சரியா இருக்கான்னு கேட்டுட்டு இருப்ப?” என்று கிண்டலடிக்க, அவள் முறைக்க,
“பாட்டி… பூ சரியா வச்சுருக்காளான்னு பாத்து சொல்லுங்க” என்றான்.
அவன் அப்படி கத்தி சொல்ல, சங்கோஜமாய் போய்விட்டது அவளுக்கு.
“உங்க ஜோடி மாறியே அம்சமா இருக்கு” என்று பாட்டி எக்ஸ்ட்ரா பிட்டு வேறு போட,
‘ஒரு நாளைக்கு இன்னும் எத்தனை டா சாமி?’ என ஆனந்தத்தில் அயர்ந்து தான் போனாள்.
அப்போது அவள் இதழ் ஓரத்தில் முளைத்த குறுஞ்சிரிப்பு, வீடு வந்து இறங்கும் வரையிலும் மறைவே இல்லை.
போர்டிகோவில் வண்டியை நிறுத்தியவன், “நாளைக்கு எங்க போலாம்?” என்றான்.
“ஹான்?”
“நாளைக்கு எந்த கம்பெனிக்கு போலாம்ன்னு கேட்டேன்! அட்டை பேக்டரி வரியா இல்ல முந்திரி தோப்பு போலாமா?”
“உங்க இஷ்டம்!!! எங்க சொல்றீங்களோ அங்க…”
“ஓ! எங்க கூப்பிட்டாலுமா?”
“ஹான்..?”
“பைனான்ஸ்க்கு கூப்பிட்டா கூட வருவியோன்னு கேட்டேன்! உடனே முட்டைக்கண்ணை உருட்டாத!” என்றான்.
இப்படியெல்லாம் பேசும் மனோ அவளுக்கும் முற்றிலும் புதியவன். வருஷக்கணக்கில் எண்ணி எண்ணி பேசியவன், பல வருடங்கள் பேசாமலே இருந்தவன், இப்போது அன்லிமிட்டடாய் பேச அவனையே ‘ஆஆ’வென பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவள் ஆராய்ச்சி கலந்த பார்வையை உணர்ந்தவனுக்கு கடைவாயில் சிரிப்பு முட்ட, வெகு நேரமாய் மனதை அரிக்கும் கேள்வியை கேட்டுவிட நினைத்து,
“இன்னும் ‘அதை’ போட்டுருக்கியா?” என்றான்.
‘இல்லை.. சரிவராது’ என்றதும் கழட்டி வைத்து விட்டாளோ என்ற அச்சம்! அச்சம் எதற்கு வரவேண்டும் என்றுதான் விளங்கவில்லை அவனுக்கு.
“எதை?” என்றாள் அவள்.
“அது…” ‘வேண்டாம்’ என்று சொன்னபிறகு அவளிடம் இதைப்பற்றி பேச ஒரு மாதிரி இருக்கவே, பளிச்சென்று கேட்க அவன் தயங்க,
“அக்காஆஆ…” என வீட்டு வாசலில் நின்று கத்தினாள் ஆர்த்தி.
“இதோ வரேன்!!!” என்றபடி இவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஓடினாள்.
‘பைக் சத்தம் நின்னு இவ்ளோ நேரம் ஆச்சு, என்ன செஞ்சுட்டு இருந்த?’ என்று ஆர்த்தி கடிவதும், கௌசி பதில் சொல்லாமல் அவளுடன் நடப்பதும் இவனுக்கு தெரிந்தது.
‘ப்ச்!’ மனம் சலித்தாலும் வண்டியை நிறுத்திவிட்டு அன்பழகனிடம் சில அலுவலக காரியங்களை பேசிவிட அவன் முன்வாசல் வழி முற்றத்திற்கு போக, அங்கே கூடத்தில் குழுமியிருந்தனர் மதனின் வருங்கால மாமனார் வீட்டினர்.
மணப்பெண்ணும் அவள் தந்தையும் மட்டும் தான் வரவில்லை. மற்றபடி அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா என அசோக்கின் உபரி சொந்தங்கள் வந்திருக்க, அவனின் அன்னை தன்னருகே கௌசியை அமர்த்தி இருந்தார்.
“இன்னைக்கு நாள் நல்லாருக்குன்னு இவ அப்பா தான் இன்னைக்கே தொழில் கத்துக்க ஆரம்பிக்க சொல்லி அனுப்பிவச்சாரு! என்ன இருந்தாலும் நம்ம தொழில் நம்ம புள்ளைங்களுக்கும் தெரியனும்ல? ஆம்பள புள்ள பொம்பள புள்ளன்னு பாகுபாடு பாக்குறதெல்லாம் நம்ம குடும்பத்தில இல்லை!” பெருமையாய் பீத்திக்கொண்டிருந்தார் புவனா.
கேட்டுக்கொண்டே உள்ளே வந்த மனோவுக்கு, ‘யப்பாஆஆ!’ என்றிருந்தது.
அசோக்கின் அன்னை சியாமளாவும், “சரியா சொன்னீங்க சம்பந்தி! நானும் என் பசங்களுக்கு ‘ஜென்டர் ஈக்குவாலிட்டி’ சொல்லிக்குடுத்து தான் வளர்த்துருக்கேன்” என்றுவிட, அவர் சொன்னது புரியாவிட்டாலும், அவர் தன்னை ஒத்துதான் பேசுகிறார் என புரிய, ‘ஹிஹி’ என சிரித்து சமாளித்தார் புவனா.
அன்பழகனிடம் வந்தவன், “ஆடிட்டர் இப்போ வீட்டுக்கு வரேன்னு சொன்னாரு!” வந்தவர்களை ஒரு பார்வை பார்த்து, “நாளைக்கு வர சொல்லிடவா?” என்றான்.
“நான் என்னனு பேசுறேன்” என்றவர் மொபைளுடன் வெளியேற, மனோ திரும்பி போவதற்குள், “இந்த பையன் யாரு அண்ணி” என்றிருந்தார் சியாமளா.
மனோ தன்னை பற்றி கேட்கும்போது கடந்து செல்வது நாகரிகமாய் இராதே என்று தேங்க வேண்டியதாய் போயிற்று.
சியாமளாவிடம் இருந்து இந்த கேள்வி வரும் என்று புவனா எதிர்பார்க்கவில்லை.
‘வேலைக்காரன்’ என்று சொல்லிவிடலாம் என்றால் அன்பழகன் விடமாட்டாரே! ஆயிரம் தான் ஆகாதவன் என்றாலும் அவன் மீது அவருக்கும் பாசம் உண்டு தான் என்பது புவனாவுக்கு தெரியுமே! அதுதான் அவர் பிரச்சனையும் கூட!!!
சியாமளா கேட்டு புவனா பதில் சொல்ல எடுத்துக்கொண்ட சில நொடிகளில், “அவர் எங்க மாமா” என்று பளிச்சென பதில் வந்தது கௌசியிடம் இருந்து.
இதை மனோவே எதிர்நோக்கவில்லை.
“மாமா’வா? அப்டின்னா உங்க அம்மாவோட தம்பியா?” மனோவை பார்த்துக்கொண்டே கேட்டார் சியாமளா.
புவனா பதில் சொல்லியே ஆகவேண்டிய நிலை. இவனை பற்றி சொன்னால் தான் இரண்டாம் தாரம் என்பதும் தெரிய வரும்!
முழு பலாப்பழத்திற்கு முத்தம் கொடுத்ததை போல அவஸ்தையுடன் அவர் அமர்ந்திருக்க, அவரை அதிகம் நோக விடாமல், “தம்பி மாதிரி! தூரத்து சொந்தம்!” என்றான் மனோகரன்.
“ஓ! அப்படியா சேதி? நிச்சயத்துலையே பாத்தேன்! எல்லா வேலையும் இழுத்து போட்டு செஞ்சுட்டு இருந்த! ஒரு குறை இல்லாம எல்லாமே அருமையா இருந்ததுக்கு நீயும் ஒரு காரணம்! அசோக் அப்பாக்கூட ரொம்ப நல்லவிதமா சொல்லிக்கிட்டு இருந்தாரு உன்ன!” சியாமளாவின் பேச்சு நேரிடையாய் மனோவிடம் போனது.
அவர் சொன்னதற்கு ஏற்ப்பாய் சிறு கீற்றாய் புன்னகையுடன் தலையசைத்தான் மனோ.
“உட்காருப்பா ஏன் நிக்குற?” அவர் சொல்ல, ‘அவன் அப்படியெல்லாம் அமர்ந்தது இல்லையே?’ ஆகையால் உடனே மறுத்தான்.
இருப்பினும் அவர் பிடிவாதமாய் சொல்ல, இறுதியில் புவனாவே தன் வாயால் ‘உட்காரு’ என சொல்லும்படி ஆயிற்று.
கௌசிக்கு சற்று தள்ளி இருந்த இடத்தில் அமர்ந்தான்.
“அப்பா அம்மா எல்லாம் எங்க இருக்காங்க?” அடுத்த காட்ட விசாரணையை அவர் துவங்க,
“அவங்கல்லாம் இருந்தா நான் ஏன் இங்க இருக்க போறேன்? எப்போவோ விட்டுட்டு போய்ட்டாங்க! எனக்குன்னு யாரும் இல்லை!” பட்டென சொல்லிவிட்டான்.
ஒரு வாக்கியத்தில் கௌசியின் மனநிலையை புரட்டி போட்டான் என்றுதான் சொல்ல வேண்டும்!
‘எனக்குன்னு யாரும் இல்லை’
“அப்போ நான் யாரு? நான் எதுவுமே இல்லையா?” என்று கேட்க அவள் நா பரபரத்தது.
‘எதுவுமே இல்லை’ என்றுதான் அன்றே சொல்லிவிட்டானே!
‘அவர் தெளிவா தான் இருக்காரு! நான்தான் ஊசலாடுறேன்!’ மனதுக்குள் புலம்பினாள்.
அவன் பதிலில் சியாமளா வருந்தி, “எங்க சொந்தத்துல நிறைய பொண்ணுங்க இருக்கு! உன் கல்யாணத்தை நான் நடத்தி வைக்குறேன் பாரு! இனியொருக்க யாரும் இல்லன்னு பேசக்கூடாது” என்றார் கண்டிப்பாய்.
அவனும் இப்படியெல்லாம் சொல்பவனில்லை. இன்று அவனையும் மீறி வார்த்தைகள் வந்துவிட்டிருந்தன.
பேச்சு அவனை சுற்றியே போக அதை கலைக்கும் விதமாய், “இந்த அச்சு முறுக்கு நீங்க வரீங்கன்னு உங்களுக்காகவே செஞ்சது!” என்றார் புவனா.
அவர் நினைத்ததை போல பேச்சும் இடம் மாறியது.
“வந்த வேலையை விட்டுட்டு கதை பேசுறோம் பாருங்க” என்ற சியாமளா, உடன் வந்த சுமங்கலி பெண்கள் சூழ, ஒரு தாம்பூல தட்டை எடுத்து நீட்டினார்.
“இது சும்மா எங்க வழக்கம்! ஆம்பளைங்க இருக்கனுன்னு கூட இல்லை! அதான் என் வீட்டுக்கார் வரல” என்று சொல்ல,
“நாங்க இப்படி எதுவும் ஏற்ப்பாடு பண்ணலிங்களே!!!” என்று தயங்கினார் புவனா.
“இது சம்பிரதாயம் எல்லாம் இல்ல அண்ணி! வெறுமன பூ வைக்காம, தாம்பூலம் குடுத்து பூ வைக்குறோம்! நாளைப்பின்ன நிச்சயத்தப்போ எல்லாம் முறையா செஞ்சுக்கலாம்!” என்றார்.
அன்பழகன், புவனாவை தவிர அந்த வீட்டினர் யாருக்கும் விஷயம் தெரியாததால் எல்லாரும் நடப்பதை விநோதமாய் பார்த்தனர்.
புவனா தாம்பூலத்தை வாங்கிக்கொண்டதும், மற்றொரு பையில் இருந்து இரு கைக்கொள்ளுமளவு மல்லிகை சுருளை எடுத்தவர், “திரும்புடா கௌசி!” என்றார்.
பூ தனக்கு தான் என்று தெரிந்ததும், “இவ்வளவு எதுக்கு அத்தே! ஆர்த்திக்கும் குடுங்க” என்று சொல்ல,
“அவளுக்கெல்லாம் இன்னும் அஞ்சாறு வருஷம் கழிச்சு குடுப்போம்! இப்போ உனக்கு தான்!” என்று பூவை தலையில் வைக்க ஏதுவாய் சரம் சரமாய் அவர் மடிக்க, மனோவுக்கு மனதுக்குள் மணி அடித்தது.
அந்த சூழலே அவனுக்கு உவப்பாக இல்லை. சுற்றிலும் கண்களை ஓட்ட, ஓரிடத்தில் கால் மேல் கால் போட்டு ஒய்யாரமாய் அமர்ந்தபடி கௌசியை வைத்தக்கண் வாங்காமல் ரசித்துக்கொண்டிருந்தான் அசோக்.
மனோவுக்கு விஷயம் சட்டென விளங்கியது.
மனம் அதிர அவன் கௌசியிடம் திரும்ப, அவன் சற்று முன்னர் வாங்கிக்கொடுத்த ஜாதிமல்லியை எடுத்து கீழே வீசிவிட்டு அவர்கள் கொண்டு வந்த மல்லிகையை அவள் சிரத்தில் ஏற்றிருந்தார் சியாமளா.
கூடவே, “சீக்கிரமே என் வீட்டுக்கு மருமகளா நீ வரணும்” என்று தாடைப்பிடித்து கொஞ்ச, அப்போது தான் நடப்பது விளங்கியது கௌசிக்கு.
விதிர்த்துப்போய் அவள் மனோ இருந்த பக்கம் பார்க்க, அவன் அங்கே இருந்தால் தானே? தன் இயலாமையை கால்களில் காட்டி சென்றுவிட்டிருந்தான்.
error: Content is protected !!